வியாழன், 17 டிசம்பர், 2020

ஸாங்கிய யோகம் 2.13 - 2.14

।।2.13।। ஆத்மா மாறாதது(நிர்விகார:_निर्विकार: ) [அனாத்மா மாற்றத்துடன் கூடியது]:


देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा

तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र मुह्यति ।। १३

தே3ஹினோऽஸ்மின்யதா2 தே3ஹே கெளமாரம் யெளவனம் ஜரா

ததா2 தே3ஹாந்தரப்ராப்திர்தீ4ரஸ்தத்ர முஹ்யதி ।। 13


यथा   யதா2  எப்படி  देहिन:   தே3ஹின:  உடலை உடையவனுக்கு (ஆத்மாவுக்கு)   

अस्मिन्  देहे  அஸ்மின்  தே3ஹே இவ்வுடலில்  कौमारं  கெளமாரம்  குழந்தைப் பருவம்  

यौवनं   யெளவனம்  இளமைப் பருவம்   जरा  ஜரா  முதுமை  तथा  ததா2  அப்படியே  

देहान्तरप्राप्ति:    தே3ஹாந்தரப்ராப்தி:  வேறு உடலை எடுப்பதும்  तत्र   தத்ர அதைப் பற்றி   

धीर:  தீ4:  தீரன்(ஞானி मुह्यति   முஹ்யதி  மோஹமடைவதில்லை.


ஆத்மாவிற்கு இவ்வுடலில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை உண்டாவதைப் போலவே வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. இவ்விஷயத்தில் தீரன் மோஹமடைவதில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும், இளமையும் மூப்பும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்பும் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.


விளக்கம்:

=> ஜீவன்(உடல், மனம், புலன்களுடன் கூடிய ஆத்மா):

ஜீவன் = ஆத்மா + மனம் + சிதாபாசம்(चिदाभास:)

ஆபாச4: (आभास: ) = அதைப்போல (similar; like that)

சிதாபா4ச: (चिदाभास:) = சித்- தின் ஆபாசம்; reflection of consciousness.

ஆத்மாவின் அறிவு சொரூபம் சூக்ஷமமான மனதில் ப்ரதிபிம்பிக்கிறது. சித்-தின் ஆபாசம்(reflection) நடக்கிறது. ஜடமான மனம் ப்ரகாசித்து, அறியும் தன்மையை அடைகிறது. மரணத்தில் சிதாபாசத்துடன் கூடிய மனம் வெளிக் கிளம்புகிறது. இதையே நாம் உயிர் என்கிறோம்

உயிர் = மனம் + சிதாபாசம்.

* ஆத்மா எல்லா இடத்திலும் இருப்பது. எங்கும் செல்வது கிடையாது.

சிதாபாசம் மனதுக்கும், இவையிரண்டும் சேர்ந்து உடலுக்கும் உணர்வை கொடுக்கின்றது


=> ஞானி கலங்குவதில்லை:

இங்கு பகவான் உடலில் நடக்கும் மூன்று வித மாறுதல்களை குறிப்பிடுகிறார். ஒவ்வொன்றும் மற்ற இரண்டிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. குழந்தை ப்ராயத்திலிருந்து, இளமை பருவத்திற்கு வரும் போதும், முதுமையில் புலன்கள் தேய்ந்து, குரல் நடுங்கிய நிலையிலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள்நான்’- பாதிப்பதில்லை. இளமையில் இருந்தவன் ஒருவன், முதுமையை அடைந்தவன் வேறொருவன் என சொல்லுதல் பொருந்தாது. அதனால் தான் ஒரு முதியவரால் இளமையில் தனது சாதனைகள் குறித்த கதைகளை உற்சாகமாக சொல்லமுடிகிறது. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களிலும் மாறாத நித்ய வஸ்துவாக ஆத்மா இருக்கிறது

ஒரு ஜீவனின் இந்த மூன்று நிலைகளில் எவ்விதம் ஆத்மா மாறாததாக உள்ளதோ அவ்விதமே உடல் மரணித்து வேறு உடல் கிடைக்கும் போதும் அது எவ்வித மாற்றாத்தையும் அடைவதில்லை. எப்படி குழந்தை பருவத்தில் முதல் மூன்று வருடங்கள் ஒருவனுக்கு நினைவில் இருப்பதில்லையோ, அதுபோலவே முற்பிறவிகளில் வேறு உடலில் இருந்ததும் நினைவிலிருப்பதில்லை. நல்ல வேளையாக ஒருவனுக்கு பூர்வ ஜென்ம   ஞாபகம் வருவதில்லை. இல்லையெனில் அந்த நிகழ்வுகளையும் மனதில் வைத்துக் கொண்டு ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டிருப்போம். ஒரு ஜீவனுக்கு, தான் பெற்ற புதிய உடல் புதிய துவக்கத்தை அளிக்கிறது. ஒருகால் முந்தய உடலை சரியாக உபயோகப்படுத்தியிருக்க வில்லையெனில், புதிதாகப் பெற்றதின் உபயோகத்தை மேம்படுத்தலாம்

ஆத்மா என்றும் இருப்பது. உடலின் மாற்றம், காலத்தை கடந்த ஆத்மாவை எதுவும் செய்வதில்லை என்பதை ஞானி அறிகின்றான். ஆகவே மரணத்தை குறித்து அவன் கலங்குவதில்லை.

--------------------------------------------------------------------------------------------------------

।।2.14।। அனாத்மாவை குறித்து துயரப்படத் தேவையில்லை:

मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदु:खदा:

आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत ।। १४

மாத்ராஸ்பர்சா1ஸ்து கௌந்தேய சீ1தோஷ்ணஸுக2து:2தா3:

ஆக3மாபாயினோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா4ரத  ।। 14


कौन्तेय  கௌந்தேய  குந்தியின் புதல்வா  मात्रास्पर्शा:  மாத்ராஸ்பர்சா1:   விஷயங்களுடன் இந்திரியங்கள்(புலன்கள்) சம்பந்தம் வைக்கும் பொழுது   तु  து  நிச்சயமாக   

शीतोष्ण सुखदु:खदा:  சீ1தோஷ்ண ஸுக2து:2தா3:  குளிர்வெப்பம் இன்பம் துன்பம் இவைகளைக் கொடுக்கின்றன  आगम अपायिन:   ஆக3 அபாயின:  தோன்றி மறையும் தன்மையுடையது   

अनित्या:  அநித்யா:  நிலையற்றது  भारत   பா4ரத   பாரதா   तान्   தான்  அவைகளை  तितिक्षस्व  திதிக்ஷஸ்வ  சகித்துக் கொள் 


குந்தியின் மைந்தா, விஷயங்களுடன் புலன்கள் சம்பந்தம் வைக்கும் பொழுது குளிர்வெப்பம் இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும், நிலையாமையும் அவைகளின் இயல்பு. பாரதா அவைகளை பொறுத்துக் கொள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

குந்தியின் மகனேகுளிரையும் வெப்பத்தையும் இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்று மிருப்பனவல்ல. பாரதா அவற்றை பொறுத்துக் கொள்.  


விளக்கம்:

=> சகிப்புத் தன்மை

இந்திரிய விஷயங்கள் மாற்றத்திற்குட்பட்டவை. குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம் இவைகளின் மாற்றத்தை மாற்ற முடியாது. இவ்விதமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத தன்மை துயரத்திற்கு காரணம். சகித்துக் கொள்ளுதல் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

புலன்கள் வெளிவிஷயங்களோடு சம்பந்தம் வைக்கும்போது, இந்த உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் பிரிந்து சுகம் அல்லது துக்கத்தை விளைவிக்கின்றது. இந்த ஸ்தூல உலகம், ஸ்தூலமான இந்த உடலுக்கு சில கஷ்டங்களைக் கொடுக்கலாம். இதை தவிர்க்க இயலாது. கோடை வெப்பம் ஒருவனுக்கு இன்பத்தையும் குளிர்காலம்  துயரத்தையும் கொடுக்கலாம். ஆகவே கோடையே வருடம் முழுதும் நீடிக்க வேண்டும் என நினைக்கலாம். ஆனால் பருவ மாற்றம் இயற்கை நியதி. மேலும் குளிர்காலத்தில் நெருப்பின் அருகாமையை விரும்பும் ஒருவன், கோடையில் அதிலிருந்து விலகிச் செல்கிறான். ஒரே விஷயம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் எதிர்மறையான விளைவை கொடுக்கிறது. எதுவும் நிரந்தரமானது அல்ல. வந்து செல்வது. இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது தோன்றவும், விஷயமாகாத பொழுது மறையவும் செய்கின்றன. ஆகவே இங்கு பகவான், இது போன்ற இருமையின் நியதிகளை புரிந்து கொள், பொறுத்துக் கொள் என்கிறார்.


-----------------------------------------------------------------------------------------