||15.8|| ஜீவன் உபாதியை பெறும் விதம் எப்படி என்கிற விளக்கம்:
शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वर: ।
गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ।। ८ ।।
ச1ரீரம் யத3வாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீச்1வர: ।
க்3ருஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்க3ந்தா4நிவாச1யாத் ।। 8 ।।
इश्वर: ஈச்1வர: உடலின் தலைவன் यत् யத் எப்பொழுது शरीरं ச1ரீரம் சரீரத்தை
उत्क्रामति अपि உத்க்ராமதி அபி விட்டுவிடுகிறானோ च ச மேலும் यत् யத் எப்பொழுது अवाप्नोति அவாப்நோதி அடைகிறானோ वायु: इव வாயு: இவ வாயுவானது
आशयात् ஆச1யாத் இருப்பிடத்திருந்து (பூவினின்று) र्गन्धन् க3ந்தா4ந் மணங்களைப்போல एतानि ஏதாநி இவைகளை(மனம் உள்ளிட்ட இந்திரியங்களை)
गृहीत्वा க்3ருஹீத்வா எடுத்துக்கொண்டு संयाति ஸம்யாதி போகிறான்.
மலர்களிலிருந்து மணங்களைக் காற்றெடுத்துச் செல்வதுபோல, ஜீவன் உடல் விடும்போதும், எடுக்கும்போதும் இந்திரியங்களைப் பற்றிக்கொண்டு போகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.
விளக்கம்:
உடலின் தலைவனான ஜீவன், உடலை விடும்பொழுது காற்றானது மலர்களிடமிருந்து அதன் வாசனைகளை எடுத்துச் செல்வதுபோல, தனது ஐந்து புலன்களையும் ஆறாவதான மனத்தையும் எடுத்துக்கொண்டு புதிய உடலை அடைகின்றான்.
=> ஜீவனின் மரணம்?
ஜீவன் என்பவன் பிறப்பு மற்றும் இறப்புக்கு உட்படாத பரமாத்மாவாகவே இருப்பதால், வெளித்தோற்றத்தில் மட்டுமே அவன் கர்த்தாவாகவும் போக்தாவாகவும் பார்க்கப்படவேண்டும். உண்மையில் ஜீவனின் மரணம் என்பது அந்தவொரு குறிப்பிட்ட உடலை வைத்து மட்டுமே பேசப்படுகிறது. அறியாமையின் காரணமாக அவன் ஜீவனாக இருந்தபோதும்கூட உண்மையில் அவன் இறப்பதில்லை. மாறாக வெவ்வேறு உடல்களில் மீண்டும் மீண்டும் பிறக்கிறான். ஜீவத்துவம் என்பது ஏற்றிவைக்கப்பட்ட ஒரு நிலை என்பதால், அங்கு இறப்பதற்கு எந்த ஜீவனும் இல்லை. அறியாமை நீங்கும்போது, ஆத்மாவின்மீது ஏற்றிவைக்கப்பட்ட அந்த ஜீவத்துவமானது நீங்குகிறது அவ்வளவே.
ஜீவன் உடலை விட்டு வெளியேறும்போது, ஐந்து புலன்கள் மற்றும் மனதை உள்ளடக்கிய சூக்ஷம சரீரம் வெளியேறுகிறது — மந: ஷஷ்டா2நி இந்த்3ரியாணி கர்ஷதி. இவைகள் அனைத்தும் ஸ்தூல சரீரத்தில் உள்ளன — ப்ரக்ருதிஸ்தா2நி. இது முந்தைய சுலோகத்தின் இரண்டாவது வரியாகும். இப்போது இந்த சுலோகத்துடன் சேர்க்கப்படுகிறது. இதில் ‘ப்ரக்ருதி’ என்பது ஸ்தூலமான இந்த உடலைக் குறிக்கிறது. ஒவ்வொரு புலனும் பிரக்ருதியாலான இந்த உடலில் அதனதன் இடத்தில் இருப்பிடத்தைக் கொண்டுள்ளது. ஜீவன் உயிருடன் இருக்கும்போதும் உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போதும் அவைகள் இருத்தலை அடைந்து இயங்குகின்றன. அவன் இறக்கும்போது அவைகள் ஒவ்வொன்றும் தாங்கள் செயல்பட்ட இடத்திலிருந்து வெளியேறுவதால் அந்த இடம் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்கிறது.
உண்மையில் ‘கண்’ என்பது ‘கோ3லகம்’, அதாவது பார்க்கும் சக்தி வெளிப்படும் இடம் ஆகும். ஒருவன் உடலை விட்டு வெளியேறும்போது இந்த சக்தியுடன்தான் வெளியேறுகிறான். இப்போது கண் என்பது வெறும் ஸ்தூலம் மட்டுமே. எனவே கண்தானம் உள்ளிட்ட விஷயங்களுக்கு பயப்படத் தேவையில்லை. யாரும் புலன்கள் அற்றவர்கள் கிடையாது; அது வெளிப்படும் இடத்தில்தான் குறைகள் இருக்கின்றன.
உள்ளபடி பரமேஷ்வரனின் சொரூபமாக இருந்தாலும், அறியாமையினால் கர்த்தாவாகவும் போக்தாவாகவும் இருக்கின்ற இந்த ஜீவன் ஸ்தூலமான உடலை விட்டுவிட்டு வெளியேறி, நாம் கனவினுள் செல்லும்போது எடுப்பதைப் போல ஒரு சூக்ஷமமான வடிவத்தை எடுத்துக்கொண்டு பயணிக்கிறான்.
=> இழுத்துச் செல்லுதல்:
‘ஈச்1வர’ என்ற சொல்லுக்கு தலைவன், ஆள்பவன் என்பது பொருள். இங்கு அது உடலை ஆள்பவன், உடலின் தலைவனாக இருப்பவன் என்பதைக் குறிக்கிறது. செயல் செய்து பலனை அனுபவிக்கின்ற உடலின் தலைவனான இந்த ஈஷ்வரன், மரணத்தின்போது ஐம்புலன்கள் உள்ளிட்ட மனதை இழுத்து தன்னுடன் எடுத்துச் செல்கிறான். ‘கர்ஷதி’ எனில் அவன் தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறான் என்பது பொருள். மலரிலிருந்து காற்றானது வாசனைகளை எடுத்துச் செல்வதுபோல — ஆச1யாத் வாயு: க3ந்தா4ந் இவ, இது நடக்கிறது.
எனவே மரணிக்கும் ஜீவன் சூக்ஷம சரீரத்துடன் வெளியேறுகிறான். எனில், அங்கு யாரும் இறப்பதில்லை. பயன்படுத்தப்பட்டுவிட்ட அந்த உடலை விடுகிறான் அவ்வளவே.
இனி, ஜீவன் வேறொரு உடலை ஏற்று, தன்னுடன் கொண்டுவந்த அனைத்து புலன்களையும் கொண்டு மீண்டும் புலனின்பங்களை அனுபவிக்கிறான். எவ்வாறு அதைச் செய்கிறான் என்பது அடுத்த சுலோகத்தில் கூறப்படுகிறது.
சுவாமி சித்பவானந்தர்:
உடலை ஆளும் தன்மையுடையவன் ஆதலால் ஜீவன் இங்கு ஈஷ்வரன் என்று அழைக்கப்படுகிறான். காற்று தன்னளவில் ஒருவித மணமும் இல்லாதது. புஷ்பத்தோடு வைக்கிற சேர்க்கையால் அதற்கு மணம் உண்டாகிறது. அந்த மணத்தைப் பிறகு சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும். ஜீவன் பிரகிருதியோடு வைக்கிற தொடர்பால் உபாதியுடையவனாகிறான். பிரகிருதியினிடத்துப் பற்று நீங்குகிறவளவு ஜீவன் சுத்த சைத்தன்யமாகிறான். ஆனால் பிரகிருதியில் பற்று வைத்திருக்கிறவளவு ஜாலவித்தைக்காரன் போன்று அவன் நடந்துகொள்கிறான். ஓரிடத்தில் தன்னுடைய சாமான்களையெல்லாம் விரித்துவைத்து வேடிக்கை பண்ணுகிறான். பிறகு அவைகளையெல்லாம் மூட்டைகட்டிக்கொண்டு இன்னோர் ஊருக்குப் போகிறான். அங்ஙனம் ஜீவன் மனதையும் இந்திரியங்களையும் பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான்.
---------------------------------------------------------------------------------------------
||15.9|| புலன்களைக் கொண்டு ஜீவன் என்ன செய்கிறான்:
श्रोत्रं चक्षु: स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ।। ९ ।।
ச்1ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ச1நம் ச ரஸநம் க்4ராணமேவ ச ।
அதி4ஷ்டா2ய மநச்1சாயம் விஷயாநுபஸேவதே ।। 9 ।।
अयं அயம் அவன் श्रोत्रं ச்1ரோத்ரம் செவி (கேட்கும் சக்தி) चक्षु: சக்ஷு: கண் (பார்க்கும் சக்தி) स्पर्शनं च ஸ்பர்ச1நம் ச மெய்யும் (தொடுதல் சக்தி) रसनं ரஸநம் நாவு (சுவைக்கு சக்தி)
घ्राणम् एव च க்4ராணமேவ ச நாசியும் (நுகரும் சக்தி) मन: च மந: ச மனதும்
अधिष्ठाय அதி4ஷ்டா2ய தனதாக்கிக் கொண்டு विषयान् விஷயாந் விஷயங்களை
उपसेवते உபஸேவதே அனுபவிக்கிறான்.
அவன் செவி, கண், மெய், நாவு, நாசி, மனது ஆகியவைகளைத் தனதாக்கிக் கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.
விளக்கம்:
ஐந்து புலன்களும் ஐந்து ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல் இல்லாத வீட்டில் ஒருவனை அடைத்து வைத்துவிட்டால் அவன் வெளியுலகோடு எந்த தொடர்பும் வைக்கமுடியாது. காற்றும் வெளிச்சமும் நீரும் உணவுமில்லாவிடில் அவன் இறந்துபோவான். நமது ஐந்து புலன்களும் ஐந்து பூதங்களோடு தொடர்பு வைக்க உதவுகின்றன. ஆகாசத்தின் தன்மாத்திரையாகிய ஓசையைக் கேட்க காது எனும் புலனானது உதவுகிறது. அக்னியின் தன்மாத்திரையாகிய வடிவத்தைக் காணக் கண்ணும், வாயுவின் தன்மாத்திரையாகிய ஸ்பரிசத்தை உணர உடலும் உதவுகின்றது. நீரின் நீர்மையாகிய சுவையை அறிய நாவும், நிலத்தின் பாங்காகிய வாசனையை அறிய நாசியும் பயன்படுகின்றன. மனமோ இந்த ஐம்புலன்களுக்கும் பொதுவானது. உடலெனும் கோட்டைக்குள் இருக்கின்ற ஜீவனானவன், ஐந்து புலன்களின் வழியாக தெரிந்துகொள்ள மனம் என்னும் கருவியே பாலமாக இருக்கின்றது. ஒவ்வொரு அறிந்துணர்விற்கும் மனம் சாமானிய காரணமாகவும், அந்த குறிப்பிட்ட இந்திரியம் விஷேச காரணமாகவும் இருக்கின்றது. இவ்விதமாக வெளியுலகிலிருந்து இன்பதுன்ப மயமான விஷயங்கள் அவனுக்கு எட்டுகின்றன.
எனவே அந்த குறிப்பிட்ட உடலின் வழியாக உலகின் இன்ப-துன்பத்தை அனுபவிக்க அவன் உடலை மாற்றுகின்றான். பழைய கர்மங்களைத் தீர்க்கின்றான்; புதிய கர்ம பலன்களைச் சேர்க்கின்றான்; இவ்விதமாக ஸம்சாரியாகத் தொடர்கின்றான். பரமேஷ்வரனாகத் தன்னை அடையாளம் காணும்வரை இந்தப் பயணம் முடிவற்றுத் தொடர்கிறது.
---------------------------------------------------------------------------------------------