||14.24|| சம நோக்குடன் நடப்பவன் குணாதீதன் என்கிறார் பகவான்:
समदु:खसुख: स्वस्थ: समलोष्टाश्मकाञ्चन: ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्य निन्दात्म संस्तुति: ।। २४ ।।
ஸமது3:க2ஸுக2: ஸ்வஸ்த2: ஸமலோஷ்டாச்1மகாஞ்சந: ।
துல்யப்ரியாப்ரியோ தீ4ரஸ்துல்யநிந்தா3த்மஸம்ஸ்துதி: ।। 24 ।।
धीर: தீ4ர: பேரறிஞன்(ஞானி) सम दु:ख सुख: ஸம து3:க2 ஸுக2: துக்கத்தையும் சுகத்தையும் சமமாக கருதுகிறவன் स्वस्थ: ஸ்வஸ்த2: ஆத்ம சொரூபத்திலிருப்பவன்
सम लोष्ट अश्म काञ्चन: ஸம லோஷ்ட அச்1ம காஞ்சந: மண், கல், பொன் இவைகளைச் சமனாகக் கருதுபவன் तुल्य प्रिय अप्रिय: துல்ய ப்ரிய அப்ரிய: இனியதையும் இன்னாததையும் நிகராகக் கருதுபவன் तुल्य निन्दा आत्म संस्तुति: துல்ய நிந்தா3 ஆத்ம ஸம்ஸ்துதி: இகழ்ச்சி புகழ்ச்சியை ஒன்றாகக் கருதுபவன்;
பேரறிஞன், துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்டவன், ஆத்மாவில் நிலைத்தவன், மண், கல், பொன்னை நிகராகக் காண்பவன், இனியதையும் இன்னாததையும் சமமாகப் பார்ப்பவன், இகழ்ச்சி புகழ்ச்சியை ஒரே பாங்குடன் பார்ப்பவன்;
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் பகவான், குணாதீதனானவன் மனதளவில் சம நோக்குடன் கூடியவனாக இருக்கின்றான் எனக் கூறுகிறார்.
=> ஆத்மா சொரூபத்திலிருப்பவன்:
‘ஸ்வஸ்த2’ எனும் சொல்லுக்கு இரு பொருள் உண்டு.
(1) தன்னிடத்தில் நிலைத்திருப்பவன் — ஸ்வே ஆத்மநி திஷ்டதி. குணங்களுக்கு அப்பாற்பட்டதான ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவில் ‘நான்’ எனும் அபிமானத்தை வைத்தவன். ஆத்ம சொரூபத்திலிருப்பவன் என்பது பொருள்.
(2) தன்னிடத்தில் மகிழ்ந்திருப்பவன் — ஸ்வஸ்மிந் திஷ்டதி. மனத்திலோ அல்லது வெளி உலகத்திலோ என்ன நடந்தாலும் அவன் தன்னிடத்தில் மகிழ்வாக இருக்கின்றான். ஜீவனத்திற்காக அவன் காற்று, நீர் போன்ற வெளிப்பொருட்களைச் சார்ந்திருந்த போதிலும், அவனது மனதிருப்திக்கு என வெளியிலிருந்து எதுவும் அவனுக்குத் தேவையில்லை.
குணாதீதனான ஞானி சம-திருஷ்டியுடன் கூடியவனாக இருக்கின்றான். பேதம் என்பது வியாவஹாரிகம்; வெளியில் காணப்படுவது. ஆனால் அதற்கு ஆதாரமாக விளங்குகிற அதிஷ்டானத்தில் எந்த பேதமும் இல்லை என்கிற அறிவில் நிலைத்த காரணத்தினால் அவன் இருமையினால் பாதிக்கப்படாதவன்; சமநோக்குடன் கூடியவன்.
=> சுக-துக்கம்:
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கொண்டவன் — ஸம து3:க2 ஸுக2:. ஒருவனது வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் மகிழ்ச்சியையும், சில சூழ்நிலைகள் துக்கத்தையும் தருவதாக அமைகின்றன. இந்த ஜென்மத்தின் கர்மமும், முந்தைய ஜென்மங்களின் கர்மமும் இச்சூழ்நிலைகளை ஒருவனுக்கு மாறி மாறிக் கொடுக்கின்றன. குணாதீதன் இதை எப்படி எதிர்கொள்கிறான்? ஆத்ம சொரூபத்தை அறிந்தவனுக்கு இவைகளிரண்டும் ஒன்றே. இன்பத்திலும் துன்பத்திலும் அவன் சமமாகவே இருக்கின்றான். இங்கு ஒரு விஷயத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். சமமாக எடுத்துக் கொள்ளுதல் என்பது இங்கு ஒரு மனப்பான்மையாகவோ, கர்மயோகம் எனும் சாதனத்தின் மூலம் பயிற்சி செய்யப்பட்ட ஒரு பண்பாகவோ கூறப்படவில்லை. சுக-துக்கம் உண்மையில் ஏற்படுபவை என்கிற நோக்கில், வெளிச் சூழ்நிலைகளை ஈஷ்வரனின் பிரசாதமாக சமமாக ஏற்றுக் கொள்ளுதல் கர்மயோகமாகும். இதில் ஏற்றுக் கொள்ளுதல் என்பது மனத்தூய்மைக்கான சாதனமாக, ஒரு பாவனையாக செய்யப்படுகிறது. ஆனால் இந்த சுலோகத்தில் பகவான் குணாதீதனைப் பற்றிப் பேசுகிறார். சத்வகுணத்தால் உருவாக்கப்படும் சுகமும், ரஜோகுணத்தினால் உருவாக்கப்படும் துக்கமும், பல்வேறான வெளி சூழ்நிலைகளினால் மனதில் தோன்றுகிறது; ‘நான்’ அதனால் பாதிக்கப்படுவதில்லை என இரண்டையும் அவன் சமமாக எடுத்துக் கொள்கிறான்.
=> கல்-மண்-பொன்:
‘ஸம லோஷ்ட அச்1ம காஞ்சந’ இந்த வெளிப்பாட்டை நாம் ஏற்கனவே ஆறாவது அத்தியாயத்தில்(6.8) பார்த்துள்ளோம். ‘லோஷ்ட’ எனில் களிமண், ‘அச்1ம’ எனில் கல் மற்றும் ‘காஞ்சந’ எனில் தங்கம். மண், கல், பொன்னை நிகராகக் கருதுபவன் குணாதீதன் என்கிறார் பகவான். அனைத்தும் பூமிக்கு சொந்தமானவை என்கிற நோக்கில் அவைகளில் எந்த வித்தியாசத்தையும் இவன் பார்ப்பதில்லை. தங்கம் என்பது அரியதான உலோகம் என்கிற அங்கீகாரம் இருந்தபோதிலும், கல்லை விட பொன் தனது பாதுகாப்பை இன்னும் அதிகமாக உறுதிசெய்யும் என்கிற ஏற்றிவைத்தல் எதுவும் அவனிடமில்லை. ஒரு பொருளின் மீது ஏற்றிவைக்கப்படும் எந்தவொரு மதிப்பும் தனியொருவனின் அகநிலைச் சார்ந்தது என்பதை தெளிவாகப் புரிந்தவனாக அனைத்தையும் சமநோக்குடன் பாவிக்கின்றான்.
=> இனியது-இன்னாதது:
விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத நிலைகள் இரண்டையும் நிகராகக் கருதுபவன் — துல்ய ப்ரிய அப்ரிய, என்கிறார் பகவான். இனிய நிகழ்வுகள்(ப்ரிய) மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள்(அப்ரிய) இந்த குணாதீதனை தொந்தரவு செய்வதில்லை. இதற்கு காரணமாக இருப்பது, இந்த நிகழ்வுகள் குறித்த அவனது அணுகுமுறை அல்ல, அவனது ஞானம் ஆகும்.
=> புகழ்ச்சி-இகழ்ச்சி:
மேலும் அவன் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சியை ஒரே பாங்குடன் எடுத்துக் கொள்கிறான் — துல்ய நிந்தா3 ஆத்ம ஸம்ஸ்துதி. தான் புகழப்படும்போது மகிழ்ச்சியடைவதோ, அல்லது நிந்திக்கப்படும்போது அது குறித்து வருத்தம்கொள்வதோ கிடையாது. ஆத்மாவைப் புகழ்வதன்மூலம் அதன் மகத்துவத்தைக் கூட்டவோ அல்லது எந்த தவறான புரிதலாலும் அதைச் சேதப்படுத்தவோ முடியாது.
இவ்விதம் உடல்-சார்ந்த மற்றும் வாக்கு-சார்ந்த இருமையினால் குணாதீதன் பாதிக்கப்படுவதில்லை. அனைத்தையும் அவன் சமானமாகக் கருதுகிறான்.
---------------------------------------------------------------------------------------------
||14.25|| குணாதீத இலக்கணம் மேலும் தொடர்கிறது?
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयो: ।
सर्वारम्भपरित्यागी गुणातीत: स उच्यते ।। २५ ।।
மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: ।
ஸர்வாரம்ப4பரித்யாகீ3 கு3ணாதீத: ஸ உச்யதே ।। 25 ।।
मान अपमानयो: तुल्य மாந அபமாநயோ: துல்ய மானத்திலும் அவமானத்திலும் சமமானவன்
मित्र अरि पक्षयो: तुल्य மித்ர அரி பக்ஷயோ: துல்ய நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன் सर्व आरम्भ परित्यागी ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3 காம்ய கர்மத்தை தியாகம் செய்தவன் स ஸ அவன் गुणातीत: கு3ணாதீத: குணாதீதன் என்று
उच्यते உச்யதே சொல்லப்படுகிறான்.
மான அவமானத்தை நிகராக நினைப்பவன், நண்பனிடத்தும் பகைவனிடத்தும் ஒரே பாங்குடையவன், தனக்கெனச் செயல் செய்யாதவன் யாரோ, அவன் குணாதீதன் எனப்படுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
விளக்கம்:
குணங்களில் கட்டுண்டு அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு மானம், அவமானம், நட்பு, பகை முதலியன உண்டு. தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு தனக்கென செயல் செய்தலும் உண்டு. ஆனால் குணங்களைக் கடந்த நிறை ஞானிக்கு இவையொன்றுமில்லை என்கிறார் கிருஷ்ணர்.
=> மான-அவமானம்:
குணாதீதன், மரியாதை(மாந) மற்றும் அவமரியாதை(அபமாந) அல்லது நிராகரிப்பு ஆகியவற்றில் சமமாக நடக்கின்றான் — மாந அபமாநயோ: துல்ய. ஒவ்வொரு மனிதனும் இந்த இரு விஷயங்களையும் விதிவிலக்கில்லாமல் அனுபவிக்கிறார்கள். ஏனெனில் மக்கள் பொதுவாக தங்களது சொந்தப் புரிதல் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் மற்றவர்களைப் புகழ்கிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள். எனவே ஞானியோ அல்லது அக்ஞானியோ யாராக இருப்பினும் பாராட்டு அல்லது கண்டனத்திற்கு ஆளாக நேரிடுகிறது. குணங்களைக் கடந்தவன், குணங்களின் இந்த வெளிப்பாட்டிற்கு தன்னை வசப்படுத்திக் கொள்வதில்லை. மரியாதையோ, அவமதிப்போ, புகழ்ச்சியோ அல்லது நிந்தனையோ அனைத்திலும் சமமாகவே இருக்கின்றான்.
=> நண்பன் - பகைவன்:
மேலும் நண்பன் அல்லது பகைவனிடம் அவன் ஒரே பாங்குடன் நடந்துகொள்கின்றான் — மித்ர அரி பக்ஷயோ: துல்ய, என்கிறார் பகவான். இங்கு, ஒரு ஞானிக்கு எதிரி என்பவன் சாத்தியமா? அவனுக்கு எப்படி பகைவர்கள் இருக்கமுடியும்? என்கிற கேள்வி எழலாம். இந்த சந்தேகத்தை எதிர்பார்த்தவராக சங்கரர், தனது பாஷ்யத்தில் இதற்கான குறிப்பு ஒன்றை அளிக்கிறார். ஒரு ஞானி தனது சொந்த இயல்பினால் எவரிடமும் பகைமை பாராட்டாதவனாக, அனைவரிடமும் பாரபட்சமற்றவனாக இருக்கிறான். ஆனால் அவனுடன் தொடர்புடைய மற்றவர்கள், தங்களது மனநிலைக்கு ஏற்ப அவனை ஒரு நண்பனாகவோ அல்லது எதிரியாகவோ பாவிக்கமுடியும். எனவே மற்றவர்கள் ஒரு ஞானியை எப்படிப் பார்த்தாலும் சரி, அவர்களின் உணர்ச்சிகளையும் செயல்களையும் அவன் உள்வாங்கிக் கொள்வதில்லை. ஏனெனில் அவைகள் அனைத்தும் அவரவர்களின் சொந்த குணாதிசயங்களின் வெளிப்பாடாக நிகழ்கிறது; சாராம்சத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பதை அவன் அறிவான். எனவே குணாதீதனுக்கு பகைவனோ அல்லது நண்பனோ கூட இல்லை, அவனுடைய பார்வையில் இருவரும் ஒன்றே.
=> செயல்களைத் துறந்தவன்:
இறுதியாக பகவான் குணாதீதனை ‘ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3’ எனக் கூறுகிறார். அதாவது, செயல்களையும் அதன் கர்மபலனையும் துறந்தவன் என்கிறார். ஏதோவொன்றை அடையும் பொருட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட பலனை அடையவேண்டுமென்ற விருப்பத்தால் தொடங்கப்படும் செயல் ‘ஆரம்ப4’ எனப்படும். தன்மீதான அதிருப்தியின் காரணமாக, ஒரு செயலை ஆரம்பித்து அதில் கிடைக்கின்ற வெற்றியைக் கொண்டு அவன் திருப்தியைத் தேடுபவனாகிறான். பொதுவாக அதிருப்தி உணர்விலிருந்து பலவிதமான ஆசைகள் உண்டாகின்றன. எனவே அவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற அழுத்தத்திலிருந்து ஒரு செயல் தொடங்கப்படுகிறது. அது ‘ஆரம்ப4’ எனப்படுகிறது. இவற்றையெல்லாம் துறந்தவனே ஞானி. துறத்தல் அல்லது தியாகம் என்பதை நாம் சாதாரணமாக இழத்தலை முன்னிறுத்துவதாகப் புரிந்து கொள்கிறோம்.
ஒருவன் தனது புனித யாத்திரையில் விரும்பியதை விட்டுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதில் தொடங்கி, திருப்பதியில் காணிக்கையாக தலைமுடியைக் கொடுக்கும் பக்தன் வரையிலான தியாகத்தில் ஒரு இழப்பு உணர்வை அவர்களிடம் காணமுடிகிறது. ஆனால் ‘பரித்யாகீ3’ என்பவனுக்கு அந்த இழப்பு உணர்வானது இருப்பதில்லை. வீட்டிலுள்ள குப்பையை அகற்றும்போது எவ்விதம் எந்த இழப்பும் உணரப்படுவதில்லையோ அவ்விதமாக துறத்தல் நடைபெறவேண்டும். ஆசைகளுடன் கூடியதாக அல்லாமல், பூரணமானதாக தனது சுயத்தை பார்க்கின்ற ஒருவனுக்கே அத்தகைய துறத்தல் சாத்தியமாகிறது. தன்னை முழுமையானவனாகப் பார்க்கின்ற காரணத்தினால் முக்குணத்தின் பிடியிலிருந்து விடுபட்ட இந்த குணாதீதன், எந்தவொரு செயலையும் துவங்கத் தேவையில்லை என்பதை உணர்கிறான்.
ஆனால் சங்கரர், கீதை, உபநிஷத்துக்கள் மற்றும் ப்ரம்ம-சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியது மட்டுமல்லாமல், பிரகரண-கிரந்தங்களையும் இயற்றியுள்ளார். ‘ஆரம்பம்’ இல்லாமல் எப்படி இவரால் இவையனைத்தையும் செய்திருக்க முடியும்? கிருஷ்ணர் கீதை உபதேசிப்பதும் ஆரம்பம்-தானே? ஒருவன் குணாதீதனாக இருந்தாலும் அல்லது குணங்களால் கட்டுண்டவனாக இருந்தாலும் அவன் காரியங்களைச் செய்துதான் ஆகவேண்டும். அதனால் ஆரம்பம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. எனவே, இங்கு ‘ஆரம்ப4’ என்பது முயற்சி என வரையறுக்கப்படுகிறது. அதாவது அதிருப்தியின் காரணமாக ஒரு செயலை மேற்கொண்டு அதன் மூலம் ஒருவன் தன்னை முன்பை விடச் சிறந்தவனாக ஆக்கிக் கொள்ளத் தொடங்கப்படும் முயற்சி இங்கு ‘ஆரம்ப4’ எனப்படுகிறது. ஒரு கோணத்தில், ‘ஸர்வ ஆரம்ப4 பரித்யாகீ3’ என்பது காமிய கர்மத்தை தியாகம் செய்தவன் எனவும் சொல்லப்படும். அதாவது, தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் உந்துதலால் அவன் எந்தச் செயலையும் செய்வதில்லை. குணாதீதனுடைய செயல்கள் அனைத்தும் மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்படும் செயல்களாகவே இருக்கின்றன — லோகஸங்க்3ரஹார்த்தம். எனவே மக்களால் பெறப்பட்ட நன்மையின் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது, சங்கரர் தனது அனைத்து படைப்புகளையும் அவர்களின் நலனுக்காக எழுதினார் எனக் கூறலாம். அல்லது அவரது சொந்த நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது, இவ்விதமாக பணிசெய்வது அவரது பிராரப்த-கர்மம் எனவும் கூறலாம். அவரது பிராரப்தமோ அல்லது நம்முடைய நல்ல பிராரப்தமோ, அவரது சில திறன்களை இவ்விதமாக வெளிப்படுத்தியிருக்கிறது அவ்வளவே. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் அச்செயல்களிலிருந்து எதையும் பெறவில்லை. ஆனந்தம் அல்லது மனதிருப்தி என எந்த பலனையும் எதிர்பார்த்து அது செய்யப்படவில்லை.
இவ்விதம் இந்த மூன்று சுலோகங்களும் அர்ஜுனனுடைய இரண்டாவது கேள்விக்கான விடையாக வந்துள்ளன.
இனி, எந்த உபாயத்தைக் கையாண்டு ஞானி மூன்று குணங்களையும் கடக்கிறான் என்கிற மூன்றாவது கேள்விக்கான விடையாக அடுத்த சுலோகம் வருகிறது.
---------------------------------------------------------------------------------------------