||16.9|| இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது?
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धय: ।
प्रभवन्त्युग्रकर्माण: क्ष्याय जगतोऽहिता: ।। ९ ।।
ஏதாம் த்3ருஷ்டிமவஷ்டப்4ய நஷ்டாத்மாநோऽல்பபு3த்3த4ய: ।
ப்ரப4வந்த்யுக்3ரகர்மாண: க்ஷ்யாய ஜக3தோऽஹிதா: ।। 9 ।।
अल्पबुद्धय: அல்பபு3த்3த4ய: அற்ப புத்தியுடையவர்கள்
एतां दृष्टिम् ஏதாம் த்3ருஷ்டிம் இந்த கொள்கையை अवष्टभ्य அவஷ்டப்4ய பிடித்துக்கொண்டு नष्ट आत्मान: நஷ்ட ஆத்மாந: ஆத்ம நஷ்டமடைந்தவர்களாய்
उग्र कर्माण: உக்3ர கர்மாண: கொடூரச் செயல் புரிபவர்களாய் जगत: ஜகத: ஜகத்தினுடைய अहिता: அஹிதா: எதிரிகளாய் क्ष्याय க்ஷ்யாய அதன் அழிவுக்கென்று
प्रभवन्ति ப்ரப4வந்தி தோன்றியிருக்கின்றனர்.
இக்கொள்கையைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், அற்ப புத்தியுடையவர்களாய், ஆத்ம நஷ்டமடைந்தவர்களாய், கொடுஞ்செயல் புரிபவர்களாய், உலகின் பகைவர்களாய் அதன் அழிவுக்கென்றே தோன்றியிருக்கின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.
விளக்கம்:
முன் சொல்லப்பட்ட சுலோகத்திலுள்ள கருத்தை, தங்களது கொள்கையாகக் கொண்டவர்களின் நிலையைப் பற்றி பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.
=> ஆத்ம நஷ்டமடைந்தவர்கள்:
உலகம் சத்தியமில்லாதது, தர்மநிலையற்றது, கடவுளில்லாதது போன்ற கொள்கையை உடையவர்கள் ‘நஷ்ட ஆத்மாந:’ என்கிறார் பகவான். அதாவது அவர்கள் தன்னையே இழந்து விடுகிறார்கள். தர்மத்திலிருந்தும் மோக்ஷத்திலிருந்தும் நஷ்டமடைகிறார்கள். இந்த கண்ணோட்டத்தைக் கொண்டவர்களுக்கு, இனியொரு மேலான உலகத்தை அடைவதற்கு எந்த வழியுமில்லை; இனியொரு நல்ல பிறப்பு இருக்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை என்பதாக சங்கரர் கூறுகிறார். ஏனெனில் அவர்களின் மனம் நாசமடைந்துள்ளதால், அவர்களுக்கு எது உண்மையானது, அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எதைச் செய்ய வேண்டும் என்பது குறித்த சரியான பகுத்தறிவு இல்லை. எனவே அவர்கள் நஷ்டாத்மாக்கள் ஆகின்றனர். எளிமையான சிறிய விஷயங்களில் கூட அவர்களுக்கு பெருங்குழப்பம் இருக்கிறது.
=> அற்ப புத்தியுடையவர்கள்:
மேலும் அவர்கள் ‘அல்பபு3த்3த4ய:’, அற்ப சிந்தனை கொண்டவர்கள் என்கிறார் பகவான். தவறானதைச் செய்யும்போது என்ன இழப்பு நேரும் என்கிற அறிவை உடையவனே புத்தியுடையவன், பக்குவமடைந்தவன் ஆவான். ஆனால் இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான். சங்கரரின் கூற்றுப்படி, அவர்களின் மனமானது புலனுணர்வைத் தாண்டி வேறு எதற்கும் பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் பார்ப்பது மட்டுமே உண்மை, மேலும் புலன்களால் அனுபவிக்கக்கூடியதைத் தவிர வேறு எதுவும் யதார்த்தம் இல்லை என்று நினைக்கின்றனர். யுக்தியும்கூட அற்றவர்களாய் அவர்கள் இருக்கின்றனர். ‘அல்ப’ எனில் அற்பமான, மிகக் கீழான என்பது பொருள். இன்பத்திற்காக மிகவும் கீழானதைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களின் தேர்வுகளுக்குப் பின்னால் ‘எது சரி - எது தவறு’ என்கிற பகுத்தறியும் புத்தி மிகவும் குறைவாகவே உள்ளது.
=> கொடூர செயல் புரிபவர்கள்:
மேலும் அவர்கள் கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர் — உக்3ர கர்மாண:. ஒன்றினுடைய பலன் மட்டுமே நமக்கு முக்கியமானதாக மாறும்போது அது எவ்விதத்தில் அடையப்படுகிறது என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. இதனால் நம்மைச் சுற்றி இருப்பவர்களை நாம் பாதிக்கிறோமா என்பது குறித்தும், அல்லது அவர்களின் தேவைகளும் விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் சிறிதும் யோசிப்பதில்லை. தான் தேர்ந்தெடுக்கிற அந்த வழியானது, தனது இலக்கை அடைவதற்கு எந்த அளவு உதவியாக இருக்கிறது என்பது மட்டுமே ஒருவனின் கருத்தில் இருக்கும்போது, அந்த வழிமுறையானது நியாயமானதா அல்லது தவறானதா என்பதைப் பற்றிய எந்த சிந்தனையும் அவனிடம் இருப்பதில்லை. இந்த மனப்பான்மை ஒருவனை கொடூரமான செயல்களைச் செய்யும் ஒரு நபராக ஆக்குகிறது, ஏனென்றால் தனக்காக ஏதாவது கிடைக்கக்கூடிய பட்சத்தில் மற்றவர்களைக் காயப்படுத்துவதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
=> இவ்வுலகின் பகைவர்களாகிறார்கள்:
‘ஜகத:’ எனும் சொல்லை ‘அஹிதா:’ என்ற சொல்லுடனும், ‘க்ஷ்யாய’ என்ற சொல்லுடனும் சேர்த்துப் பார்க்கவேண்டும். எனவே, ‘அஹித’ எனில் இவ்வுலகிற்கு விரோதமானவர்கள், பகைவர்களாக இருப்பவர்கள் என்று பொருள். ‘க்ஷ்யாய’ என்பதற்கு உலக அழிவுக்காக செயல்படுகிறார்கள், உலகிற்கு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்பது பொருள். அதாவது, அவர்கள் உலகின் எதிரிகளாய் அதன் அழிவுக்கென்றே தோன்றியிருக்கின்றனர். எப்போதும் தங்களிடம் இருப்பதை மட்டுமே கணக்கிடுபவர்களாக, அவர்கள் என்ன பெறுகிறார்கள் என்பதை மட்டுமே திட்டமிடுபவர்களாக, மற்றவர்களின் விருப்பத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ குறித்து சிறிதும் கவலை கொள்ளாதவர்களாக, தங்களது விருப்பம் தடைபடும்போது குரோதத்துடன் மற்றவர்களை ஹிம்சை படுத்துபவர்களாக ஆகிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------
||16.10|| இவர்களின் தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது:
काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विता: ।
मोहाद् गृहीत्वासद्ग्राहान् प्रवर्तन्तेऽशुचिव्रता: ।। १० ।।
காமமாச்1ரித்ய து3ஷ்பூரம் த3ம்ப4மாநமதா3ந்விதா: ।
மோஹாத்3 க்3ருஹீத்வாஸத்3க்3ராஹாந் ப்ரவர்தந்தேऽசு1சிவ்ரதா: ।। 10 ।।
दुष्पूरं து3ஷ்பூரம் பூர்த்தி பண்ணமுடியாத कामम् காமம் காமத்தை
आश्रित्य ஆச்1ரித்ய சார்ந்து दम्भ मान मद अन्विता: த3ம்ப4 மாந மத3 அந்விதா: ஆடம்பரமும், தற்பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய் मोहात् மோஹாத்3 மதிமயக்கத்தால் असद्ग्राहान् அஸத்3க்3ராஹாந் கெட்ட எண்ணங்களை गृहीत्वा க்3ருஹீத்வா கிரஹித்துக் கொண்டு अशुचि व्रता: அசு1சி வ்ரதா: தீய தீர்மானங்களுடையவர்களாய்
प्रवर्तन्ते ப்ரவர்தந்தே தொழில் புரிகிறார்கள்.
நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், ஆடம்பரமும், தற்பெருமையும், மதமும் பொருந்தியவர்களாய், மதிமயக்கத்தால் கெட்ட எண்ணங்களைக் கிரஹித்துத் தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
விளக்கம்:
அசுர இயல்புடையவர்களது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்ற கேள்விக்கு, விரிவான விளக்கமாக இந்த சுலோகம் அமைகிறது.
=> தவறான நோக்கங்கள்:
இங்கு குறிக்கப்படும் ‘த3ம்ப4’, ‘மாந’, மற்றும் ‘மத3’ ஆகிய மூன்று சொற்களின் அர்த்தங்களுக்குமிடையில் மிகக் குறைவான வித்தியாசம்தான் உள்ளது. ஆனால் இங்கு அவைகள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொன்றின் தனித்துவமான அர்த்தத்தை பகுத்தறிய வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்தபடி, தன்னிடம் இருக்கின்றதோ அல்லது இல்லையோ அதைப் பற்றிய கவலையேதும் இல்லாமல், பேச்சு, உடை போன்றவற்றின் மூலம் தனது சொந்த பெருமைகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது ‘த3ம்ப4’ எனப்படும். அடுத்ததாக, வாய்மொழியாகவோ அல்லது உடல்மொழியிலோ, ‘நான் பாராட்டுக்குரியவன், உங்களது மரியாதையைக் கோருகிறேன்’ எனும் எதிர்பார்ப்பு தெளிவாகத் தெரியும் விதத்தில் தற்பெருமையுடன் நடந்துகொள்வது ‘மாந’ ஆகும். ‘மத3’ என்பது வேறொரு வகையான பெருமிதத்தைக் குறிக்கிறது. தன்னிடமிருக்கின்ற செல்வம், அறிவு அல்லது திறமை, ஒப்பிடப்படும் அந்த குறிப்பிட்டவர்களிடம் இல்லை என்பதன் காரணமாக வருகிற பெருமை ‘மத3’ ஆகும். நன்றியுணர்வு மற்றும் பணிவுக்கு பதிலாக, அவர்களிடம் இந்த பொருத்தமற்ற பெருமிதம் துருத்தி நிற்கிறது. அசுர இயல்புடைய மக்கள் இவை அனைத்திலும் சிக்கித் தவிக்கின்றனர் — அந்விதா. இதன் விளைவாக அவர்கள் தீய தீர்மானங்களுடன் தொழில் புரிகின்றனர் — அசு1சி வ்ரதா: ப்ரவர்தந்தே. அதாவது அசுத்தமான நோக்கங்களை உடையவர்களாக வாழ்க்கையை நடத்துகின்றனர்.
=> நெடுங்காமம் கொண்டவர்கள்:
அவர்கள் நிறைக்க முடியாத ஆசைகளைப் பற்றிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர் — காமம் ஆச்1ரித்ய து3ஷ்பூரம். அதாவது அவர்களின் ஆசைக்கு எல்லையே இல்லை. அதனால்தான் ஆசையை நாம் நெருப்புடன் ஒப்பிடுகிறோம் — அநல, எனில் ‘போதும் என்று கூறாதது’ என்பது பொருள். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் எரிபொருளை போடும்போது அது அணையாது, ஆனால் அது இன்னும் பிரகாசமாக எரியும். அதேபோல, விரும்பிய பொருட்களைப் அடைவதன் மூலம் ஆசை ஒருபோதும் அடங்காது. தேவையானதைக் கொடுப்பதினால் நெருப்பைப் போலவே ஆசையும் திருப்தியை அடைவதில்லை. அது வளர்ந்து அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டுமெனக் கேட்கும் அல்லது அதைவிட சிறந்த அனுபவத்தைக் கோரும். ‘விரும்பியதை அனுபவிப்பதன் மூலம் ஆசை ஒருபோதும் தணியாது — ந ஜாது காம: காமாநாம் உபபோ4கே3ந சா1ம்யதி’ என்கிற கூற்று உள்ளது.
இத்தகைய நிறைவேறாத நெடுங்காமம் பிடித்தவர்களாய், இந்த மக்கள் பல்வேறு செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? மோஹத்தினால் பகுத்தறியும் புத்தியை இழந்துள்ளதால், தவறான மதிப்புகளையும் முன்னுரிமைகளையும் கொண்டு அவ்விதம் செயல்படுகிறார்கள். அவர்கள் மதிப்பில்லாத ஒன்றிற்கு பெருமதிப்பை அளிக்கிறார்கள். மோஹத்தினால், பாதுகாப்பு இல்லாத இடத்தில் பாதுகாப்பையும், மகிழ்ச்சி இல்லாத இடத்தில் மகிழ்ச்சியையும், உதவி இல்லாத இடத்தில் உதவியையும் பார்ப்பதனால், அவர்கள் இந்த இலக்குகளை அர்ப்பணிப்புடன் தொடர்கிறார்கள். அதாவது முதலில் அவர்கள் விஷயங்களுக்கு முறையற்ற மதிப்பீடுகளை அளிக்கிறார்கள், பின்னர் அவற்றைப் பின்தொடர்கிறார்கள் — அஸத்3க்3ராஹாந் க்3ருஹீத்வா ப்ரவர்தந்தே. அறியாமை எனும் மோஹத்தினால் தவறான கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு தீய நோக்கங்களுடன் வாழ்க்கையை வாழ்கின்றனர்.
---------------------------------------------------------------------------------------------
.jpeg)