புதன், 4 ஜனவரி, 2023

தியான யோகம் 6.42 - 6.44

||6.42 || மற்றொரு பாங்குடைய யோகப்ரஷ்டன்:

अथवा योगिनामेव कुले भवति धीमताम्  

एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ।। ४२ ।।

அத2வா யோகி3நாமேவ குலே 4வதி தீ4மதாம்  

ஏதத்3தி4 து3ர்லப4தரம் லோகே ஜந்ம யதீ3த்3ருச1ம் ।। 42 ।।


अथवा  அத2வா அல்லது   धीमताम्   தீ4மதாம்  ஞானிகளுடைய  योगिनाम्  யோகி3நாம்  யோகிகளுடைய   

कुले एव  குலே ஏவ  குலத்திலேயே   भवति  4வதி  பிறக்கிறான்   ईदृशम् जन्म  ஈத்3ருச1ம் ஜந்ம  இதுபோன்ற ஜென்மம்   यत्  யத்  எதுவோ   एतत्  ஏதத்  இது   हि  ஹி  நிச்சயமாக   लोके  லோகே  உலகத்தில்  

दुर्लभतरम्   து3ர்லப4தரம்  பெறுதற்கரியது.


அல்லது ஞானிகளாகிய யோகிகள் குலத்திலேயே [யோகப்ரஷ்டன்] பிறக்கின்றான். இதுபோன்ற பிறவி இவ்வுலகில் மிக அரிதானது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.


விளக்கம்:

பகவான் யோகப்ரஷ்டர்களை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்.

(1) சாதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஏதாவதொரு இடத்தில் தவறியவர்கள் - சென்ற சுலோகத்தில் குறிப்பிடப்பட்டவர்கள்.

(2) அனைத்து சாதனைகளையும் செவ்வனே செய்து, ஆனால் காலமின்மையினால் கடைசிப் படியில் வீழ்ந்தவர்கள் - இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படுவர்கள். இவர்கள் ஞானிகளின் குடும்பத்தில் பிறக்கிறார்கள்.

=> துர்கதி இல்லை:

தன்னறிவில் ஆவல் கொண்ட யோகி, சந்யாசிக்கு, கீழான கதி(துர்கதி) என எதுவுமில்லை, புண்ணிய லோகங்களை அடைந்து திரும்புகிறான் என்று பார்த்தோம். இதன்மூலம் சொல்லப்படுவது யாதெனில், மரணத்திற்குப் பின் செல்லும் உலகங்கள் என ஒன்று இருந்தால் அங்கும் அவன் நல்ல லோகங்களையே அடைவான். மறுமையிலும் கூட அவனுக்கு கேடில்லை. தனது பிரார்த்தனையின் பலனாகிய புண்ணியத்தை அனுபவித்து, அவன் மீண்டும் இந்த பூமிக்கு ஞானத்தைப் பெறத் தகுதியான உடலுடன், அதாவது ஒரு அதிகாரி-சரீரத்துடன் மனிதனாகப் பிறக்கிறான். வேறு கீழான பிறவியில் இல்லாமல், அவனுடைய நாட்டத்திற்கு உகந்ததாக இருக்கின்ற மனிதப் பிறவியை நிச்சயமாக எடுப்பான். எனவே, எங்கும் எந்நிலையிலும் கெட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.

யோகப்ரஷ்டன் தர்மநெறியும் நற்பண்புகளும் கொண்ட செல்வந்தன் வீட்டில் பிறப்பான் என சென்ற சுலோகத்தில் குறிப்பிட்டார்.   


=> யோகியின் குடும்பத்தில் பிறத்தல்:

அல்லது, அவன் ஒரு கர்மயோகியின் குடும்பத்தில் பிறக்க முடியும் என்கிறார் பகவான். சந்யாசிகளுக்கு குடும்பங்கள் இல்லை என்பதால் இந்த சுலோகத்தில் குறிப்பிடப்படும் யோகி என்பது கர்மயோகியைக் குறிக்கிறது. இந்த கர்மயோகிகள் நன்கு அறிந்தவர்கள்(தீ4மதாம்). ஆகவே இங்கு பிறக்கும் யோகப்ரஷ்டனின் தந்தை ஒரு ஞானியாகவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு முமுக்ஷுவாகவோ இருக்கிறார். இப்படிப்பட்ட கர்மயோகிகளைப் பெற்றோராக அனுபவிக்கும் இத்தகைய பிறப்பு அரிதானது, மிகவும் கடினமானது என்கிறார். நன்கறிந்த யோகிகள் எனில் தங்களை யோகிகளென அறிந்தவர்கள், அதாவது தங்களை அறிவைத் தேடும் முமுக்ஷுக்கள் என்றும் மோக்ஷத்தை பெற ஆத்மஞானத்தைப் பெற வேண்டுமென்றும் அறிந்தவர்கள். இத்தகைய ஞானமுள்ள பெற்றோருக்குப் பிறக்கின்ற, இந்த இயல்புடைய பிறப்பைப் பெறுவது, யத் ஈத்3ருச1ம் ஜந்ம, இந்த உலகில் மிகவும் கடினம்ஏதத் ஹி து3ர்லப4தரம் லோகே, என்கிறார்.

பண்பாடுடைய செல்வந்தர் வீட்டில் பிறப்பதைக் காட்டிலும் கர்மயோகியின் குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு மோக்ஷத்திற்கான பாதையைத் தொடர மேலும் சிறந்த வாய்ப்பு இருக்கிறது. அவன் குழந்தை பருவத்திலிருந்தே சில நற்பண்புகளை இயல்பாக அடைகிறான். தனது முயற்சியை தொடர்வதில் எந்தவிதப் பிரச்சினைகளோ அல்லது தடையோ அவனுக்கு இருப்பதில்லை. ஆகவே அவன் தனது கடந்தகால சிக்கல்கள் தொடர்பான சாதனைகளில் ஈடுபடத் தேவையிருக்காது.

தனது பாஷ்யத்தில் சங்கரர், இந்த யோகிகளின் குடும்பத்தை செல்வமில்லாத வீடாக எடுத்துக் கொள்கிறார்தரித்ராநாம் யோகினாம் குலே. செல்வ வளமில்லாதபோதும் இங்கு தந்தை நன்கறிந்த பண்டிதர், யோகி. நற்பண்புகளின் மீது அதிக மதிப்பு கொண்ட இந்த தந்தைக்குநான் ஏழைஎன்ற தாழ்வு மனப்பான்மை இருப்பதில்லை; ஆகவே அது குழந்தைகளையும் வந்தடைவதில்லை. பண்பு நலன்களால் தன்னை ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணரும் யோகிகளாகிய இப் பெற்றோர்களின் வளர்ப்பு கண்டிப்பாகச் சிறந்ததாக இருக்கும். உண்மையில் இங்கு சங்கரர் வறுமையைப் போற்றுகிறார்

புண்ணியமும் பாபமும் சேர்ந்தே மனிதப்பிறப்பைக் கொடுக்கிறது. ஒருவனின் ஏழ்மை அவனுடைய எல்லா பாபங்களையும் தீர்த்து விடுவதால் அவனது புண்ணியங்கள் அனைத்தும் யோகத்திற்குக் கிடைக்கிறது. இந்த வழியில் அவனது ஞானத்திற்கானப் பாதையில் பெரிய தடைகள் என எதுவுமில்லாமல் செல்ல முடியும். ஆகவே சங்கரர் செல்வந்தர்களைப் பெற்றோராகப் பெறுவதைக் காட்டிலும் கர்மயோகிகளின் வீட்டில் உண்டாகும் பிறப்பு ஞானத்திற்குச் சிறந்தது எனக் கூறுகிறார்


=> புறச்சூழ்நிலையின் முக்கியத்துவம்:

ஒருவன் பிறக்கும் குடும்பம் என்பது அந்த நபரின் கர்மபலன்களை, புண்ணிய மற்றும் பாபத்தைப் பொறுத்தது. மேலும் ஒவ்வொருவரின் கர்மபலன்களும் வேறுபடுகின்றன. ஒருவன் எங்கு பிறக்கிறான், அவனுடைய பெற்றோர் யார், பணம் இருக்கின்றதா இல்லையா போன்றவற்றை இந்த புண்ணிய-பாபங்கள் தீர்மானிக்கின்றன. இருப்பினும், எங்கு பிறந்தாலும், அவன் ஏற்கனவே சேகரித்த தனது யோக-சம்ஸ்காரங்களுடன் பிறக்கின்றான். எனில், ஏன் இருவகையான குடும்பங்களைப் பற்றி பகவான் குறிப்பிடுகிறார்?

ஏனெனில் இந்த யோக-சம்ஸ்காரங்கள், அதர்ம-சம்ஸ்காரங்களினால் மூழ்கடிக்கப்பட்டுவிடும் வாய்ப்பு இருப்பதால் ஒருவன் பிறக்கின்ற சூழ்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தை பருவத்தின்போது சேகரிகப்பட்டுவிடும் சில தவறான போக்குகள் ஒருவனின் ஏற்கனவே சேகரித்த யோக-சம்ஸ்காரங்களை முறியடிக்கலாம். முன்பு யோகியாக இருந்த ஒருவனின் தீவிர அறிவுத் தேடல் இயல்பாக வெளிப்படுவதற்கு, ‘மீண்டும் பிறந்தஅவனின் அதர்மம் மற்றும் தவறான மதிப்புகள் கொண்ட வாழ்க்கை தடையாக இருக்கக்கூடாது. விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்வதற்கு சரியான புறச் சூழ்நிலை அமைவது அவசியம்


=> எங்கும் பிறக்கலாம்:

உண்மையில் ஞானப் பாதையில் செல்ல முயற்சிக்கும் ஒவ்வொருவரும் இந்த இரு சூழ்நிலைகளில் ஒன்றில்தான் பிறக்கவேண்டும் என்பதை உணர்த்துவதாக இந்த சுலோகங்கள் சொல்லப்படவில்லை. தன்னறிவை விரும்புபவர்கள், முமுக்ஷுக்கள் எல்லா இடங்களிலும் பிறக்கிறார்கள். நாம் இங்கு குறிப்பாக நினைத்ததைச் சாதிக்காமல் மரணித்தவர்களை, அர்ஜுனனால் வீழ்ந்த மனிதர்கள் எனக் கருதப்படும் சந்யாசிகள் அல்லது யோகிகளின் கதியை விசாரித்து வருகிறோம். எனவே அர்ஜுனனின் கவலைக்கு பதிலளிக்கும் விதமாக கிருஷ்ணர், அறிவைப் பின்தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லாததொரு சூழலில் யோகப்ரஷ்டன் பிறக்கிறான் என்று இங்கு கூறுகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.43 || மனித ஜென்மத்தை அடைந்த யோகப்ரஷ்டனுக்கு என்ன நடக்கிறது?

तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम्।

यतते ततो भूय: संसिद्धिौ कुरुनन्दन ।। ४३ ।। 

தத்ர தம் பு3த்3தி4ஸம்யோக3ம் லப4தே பௌர்வதே3ஹிகம்  

யததே ததோ பூ4: ஸம்ஸித்3தௌ4 குருநந்த3 ।। 43 ।।


कुरुनन्दन  குருநந்த3  குரு வம்சத்தில் பிறந்தவனே   तत्र   தத்ர  அப்பிறப்பில்   

पौर्वदेहिकम्  பௌர்வதே3ஹிகம்  பூர்வதேஹத்தில் உண்டான   तं  தம்  அந்த   

बुद्धि संयोगं  பு3த்3தி4 ஸம்யோக3ம்  பர தத்துவத்தைப் பற்றிய அறிவோடு சேர்க்கையை   

लभते லப4தே  அடைகிறான்       மேலும்   तत:  ததஅதைக் காட்டிலும்   भूयபூ4:  அதிகமாக  

संसिद्धिौ  ஸம்ஸித்3தௌ4  மோக்ஷத்திற்கு  यतते  யததே  முயற்சி செய்கிறான்.


குருநந்தனா, இதில் முற்பிறப்பின் யோகசாதன அறிவைத் திரும்பவும் பெறுகிறான்; மோக்ஷத்தின் பொருட்டு மேலும் அதிகமாக அவன் முயலுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.


விளக்கம்:

மனித ஜென்மத்தை அடைந்த யோகப்ரஷ்டனுக்கு என்ன நடக்கிறது என பகவான் இங்கு விளக்குகிறார். ‘தத்ரஎன்பது முந்தைய இரு சுலோகங்களில் குறிப்பிடப்பட்ட இரண்டு குடும்பங்களில் ஒன்றைக் குறிக்கிறது, பண்பாடுடைய தார்மிகமான செல்வந்தரின் குடும்பம் அல்லது யோகிகளின் குடும்பம். அங்கு தனது முந்தைய சந்யாச வாழ்க்கையில் விட்டதை தொடர்கிறான். அதாவது சென்ற பிறப்பில் ஒரு குறிப்பிட்ட உடலில் யோக வாழ்க்கையைத் தொடங்கி இறப்பதற்கு முன் அவன் பெறாத அறிவை, இந்த வாழ்க்கையில் பின்தொடர்கிறான். இப்போது, தற்போதைய உடலில், யோகப்ரஷ்டனின் புத்தி முன்பு இருந்தவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்கிறதுபு3த்3தி4 ஸம்யோக3ம் லப4தே பௌர்வதே3ஹிகம். முன்பு இருந்தவற்றுடன் தொடர்பு என்பது, முற்பிறவியில் அவன் விட்டுச்சென்ற இடத்திலிருந்து நூலை எடுத்து, வெற்றியைப் பெறும் நோக்கில் இப்பிறவியில் தொடர்ந்து முயலுகிறான்.

முற்பிறப்பில் செய்த சாதனங்கள் சம்ஸ்காரங்களாக இவனது மனதில் புதைந்து மறைந்து கிடக்கின்றன. செல்வந்தன் வீட்டில் பிறப்பவன், போகத்தில் தற்காலிகமாக ஈடுபட்டு ஆசைகள் நிறைவேறியபின் அவனுக்கு யோகத்தைப் பற்றிய ஞாபகம் வந்து மோக்ஷத்திற்கான சாதனைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறான். யோகிகள் குலத்தில் பிறந்தவன், அவர்கள் செய்யும் சாதனைகளைப் பார்க்கும்போது பால யோகிக்குத் தன் பூர்வ ஜென்ம சாதனங்கள், பழைய பாடம் ஞாபகத்துக்கு வருவது போன்று மனதில் உதிக்கிறது. இடம், பொருள், ஏவல் இவைகளின் சகாயத்தால் முற்பிறப்பில் செய்ததைவிட இன்னும் தீவிரமாக அவன் இப்பிறப்பில் மோக்ஷத்திற்கான சாதனைகளைச் செய்கிறான்தத: பூ4: ஸம்ஸித்3தௌ4 யததே.

அர்ஜுனன் இங்கு, குருநந்தனா என்றழைக்கப்படுகிறான், குரு என்பது அர்ஜுனன் பிறந்த குடும்பத்தின் பெயர், குரு வம்சம். குருநந்தனா எனில் குரு குடும்பத்தின் மகிழ்ச்சி எனப் பொருள். இந்தப் பிறவியின் நன்மைகளை அர்ஜுனனுக்கு நினைவூட்ட கிருஷ்ணர் இந்தப் பெயரை இங்கே பயன்படுத்தியிருக்கலாம்.


=> ஶ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின்ஶ்ரீமத் பகவத் கீதைநூலிலிருந்து:

சுவாமி விவேகானந்தரும் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹசரும் யோகாரூடர்கள். பிறவியிலிருந்தே பரிபூரணத்தன்மை அவர்களிடம் பொலிந்து கொண்டிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையே வேதாந்தத்துக்கு விளக்கமாகும். சுவாமி விவேகானந்தர் செல்வம் மிகுந்த நல்லார்க்குப் பிள்ளையாகப் பிறந்து பூவுலக சம்பத்துகளில் வாழ்ந்திருந்து யோகத்துக்கு வருகிறார். ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹசரோ யோகியர் குலத்தில் பிறந்து மேலும் யோக சாதனத்தில் ஈடுபடுகிறார். கீதா சாஸ்திரப் பிரகாரம் இருவர் பிறப்புகளும் மேலானவை. ஆனால் சுவாமி விவேகானந்தர் பிறப்பைவிட ஶ்ரீ ராமகிருஷ்ணர் பிறப்பு பெறுதற்கு அரிதாம்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.44 || யோகப்ரஷ்டன் எவ்விதம் சாதனையில் ஈடுபட அழைக்கப்படுகிறான்:

पूर्वाभ्यासेन तेनैव  ह्रियते ह्यवशोऽपि :

जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ।। ४४ ।।

பூர்வாப்4யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவசோ1ऽபி :  

ஜிஜ்ஞாஸுரபி யோக3ஸ்ய 1ப்33ப்3ரஹ்மாதிவர்ததே ।। 44 ।।


:  :  அவன்   तेन  தேந  அந்த   

पूर्व अभ्यासेन एव  பூர்வ அப்4யாஸேந ஏவ  பூர்வ ஜென்ம அப்பியாசத்தினாலேயே  

अवश: अपि  அவச1: அபி  தன்வசமின்றி   ह्रियते हि   ஹ்ரியதே ஹி  யோக சாதனத்தில் இழுக்கப்படுகிறான்   योगस्य  யோக3ஸ்ய  யோகத்தின்   जिज्ञासु: अपि  ஜிஜ்ஞாஸு: அபி  ஆர்வமுடையவன்/ஆராய்ச்சியாளன் கூட   शब्द ब्रह्म   1ப்33 ப்3ரஹ்ம  வேதத்தை(வேதம் சொல்லும் கர்மபலனை)  

अतिवर्तते  அதிவர்ததே  கடந்தவனாகிறான்.


பூர்வ ஜென்ம அப்பியாசத்தின் வேகத்தால் தன் வசமில்லாமலேயே அவன் யோக சாதனத்தில் இழுக்கப்படுகிறான். வெறும் ஆர்வத்தினால் வந்தவனும்கூட வேதத்தின் கர்ம காண்டத்தை கடப்பவன் ஆகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.


விளக்கம்:

இங்கே கிருஷ்ணர், யோகப்ரஷ்டன் எவ்விதம் சாதனையில் ஈடுபட அழைக்கப்படுகிறான் என்பது குறித்த சந்தேகத்தை நீக்க விரும்புகிறார். ஒருகால் அவன் இப்பிறப்பில் புதிதாய் உண்டான பழக்கங்களில், வாசனைகளில் சிக்கி தொலைந்து விட்டால், யோக-சம்ஸ்காரங்களைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு என்பது அவனுக்கு எந்தவளவு சாத்தியமாகிறது?

இந்த அனுமான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார் கிருஷ்ணர். ஒருவனுக்கு இந்த யோகத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைத் தவிர்க்க நினைத்தாலும், சம்ஸ்காரங்கள் இருப்பதால் அது அவனுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கும். தன் வசமின்றி இழுக்கப்பட்டவனாக அவன் யோக சாதனையை அடைகிறான்அவச1: அபி ஹ்ரியதே. புதிதாகச் செய்த அதர்மம் சிறிதுகாலத்துக்கு அவனது யோக சாதனையைத் தடைப்படுத்தினும், அதர்மத்தின் வலிவு குறைந்தவுடன் யோக சம்ஸ்காரம் மேலெழுகிறது. ஆகவே முமுக்ஷுவாக ஆவதற்கு அவன் இப்பிறப்பில் எதுவும் செய்ய வேண்டியதில்லை; அவனை அழைத்துச் செல்ல பழைய நாட்டமே போதுமானது. அதாவது வலுவான பதிவுகளாக மனதில் புதைந்திருந்த, முற்பிறப்பில் அவன் செய்த யோகாப்பியாசம் யோகப்ரஷ்டனை பரிபூரண நிலையின்கண் இழுத்துச் செல்கிறது.  

அவச1எனும் சொல், அந்த விஷயத்தில் அவனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆர்வம் இல்லாவிட்டாலும், தன்வசமின்றி அவன் யோகத்தால் உள்வாங்கப்படுகிறான், எடுத்துச் செல்லப்படுகிறான், முந்தையப் பயிற்சியால் அதற்குள் இழுக்கப்படுகிறான் என்பதைக் குறிக்கிறது. ஆனால், உண்மையில் அவனுக்கு யோக விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது; அது எதைப் பற்றியது என்பதை அறிய விரும்புகிறான். ஒருகால் யோகத்தில் அவனுக்கு பெரிய அபிப்ராயம் இல்லாவிட்டாலும், சிறிய ஆர்வமாக உருவெடுத்து அது அவனது தலையில் உறுத்திக்கொண்டே இருக்கும்; இதனால் அவன் தன்னறிவு மற்றும் மோக்ஷம் குறித்து மேலும் என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புவான்.

ஒரு எளிய ஆர்வமுள்ள ஆசைகூட போதும், அவன் வேதத்தை தாண்டி வருகிறான். அதாவது வேதத்தின் கர்ம காண்டத்தை கடந்தவனாகிறான்1ப்33 ப்3ரஹ்ம அதிவர்ததே. வேதத்தின் பூர்வ பாகத்தில் விவாதிக்கப்படும் கர்மங்களிலும் அதனால் அடையப்படும் பலன்களிலும் ஆர்வமில்லாது, இயல்பாக வைராக்கியத்தை அடைந்து கர்மபலனில் பற்றற்றவனாக வேதாந்தத்தை பின் தொடர்கிறான்


=> தன்னறிவை அடையும் வரை பின்வாங்குதல் இல்லை:

கிருஷ்ணர் இங்கே கூற விரும்புவது என்னவென்றால், சுயத்தை பற்றிய விசாரத்தை ஆரம்பித்த ஒருவனுக்கு பின்வாங்குதல் என்பது இல்லை; எந்த வகையான மோசமான முடிவும் இல்லை. தனது இலக்கான தன்னறிவை அடையும் வரை அவனது நாட்டம் ஒருபோதும் நிறுத்தப்படாது, எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்ற உறுதியை அளிக்கிறார். கிருஷ்ணரின் வார்த்தைகளே இங்கு ப்ரமாணம் ஆகிறது. இந்த கருத்துக்கு ஆதரவான சில தர்க்கங்களும் உள்ளன. இருப்பினும்கூட பகவானின் வார்த்தைகள் மட்டுமே இங்கு ப்ரமாணம்; அவைகளை சரியென்றோ அல்லது தவறென்றோ நிரூபிக்கும் வழியேதுமில்லை என்றே கூறலாம்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------