வெள்ளி, 17 அக்டோபர், 2025

தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் 16.7 - 16.8

||16.7|| அசுர இயல்புகளின் விளக்கம் ஆரம்பமாகிறது:

प्रवृत्तिं निवृत्तिं जना विदुरासुरा:

शौचं नापि चाचारो सत्यं तेषु विद्यते ।। ।। 

ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ஜநா விது3ராஸுரா:

செள1சம் நாபி சாசாரோ ஸத்யம் தேஷு வித்3யதே ।। 7 ।।


आसुरा: जना:  ஆஸுரா: ஜநா:  அசுர ஜனங்கள்     

प्रवृत्तिं   ப்ரவ்ருத்திம்   செய்யத் தகுந்த நல்வினையையும்     

निवृत्तिं   நிவ்ருத்திம்   விலக்குதற்கான தீவினையையும்      विदु:  விது3:  அறியார்     

तेषु  தேஷு  அவர்களிடத்து      शौचं विद्यते  செள1சம் வித்3யதே தூய்மையில்லை    

अपि आचार:   அபி ஆசார:  நல்லொழுக்கமும்    सत्यं  ஸத்யம்  வாய்மையும் இல்லை.    


செய்யத் தகுந்த நல்வினையையும், தகாத தீவினையையும், அசுர இயல்புடையார் அறியார். அவர்களிடம் தூய்மையும், நல்லொழுக்கமும் வாய்மையும் இல்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.


விளக்கம்:

ஏழாவது சுலோகம் முதல் பதினெட்டாவது சுலோகம் வரை, அசுர இயல்புடையவர்களின் மனநிலை குறித்தும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் பகவான்.


=> அசுரர்களின் மனநிலை

புலனின்பங்களால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு அசுரனுக்கு, அதாவது அசுர குணங்களை உடையவனுக்கு ப்ரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தி குறித்து தெரிவதில்லை. ‘ப்ரவ்ருத்திஎனில் செய்ய வேண்டியது. ‘நிவ்ருத்திஎனில் செய்யக் கூடாதது. நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. அது பூஜைகள், பிரார்த்தனைகள், செயல்முறைகள் முதலிய வைதிக விஷயமாகவோ அல்லது சமைத்தல், சாப்பிடுதல், தானம் உள்ளிட்ட அன்றாடம் குறித்த லெளகிக விஷயமாகவோ இருக்கலாம். கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத் தகாதது. அது அதர்மம் எனப்படுகிறது

பொதுவாக நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதிலிருந்தே எது சரியானது, எது முறையற்ற நடத்தை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம்மை யாரும் துன்புறுத்தக் கூடாது என விரும்புகிறோம்; எனில் மற்றவர்களை நாம் துன்புறுத்தாமல் இருத்தல் சரியானது. ஆனால் அசுர குணங்களை உடையவர்கள் அதை கண்டுகொள்வது கிடையாது. தனக்கு தோன்றியவாறு நடந்து கொள்கிறார்கள்.  

எது சரி மற்றும் எது தவறு என்கிற விஷயத்தில், சங்கரர் புருஷார்த்தத்தை இணைத்து விளக்கமளிக்கிறார். அர்த்த, காம அல்லது மோக்ஷம் என ஒருவன் எதை விரும்புபவனாக இருந்தாலும், அந்த விரும்பிய முடிவை அடைய எது செய்யப்பட வேண்டும், மற்றும் எது செய்யக் கூடாது என்பதை அசுர இயல்புடையவர்கள் அறிவதில்லை. அல்லது, ஒருகால் அறிந்திருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உதாரணமாக, ஒரு திருடனுக்கு திருடுவது தவறான செயல் என்பது நன்றாகத் தெரியும், ஏனெனில் தன்னிடமிருந்து எதுவும் திருடப்படுவதை அவன் விரும்பப் போவதில்லை. ஆனாலும் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி அதை அவன் செய்கிறான். திருடுதல் தவறு என்பது தெரியும், ஆனால் திருடாமை எனும் பண்பில் அவனுக்கு மதிப்பு இல்லை. அந்த நடத்தை தன் சொந்த நலனுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நல்லதல்ல என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.


=> தூய்மை, வாய்மை இல்லை:

மேலும், மனத்தூய்மை இல்லை செள1சம் வித்3யதே. அதாவது அசுர குணமுடையவர்களுக்கு உள்தூய்மை இருப்பதில்லை. உதாரணமாக, வெறுப்பை தவிர்ப்பது எப்படி, கோபத்தை வெளிக்காட்டாது கடப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. மேலும் பழகுவதிலும், தொடர்பு கொள்வதிலும் சரியான நடத்தையில்லை அபி ஆசார:. அவர்களின் பேச்சில் உண்மை இருப்பதில்லை ஸத்யம். எதார்த்தத்தில், ஒரு பொய்யைச் சொன்னவுடன் அதை அப்படியே விட்டுவிட முடியாது. அந்தப் பொய்யை பாதுகாக்க மேலும் சில பொய்கள் சொல்லப்பட வேண்டியிருக்கும். ஒரு பொய்க்கு கடமைப்பட்டவர்களாக, பல பொய்களுடன் உலவ வேண்டியிருக்கும். எனவே இங்கு சங்கரர் இவர்களை வஞ்சகர்கள் என அழைக்கிறார்

இவ்விதம் அவர்களின் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல; உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல. ஆக, முக்கரணங்களும் அவர்களால் தவறிக் கையாளப்படுகின்றன

ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களிடமிருந்து பின்வரும் விடை வருவதாக அடுத்த சுலோகத்தில் கிருஷ்ணர் கூறுகிறார்

---------------------------------------------------------------------------------------------

||16.8|| தீய குணங்களை உடையவர்களின் கொள்கை:

असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम्

अपरस्परसम्भूतं किमन्यत्कामहैतुकम् ।। ।।

அஸத்யம்ப்ரதிஷ்ட2ம் தே ஜகதா3ஹுரநீச்1வரம்

அபரஸ்பரஸம்பூ4தம் கிமந்யத்காமஹைதுகம் ।। 8 ।।


जगत्  ஜகத்  ஜகத்தானது      असत्यम्  அஸத்யம்  சத்தியமில்லாதது   

अप्रतिष्ठं  அப்ரதிஷ்ட2ம்  தர்மநிலையில்லாதது    अनीश्वरम्  அநீச்1வரம்  கடவுளில்லாதது    

अपरस्पर सम्भूतं  அபரஸ்பர ஸம்பூ4தம்  பெண் ஆண் இணக்கத்தால் ஆனது     

काम-हैतुकम्   காம-ஹைதுகம்  காமத்தை காரணமாகக் கொண்டது     

किम् अन्यत्  கிம் அந்யத்  வேறு என்ன உள்ளது என்று     ते  தே  அவர்கள்    

आहु:  ஆஹு:  பகர்கிறார்கள்.   


உலகம் உண்மையில்லாதது, தர்மபிரதிஷ்டை இல்லாதது, கடவுளில்லாதது, காமத்தை காரணமாகக் கொண்டு ஆண் பெண் இணக்கத்தாலானது அன்றி வேறு என்னவிருக்கிறது என்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.


விளக்கம்:

அசுர இயல்புடையவர்களின் கொள்கை என்னவாக இருக்கிறது என்பதை பகவான் இங்கு கூறுகிறார்.


=> உலகம் பொய்யாலானது

உலகம் சத்தியமில்லாததுஜகத் அஸத்யம், என்ற கருத்துடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பொதுவாகஜகத்எனில் உலகம், இங்கு அது உலகிலுள்ள மக்களைக் குறிக்கிறது. மக்கள் உண்மையானவர்கள் அல்ல என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. அசுர இயல்புடைய அவர்கள் பொய் சொல்லுவதால், மற்றவர்களும் அப்படித்தான் இருப்பதாக நினைக்கிறார்கள். ஏனெனில், ஒருவன் தன்னைப் போலத்தான் அடுத்தவர்களும் இருப்பதாக நினைக்கிறான். உயிர்வாழ்வதற்கு பொய் சொல்வது அவசியம் என்று அவர்கள் நம்புவதால், ‘யார் சிறப்பாகப் பொய் சொல்கிறார்கள் பார்க்கலாம்?’ எனும் விதமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள்


=> நெறிமுறைகளற்றது:

அப்ரதிஷ்ட2ம்எனில் ஆதாரமற்றது, தர்மநிலையில்லாதது என்பது பொருள். அதாவது, இவ்வுலகத்தை தர்மம் காப்பதில்லை; தர்மம்-அதர்மம், புண்ணியம்-பாபம் என எதுவும் கிடையாது என்கிறார்கள். தங்களது நடத்தைக்கு எந்த நெறிமுறை அடிப்படையும் இல்லை என்பதாக அவர்கள் கருதுகிறார்கள். உண்மையில் நமது செயல்கள் தர்மம் மற்றும் அதர்மத்தை அடிப்படையாகக் கொண்டவை. சரியான செயல் விரும்பத்தக்க பலனையும்(புண்ணியம்) மற்றும் முறையற்ற செயல் விரும்பத்தகாத விளைவுகளையும்(பாபம்) ஏற்படுத்தும். ஆனால், இந்த மக்கள் அப்படி நினைக்கவில்லை. ‘ஒருவர் வாழும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும், கடன் வாங்கியேனும் நெய் குடிக்க வேண்டும். சாம்பலாக்கப்பட்ட உடல் எங்கிருந்து திரும்பப் போகிறது?’ என்ற கொள்கையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்பமாக இருக்கும்பொருட்டு எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இத்தகையவர்கள்லோகாயதர்கள்என்று அழைக்கப்படுகிறார்கள். புண்ணியமும் பாபமும் கண்ணுக்குத் தெரியாததாக, அதாவது அதிர்ஷ்ட-பலனாக இருப்பதால், அவர்கள் அதன் இருப்பை நம்புவதில்லை. எனவே தர்ம-அதர்மத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது அவர்களின் கருத்து.  


=> கடவுளில்லை:

தர்ம-அதர்ம நியதியை ஏற்றுக் கொள்ளும்போதே, அதைக் காப்பவன் ஒருவன் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த பிரபஞ்சம் ஒரு நியதியின் அடிப்படையில் செயல்படுகிறது என்றும், தர்மம் மற்றும் அதர்மத்தின்படி செயல்களின் முடிவுகளைத் தரும் ஒரு கடவுள் இருக்கிறார் என்றும் ஒப்புக்கொள்ள முடியும். அசுர-சம்பத்தையுடைய இந்த மக்களுக்கு அத்தகைய கடவுள் இல்லைஅநீச்1வரம். ‘கடவுள்என்பது அவர்களின் தத்துவத்திற்கு விரோதமானது


=> எனில் உலகம் எப்படிச் சாத்தியம்?

தர்ம-அதர்மம், புண்ணிய-பாபம் இல்லையென்றால், மக்கள் எப்படிப் பிறக்கிறார்கள்? இவ்வுலகம் காமத்தைக் காரணமாகக் கொண்டு ஆண் பெண் இணக்கத்தாலானது, காம-ஹைதுகம் அபரஸ்பர ஸம்பூ4தம், என்கின்றனர். அவர்களின் கருத்துப்படி, மரபியல் மட்டுமே காரணம். அந்த குறிப்பிட்ட பெற்றோருக்கு பிறக்கக் காரணமான புண்ணிய-பாபத்தைப் பற்றி எந்த கருத்தும் அவர்களுக்கு இல்லை. இவை அனைத்தும் இயற்கையான தேர்வு. காமம்தான் இவ்வுலகிற்கு காரணம்; ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதால் மட்டுமே அனைத்தும் உருவாவதாக நினைப்பதால், அவர்கள் காமத்தை விட வேறு என்ன காரணம் இருக்கமுடியும் என்பதாக தங்களது கருத்தை நியாயப்படுத்துகிறார்கள்

தர்ம-அதர்மம் அல்லது புண்ணிய-பாபம் இல்லாத இடத்தில், கணக்கில் எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை. எனவே முடிந்தவரை விரைவாகவும் முடிந்தவரை அதிகமாகவும் அடைதலே இந்த தத்துவத்தை உடையவர்களுக்கு நோக்கமாக இருக்கிறது. விரும்பியதை அடைவதில் தர்மத்தை பற்றிப் பேசி தேவையில்லாமல் நேரத்தை வீணாக்க முடியாது. ‘தகுதியானவர்கள் வாழலாம்என்பது நடைமுறையிலுள்ள சட்டம் என்றும், மேலும் நன்கு ஏமாற்றுபவர்களும் நன்கு சூழ்ச்சி செய்பவர்களுமே மிகவும் தகுதியானவர்கள் என்றும் நினைக்கிறார்கள். இதுவே அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாக இருக்கிறது.

சத்தியமும், தர்மமும், ஈஷ்வரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடக்காது என்பது ஆஸ்திகர்களின் கொள்கை. ஆனால் லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சமயானுஷ்டானத்தில் வெறுப்புக் கொள்வதிலிருந்து ஒருவனை லெளகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்மஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லெளகிகனாவான்.

---------------------------------------------------------------------------------------------