புதன், 25 நவம்பர், 2020

அர்ஜுந விஷாத யோகம் 1.11 - 1.20

||1.11||

अयनेषु सर्वेषु यथाभागमवस्थिताः।

भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ११

அயநேஷு ஸர்வேஷு யதா2பா43மவஸ்தி2தா:

பீ4ஷ்மமேவாபி4ரக்ஷந்து 4வந்த : ஸர்வ ஏவ ஹி ।। 11 ।।


படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்றுகொண்டு எல்லாருமே பீஷ்மரையே காப்பாற்றுக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.


விளக்கம்:

முயற்சியற்றவர்களாகிய நீங்கள் என் சொற்படியாவது கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று சேனாதிபதிகளை அவமதிப்பது போன்றிருக்கிறது துரியோதனனின் கூற்று.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.12||

तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।

सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् १२

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்34: பிதாமஹ:

ஸிம்ஹநாத3ம் விநத்3யோச்சை: 1ங்க2ம் 3த்4மௌ ப்ரதாபவாந் ।। 12 ।।


வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் அவனுக்கு [துரியோதனனுக்கு] உற்சாகத்தை ஊட்ட உரக்கச் சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை யூதினான்.


விளக்கம்:

துரோணாசாரியரை இகழ்கின்ற போக்கில் துரியோதனன் மிகைப்படப் பேசிவிட்டான். அதனால் அவருடைய ஊக்கமும் குறைந்தது. மற்ற சேனாதிபதிகள் ஓரளவில் அவமதிக்கப்பட்டனர். துரியோதனனுடைய உள்ளத்திலோ அச்சம் குடிபுகுந்தது. நிலைமை கெட்டு வருவதை பீஷ்மர் பார்த்தார். மேலும் மனத்தளர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் இடந்தரலாகாது. தனது பேரன் மீது இரக்கம் வைத்துப் பாட்டனார் சங்கு நாதத்தை எழுப்பி திடீரென்று காட்சியை மாற்றுகிறார். அதன்மூலம் கெளரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர்கள் ஆகின்றனர். ஆக்கிரமிப்பு என்னும் குற்றம் அவர்களைச் சார்ந்ததாகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.13|| கெளரவர்கள் பக்கத்து பேரொலி:

ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः

सहसैवाभ्यहन्यन्त शब्दस्तुमुलोऽभवत् १३

தத: 1ங்கா2ச்1 பே4ர்யச்1 பணவாநககோ3முகா2:  

ஸஹஸைவாப்4யஹந்யந்த 1ப்33ஸ்துமுலோऽப4வத் ।। 13 ।।


பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.


விளக்கம்:

இது கெளரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.14||

ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ

माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः १४

தத: ச்1வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த3நே ஸ்தி2தௌ

மாத4: பாண்ட3வச்1சைவ தி3வ்யௌ 1ங்கௌ2 ப்ரத3த்4மது: ।। 14 ।।


பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவனும் தங்கள் தெய்வீகச் சங்குகளை உரக்க ஊதினார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை யூதினர்.


விளக்கம்:

மாதவன் என்பது கிருஷ்ணனுடைய பெயர்களில் ஒன்று. ‘மாஎனில்லக்ஷ்மியின்’, ‘தவ:எனில்தலைவன்குறிக்கும். லக்ஷ்மீபதியே பாண்டவர் பக்கமிருப்பதால் இனி ராஜ்யலக்ஷ்மிக்கு அல்லது விஜயலக்ஷ்மிக்கு இருப்பிடம் பாண்டவர் பக்கமாகப் போகிறது.

பாண்டவன் என்ற சொல், பாண்டவர்கள் ஐவரில் யாரை வேண்டுமானாலும் குறிக்கலாம். நாராயணன், நரன் என்ற இரண்டு ரிஷிகளும் இப்பொழுது கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் இணைபிரியாதிருப்பதால் இங்கு பாண்டவன் என்னும் சொல் சிறப்பாக அர்ஜுனனைக் குறிக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.15|| இனி, பாண்டவர் பக்கம் குறித்து கூறப்படுகிறது:

पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः

पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः १५

பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேசோ1 தே3வத3த்தம் 4நஞ்ஜய:  

பௌண்ட்3ரம் 3த்4மௌ மஹாச1ங்க2ம் பீ4மகர்மா வ்ருகோத3: ।। 15 ।।


ஹிருஷீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான். பெருவினையாற்றுபவனாகிய பீமசேனன் பெளண்ட்ரம் என்ற சங்கை ஒலித்தான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கண்ணன் பாஞ்சஜன்யத்தை யூதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.


விளக்கம்:

ஹ்ருஷீகேச1:எனில் இந்திரியங்களுக்குத் தலைவன் என்று பொருள். இது கிருஷ்ணனுக்கு ஓர் அடைமொழி. புலன்களைக் கட்டி ஆள்பவன் எச்செயலைச் செய்தாலும் அதை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்வான்

4நஞ்ஜய:எனும் சொல் செல்வத்தை வென்றவன் என்ற கருத்துடையது. அர்ஜுனன் ஆங்காங்குச் சென்று அரசர்களிடம் ஒன்றுக்கும் பயன்படாது அடைபட்டுக்கிடந்த செல்வங்களை எல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து சேர்த்தான். ஆகையால் அவனுக்கு அப்பெயர் வந்தது. பீமசேனனுக்குவ்ருகோத3:என்று பெயர். ஓநாயின் வயிறுபோன்று ஒடுங்கிய வயிறு உடையவன் என்றும், எதையும் எளிதில் ஜீரணம் செய்யக்கூடியவன் என்றும் இது பொருள்படுகிறது. நல்ல ஜீரணசக்தி உடையவர்கள் எச்செயலையும் ஆற்றவல்லவர் ஆகின்றனர்

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.16||

अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः

नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ १६

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி4ஷ்டி2:

நகுல: ஸஹதே3வச்2 ஸுகோ4ஷமணிபுஷ்பகௌ ।। 16 ।।


குந்தியின் புதல்வன் ராஜா யுதிஷ்டிரன் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சஹதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.


விளக்கம்:

நாடு ஆண்டாலும் ஆளாவிட்டாலும் அரசனது இயல்புகள் அனைத்தையும் அடையப் பெற்றிருக்கிறபடியால் யுதிஷ்டிரனுக்கு ராஜா என்னும் சிறப்புச்சொல் பொருத்தமாக அமைகிறது. இப்பொழுது அவன் முடிசூடாத மன்னனாயிருக்கிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.17|| பாண்டவர் பக்கத்து படைவிவரம் வருகிறது:

काश्यश्च परमेष्वासः शिखण्डी महारथः

धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः १७

காச்1யச்1 பரமேஷ்வாஸ: சி22ண்டீ3 மஹாரத2:  

த்4ருஷ்டத்3யும்நோ விராடச்1 ஸாத்யகிச்1சாபராஜித: ।। 17 ।।


விற்படையில் தலைசிறந்த காசிராஜனும் மகாரதிகளான சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராட தேசத்தரசனும் பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்,


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,


விளக்கம்:

சி22ண்டீ3என்ற சொல் முகத்தில் மீசையில்லாதவன் எனப் பொருள்படுகிறது. இவன் பேடுவாக இருந்ததால், பீஷ்மருக்கு எதிரில் இவனை நிறுத்தியபொழுது அவர் போர்புரியாது சும்மா இருந்துவிட்டார். ஆதலால் அவருக்குத் தோல்வியுண்டாயிற்று. ‘த்4ருஷ்டத்3யும்நஎன்கிற பதத்திற்கு பொருள், எவராலும் எதிர்க்கமுடியாதவன் என்பதாகும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.18|| பாண்டவர் பக்கத்து படைவிவரம் தொடர்கிறது:

द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते

सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक् १८

த்3ருபதோ3 த்3ரௌபதே3யாச்1 ஸர்வச1: ப்ருதி2வீபதே  

ஸௌப4த்3ரச்1 மஹாபா3ஹு: 1ங்கா2ந்த3த்4மு: ப்ருத2க்ப்ருத2க் ।। 18 ।।


மண்ணாள்பவனே! துருபதனும், திரெளபதியின் புதல்வர்களும், தோள்வலிவுடையவனாகிய சுபத்திரையின் மகனும் ஆக எல்லாரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். ‘பூமிக்குத் தலைவனே!’


விளக்கம்:

ப்ருதி2வீபதேஎனில்மண்ணாள்பவனேஎன்று பொருள். இங்கு திருதராஷ்டிரன் இவ்வாறு சஞ்ஜயனால் அழைக்கப்படுகிறான். இது அரசனது பொறுப்பை அவருக்கு ஞாபகமூட்டுதல் பொருட்டேயாகும். நாட்டைக் கடும்போரில் ஆழ்த்திவிடுவதும் சண்டை சச்சரவின்றி சமாதானமாயிருக்கச் செய்வதும் ஆகிய இரு செயல்களும் நாடாள்பவனுக்கு இயலும். உனது விருப்பம் எதுவோ என்னும் எச்சரிக்கை இங்கே தொக்கி நிற்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.19||

घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्

नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन् १९

கோ4ஷோ தா4ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத3யாநி வ்யதா3ரயத்

நப4ச்1 ப்ருதி2வீம் சைவ துமுலோ வ்யநுநாத3யந் ।। 19 ।।


மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.


விளக்கம்:

பாண்டவர்ப்படை, தொகையில் சிறியது எனினும் அப்பக்கம் இருப்பவர்களுக்குப் பெருமுழக்கம் செய்ய இயன்றது. தெய்வத்தின் துணையும் தர்மத்தின் வலிவுமே அதற்குக் காரணமாயிற்று. குற்றமுடையவர்கள் நெஞ்சில் சிறுபிள்ளையின் பழிப்பும் சுடுசரம் போல பாயும். கெளரவர்களுடைய நெஞ்சத்தில் வஞ்சகமிருந்தபடியால் அது வீறப் பிளக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.20||

अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः

प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः २०

அத2 வ்யவஸ்தி2தாந்த்3ருஷ்ட்வா தா4ர்தராஷ்ட்ராந்கபித்4வஜ:  

ப்ரவ்ருத்தே 1ஸ்த்ரஸம்பாதே 4நுருத்3யம்ய பாண்ட3: ।। 20 ।।


அப்பால், குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தாரைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்குமுன், வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------