||16.3|| தெய்வீக இயல்புகளின் பட்டியலை நிறைவு செய்கிறார்:
तेज: क्षमा धृति: शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत ।। ३ ।।
தேஜ: க்ஷமா த்4ருதி: செள1சமத்3ரோஹோ நாதிமாநிதா ।
ப4வந்தி ஸம்பத3ம் தை3வீமபி4ஜாதஸ்ய பா4ரத ।। 3 ।।
तेजस् தேஜஸ் திறமை क्षमा க்ஷமா பொறை धृति: த்4ருதி: உறுதி
शौचम् செள1சம் தூய்மை अद्रोह: அத்3ரோஹ: வஞ்சகமின்மை
न अतिमानिता ந அதிமாநிதா செருக்கின்மை (ஆகிய இவைகள்)
दैवीम् सम्पदं தை3வீம் ஸம்பத3ம் தெய்வ சம்பத்துடன் अभिजातस्य அபி4ஜாதஸ்ய பிறந்தவனுக்கு भवन्ति ப4வந்தி இயல்பாகின்றன भारत பா4ரத அர்ஜுனா.
திறமை, பொறை, உறுதி, தூய்மை, வஞ்சகமின்மை செருக்கின்மை ஆகிய இவைகள் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன அர்ஜுனா.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை — இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!
விளக்கம்:
தெய்வ சம்பத்துடன் பிறந்தவனது இயல்புகள் அல்லது ஒரு சாதகன் அடைய வேண்டிய பண்புகளின் பட்டியலை இந்த சுலோகத்தில் நிறைவு செய்கிறார் பகவான்.
=> [21] திறமை:
‘தேஜஸ்’ என்பதன் நேரடிப் பொருள் ஒளி ஆகும். இது சருமத்தின் பளபளப்பை குறிக்கவில்லை மாறாக, புத்தியின் ஒளியை அதாவது புத்திசாலித்தனத்தை, திறமையுடன் இருத்தலைக் குறிக்கிறது. தன்னம்பிக்கையுடன் கடினமான சவால்களை எதிர்கொள்ளும் திறன் என்று சங்கரர் இதை வரையறுக்கிறார். சத்வத்தின் துணையுடன் ரஜஸில் இருந்து விரைவான முடிவுகளை எடுத்தல், முடிவில் உறுதியாக இருத்தல், அதை செயல்படுத்தலில் திறமையுடன் இருத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
=> [22] பொறுமை:
‘க்ஷமா’ என்பது பொறுமையாக இருத்தலை, மன்னித்தலைக் குறிக்கிறது. பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத் தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதும், அதை மறந்து விடுவதும் க்ஷமை என்று பெயர். அவர்களின் நடத்தையினால் நம்முள் எந்தவித மாற்றமும் அல்லது கோபமான எந்த எதிர்வினையும் ஏற்படவில்லையெனில், அச்செயலை நாம் உள்வாங்காமல் அந்த நபரை அவராகவே இருக்க அனுமதித்துள்ளோம் என்று பொருள். இது மற்றவரை புரிந்துகொள்ள நம்மை அனுமதிக்கிறது. ஒரு நபர் அவர் இருக்கும் நிலையிலேயே இருக்க அனுமதிக்கவில்லையெனில், அவரைப் புரிந்துகொள்ள எந்த வழியும் இல்லாமல் போகிறது. இனியொரு நபரைப் புரிந்துகொண்டதாக உணர வைப்பது எளிதான விஷயமும் அல்ல. அதற்கு நிறைய க்ஷமை தேவை.
ஒருவரை மன்னிப்பதனால் நமது குரோதம், தீய குணம் மற்றும் கோபம் முதலியவைகள் நீங்கும். நாம் மனிதர்களை எவ்வளவு வெறுக்கிறோமோ அந்த அளவு இறைவனிடமிருந்து விலகியுள்ளோம்.
தீங்கு செய்பவர்களிடம் இருக்கின்ற அறியாமையைப் பார்க்கின்ற அறிவு நம்மிடம் இருக்கும்போது அவர்களை மன்னித்துவிடுவோம். அல்லது அவர்களின் இயலாமையை, உதவியற்ற தன்மையை பார்க்கும்போதும் மன்னித்தல் சாத்தியப்படுகிறது.
மற்றவர்களின் தவறான நடத்தையினால் நமக்கு துயரம் ஏற்படும்போது, நம்மை பக்குவப்படுத்த பகவான் அளிக்கும் பிரசாதம் இது என எடுத்துக் கொள்ளலாம். அதற்கு அவர்கள் வெறும் கருவிகளாக மட்டுமே இருக்கின்றனர் எனும் பான்மை பொறுமையை, மன்னித்தலை வளர்க்கிறது.
=> [23] உறுதி:
‘த்4ருதி’ எனில் மனவுறுதியை, ஏற்றுக்கொண்ட லக்ஷியத்தில் இருக்கின்ற தீர்மானத்தைக் குறிக்கிறது. லக்ஷியத்தை(சாத்4யம்) தீர்மானிப்பது புத்தி(விக்ஞானமய கோஷம்); அதை அடைய தேவையானதைச் செய்ய வேண்டியது மனம்(மனோமய கோஷம்). எனவே மனவுறுதி முக்கியமான பண்பு ஆகும். எவ்வளவு தடைகள் வந்தாலும் அது உறுதியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
* மனவுறுதிக்கு இருக்கின்ற இருவித தடைகள்: (1) துன்பங்கள், (2) இன்பங்கள். எந்த இன்பமும் எந்த துன்பமும் எனது முடிவை மாற்றாது எனும் உறுதி இருத்தல் வேண்டும்.
* உறுதியை பாதுகாக்கும் அல்லது வளர்க்கும் உபாயம்:
(1) ஆரம்ப காலத்தில், சுலபமாக அடைய முடிவதை இலக்காக நிர்ணயிக்கலாம். இதில் வரும் தடைகளை நம்மால் எளிதில் வெல்ல முடிவதால் இலக்கு கண்டிப்பாக அடையப்படுவதாக ஆகிறது. வெற்றி எப்போதுமே உற்சாகத்தையும் உந்துதலையும் கொடுக்கும். இவ்வகையில் மனவுறுதியை திடப்படுத்தலாம்.
(2) தடைகள் மற்றும் கஷ்டங்களிலிருந்து ஓடாமல், அதை ஏற்றுக் கொள்ள கற்க வேண்டும். அதன் மூலமாகத்தான் இலக்கை அடைய முடியும். ஒருகால், வேறுமாதிரி செய்திருந்தால் இந்த கஷ்டமோ அல்லது தடையோ வந்திருக்க வாய்ப்பில்லை என்கிற எண்ணம் வேண்டாம். ஏனெனில் வேறுமாதிரியான செயல் வேறுமாதிரியான கடினத்தை கொடுத்திருக்கலாம். ஆகவே வருவதை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தடையோ அல்லது கடினங்களோ இல்லாமல் ஒன்றை அடைய முடியாது; அவ்வாறு அடைந்தால் அது எளிதில் நம்மை விட்டுச் சென்றுவிடும்.
(3) பொறுமை மிக அவசியம்.
(4) நமது லக்ஷியத்தின் தேவையை உணர்தல்; அதன் பலனைப் பார்த்தல்.
(5) நமது உறுதியை பாதுகாக்கும் சூழ்நிலையை உருவாக்குதல்.
(6) நம் பலகீனத்தை கண்டறிதல்.
பொதுவாக ‘த்4ருதி’ என்பது மன உறுதி என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் இங்கே சங்கரர் இனியொரு வரையரையை அளிக்கிறார். நோய், வயது அல்லது ஏதேனும் குறைபாட்டால், ஒருவனின் உடல் மற்றும் புலனுறுப்புகள் சோர்வாகவோ அல்லது வலியில் இருக்கும்போதோ, அவ்வலியைப் பொருட்படுத்தாத மனப்பான்மையையே ‘த்4ருதி’ என்று அழைக்கிறோம் என்கிறார். முனகல் வெளிப்பாடுகளுக்கு அடிபணியாமல், வலி இருந்தாலும் அதை மகிழ்ச்சியோடு பொறுத்துக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் திறன் இங்கு பேசப்படுகிறது.
=> [24] தூய்மை:
‘செள1சம்’ எனில் தூய்மையைக் குறிக்கிறது. இது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை என இரு வகைப்படும். உடல், உடை மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் புறத்தூய்மையாகும். இது ஒரு முக்கியமான பண்பு ஏனெனில் இது ஆரோக்கியமான மனநிலையை உருவாக்க உதவுகிறது. வெறுப்பு, கோபம், பகை உள்ளிட்ட உணர்வுகளால் தாக்கப்படாத மனநிலை அகத்தூய்மையைக் குறிக்கிறது. தொந்தரவு தருகிற இப்படிப்பட்ட உணர்வுகள், மனதில் வருவதை கண்டறியும்போதெல்லாம் அதற்கு எதிர்மாறான உணர்வுகளைக் கொண்டுவருதல் மூலம் இதை நடுநிலையாக்கலாம். இதை ‘ப்ரதிபக்ஷ-பா4வநா’ என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். மனதில் பகையுணர்வு உண்டாகும்போது அங்கு புரிதலுணர்வு, அல்லது நட்புணர்வை கொண்டு வரவேண்டும். வெறுப்பு இருந்தால் அதை ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு, அங்கு அன்பு அல்லது இரக்கம் எனும் உணர்வை எழுப்பலாம். இவ்விதம் கவனத்துடன் செய்கின்ற பயிற்சியினால் மனமானது சாத்விகமாக ஆகிறது. பிரார்த்தனைகள், ஜபம் மற்றும் தியானம் முதலியவைகள் அகத்தூய்மைக்கான மற்ற சில வழிகளாக உள்ளன. இவைகளில் சரணடைதல் என்பது நடைபெறுவதால் இவையனைத்தும் மனதை சுத்திகரிக்கும் செயல்கள் ஆகின்றன.
=> [25] வஞ்சகமின்மை:
பிறருக்கு தீங்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகாதிருத்தல் ‘அத்3ரோஹ’ அல்லது வஞ்சகமின்மையாகிறது. மற்றவர்களை ஏமாற்றாமல் இருத்தலும் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுதலும் இதில் அடங்கும்.
=> [26] செருக்கின்மை:
பிறர் தன்னை மிக மதிக்கவேண்டும் என்று நினைப்பது ‘அதிமாநிதா’ அல்லது செருக்கு ஆகும். இத்தகைய மனப்பான்மை இல்லாதிருத்தல் ‘ந அதிமாநிதா’ எனப்படும். தன்னை உயர்வாக எண்ணாதிருத்தலும் இதில் அடங்கும். நற்பண்புகளை அடைய அடைய நம்மையறியாமல் நம்மை மேலாகவும், மற்றவர்களைக் கீழாகவும் பார்க்கின்ற மனப்பான்மை வர வாய்ப்புள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இதை நாம் கண்காணிக்க வேண்டும். அப்படி எழுகிற எண்ணங்களை ஆரம்பத்திலேயே கலைய வேண்டும்.
இவ்விதம் ‘அபயம்’ எனும் பண்பில் ஆரம்பித்து இந்த மூன்று சுலோகங்களிலும் கூறப்பட்ட அனைத்து குணங்களும் தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பாகின்றன — தை3வீம் ஸம்பத3ம் அபி4ஜாதஸ்ய ப4வந்தி, என்கிறார் பகவான். இத்துடன் அவர் நற்குணங்களின் பட்டியலை முடிக்கிறார். இத்தகைய பண்புகளுடன் சாதகன் ஒருவன் வேதாந்த-பிரமாணத்தை அணுகும்போது, அவன் நிச்சயமாக ஆத்ம-ஞானத்தை அடைகிறான்; சம்சாரத்திலிருந்து விடுபட்டதாக தனது சுய-சொரூபத்தை அறிகிறான்.
ஒவ்வொருவரும் பிறக்கும்போதே சில குறிப்பிட்ட சுபாவங்களுடன் பிறக்கிறோம். உடலைப் போலவே மனமும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதால் நாம் சில சம்ஸ்காரங்களுடன் சேர்ந்தே பிறக்கிறோம். ஒரு சில குணங்கள் நாம் வளர்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து வந்தமையும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் பலம் மற்றும் பலகீனம் இருக்கும். சிலருக்கு தானம் முதலிய பண்புகள் இயல்பாக இருக்கும், வேறு சிலருக்கோ அது முயற்சி செய்து அடைய வேண்டிய பண்பாக ஆகும். எனவே அவரவர்களின் தனித்தன்மையைப் பொறுத்து, ஒரு சில நற்குணங்களை அடைய அதிக முயற்சியைக் கொடுக்க வேண்டியதிருக்கும். எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் மனதை தகுதிப்படுத்தும் இந்த பயணத்தை உறுதியுடன் மேற்கொள்ளுதல் இன்றியமையாதது.
இப்போது கிருஷ்ணர் அசுர-சம்பதத்தின் விளக்கத்தைத் தொடங்குகிறார். முதலில் சுருக்கமாக ஆரம்பித்து பின்னர் விரிவாக விளக்க இருக்கிறார். எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வதற்காக இந்தப் பண்புகள் இங்கே கூறப்பட்டுள்ளன. எதிர்மறையைத் தவிர்ப்பதில், நேர்மறையும் வளர்க்கப்படுகிறது என்பதே இதன் கருத்து.
---------------------------------------------------------------------------------------------
||16.4|| அசுர குணங்கள்:
दम्भो दर्पोऽभिमानश्च क्रोध: पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् ।। ४ ।।
த3ம்போ4 த3ர்போऽபி4மாநச்1ச க்ரோத4: பாருஷ்யமேவ ச ।
அக்ஞாநம் சாபி4ஜாதஸ்ய பார்த2 ஸம்பத3மாஸுரீம் ।। 4 ।।
पार्थ பார்த2 ஓ பார்த்தா दम्भ: த3ம்ப4: பகட்டு दर्प: த3ர்ப: இறுமாப்பு
अभिमान: च அபி4மாந: ச தற்பெருமையும் क्रोध: க்ரோத4: சினம்
पारुष्यम् एव च பாருஷ்யம் ஏவ ச கடுமையும் अज्ञानं च அக்ஞாநம் ச அக்ஞானமும்
आसुरीम् सम्पदम् ஆஸுரீம் ஸம்பத3ம் அசுர சம்பத்தை
अभिजातस्य அபி4ஜாதஸ்ய (கொண்டு) பிறந்தவனுக்கு (உண்டு).
பார்த்தா! பகட்டும் இறுமாப்பும், தற்பெருமையும் சினமும் கடுமையும், அக்ஞானமும் அசுர சம்பத்தை உடையவனாய் பிறந்தவனுக்குண்டு.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் — இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான் ஆறு அசுர குணங்களைக் கூறுகிறார்.
=> அசுர குணங்கள்:
‘ஆஸுரீ’ எனில் அசுரனுக்குச் சொந்தமானது என்று பொருள். நமது புராணங்கள் அனைத்தும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான வாக்குவாதங்களாலும் போரினாலும் நிரம்பியுள்ளன. உண்மையில் அவைகள் நம் ஒவ்வொருவரின் மனதினுள்ளும் நிகழ்கின்ற உள் மோதல்களைக் குறிக்கின்றன. அனைவருக்குள்ளும் தேவனின் குணங்களும் இருக்கின்றது, அசுரனின் குணங்களும் இருக்கின்றது. ஒருவனை கெட்டவன் என்பதாக அல்லாமல், அவனது சிந்தனை தவறாக இருப்பதையே இந்த அசுர குணங்கள் காட்டுகின்றன. அனைத்து மோதல்களும் முதலில் உள்ளே நிகழ்ந்து, பின்னர் புற உலகில் தங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த மோதல்கள் உள்ளே எழும்போதே, சரியான விசாரணையுடன் அவைகளைத் தீர்க்கமுடியும். அந்தத் தீர்வு காணும் திறன் இல்லாவிட்டாலோ, அல்லது சுற்றியுள்ள மக்கள் தீர்வுக்கு உதவாமல் மோதலைத் தூண்டினாலோ, ஒரு போர் வெடிக்கும்.
இப்போது அர்ஜுனன் எதிர்கொண்டுள்ள இந்த மஹாபாரதப் போரும்கூட இந்த அசுர குணங்களால் உருவானதே என்பதால் கிருஷ்ணர் இங்கே அசுர-சம்பத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமானது. துரியோதனனின் தவறான சிந்தனையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம், அது இங்கே அசுர-சம்பத் என்று அழைக்கப்படுகிறது. தவறாக சிந்திக்கும் நிகழ்வைத் தவிர்ப்பது என்பது இயலாதது; ஏனெனில் அது இயற்கையானது. ஆனால் அவைகள் புறவுலகை அடையாதபடி அவற்றை உள்ளுக்குள் தீர்ப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
=> அசுர-குணங்களை பற்றி கற்கும்போது இருக்கவேண்டிய மனபாங்கு:
* அசுர குணங்களில் சில நம்மிடமும் இருக்கின்றன என இதை கற்கும்போது தெரிய வரலாம். அப்போது, குற்ற உணர்வு மற்றும் வெறுப்பு வராதவாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது. இருப்பதை எவ்விதம் மாற்றுவது என்பதில்தான் அதிக கவனம் இருக்கவேண்டும்.
* அதே சமயத்தில் அந்த தீய குணங்களை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது. அந்த பலகீனங்களை சுய-நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவேண்டும்.
* தீய குணங்களை நம்மால் மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை இருக்கவேண்டும்.
* மேலும் இந்த அறிவை தன்னை அளவிடுவதற்காக உபயோகிக்க வேண்டுமே தவிர, மற்றவர்களின் குணங்களை இதைக் கொண்டு அளவிடக் கூடாது.
இனி நாம் அசுர குணங்களைப் பற்றிய விசாரணையைத் தொடங்கலாம்.
=> பகட்டு:
‘த3ம்ப4’ எனில் தம்பம், பகட்டைக் குறிக்கிறது. பேச்சு மொழியில் இதை நாம் ‘பந்தா’ எனக் கூறுவோம். ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக் கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக் கொண்டு தன்னை மிகைப்பட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தர்மம் போன்றவற்றில் இருக்கின்ற பாசாங்கு என சங்கரர் இதை கூறுகிறார். இக்குணத்தை உடையவன், பெரிய தர்மவானாக, தானம் செய்பவனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறான். மற்றவர்களின் நலனுக்காக அல்லாமல், தனது சொந்த அங்கீகாரத்திற்காக உன்னதமானச் செயல்களைச் செய்கிறான். உதாரணமாக, தானம் செய்வதில் அவனது நோக்கம் தர்மம் அல்ல, மாறாக தனது சொந்த பிம்பத்தை உருவாக்குவதாகும். உண்மையில் அவன் தானம் செய்யவில்லை, ஆனால் சுய விளம்பரத்திற்காக பணத்தை முதலீடு செய்கிறான் அவ்வளவே. இவ்விதம் தன்னிடம் இருக்கின்ற அல்லது இல்லாத குணங்களை தனது சொந்த மஹிமைகளாக பறைசாற்றுவது தம்பம் என்றழைக்கப்படுகிறது.
=> இறுமாப்பு:
‘த3ர்ப’ எனில் இருமாப்பு, திமிர் அல்லது பெருமிதம் கொள்ளுதல். தன்னிடமுள்ள சில திறமை அல்லது அறிவு, அல்லது பரம்பரையாகவோ, ஈட்டியதாலோ அடையப்பட்ட சில செல்வங்கள், அல்லது ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்ததாலோ, அல்லது அடையப்பெற்ற பல விஷயங்களில் ஏதேனும் ஒன்றினாலோ, கர்வத்துடன் நடந்து கொள்ளுதல் இருமாப்பு ஆகும்.
=> தற்பெருமை:
‘அபி4மாந’ எனில் தற்பெருமை, கர்வம் ஆகும். தனக்கு கல்வியும், செல்வமும் அல்லது குலமும் மிக நன்றானதாக வாய்த்திருப்பதாக, மனதிற்குள் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுதல் கர்வமாக வெளிப்படுகிறது.
=> சினம்:
‘க்ரோத4’ எனில் கோபம். எதையும் சாதிக்க முடியாத ஒருவனுக்கு அவனது ஏமாற்றத்திலிருந்து ஒரு வேதனை பிறக்கிறது. இந்த வேதனை சினமாக மாறக்கூடும். கோபத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவன், என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி தனக்குத் தெரிந்த அனைத்தையும் மறந்துவிடுகிறான். இதனால் ஏற்கனவே மோசமான விளைவுகளை ஏற்படுத்திய அதே செயல்களை அவன் மீண்டும் செய்கிறான். கோபமான நடத்தை தனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அழிவுகரமானது. இது குறித்து விரிவாக ஏற்கனவே நாம் இந்த அத்தியாயத்தின் இரண்டாவது(16.2) சுலோகத்தில் பார்த்துள்ளோம்.
=> கடுமை:
‘பாருஷ்யம்’ என்பது தெய்வீக-குணங்களில் நாம் பார்த்த மென்மையாகப் பேசுதல் ‘மார்த3வம்’ எனும் பண்புக்கு எதிரானது. அதாவது, இது கடுமையாகப் பேசுதலைக் குறிக்கிறது. மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்தில் பேசுதல், குறிப்பாக கிண்டலும் கேலியுமாக பரிகாசித்தலைக் குறிக்கிறது. அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும், படிப்பறியாதவனை மேதை என்றும் கிண்டலாக விமர்சிப்பது குறிப்பிட்டவர்களைக் காயப்படுத்துகிறது. மற்றவர்களை புண்படுத்துவதில் எந்த கூச்சமும் இல்லாமல் வார்த்தைகளைப் பயன்படுத்துவது ‘பாருஷ்யம்’ ஆகும். அதனால்தான் பிரார்த்தனை மந்திரத்தில், ‘ஜிஹ்வா மே மது4மத்தமா - என் நாக்கு (பேச்சு) மிகவும் இனிமையாக இருக்கட்டும்’ எனக் கூறப்படுகிறது.
=> அறியாமை:
‘அக்ஞாநம்’ எனில் அறியாமை ஆகும். குறிப்பாக தர்மம்-அதர்மம், அதாவது எது சரி-எது தவறு என்பது பற்றிய சரியான பகுத்தறிவு இல்லாத நிலையை இது குறிக்கிறது. சில சமயங்களில் அறியாமை ஒரு பிரச்சனையல்ல, ஆனால் சரி-தவறு போன்றவற்றில் இருக்கின்ற அபத்தமான வரையறைகள் அழிவை உண்டாக்குகிறது. உதாரணமாக நேர்மையற்ற வணிகமுறைகளை, நடைமுறை வணிகம் என நியாயப்படுத்துவதைக் கூறலாம். இதைத்தான் நாம் தார்மீகச் சிதைவு என்று அழைக்கிறோம். செல்வம் பாதுகாப்பை வழங்கும் என்ற தவறான முடிவின் அடிப்படையில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உண்டாகிற அழுத்தம்தான் இதற்குக் காரணம். இதனால் ஒருவன் தன்னையறியாமல் தான் தவிர்க்க விரும்பும் விஷயங்களைச் செய்வது மட்டுமல்லாமல், ‘அப்படி இருந்தால்தான் பிழைப்பு நடத்த முடியும்’ என்றெல்லாம் அச்செயலிலிருந்து ஒரு தத்துவத்தை உருவாக்குகிறான். இதுவே ‘அக்ஞாநம்’ என்றழைக்கப்படுகிறது. ஒன்றிற்கு அதற்கு இல்லாத மதிப்பை காரணமாகக் காட்டுகிற தவறான குணத்தை இந்த அறியாமை உண்டாக்குகிறது. பாதுகாப்பு இல்லாத இடத்தில் பாதுகாப்பை காண்பது, பணம் பாதுகாப்பை கொடுக்கும் என்கிற எண்ணம், பதவி நிம்மதியை அளிக்கும் எனும் கருத்து, இவ்விதம் ஒன்றினுடைய மதிப்பின் மீது இருக்கின்ற குழப்பம், அவனுக்கு தர்ம-அதர்ம விஷயத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிடுகிறது.
மேற்சொல்லப்பட்ட குணங்கள் அனைத்தும் அசுர-சம்பத்தை உடையவனாய்ப் பிறந்தவனது குணங்கள் ஆகும்.
அடுத்த சுலோகத்தில் தெய்வ-சம்பத் மற்றும் அசுர சம்பத்தை உடையவனது இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் என்ன என்பதைக் கூறுகிறார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.
---------------------------------------------------------------------------------------------