சனி, 11 அக்டோபர், 2025

தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம் 16.5 - 16.6

||16.5|| இரு இயல்புகளுக்குரிய விளைவுகள்:

दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता

मा शुच: सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव ।। ।।     

தை3வீ ஸம்பத்3விமோக்ஷாய நிப3ந்தா4யாஸுரீ மதா

மா சு1: ஸம்பத3ம் தை3வீமபி4ஜாதோ ஸி பாண்ட3 ।। 5 ।।


दैवी सम्पत्  தை3வீ ஸம்பத்  தெய்வ சம்பத்தானது       विमोक्षाय  விமோக்ஷாய  மோக்ஷத்தின் பொருட்டு      आसुरी  ஆஸுரீ  அசுர சம்பத்து         निबन्धाय  நிப3ந்தா4  பந்தத்தின் பொருட்டு என்று        मता  மதா  கருதப்படுகிறது       पाण्डव  பாண்ட3  பாண்டவா      

मा शुच:  மா சு1:  வருந்தாதே      दैवीं सम्पदं  தை3வீம் ஸம்பத3ம்  தெய்வ சம்பத்தை       अभिजात: असि  அபி4ஜாத: அஸி  பெற்றுப் பிறந்தவனாக இருக்கிறாய்.


தெய்வீக குணங்கள் மோக்ஷம் தருவதென்றும், அசுர குணங்கள் பந்தப்படுத்துவதென்றும் கருதப்படுகின்றன. பாண்டவா, வருந்தாதே; நீ தெய்வ சம்பத்து வாய்த்துப் பிறந்துள்ளாய்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தெமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.


விளக்கம்:

மேலே விவாதிக்கப்பட்ட இந்த இரு வகையான இயல்புகளின் பிரயோஜனங்கள் யாது என்கிற கேள்விக்கு விடையாக பகவான் இந்த சுலோகத்தை அளிக்கிறார்


=> தெய்வீக குணங்களின் பலன்:

தெய்வீக குணங்கள் ஒருவனை மோக்ஷத்தில் கொண்டுவிடும்தை3வீ ஸம்பத் விமோக்ஷாய, என்கிறார் கிருஷ்ணர். இங்குவிமோக்ஷாயஎன்பதிலுள்ளவிஎனும் முன்னொட்டு, வலியுறுத்திக் கூறுவதற்காக உள்ளது. தெய்வீக-சம்பத்தை அடைந்தவன் தன்னை விடுவித்துக் கொள்கிறான் என்கிறார். எதிலிருந்து? யாரும் விரும்பத்தக்க ஒன்றிலிருந்து விடுபட விரும்புவதில்லை. எங்கோ அடிமைத்தனம் இருக்கும்போதுதான் அங்கே விடுதலையும் தேவைப்படுகிறது. அப்படியெனில் அந்த அடிமைத்தனம் என்பது என்ன? அது உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருக்கலாம்; தன்னால் விட்டுவிடமுடியாத விஷயங்களாக அவைகள் இருக்கின்றன. அவன் அவற்றை வைத்திருப்பதாக நினைத்தாலும், உண்மையில் அவைகள்தான் அவனை வைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் சாதாரணமாக அவற்றை வைத்திருந்தது போய், காலப்போக்கில், அவைகள் அவனை பிடித்துக் கொள்ளத் தொடங்குகின்றன.

நாம் தேடும் விடுதலை என்பது அசல் அடிமைத்தனத்திலிருந்து வந்தது, அதாவதுநான் விருப்பங்கள் கொண்டவன்; நான் வரம்புக்குட்பட்டவன்; நான் மரணத்திற்குரியவன்; நான் ஈஷ்வரனிலிருந்து வேறானவன்என்கிற கருத்திலிருந்து உருவானது. உண்மையில், சொந்த உடல், மனம் மற்றும் புலன்கள் உட்பட இந்த முழு உலகமும் ஒருவனை பிணைக்க முடியாது. ஒருவன் தன்னை ஏதாவதிலிருந்து வேறுபட்டவனாகக் காணும் தருணத்தில், பயமும் அடிமைத்தன உணர்வும் ஏற்படுகிறது. இத்தகைய பிரிவினையைக் காணாதவன் பயத்திலிருந்து மட்டுமல்ல, எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவனாக ஆகிறான். நாம் இங்கே தேடும் மோக்ஷம் என்பது, சம்ஸாரத்திற்குள் கிடைக்கின்ற சிறிது காலம் மட்டுமே நீடிக்கிற எந்தவொரு ஒப்பீட்டு அளவிலான மோக்ஷமும் அல்ல, மாறாக சம்ஸாரத்திலிருந்தே வரும் மோக்ஷம் ஆகும். இத்தகைய மோக்ஷத்திற்கு ஆதாரமாக இருப்பது இந்த தெய்வீக குணங்கள் ஆகும்.

மற்றவர்களை துன்புறுத்தாத குணங்களாக தெய்வீக சம்பத் இருப்பதால், இது நமக்கு சத்வ குணத்தைக் கொடுக்கிறது. சத்வ குணம் நம்மை சிரவணத்திற்கு தகுதிப்படுத்துகிறது. உதாரணமாக, அஹிம்சை எனும் குணத்தை எடுத்துக்கொண்டால், அது புண்ணியத்தை உண்டாக்கி மனத்தூய்மையைக் கொடுக்கிறது. இதனால் ஒருவன் அதிகாரித்துவத்தை அடைந்து விசாரம் செய்யும் தகுதியை அடைகிறான். விசாரம் அவனுக்கு ஞானத்தைக் கொடுக்கிறது. தொடர்முயற்சி அவனுக்கு ஞான நிஷ்டையை, அதாவது மோக்ஷத்தை அளிக்கிறது. ஞான நிஷ்டைக்குப் பின் இந்த தெய்வீக குணங்கள் அவனது இயல்பாகவே மாறிவிடும். எனவே விடுதலைக்கான வழி

நற்குணங்கள் —> அதிகாரித்துவம் —> விசாரம் —> ஞானம் —> மோக்ஷம்.

=> அசுர குணங்களின் பலன்:

அசுர குணங்கள் பந்தத்தில் கொண்டு சேர்க்கும்ஆஸுரீ நிப3ந்தா4, என்கிறார் பகவான். உண்மையில் இவை பந்தத்தை உருவாக்குவதில்லை, ஏனெனில்நாம் பந்தப்பட்டுள்ளோம்என்ற எண்ணம் ஏற்கனவே இருப்பதாக உள்ளது. ஆனால் அசுர குணங்களினால் இந்த பந்தம் நிலைநிற்பதாக ஆகிறது. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாகவும், அசுர இயல்பு பிறப்பு இறப்புக்கு காரணமான பந்தத்தை பலப்படுத்துவதாகவும் உள்ளது

=> அர்ஜுனனின் சந்தேகம்:

இவ்வகை பிரிவுகளைப் பற்றி தெரியவரும்போது, மக்கள் பொதுவாக தாங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று யோசிப்பது வழக்கம். இந்த சுய-மதிப்பீடு என்பது நமது இயல்பான தன்மை ஆகும். ஒருகால் அர்ஜுனனும் இப்படி இருந்திருக்கலாம். நம்மை நாம் ஆராயும்போது, நமக்குள் சில தெய்வீக சம்பத்துகளும் சில அசுர-சம்பத்துகளும் இருப்பதைக் காண்கிறோம். இதற்கு அர்ஜுனனும் விதிவிலக்கல்ல. தன்னிடமுள்ள இயல்பு எத்தகையதோ என அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். எனவே அர்ஜுனன் தனது தகுதிகள் குறித்து எந்த சந்தேகத்தையும் கொள்ளக் கூடாது என்று கிருஷ்ணர் விரும்புகிறார். ஆகையினால் அவனை ஆறுதல்படுத்தும் விதமாக, ‘வருந்தாதே, நீ தெய்வ சம்பத்துடன் பிறந்துள்ளாய்என்கிறார். அவனைபாண்டவாஎன அழைப்பதன் மூலம், சிறந்த மனிதரான பாண்டுவின் மகன் என்பதாகக் கூறி, மோக்ஷத்திற்கு தகுதிப்படுத்தும் அனைத்து நற்பண்புகளையும் கொண்டிருக்கிறாய் என்பதை அர்ஜுனனுக்கு நினைவூட்டுகிறார்.

---------------------------------------------------------------------------------------------

||16.6|| இனிமேல் செய்யப்போவது என்ன என்பதைக் கூறுகிறார்:

द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन् दैव आसुर एव

दैवो विस्तरश: प्रोक्त आसुरं पार्थ मे शृणु ।। ।। 

த்3வெள பூ4தஸர்கெள3 லோகேऽஸ்மிந் தை3 ஆஸுர ஏவ

தை3வோ விஸ்தரச1: ப்ரோக்த ஆஸுரம் பார்த2 மே ச்1ருணு ।। 6 ।। 


अस्मिन् लोके  அஸ்மிந் லோகே  இந்த உலகத்தில்    दैव:  தை3:  தெய்விகம் என்றும்   

आसुर: एव   ஆஸுர: ஏவ   அசுரம் என்றும்   द्वौ भूतसर्गौ  த்3வெள பூ4தஸர்கெள3  இருவகை உயிர்ப் பிறப்புக்கள்  (உள்ளது)   पार्थ  பார்த2  பார்த்தா    दैव:  தை3:  தெய்வ இயல்பு    

विस्तरश:  விஸ்தரச1:  விஸ்தாரமாக        प्रोक्त:  ப்ரோக்த:  பகரப்பட்டது    

आसुरं  ஆஸுரம்  அசுர இயல்பை     मे शृणु  மே ச்1ருணு  என்னிடம் கேள்.


பார்த்தா, தெய்விகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப் பிறப்புக்கள் இவ்வுலகில் உண்டு. தெய்வ இயல்பு விரிவாக பகரப்பட்டது; அசுர இயல்பை என்னிடம் கேள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இவ்வுலகில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.


விளக்கம்:

=> இருவகை குணங்கள்:

இந்த உலகத்தில் தெய்விகம் மற்றும் அசுரம் என்ற இருவகையான தன்மை மனிதர்களிடத்தில் உள்ளது என இங்கு கூறப்படுகிறது. இங்கே, இந்த உலகத்திலுள்ள படைப்பு உயிரினங்கள்(பூ4தஸர்கெள3) குறிப்பிடப்படுகின்றன என்றாலும், தங்களை செயல் செய்கிற கர்த்தாக்களாகவும், அனுபவிக்கிற போக்தாக்களாவும் கருதுபவர்களான மனிதர்கள் என சங்கரர் விளக்கத்தை அளிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜீவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களில் தெய்வீக நற்பண்புகளைக் கொண்டவர்கள் மற்றும் அசுரர்களுக்குச் சொந்தமான பண்புகளைக் கொண்டவர்கள் என இரண்டு வகைகள் உண்டு. அவைகளில் தேவ அல்லது தெய்வீக இயல்பு ஏற்கனவே விரிவாக மற்ற அத்தியாயங்களிலும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் விளக்கப்பட்டுள்ளது. இப்போது கிருஷ்ணர் ஒரு அசுரனின் குணாதிசயங்களைப் பற்றிய விரிவான விளக்கத்தைக் கொடுக்கப் போகிறார். மேலும் அவர் அர்ஜுனனிடம், ‘நான் சொல்வதைக் கேள்என்று கூறுகிறார். பொதுவாக, நாம் ஒருவரின் கவனத்தை இப்படி ஈர்க்கும்போது, ​​அது நேர்மறையான ஒன்றைச் சொல்வதற்காக இருக்கும். ஆனால் இங்கு எதிர்மறையான அசுர குணங்களைக் கேட்க கிருஷ்ணர் இந்த முறையை ஏன் கையாளுகிறார்? எச்சரிக்கைக்காக, அந்த குணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதற்காக இப்படி செய்யப்படுகிறது. ஒரு நோய்க்கான மருந்து எடுத்துக் கொள்ளப்படும்போது, எதைச் சாப்பிடக்கூடாது என்கிற பத்தியத்தையும் கடைபிடிப்பது அவசியமாகிறது. எனவே, செய்ய வேண்டியவைகளை அறிந்து கொள்வது போலவே செய்யக்கூடாதவைகளை அறிந்து கொள்வதும் முக்கியமாகிறது. மிகத் தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே இந்த பண்புகளை கைவிட முடியும் என்பதால் இனிவரும் சுலோகங்களில் அசுர குணங்கள் மிக விரிவாக விளக்கப்படவுள்ளது. சாதகர்கள் அக்குணங்களின் தோஷத்தையறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்விதம் செய்யப்படுகிறது

---------------------------------------------------------------------------------------------