செவ்வாய், 17 ஜனவரி, 2023

ஞானவிக்ஞான யோகம் 7.1 - 7.2

                                                          ஏழாம் அத்தியாயம்

ஞான விக்ஞான யோகம் [ज्ञानविज्ञानयोग:]

முகவுரை

பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட முழு பகவத் கீதை பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும்ஷட்கம்_षट्क ’, அதாவது ஆறின் கூட்டம் என்றழைக்கப்படுகிறது. இதனால் முழு கீதையும் மூன்று ஷட்கங்களாகப்(ஷட்க த்ரயம்) பிரிகிறது. அத்தியாயம் ஒன்று முதல் ஆறு வரை(1-6) முதல் ஷட்கம், அத்தியாயம் ஏழு முதல் பனிரெண்டு வரை(7-12) இரண்டாம் ஷட்கம் மற்றும் அத்தியாயம் பதிமூன்று முதல் பதினெட்டு வரை(13-18) மூன்றாம் ஷட்கம். ஆகவே சென்ற அத்தியாயத்துடன் முதல் ஷட்கம் நிறைவடைகிறது. அதில் முக்கியமாக ஜீவதத்துவம் விளக்கப்பட்டது. ஜீவன் எவ்வளவு மேலோன் ஆகக்கூடும் என்பதும் காட்டப்பட்டது. மேன்மையுற்ற ஜீவன் பரமாத்மாவிடம் பக்தி புரிவதற்கு நிகரான செயல் வேறொன்றுமில்லை. ஆகவே இனிவரும் ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம சொரூபமும் பக்தியும் படிப்படியாக விளக்கப்படுகிறது. கர்மயோகம் தியானயோகமாக வடிவெடுத்தது, இனி அது பக்தியோகமாக மாறப்போகிறது.


=> மூன்று ஷட்கங்களின் பிரதான கருத்துக்கள்:

* முதல் ஷட்கம்:

    (i) ஜீவ சொரூபம்

    (ii) கர்ம யோகம்

    (iii) சுய முயற்சி (பிரயத்தனம்)

* இரண்டாவது ஷட்கம்:

    (i) ஈஷ்வர சொரூபம்

    (ii) பக்தி யோகம்

    (iii) ஈஷ்வர அனுகிரஹம்

* மூன்றாவது ஷட்கம்:

    (i) ஜீவ-ஈஷ்வர ஐக்கியம்

    (ii) ஞான யோகம்

    (iii) நற்பண்புகள்


=> முதல் ஷட்கத்தின் சாரம்:

(i) ஜீவ சொரூபம்: பகவான் ஜீவாத்மாவை ஆத்மா மற்றும் அனாத்மா எனப் பிரித்தார். அனாத்மா = ஸ்தூல உடல் + சூக்ஷம உடல் + காரண உடல். இது ஜடமானது; அநித்யமானது; மித்யா. அடுத்ததாக ஆத்மாவை பற்றிய விளக்கத்தை அளித்தார். அது அழியாதது; மாறாது; அகர்த்தா, ஏகம் மற்றும் அபோக்தா.

(ii) கர்ம யோகம்: மனத்தூய்மை எனும் தகுதியையுடையவர்களே ஆத்ம தத்துவத்தை கிரஹிக்க முடியும். ஈஷ்வரார்ப்பணம் மற்றும் பிரசாத புத்தியை அடிப்படையாகக் கொண்ட கர்மயோக வாழ்க்கையின் மூலம் இந்த மனத்தூய்மை அடையப்படுகிறது. இதன் பலனாக விவேகம், வைராக்கியம் மற்றும் முமுக்ஷுத்வம் உண்டாகிறது.

(iii) பிரயத்தனம்: இந்த ஞானயோகப் பாதையில் சுயமுயற்சி என்பது இன்றியமையாதது. லெளகிக வாழ்க்கையைப் போல நண்பர்களோ சுற்றத்தாரோ அல்லது பிராரப்தமோ இங்கு உதவாது. அதிக பட்சமாக சிரவண நிலையில் குருவின் உபதேசம் நமது முயற்சிக்கு அப்பாற்பட்டு இருந்தபோதிலும், சரியான குருவை அடைவது முதல் குருவின் உபதேசத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது வரை ஒருவனின் சொந்த முயற்சி அவசியமாகிறது. மநந காலத்தில் நமது சந்தேகத்தை தொகுத்து, விசாரம் செய்து அதை நீக்குவதில் குருவின் பங்கு இருந்தபோதிலும் தனியொருவனின் முயற்சிதான் இங்கு பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இந்த ஞானத்திற்கு தேவையான தகுதியை அடைவதிலும் சுயமுயற்சி அவசியப்படுகிறது. இறுதியாக, நிதித்யாசனம் எனும் நிலையில் சாதகன் தனித்துவிடப்படுகிறான். தன்னுடைய முழு முயற்சியினால் மட்டும்தான் ஒருவனால் ஞான நிஷ்டையை அடைய முடியும். இவ்விதம் இந்த மோக்ஷ பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் தனியொருவனின் சொந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது


=> இரண்டாவது ஷட்கத்திற்கான முகவுரை:

கீதையில் சில அத்தியாயங்களின் கடைசி சுலோகம், அதுவரை உபதேசிக்கப்பட்ட தலைப்பிற்கு அப்பாற்பட்டதாகவும் அதனால் அது ஒரு இடைச்செருகல் போலவும் தோன்றலாம். ஆனால் அது அடுத்து என்ன வரப்போகிறது என்பதற்கான ஒரு இணைப்புச் சங்கிலி ஆகும். ஆறாவது அத்தியாயத்தின் கடைசி சுலோகமும் அப்படிப்பட்டதோர் இணைப்பையே குறிக்கிறது. ஆறாவது அத்தியாயத்தில், இரண்டாவது கடைசி சுலோகத்தில் கிருஷ்ணர், ‘ஆகவே யோகியாக இரு_தஸ்மாத் யோகி பவஎனக் கூறி யோகத்தைப் பற்றிய அந்த அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். ஆனால் அங்கு மேலும் ஒரு சுலோகம் அதை ஏழாவது அத்தியாயத்துடன் இணைப்பதாக உள்ளது. அது வெளிப்படையான ஒரு கேள்வியாக இல்லாமல், கேள்விக்கான விதையைக்(ப்ரஸ்ன பீஜ) கொண்டுள்ளது.

யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்து என்னை நாடுகின்றானோ(மத்33தேந அந்தராத்மநா), அவன் மற்ற எல்லாவிதமான யோகியைக் காட்டிலும் மிக மேலானவன்என்கிறார் கிருஷ்ணர். இது இரண்டு கேள்விகளுக்கான விதையாக ஆகிறது.

1. ஈஷ்வரனிடத்தில் மனம் லயிப்பவனாக யோகி எப்படி ஆகிறான்?

2. இறைவனின் சொரூபம் என்ன?

ஆகவே இனிவரும் அத்தியாயங்களில், அதாவது இரண்டாவது ஷட்கத்தில் இதற்கான பதிலை அளிக்கிறார் கிருஷ்ணர். இப்படிப்பட்ட சொரூபமுடைய என்னிடத்தில், இவ்விதமாக ஒருவன் லயிக்கிறான் என விளக்கவுள்ளார்

தத் த்வம் அஸிஎனும் மஹா வாக்கியத்தில்த்வம்என்ற சொல் குறிக்கும் ஜீவ தத்துவம் முதல் ஷட்கத்தில் விரிவாகக் கூறப்பட்டது. இனிவரும் ஷட்கத்தில்தத்என்ற சொல் குறிக்கும் ஈஷ்வர தத்துவம் விளக்கப்படவுள்ளது

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||7.1|| தலைப்பின் அறிமுகம்

श्रीभगवानुवाच

मय्यासक्तमना: पार्थ योगं युञ्जन्मदाश्रय:

असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु ।। ।।

ஸ்ரீப43வாநுவாச

மய்யாஸக்தமநா: பார்த2 யோக3ம் யுஞ்ஜந்மதா3ச்1ரய:  

அஸம்ச1யம் ஸமக்3ரம் மாம் யதா2 ஜ்ஞாஸ்யஸி தச்ச்2ருணு ।। 1 ।।


श्रीभगवान् उवाच   ஸ்ரீப43வாந் உவாச   ஶ்ரீ பகவான் சொன்னது

पार्थ  பார்த2  பார்த்தா   मयि  மயி  என்னிடத்தில்  सक्तमना:   ஆஸக்தமநா:  பற்றுள்ள மனதையுடையவனாய் मदाश्रय:  மதா3ச்1ரய: என்னைச் சரணடைந்தவனாய்   योगं युञ्जन्  யோக3ம் யுஞ்ஜந்  யோகம் பயின்று   असंशयं  அஸம்ச1யம்  சந்தேகமில்லாது   मां समग्रं   மாம் ஸமக்3ரம் என்னை முற்றும்   

यथा ज्ञास्यसि   யதா2 ஜ்ஞாஸ்யஸி  எப்படி அறிவாயோ  तत् शृणु  தத் ச்1ருணு  அதைக் கேள்.


பார்த்தா, என்னிடத்தில் அன்பு வைத்த மனதையுடையவனாய், என்னைச் சரணடைந்தவனாய், சந்தேகமில்லாது என்னை முற்றும் அறிவது எங்ஙனமென்று சொல்லக் கேளாய்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.


விளக்கம்:

=> தலைப்பு குறித்த அறிமுகம்:

இந்த சுலோகத்தில், ‘மயிஎனும் சொல்லைக் கொண்டு பகவான் இனிவரும் அத்தியாயங்களின் தலைப்பாகத் தன்னை அறிமுகப்படுத்துகிறார். கீதையில் பகவான் எப்போதெல்லாம், நான், என்னை, என்னால் என தன்னைக் குறித்து பேசுகிறாரோ, அப்போதெல்லாம் நான்கு விதமான அர்த்தங்களில் ஒன்று அந்த இடத்திற்கு தகுந்தாற்போல எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(1) கிருஷ்ணன் - வசுதேவரின் புத்திரன், அர்ஜுனனின் நண்பன்

(2) விஷ்ணு - ஸ்திதிக்கான தெய்வம்

(3) ஈஷ்வரன் - ப்ரம்மமும் மாயையும் கலந்த சகுண ப்ரம்மம்.

(4) நிர்குண ப்ரம்மம்

இந்த சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்(என்னை), மாம்(என்னை) மற்றும் மயி(என்னிடத்தில்) என்பது ஈஷ்வரனைக் குறிக்கிறது

மயி - என்னில், ஆஸக்தமநா: - மனவுறுதி கொண்டவன். ஈஷ்வரனிடம் அன்பு கொண்டவனை, அர்ப்பணிப்பு உடையவனை மய்யாஸக்தமநா: என்கிறார். மேலும் பரமேஷ்வரனாகிய என்னை யார் அடைக்கலமாய் கொள்கிறானோ அவனை மதா3ச்1ரய: என்கிறார்.   


=> பாஷ்ய விளக்கம்:

சங்கரர் தனது பாஷ்யத்தில்மதா3ச்1ரயஎன்பதன் பொருளைப் பின்வருமாறு விளக்குகிறார். ஒருவன் தான் விரும்பிய பலனை அடைய ஒரு குறிப்பிட்ட சாதனத்தை அடைக்கலமாய் தேர்ந்தெடுக்கிறான். அந்தச் சாதனம்ஆஷ்ரயஎனப்படும். உதாரணமாக சொர்க்கத்திற்குச் செல்வதற்கான புண்ணியத்தை அடைய தினசரி செய்யும் அக்னிஹோத்ரம் எனும் சடங்கு ஒரு சாதனம் ஆகிறது. இந்த வழியை தேர்ந்தெடுத்தவர்கள்அக்னிஹோத்ராஷ்ரயஎன்று அழைக்கப்படுகின்றனர்

எனில் மோக்ஷத்தை அடைவதற்கான ஆஷ்ரயமாக எது உள்ளது? இதற்கான பதிலாக பகவான், மதாஷ்ரய, ஈஷ்வராஷ்ரய, ஈஷ்வரனை ஆஷ்ரயமாக கொண்டிருக்க வேண்டும் என்கிறார். மனிதர்கள் பொதுவாக வேறு விஷயங்களை அடைவதற்காக ஈஷ்வரனை நாடுவர். ஆனால் ஈஷ்வரனையே அடைய விரும்புபவன் ஈஷ்வராஷ்ரய; ஜீவத்துவத்திலிருந்து விடுபட நினைப்பவன். இதுவே மோக்ஷம் எனப்படும்

ஆகவே பலனாக ஈஷ்வரனை அடைய ஈஷ்வரனே சாதனமும் ஆகிறார். இவ்விதம் எவனொருவன் ஈஷ்வரனையே ஆஷ்ரயமாக கொண்டுள்ளானோ அவன்மய்யாஸக்தமநஎன்கிறார் சங்கரர். அவனுடைய மனம் என்னிடமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அவனுக்கு விஷயமும் நானே; சாதனமும் நானே; முடிவும் நானே. இவ்விதமாக சந்தேகமில்லாது என்னை முழுமையாக அறிவது எங்ஙனமென்று சொல்கிறேன் கேள், யதா2 ஜ்ஞாஸ்யஸி தத் ச்1ருணு, என பகவான் கூறி இந்த இரண்டாவது ஷட்கத்தை தொடங்கி வைக்கிறார்.


=> ஈஷ்வர தத்துவம்:

ஈஷ்வரன்(சகுண ப்ரம்ம) = ப்ரம்ம + மாயை.

மாயையுடன் கூடிய ப்ரம்ம என்பது சகுண ப்ரம்மம் ஆகும். மாயையற்ற ப்ரம்ம என்பது நிர்குண ப்ரம்மம் ஆகும். இந்த சுலோகத்தில் வரும், ‘ஸமக்3ரம்எனும் சொல் பூரண அறிவை, அதாவது நிர்குண மற்றும் சகுண ப்ரம்ம ஆகிய இரண்டு அறிவையும் குறிக்கிறது. ஈஷ்வரன் மீது வைக்கும் அன்பே பக்தி எனப்படும். ஆகவே கிருஷ்ணர், உன் அன்பிற்கு நான் விஷயமாகும் போதுதான் உன் அறிவிற்கும் நான் விஷயமாக ஆவேன் என்கிறார். அதாவது பக்தியிலிருந்தே ஞானம் என்பதைக் கூற விழைகிறார். இங்குயோகம்என்பது ஞானயோகம்; அதாவது ஈஷ்வரனைப் பற்றிய அறிவை அடைய சாதனையை மேற்கொள்ளுதலை, பகவானின் தத்துவத்தை கேட்டலைக் குறிக்கிறது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||7.2|| ஈஷ்வர ஞானத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது:

ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषत:  

यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ।। ।।

ஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமித3ம் வக்ஷ்யாம்யசே1ஷத:  

யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ4யோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவசி1ஷ்யதே ।। 2 ।।


अहं  அஹம்  நான்   ते  தே  உனக்கு   सविज्ञानम्  ஸவிஜ்ஞாநம்  விக்ஞானத்துடன் கூடிய   

इदं ज्ञानं  இத3ம் ஜ்ஞாநம்  இந்த ஞானத்தை    अशेषत:  அசே1ஷத:  மிச்சமில்லாமல்   

वक्ष्यामि  வக்ஷ்யாமி  சொல்லுகிறேன்   यत्  யத்  எதை(இதை)   ज्ञात्वा  ஞாத்வா  அறிந்தால்   

इह  இஹ  இங்கு   अन्यत् भूय:  அந்யத் பூ4:  வேறு ஒன்று மேலும்   ज्ञातव्यम्  ஞாதவ்யம்  அறியப்பட வேண்டியது   अवशिष्यते   அவசி1ஷ்யதே  பாக்கியில்லை.


விக்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தபின் மேலும் நீ அறிய வேண்டியதென எதுவும் பாக்கியில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.


விளக்கம்:

ஈஷ்வர ஞானத்தின் சொரூபம் எப்படிப்பட்டது என்பதை இங்கு விளக்குகிறார். அனைத்திற்கும் காரணமாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற ஈஷ்வரனான என்னை, விஷயமாகக் கொண்ட இந்த விஷேஷ ஞானத்தை, மிச்சமில்லாமல் உனக்குச் சொல்கிறேன் என்கிறார் கிருஷ்ணர்


=> ஞானம் - விக்ஞானம்:

ஞானம் என்பது செவி வழியாக கேட்டறிவது, சிந்தனைக்குரிய அறிவு; இது பரோக்ஷ ஞானம் எனப்படும். விக்ஞானம் என்பது நேரடியான, அனுஷ்டானத்துக்கு உரிய அறிவு; இது அபரோக்ஷ ஞானம் எனப்படும். அதாவது ரிஷிகேஷைப் பற்றி கேள்விப்படும் அறிவு பரோக்ஷம், அதை நேரில் சென்று பார்ப்பது அபரோக்ஷம். ஞானம் எனும் சொல்லில்விஎனும் முன்னொட்டு அதை விக்ஞானம் ஆக்குகிறது. ‘விஎன்பது விஷேஷமானது, தெளிவானது மற்றும் பிரத்யேகமானது என்பதைக் குறிக்கிறது; அதாவது விஷேஷமானத் தெளிவான ஞானம்.

இங்கு ஈஷ்வரனைப் பற்றி நான் கூறப்போகும் அறிவானது பரோக்ஷமாக, செவி வழியாக மட்டும் கேட்கப்படும் அறிவாக இல்லாமல் அபரோக்ஷமாகவும் அனுபவத்திற்குரியதாகவும் இருக்கும் என்கிறார் பகவான். இதை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள, ஞானம் - விக்ஞானம் என்பதன் பொருளை பின்வரும் நோக்கிலும் அறியலாம்:

(1) ஞானம் - சகுண ப்ரம்ம ஞானம்; விக்ஞானம் - நிர்குண ப்ரம்ம ஞானம்.

(2) ஞானம் - ‘ப்ரம்ம அஸ்திஎனும் ஞானம்; விக்ஞானம் - ‘ப்ரம்ம அஸ்மிஎனும் ஞானம்.

(3) ஞானம்ஈஷ்வரனைப் பற்றி சாஸ்திரத்தில் கூறப்படும் ஞானம்; விக்ஞானம் - சுவானுபவ ஞானம்.

சங்கரர் தனது பாஷ்யத்தில் இந்த மூன்றாவது பொருளை இதன் விளக்கமாக அளிக்கிறார் - சாஸ்திரார்த்த ஞானம். மனத் தூய்மையில்லாமல் சாஸ்திரத்தை கேட்கும்போது உண்டாகும் அறிவு என்பது வெறும் வார்த்தைகளுக்கான அர்த்தமாக மட்டும் இருக்கும். இதை ஞானம் என்கிறார். சாஸ்திர அறிவிற்கும் ஒருவனுடைய அனுபவத்திற்கும் முரண்பாடில்லாத, விரோதமில்லாத நிலையை விக்ஞானம் என்கிறார் - அநுபவ விரோத ஞானம்.


=> இரு வகையான பொருள் விளக்கம்:

கிருஷ்ணர், ‘இந்த ஞானத்தை விக்ஞானத்துடன் தருகிறேன்என்கிறார். என்னைப் பொறுத்தவரை எது உண்மையோ அதையே நான் உனக்கு கற்பிக்கிறேன். இது நான் கேட்ட அறிவு மட்டுமல்ல; இதைத்தான் நான் பார்க்கிறேன், நான் பார்ப்பதை உனக்கு கற்பிக்கிறேன். எனவே இந்த வார்த்தைகள் உனக்குள்ளும் அதே அறிவை, அதே பார்வையை உருவாக்கும் திறன் கொண்டவை. எப்பொழுது நீ அதை பார்க்கிறாயோ அப்பொழுது உனக்கு விக்ஞானம் ஏற்பட்டு விடுவதால், எந்த சந்தேகமும் தெளிவின்மையும் உன்னிடம் இருக்கப் போவதில்லை. இது ஒருவகையான விளக்கம்.

மற்றொரு பொருள், ‘ மறைமுகமாக அல்லாமல் நேரடியான அறிவாக நான் இந்த ஞானத்தை உனக்கு கற்பிப்பேன்’. பொதுவாக ஈஷ்வரனை நமக்குத் தெரியாத ஒருவராக, எங்கோ அமர்ந்து நமக்கு அருள் பாளிக்கும் அரியாத ஒரு நபராக என மறைமுகமாகவே, பரோக்ஷமாகவே புரிந்து கொள்கிறோம். இங்கே அது நேர்மாறானது. ஈஷ்வரனைப் பற்றிய அபரோக்ஷ ஞானமே, நேரடியான அறிவே மோக்ஷம் ஆகும். இதைத் தவிர வேறெந்த விதமான புரிதலிலும் உங்களை தவிர்த்து நீங்களல்லாத ஒரு ஈஷ்வரனை உருவாக்கிவிடுகிறீர்கள். நீங்கள் அல்லாத ஈஷ்வரன், உங்களிலிருந்து வேறானவராக அனாத்மாவாக ஆகிறார். இதனால் இருதயத்தில் ஜீவன் என்ற ஒருவனும், பரந்த வெளியில் எங்கோ ஈஷ்வரன் என்ற ஒருவனும் இருக்கின்றனர். இதுவே இருமை

நான்தவிர மற்ற அனைத்தும் அனாத்மா; ஆத்மா மட்டுமே உணர்வுடன் இருப்பதால், அனாத்மா ஜடமானது. உணர்வுள்ள உயிரினமான எனக்கு அது தன்னை வெளிப்படுத்த முடியாது. இதனால் எனக்கு வேறான ஒரு ஈஷ்வரன் என்பவன் என்னால் அறியப்படும் ஒரு பொருளாக, ஜடமானவனாக ஆகிறான். ஆனால் பொதுவாக ஈஷ்வரனை நாம்ஸர்வஞ:_அனைத்தும் அறிந்தவன்என்று சொல்கிறோம். இதனால் எல்லாம் உதட்டளவில் மட்டுமே நடைபெறுவதாகிறது. ஆகவே கிருஷ்ணர், ‘இந்த நேரடி அறிவை நான் எதையும் விட்டுவிடாமல் முழுமையாக கற்பிப்பேன்என்கிறார்.

அசே1ஷத:என்பது மீதமில்லாமல் அனைத்தையும், அதாவது ஞானம், ஞானத்திற்கான சாதனம், ஞானத்தினால் கிடைக்கும் பலன் என அனைத்தையும் விளக்கப்போவதாக பகவான் கூறுகிறார்


=> ஈஷ்வர ஞானத்தின் மஹிமை:

இந்தவொரு ஞானம் அறியப்பட்டால் மேலும் வேறு எதுவும் அறியப்பட வேண்டியது இல்லை எனக் கூறி ஈஷ்வர ஞானத்தின் சொரூபத்தை கோடிட்டுக் காட்டுகிறார். காரண ஞாநேந ஸர்வஞாநம்காரணத்தை பற்றிய அறிவு உண்டாகும்போது அதிலிருந்து தோன்றிய அனைத்து காரியத்தைப் பற்றியும் அறிந்ததாகிறது. ‘என்னை அறியும்போது நீ அனைத்தையும் அறிந்தவனாகிறாய்; ஏனெனில் நானே அனைத்துமாக இருக்கிறேன்’, என்கிறார்

நான் சில விஷயங்களை மட்டுமே தெரிந்துகொள்ளும் திறன் கொண்டவன். என்னால் எப்படி அனைத்தையும் அறிய இயலும்? என ஒருவன் கேட்கலாம். கிருஷ்ணர் இங்கு கூற விரும்புவது என்னவெனில், இந்த ஞானத்தை காட்டிலும் வேறொரு அறியப்பட வேண்டிய வஸ்து(ஞாதவ்ய வஸ்து) என எதுவுமில்லை. இந்த முழு உலகிலும் ஒன்றுதான் ஸத்யம். அந்த மெய்ப்பொருளை ஒருவன் அறியும்போது, மற்றவை அனைத்தும் மித்யா என்பது இயல்பாகவே தெரிகிறது. ஈஷ்வர ஞானம் இப்படிப்பட்டதாகையால், இது ஒருவனுடைய புத்தியை நிறையச் செய்கிறது. சுவானுபவத்தில் ப்ரம்ம சாக்ஷாத்காரம் அடைந்தவனுக்கு, அதாவது அபரோக்ஷ அனுபூதியைப் பெற்றவனுக்கு வாழ்க்கையின் தத்துவம் முழுதும் விளங்கிவிடுகிறது. அவன் மேலும் கற்றுக் கொள்ளவேண்டியது ஒன்றுமில்லை.

சங்கரர் தனது பாஷ்யத்தில், இதை அறிந்தபின் ஒருவன் சாதிக்கும் பொருட்டு தெரிந்துகொள்ளப்பட வேண்டியது என வேறெதுவுமில்லை; ஒரு மனிதனால் அடையப்பட வேண்டிய முடிவு அடையப்பட்டுவிட்டது; எதுவும் மிச்சமில்லை, என்கிறார். மேலும் அவர், உண்மையை அறிந்தவன் எல்லாம் அறிந்தவனாகிறான். இந்தக் கூற்றை வேறெந்த அறிவும் சொல்ல முடியாது. அறிவின் மற்ற எல்லா வடிவங்களும் மித்யாவாக மட்டுமே உள்ளன. ஒன்று மட்டுமே ஸத்யம். எனவே, ஒருவன் தெரிந்துகொள்ள வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான். இதுவே இந்த ஞானத்தின் ரகசியம், என்கிறார்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------