திங்கள், 23 ஜனவரி, 2023

ஞானவிக்ஞான யோகம் 7.3 - 7.4

||7.3|| ஞானத்தை அடைபவர்கள் மிக அரிது:

मनुष्याणां सहस्रेषु कश्चिद्यतति सिद्धये

यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वत: ।। ।। 

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்1சித்3யததி ஸித்34யே

யததாமபி ஸித்3தா4நாம் கச்1சிந்மாம் வேத்தி தத்த்வத: ।। 3 ।।


सहस्रेषु  ஸஹஸ்ரேஷு ஆயிரக்கணக்கான   मनुष्याणां  மநுஷ்யாணாம்  மனிதர்களுள்   

कश्चित्  கச்1சித்  யாரோ ஒருவன்   सिद्धये  ஸித்34யே   மோக்ஷத்திற்காக   यतति  யததி  முயலுகிறான்   यतताम् सिद्धानां अपि   யததாம் ஸித்3தா4நாம் அபி  முயலுகின்ற நல்லியல்பு உடையோர்களுக்குள்ளும்   कश्चित्  கச்1சித்  யாரோ ஒருவன்   मां तत्त्वत: वेत्ति  மாம் தத்த்வத: வேத்தி  என்னை உள்ளபடி அறிகிறான்.


ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மோக்ஷத்திற்காக முயலுகிறான். முயற்சி செய்பவர்களான நல்லியல்பு உடையோர்களுக்குள்ளும் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.


விளக்கம்:

இந்த சுலோகத்தில் பகவான் ஈஷ்வர ஞானத்தின் மஹிமையை, ஞானத்தைப் பெறுதல் என்பது மிக அரிது எனக் கூறி எடுத்துரைக்கிறார். இதன்மூலம், இதை சாதாரணமாக அணுகுதல் கூடாது; கவனக்குறைவு கூடாது; அதிக முயற்சி தேவை போன்றவற்றையும் மறைமுகமாகப் புகட்டுகிறார்.

=> அதிகாரி அரிது:

இந்த ஞானம் என்பது பெறுவதற்கு அரிதானது. இதை கிருஷ்ணர் இங்கு, ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மோக்ஷத்திற்காக முயலுகிறான்ஸஹஸ்ரேஷு மநுஷ்யாணாம்  கச்1சித்  யததி ஸித்34யே, என்கிறார். எந்தவொரு அறிவுக்கும் தேவைப்படுகின்ற தகுதியை உடையவன்அதிகாரிஎன அழைக்கப்படுகிறான். இந்த ஞானத்திற்கும் அதிகாரித்துவம் என்பது மிக முக்கியப் பங்கை வகிக்கின்றது. முதலில் இதற்கான பொதுத்தகுதி மனிதனாக இருப்பது, மநுஷ்யாணாம். ஆயிரக்கணக்கான மனிதர்களுள் மிக அரிதாக, ஒருவனே மன நிறைவிற்கான இந்த ஞானத்தை நோக்கிச் செல்லும் தகுதியை அடைகிறான்; தன்னறிவுத் தேடலுக்கான அதிகாரிகள் வெகு சிலரே. ‘ஸித்3தி4எனும் சொல்லிற்கு பேறு அடைதல், வெற்றி, பேரின்பம், முக்தி, மனதின் அஷ்ட சித்தி(எட்டுவித வலிவுகள்), நிலை நாட்டுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இந்த இடத்தில் அது மோக்ஷத்தைக் குறிக்கிறது


=> முயற்சி செய்பவர்கள் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்: 

(i) மோக்ஷத்தின் பெருமையை அறிவதில்லை

(ii) அறியாமை

(iii) ராகத்வேஷம்

(iv) இன்பத்திற்கும் பாதுகாப்பிற்குமே முக்கியத்துவம் கொடுப்பதால், தர்மார்த்தகாம மோக்ஷத்தில், அர்த்த மற்றும் காமமே லக்ஷியமாகிப் போவது.

எனவே, ஞானத்தை பெற முயலுபவனும், அதை அடைபவனும் அரிது. மரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான விதைகள் உண்டான போதும் அவைகளில் நல்ல விருக்ஷமாவது ஒன்றிரண்டே. மற்றவைகள் வேறு உயிர்களுக்கு உணவுப் பொருளாகவோ, அல்லது விதைக்கப்பட்ட சில விதைகள் சூழ்நிலைகளால் முளைக்காமலோ போய்விடுகின்றன. பெறுதற்கரிய மானுடப் பிறவி ஈஷ்வரனை அறிவதற்கென்று அமைந்தது ஆயினும், அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று அறிந்துகொள்பவரோ மிகச் சிலர். பின்பு அனுகூலமான சூழ்நிலை, முறையான முயற்சி ஆகியவைகள் வாயிலாகக் கடைத்தேறுவாரைக் காண்பது அரிதிலும் அரிது. லட்சியம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதோ அதை அடைதல் அவ்வளவுக்கவ்வளவு அரிது(துர்லபம்).


=> சித்தர்களும் அரிது:

அவ்விதம் முயலுபவர்களுக்குள்ளும் யாரோ ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான், யததாம் ஸித்3தா4நாம் அபி கச்1சித் மாம் தத்த்வத: வேத்தி, என்கிறார். பொதுவாக வெற்றிப் பெற்றவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கு பகவான் சித்தர்களுள் ஒருவனே என்னை முழுமையாக அறிகிறான் என்கிறார். எனில் வெற்றியை அடையாதவனை ஏன் பகவான் சித்தர் என அழைக்கிறார்? அதை சித்தியை அடைய முயலுபவன் என்ற அர்த்தத்தில்யததாம்என்ற சொல்லிற்கு அடைமொழியாகஸித்3தா4நாம்என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகவே சித்தன் என்பது இங்கு முமுக்ஷுவை, சாதகனைக் குறிக்கிறது. மேலும் மோக்ஷத்தை நோக்கி அடியெடுத்து வைத்தவன் கண்டிப்பாக அதிலிருந்து வீழ மாட்டான்; கீழான நிலையை அடைய மாட்டான் என பகவான் ஏற்கனவே 6.40 - ல் கூறியிருந்தார். எனவேதான் சங்கரர் முக்திக்காக முயலுபவர்களை சித்தர்கள் என்றே கருதுகிறார் ஏனெனில் அவர்கள் இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் பிற்காலத்தில் சித்தர்கள் ஆகப் போகிறார்கள். நாமும் கூட வாழ்க்கையில் பல இடங்களில் சொற்களை இவ்வாறே பயன்படுத்துகிறோம். உதாரணமாக, மூன்றாமாண்டில் படித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாணவனை நாம் மருத்துவர் என்றே அழைக்கிறோம்; பின்னர் அவர் மருத்துவராகப் போகிறார் என்பதால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அர்ஜுனனை பயமுறுத்துவதற்காக அல்லாமல் அவனை உற்சாகப்படுத்தும் பொருட்டு கிருஷ்ணர் இவ்விதமாக கூறுவதாக சங்கரர் கூறுகிறார். இனி கூறப்போகும் கருத்துக்கள் மிக முக்கியமானது என்பதால் அர்ஜுனனிடம் ஆர்வத்தை உண்டாக்கி அவனது கவனத்தை ஈர்க்கும் விதமாக பகவான் இவ்விதம் கூறுவதாக பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார்.  

மூன்று அறிமுக சுலோகங்களின் மூலமாக தலைப்பை அறிமுகப்படுத்திய பிறகு, இனிவரும் சுலோகங்களிலிருந்து ஈஷ்வரனைப் பற்றிய விளக்கத்தை தொடங்குகிறார் பகவான்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||7.4|| ஈஷ்வர சொரூபம்:

भूमिरापोऽनलो वायु: खं मनो बुद्धिरेव

अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा ।। ।।

பூ4மிராபோऽநலோ வாயு: 2ம் மநோ பு3த்3தி4ரேவ  

அஹங்கார இதீயம் மே பி4ந்நா ப்ரக்ருதிரஷ்டதா4 ।। 4 ।।


भूमि:  பூ4மி:  மண்   :  ஆப:  நீர்   अनल:  அநல:  நெருப்பு   वायु:  வாயு:  காற்று   खं  2ம்  ஆகாசம்   

मन:  மந:  மனம்   बुद्धि:  பு3த்3தி4புத்தி  अहङ्कार: एव   அஹங்கார: ஏவ   அஹங்காரமும்   

इति  இதி  இப்படி    इयं मे प्रकृति  இயம் மே ப்ரக்ருதி  இந்த என்னுடைய பிரக்ருதி  

अष्टधा   அஷ்டதா4  எட்டுவிதமாக   भिन्ना  பி4ந்நா  பின்னப்பட்டுள்ளது.


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டுவிதமாக என் பிரக்ருதி பிரிவுபட்டிருக்கிறது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.


விளக்கம்:

=> ஈஷ்வர சொரூபம்:

ஈஷ்வரன் = ப்ரம்மம் + மாயை.

ப்ரம்மமும் மாயையும் சேர்ந்தது ஈஷ்வர சொரூபம்; சகுண ப்ரம்மம். அதன் குணங்களை பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்:

ப்ரம்மம்

மாயை

அநாதி(என்றுமே இருப்பது)

அநாதி(தோற்றத்தை கூற முடியாது)

சேதனம்(அறிவு சொரூபம்)

அசேதனம்(ஜடம்)

நிர்விகாரம்(மாறாதது)

ஸவிகாரம்(மாறிக் கொண்டேயிருப்பது)

நிர்குணம்

ஸகுணம் (மூக்குணமுடையது

ஸ்வதந்திர ஸத்தா 

(எதையும் சாராதது)

ப்ரம்ம ஆஷ்ரயம்.                      

(ப்ரம்மத்தை சார்ந்துள்ளது)

ஸத்யம் 

மித்யா

மாயையுடன் கூடிய ப்ரம்மமாகவுள்ள இப்படிப்பட்ட ஈஷ்வரனிடமிருந்து அனைத்தும் தோன்றியுள்ளது. ஈஷ்வரன் - காரணம்; உலகம் - காரியம்(படைக்கப்பட்டது). எப்பொழுதும் ஒரு படைப்பு என்பது மூன்று நிலையை உடையது. (1) காரண அவஸ்தை (2) சூக்ஷம அவஸ்தை (3) ஸ்தூல அவஸ்தை.


=> காரணமாகவுள்ள ஈஷ்வரன் ஸ்தூல உலகை எப்படிப் படைத்தார்?

இந்த ஸ்தூல உலகம் என்பது ஒன்றன் பின் ஒன்றாக, கிரமமாக தோன்றியதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்தஜகத் கிரமம்’, கபிலர் தோற்றுவித்த சாங்க்ய மதத்தில் மிக விரிவாக கருத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கிரமத்தை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்களின் துவைத தத்துவத்தை நாம் ஏற்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சுலோகத்தில் பகவான் சாங்கியர்களின் இந்த கிரமத்தை கையாள்கிறார்

இரண்டு பிரக்ருதிகள் உள்ளன. பிரக்ருதி என்ற சொல்லுக்கு சிருஷ்டிக்கும் திறன் கொண்டது என்று பொருள்; இதுகாரணஎன்றும் அழைக்கப்படுகின்றது. முதலில் பகவான் சிருஷ்டியை இரண்டாகப் பிரிக்கிறார்

(1) பரா பிரக்ருதி(ப்ரம்ம தத்துவம்) அல்லது ஸ்வரூப பிரக்ருதி

(2) அபரா பிரக்ருதி (மாயா தத்துவம்) அல்லது ஸ்வபாவ பிரக்ருதி


=> சாங்க்ய மதத்தில் கூறப்படுவது:

கபிலரின் சாங்க்ய மதத்தில் மொத்தம் 25 தத்துவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஒன்று, ‘புருடன்_புருஷ:எனும் ஆத்ம தத்துவம். இம்மதத்தை பொருத்தவரையில், ஆத்மா என்பது கர்த்தா அல்ல, ஆனால் போக்தா. மேலும் ஒவ்வொருவருள்ளும் ஒரு ஆத்மா உள்ளது என்றும் கூறப்படுகிறது. இவ்விதமான புருஷ தத்துவத்தை நாம் ஏற்பதில்லை. மற்ற 24 தத்துவங்கள் சிருஷ்டியை சார்ந்ததாக உள்ளது. அவையாவன

(1) மூலப்பிரக்ருதி - இது அநாதி எனச் சொல்லப்படுகிறது. வேதாந்தத்தில் உள்ளமாயைஎன்பதையே இவர்கள் மூலப்பிரக்ருதி என்றழைக்கின்றனர். ஆனால் இவர்கள் இதைஸத்யம்என்கிறார்கள்.

(2) மஹத்மூலப்பிரக்ருதியில் ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் எனும் முக்குணங்கள் சமமாக உள்ளன. அந்த சமத் தன்மைக்கு நாசம் வரும்போது, மாறுபாடு ஏற்படும்போது அது சிருஷ்டிக்கு தயாராகிறது. இதுவே மஹத் நிலை.

(3) அஹங்கார: - இது ஆகாசம், வாயு, அக்நி, நீர் மற்றும் ப்ருத்வி எனும் ஐந்து பூதங்களின் சூக்ஷம நிலை; வெளித்தோற்றத்திற்கு வராத அவ்யக்த நிலை.

(4) மந: - மேற்கூரிய ஐந்து சூக்ஷம பூதங்களின் ஸத்வ நிலை.

(5-14) பத்து இந்திரியங்கள் - ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் ஐந்து கர்மேந்திரியங்கள். மேற்கூரிய ஐந்து சூக்ஷம பூதங்களின் ராஜஸ நிலையை இந்த பத்து இந்திரியங்கள் குறிக்கின்றன.

(15-19) தன்மாத்திரைகள் - தொடு உணர்ச்சி, சுவை, ரூபம், வாசனை மற்றும் சப்தம் போன்ற ஞானேந்திரியங்களின் செயல்பாடுகள் சார்ந்திருப்பவைகள்.

(20-24) ஐந்து ஸ்தூல பூதங்கள் - ஐந்து சூக்ஷம பூதங்களின் தாமஸ நிலை.


=> எட்டு தத்துவங்களில் அடக்குதல்:

காது கேட்கிறது. ஓசைக்கு ஏதுவாயிருப்பது ஆகாசம். தேகம் ஸ்பர்சிக்கிறது. ஊறுதற்கு ஏதுவாயிருப்பது வாயு. கண் வடிவத்தை பார்க்கிறது. ஒளிக்கு ஏதுவாயிருப்பது நெருப்பு. நா சுவைக்கிறது. சுவைக்கு மூலகாரணம் நீர். மூக்கு மணத்தை நுகர்கிறது. கந்தத்துக்கு காரணம் ப்ருத்வி(மண்). ஆக, இந்த மூலவஸ்துக்களான ஐந்து பூதங்களே உலகாக அறியப்படுகிறது

இவைகள் ஐந்தும் சூக்ஷமம், ஸ்தூலம் என்று இரண்டு நிலைகளில் இருக்கின்றன. ஐந்து பூதங்களும் தனது சூக்ஷம வடிவில்தன்மாத்ரஎன்றழைக்கப்படும். தன்மாத்ர எனில்தத் மாத்ர’, அதுவாக மட்டுமே இருக்கிறது. ஸ்தூல வடிவை அடைய, ஒவ்வொரு பூதமும் மற்ற நான்கு பூதங்களுடன் ஒரு குறிப்பிட்ட முறையில் இணைகிறது. ஆனால் சூக்ஷம வடிவத்தில், அத்தகைய சேர்க்கை நடைபெறவில்லையாகையால் இவைகள் தன்மாத்திரைகள் எனப்படுகின்றன.


இனி, இவைகள் ஸ்தூல பூதங்களாக வடிவெடுப்பதற்கு உள்ள கணக்குக் கிரமத்தைப் பார்ப்போம்.

ஆகாசம் = 1/2 + 1/8 + 1/8 + 1/8 + 1/8

வாயு = 1/2 + 1/8 + 1/8 + 1/8 + 1/8

நெருப்பு = 1/2 + 1/8 + 1/8 + 1/8 + 1/8

நீர் = 1/2 + 1/8 + 1/8 + 1/8 + 1/8

ப்ருத்வி = 1/2 + 1/8 + 1/8 + 1/8 + 1/8

சூக்ஷம பூதம் ஒவ்வொன்றும் இரண்டு சமபாகங்களாகப் பிரிகிறது. ஒரு பாதி தன்னுடைய ஸ்தூல அமைப்புக்கு நின்று விடுகிறது. மற்ற பாதி நான்கு அரைக்கால் ஆகி, மற்ற நான்கு பூதங்களுக்குச் சமனாகப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக,

ஸ்தூல ஆகாசம் (1) = 1/2 சூக்ஷம ஆகாசம் + 1/8 சூக்ஷம வாயு + 1/8 சூக்ஷம நெருப்பு + 1/8 சூக்ஷம நீர் + 1/8 சூக்ஷம ப்ருத்வி.

இங்ஙனம் சூக்ஷம பூதங்கள் ஐந்தும் ஸ்தூல பூதங்களாக மாறுதற்கு பஞ்சீகரணம் என்று பெயர்.

உணரும் தன்மை மனதுக்குண்டு. நல்லது கெட்டது என்று புத்தி பாகுபடுத்துகிறது. தன்னைக் கர்த்தாவென்று கருதுவது அஹங்காரம். அஹங்காரம் இல்லாது கர்மம் ஒன்றும் நடைபெறாது. மண்ணுக்குள் மண்ணோடு மண்ணாக விதையானது புதைந்து கிடப்பது போல வாசனா சொரூபமாக அஹங்காரம் முதலிய அந்தக்கரணங்கள் மூலப்பிரக்ருதியில் புதைந்திருக்கின்றன. தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்க வல்ல இயல்புக்கு வாசனையென்று பெயர். இந்த எட்டுவிதப் பிரக்ருதியே இருபத்தி நான்கு தத்துவங்களாக விரித்துச் சொல்வது சாங்க்ய வழக்கத்தில் உள்ளது.

பகவான் இங்கு சாங்க்ய மதத்தின் மூலப்பிரக்ருதியைஅஹங்கார:எனும் சொல்லின் மூலமும், மஹத் தத்துவத்தைபுத்தி:என்றும், அஹங்கார: என்பதைமந:என்ற சொல்லைப் பயன்படுத்தியும் விளக்குகிறார்.


=> ப்ரக்ரியை:

சிருஷ்டியின் இயல்பை கற்பிக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் இதுபோன்ற வழிமுறைகள் சிருஷ்டி-ப்ரக்ரியா என்றழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பார்வையைச் சரியாக புரிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் விசாரணைப்ரக்ரியாஎனப்படும். சாஸ்திரத்தில் சிருஷ்டி ப்ரக்ரியையைப் போலவே பலவகையான கற்பிக்கும் வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக, மனிதனின் மூன்றுவித அனுபவ உலகங்களின் நிலையை பகுப்பாய்வு செய்யும் அவஸ்தா-த்ரய-ப்ரக்ரியா, தன்னை ஐந்து நிலைகளில் வைத்து பகுப்பாய்வு செய்யும் பஞ்ச-கோஷ-ப்ரக்ரியா, அறிபவன்-அறியப்படும் பொருள் குறித்து விசாரிக்கும் த்ருக்-த்ருஷ்ய-ப்ரக்ரியா, படைப்பை குறித்து விளக்கும் காரண-காரிய ப்ரக்ரியா என நிறைய வழிமுறைகள் உள்ளன. இதில் எந்தவொரு ப்ரக்ரியையை பயன்படுத்துவதன் நோக்கமும் பரப்ரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதைக் குறிப்பிடுவது மட்டுமே. எனவே இங்கு கையாளப்படும் சிருஷ்டி ப்ரக்ரியையும் அதே நோக்கத்தையே அதாவது ப்ரம்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதையே நிறுவுகிறது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------