செவ்வாய், 24 நவம்பர், 2020

அர்ஜுந விஷாத யோகம் 1.1 - 1.10

                                     முதல் அத்தியாயம்

                        அர்ஜுந விஷாத யோகம் [अर्जुनविषादयोग:]

||1.1|| திருதராஷ்டிரரது வினா:

धृतराष्ट्र उवाच 

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।

मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय

த்4ருதராஷ்ட்ர உவாச 

4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:  

மாமகா : பாண்ட3வாச்1சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ।। 1 ।।


ஸஞ்ஜயா! தர்ம க்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?


விளக்கம்:

ஸஞ்ஜயஎன்னும் சொல் விருப்பு வெறுப்பு முதலியவைகளை அறவே வென்றவன் என்று பொருள்படுகிறது. ஓரம்சாராது நடுநிலையில் இருப்பவனுக்கே ஞானக்கண் உண்டாகிறது. ஆதலால்தான் வியாச பகவான் யுத்தத்தில் நிகழ்பவைகளை உள்ளபடி காணவல்ல ஞானக்கண்ணை சஞ்ஜயனுக்கு கொடுத்தருளுகிறார்.

தன் பிள்ளைகளைத் தம்பியின் பிள்ளைகளிடமிருந்து பிரித்துக் கூறுவதால் திருதராஷ்டிரருடைய மனநிலை வெளியாகிறது. போர்புரியாது நாடு தம் பிள்ளைகளுக்குச் சேர்ந்துவிட வேண்டுமென்பது அவரது விருப்பம். தொன்றுதொட்டு அறத்துக்கு நிலைக்களமாக இருக்கும் குருக்ஷேத்திரத்தின் மஹிமையால் பாண்டவர்களிடமிருந்து மண்ணாசை ஒழியவில்லையா என்பது அவருக்கு ஏற்பட்ட ஐயம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.2|| போருக்கு இரு கட்சியினரும் அணிவகுத்திருப்பதை சஞ்ஜயன் விளக்க ஆரம்பிக்கிறார்:

सञ्जय उवाच

दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।

आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्

ஸஞ்ஜய உவாச

த்3ருஷ்ட்வா து பாண்ட3வாநீகம் வ்யூட4ம் து3ர்யோத4நஸ்ததா3

ஆசார்யமுபஸங்க3ம்ய ராஜா வசநமப்3ரவீத் ।। 2।।


சஞ்ஜயன் சொன்னது

அப்பொழுது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும் (துரோண) ஆசாரியரை அணுகி (பின்வரும்) வார்த்தையைச் சொல்கிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:


விளக்கம்:

சுலோகம் இரண்டு முதல் இருபது வரை, போருக்கு இரு கட்சியினரும் அணிவகுத்து நிற்பதை சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம் விளக்குகிறார்.

மருண்டுபோன மகன் ஒருவன் ஆறுதலை நாடிப் பெற்றோரிடம் ஓடுவது போல, துரியோதனன் சேனாதிபதியாக இருக்கும் பீஷ்மரிடம் போவதற்கு பதிலாக தனது ஆசாரியரான துரோணரிடம் ஓடிக் குறைகூற ஆரம்பிக்கிறான். துரியோதனன் என்ற சொல்லின் பொருள் யுத்தத்தில் எளிதில் வெல்லப்படாதவன் என்பதாகும். ஆனால் அவன் பெயருக்கேற்ற தன்மை இப்பொழுது அவனிடம் இல்லாமற் போய்விட்டது. பிறருக்கு உரிய ராஜ்யத்தை அவன் வஞ்சகமாக அபகரித்துக் கொண்டதே அதற்குக் காரணமாயிற்று.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.3|| போர் அணிவகுப்பு வர்ணனையின் தொடர்ச்சி:

पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।

व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता

பச்1யைதாம் பாண்டு3புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்

வ்யூடா4ம் த்3ருபத3புத்ரேண தவ சி1ஷ்யேண தீ4மதா ।। 3।।


ஆசாரியரே! உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணிவகுக்கப்பட்டிருக்கும் இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்!


விளக்கம்:

தேள் ஒன்று காப்பாற்றியவரையே பொருள்படுத்தாது கொட்டுகிறது. அதுபோல துரியோதனன் தனது குருவையே அவமதிக்கிறான். துருபதன் மகனுக்கும் பாண்டுவின் மக்களுக்கும் நீங்கள் வில்வித்தை கற்பித்தது மடமைக்கு ஒப்பாகும். அதோ பாருங்கள், குருவென்றும் பாராமல் அவர்கள் உங்களையே கொல்ல வருகிறார்கள் என்று ஆசாரியரை ஏசுகிறான். சீர்தூக்கிப் பார்க்குமிடத்து பாண்டவர்களின் சிறிய படையையும் பெரிய படையென்று துரியோதனன் சொல்லுவது அவன் அடைந்துள்ள கலக்கத்தையே விளக்குகிறது. அவன் இறுதியில் அடையப்போகும் தோல்விக்கும் அது அறிகுறியாகிறது.  

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.4|| பாண்டவப் படையைப் பற்றி கூறுதல்:

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।

युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः

அத்ர சூ1ரா மஹேஷ்வாஸா பீ4மார்ஜுநஸமா யுதி4

யுயுதா4நோ விராடச்1 த்3ருபத3ச்1 மஹாரத2: ।। 4 ।।


இங்கே (பாண்டவப் படையில்) சூரர்களாகவும், பெரிய வில்லாளிகளாகவும், யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமானமானவருமான யுயுதானனும், விராடதேசத்தரசனும், மகாரதனாகிய துருபத தேசத்து அரசனும் … 


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.5|| பாண்டவப் படையைப் பற்றி கூறுதல் தொடர்கிறது:

धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।

पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः॥

த்4ருஷ்டகேதுச்1சேகிதாந : காசி1ராஜச்1 வீர்யவாந்।

புருஜித்குந்திபோ4ஜச்1 சை1ப்3யச்1 நரபுங்க3: ।। 5 ।।


திருஷ்டகேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசிராஜனும், புருஜித் என்பவனும், குந்திபோஜனும் மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன் என்பவனும்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

திருஷ்ட கேது; சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.6|| பாண்டவப் படையைப் பற்றி கூறுதல் தொடர்கிறது:

युधामन्युश्च विक्रान्त: उत्तमौजाश्च वीर्यवान्।

सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः॥

யுதா4மந்யுச்1 விக்ராந்த: உத்தமௌஜாச்1 வீர்யவாந்  

ஸௌப4த்3ரோ த்3ரௌபதே3யாச்1 ஸர்வ ஏவ மஹாரதா2: ।। 6।। 


பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமையுடைய உத்தமெளஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரெளபதியின் புதல்வர்களும் கூடியிருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் மகாரதர்களேயாவர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.


விளக்கம்:

மஹாரதன் என்பது போர்ப்பயிற்சி மிகப்பெற்றவனை, பதினோராயிரம் வில்லாளிகளை நடத்துபவனைக் குறிக்கின்றது. தன்னை, தேரோட்டி மற்றும் குதிரையை காப்பவன் மஹாரதன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.7|| தங்களது படையில் சிறந்தவர்களைத் தெரிந்து கொள்ளுமாறு கூறுதல்:

अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम

नायका मम सैन्यस्य सञ्ज्ञार्थं तान्ब्रवीमि ते

அஸ்மாகம் து விசி1ஷ்டா யே தாந்நிபோ34 த்3விஜோத்தம

நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த2ம் தாந்ப்3ரவீமி தே ।। 7 ।।


பிராம்மண சிரேஷ்டரே! நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப் பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்லுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.


விளக்கம்:

த்3விஜோத்தமஎன்பதற்குபிராம்மண சிரேஷ்டரேஎன்பது பொருள். துரியோதனன் மறைமுகமாகத் தனது குருவை நிந்திக்கிறான். போர்முறையைப் புகட்டுதலில் நீங்கள் எவ்வளவு வல்லவராயிருந்தாலும் முடிவாகப் பார்க்கும்போது நீங்கள் ஒரு பிராம்மணர் தானே! அப்படியிருக்கையில் சண்டையில் உங்களுக்கு எங்கிருந்து உற்சாகம் வரப்போகிறது? பாண்டவப் படையைப் பார்த்து நீங்கள் பயப்படுவது இயல்பு. எனினும் எதற்கு அஞ்சாதீர்கள். நமது பக்கத்திலும் பேராற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்இதுவே அவனது பேச்சின் உட்பொருளாக இருக்கின்றது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.8|| தனது படையைக் குறித்து கூறுதல்:

भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।

अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च॥८॥

4வாந்பீ4ஷ்மச்1 கர்ணச்1 க்ருபச்1 ஸமிதிஞ்ஜய:

அச்1வத்தா2மா விகர்ணச்1 ஸௌமத3த்திஸ்ததை2 ।। 8 ।।


தாங்களும் பீஷ்மரும், கர்ணனும் போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாசாரியரும், அச்வத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;


விளக்கம்:

துரோணாசாரியரை அளவுக்குமிஞ்சி அவமரியாதை செய்துவிட்டதாக அஞ்சுகிற துரியோதனன் அதற்கு ஈடாக சேனாதிபதியாகிய பீஷ்மருக்கு முன்பாக அவரை முகஸ்துதி செய்கிறான். மேலும் துரோணருடைய மைத்துனராகிய கிருபரைபோர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ளவர்_ஸமிதிஞ்ஜய:’, எனப் புகழ்ந்துப் பேசுகிறான்

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.9|| தனது படை வீரர்கள் குறித்துப் பேசுதல்:

अन्ये बहवः शूरा: मदर्थे त्यक्तजीविताः।

नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः॥

அந்யே 3ஹவ: ஸூ2ரா: மத3ர்தே2 த்யக்தஜீவிதா:  

நாநாச1ஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்34விசா2ரதா3: ।। 9 ।।


மேலும் எல்லாரும் என்பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாயும் பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும் யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||1.10|| இருபக்கமும் நிற்கும் படைகளை ஒப்பிடுகிறான்

अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्

पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् १०

அபர்யாப்தம் தத3ஸ்மாகம் 3லம் பீ4ஷ்மாபி4ரக்ஷிதம்

பர்யாப்தம் த்வித3மேதேஷாம் 3லம் பீ4மாபி4ரக்ஷிதம் ।। 10 ।।


பீஷ்மர் பாதுகாக்கும் நமது பகை பரந்து அளவுகடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்கு அடங்கியது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

(எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.


விளக்கம்:

அசுர இயல்பு உடையவனுக்கு அழிவுகாலம் நெருங்கும்போது வீண்பெருமை கொள்ளுதல் அதிகரிக்கிறது. அத்தகைய தற்புகழ்ச்சியில் தனக்கே கேடுதரும் கருத்துக்கள் தற்செயலாக வந்தமைவதும் உண்டு. இங்கு துரியோதனனுடைய கூற்று இந்தக் கோட்பாட்டிற்கு இலக்காகிறது. தனக்கு ஜென்ம பகையாய் இருக்கின்ற பீமனைவிட பீஷ்மர் சிறந்த சேனாதிபதி என்பது அவன் கருத்து. பீமன் தனது வெற்றிக்காகப் பாடுபடுபவன். பாட்டனாராகிய பீஷ்மரோ பாரபட்சமில்லாதவர். உடன்படிக்கையின்படி, துரியோதனனுக்காகப் போர்புரிந்தாலும் அவர் எப்பொழுதும் தர்மம் ஒன்றே வெற்றியடைய வேண்டும் என்னும் கோரிக்கையுடையவர். அவருடைய சீரிய மனநிலையை துரியோதனன் அறிந்திலன்.

ஆட்களின் எண்ணிக்கையிருந்து ஒரு சேனையின் வலிமையை அறிந்துகொள்ள இயலாது. கட்டுக்குள் அடங்கியிருக்கிற பாங்கிலிருந்து ஒரு படையின் திறமை தோன்றும். தங்களுடைய சேனை கட்டுக்கு அடங்காதது; பாண்டவர்களுடையதோ கட்டுக்கு அடங்கியது என்று எண்ணிக்கையின் விரிவைத் துரியோதனன் தற்பெருமையாகச் சொல்லுகிறான். வண்ணத்தில் பெரியது எனினும் வலிவில் சிறியது எனும் அமங்கலக் கருத்து அதில் அடங்கியிருக்கிறது.

ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை முறைக்கும் இக்கோட்பாடு பொருந்தும். கட்டுப்பாடும் திட்டமும் உடைய சிறு சமூகங்கள் நன்கு முன்னேற்றமடைகின்றன. கட்டில் அடங்காத பெரிய சமூகங்கள் பிறர் ஆட்சிக்கு அடிமையாகின்றன; அல்லது சீரும் சிறப்புமின்றித் தம்மைத்தாமே ஆண்டுவருகின்றன. அடக்கமுடைமைக்கும் அடக்கமின்மைக்கும் உள்ள சிறந்த வேறுபாட்டை உலகில் எப்பொழுதும் காணலாம்

-------------------------------------------------------------------------------------------------------------------------