||14.20|| ஞானப் பலனை விளக்குகிறார்:
गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादु:खैर्विमुक्तोऽमृतमश्नुते ।। २० ।।
கு3ணாநேதாநதீத்ய த்ரீந்தே3ஹீ தே3ஹஸமுத்3ப4வாந் ।
ஜந்மம்ருத்யுஜராது3:கை2ர்விமுக்தோऽம்ருதமச்1நுதே ।। 20 ।।
देहसमुद्भवान् தே3ஹஸமுத்3ப4வாந் தேகத்தை உண்டாக்கிய
एतान् त्रीन् गुणान् ஏதாந் த்ரீந் கு3ணாந் இந்த மூன்று குணங்களையும் अतीत्य அதீத்ய கடந்து जन्म मृत्यु जरा दु:खै: ஜந்ம ம்ருத்யு ஜரா து3:கை2: ஜனன, மரண, மூப்பு, துக்கத்திலிருந்து
विमुक्त: விமுக்த: முக்தியடைந்த देही தே3ஹீ தேகமெடுத்தவன்(ஜீவன்)
अमृतम् அம்ருதம் மரணமில்லாத் தன்மையை अश्नुते அச்1நுதே அடைகிறான்.
உடம்பை உண்டாக்கும் இம் முக்குணங்களையும் கடந்து, பிறப்பு இறப்பு மூப்பு துன்பத்தினின்று விடுபட்ட ஜீவன் மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தில், ஞானத்தின் பலனாகச் சொல்லப்பட்ட ப்ரம்ம சொரூபத்தை அடைதல் என்பதன் பொருள் இங்கு விளக்கப்படுகிறது. ப்ரம்ம சாக்ஷாத்காரத்தினால் வரும் நன்மை யாது என்பதை விளக்கும் சுலோகமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். குணங்களால் ஆகிய உடலில் ஜீவன் வசிக்கிறான். ஆனால் அவன் உடலோடு சம்பந்தப்பட்டவன் அல்ல. தேகத்திற்குரிய பிறப்பு, இறப்பு, வயோதிகம் இவைகளால் வரும் துன்பம் ஒரு ஜீவன் முக்தனுக்குக் கிடையாது. இவ்வுடலில் இருக்கும்பொழுதே அவன் தங்குதடையற்ற ப்ரம்மானந்தத்தில் இருக்கிறான். குணாதீதத்தில் அவன் பேரானந்தம் துய்க்கிறான்.
=> குணங்களைக் கடப்பது மோக்ஷம்:
சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் இந்த மூன்று குணங்களே உடல்-மனதின் உருவாக்கத்திற்குக் காரணம். குணமானது ஆசையைத் தூண்டி கர்மத்தில் ஈடுபடுத்துகிறது. கர்மத்தின் பலனாக பாப-புண்ணியம் உண்டாகிறது. இந்த பாப-புண்ணியத்தைக் கழிக்க அல்லது அதன் விளைவாக வருகிற சுக துக்கத்தை அனுபவிக்க உடல் உண்டாகிறது. இதனால் மீண்டும் குணம், மீண்டும் ஆசை, மீண்டும் கர்மம் என இந்த சுழற்சி தொடர்கிறது.
குணம் -> ஆசை -> கர்மம் -> புண்ணிய, பாபம் -> உடல் -> குணம் …
இது இவ்விதம் இருக்கும்போது இந்த உடலில் இருந்துகொண்டு அவற்றை எப்படிக் கடப்பது? உண்மையில், ஆத்மாவானது ஏற்கனவே இந்த எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டுள்ளது. எனவே இந்த குணங்களை கடக்க அல்லது தாண்டிச் செல்ல எந்த நகர்வும் தேவையில்லை. ‘முக்குணங்களிலிருந்தும் விடுபட்ட சுய-சொரூபம் ஆத்மா’ என்கிற அறிவு மட்டுமே போதுமானது. அதன்மூலம், உடம்பில் வசிக்கின்ற தேகியானவன்(தே3ஹீ), பிறப்பு, இறப்பு, முதுமை உட்பட உடல் சார்ந்த எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடைகிறான். இங்கு ‘து3:க2’ எனும் ஒரு சொல் அனைத்து விதமான மன உளைச்சல்களையும் குறிப்பதாக உள்ளது. இவ்வுலகில் ஒருவனின் முழு வாழ்க்கையும் துன்பத்திலிருந்து துன்பத்திற்கு, இடையில் சிறிது சுகத்துடன் நகர்வதாக இருக்கிறது. இத்தகைய இயல்பு கொண்ட துன்பத்திலிருந்துதான் ஒருவன் விடுதலைப் பெற நினைக்கிறான். ஆத்ம-அறிவின் மூலம் குணங்களைக் கடந்தவன் உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து துன்பத்திலிருந்து விடுதலையடைகிறான். இத்தகையவனே ஜீவன் முக்தன் என அழைக்கப்படுகிறான்.
=> ஜீவன் முக்தன்:
மேலே வரையறுப்பட்ட அந்த விடுதலை என்பது ஒருவன் உயிருடன் இருக்கும்போதே கிடைக்கப் பெறுவது ஆகும். தன்னறிவின் காரணமாக அவன் வாழும்போதே தன்னை பிறப்பு, இறப்பு, வயோதிகம், துன்பம் முதலிய விரும்பத்தகாத எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவனாக அங்கீகரிக்கிறான். ஆத்மா என்பது இன்றே, இப்போதே விடுபட்டதாக இருப்பதால், இதை அடையாளம் கண்டுகொள்ள அவன் மரணம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதை அறிபவன் நித்தியமான ப்ரம்மத்தை அடைகிறான்; அமிர்த நிலையை, மரணமற்ற நிலையை அடைகிறான் — அம்ருதம் அச்1நுதே. குணத்திற்கு கட்டுப்படாத குணாதீதனாக தன்னை அறிந்தவனாகையால் அவனது உடல் இறக்கும்போதும் அவனுக்கு மறுபிறப்பு இல்லை. விதேஹ முக்தனாகிறான். நித்தியமானவனாக தன்னை உணர்ந்தவனுக்கு பிறப்பு எப்படி சாத்தியமாகும்? காலத்தைக் கடந்தவனாக தன்னை அறிந்தவனுக்கு மறுபிறப்பு எப்படி நிகழும்?
இப்பொழுது கேள்வி ஒன்று கேட்பதற்கான சந்தர்ப்பம் உண்டாகிறது. அர்ஜுனன் அதைப் பயன்படுத்துகிறான்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
சரீரம் தோன்றியிருக்கிறது. அது மறுபடியும் நசித்துப் போகும். ஆனால் ஆத்மாவுக்கு மட்டும் நாசமே இல்லை. கொட்டைப் பாக்கைப் போல் ஆத்மாவும் உடலும் இருக்கின்றன. பாக்கு முற்றினால் கொட்டை வேறு, மேல்தோல் வேறாகிவிடும்; முற்றாமல் காயாக இருக்கும்போது அப்படிப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஈஷ்வர தரிசனம் உண்டான பிறகு ஆத்மா வேறு, சரீரம் வேறு என்ற ஞானம் உதிக்கும்.
---------------------------------------------------------------------------------------------
||14.21|| அர்ஜுனனின் கேள்வி:
अर्जुन उवाच ।
कैर्लिङ्गैस्त्रीन् गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचार: कथं चैतांस्त्रीन् गुणानतिवर्तते ।। २१ ।।
அர்ஜுந உவாச
கைர்லிங்கை3ஸ்த்ரீந் கு3ணாநேதாநதீதோ ப4வதி ப்ரபோ4 ।
கிமாசார: கத2ம் சைதாம்ஸ்த்ரீந் கு3ணாநதிவர்ததே ।। 21 ।।
अर्जुन उवाच அர்ஜுந உவாச அர்ஜுனன் சொன்னது
प्रभो ப்ரபோ4 பிரபுவே कै: लिङ्गै: கை: லிங்கை: எந்த அடையாளங்களால்
एतान् त्रीन् गुणान् ஏதாந் த்ரீந் கு3ணாந் இந்த மூன்று குணங்களையும்
अतीत: भवति அதீத: ப4வதி கடந்து நிற்பவன் ஆகிறான்
किम् आचार: கிம் ஆசார: அவனுடைய ஆசாரம் எத்தகையது च ச மேலும்
कथं கத2ம் எங்ஙனம் एतान् त्रीन् गुणान् ஏதாந் த்ரீந் கு3ணாந் இந்த மூன்று குணங்களை अतिवर्तते அதிவர்ததே கடக்கிறான்.
அர்ஜுனன் சொன்னது:
இறைவா, எந்த அடையாளங்களால் [ஜீவன்] இந்த மூன்று குணங்களையும் கடந்து நிற்பவன் ஆகிறான்? அவனது நடத்தை யாது? எங்ஙனம் இம் முக்குணங்களைக் கடக்கிறான்?
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
விளக்கம்:
குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் பற்றிய விசாரம் இந்த சுலோகத்திலிருந்து தொடங்குகிறது. அதை அர்ஜுனன் தனது மூன்று கேள்விகளின் வழியாக ஆரம்பிக்கிறான்.
(1) மூன்று குணங்களையும் கடந்துவிட்டதின் அடையாளங்கள் அல்லது அறிகுறிகள் எவை?
(2) குணங்களைக் கடந்தவன் எப்படி தன்னை நடத்திக் கொள்வான்? இது இரண்டாவது அத்தியாயத்தில் ‘ஸ்திதப்ரக்ஞன்’ குறித்து அர்ஜுனன் கேட்ட கேள்வியை ஒத்ததான கேள்வி ஆகும். அங்கு, ‘ஸ்திதப்ரக்ஞன் எதைப் பேசுகிறான்? எப்படி அமர்கிறான்? எவ்வாறு நடக்கிறான்?’ என விரிவாகக் கேட்கப்பட்டது. இங்கு அதை பொதுவான நோக்கில், ‘குணங்களைக் கடந்தவனது நடவடிக்கை எப்படி இருக்கும்?’ என்பதாக கேட்கிறான்.
(3) எப்படி அவன் இந்த முக்குணங்களையும் கடந்தான்?
அடுத்த சுலோகத்திலிருந்து இருபத்தி ஏழாவது சுலோகம் வரை இதற்கான விளக்கத்தை பகவான் விரிவாக அளிக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------