வியாழன், 14 ஆகஸ்ட், 2025

புருஷோத்தம யோகம் 15.10 - 15.11

||15.10|| ஞானக்கண்கள்:

उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम्

विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुष: ।। १० ।।

உத்க்ராமந்தம் ஸ்தி2தம் வாபி பு4ஞ்ஜாநம் வா கு3ணாந்விதம் |
விமூடா4 நாநுபச்1யந்தி பச்1யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ: ।। 10 ।।

उत्क्रामन्तं  உத்க்ராமந்தம்  உடலிலிருந்து உடலுக்குப் போகின்றவனை      

स्थितं वा अपि  ஸ்தி2தம் வா அபி  உடலிலேயே இருப்பவனை    

गुण अन्वितम्  கு3 அந்விதம்  குணத்தோடு கூடியிருப்பவனை     

भुञ्जानं वा  பு4ஞ்ஜாநம் வா  அனுபவிப்பவனையும்    विमूढा:  விமூடா4  விமூடர்கள்     

अनुपश्यन्ति  அநுபச்1யந்தி  காண்பதில்லை    ज्ञानचक्षुष:  ஜ்ஞாநசக்ஷுஷ:  ஞானக் கண்களையுடையவர்கள்    पश्यन्ति  பச்1யந்தி  காண்கிறார்கள்.


உடலை விடும்பொழுதும், உடலில் இருக்கும்பொழுதும், அனுபவிக்கும் பொழுதும், குணங்களோடு கூடியிருக்கும் பொழுதும், ஜீவனை மூடர்கள் அறியமாட்டார்கள்; ஞானக்கண்களை உடையவர்கள் அறிகிறார்கள்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.


விளக்கம்:

நம்மால் நேரடியாகப் பார்த்து அறியமுடியாத சில விஷயங்களை, சில ரகசியங்களை சுலோகம் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதில் பகவான் கூறினார். ஒருவனின் இறப்புக்குபின் என்ன நடக்கிறது என்பதை கூறினார். ஏன் இவ்வாறு செய்கிறார்? சிதாபாசனின் இருப்பை அறிவது, அதன் மூல-ஆதாரமாக விளங்குகிற சைத்தன்யத்தை அறிய உதவுகிறது. மலையின் உச்சியில் எழுகின்ற புகையைக் கொண்டு அங்கு நெருப்பு உள்ளது என்பது உய்த்தறியப்படுகிறது. அதுபோல சிதாபாசத்தின் துணைகொண்டு சித் உணரப்படுகிறது.


=> அக்ஞானிகள் பார்ப்பதில்லை:

பச்1யந்திஎனில் அவர்கள் பார்ப்பதில்லை என்பது பொருள். ‘பச்1யந்தி’ - யுடன் இங்கு வருகிறஅநுஎனும் முன்னொட்டு, சாஸ்திரப்படி குரு கற்பித்த அந்த ஞானத்தை அவர்கள் பார்ப்பதில்லை என்பதைக் குறிக்கிறது. இத்தகையவர்களை பகவான் இங்கு அறிவிலிகள் என்கிறார்விமூடா4. ஆத்ம-அனாத்மாவை பகுத்துப் பார்க்கும் திறனற்று, ஜீவனை பரமாத்மாவின் அம்சமாக அறியாமல் இவர்கள் மூடர்கள் ஆகின்றனர்.   

இந்த சுலோகங்களின் வழியாக இனியொரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஜீவனின் பிரச்சனைக்கு மரணம் என்பது தீர்வாகாது. மேலும் ஒருவன் தன் உடலிலிருந்து விடுபடுவதே மோக்ஷம் என்கிற தவறான கருத்தும் பொதுவாக காணப்படுகிறது. கீதை இதை மறுக்கிறது. இந்த உடலில் வாழும்போதுநான் பரமாத்மாஎன்று பார்க்காத ஒருவன், இந்த உடலைத் துறக்கும்போது மற்றொரு உடலை அடைகிறான்.  

ஒவ்வொரு புலனுறுப்புக்கும் மனதுக்கும் பின்னால் சுயாதீனமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற இந்த ஆத்மா, எளிதாகப் புரிந்துகொள்ளபடக் கூடியதாக இருந்தும், உலக இன்பங்களில் உள்ள மோஹத்தினால் இவர்கள் பகுத்தறியும் திறனற்றுப் போகிறார்கள் என்கிறார் சங்கரர். அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுகங்களின் மீது இருக்கிற பற்று இந்நிலைக்கு காரணமாக அமைகிறது

ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும், மேலும் அந்த துன்பத்திற்கானத் தீர்வின் மீது ஆசையும் இருக்கிறது. அப்படியிருந்தும் அனைவரும் அந்த தீர்வை கண்டடைவதில்லை. மனிதனாகப் பிறந்ததே மோக்ஷத்திற்கு போதுமானதுதான்; ஏனெனில் இந்த மனித-வடிவத்தில் துன்பமும் மற்றும் பகுத்து அறியும் ஆற்றலும் உள்ளது. பிரச்சனை என்னவென்று அனைவருக்கும் தெரிந்திருந்தும், அடையப்பட வேண்டிய சுகங்கள் மற்றும் சொர்க்கம் உள்ளிட்ட ஏராளமான கவர்பொருள்களினால் அவர்கள் ஏமாற்றப்பட்டவர்களாக ஆகிறார்கள். மனித உருவத்தால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு நோக்கத்திற்காக இந்த ஜீவ-உலகத்துக்கு வந்தபோதிலும், விருப்பு-வெறுப்புகளினால் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வழிமாறுகின்றனர். பரமாத்மாவாக அவன் சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் சொரூபமாகவே கொண்டிருந்தபோதும், அதை அறியாத காரணத்தினால் மகிழ்ச்சியான சில தருணங்களையாவது அமைத்துக்கொள்ளும் வாய்ப்புக்காக அவன் அடிமையாக காத்திருக்கிறான். இத்தகையவர்களை இங்கு பகவான்மூடர்கள்எனக் கூறுகிறார். இவர்கள் ஜீவனின் உண்மை சொரூபத்தை பார்ப்பதில்லை.


=> ஞானக் கண்களை உடையவர்கள் பார்க்கிறார்கள்:

மாறாக, தங்களின் சுய சொரூபத்தை தெளிவாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இங்கு பகவான் ஞானம் எனும் கண்களை உடையவர்கள் எனக் கூறுகிறார்ஜ்ஞாநசக்ஷுஷ:. இவர்கள் வேதாந்த பிரமாணத்திலிருந்து பிறந்த ஞானம் எனும் அறிவைக் கொண்டு ஆத்மா மற்றும் அனாத்மாவைப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டுள்ளனர்

நான்கு சூழ்நிலைகள் இங்கு கொடுக்கப்படுகிறது:

   (1) உடலை விடும்பொழுதுஉத்க்ராமந்தம். பிணமாக இருக்கின்ற ஸ்தூல உடல் அழுகுகிறது. ஆனால் உயிருடன் இருக்கின்ற ஸ்தூலம் அழுகுவதில்லை. எனவே இங்கு ஸ்தூலத்திற்கு அப்பாற்பட்டதான ஒரு தத்துவம் இவை இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்த உணர்வு தத்துவத்தை மரணத்திலிருந்து அறிகிறோம். ஆகவே சிதாபாசம் அறியப்படுவதிலிருந்து அதற்கு காரணமாக இருக்கின்ற மூல-பிம்பமான சைத்தன்யம் உணரப்படுகிறது

மரணம் -> சிதாபாசம் -> சைத்தன்யம்

  (2) உடலிலேயே இருக்கின்றபொழுதும்ஸ்தி2தம் வா அபி. சரீரம் உயிரோடு இருப்பதிலிருந்துஇருத்தல்என்பதாக அந்த தத்துவம் உணரப்படுகிறது

  (3) அனுபவிக்கும்பொழுதுபு4ஞ்ஜாநம் வா. பிணம் ஜடம்; உலகப் பொருட்களும் ஜடம். ஆனால் உயிருடன் இருக்கும்போது, அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்கிற பெரிய வேற்றுமையை உருவாக்கிவிடுகிறோம். இது அறியப்படும்போது ஒவ்வொரு அனுபவமும் அறிவின் இருப்பை காட்டுகிறது.

  (4) விதவிதமான குணங்களுடன் இருக்கின்றபொழுதுகு3 அந்விதம். குணங்கள் வந்து சென்று கொண்டேயுள்ளது. ஆனால்நான்மாறாமல் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவனாக, அறிந்து கொண்டிருப்பவனாக இருக்கின்றேன்

இவ்வாறாக ஞானிகள் முதலில், அறிபவன் மற்றும் அறியப்படும் பொருள் பகுத்தறிந்து, அறியப்படுவதாக இருக்கின்ற அனைத்தும்நான் அல்லஎனத் தீர்மானிக்கிறார்கள். மேலும், செயல் செய்பவன் மற்றும் அனுபவிப்பவன் எனும் எண்ண வடிவங்களில், ‘நான்எனும் உணர்வு ஏற்றிவைக்கப்படுகிறது. உண்மையில் அவைகளும் அறியப்படும் பொருள்தான் என்பதை கவனித்து, அவைகளிலிருந்துநான்வேறுபட்டவன் என்பதை பகுத்தறிகிறார்கள். இதை தர்க்கரீதியாக அல்லாமல், தெளிவாக உள்ளபடி பார்க்கிறார்கள்

நான்எனும் உணர்வு பிரக்ஞையைச் சார்ந்தது. இந்த பிரக்ஞையேநான்என்பதன் உண்மையான அர்த்தம் ஆகும். எனவேநான்எனும் வார்த்தையைப் பயன்படுத்தும்போதெல்லாம், அபிமானம் எப்போதும் சுயாதீனமாக விளங்கும் பிரக்ஞையில் இருக்கவேண்டும். இந்த பிரக்ஞையே தற்காலிகமாக பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறது என்பதை உணரவேண்டும். ஒரு கார் ஓட்டுநர்நான் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் சென்றேன்எனக் கூறும்போது, அதை தான் செய்யவில்லை வாகனம்தான் செய்தது என்கிற அறிவு அவனுக்கு இருக்கும். அதுபோலவே தனது சுயத்தைஅகர்த்தா’-வாக அங்கீகரித்த பின்பும், ‘ஒருவன் நான் அதைச் செய்தேன்; இங்கு சென்றேன்எனக் கூறலாம். வியவகாரத்திற்காக பயன்படுத்தப்படும்நான்வேறு; சொரூபமானநான்வேறு என்கிற தெளிவு இருந்தால் போதுமானது.   

எனவே அக்ஞானிகளுக்கு ஸ்தூல உடலும், உடலின் மூலம் வெளியுலகிலிருந்து பெறுகின்ற இன்பதுன்பம் மட்டுமே விளங்குகின்றன. உடலுக்குள் தங்களது மேலான சொரூபமாக வீற்றிருக்கும் பரமாத்மாவைக் காண அவர்களுக்கு இயலுவதில்லை. புலன்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள். விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர். அறிவுடையவர்களுக்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும். அவ்விதம் ஞானக் கண்களை உடையவர்களுக்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.

ஆனாலும் முந்தைய சுலோகத்தில் கூறப்பட்டவர்களைப் போலல்லாமல் இங்கு கூறப்படும் அக்ஞானிகள், குருவினால் மஹாவாக்கியம் கற்பிக்கப்பட்டும் சில தகுதிக்குறைவின் காரணமாக அதை புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். மனத்தூய்மை மற்றும் மனமுதிர்ச்சி உள்ளிட்ட தகுதிகளை முயற்சி செய்து அடைபவர்களே ஞானக் கண்களை அடைகின்றனர். இதை பகவான் அடுத்த சுலோகத்தில் வலியுறுத்துகிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும், வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே. அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான்; இன்னொருவன் கருப்பாயிருக்கிறான். மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும் ஈஷ்வரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.

---------------------------------------------------------------------------------------------

||15.11|| ஞானக் கண்ணைப் பெறுவது எங்ஙனம் என்பதற்கான விடை:

 यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम्।

यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतस: ।। ११ ।।

யதந்தோ யோகி3நச்1சைநம் பச்1யந்த்யாத்மந்யவஸ்தி2தம் |
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பச்1யந்த்யசேதஸ: ।। 11 ।।

यतन्त: योगिन:   யதந்த: யோகி3:   முயலுகின்ற யோகிகள்   एनं  ஏநம்  அந்த ஆத்மனை    आत्मनि  ஆத்மநி  தங்களுக்குள்     अवस्थितम्  அவஸ்தி2தம்  வீற்றிருப்பவனாக     

पश्यन्त्ति  பச்1யந்தி  பார்க்கின்றனர்         अकृत आत्मान:  அக்ருத ஆத்மாந:  பண்படாதவர்கள்    अचेतस:  அசேதஸ:  அறிவிலிகள்      यतन्त: अपि  யதந்த: அபி  முயற்சியுடையவர்கள் எனினும்     

एनं  ஏநம்  அந்த ஆத்மாவை    पश्यन्ति  பச்1யந்தி  பார்ப்பதில்லை.


முயற்சியுடைய யோகிகள் அவ்வாத்மாவைத் தங்களுக்குள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையார் எனினும் ஆத்ம பரிபாகமடையாத அறிவிலிகள் அவனைக் காண்பதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.


விளக்கம்:

மனத்தூய்மையின் முக்கியத்துவத்தை பகவான் இந்த சுலோகத்தில் வலியுறுத்துகிறார். பல காலம் ஆத்ம சாதனைகளிலும் விசாரத்திலும் ஈடுபட்டும் அதன் பலனை அடையாததன் காரணத்தை இங்கு கூறுகிறார்


=> மனத்தூய்மை:

சித்த சு1த்3தி4 அல்லது மனத்தூய்மை என்றால் என்ன? உண்மையில் நமது மனம் என்பது நமக்கு ஒரு கருவியாகச் செயல்படும் சரீரம் ஆகும். இதில் இயல்பாகவே சில அசுத்தங்கள் இருக்கும். பொறாமை, கோபம் மற்றும் ஒப்பீடு செய்தல் போன்றவைகள் இதில் அடங்கும். தனது தாய் வேறொரு குழந்தையை தூக்கும்போது பொறாமைப்பட்டு கதறி அழுது மீண்டும் தன் தாயை அடைவதை நாம் சிறு மழலைகளிடம் பார்க்க முடிகிறது. அச்சிறு குழந்தை வேறொருவரிடமிருந்து கற்றதனால் அதைச் செய்ய வாய்ப்பில்லை. அக்குணங்கள் இயற்கையாக மனங்களில் இருப்பதையே அது காட்டுகிறது. திருடுதல், பொய் கூறுதல் போன்ற அசுத்தங்கள் சில காலப்போக்கில் பழகுவதாக ஆகின்றன. இந்த அசுத்தங்கள் ஒரு நோயைப் போன்றது. இந்நோய்களை நீக்குவதும், மேலும் ஆத்ம ஞானத்திற்குத் தேவையான சில நல்ல பண்புகளை அடைவதும் மனத்தூய்மை ஆகும்


=> யோகிகள்:

இங்கு பயன்படுத்தப்படும்யோகி3:எனும் வார்த்தை, சரியான முயற்சியை மேற்கொண்டு மனத்தூய்மை அடைந்தவர்களை, மனதை அமைதிப்படுத்தியவர்களைக் குறிக்கிறது. ‘யதந்த:எனில் முயற்சியுடையவர்கள். கர்மயோகம், மற்றும் ஞானயோகத்தின் மூலமும் குறிப்பாக நிதித்யாசனம் எனும் தியான வாழ்க்கை மூலமும் அவர்கள் அந்த ஆத்ம தத்துவத்தை தங்களுக்குள் வீற்றிருப்பவனாய்ப் பார்க்கிறார்கள்ஆத்மநி அவஸ்தி2தம் பச்1யந்தி

இங்கு இடத்தைக் குறிப்பிடும் வேற்றுமை உருபானஆத்மநிஎனும் வார்த்தையின் பொருள் என்ன? அனைத்துமே ஆத்மாவில் இருப்பதால் இச்சொல்லை வெறுமனேஆத்மாவில்எனப் பொருள் கொள்ள முடியாது. இங்கு அதைபுத்தியில்எனப் புரிந்துகொள்ள வேண்டும். யோகிகள் ஆத்மாவை மனதில், புத்தியில் வீற்றிருப்பவனாக அங்கீகரிக்கிறார்கள். ‘புத்தியில் வெளிப்படுகிற உணர்வு சொரூபமாக நான் இருக்கின்றேன்என்பதாக இந்த யோகிகள் ஆத்ம தரிசனத்தை அடைகிறார்கள். ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள உடல் மற்றும் மனமாக அல்லாமல், சாஸ்திரம் உபதேசிக்கிற ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரம்மத்துடன் ஒத்ததாக இந்த பிரக்ஞையை அடையாளப் படுத்துகிறார்கள்

ஞானப் பாதையில் இருப்பவரகள், அதாவது ஜிக்ஞாசுக்கள் ஆத்மசொரூபத்தில் தேங்கியிருப்பதற்கான, நிஷ்டை அடைவதற்கான முயற்சியை செய்ய வேண்டும். ஆகவேதான் பிரஹதாரண்யக உபநிஷதத்தில், ‘ஆத்மா பார்க்கப்பட வேண்டும் - த்3ரஷ்டவ்யஎன மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர் கூறும்போது, ச்1ரோதவ்ய - கேட்கப்பட வேண்டும்; மந்தவ்ய - சந்தேகம் தெளிதல் வேண்டும்; நிதி3த்4யாஸிதவ்ய - சிந்திக்கப்பட, தியானிக்கப்பட வேண்டும் என மூன்றையும் உபாயமாகக் கூறுகிறார். வெகு சிலரே, மனத்தகுதியை முழுமையாகக் கொண்ட அதிகாரிகளாக இருந்து சிரவணத்திலேயே ஆத்ம தரிசனத்தை அடைகிறார்கள். உதாரணமாக சாந்தோக்ய உபநிஷத்தில் வருகின்ற ஸ்வேதகேது, மற்றும் பிரச்னோபநிஷத்தில் குரு பிப்பலாதரின் மாணவர்களாக வரும் அந்த ஆறு சீடர்களைக் கூறலாம். நாரதரும் சனத் குமாரரிடம் பூ4 வித்யாவை கேட்டவுடன், ‘நான் ப்ரம்மம்என்பதைப் புரிந்துகொண்டார். இத்தகைய உத்தம அதிகாரிகளுக்கு கேட்டல் மட்டுமே[சிரவண] போதுமானதாக இருக்கிறது. ஆனால் மற்ற ஜிக்ஞாசுக்கள் கர்மயோகம், உபாசனம் மற்றும் தியானம் முதலிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆத்ம நிஷ்டைக்கு தேவையான அதிகாரித்துவத்தை அடைய முடியும்.  

  

=> மன முதிர்ச்சியற்றவர்கள்:

எனில், வெறும் முயற்சி மட்டுமே போதுமானதா என்ற கேள்விக்கு, இல்லை என்பதாக பகவான் பதில் கூறுகிறார். செம்மைப்படாத மனதை உடையவர்கள் ஞானயோக சாதனையை மேற்கொண்டபோதிலும் புத்தியற்றவர்களாக அவர்கள் இந்த மெய்ப்பொருளைப் பார்ப்பதில்லையதந்த: அபி ஏநம் பச்1யந்தி, என்கிறார்

வெறும் முயற்சி மட்டும் போதாது, அது அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வகை மனம் தேவை. பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் ஒருவன் செய்தாலும், சரியாக விசாரணையை மேற்கொள்ளும் திறனை அவன் வளர்க்க வேண்டும். அதனளவில் அதுவே ஒரு ஒழுங்குமுறை ஆகும். மேலும், முறையற்ற அதர்மமான செயல்களில் இருந்து ஒருவன் பின்வாங்கியிருக்க வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கை, புலனுறுப்புகள் மற்றும் மனம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை அடைவதன் மூலமும் ஒருவன் தன் முயற்சியை தடைபடாமல் பார்த்து கொள்ளமுடியும். இங்குமுயற்சி செய்தாலும் பார்ப்பதில்லைஎன்கிறார் பகவான். ஏன்? ஏனென்றால், அவர்கள் செம்மையடையாத பாங்குடையவர்கள்அக்ருத ஆத்மாந:. கர்மயோக வாழ்க்கையின் மூலம் தனது மனதை பண்படுத்தாதவர்கள் ஆவர். மேலும், புத்தியில்லாதவர்கள்அசேதஸ:, என்கிறார் பகவான். புத்தி இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்பதால் இதை அப்படியே நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடாது. சங்கரர் இதை விவேகம் இல்லாதவர்கள், பகுத்தறியும் திறனற்றவர்கள் எனக் கூறுகிறார்.  


=> பயனை அடைவதற்கான முன்நிபந்தனைகள்:

சிலர் வேதாந்தத்தின் பயனை அடைந்து மற்றவர்கள் அதை அடையாததிலிருந்து, பிரமாணம் மட்டுமல்ல வேறுசில முன்நிபந்தனைகளும் அதில் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, பார்ப்பதற்கு கண்கள் மட்டும் போதாது, குறைபாடுகளற்ற கண்கள் தேவை. அப்போதுதான் கண் ஒரு பிரமாணமாக ஆகிறது. அதுபோல, ஆத்ம ஞானத்திற்கான பிரமாணமாக வேதாந்தம் இருக்கின்ற பட்சத்தில், அதை கேட்கும் அனைவரும் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவைப் பார்க்க வேண்டும். ஆனால் அது அவ்விதம் நடப்பதில்லை. எனவே ஒருவன் பார்த்து மற்றொருவன் அதைப் பார்க்கவில்லை எனில் பிரச்சனை பார்ப்பவனிடம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். இங்கு பார்த்தல் என்பது ஆத்ம சொரூபத்தை உள்ளபடி புரிந்து கொள்வதைக் குறிக்கிறது

எனவே மோக்ஷம் என்பது அறிவின் வடிவில் இருப்பதால், அந்த அறிவை அடையும் முன்நிபந்தனைகள் கண்டிப்பாக இருக்கின்றன. அந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதே முயற்சி வெற்றியடைய தேவைப்படுகிற வழிமுறையாக ஆகிறது. கர்ம-யோக வாழ்க்கை மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதன் மூலம் மனத்தூய்மை அடையப்படுகிறது. விசாரம் செய்தல் என்பது இங்கு முக்கியமான ஒரு படியாக உள்ளது. ஏனெனில் சில உண்மைகளைச் சரியாக புரிந்து கொள்ளாததன் காரணமாகவே, அனைத்து தீய பண்புகளும் தவறான அணுகுமுறைகளும் வந்தமைகின்றது. எனவே கர்ம-யோக வாழ்க்கையுடன் சேர்ந்து வேதாந்த சிரவணமும் இருக்க வேண்டும்.   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள யோகிகள், நிதித்யாசனத்தில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது கர்மயோக வாழ்க்கை வாழ்பவர்களாகவோ இருக்கலாம். மனதைப் பண்படுத்தி அதை அந்தர்முகமாகத் திருப்பிப் பழகிய அந்த யோகிகள் ஆத்ம தரிசனத்தை கண்டிப்பாக அடைகிறார்கள்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம். அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.

---------------------------------------------------------------------------------------------