||7.5|| பிரக்ருதியைப் பற்றிய விளக்கத்தின் தொடர்ச்சி:
अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम् ।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत् ।। ५ ।।
அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்3தி4 மே பராம் ।
ஜீவபூ4தாம் மஹாபா3ஹோ யயேத3ம் தா4ர்யதே ஜக3த் ।। 5 ।।
महाबाहो மஹாபா3ஹோ தோள்வலியோய் तु து ஆனால் इयं இயம் இது अपरा அபரா கீழான பிரக்ருதி इत: अन्यां இத: அந்யாம் இதனினின்று வேறானதும் जीवभूतां ஜீவபூ4தாம் உயிர் ஆவதுமாகிய
मे पराम् प्रकृतिं மே பராம் ப்ரக்ருதிம் என்னுடைய மேலான பிரக்ருதியை विद्धि வித்3தி4 அறிவாயாக
इदं जगत् இதம் ஜக3த் இந்த ஜகத்தானது यया யயா இதனால் धार्यते தா4ர்யதே தாங்கப்படுகிறது.
இதுவோ என்னுடைய கீழான பிரக்ருதி. இதனினின்று வேறானதும், உயிர் ஆவதுமாகிய என்னுடைய மேலான பிரக்ருதியை அறிவாயாக. தோள்வலியோய், இந்த உலகானது இதனால் தாங்கப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.
விளக்கம்:
பகவான் பிரக்ருதியை, பரா பிரக்ருதி(ப்ரம்ம தத்துவம்) மற்றும் அபரா பிரக்ருதி (மாயா தத்துவம்) என இரண்டாகப் பிரிக்கிறார் எனப் பார்த்தோம். இவைகளில், மாயா அம்சத்தை பகவான் தன் கீழான பிரக்ருதி என்றும், சைத்தன்யமாக விளங்கும் ப்ரம்ம அம்சத்தை மேலானது என்றும் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
எந்தவொரு காரியமும் காரணத்திலிருந்தே தோன்றுகிறது. பொதுவாக, காரணம் இரண்டு விதத்தில் உள்ளது:
(1) உபாதான காரணம் - பொருள் காரணம்; பானைக்கு களிமண் என்பது உபாதான காரணம்.
(2) நிமித்த காரணம் - உருவாக்குபவன்; களிமண்ணைக் கொண்டு குயவன் பானையை உருவாக்குவதால், குயவன் இங்கு நிமித்த காரணம்.
இனி, உலகிற்கான காரணமாக இருப்பவர் ஈஷ்வரன் எனில் அவர் உபாதான காரணமா? அல்லது நிமித்த காரணமா? இரண்டுமே ஈஷ்வரன் தான். உதாரணமாக, ஒரு சிலந்தி வலையின் மூலப்பொருளாக இருப்பதும், அதை உருவாக்குவதும் சிலந்தியே. எவ்விதம் வலையின் இரு காரணமாகவும் சிலந்தி திகழ்கிறதோ அவ்விதமே ஈஷ்வரனின் அபரா பிரக்ருதியான மாயை உபாதானக் காரணமாகவும் பரா பிரக்ருதியான ப்ரம்ம நிமித்த காரணமாகவும் உள்ளது. ஆக, ஈஷ்வரனே இரு காரணமாகவும் ஆகிறார்.
முன் சுலோகத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல எட்டு விதமாகப் பிரிந்து, உலகமாகத் தோன்றிக் கொண்டுள்ள இந்த (இயம்) மாயா தத்துவமானது கீழான பிரக்ருதி(அபரா) என்கிறார் பகவான். இந்த அபரா பிரக்ருதியே ஒருவனுக்கு சம்சாரத்தை தருவதாக உள்ளது.
=> அபரா பிரக்ருதி:
அபரா பிரக்ருதியே படைக்கப்பட்ட அனைத்திற்கும் காரணமான பிரக்ருதி. கீழான பிரக்ருதியான இதை சங்கரர் அநர்தக, விரும்பத் தகாதவற்றைக் கொண்டுவருவது எனக் கூறுகிறார். இதுவே எல்லா பிரச்சனைகளையும் உருவாக்கும் பிரக்ருதி. ஒருவனுக்கு ஜீவ சரீரத்தை கொடுப்பதன் மூலம் பந்தத்தை உண்டாக்குகிறது. இந்த பிரக்ருதியிலிருந்தே உடல், மனம் மற்றும் புலன்கள் உருவாவதால் அது ஒருவனை வரையறைக்குட்படுத்தி துக்கதில் கொண்டு சேர்க்கிறது. இவ்விதம் சம்சார பந்தத்தின் மூலவடிவமாக இருக்கின்ற காரணத்தினாலேயே இது கீழான பிரக்ருதி என்றழைக்கப்படுகிறது.
=> பரா பிரக்ருதி:
இதிலிருந்து வேறுபட்ட தன்மையையுடைய, அறிவு சொரூபமான எனது மேலான பிரக்ருதியை தெரிந்து கொள்வாயாக — மே ஜீவபூ4தாம் பராம் ப்ரக்ருதிம் வித்3தி4. என்னுடைய சொரூபமாகவே உள்ள இந்த உயர்ந்த பிரக்ருதியை புரிந்து கொள். இது விசுத்த, தூய்மையானது, எதனாலும் தொடப்படாதது என்று சங்கரர் கூறுகிறார். ‘பரா’ என்றால் உத்க்ருஷ்ட, மிக உயர்ந்தது என்பது பொருள். பந்தத்தை உண்டாக்கும் மற்றதோடு ஒப்பிடுகையில் இது மேலான பிரக்ருதி ஏனெனில் இதை அறியும்போது ஒருவன் முக்தியை அடைகிறான்.
இங்கு கிருஷ்ணர், என் உண்மையான இயல்பைப் புரிந்து கொள், அது ஜீவபூ4தாம் - ஜீவ வடிவில் உள்ளது; அது நீயாக உள்ளாய் என்கிறார். இங்கு ‘ஜீவபூ4தாம்’ எனில் உயிர் ஆவதுமாகிய என்பது பொருள்; அதாவது எந்த சைத்தன்ய சொரூபமானது ஜடமான ஒன்றிற்கு உணர்வை கொடுப்பதன் மூலம் ஜீவிதத்தை அளிக்கிறதோ அந்த ஸத்-சித்-ஆனந்த ஆத்மா குறிப்பிடப்படுகிறது. க்ஷேத்திரமாகிய மனம், புத்தி, அஹங்காரம், நினைவகம், உடல், புலன்கள் மற்றும் இந்த உலகம் என இவை அனைத்தையும் ஒளிரச் செய்யும் ஆத்மா க்ஷேத்ரஞ்யன் என்று அழைக்கப்படுகிறது. இந்த க்ஷேத்ரஞ்யனே ஜீவன் என்பதற்கான உண்மையான அர்த்தம். பதிமூன்றாம் அத்தியாயத்தில் பகவான் அனாத்மாவை க்ஷேத்திரம் என்றும் அதை ஒளிர்விக்கும் ஆத்மாவை க்ஷேத்ரஞ்யன் என்றும் கூறுகிறார். மேலும் விளக்கத்தை அங்கு காணலாம்.
=> என் சொரூபமே அனைத்தையும் தாங்குகிறது:
அஹங்காரம், மனம், புத்தி, புலன்கள், உடல் மற்றும் இந்த உலகம் அபரா பிரக்ருதியில் அடங்கும். ஆனால் அதில் ஆத்மா சேர்க்கப்படவில்லை. ஈஷ்வரனின் சொரூபமாகவுள்ள அந்த பரா பிரக்ருதியினாலேயே இந்த உலகம் தாங்கப்படுகிறது என்கிறார் பகவான் — அந்த என் பிரக்ருதியின் மூலமாக(யயா) இந்த உலகானது தாங்கப்படுகிறது; காக்கப்படுகிறது(இதம் ஜக3த் தா4ர்யதே).
இங்கு பகவான், நான் இரண்டு பிரக்ருதிகளாகவும் இருக்கின்றேன் எனக் கூறிய போதிலும், அதில் பரா பிரக்ருதியானது தனது உண்மையான சொரூபம், என்கிறார். ஏனெனில் அது தனது இருப்புக்கு எதையும் சாராது சுதந்திரமானதாக இருப்பதால் அதுவே ஸத்யம். இனியொன்று அபரா பிரக்ருதி; அது ப்ரம்மத்தை சார்ந்திருப்பதால் மித்யா; நிழலைப் போல, பிரதிபிம்மத்தைப் போல பொய்யானது, தோற்றம் மட்டுமே. எனவே அனைத்திற்கும் காரணமான, எப்போதும் மாறாத, ஜீவனில் ஆத்ம சொரூபமாக விளங்கி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற அந்த மேலான பரா பிரக்ருதியை அறிவாயாக — பராம் ப்ரக்ருதிம் வித்3தி4. இவ்விதம் கூறி அடித்தளத்தை அமைத்த பகவான், இனி இந்த பரா பிரக்ருதியை தவிர உண்மையில் வேறெதுவும் இல்லை என்ற மெய்மையை அடுத்த சுலோகத்தில் வெளிப்படுத்தப் போகிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
||7.6|| ஜகத் காரணம்:
एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय ।
अहं कृत्स्नस्य जगत: प्रभव: प्रलयस्तथा ।। ६ ।।
ஏதத்3யோநீநி பூ4தாநி ஸர்வாணீத்யுபதா4ரய ।
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக3த: ப்ரப4வ: ப்ரலயஸ்ததா2 ।। 6 ।।
सर्वाणी भूतानि ஸர்வாணி பூ4தாநி எல்லா உயிர்களும்
एतद् योनीनि ஏதத்3 யோநீநி இந்த இரண்டு பிரக்ருதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டவைகள்
इति उपधारय இதி உபதா4ரய என்று அறிந்துகொள் अहं அஹம் நான்
कृत्स्नस्य जगत: க்ருத்ஸ்நஸ்ய ஜக3த: ஜகத் முழுவதினுடைய प्रभव: ப்ரப4வ: தோற்றத்திற்குக் காரணம் तथा ததா2 அப்படியே प्रलय: ப்ரலய: ஒடுக்கத்துக்குக் காரணம்.
உயிர்களனைத்தும் இந்த இரண்டு பிரக்ருதிகளினின்று உண்டானவை என்று அறிவாயாக. நான் உலகம் முழுதினுடைய தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணம்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.
விளக்கம்:
உடலும் உயிரும் சேர்ந்து வாழ்வாகப் பரிணமிக்கிறது. உயிரற்ற உடல் பிரேதமாய்விடும். உடலற்ற உயிர் செயல்புரியச் சக்தியற்றதாய்விடும். உயிரும் உடலும்(க்ஷேத்ரக்ஞனும் க்ஷேத்ரமும்) சேர்ந்தால் ஜீவிதம் சாத்தியமாகிறது. தோற்றத்துக்கு வந்துள்ள உலகெங்கும் இவ்விரண்டு பிரக்ருதிகளுடைய கூட்டுறவைக் காண்கிறோம்.
=> உபாதான காரணம்:
‘ஏதத்’ எனும் சொல் ‘இந்த’ என்ற பொருளில், சென்ற சுலோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பிரக்ருதியையும் குறிக்கிறது. பிரம்மதேவரில் தொடங்கி புழு பூச்சி வரை அனைத்து உயிரினங்களும் இவையிரண்டுள் அடங்கும். மேலும் விண்வெளி தொடங்கி பூமி வரை அனைத்து உயிரற்ற பொருட்களும் இதில் அடங்கும். அறியப்பட்ட மற்றும் அறியப்படாதவைகள் அனைத்தும், பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய மற்றும் அதைத் தாங்கும் அனைத்தும், அனைத்து சக்திகள், அனைத்து விதிகள், அனைத்து நிகழ்வுகள், பின்னர் இரேழு லோகங்களும் அதிலுள்ள அனைத்து உயிரினங்களும் - யக்ஷர்கள், கந்தர்வர்கள், இந்திரன் முதலிய தேவர்கள் மற்றும் பிரம்மதேவர் என அனைத்தும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரம்மாண்டமும் அதிலுள்ள அனைத்தும் — ஸர்வாணி பூ4தாநி. இவையனைத்தும் இந்த இரு பிரக்ருதிகள். இவைகளில் ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக, க்ஷேத்ரஞ சொரூபமாக மற்றும் ஈஷ்வரனின் பரா பிரக்ருதியாக விளங்கும் ஆத்மா ஒன்று. மற்றொன்று மாயா-உபாதியைக் கொண்ட அபரா பிரக்ருதி. ஏற்கனவே பார்த்ததைப் போல இது உபாதான காரணம், அதாவது வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள இந்த சிருஷ்டியின் பொருள் காரணமாகும். ப்ரம்ம எந்தவித மாற்றத்திற்கும் உட்படாதபோது, இந்த உபாதான காரணமே அனைத்து மாற்றங்களுக்கும் உள்ளாகிறது. எனவேதான் இந்த மாயா-உபாதி ‘பரிணாமி காரணம்’ என்றும் மாற்றத்திற்குட்படாத ப்ரம்ம ‘விவர்த-உபாதான-காரணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தயவுசெய்து இந்த இரு பிரக்ருதியையும் புரிந்து கொள்வாயாக — உபதா4ரய, என்கிறார் கிருஷ்ணர்.
=> நிமித்த காரணம்:
‘யோனி’ என்றால் காரணம். இந்த இரண்டு பிரக்ருதிகளுமே இந்த உலகிலுள்ள எல்லாவற்றுக்கும் காரணம் — ஏதத்3 யோநீநி. இந்த ஜகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் அபரா பிரக்ருதி, அதற்கு ஆதாரமாக விளங்கும் ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்மமான பரா பிரக்ருதியே உண்மையில் அனைத்திற்கும் காரணம் ஆகும். ஆகையினால் அந்த பிரக்ருதியை அறிக. அது ‘ஜீவபூத’, ஜீவ வடிவிலுள்ள ஆத்மா; உண்மையான சொரூபம்; எல்லாவற்றிற்குமான உண்மையான காரணம். அனைத்து உயிரினங்களும்(பூ4தாநி), ஆகாசம், காற்று முதலிய ஐம்பூதங்கள் முதல், உடல் மனம் வரை அனைத்தின் இருப்பும் இதில் மட்டுமே உள்ளது. ஆகவே, உயிர்களனைத்தும் இந்த இரண்டு பிரக்ருதிகளினின்று உண்டானவை என்று அறிவாயாக — ஏதத்3 யோநீநி ஸர்வாணி பூ4தாநி இதி உபதா4ரய.
=> தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணம்:
இந்த முழு பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் நானே காரணம் — அஹம் ஜக3த: ப்ரப4வ:, என்கிறார் பகவான். எப்படிப்பட்ட ‘நான்’? எனில், இரு பிரக்ருதியையும் உடைய நான். அதாவது ஜகத்தின் வடிவில் உள்ள அபரா பிரக்ருதியாகவும், உண்மையில் ப்ரம்ம சொரூபமாகவுள்ள பரா பிரக்ருதியாகவும் உள்ள நானே இந்த முழு படைப்பிற்கும் காரணம். மேலும், இந்த முழு படைப்பும் என்னிடத்திலேயே ஒடுக்கத்தை அடைகிறது — ப்ரலய: ததா2. ஆகவே இந்த உலகம் முழுதினுடைய ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணமாக நானே உள்ளேன். என்னைத் தவிர வேறெதுவும் இல்லை.
ஐந்து பூதங்களும் நானேயன்றி வேறில்லை என்று பகவான் ஏற்கனவே கூறியிருக்கிறார்; ஆனால் இவை அனைத்துமாக ஆவதற்கு ஸத்-சித் ஆத்மாவாக, க்ஷேத்ரஞனனாக நான் எந்த மாற்றத்தையும் அடையவில்லை என்கிறார். இதிலிருந்து, ‘முழு உலகமும் யாரிடமிருந்து வந்ததோ, யாரிடம் ஒடுக்கத்தை அடைகிறதோ அதுவும் நானே, மற்றும் க்ஷேத்ரஞனனாக விளங்கும் ஜீவனும் நானே’ என்று அவர் கூறும்போது, ‘என்னைப் போலவே நீயும் இந்த முழு உலகத்திற்கும் காரணம் ஆவாய்’ என்று கூறுகிறார். பரமாத்மாவின் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், எல்லாவற்றுக்கும் காரணமான பரா பிரக்ருதி நீயே.
எனில் ஈஷ்வரன் என்றால் என்ன? ஒருவன் இந்த உலகை தனிமனிதனாக நின்று பார்க்கும்போது, இயற்கையாகவே அவனுக்கு உடல், மனம் மற்றும் புலன்கள் என்ற தனித்துவம் உண்டாகிவிடுகிறது. அப்போது உலகம் என்ற ஒன்று உள்ளதால், அதற்கு காரணம் ஒன்று தேவைப்படுவதாகிறது. அதையையே சாஸ்திரம் மாயா-உபாதி என்கிறது. இந்த உலகின் வடிவில் உள்ள, மாயையுடன் கூடிய ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்மமே பரமேஷ்வரன்.
பரா பிரக்ருதியின் நிலைப்பாட்டில், இங்குள்ள அனைத்தும் ஒன்றே, அது இல்லாமல் இந்த உலகம் இல்லை. அது ஒன்றே படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்கும் இருப்பைத்(சத்தா) தருகிறது, மேலும் அது ஒவ்வொன்றையும் அறியும் ஸ்புரணத்தையும்(ஸ்பூர்தி) தருகிறது. சத்தா - ஸத் மற்றும் ஸ்பூர்தி - சித், இதனாலேயே இந்த முழு ஜகத்தும் தாங்கப்படுகிறது. அதுவே பரா பிரக்ருதி.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
மாயையைக் காணவேண்டுமென்ற அபிப்ராயங்கொண்ட நான், ஒருநாள் ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு சிறிய நீர்த்துளி கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணமித்து ஒரு சிறு பெண்ணாயிற்று. அப்பெண் ஒரு ஸ்திரீயாகி ஒரு குழந்தையைப் பெற்றாள். பெற்றதும் அவள் அக்குழந்தையை எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டாள்; இவ்விதம், அவளுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் அவள் விழுங்கினாள். அப்போது அவள் மாயை யென்பதை நானறிந்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------