செவ்வாய், 10 ஜனவரி, 2023

தியான யோகம் 6.45 - 6.47

||6.45 || யோகப்ரஷ்டன் எங்ஙனம் மோக்ஷத்தை அடைகிறான்:

प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिष:

अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ।। ४५ ।।

ப்ரயத்நாத்3யதமாநஸ்து யோகீ3 ஸம்சு1த்34கில்பி3:  

அநேகஜந்மஸம்ஸித்34ஸ்ததோ யாதி பராம் 3திம் ।। 45 ।।


तु  து  ஆனால்   प्रयत्नात् ப்ரயத்நாத்  பிரயத்தனத்தோடு   यतमान:  யதமாந: முயற்சி செய்கிற   

योगी  யோகீ3  யோகியானவன்   संशुद्ध किल्बिष:  ஸம்சு1த்34 கில்பி3:  பாபத்தை நீக்கியவனாய்  

अनेक जन्म संसिद्ध:  அநேக ஜந்ம ஸம்ஸித்34:  அநேக ஜென்மங்களில் பரிபக்குவத்தை அடைந்தவனாய்  

तत:  தத:  அதன் பிறகு  परां  பராம்  மேலான   गतिम्  3திம்  நிலையை   याति  யாதி  அடைகிறான்.


பெரும் முயற்சியையுடைய யோகி, பாபத்தை நீக்கியவனாய், பல பிறவிகளில் பக்குவமடைந்து இறுதியில் மேலான கதியை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.


விளக்கம்:

கர்ம காண்டத்தில் உழல்பவனைவிட யோக சாதனம் செய்பவனது வாழ்க்கை எவ்விதத்தில் சிறந்தது என்பதற்கான விடையாகவும், யோகப்ரஷ்டன் எங்ஙனம் படிப்படியாகப் பக்குவத்தை பெற்று இறுதியில் மேலான லக்ஷியமான மோக்ஷத்தை அடைகிறான் என்பதையும் இந்த சுலோகத்தில் பகவான் பகர்கிறார்.

அந்த யோகியை பகவான், ‘யதமாந:’, முயற்சி செய்பவன் என்று குறிப்பிடுகிறார்; கவனக்குறைவில்லாமல் நல்ல முறையில் முயலுபவன். ‘ப்ரயத்நாத்என்ற சொல்லும் முயற்சியையே குறிக்கிறது. தனது பாஷ்யத்தில் சங்கரர் இந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டை தெளிவுபடுத்துகிறார். ‘ப்ரயத்நஎன்பது அவன் தரப்பிலுள்ள பெரும் விருப்பத்தை குறிக்கிறது, ஏனெனில் அடையப்பட வேண்டிய இலக்கு கடினமான ஒன்றாக இருப்பதால் அவனது விருப்பமும் அவ்வளவு பெரியதாக இருந்தாக வேண்டும். எனவேப்ரயத்நாத் யதமாந:என்பது தன் விருப்பத்துடன் முயலுபவனைக் குறிக்கிறது

மேலும் இவனது அனைத்து அசுத்தங்களும் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டனாக இருக்கிறான்ஸம்சு1த்34 கில்பி3:. இங்கு அசுத்தங்கள் என்பது ராக-த்வேஷங்கள், பாபங்கள் மற்றும் குற்றவுணர்ச்சி போன்ற மனதிலுள்ள தடைகளைக் குறிக்கின்றது. கர்மயோக வாழ்க்கையை வாழ்வதன் மூலம் இவ்வித தடைகளிலிருந்து விடுதலை அடைந்தவன் இந்த ஸம்சு1த்34:. இதன் பொருட்டு வீழ்ந்து வீழ்ந்து பல ஜென்மங்களாகத் தன்னை தூய்மைப்படுத்திப் பரிபக்குவத்தை அடைந்தவன்அநேக ஜந்ம ஸம்ஸித்34:.


=> பல ஜென்மங்களின் சேமிப்பு:

ஒரு முமுக்ஷுவிற்கான சரீரத்தை அடைவதும் மோக்ஷ ஆசையைப் பெறுவதும் சாதாரணமான சாதனை அல்ல. ஒருவனுக்கு இந்த நாட்டம்  உண்டாக பல பிறவிகள் தேவைப்படுகிறது. ‘அநேக ஜந்மஎன்பது கடந்த காலத்தைத் தான் குறித்தாக வேண்டும், ஏனெனில் இப்பொழுது அவன் கீதையை கற்கிறான். ஆகவே இங்கு விவாதிக்கப்படுபவன், அநேக ஜந்ம ஸம்ஸித்34, தன்னறிவைக் குறித்த விசாரணையை மேற்கொள்ளும் இப்படிப்பட்ட நிலைக்கு வருவதற்குப் பல ஜென்மங்கள் எடுத்து தன்னை தகுதிப்படுத்திக் கொண்டவனாக உள்ளான்

முக்திக்கான இச்சையே அநேக ஜென்மத்தில் இருந்து பிறந்த ஒன்று. இந்த அறிவைப் பெறுவதற்கான சரியான அந்தகரணமான மனதையும் சரியான உபாதியான உடலையும் பெற வேண்டும் - இவை அனைத்தும் பல பிறவிகளின் வழியாக இப்போது இந்த யோகியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவன் ஒவ்வொரு ஜென்மத்திலும் சிறிது சிறிதாக யோக-சம்ஸ்காரத்தை சேகரித்து, அறிவைப் பின்தொடர்வதற்கான உகந்த சூழ்நிலையை அடைகிறான்.

இங்குஸம்ஸித்34என்பதை தெளிவான அறிவையுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது அநேக ஜென்மங்களாகத் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட காரணத்தினால் சம தரிசணத்தை குறித்த தெளிவான ஞானத்தை உடையவன் என்பதால் அநேக ஜந்ம ஸம்ஸித்34:.


=> முடிவில்லாத நிலை:

தத:’, இவ்விதமாக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு தன்னறிவைப் பெறும் தகுதியை அடைந்தவனாகிறான். ஞானமே மோக்ஷமாக இருப்பதால், ஞானத்தை அடைந்த இந்த யோகி மேலான நிலையை, முடிவற்ற பலனை அடைகிறான்பர 3தி. இவ்வுலகில் எந்தவொரு நிலையும், பலனும் ஒருநாள் முடிவிற்கு வரும்; ஆனால் மோக்ஷம் என்பது முடிவிற்கு வராத ஒரு பலன்; ஒருவன் மீண்டும் திரும்பாத நிலை

முடிவிற்கு வரும் எந்தவொரு பலனும் உண்மையில் முடிவு எனக் கூறமுடியாது. அது ஒரு சுழற்சி மட்டுமே; சம்சார சக்கரத்தில் வெளி வரமுடியாமல் சுற்றிக் கொண்டே இருப்பது; இங்கு அடையப்படும் எந்தவொரு நிலையும் அல்லது பலனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முற்றுபெற்று மீண்டும் அதே புள்ளிக்கே கொண்டு வந்துவிடும். ஆனால் மோக்ஷ நிலை முற்றிலும் மாறானது. இதை உணர்த்துவதன் பொருட்டு இங்குபராஎனும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது, மிக உயர்ந்த நிலை; மேலான முடிவு. மோக்ஷம் என்பது மெய்ப்பொருளைப் பிந்தொடர்பவனால் பெறப்படும் நிலை; மீண்டும் திரும்பாத உயரிய நிலை ஆகும்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி நிற்கக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்னால், தட்டித் தள்ளாடிப் பல தடவை கீழே விழுகின்றது. அது போல சாதன மார்க்கத்தில் கடைசியாக ஜயம் பெறுவதற்கு முன்னால் அனேகம் தோல்விகள் நேரிடும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.46 || யோகியின் பெருமை:

तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिक:  

कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन ।। ४६ ।। 

தபஸ்விப்4யோऽதி4கோ யோகீ3 ஜ்ஞாநிப்4யோऽபி மதோऽதி4:  

கர்மிப்4யச்1சாதி4கோ யோகீ3 தஸ்மாத்3யோகீ3 4வார்ஜுந ।। 46 ।।


योगी  யோகீ3  யோகியானவன்   तपस्विभ्यதபஸ்விப்4:  தவசிகளைக் காட்டிலும்   

अधिकஅதி4:  மேலானவன்   ज्ञानिभ्य: अपि  ஜ்ஞாநிப்4: அபி  கல்விஞானமுடையவர்களைக் காட்டிலும்  

अधिकஅதி4:  மேலானவன்    कर्मिभ्य:   கர்மிப்4:   கர்மம் செய்பவர்களைக் காட்டிலும்   

योगी   யோகீ3 யோகியானவன்   अधिक: मतஅதி4: மத:  மேலானவனாக எண்ணப்படுகிறான்   

तस्मात्  தஸ்மாத்  ஆகையினால்   अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   योगी भव  யோகீ3 4  யோகியாவாயாக.


தவசிகளைவிட யோகி மேலானவன்; கல்விஞானமுடையவர்களைவிட மேலானவனாகக் கருதப்படுகிறான். கர்மிகளைவிட அவன் சிறந்தவன். ஆகையால் அர்ஜுனா, யோகியாவாயாக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.


விளக்கம்:

பகவான் இங்கு யோகியின் பெருமையை விளக்குவதன் மூலம் பெருநிலையை அடைதற்கு வேறெந்த உபாயத்தைக் காட்டிலும் நிதித்யாசனம் எனும் யோகமே சிறந்தது என உரைக்கிறார். ‘அதி4எனில் மேலானது, சிறந்தது எனப் பொருள், உத்க்ருஷ்ட. பலவிதமான உபாசனைகளையும் தியானங்களையும் செய்யும் தபஸ்விகளை விடவும்(தபஸ்விப்4:), வேதத்தின் பூர்வ பாகத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான வைதிக கர்மங்களில் ஈடுபடும் கர்மிகளை விடவும்(கர்மிப்4:) யோகி மேலானவன் என்று கிருஷ்ணர் கூறுகிறார். உதாரணமாக சாந்திராயணம் முதலிய தபசு புரிகின்றவர்களை விடவும், அக்னிஹோத்திரம் முதலிய கர்மம் செய்கிறவர்களை விடவும் இங்கு விளக்கப்பட்ட யோகி உயர்ந்தவன்.


=> சாஸ்திர ஞானம்:

அதே போல, யோகியானவன் பண்டிதர்களை விட உயர்ந்தவன்ஜ்ஞாநிப்4: அபி. இங்குஞானிஎன்பது வேதம் அறிந்தவனை, அதாவது வேத பாராயணம் செய்பவனைக் குறிக்கிறது. வேதத்தைப் பாராயணம் செய்யும் இந்த பண்டிதர்கள் சிலர், அதிலுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தையும் கூட அறிந்திருக்கலாம். ஆனால் இந்த வெறும் புலமையினால் மட்டுமே ஒருவன் வேதத்தின் அறிவை, தரிசணத்தைப் பெறுவதில்லை. தன்னறிவை பெற, சம தரிசணத்தை அடைய மற்றும் மேலானதான மோக்ஷ கதியை பெற அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். எனவே வெறும் சாஸ்திர ஞானம் உடைத்திருப்பவனைவிட அதில் பகர்ந்துள்ளபடி யோகம் பயிலுவதனால் யோகி சிறந்தவனாகிறான்.

இந்த சுலோகம் வேதாந்த ஞானத்தையுடைய யோகியைப் பற்றியது என்பதால், இங்கு குறிப்பிடப்படும் புலமை என்பது வேதாந்தம் அல்லாதது, பூர்வ பாகத்தை அல்லது கர்ம காண்டத்தை மட்டுமே குறிப்பது என எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் இங்கு சொல்லப்படும் ஞானி என்பது யோகி அல்லாதவனைக் குறிப்பதாக ஆகிறது. சங்கர பாஷ்யத்தில் இந்த கருத்து தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது வேதத்தின் பூர்வ பாகத்தில் பாண்டித்யமுடையவனை இந்தஞானிஎனும் சொல் குறிப்பதாகக் கூறுகிறார். இருப்பினும் சொற்களின் பொருள் தன்னைத்தான் குறிக்கிறது என்பதைப் புரியாது வேதாந்தத்தை படித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிஞர்களும் இதில் அடங்குவர். ஞானி என்ற சொல்லின் மூலம் இங்கு கூறிப்பிடப்படும் பண்டிதர்கள், வேதாந்த சாஸ்திரத்தை தவிர மற்ற அனைத்து சாஸ்திரங்களிலும் புலமைப் பெற்றவர்களாக இருந்தபோதிலும் நித்தியப்பொருளைப் பற்றிய தெளிவான ஞானம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஞானத்தை ஏற்கனவே உடைய யோகி பண்டிதர்களைக் காட்டிலும் மேலானவன்ஜ்ஞாநிப்4: அதி4: யோகீ3.

பண்டிதர்கள் தபஸ்விகள் மற்றும் வேத சடங்குகளைச் செய்யும் கர்மிகளை விட யோகி சிறந்தவனாகையால் கிருஷ்ணர் அர்ஜுனனை, ‘யோகியாக இரு_ யோகீ3 4என்று அறிவுரை கூறுகிறார்


=> இனியொரு கோணத்தில் இதன் விளக்கம்:

இந்த ஆறாவது அத்தியாயத்தில் பகவான் நிதித்யாசன தியானத்தை விளக்கி, துக்கத்துடனான தொடர்பிலிருந்து விலகுதல்(து3:2 ஸம்யோக3 வியோக3ம்) யோகம் என யோகத்திற்கான பல்வேறு விளக்கங்களைச் சுலோகம் 20 முதல் 25 வரை எடுத்துரைத்தார். இந்த வேதாந்த ஞானத்தை மீண்டும் மீண்டும் மனதிற்கு கொண்டுவந்து அந்த அறிவிலேயே இருந்து பழகுதல் நிதித்யாசனம் என்று பார்த்தோம். இந்த சாதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிதித்யாசகன், இங்குயோகிஎன அழைக்கப்படுகிறான். வேதாந்த பாதையில் கடைசி சாதகனாக, இறுதி கட்டத்தில் இருப்பவன் நிதித்யாசகன். அவனுடைய பெருமை இங்கு பேசப்படுகிறது.

சாதகனின் நிலைகள்:

(1) கர்மயோகி - இது முதல்படி. கர்மயோகச் சாதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்மயோகி, அதன் பலனாக விவேகம் வைராக்கியம் மற்றும் முமுக்ஷுத்வத்தை அடைகிறான்.

(2) உபாசகன் - அடுத்த படியாக, உபாசனையைப் பின்பற்றும் இந்த உபாசகன் அல்லது தபஸ்வி, அதன் பலனாக மனக் கட்டுப்பாடு(1:) புலனடக்கம்(தம:) மற்றும் மன ஒருமுகப்பாடு(சமாதானம்) முதலியவற்றை அடைகிறான்.

(3) ஞானி - இவன் கேட்டல் மற்றும் கற்றல் எனும் வேதாந்த சிரவணத்தில் ஈடுபடுபவன்.

(4) முநி - இந்நிலையில் சாதகன் மநநம் செய்து சந்தேகத்தை அகற்றுவதன் மூலம் தெளிவான அறிவை அடைகிறான்.

(5) நிதித்யாசகன் - நிதித்யாசன சாதனையைப் பயன்படுத்தி தான் கற்றுத் தெளிந்த ஞானத்தில் நிலைக்கிறான்.

இந்த வரிசையில் மேற்கூரிய நான்கு படிகளில் இருப்பவர்களை விடவும், விடாமுயற்சியினால் கடைசி படி வரை வந்த நிதித்யாசகன் சிறந்தவனாகின்றான். ஞானமில்லாமல் வெறும் தவம் மற்றும் உபாசனத்தில் ஈடுபடும் உபாசகர்களைக் காட்டிலும்(தபஸ்விப்4:), சிரவணம் செய்து கொண்டிருக்கும் ஞானியைக் காட்டிலும்(ஜ்ஞாநிப்4:), கர்மயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்மயோகியைக் காட்டிலும்(கர்மிப்4:) நிதித்யாசகனான யோகி மேலானவன். ஆகவே அர்ஜுனா நீ யோகி ஆவாயாக.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சாஸ்திர ஞானத்தால் மட்டும் என்ன பயன்? பண்டிதர்களுக்கு கிரந்தங்களிலும் சுலோகங்களிலும் நல்ல பரிச்சயமிருக்கலாம். ஆனால் அவைகளைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் பிரயோஜனமென்ன? கிரந்தங்களில் சொல்லியவற்றையெல்லாம் அனுபவத்துக்குக் கொண்டுவர வேண்டும். ஒருவனுக்கு உலகப் பற்றுள்ளவரையில் அதாவது காமமும் காசாசையும் இருக்கும் வரையில், கேவலம் படிப்பு மட்டும் ஞானத்தையாவது மோக்ஷத்தையாவது தராது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.47 || யோகிகளுள் சிறந்தவன் யார் என உரைக்கிறார்:

योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना

श्रद्धावान्भजते यो मां मे युक्ततमो मत: ।। ४७ ।। 

யோகி3நாமபி ஸர்வேஷாம் மத்33தேநாந்தராத்மநா  

ச்1ரத்3தா4வாந்ப4ஜதே யோ மாம் மே யுக்ததமோ மத: ।। 47 ।।


: : யார்  श्रद्धावान्  ச்1ரத்3தா4வாந்  சிரத்தையுள்ளவனாய்  मद्गतेन    மத்33தேந  என்னிடம் செலுத்தப்பட்ட अन्तरात्मना   அந்தராத்மநா  அந்தக்கரணத்தோடு/மனதோடு   

मां भजते   மாம் 4ஜதே  என்னை நாடுகின்றானோ  :  அவன்   

सर्वेषां योगिनाम् अपि ஸர்வேஷாம் யோகி3நாம் அபி  எல்லா யோகிகளுக்கிடையிலும்   

युक्ततम:  யுக்ததம:  மிக மேலானவன் என  मे  மே  என்னால்   मत:  மத:  கருதப்படுகிறான்.


யார் சிரத்தையுடன் சித்தத்தை என்பால் வைத்து என்னை நாடுகின்றானோ, அவன் மற்ற எல்லாவிதமான யோகியைக் காட்டிலும் மிக மேலானவன் என்பது என் கருத்து.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.


விளக்கம்:

யோகிகளுள் யார் சிறந்தவன் என்பதற்கான விடையாக இந்த சுலோகம் உள்ளது. இது முன் சுலோகத்தின் தொடர்ச்சியாக, அங்கு விளக்கப்பட்ட நிதித்யாசகனின் பெருமையைக் குறிப்பதாக அமைகிறது


=> யோகிகளுள் மேலானவன்:

தியான யோகிகள் எல்லாரும் மேலோரே. அவர்கள் எதைத் தியானிக்கிறார்களோ அதுவாகிறார்கள். சுத்தியடைந்து ஒருமுகப்பட்ட மனது தியானிக்கப்பட்ட லட்சியத்தை விரைவில் அடைகிறது. கீழான லட்சியங்களைத் தியானிக்கின்ற யோகிகளைவிட மனதை முற்றும் சர்வேஷ்வரனிடத்தில் செலுத்தி அவனையே சிரத்தையுடன் தியானிக்கின்ற யோகிகள் மிக மேலானவர்கள். ஏனெனில் அத்தகைய தியானத்தால் அவர்கள் சர்வேஷ்வரனையே அடைகிறார்கள். அதற்குமேல் அவர்களால் அடையப்படுவது ஒன்றுமில்லை. எனவேதான் பகவான் இங்கு, எல்லாவிதமான யோகிகளை காட்டிலும் சிரத்தையுடன் பரப்ரம்ம சொரூபமான என்னிடத்தில் மனதை வைத்தவனாக யார் என்னை நாடுகிறானோ, என்னை அடைய முயற்சிக்கிறானோ அவனே மிக மேலானவன் என்பது என் கருத்து, என்கிறார்.

பல்வேறு தெய்வங்களைத் தியானிக்கும் யோகிகள் இருக்கிறார்கள். அவர்கள் தியானப் பொருளிலிருந்து தன்னை வேறுபடுத்தி, நான் தியானம் செய்பவன் எனும் கர்த்ருதுவத்தை தக்க வைத்துக் கொள்வதால் அங்கு ஒரு குறிப்பிட்ட இருமை உண்டாகிறது. தியானம் செய்பவர்கள் அனைவரும் போற்றத்தக்கவர்கள் என்றாலும், அவர்கள் உண்மையில் யோகிகள் அல்ல. யோகிகளில் மிகவும் உயர்ந்தவரை கிருஷ்ணர் இங்கு சுட்டிக்காட்டுகிறார்யோகி3நாம் அபி ஸர்வேஷாம் யுக்ததம:.


=> யோகம்:

இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட யோகி ஒரு குறிப்பிட்ட பலனுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தியானிப்பவன் அல்ல; கிருஷ்ணராக இருக்கின்ற ஈஷ்வரனை நிதித்யாசனம் செய்கின்றான். அதாவது அனைத்துமாக இருக்கின்ற, உலகத்திற்கு காரணமான(ஜகத் காரண), ஜீவாத்மாவிலிருந்து வேறாக இல்லாத பரமேஷ்வரனிடத்தில் இந்த யோகியின் மனமானது முழுமையாக ஒடுங்கியுள்ளது. இதனால் அவன் ஈஷ்வரனுக்கும் தனக்குமிடையே எந்தப் பிரிவினையும் இல்லாதவனாக, ‘நானே அவன்; அவனே நான்எனும் நிலைக்கு வருகிறான். ஆகவே அவனை மற்ற எந்த யோகிகளைக் காட்டிலும் மிகவும் மேலானவனாகக் கருதுவதாக பகவான் கூறுகிறார்.

யோகம் என்றால் என்ன என்பதை கிருஷ்ணர் இங்கு மீண்டும் கூற விரும்புகிறார். பரமேஷ்வரனுக்கும் ஜீவனுக்குமுள்ள ஐக்கியம் யோகம் ஆகும். இப்படிப்பட்ட யோகத்தை யார் அடைகிறார்கள்? யாரிடம் சிரத்தையுள்ளதோ அவர்கள் அடைகிறார்கள்ச்1ரத்3தா4வாந். மோக்ஷத்திற்கு காரணமான தன்னறிவைப் பெற சாஸ்திரமே உபாயமாக உள்ளது என்பதை புரிந்துகொள்வதால் பிறக்கும் பாவனை சிரத்தை எனப்படும். இந்த சிரத்தையுடையவன் ஜீவ-ப்ரம்ம ஐக்கியத்தை தெளிவாக உணரும் வரை நிதித்யாசனத்தை மேற்கொள்கின்றான். இந்த அறிவைப் பெற்ற யோகி, மனிதர்களில் மிகச் சிறந்தவனாகின்றான்.

இத்துடன் இந்த ஆறாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நித்தியமாயுள்ள ஞானத்தையும் ஆனந்தத்தையும் பற்றித் தியானம் செய். அப்போது உனக்கு ஆனந்தம் உண்டாகும். ஆனந்தமோ எப்பொழுதும் சாசுவதமானது; ஆனால் அக்ஞானத்தினால் அது மூடப்பட்டு மறைந்துள்ளது. விஷய சுகங்களில் உனது ஆசைகுறையுமளவு ஈசுவரனிடம் உனக்குப் பிரேமை அதிகமாகும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे ध्यानयोगो नाम षष्ठोऽध्याय: ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 த்4யாநயோகோ3 நாம ஷஷ்டோ2ऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் தியாநயோகம் என்ற ஆறாம் அத்தியாயம்.


—---------------------------------------------------------------------------------------------------------------------------


த்யாநயோகம் - சாரம்:

(1) பகிரங்க சாதனம் [1 - 6, 16 - 17]

(2) த்யாந பலன் [7 - 9, 15, 20 - 23, 27 - 32 ]

(3) அந்தரங்க சாதனை [10 - 14]

(4) த்யாந சொரூபம் [18 - 19, 24 - 26]

(5) மனம் குறித்த அர்ஜுனனின் கேள்வி மற்றும் அதற்கான பதில் [33 - 36]

(6) யோகப்ரஷ்டன் குறித்த அர்ஜுனனின் கேள்வி [37 - 39]

(7) யோகப்ரஷ்டன் குறித்த கிருஷ்ணரின் கேள்வி [37 - 39]

(8) நிதித்யாசகனின் பெருமை [46 - 47]

—---------------------------------------------------------------------------------------------------------------------------