||14.22|| அர்ஜுனனுடைய முதற்கேள்விக்கான விடை:
श्रीभगवानुवाच ।
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि संप्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ।। २२ ।।
ஸ்ரீப4க3வாநுவாச ।
ப்ரகாச1ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட3வ ।
ந த்3வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி ।। 22 ।।
श्री भगवान् उवाच ஸ்ரீ ப4க3வாந் உவாச ஶ்ரீ பகவான் சொன்னது
पाण्डव பாண்ட3வ பாண்டவா प्रकाशं च ப்ரகாச1ம் ச ஒளியும்(சத்வத்தின் காரியம்)
प्रवृत्तिं च ப்ரவ்ருத்திம் ச செயலும்(ரஜஸின் காரியம்)
मोहम् एव च மோஹம் ஏவ ச மயக்கமும்(தமஸின் காரியம்)
संप्रवृत्तानि ஸம்ப்ரவ்ருத்தாநி வரும்பொழுது न द्वेष्टि ந த்3வேஷ்டி வெறுக்கிறதில்லை
निवृत्तानि நிவ்ருத்தாநி செல்லும்பொழுது न काङ्क्षति ந காங்க்ஷதி வேட்கையுறுகிறதில்லை.
பாண்டவா, (சத்வத்தின் காரியம்)ஒளி, (ரஜஸின் காரியம்)செயல், (தமஸின் காரியம்)மயக்கம் — இவை வரும்பொழுது அவன் வெறுக்கிறதில்லை, நீங்கியபொழுது விரும்புகிறதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.
விளக்கம்:
அர்ஜுனனின் முதல் கேள்வியான, குணாதீதனின் அடையாளம் இங்கு விளக்கப்படுகிறது.
=> சொந்த அளவுகோலாகக் கொள்ளுதல்:
இங்கு பகவானால் கூறப்படும் அடையாளங்களை, நம்மை நாம் புரிந்து கொள்வதற்காக பயன்படுத்த வேண்டுமே தவிர மற்றவர்களை மதிப்பிட உபயோகப்படுத்தக் கூடாது - ஸ்வலக்ஷணம் ந பரலக்ஷணம். உண்மையில் மற்றவர் குணாதீதனா இல்லையா என்பதை ஒருவனால் கிரஹிக்க இயலாது என்கிறார் சங்கரர். குணங்களைக் கடந்த நிலை(குணாதீதத்வம்) என்பது ஆத்ம சொரூபத்தோடு ஒத்ததாக இருப்பதால், அது தனக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கமுடியும். ஒருவன் குணாதீதனா இல்லையா என்பதை அவன் மட்டுமே அறியமுடியும் என்கிறார்.
மேலும் சத்வ குணப் பிரதானமாக இருப்பவரும் ஞானியும் வெளியில் பார்க்க ஒன்று போலத் தெரிவார்கள். ஏனெனில் ஞானியும் சத்வ குணத்தில் இருப்பவராகத்தான் இருப்பார். ஆனால் குணதோஷத்தினால் அவர் பாதிக்கப்பட மாட்டார்.
=> மூன்று குணத்தையும் கடத்தல்(குணநாசம்) என்றால் என்ன?
குணங்களைக் கடத்தல் என்பதை குணத்தை அழித்தல்(குண-நாசம்) எனப் புரிந்து கொள்ளலாமா? குணத்தை கடத்தல் என்றால் என்ன? பொதுவாக இரண்டு வகையான நாசம்(அழிவு) பேசப்படும்:
(1) ஸ்வரூப நாசம்: சொரூபம் அல்லது உருவம் நாசத்தை அடைவது. உதாரணமாக, வேர்க்கடலைச் சட்னி. இதில் கடலையின் சொரூபம் நாசத்தை அடைகிறது.
(2) கார்ய நாசம்: அதனுடைய முக்கிய விளைவை அழிப்பது. உதாரணமாக, விதையை வருத்தல். இதில் விதையின் உருவம் அழிவதில்லை. ஆனால் அதன் முக்கிய காரியமான முளைதல் எனும் தன்மை அழிந்துவிடுகிறது. நாமரூபம்(பெயர்-வடிவம்) அழியாமல் அதன் முக்கிய காரியத்தை அழித்தல் காரிய நாசம் ஆகும்.
இங்கு குணங்களைக் கடத்தல் எனும் குண-நாசமானது ஸ்வரூப நாசமா? காரிய நாசமா? எனில், குணநாசம் என்பது அதன் காரிய நாசத்தையே குறிக்கிறது. குணத்தின், அல்லது வேறு விதத்தில் சொல்வதானால் மனதின் முக்கிய காரியம் என்பது பந்தத்தைக் கொடுப்பது ஆகும். மூன்று குணங்களிலிருந்து விடுபடுதல் என்பது அதன் காரியமான பந்தத்திலிருந்து விடுபடுதலைக் குறிக்கின்றது. எனவே குணத்தை அழிப்பதோ அல்லது அதை அனுபவிக்காமலிருப்பதோ குணநாசம் அல்ல. அந்த குணத்தினுடைய விளைவுகளை அழிப்பதையே குண-நாசம் அல்லது குணத்தை கடத்தல் எனக் கூறுகிறோம்.
=> மன எண்ணங்களின் செயப்படு பொருள்:
காரிய நாசமான மனதின் பந்தத்திலிருந்து விடுதலை அடைய அதனுடைய எண்ணங்கள் குறித்து சிறிது ஆராயலாம். மனதில் வரும் எண்ணங்களை மூன்றாகப் பிரிக்கலாம்:
(1) சத்வ வ்ருத்தி (2) ரஜோ வ்ருத்தி (3) தமோ வ்ருத்தி
மனதில் வருகிற எண்ணங்களில், எந்தவொரு பொருளையோ அல்லது மனிதனையோ பற்றி எழுகிற முதல் எண்ணம் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. ஏனெனில் வெளியில் அதற்கான விஷயம் உள்ளது. அதன் காரணமாகவே அந்த முதல் எண்ணம் தோன்றியுள்ளது. எனவே முதல் எண்ணத்தின் செயப்படு பொருளாக இருப்பது வெளியிலுள்ள விஷயம் ஆகும்.
இனி, அது சம்பந்தமான இரண்டாவது எண்ணத்திற்கு செயப்படு பொருளாக இருப்பது முதலில் தோன்றிய அந்த முதல் எண்ணம் ஆகும். இதிலிருந்துதான் சம்சாரம் வருகிறது. முதல் எண்ணத்தைக் குறித்த கருத்து, எதிர்பார்ப்பு, மதிப்பீடு, பற்று என அந்த இரண்டாவதான எண்ணமும், அதிலிருந்து வருகிற தொடர் எண்ணங்களுமே நமக்கு சுகத்தையோ அல்லது துக்கத்தையோ கொடுக்கிறது. அவரவது குணத்தை பொறுத்து, அவர்களின் ஒவ்வொரு எண்ணத்தின் மீதும் அவர்களுக்கு பற்றும் வெறுப்பும் இருக்கிறது. உதாரணமாக, சத்வ குணத்தில் இருக்கும் ஒருவனுக்கு, தனது முதல் எண்ணம் துவேஷத்துடன் இருப்பதாக இரண்டாவது எழும் எண்ணம் சொல்லும்போது அதில் அவனுக்கு துயரம் உண்டாகிறது. முதல் எண்ணம் என்பது நாமாகவே இருப்பதனால், அதாவது நமக்கும் அந்த எண்ணத்திற்கும் இடைவெளி இல்லாததனால் அது எந்த பாதிப்பையும் கொடுப்பதில்லை.
இப்போது, மனதில் வரும் எந்தவொரு எண்ணத்தின் மீதும் தனக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை என வைத்துக் கொள்வோம். அதாவது, இந்த குறிப்பிட்ட நேரத்தில் இது வருகிறது என மனதிலிருந்து சற்று விலகி நின்று, அதை தானாக அல்லாமல் ஒரு சாக்ஷியாக பார்க்கும்போது, அதில் ஓடுகிற எந்தவித வ்ருத்தியின் மீதும் விருப்பு-வெறுப்பு இருக்காது. அலை போன்ற மேலோட்டமான சஞ்சலம் இருந்தாலும் ஆழ்ந்த கடலில் எந்த சஞ்சலமும் இல்லை. இவ்விதம், ‘நான் ஆத்ம சொரூபம். நான் மனம் அல்ல; மனதிற்கு சாக்ஷியாக இருப்பவன்’ என்பதை உணர்ந்தவன் மூன்று குணத்தையும் அனுபவித்தபோதிலும் அதனால் தாக்கப்படுவதில்லை; பாதிக்கப்படுவதில்லை.
=> முக்குணங்களின் விளைவுகள்:
‘ப்ரகாச1’ எனில் ஒளி. அது சத்வ வ்ருத்தியை அல்லது சத்வகுணத்தின் காரியமாகவுள்ள அறிவு, விழிப்புணர்வு, இன்பம், மகிழ்ச்சியான மனப்பான்மை ஆகியவற்றை குறிக்கிறது. சத்வ குணத்தில் கட்டுண்டிருப்பவன் அறிவையும் இன்பத்தையும் வேண்டுகிறான். சாஸ்திர ஞானப்பற்று மிக வல்லமை வாய்ந்தது. எளிதில் அது மனதைவிட்டு அகலாது. கேள்வியறிவும் இன்பமும் வாய்க்காதபோது அவன் பேராவலோடு அவைகளை நாடுகிறான்.
‘ப்ரவ்ருத்தி’ எனில் செயல். அது ரஜோ வ்ருத்தியை, ரஜஸின் விளைவாகவுள்ள ஆசையால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்களைக் குறிக்கிறது. ரஜோகுணத்தின் வசப்பட்டவன் எந்தச் செயலிலும் ஈடுபடாமல் இருக்க முடியாது. அவனுக்கு ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். சில கர்மங்களில் அவனுக்குப் பெருவிருப்பம் உண்டாகிறது. வேறு சில கர்மங்களில் தாங்க இயலாத வெறுப்பு உண்டாகிறது. பிடித்தமான கர்மம் என தனக்கு தோன்றுவதை ஆவலோடு செய்கிறான். விருப்பமில்லாத கர்மம் எனத் தோன்றுவதை அவன் கோபத்துடன் வெறுக்கிறான்.
‘மோஹ’ எனில் மயக்கம். அது தமோ வ்ருத்தியை அல்லது தமஸின் விளைவான மந்தத்தன்மை, அக்கறையின்மை போன்றவைகளைக் குறிக்கிறது. தமோ குணப் பிரதானமானவனுக்கு சோம்பலிலும் தூக்கத்திலும் விருப்பம். அதற்கு தடை வரும்போது வெறுப்பு.
=> விருப்புமில்லை, வெறுப்புமில்லை:
ஆனால் குணாதீதத்தில் இருப்பவனுக்கு இவைகளில் எது வரும்போதும் அதை அவன் வெறுப்பதில்லை — ஸம்ப்ரவ்ருத்தாநி ந த்3வேஷ்டி. இவைகள் செல்வதைக் கண்டோ அல்லது செல்ல வேண்டுமென்றோ அவன் விரும்புவதில்லை — நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி. இந்த மூன்று குணங்களின் விளைவுகளை ஒரு ஞானியானவன் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளான். எனவே குழப்பம் அல்லது மந்தத் தன்மையை அனுபவிக்கும்போது, மனமானது தமஸின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான்; இதனால் அவன் அது நீங்க வேண்டுமென விரும்புவதில்லை. இங்கு குழப்பம் என்பது ஒரு ஞானிக்கு வெளிச் சூழ்நிலையைப் பொறுத்து தர்ம-அதர்ம விஷயத்தில் வரலாம்; ஆனால் ஆத்ம-அனாத்ம விஷயத்தில் எந்த குழப்பமும் அவனுக்கு உண்டாவதில்லை. ஆத்ம-அனாத்ம விஷயத்தில் உண்டாகும் குழப்பத்தைக் கடந்தவனையே நாம் குணாதீதன் என்கிறோம்.
மேலும் அமைதியின்மையும், செயலில் ஈடுபடும் நாட்டமும் ஏற்படும்போது அது ரஜஸின் விளைவு என்றும், சுகத்தை அனுபவிக்கும்போது அது சத்வத்தின் விளைவு என்றும் மிகத் தெளிவாக அறிகிறான். எனவே இந்த அனுபவங்களை அவன் வெறுப்பதோ, அல்லது இவைகளினால் ஈர்க்கப்படுவதோ இல்லை. மேலும் இவைகள்தான் வரவேண்டும் மற்றவைகள் விலகவேண்டுமென்ற விரும்புதல் எதுவும் கிடையாது. குணத்தை கடந்தவன் ஆதலால், குணங்களினால் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
குணங்களுக்கு ஆத்மாவுடனான தொடர்பு என்பது ஒரு பானைக்கு ஆகாசத்துடனான தொடர்பைப் போன்றது. பானை சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும், ஆகாசமானது அதனால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. அதுபோல ஆத்மாவானது மனதில் வெளிப்பட்டபோதிலும் அதன் குணங்களினால் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இதை அறிந்தவனுக்கு ‘நான்’ எனும் உணர்வு ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவில் உள்ளதே தவிர, எண்ணங்களின் மாற்றங்களில் அல்ல. எனவே மனதின் எந்தவொரு குறிப்பிட்ட நிலையைப் பற்றியும் அவனுக்கு கவலையோ எதிர்பார்ப்போ இல்லை. அவைகள் வந்தால் வரும்; போனால் போகும் அவ்வளவே. குணாதீதனான அவன் அது குறித்து கவலை கொள்வதில்லை.
தூய கண்ணாடியின் முன்னிலையில் எது தோன்றினாலும் அதை அது அப்படியே விளக்குகிறது. ஒன்றும் தோன்றாதிருக்கும் பொழுது கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. அதன் முன்னிலையில் பொருள்களின் தோற்றத்தாலும் மறைவாலும் கண்ணாடிக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. குணாதீதத்தில் சென்றவனது மனதில் முக்குணங்களின் தோற்றமும் மறைவும் அத்தகைய இடத்தையே பெறுகின்றன. குணங்களின் செயல்களுக்கிடையில் அவன் குணாதீதனாய் இருக்கிறான். அதாவது அவன் எப்போதும் நிஷ்டையில் இருக்கிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஜீவன் முக்தர்கள் உலகத்தில் வாழ்வது எங்ஙனம்? மீன் கொத்திப் பறவைகளைப்போன்று அவர்கள் உலகில் வாழ்கின்றார்கள். அப்பறவைகள் நீரில் ஆழ முழுகுகிறது என்றாலும் அதன் சிறகுகள் தண்ணீரால் நனைவதில்லை. இரண்டொரு துளி நீர் ஒட்டிக் கொண்டிருக்குமானால் சரீரத்தை அசைத்துச் சுலபமாக அதனை நீக்கிவிடுகிறது.
---------------------------------------------------------------------------------------------
||14.23|| அர்ஜுனனுடைய இரண்டாவது கேள்விக்கான விடை:
उदासीनवदासीनो गुणैर्योन विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ।। २३ ।।
உதா3ஸீநவதா3ஸீநோ கு3ணைர்யோ ந விசால்யதே ।
கு3ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட2தி நேங்க3தே ।। 23 ।।
य: ய: யார் उदासीनवतद् உதா3ஸீநவத்3 உதாசீனனைப் போன்று
आसीन: ஆஸீந: இருந்துகொண்டு गुणै: கு3ணை: குணங்களால்
न विचाल्यते ந விசால்யதே அசைக்கப்படுவதில்லை गुणा: एव கு3ணா: ஏவ குணங்களே
वर्तन्त इति வர்தந்த இதி தொழில் புரிகின்றன என்று य: अवतिष्ठति ய: அவதிஷ்ட2தி யார் ஆத்மாவில் நிலைத்திருக்கிறான் न इङ्गते ந இங்க3தே அசைகிறதில்லை.
உதாசீனனைப் போல வெறும் சாக்ஷியாய் இருந்துகொண்டு யார் குணங்களால் அசைக்கப்படுகிறதில்லையோ; குணங்களே தொழில் புரிகின்றனவென்று ஆத்மாவில் யார் அசையாது இருக்கிறானோ;
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான்.
விளக்கம்:
அர்ஜுனனின் இரண்டாவது கேள்விக்கு, அதாவது குணாதீதன் எப்படி நடந்து கொள்வான்? என்பதற்கு பதில் கூற ஆரம்பிக்கிறார் பகவான். சுலோகம் 23 முதல் 25 வரையில் மூன்று சுலோகங்களை இதற்காக எடுத்துக் கொள்கிறார்.
=> உதாசீனன்:
உதாசீனனைப் போல அமர்ந்துள்ளான்— உதா3ஸீநவத்3 ஆஸீந:, என்கிறார். இங்கு உதாசீனன் என்பது எந்த பக்கமும் சேராமலிருப்பதை(நிஷ்பக்ஷ), எந்தவொரு குறிப்பிட்ட நிலைபாட்டிற்கும் தன்னை அர்பணிக்காமல் வெறும் சாக்ஷியாக இருப்பதைக் குறிக்கிறது. இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது, எந்தப் பக்கமும் சேராமல் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாவது ஆள், உதாசீனன் எனப்படுகிறான். எந்தக் கருத்தும் இல்லாமல் வெறும் சாட்சியாக, மற்ற இருவரின் பார்வையிலும் அலட்சியமானவனாகத் தென்படுகிறான் உதாசீனன். ஆனால் உண்மையில் ஞானி எந்தப் பக்கமும் சாராதவனாய், தனது கருத்துக்காக இனியொருவனை சொல்லாலும் மனதாலும்கூட தாக்காதவனாக, வெறும் சாக்ஷியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
‘ஆஸீந’ என்பதன் நேரடிப் பொருள் உட்காருவதை அல்லது அமர்ந்து இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் இங்கு அது குணாதீதத்தில் முழுமையடைதல் என்பதை உறுதியாக கடைபிடிப்பவனை, குணத்தை தாண்டிச் செல்வதில் அர்ப்பணிப்புடன் இருப்பவனைக் குறிக்கிறது. சத்வகுணமோ, ரஜோகுணமோ, தமோகுணமோ எது பிரதானமாக இருந்தாலும் அதை மாற்ற அவன் விரும்புவதில்லை; மனதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். உதாசீனனைப் போல வெறும் சாக்ஷியாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இவ்விதம் எந்தவொரு குணத்தின் பலனிலும் பற்றில்லாதவனாய், அவன் அந்த குணங்களினால் அல்லது குணத்தின் காரியங்களினால் அசைக்கப்படுவதில்லை — கு3ணை: ந விசால்யதே. ஆத்மாவாக தன்னை அறிந்த இவனுடைய அறிவிலிருந்து அவன் அசைவதில்லை. குணங்களினால் உடல், மனம், உணர்வுகளை மட்டுமே பாதிக்கமுடியும்; ஆத்மாவை அல்ல. எனவே ஆத்மாவைத் தெளிவாக அறிந்தவனது அறிவையும் அவைகளால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே குணாதீதனான ஞானி அந்த அறிவிலேயே நிற்பவன் ஆகிறான். விவேக த3ர்ஷண அவஸ்தா த: — இவனுடைய அறிவிலிருந்து அசைப்படுவதில்லை, அறிவிலேயே நிற்பவன்.
=> அசையாதவன்:
இத்தகைய ஞானி, குணங்களே செயலைச் செய்கின்றன என்கிற அறிவில் நிலைத்தவனாய் ஆத்மாவில் அசையாது இருக்கின்றான். இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியில் பகவான், ‘குணங்களே செயல் புரிகின்றன — கு3ணா: ஏவ வர்தந்த’ என்கிறார். இங்கு இதன் பொருள் என்னவென்றால், இந்த மூன்று குணங்களே உலகமாகவும், உடல்-மனம்-உணர்வாகவும் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எப்படி? பிராணன் மற்றும் செயலுறுப்புக்களுக்கு(கர்மேந்திரியம்) ரஜோகுணமும், அந்தக்கரணம் மற்றும் ஞானேந்திரியங்களின் அறிதலுக்கு சத்வகுணமும் காரணமாக உள்ளது. தமோகுணமோ ஐம்பூதத்தின் வெளிப்பாடான உடல் மற்றும் உலகமாக மாறி நிற்கிறது. எனவே நம்மால் அறியப்படுகிற இவைகளனைத்தும் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறில்லை. எதை உணர்ந்தாலும், ஊகித்தாலும் அல்லது கற்பனை செய்தாலும்கூட அது இந்த குணங்களின் வெளிப்பாடாகத்தான் இருக்கமுடியும். இவ்விதமாக, இந்த குணங்களே தங்களுக்குள் வியாபாரம் செய்து கொள்கின்றன. கொடுக்கலும் வாங்கலும் அவைகளுக்குள் நிகழ்கின்றனவே தவிர, உண்மையில் ‘நான்’ எனும் ஆத்மா அச்செயல்களில் ஈடுபடுவதில்லை. அனைத்தின் ஆதாரமாக விளங்குவதன் மூலம் அவைகளுடனேயே ஒருவன் இருந்தபோதிலும் அவைகளால் அவன் பாதிக்கப்படுவதில்லை. இதுவே சாஸ்திரம் வெளிப்படுத்தும் உண்மை ஆகும். அந்த ஆதாரத்தில் நிலைத்திருப்பவன்(அவதிஷ்ட2தி), தனது இயல்பிலிருந்து அசைவதில்லை(ந இங்க3தே) என்கிறார் பகவான். ‘நான் குணங்களுக்குள் இல்லை; குணங்களின் சாக்ஷி’ என்கிற அறிவில் நிலைத்தவனாய், ‘நான்’ என்பதை உடல் மற்றும் மனதிலிருந்து வெளியே எடுத்தவனாய், தனது சொரூபத்திலிருந்து விலகாமல் இருக்கின்றான். ‘ஸ்வ ஸ்வரூபம் ப4வேத் ஸம்பத் । தத3ந்யத் ஸர்வம் விபத் ।। — நாம் நம் சொரூபத்தில் இருப்பதே செல்வம். நமக்கு வேறான அனைத்தும் வீழ்ச்சியே.’ இவ்விதம் குணங்களினால் ஏற்படும் மாற்றங்களால் கலங்காத குணாதீதன் அனைத்து சம்சாரத்திலிருந்தும் விடுபட்டவனாகின்றான்.
---------------------------------------------------------------------------------------------