வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

புருஷோத்தம யோகம் 15.6 - 15.7

||15.6|| ப்ரம்ம சொரூபம்

तद्भासयते सूर्यो शशाङ्को पावक:

यद्गत्वा निवर्तन्ते तद्धाम परमं मम ।। ।।

தத்3பா4ஸயதே ஸூர்யோ 1சா1ங்கோ பாவக:
யத்33த்வா நிவர்தந்தே தத்3தா4 பரமம் மம ।। 6 ।।

यत् गत्वा  யத் 3த்வா  எங்கு சென்று     निवर्तन्ते  நிவர்தந்தே  (அவர்கள்) திரும்பி வருவதில்லையோ    तत्  தத்  அதை     सूर्य:  ஸூர்ய:  சூரியன்    

भासयते  பா4ஸயதே  விளக்குகிறதில்லை    शशाङ्क 1சா1ங்கோ  சந்திரனும் விளக்குகிறதில்லை    पावक:  பாவக:  நெருப்பும் விளக்குகிறதில்லை     तत्  தத்  அது      

मम  மம  என்னுடைய      परमं  பரமம்  மேலான     धाम  தா4  உறைவிடம்.


எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, எதை சூரியனும் சந்திரனும் நெருப்பும் விளக்குவதில்லையோ அது எனது மேலான உறைவிடம்.

சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.


விளக்கம்:

பதம்எனக் கூறப்படுகிற அந்த ப்ரம்மத்தின் சொரூபம் இங்கு விளக்கப்படுகிறது


=> உறைவிடம்:

தா4எனில் இருப்பிடம் அல்லது தங்குமிடம் ஆகும். இந்த சுலோகங்களில் பயன்படுத்தப்படுகிறபத3ம்மற்றும்தா4எனும் வார்த்தைப் பயன்பாடு வேதகாலப் பின்னணியை பிரதிபலிக்கின்றது. நமது வேதங்கள் உட்பட, மற்ற பிற மதங்களும் ஒரு ஜீவன் இந்த உலகத்தை விட்டு வெளியேறிய பின்னர் சென்றடையும் இடம் அல்லது இடங்களை உறுதியளிக்கின்றன. அவற்றில் பெரும்பாலான மதங்களில் சொர்க்கம் எனும் இடமானது இறுதி இலக்காகப் பார்க்கப்படுகிறது. நமது வேதம் அதற்குபத3ம்மற்றும்தா4என்கிற சொற்களைப் பிரயோகம் செய்கிறது. எனவே பொதுவாக விரும்பப்படுகிற, இறுதி இலக்காக அமைந்த அந்த இடத்திற்கு உபயோகப்படுத்தப்படும் வார்த்தையே இங்கு மோக்ஷத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்சொர்க்கம்என்பது மக்கள் சென்று திரும்பும் இடம்; மோக்ஷம் அப்படி அல்லயத் 3த்வா நிவர்தந்தே

ஆகவே மோக்ஷத்தைக் குறிக்கும் விதத்தில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும் போதெல்லாம் அது பெரும்பாலும்அவன் திரும்புவதில்லை நிவர்தந்தேஎனும் வெளிப்பாட்டை அடைமொழியாகக் கொண்டுள்ளது. இதை அறிந்தவன் ப்ரம்மமாகிறான் என எளிமையாகவும் கூறலாம்தான். ஆனால் சொர்க்கத்திற்கென பயன்படுத்தப்படும் வார்த்தையை உபயோகப்படுத்தும்போது சொர்க்கம் மட்டுமே இறுதி இலக்காக ஆகாது என்பதை ஞாபகப்படுத்துவதாக அமைகிறது. மோக்ஷத்தை தவிர எந்தவொரு பயணத்திலும் திரும்புதல் உள்ளது. ஆனால் மோக்ஷத்தில் நீ உன்னையே அடைவதால் அங்கு திரும்புதல் இல்லை; ஏனெனில் நீயே அந்த ப்ரம்மமாக இருக்கிறாய்.


=> ஒளிமூலம்:

உறைவிடமாக(பதம்) இருக்கின்ற அந்த ப்ரம்மத்தை, அந்த இடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளியூட்ட முடியாதுதத் ஸூர்ய: பா4ஸயதே 1சா1ங்கோ பாவக:. இந்த சுலோகத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் மந்திரங்கள் கடோபநிஷத், சுவேதாஸ்வதரோபநிஷத் மற்றும் முண்டகோபநிஷத் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன. சூரியன் உட்பட எந்த ஒளிமூலங்களும் அந்த ப்ரம்மத்தை ஒளியூட்டாதா? எனில், அது அந்த அளவுக்கு இருள்சூழ்ந்த இடமா? இல்லை. அனைத்து ஒளிகளுக்கும் ப்ரம்மம் ஆதாரமாக இருப்பதனால் அங்கு அவ்வொளி மூலங்கள் இல்லாமையை அடைகின்றன.  

சூரியன் எனும் ஒளிமூலம் இந்த உலகத்தையே பிரகாசிக்கிறது என்பது உண்மைதான். எனினும் அந்த சூரியனையும் காட்டிக் கொடுக்கும் ஒளியாக இருப்பது நமது கண்கள். அந்தக் கண்களை ஒளியூட்டிக் கொண்டிருப்பது நமது மனம். ஒரு பொருள் மனதிற்கு விஷயமாக ஆனவுடன் அது பார்க்கப்பட்டு விடுகிறதா எனில் இல்லை. கண்கள் ஒரு பொருளைக் கண்டவுடன், அந்த தொடர்பு மனதில் ஒரு எண்ண வடிவத்தை(வ்ருத்தி) கொண்டுவருகிறது. இது மனதால் உணரப்படும்போதே அங்கு அறிதல்(பார்த்தல்) நிகழ்கிறது. அதாவது மனதில் எழுகிற அந்த எண்ண வடிவமும்(வ்ருத்தியும்) ஒளியூட்டப்படும்போதே அந்த பொருள் மனத்தால் பார்க்கப்படுகிறது. அங்கே சூரியன், சந்திரன் அல்லது நெருப்பு போன்ற ஒளிவிளக்குகளுக்கு அனுமதி இல்லை. அந்த வ்ருத்தியை ஒளிரச் செய்வது ஆத்மா ஆகும். அந்த பிரக்ஞை உணர்வே அனைத்து ஒளிகளின் ஆதாரமாக உள்ளது.   

மனதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்த ஆத்மாவை ஒளியூட்டுவது எது? சூரியனா? சூரியன் எண்ணத்தைக் கூட ஒளிரச் செய்யாதபோது, அந்த எண்ணத்தை ஒளிரச் செய்பவனாக இருக்கின்ற ஆத்மாவை எப்படி அது பிரகாசிக்கும்? ஆத்மா சுயம்-ஜோதி; அந்தச் சூரியனையும் அறிகின்ற ஒளியாக இருக்கின்றது. எனில் அது மற்றதால் விளக்கப்படாமல் மற்றதை தான் விளக்குவதாக இருக்கின்றது. சூரியன், சந்திரன், மின்னல், நெருப்பு, மின்விளக்கு என அனைத்து ஒளிகளையும் ஒளியூட்டுவது நமது பிரக்ஞை.

=> பிரக்ஞை:  

இருட்டான அறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்குநான் இருக்கிறேன்என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வை ஒளிரச் செய்ய எந்த ஒளியும் தேவையில்லை. உண்மையில், இது மற்ற எல்லா விளக்குகளையும் ஒளிரச் செய்கிறது எனப் பார்த்தோம். ஒரு ஒளி இனியொரு ஒளியை ஒளிரச் செய்ய முடியாது எனினும் இந்த உணர்வின் காரணமாக மற்ற எல்லா ஒளி வடிவங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுவே மனதுக்கும், புலன்களுக்கும், உலகம் முழுவதற்கும் தனது இருப்பின் மூலம் இருப்பைக் கொடுக்கிறது. அனைத்தும்நான்’-ஆக இருக்கின்ற, அந்த இடத்தை அடைந்த ஒருவன் திரும்புவதற்கு வேறு இடம் ஏது! ஆகவே, அந்த பதத்தை அடைந்தவன் திரும்புவதில்லை நிவர்தந்தே. பயணமில்லை; பிறப்பு இறப்பில்லை; காலம் தேசம் வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன. இப்பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவ போதத்துக்கு வருவதில்லை.  


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு [விவேகம்] ஒழிந்து, மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுதுநான்என்பதும்நீஎன்பதும் உலகமென்பதும் இரா. ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்த ப்ரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.

---------------------------------------------------------------------------------------------

||15.7|| ஜீவ தத்துவ விளக்கம்:

ममैवांशो जीवलोके जीवभूत: सनातन:

मन: षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ।। ।।

மமைவாம்சோ1 ஜீவலோகே ஜீவபூ4: ஸநாதந:
மந:ஷஷ்டா2நீந்த்3ரியாணி ப்ரக்ருதிஸ்தா2நி கர்ஷதி ।। 7 ।।

मम  மம  எனது    अंश: एवं  அம்ச1: ஏவ  அம்சமே   सनातन:  ஸநாதந:  என்றென்றும்    

जीवभूत:  ஜீவபூ4:  ஜீவனாகத் தோன்றி   जीवलोके  ஜீவலோகே  ஜீவலோகத்தில்     

प्रकृतिस्थानि  ப்ரக்ருதிஸ்தா2நி  பிரகிருதியிலேயே நிற்கின்ற     मन: षष्ठानि  மந: ஷஷ்டா2நி  மனதை ஆறாவதாகவுடைய     इन्द्रियाणि  இந்த்3ரியாணி  புலன்களை    कर्षति  கர்ஷதி  கவர்கிறது.          


எக்காலத்தும் எனது அம்சமே ஜீவனாகத் தோன்றி ஜீவலோகத்தில் பிரகிருதியிலே நிற்கின்ற மனது உட்பட ஆறு இந்திரியங்களை இழுக்கிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.


விளக்கம்:

இந்த சுலோகத்தின் முதல் வரியானது, ‘யத்33த்வா நிவர்தந்தே தத்3தா4 பரமம் மமஎன்ற வெளிப்பாட்டின் விளக்கமாக முந்தைய சுலோகத்துடன் இணைகிறது. இதன் இரண்டாவது வரியை அடுத்த சுலோகத்துடன் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். இனி, முதல் வரியின் விளக்கத்தைப் பார்க்கலாம்.

அவர்கள் என்னிலிருந்து வேறாக இல்லாததால் அவர்கள் திரும்பி வருவதில்லைஎனக் கூறினார் பகவான். எனவேசெல்லுதல்அல்லதுஅடைதல்என்பது தன்னை ஈஷ்வரனாக அடையாளம் காண்பதைத் தவிர வேறில்லை


=> எனதம்சம்:

அம்ச1எனில் பகுதி என்று பொருள். ஜீவனாகத் தோன்றியிருப்பவன் எனது பகுதிதான்ஜீவபூ4: மம அம்ச1: ஏவ, என்கிறார் பகவான். இந்த வாக்கியத்தை தவறாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜீவன் என்பவன் பகவானின் அம்சம் எனக் கூறும்போது, அது ஜீவன் மற்றொரு பொருள் அல்ல, பகவானிலிருந்து வேறானவன் அல்ல என்பதை மட்டுமே இங்கு குறிக்கிறது. மற்றபடி பகவானின் ஒரு பாகம், பகவானின் உடலின் ஒரு பகுதி என்றெல்லாம் இதை தவறாகப் பொருள்படுத்தக் கூடாது. இரு வெவ்வேறான பொருள்கள் ஒன்று சேரும்போது அதைப் பிரிக்கலாம். ஆனால் ஜீவன் பகவானின் அம்சமாக இருப்பதால் பிரிதல் என்பது இங்கு இல்லை.

ஜீவனால் அனுபவிக்கப்படுவது ஜீவ-லோகம்(ஜீவலோக) எனப்படும். இது ஜீவர்களின் உலகத்தைக் குறிக்கவில்லை, ஜீவனின் உலகத்தைக் குறிக்கிறது. ஜீவன் தனது உடலின் அடிப்படையில் தன்னை செயல் செய்பவனாகவும்(கர்த்தா) அதன் பலன்களை அனுபவிப்பவனாகவும்(போக்தா) நினைக்கிறான். ஆனால்என்றுமுள்ள_ஸநாதநஆத்மாவே, கர்த்தா மற்றும் போக்தா எனும் நிலையைக் கொண்டுள்ளதால், ஜீவன் உண்மையில் என்றுமிருப்பவன். ஆத்ம-அறிவு அடையப்படும்போது இந்த ஜீவாத்மத்துவம் நீங்குகிறது


=> அம்சம் என்பது பிரதிபிம்பத்தைப் போல:

பரமாத்மாவான என் அம்சமே ஜீவ உலகத்தில் ஜீவனாக விளங்கிக் கொண்டுள்ளது என்கிறார் பகவான். ஆனால் நாம் எண்ணற்ற ஜீவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை நாம் எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது? இது நீரில் தோன்றும் சூரியனின் பிரதிபலிப்பு போன்றது என்கிறார் சங்கரர். எத்தனை பிரதிபலிப்புகள் இருந்தாலும் இருப்பது ஒரு சூரியன் மட்டுமே. அந்த ஒரே ஒரு சூரியனின் பிரதிபலிப்புதான் நீரில் பல சூரியன்களைத் தோற்றுவித்து இருக்கிறது. பிரதிபலிப்பு என்பது முற்றிலும் சூரியனைச் சார்ந்து இருக்கிறது, ஆனால் சூரியன் அந்த பிரதிபிம்பங்களிலிருந்து சுயாதீனமாக உள்ளது. மேலும், நேரில் பார்க்கப்படும் அந்த முழுமை பிரதிபிம்பத்திலும் அப்படியே தெரிகிறது. ஆனால் பார்க்கப்படுவது வெறும் பிரதிபிம்பமே ஆகும். எனவே அங்கு உண்மையில் இரண்டு விஷயங்கள் இல்லை. பார்க்கப்படுவதில் ஒன்று ஸத்யம், மற்றொன்று மித்யா

இதைப் போலவே இங்கு எண்ணற்ற ஜீவர்கள் இருந்தாலும் அனைத்தும் பரமாத்மாவே ஆகும். ஜீவத்துவத்தைக் கொடுக்கின்ற கர்த்தா மற்றும் போக்தாவாக இருக்கிற அனைத்து சூக்ஷம சரீரங்களும் பரமாத்மாவைத் தவிர வேறில்லை. கர்த்தா போக்தா அனைத்தும் வெறும் எண்ணங்கள் மட்டுமே. மனம் இருக்கும்வரை அறியாமை இருக்கும்வரை மட்டுமே இருக்கின்றது. உறங்கச் சென்றால் மறைந்துபோகும் இது விழித்தவுடன் திரும்புகிறது. உறங்கும்போது பிரக்ஞையில் ஒடுங்கி இல்லாமையை அடைந்து, விழித்தவுடன் பிரக்ஞைச் சார்ந்து இருப்பை அடைகிறது. எனவேதான் இது மித்யா; ஸத்யம் அல்ல. வந்து போகின்ற இவைகளுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா ஸத்யம். எனவே அம்சம் என்பது பகுதிகளைக் குறிக்கவில்லை; வெளிப்பாட்டைக் குறிக்கிறது


=> அம்சம் எனில் பகுதிகள் அல்ல:

இங்கு சங்கரர் இனியொரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலளிக்கிறார். பகுதிகள் இல்லாதது ஆத்மா எனில் அப்படிப்பட்டதொரு ஆத்மா கர்த்தா அல்லது போக்தாவாக, ஜீவனாக எப்படி இருக்கமுடியும்? சிக்கல் இதுதான். ஒருகால், ஆத்மா பாகங்களைக் கொண்டது எனில் அது சிதைவுக்கும் அழிவுக்கும் உட்பட்டது என ஆகிவிடும். ஆகவே பரமாத்மா பாகங்களைக் கொண்டுள்ளது எனக் கூற முடியாது. அதே சமயத்தில் பகுதிகள் இல்லாத ஆத்மா ஜீவனாக, கர்த்தாவாக, போக்தாவாக ஆகியுள்ளது எனவும் கூற முடியாது. எனில் இந்தஅம்சம்’, அதாவது பகுதி என்பதை எப்படி புரிந்து கொள்வது

இந்த சிக்கலை தீர்ப்பதென்பது பெரிய பிரச்சினை இல்லை. ஏனெனில் அறியாமையினால் தோற்றுவிக்கப்பட்டதனால், இந்த பகுதியானது ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடாகத் தெரிந்து கொண்டுள்ளது. எப்படி நீரினுள் தெரிந்து கொண்டுள்ள பிரதிபிம்பம் அந்த உபாதியினால் தனித்து இயங்குவதுபோலத் தெரிகிறதோ, அதுபோலத்தான் ஜீவனும். எனவே உபாதியின் காரணமாக, ஒவ்வொரு கர்த்தாவும் பகவானின் பகுதியாகிறான். ஆனால் பகவானே ஆத்மாவாக இருக்கிறார் என்கிற உண்மை உள்ளபடி உணரப்படும்போது கர்த்தா எனும் தன்மையும், போக்தா எனும் தன்மையும் நீங்கி, பகவானின் இருப்பிடத்தை அடைகிறான் ஜீவன்; அத்தகையவர்கள் திரும்புவதில்லை. உண்மையில் அவர்கள் எந்த நேரத்திலும் ஈஷ்வரனிடமிருந்து பிரிந்தவர்கள் அல்ல; இது உணரப்படும் வரை அவருடைய ஒரு பகுதியாக இருப்பதைப் போலத் தெரிகிறது. கால வரையறையற்றஅம்சம்தற்காலிகமாக காலத்திற்கு உட்பட்டதாகத் தெரிகிறது. ‘நான் ப்ரம்மம்என்பது உணரப்பட்டவுடன் அங்குஅம்சம்எதுவுமில்லை; ஒரே ஒரு வஸ்து மட்டுமே உள்ளது. அறியாமை நீங்கும்போது, அறியாமையிலிருந்து தோன்றிய விளைவுகளும் நீங்குகின்றன

இருவித நோக்குநிலைகள் உள்ளன:

  (1) ஜீவனை ப்ரம்மத்தோடு பார்க்கும்போது ப்ரம்மமாகவே பார்க்கலாம்.

  (2) ப்ரம்மத்தை விட்டுவிட்டு பார்க்கும்போது ஜீவன் மித்யா(பொய்).


=> ஜீவன்:

ஜீவன் என்பதில் இரு தத்துவம் உள்ளது:

  (1) பகவானின் உண்மையான சொரூபமான ப்ரம்ம - சித்.

  (2) அதைப்போலவே போலியான ரூபம் ஒன்று - சிதாபாசம்.

ப்ரம்மத்தின் சித், சூக்ஷம சரீரத்தில் பிரதிபிம்பிக்கும்போது, ஜடமான மனதில் சிதாபாசம் என்றழைக்கப்படும் பொய்யான ஜீவன் தோன்றுகிறது. உதாரணமாக, பானைநீரில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சூரியனை எடுத்துக் கொள்வோம். சூரியனானது, பானைக்குள் இருக்கின்ற நீரில் தனது பிரதிபிம்பத்தைப் பார்த்து, ‘இதில்தான் நான் பிறந்து, வாழ்ந்துள்ளேன். இதுதான் நான். பானை உடையும்போது நான் அழிகிறேன் என நினைக்கிறது’. இதைத்தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம். நமது உண்மை சொரூபமானசித்’-தானது, உடலிலுள்ள மனதில் பிரதிபிம்பிப்பதனால், இந்த ஸ்தூல மற்றும் சூக்ஷம சரீரத்தின் மீதுநான்என்கிற அபிமானத்தை வைக்கிறோம். இதில் மரணம் என்பது பானையை மாற்றுவது போல. உடல் மட்டும்தான் அழிகிறது. நீரும், பிரதிபிம்பமும் தொடர்கிறது. மரணம் என்பது முடிவல்ல. அதுவொரு தொடர்ச்சி. ஸ்தூல உடல்தான் முடிவை அடைகிறது. மனமும்கூட அழிவதில்லை. பெற்றோர்கள் ஒருவனுக்கு உடலைத்தான் கொடுக்கிறார்கள்; மனதை அல்ல

   ஜீவன் => மனம் + சிதாபாசம் + சித் (சைத்தன்யம்). ஆத்மா என்பது என்றுமுள்ள ஸத்யம்; உயிர் என்பது சிதாபாசன்; பொய்யான ஜீவன்.

இனி, இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியை அடுத்த சுலோகத்தோடு இணைத்து பொருள் கொள்ளவேண்டும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஜீவனின் உண்மை ஸ்வபாவம் சச்சிதானந்தமே. இவ்வளவு உபாதிகள் எல்லாம் அகங்காரத்தினால் உண்டாயின. ஆதலால் ஜீவனுக்குத் தன் உண்மை சுபாவமே மறந்துபோகிறது.

---------------------------------------------------------------------------------------------