|।2.15।। பொறுத்துக் கொள்வதால் அடையும் பலன்:
यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदु:खसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ।। १५
யம் ஹி ந வ்யத2யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப4 ।
ஸமது3:க2ஸுக2ம் தீ4ரம் சோऽம்ருதத்வாய கல்பதே ।। 15
पुरुषर्षभ புருஷர்ஷப4 புருஷர்களில் காளையை போன்றவனே(சிறந்தவனே)
एते ஏதே இவைகளில்(குளிர் வெப்பம் முதலியவைகளில்)
समदु:खसुखं ஸமது3:க2ஸுக2ம் சுக துக்கங்களை சமமாகக் கொண்டவன்
धीरं தீ4ரம் தீரனான यं पुरुषं யம் புருஷம் எந்த மனிதனை
न व्यथयन्ति ந வ்யத2யந்தி அசைக்கவில்லையோ स: ஸ: அவன் हि ஹி நிச்சயமாக
अमृतत्वाय அம்ருதத்வாய மோக்ஷத்திற்கு कल्पते கல்பதே தகுதியை அடைகின்றான்.
புருஷ சிரேஷ்டனே, இந்த விஷயங்கள் எந்த மனிதனை கஷ்டப்படுத்தவில்லையோ, இன்ப துன்பங்களை எவன் சமமாக உணர்கிறானோ, அப்படிப்பட்ட தீரனே மோக்ஷத்திற்கு தகுதியை அடைகின்றான்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
யாவன் இவற்றால் துயர்ப் படான், இன்பமுந் துன்பமு நிகரெனக் கொள்வான், அந்த தீரன் சாகா திருக்கத் தகுவான்.
விளக்கம்:
ஞானத்திற்கான தகுதி எப்படி வந்தமைகிறது?
பகுத்தறியும் மனதுடையவன், புலன்களினால் உடலுக்கு வரும் இன்ப துன்பங்களினால் சஞ்சலப்படாதவனாக சமநிலையில் இருப்பான். தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும் இருமைகளின் வந்து செல்லும் போக்கை தெளிவாக அறிந்தவன் தீரனாகின்றான். முந்தய 2.11-ல் குறிப்பிடப்பட்ட ‘பண்டிதன்’ எனும் அர்தத்திலேயே இங்கு தீரன் என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. நிலையற்ற இந்த இருமைகளால் அசைக்கப்படாமல், ஆத்ம சொரூபத்தில் மனதை வைத்தவனாக சாகாநிலையாகிய மோக்ஷத்திற்கு தகுதியடைகின்றான்.
இவ்வுலக அனுபவங்களை முறையாக ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து நம்மை தீரனாக மாற்றிக் கொள்ளுதல் சிறந்த வாழ்க்கைமுறையாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------।।2.16।। ஆத்மா சத்யமானது(ஸத்யம் _ सत्यम् )[அனாத்மா மித்யா] :
नासतो विद्यते भावो नाभावो विद्यते सत: ।उभयोरपि दृष्टोऽन्तस्त्नयोस्तत्त्वदर्शिभि: ।। १६
நாஸதோ வித்3யதே பா4வோ நாபா4வோ வித்3யதே ஸத: ।
உப4யோரபி த்3ருஷ்டோऽந்தஸ்த்னயோஸ்தத்வத3ர்சி1பி4: ।। 16
असत: அஸத: இல்லாததற்கு भाव: பா4வ: இருப்பு न विद्यते ந வித்3யதே இல்லை
सत: अपि ஸத: அபி இருப்பதற்கும் अभाव: அபா4வ: இல்லாமை न विद्यते ந வித்3யதே இல்லை तत्त्वदर्शिभि: तु தத்வத3ர்சி1பி4: து தத்துவத்தை அறிந்தவர்களாலேயே
अनयो: उभयो: அனயோ: உப4யோ: இந்த இரண்டினுடைய
अन्त: அந்த: முடிவு दृष्ट: த்3ருஷ்ட: காணப்படுகிறது.
இல்லாததற்கு இருப்பு கிடையாது. இருப்பது இல்லாமற்போவதுமில்லை. உண்மையை அறிந்தவர்களாலேயே இந்த இரண்டினுடைய முடிவு காணப்படுகிறது.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
இல்லாதது உண்மை யாகாது. உள்ளது இல்லாத தாகாது. உண்மை யறிவார் இவ் விரண்டுக்கு முள்ள வேற்றுமை யுணர்வார்.
விளக்கம்:
=> அஸத்(असत्)
அஸத் இரண்டாக வகைப்படுத்தலாம்:
(1) அத்யந்த அஸத் — எல்லா காலங்களிலும் அனுபவத்திற்கு இல்லாதது. உ.: சூன்யம், முயற்கொம்பு
(2) மித்யா — அனுபவத்திற்கு மட்டும் இருப்பது. விசாரம் செய்யும் போது உண்மையில் இல்லாதது.
உ.: கயிற்றில் தெரியும் பாம்பு.
மித்யா என்பது ஸத்-திற்கும், அஸத்திற்கும் இடையில் இருப்பது. பொதுவாக நாம், அனுபவத்திற்கு வரும் ஒன்றிற்கு ‘ஸத்’ என்ற நிலையையும் அனுபவிக்கவில்லையெனில் அது இல்லை- ‘அஸத்’ என்ற நிலையையும் கொடுத்து விடுகிறோம். இங்கு பகவான், அது தவறு. அறிவின் அடிப்படையில் ஸத், அஸத் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
=> ஸத் மற்றும் அஸத்
* ஸத் லக்ஷணம்:
(1) எது மூன்று காலத்திலும் உள்ளதோ
(2) எது சுயமாக, சுதந்திரமாக(independent) உள்ளதோ
* அஸத் லக்ஷணம்:
(1) எது நிகழ்காலத்தில்(present) மட்டும் உள்ளதோ
(2) எது பரதந்திரம்(परतन्त्र)- இனியொன்றை சார்ந்து(dependent) உள்ளதோ
உதாரணம்:
மந்த வெளிச்சத்தில், கயிற்றை பாம்பாக பார்த்தல். இதில் கயிறு - ஸத். மூன்று காலத்திலும் இருப்பது, தன் இருப்பிற்கு எதையும் சார்ந்து இல்லை. பாம்பு-அஸத். தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தெரிவது; மேலும் பாம்பின் இருப்பு கயிற்றை சார்ந்தது. கயிறு எந்த விதத்தில் வளைந்து, எவ்வளவு அடி நீளத்தில் உள்ளதோ அதுபோலத் தான் பாம்பு தெரிகிறது. இது போலவே கானல் நீர் மற்றும் களிமண்-பானை இவற்றில் மேற்கூரிய லக்ஷணங்களைப் பொருத்திப்பார்க்கலாம்.
=> ஆத்மா ஸத்
ஆத்மா ஸத் என்பது அவஸ்தா த்ரய விவேகத்தின் மூலம் விளக்கலாம். அவஸ்தா த்ரயம் = மூன்று அவஸ்தைகள்/அனுபவங்கள். விழிப்பு நிலை அனுபவம், கனவு நிலை அனுபவம், ஆழ்ந்த உறக்கம்.
* விழிப்பு நிலையில் ஸ்தூல உடல் மற்றும் அறிபவன் உண்டு.
* கனவு நிலையில் ஸ்தூல உடல் இல்லை.
* ஆழ்ந்த உறக்கத்தில் மனமும் ஒடுக்கத்தை அடைகிறது.
இந்த மூன்று அனுபவங்களிலும் ‘நான்’ தொடர்ந்து மாறாமல் இருக்கின்றேன். உடல்கள்(ஸ்தூல, சூக்ஷம) வந்து செல்கின்றன. ‘நான்’ என தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்த ஸ்தூல உடல் கனவு நிலையில் இல்லை. மேலும் குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை உடல் பல வகையான மாற்றங்களுக்கு உட்படுகிறது; அதாவது உடலானது அப்போது, அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் அவ்வாறு இருக்கிறது. ஆகவே அது மித்யா.
மேலும் ‘நான்’ என்ற அபிமானம் வைக்கும்போதுதான் உடல் செயல்படுகிறது. அபிமானமில்லாத பட்சத்தில் உடல் ஜடமாகிறது(கனவு நிலை). ஆகவே உடல் பரதந்திரம், இனியொன்றை சார்ந்து இருப்பது. மித்யா.
ஆழ்ந்த உறக்கத்திலும் அதை அறிபவனாக, எதையும் சாராமல் சுதந்திரமானவனாக இருப்பதால் ஆத்மாவாகிய ‘நான்’ ஸத்யம்.
மூன்று காலத்திலும் இருப்பதற்கு(ஸத:) இல்லாமை(அபா4வ:) என்பது கிடையாது(ந வித்3யதே). அனுபவத்தில் இருந்தாலும், இல்லாவிடினும் மூன்று காலத்திலும் இருப்பது, இல்லாமல் போகாது. உ. கயிறு-பாம்பு. கயிற்றில் பாம்பை பார்க்கும் முன்னும்(1), பார்க்கும் போதும்(2), அது பாம்பு அல்ல கயிறு என்ற அறிவிற்குப் பின்னும்(3) என மூன்று காலத்திலுமே அது கயிறாகத் தான் இருக்கிறது. அதை ஒருவன் பாம்பாக பார்க்கும் போது (2), அவனுடைய அனுபவத்திற்கு கயிறு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாம்பில் கயிறு இருந்தது. ஒன்றை ஏற்றி வைக்கும் போது அதிஷ்டானம் தெரிவதில்லை.
=>அனாத்மா அஸத்
அனாத்மா நிகழ்காலத்தில் மட்டும் இருப்பதால்(அஸத:) எப்போதும் இருத்தல்( பா4வ:) என்பது கிடையாது(ந வித்3யதே). அது மித்யா. வேகமாக மாறும் ஒன்று மாறாமல் இருப்பது போன்றே காட்சியளிக்கும்; உ. நீரோடை. அதுபோல உலகமும் வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. மாறுவது மூன்று காலத்திலும் இல்லையென்பதால் மித்யா. கயிற்றில் பாம்பை பார்த்து, அப்போது தோன்றிக்கொண்டிருக்கும் பாம்பை ஒருவன் சத்தியமாகவே கருதுகிறான், நாம் இவ்வுலகை நினைப்பதைப் போல.
இந்த ஸ்லோகத்திற்கு சங்கரர் 8 படிகளில் விசாரத்தை மேற்கொள்கிறார்:
(1) குளிர்-வெப்பத்தை கொடுக்கும் இந்த ப்ரபஞ்சம், சுக-துக்கத்தை கொடுக்கும் இந்த உடல் மற்றும் இவற்றிக்கு காரணமாக விளங்கும் அனைத்தும் மித்யா என்ற உறுதிமொழி(ப்ரதிஞா_प्रतिज्ञा) செய்கிறார்.
(2) இதற்கான காரணம்(हेतु _ ஹேது) => மாற்றமடைதல் (विकारत्वम् _ விகாரத்வம்).
* மாயை முதற்கொண்டு அனைத்தும் மாற்றத்தை அடைவதனால் அனைத்தும் மித்யா.
(3) பூர்வ பக்ஷம்(கேள்வி): அனைத்தும் மித்யா எனில் சூன்யவாதம் வருகின்றதே?
(4) நமக்கு வரும் ஒவ்வொரு அறிவிலும் 2 அம்சங்கள் உள்ளது:
(i) அஸத் புத்தி (ii) இருத்தல் எனும் உணர்வு(ஸத் புத்தி)
உ., புத்தகம் + இருக்கிறது(book is), பானை + இருக்கிறது(pot is), மரம் + இருக்கிறது(tree is),
கிளை + இருக்கிறது, இப்படி ஒவ்வொன்றாக பார்க்கும் போது அவற்றை பற்றிய அறிவில் புத்தகம், பானை, மரம், கிளை என மாறினாலும்( அஸத் புத்தி), இருக்கிறது என்ற இருத்தல்(is-ness) புத்தி தொடர்ந்து மாறாமல் தொடர்கிறது(ஸத் புத்தி). இந்த இருத்தல்(ஸத்) ப்ரம்மன். பொருள் நாசம் அடையலாம். இருத்தலுக்கு நாசம் கிடையாது.
(5) கேள்வி:ஒரு பானையை, பார்த்த பின் உடைந்து விட்டால் பானையுடன் இருத்தல் என்ற புத்தியும் சென்றுவிடுமே?
பதில்: பானை உடைந்தாலும், உடனே புத்தகம், மரம், கிளை என மற்ற பொருளை பார்க்கும் போது இருத்தல் எனும் உணர்வு தொடர்கிறது. அஸத் புத்திக்கு(பானைக்கு) தான் நாசம்.
(6) பூர்வ பக்ஷம்(கேள்வி): இந்தப் பானை நாசமடைந்தாலும் இனியொரு பானையை பார்க்கும் போது பானை என்கிற புத்தி(உணர்வு), இருத்தல் என்கிற புத்தியை போல தொடர்ந்து இருக்கிறதே? ஆகவே பானைக்கும் அழிவில்லை; அதுவும் ஸத் என்றாகிவிடுமே?
பதில்: ஒரு பானை உடைந்து இனியொறு பானையைப் பார்க்கும் போது திரும்ப பானை புத்தி வந்தாலும், பிறகு துணி, பேனா என மறுபடியும் பொருட்கள் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. வந்து செல்வது அநித்யமே. தொடர்ந்து இருப்பது தான் நித்யம்.
(7) பூர்வ பக்ஷம்(கேள்வி): பானை உடையும் போது அதற்கான இருத்தல் என்பது தெரியவில்லையே? அதாவது பானை உடைந்ததற்கு பிறகும் ஸத் தொடர்ந்து இருந்தாலும் அது எனக்கு தெரியவில்லையே?
பதில்: ஒரு ஸத்-தை ‘ஸத்’ என அனுபவிக்க நாமரூபம்(name and form) தேவை. நாமரூபமில்லாத நிர்விஷேஷமான ஸத் அனுபவத்திற்கு வராது. அதன் ப்ரதிபிம்பத்தையே பார்க்க முடியும்(Reflective medium is needed to experience sath). உ. கண், வெளிச்சத்தின் ப்ரதிபிம்பத்தை மட்டுமே பார்க்க முடியும். வெளிச்சத்தை அதனால் நேரடியாக பார்க்க இயலாது. வெளிச்சமும் கூட ஒரு பொருள் இருக்கும் பொழுதுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். பொருள் இல்லாத பட்சத்தில் அதை உணரமுடியாது. இரவில் டார்ச் வெளிச்சத்தை வானத்தை நோக்கி காட்டினால், அதன் வெளிச்சத்தை பார்க்க இயலாது. அதுவே ஒரு மரத்தை நோக்கியோ அல்லது சுவரை நோக்கியோ காட்டினால் வெளிச்சத்தை அல்லது வெளிச்சத்தின் ப்ரதிபிம்பத்தை பார்க்கலாம்.
(8) பூர்வ பக்ஷம்(கேள்வி): எப்படி ஒரு இடத்தில் ஸத் மற்றும் அஸத் சேர்ந்து இருக்கும்?ஒரே எண்ணத்தில் ஸத் புத்தி, அஸத் புத்தி எப்படி சேர்ந்து இருக்க முடியும்?
பதில்: சரி தான். ஸத், அஸத் ஒரே இடத்தில் இருக்காது. அத்யந்த அஸத்தும்(3 காலத்திலும் இல்லாதது), ஸத்தும் ஒரே இடத்தில் இருக்காது. ஆனால் மித்யாவான அஸத்-தும், ஸத்தும் ஒரே இடத்தில் இருக்கலாம் - உ. மித்யாவான பாம்பும் சத்தியமான கயிறும் ஒரே இடத்தில் இருப்பதைப் போல. மித்யாவான கானல் நீர் சத்தியமான வறண்ட நிலத்தில் தெரிவதைப் போல.
------------------------------------------------------------------------------------