புதன், 20 ஆகஸ்ட், 2025

புருஷோத்தம யோகம் 15.12 - 15.13

||15.12|| பரமாத்மாவின் சொரூபம்:

यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम्।

यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ।। १२ ।।

யதா3தி3த்யக3தம் தேஜோ ஜக3த்3பா4ஸயதேऽகி2லம்
யச்சந்த்3ரமஸி யச்சாக்3நௌ தத்தேஜோ வித்3தி4 மாமகம் ।। 12 ।।

आदित्य गतं  ஆதி3த்ய 3தம்  சூரியனிடத்துள்ள     यत् तेज:  யத் தேஜ:  எந்த வெளிச்சம்    

अखिलम् जगत्  அகி2லம் ஜக3த்  உலகம் முழுவதையும்     

भासयते  பா4ஸயதே  பிரகாசிக்கச் செய்கிறதோ    चन्द्रमसि  சந்த்3ரமஸி    சந்திரனிலும்     

यत्  யத்  எந்த வெளிச்சம்      अग्नौ  அக்3நௌ அக்னியிலும்    यत्  யத்  எவ்வெளிச்சம்     

तत्  तेज:  தத் தேஜ:  அந்த தேஜசை   मामकम्  மாமகம்  என்னுடையதென்று    विद्धि  வித்3தி4 அறிக.


சூரியனிடத்திருந்து வந்து உலகம் முழுதையும் விளக்குகிற வெளிச்சமும், சந்திரனுடையதும், தீயினுடையதும் என்னிடத்திருந்து வந்த பிரகாசம் என்று அறிக


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.


விளக்கம்:

சுலோகம் பனிரெண்டு முதல் பதினைந்து வரை, பரமாத்மாவே ஜகத் சொரூபமாக விளங்குகிறது எனக் கூறுகிறார். சென்ற சுலோகங்களில் ப்ரம்மம் ஜீவ ரூபமாக விளங்குவதாக பகவான் கூறினார். இதிலிருந்து அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்று தான் எனக் காட்டப்படுகிறது. மேலும் இந்த மூன்று சுலோகங்களும் பத்து மற்றும் பதினொன்றாம் அத்தியாயங்களின் சாரமாகவும் அமைகிறது


=> அனைத்துப் பிரகாசமுமாய்:

அனைத்து உலகத்தையும் விளக்குகிற எந்த வெளிச்சமானது சூரியனிடமிருந்து வெளிப்படுகிறதோ அந்த வெளிச்சம் என்னுடையதாக அறிக என்கிறார் பகவான். இங்கு தேஜஸ்(தேஜ) எனும் சொல் சக்தியை, வெளிச்சமாக ஒளிரும் அதன் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. அதுபோலவே சந்திரன் மற்றும் அக்னியின் பிரகாசமும் என்னுடையதே என்கிறார்


=> இரு நோக்குநிலை:

அனைத்து மஹிமையும் பகவானுடையது ஆகையால் சூரியனின் ஒளியும், சந்திரன் மற்றும் நெருப்பின் பிரகாசமும் பரமேஷ்வரனின் பிரகாசமே ஆகும். ஒவ்வொன்றும் அதனது உபாதியின்படி பரமேஷ்வரனின் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. சூரியனும் நெருப்பும் வெப்பத்தையும், சந்திரன் குளிர்ச்சியையும் வெளிப்படுத்துவதும் பரமாத்மாவின் மஹிமையே ஆகும்.

அல்லது இதிலிருந்து இன்னும் ஒருபடி மேலே சென்று, சூரியன், சந்திரன், நெருப்பு முதலியனவாகவும் அவற்றின் பிரகாசமாகவும் இருப்பது ஈஷ்வரனே என அனைத்திலும் ஈஷ்வரனை தரிசிக்கலாம்.


=> ஆத்ம பிரகாசம்:

வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப்பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்கிறோம். நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பு இவைகளிடமிருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள் ஆகும். எங்கு வெளிச்சம், பிரகாசம் இருக்கிறதோ அங்கு சத்வகுணத்தின் தோற்றமுண்டு. தூய்மையான கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோல சத்வ குணத்திலே ஆத்ம சைத்தன்யம் ஒளிர்கிறது. உண்மையில் ஆத்ம சைத்தன்யத்தை விளக்குகின்ற சத்வ குணமும் பரமாத்மாவிலிருந்து வேறானது அல்ல. சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கின்றது என விளக்குவதுபோல, ஆத்ம சைத்தன்யமானதுநான் இருக்கிறேன்என்கிற பிரக்ஞையை விளக்குகின்றது. சூரியனிடமிருப்பது ஜடப் பிரகாசம்; ‘நான் இருக்கிறேன்என்ற உணர்வோ ஆத்மப் பிரகாசம். உதாரணமாக, இரண்டு அறைகளினுள் சூரிய வெளிச்சமானது சமமாக ஒளிர்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு அறையில் ஆள் யாருமில்லை; எனவே அங்கு சூரிய வெளிச்சம் உள்ளது எனப் பொருள்படுத்துபவர் எவருமில்லை. ‘இருக்கிறேன்என்ற உணர்வு அந்த வெளிச்சத்துக்கு கிடையாது. ஆகையினால் அந்த அறையில் சூரிய ஒளி இருப்பதும் இல்லாததும் ஒன்றே ஆகும். மாறாக, வெளிச்சம் இருக்கிற இனியொரு அறையில் மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அந்த வெளிச்சம் இருப்பதற்கும் அந்த மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈஷ்வரனிடமிருந்து வந்துள்ள ஜடப் பிரகாசத்தை, ஈஷ்வரன் என்னும் ஆத்ம பிரகாசம் அல்லது ஆத்ம சைத்தன்யம் அறிகிறது. அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்னி முதலியன அறியப்படு பொருள்களாகும்

---------------------------------------------------------------------------------------------

||15.13|| சூரிய சந்திரனின் பயன்:

गामाविश्य भूतानि धारयाम्यहमोजसा।

पुष्णामि चौषधी: सर्वा: सोमो भूत्वा रसात्मक: ।। १३ ।।

கா3மாவிச்1 பூ4தாநி தா4ரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி செளஷதீ4: ஸர்வா: ஸோமோ பூ4த்வா ரஸாத்மக: ।। 13 ।।

अहम्  அஹம்  நான்     ओजसा  ஓஜஸா  என் சக்தியால்     गाम्   கா3ம்  பூமியினுள்       

आविश्य   ஆவிச்1  பிரவேசித்து     भूतानि  பூ4தாநி  உயிர்களை     

धारयामि  தா4ரயாமி  தாங்குகிறேன்        रस आत्मक:  ரஸ ஆத்மக:  இனிமை வடிவாகிய    

सोम:   ஸோம:   சந்திரனாகவும்      भूत्वा  பூ4த்வா  ஆகி      सर्वा:  ஸர்வா:  எல்லா

ओषधी:  ஓஷதீ4:  பயிர்களையும்     पुष्णामि   புஷ்ணாமி   போஷிக்கிறேன்.


என் சக்தியினால் நான் பூமியினுள் பிரவேசித்து உயிர்களைத் தாங்குகிறேன். இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகிப் பயிர்களையெல்லாம் போஷிக்கிறேன்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் கூறப்பட்ட சூரிய சந்திரன் மற்றும் நெருப்பின் பயன்களை விவரிப்பதாக இந்த இரு சுலோகங்களை எடுத்துக் கொள்ளலாம். சூரிய சந்திரனாக பகவான் என்ன செய்கிறார் என்பதை இங்கு கூறுகிறார்


=> சூரியனாய் நான்:

நான் சூரிய ஒளியாக(சக்தியாக) பூமியினுள் நுழைந்து எல்லா ஜீவராசிகளையும் காப்பாற்றுகிறேன். அவைகளனைத்தும் அவ்விதம் இருக்கக் காரணமாக ஆகிறேன்.

ஈஷ்வர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. பகவான் பூமியில் பிரவேசித்து, தனது வலிமையினால் அனைத்து உயிர்களையும் தாங்குவதாகக் கூறுகிறார்அஹம் தா4ரயாமி. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, இந்த வலிமை அல்லது சக்தியானது பிணைக்கின்ற ஆசைகளிலிருந்து விடுபட்டது. எனவே அது பூமியைப் போஷிப்பதாக இருக்கிறது. வானமும் பூமியும், அனைத்து கோள்களும் அதனதன் இடத்தில் இருப்பதற்கு இந்த சக்தியே காரணமாகிறது. எனவே பூமியை நிலைநிறுத்துபவராக ஈஷ்வரனே இருக்கிறார்

அவர் எவ்விதம் உயிரினங்களைத் தாங்குகிறார்? பொதுவாக உயிரினங்கள் தங்களது உணவுகளைத் தாங்களே சேகரித்து தங்களை கவனித்துக் கொள்வதையே நாம் காண்கிறோம். ஆனால் அவைகள் அந்த உணவை அடைய காரணமான சக்தியாகவும், மேலும் அந்த உணவுகளில் இருக்கின்ற ஊட்டச்சத்தாகவும் இருப்பது ஈஷ்வரனே ஆகும். இதையே பகவான் நான் போஷிக்கிறேன்அஹம் புஷ்ணாமி, என்கிறார்.

=> சந்திரனாய் நான்:

எப்படி அவர் போஷிக்கிறார் ? ஸோமமாக ஆவதன் மூலமாக அதை செய்கிறார். ‘ஸோமஎன்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அது, ஒரு பொருளின் சாறைக் குறிக்கலாம்; அல்லது மதிப்பு, அல்லது ஒரு குறிப்பிட்ட தாவரம் அல்லது சந்திரன். இவை அனைத்தும்ஸோமஎனப்படும். ‘ரஸஎன்பதற்கும் இரு பொருள் சாத்தியம் ஆதலால் இங்கு இரு விதமான பொருள்விளக்கத்தையும் பார்க்கலாம்.

(1) ‘ரஸ ஆத்மகஎனில்இனிமை வடிவாகியஎன்பது பொருள். இதிலிருந்து இனிமை வடிவாகிய சந்திரனாக ஆகி தனது குளுமையினால் பயிர்களைப் போஷிக்கிறேன். சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடமிருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம் செழித்து வளர்கின்றன என்பதும், இதனால் அந்தந்த தாவர வகைகளின் இயல்பை அவைகள் நன்கு பெற்று வருகின்றன என்பதும் இங்கு கூறப்படுகிறது

(2) ‘ரஸஎன்பதன் நேரடிப் பொருள் சாறு. எனவேரஸ ஆத்மகஎன்பதைசாறு வடிவாகஎனக் கொள்ளலாம். இவ்விதம் எடுத்துக் கொள்ளும்போதுஸர்வா: ஓஷதீ4: புஷ்ணாமிஎன்பதன் பொருள் இன்னும் தெளிவானதாக ஆகிறது. ‘ஓஷதீ4எனில் அனைத்து மரம் செடி கொடி உள்ளிட்ட தாவர வகைகளைக் குறிக்கிறது. ஆகவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய அனைத்து உணவுவகைகளில் இருக்கின்ற ஊட்டசத்தாகவும் சுவையாகவும் மாறி அனைத்தையும் போஷிக்கிறேன் என்கிறார். ஈஷ்வரனே ஸோமனாக, அனைத்து சுவை மற்றும் ஊட்டங்கள் அடங்கிய சாரங்கள் தேங்கியிருக்கும் இடமாக இருக்கிறார்.   

இந்த நான்கு சுலோகங்களிலும்அனைத்தின் சுயமாக நானே இருக்கிறேன்அஹம் ஸர்வாத்மாஎனும் கருத்து கூறப்படுகிறது. சூரியனாக, சந்திரனாக, நெருப்பாக, உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவாக, உணவிலுள்ள ஊட்டச்சத்தாக மாறி உயிர்களை காப்பவனாக நானே இருக்கிறேன் என்கிறார்

உணவாக பகவான் இருக்கிறார் எனில் நாம் பகவானை உண்பதாக அல்லவா ஆகிறது என்கிற கேள்வி எழலாம். அது அப்படி அல்ல, ஏனெனில் உண்பவனும் நான்தான் என அடுத்த சுலோகத்தில் பகவான் கூறுகிறார்.

---------------------------------------------------------------------------------------------