||13.8|| ஞானத்தின் தொடர்ச்சி:
इन्द्रियार्थेषु वैराग्यमनहङ्कार एव च ।
जन्ममृत्युजराव्याधिदु:खदोषानुदर्शनम् ।। ८।।
இந்த்3ரியார்தே2ஷு வைராக்3யமநஹங்கார ஏவ ச ।
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி4து3:க2தோ3ஷாநுத3ர்ச1நம் ।। 8 ।।
इन्द्रिय अर्थेषु இந்த்3ரிய அர்தே2ஷு புலனின்பங்களில் वैराग्यम् வைராக்3யம் விருப்பமின்மை अनहङ्कार एव च அநஹங்கார ஏவ ச அஹங்காரமின்மை
जन्म मृत्यु जरा व्याधि दु:ख दोष अनुदर्शनम् ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி4 து3:க2 தோ3ஷ அநுத3ர்ச1நம் பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, துக்கம் இவைகளின் கேடுகளை எண்ணிப் பார்த்தல்.
புலன் விஷயங்களில் விருப்பமின்மை, அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, துக்கம் இவைகளின் கேடுகளைக் காணுதல் …
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.
விளக்கம்:
ஞானத்திற்கானத் தகுதிகள் இந்த சுலோகத்திலும் தொடர்கிறது. இதில் மூன்று தகுதிகள் பேசப்படுகின்றன.
=> பற்றின்மை:
‘வைராக்3யம்’ எனில் விருப்பமின்மை; பற்றில்லாதிருத்தல். இதற்கு ‘இந்த்3ரிய அர்தே2ஷு’ என்கிற அடைமொழி இங்கு கொடுக்கப்படுகிறது. நமது புலன்களினால் அனுபவிக்கப்படும் விஷயங்களில், அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் பற்றின்மை. த்3ருஷ்ட ச்1ருத அநுபூ4த விஷயேஷு வைராக்3யம் — பார்த்த கேள்விப்பட்ட அனுபவிக்கப்பட்ட விஷயங்களில் பற்றின்மை. இதில் ‘த்3ருஷ்ட’ என்பது கண்களினால் மட்டும் பார்த்த ஆனால் அனுப்பவிக்காத பொருளையும், ‘ச்1ருத’ என்பது மற்றவர்களால் சொல்லக் கேள்விப்பட்ட பொருளையும், ‘அநுபூ4த’ என்பது நம்மால் ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட விஷயத்தையும் குறிக்கிறது. இந்த மூன்றிலும் விருப்பமில்லாமலிருத்தல் வைராக்கியம் ஆகும். பொதுவாக வைராக்கியம் எனில் வெறுப்பு என மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ‘விராக3’ எனில் வெறுப்பு அல்ல; அந்தக் குறிப்பிட்ட பொருளின் சுகத்திற்கு அடிமையாகாமல் இருத்தலை, அப்பொருளைப் பற்றிய அறிவார்ந்த மதிப்பீட்டைக் குறிக்கிறது. இப்பண்பு காலப்போக்கில் வருகின்ற ஒருவித மனப்பக்குவம் ஆகும். இது ஒரு செயல் அல்ல, பாவனை.
வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்பதைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், நடத்தையில் ஒருவித முதிர்ச்சியையும் உணர்வு நாட்டங்களில் ஆர்வமின்மையையும் அடைகிறோம். ஏக்கம் நீங்கிய இந்த வைராக்கிய நிலை இருக்கும்போது மட்டுமே சன்மார்க்கத்தைப் பின்பற்றுவது சாத்தியப்படுகிறது. ஒருவனுக்கு ஒரு ஆசை இருக்கலாம் ஆனால் அது தன்னை மகிழ்ச்சியாக அல்லது அதிகப் பாதுகாப்பாக வைக்கப்போகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதன்மேல் ஏக்கம் இருக்கக்கூடாது. எவனிடமிருந்து இத்தகைய ஏக்கமானது நீங்கியுள்ளதோ அவன் ‘விராக3’ என்றும், அவனது அந்த மனநிலை ‘வைராக்3யம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* வைராக்கியத்திற்கான உபாயம்:
(i) விவேகம் - சரியான விவேகமே வைராக்கியத்தை அளிக்கிறது. அறிவானது பழுக்கும்போது அது வைராக்கியமாக ஆகிறது. அறிவு இல்லாமல் வைராக்கியம் ஏற்பட்டாலும் அதிலிருந்து எளிதில் வீழ்ந்து, விஷயத்திற்குள் மீண்டும் நுழைந்துவிடுவோம். எனவே பிரபஞ்சத்தினுடைய சொரூப ஞானம்தான் வைராக்கியத்தின் ஆதாரம். உதாரணமாக,
(1) ஸர்வேந்த்ரியாநாம் ஜரயந்தி தேஜ: - அனைத்து போகங்களின் பலன்களும் என்னை பலகீனப்படுத்தும் — கடோபநிஷத்தில் யமதர்மராஜாவின் கேள்விக்கு நசிகேதனின் பதில்.
(2) ந வித்தேந தர்பணீய: மநுஷ்ய: - ஒரு மனிதன் செல்வத்தினால் திருப்தியை அடைய முடியாது; மனநிறைவை கொடுக்கும் சக்தி செல்வத்திற்கு கிடையாது. சிலர் பணம் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமென்றும், பணமிருக்கும் சிலர் அதிகாரம் அதைச் செய்யுமென்றும் அவைகளின்பால் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவைகள் அனைத்தும், இல்லாத ஒன்றின்மீது இருப்பதாக ஒரு மதிப்பை ஏற்றிவைத்தலையே குறிக்கிறது. பணம் என்பது பயனுள்ளதுதான்; ஆனால் அது மகிழ்ச்சியின்மை, நிறைவின்மை, அமைதியின்மை போன்ற பிரச்சினைகளைத் தீர்த்துவிடும் என்கிற எதிர்ப்பார்ப்புதான் ஒருவனை ஏமாற்றமடையச் செய்கிறது. எனவே ஒருவனின் சொந்த கணிப்புகளும் எதிர்பார்ப்புகளுமே அவனை ஏமாற்றுகிறது. அவைகளை அகற்றும்போது, வைராக்கியம் அதிகரிக்கிறது.
(3) அநித்யத்வ பு3த்3தி4: - எதுவும் நிலையானது அல்ல; உடலும், மனமும் புலன்களும் மற்றும் அதனுடைய விஷயங்களும் என எதுவும் நிலையானது அல்ல. இந்த அறிவினால் பற்றின்மை உறுதியை அடைகிறது.
(4) பந்த4ஹத்வம் - இந்த உலகத்திலுள்ள எதுவும் நம்மை பந்தப்படுத்தும் தன்மையுடையதாக உள்ளது. பழகிவிட்டால் நம்மை அடிமைப்படுத்திவிடும் எனும் விவேகம் அவசியம் தேவை. அவிசார்ய பர்யந்தம் ரமணீயம், அதாவது விசாரம் செய்யப்படாத வரை இந்த உலகம் அழகானது எனக் கூறப்படுகிறது. எனவே பகுப்பாய்வின் மூலம் அதன் உண்மைத்தன்மையை புரிந்து, அதை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைப்பது வைராக்கியம்.
(ii) மேலான விஷயத்தில் அபிமானம் வைக்கின்றபோது கீழான விஷயம் பெரிதாகத் தெரியாது; மனம் அந்த கீழான விஷயத்திலிருந்து விடுதலை அடைகிறது. உதாரணமாக, அறிவில்(விக்ஞானமய கோஷத்தில்) அபிமானமிருக்கும்போது உணவில்(அன்னமய கோஷத்தில்) நாட்டம் இருக்காது.
ஒன்றை அனுபவிக்கும்போது கிடைக்கின்ற ஆனந்தத்தை விட அதில் வைராக்கியம் உண்டாகும்போது அவன் நூறு மடங்கு அதிக ஆனந்தத்தை அனுபவிக்கிறான் என தைத்திரீய உபநிஷத் கூறுகிறது. உண்மையில் வைராக்கியமே அதிக சுகத்திற்கு காரணம். எனவே அதற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
*வைராக்கியமின்மையால் வரும் விளைவு:
(i) விக்ஷேபம் - மனம் சஞ்சலமாகவே இருக்கும். மனமானது எதையாவதொன்றை மாறி மாறி நினைத்துக் கொண்டேயிருக்கும்.
(ii) மோக்ஷ மார்க்கத்தில் செல்ல முடியாது.
* வைராக்கியத்தின் விளைவு:
(i) மனவமைதி
(ii) மோக்ஷ மார்க்கத்தில் செலுத்தும்.
ஒரு குறிப்பிட்ட ஆசை உண்டாகும்போது அதை விவேகத்தினால் நீக்க முடியுமா என முதலில் முயலவேண்டும். அப்படி முடியவில்லையெனில் தர்மப்படி அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதனால் காலப்போக்கில் விவேகம் வந்தமையும். வைராக்கியம் என்பது திணித்துக் கொள்ளப்பட வேண்டியவொன்று அல்ல. அறிவினால் அந்த பாவனை தானாக வந்தமைவதற்கு ஏற்ற அனைத்தையும் செய்யவேண்டும். எனவேதான் முழு முயற்சியுடன் தர்மம், விவேகம் மற்றும் அப்யாசம் இவற்றில் ஈடுபடுதல் சிறந்தது. ஒரு சாதகன் உத்தம(மேலான) அதிகாரியாக இருக்கின்ற பட்சத்தில் விவேகத்தினாலேயே அவன் வைராக்கியத்தை அடைந்து விடுகிறான். ஆனால் மத்யம(இடைநிலை) மற்றும் மந்த(கடைநிலை) அதிகாரிகளுக்கு அது அவ்விதம் உண்டாவதில்லை. எனவே தர்மத்திற்குட்பட்டு அளவுடன் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
=> அஹங்காரமின்மை:
அஹங்காரம் எனில் ‘நான்’ மற்றும் ‘எனது’ எனும் உணர்வைக் குறிக்கிறது. சரீரத்தை தான் என அபிமானிப்பது அஹங்காரம். அவ்விதம் அபிமானம் கொள்ளாதிருத்தல் அஹங்காரமின்மையாகும். இது ஞானத்தினால் மட்டுமே சாத்தியப்படுகிறது. ஆனால் இங்கு அது ஒரு பண்பாக கூறப்பட்டிருப்பதால், வரையறுக்கப்பட்ட பொருளில் இது கர்வமின்மையை, பெருமையின்மையைக் குறிக்கிறது. பொதுவாக எது ஒருவனை பெருமைப்படுத்துகிறது? உடலழகு, பதவி, சாதனை, நல்ல மனம் அல்லது சில உடைமைகள் என எதுவாகவும் இருக்கலாம். இந்த பெருமையை வெளிக்காட்டிக் கொள்வது அஹங்காரம் அல்லது கர்வம் எனப்படுகிறது. ‘என்னிடமிருப்பதெல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது’ என்கிற அறியாமையினால்தான் இந்த அஹங்காரம் பிறக்கிறது. சரியான விதத்தில் சிந்திக்காத ஒருவனே தன்னைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கிறான். தனது திறமைக் குறித்த ஒரு சிறு புரிதல்கூட ஒருவனுக்கு ஆச்சரியத்தை உண்டாக்க வேண்டுமே தவிர கர்வத்தை அல்ல. இதையெல்லாம் தனக்கு கொடுத்தது யார் என்கிற கேள்விக்கு எளியவன் ஒருவன், ‘கடவுள்’ எனக் கூறுகிறான். கடவுளின் உண்மை சொரூபத்தை புரிந்துகொள்ளும் வரையிலும் அவனது இந்த அங்கீகாரம் அப்படியே தொடர்கிறது. இதே கேள்வியை தன்னிடம் கேட்டுக் கொள்ளும் அக்ஞானி, அதை அறிய விரும்பி அதற்கான விசாரணையைத் தொடங்கும்போது அது அவனை ஜிக்ஞாசுவாக மாற்றுகிறது. ப்ரம்மனே உலகிற்கு காரணமென சாஸ்திரம் கூறுவதை தனது கலாச்சாரப் பின்புலத்திலிருந்து அறிந்த ஒருவன், அதை விசாரிக்கத் தொடங்கி ப்ரம்ம-ஜிக்ஞாசு ஆகிறான். இவ்விதம் அவனுக்கு என்ன தெரியும் என்பதைப் பொறுத்து விசாரணையின் திசையானது முடிவு செய்யப்படுகிறதே தவிர இங்கு கர்வத்திற்கோ தற்பெருமைக்கோ எந்த இடமுமில்லை.
* அஹங்காரமின்மைக்கான உபாயம்:
(i) ஈஷ்வர விபூதி - தனது செல்வம், பதவி அல்லது எந்தவொரு திறமையும் ஈஷ்வரனுடையது; ஈஷ்வரனால் கொடுக்கப்பட்டது எனும் பாவனை.
(ii) வைராக்கியம் - பற்றில்லாதிருத்தலும் அஹங்காரமின்மைக்கு ஒரு முக்கிய உபாயமாக உள்ளது.
=> மீண்டும் மீண்டும் பார்த்தல்:
‘அநுத3ர்ச1நம்’ எனில் எண்ணிப் பார்த்தல்; மீண்டும் மீண்டும் சிந்தித்தல், தெளிவாகப் பார்த்தல் என்பது பொருள். எதை அப்படிப் பார்க்கவேண்டும்? பிறப்பு(ஜந்ம), இறப்பு(ம்ருத்யு), மூப்பு(ஜரா) மற்றும் வியாதி(வ்யாதி4) இவைகளினால் உண்டாகும் கேடுகளை, இவைகளின் குறைகளை(தோ3ஷ), இவைகள் ஒருவனுக்கு கொடுக்கின்ற துக்கத்தை(து3:க2) மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். ஒரு வழிமுறையாக வெறுமனே இவைகளை எண்ணிப் பார்த்தலை இது குறிக்கவில்லை. இவையனைத்தின் வரம்புகளை மிகத் தெளிவாகக் காணும்போது மோக்ஷத்தின் மீதான ஆசை அதிகரிக்கிறது. மேலும் இப்பண்பு வைராக்கியத்தின் முக்கிய உபாயமாகமும் அமைகிறது.
பொதுவாகவே மனமானது எந்த விஷயத்தைப் பார்த்தாலும் ஒரு பக்கத்தை மட்டுமே, குறிப்பாக சுகத்தைக் கொடுக்கின்ற பக்கத்தை மட்டுமே பார்க்கப் பழகியுள்ளது. மனதிலுள்ள மோஹமும் தீவிர ஆசையும் அதனுடைய இனியொரு பக்கத்தை, அல்லது துக்கத்தை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. இது நமது சரீரத்திற்கு நன்கு பொருந்தும். உடலின் மீதுள்ள மோஹத்தினால் அதனுடைய குறைகளை எண்ணிப் பார்ப்பதே இல்லை; குறிப்பாக மரணத்தை. எனவே மரணத்தை அநுதர்ஷனம் செய்யவேண்டும் — மரணத் தியானம். மனிதனுக்கு விஷயத் தியானத்தினால் மோஹம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்க இந்த தோஷ அநுதர்ஷனம் சிறந்த வழியாகும். அதாவது, சுகத்தை தியானித்து வளர்த்த மோஹத்தை அது கொடுக்கின்ற துக்கத்தை தியானித்து நீக்குகிறோம்.
‘தோஷ தர்ஷனம் பண்டித லக்ஷணம்’ என்கிற ஒரு சொல்லாடல் உண்டு. மற்றவர்களிடம் இருக்கின்ற பலகீனத்தை பார்த்துப் பேசுவதும், பொழுதுபோக்கிற்காக அதைப் பயன்படுத்தி அதில் மகிழ்வதும் தோஷ தரிசனம் அல்ல. இயற்கையில் இருக்கின்ற வியாதி, மரணம் உள்ளிட்ட தோஷத்தைப் பார்த்தல் வேண்டும். எந்தவொன்றையும் முழுமையாகப் பார்த்தலும், தெளிவாகப் புரிந்துகொள்ளுதலும் அவசியம்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
இந்திரிய விஷயங்களின் மீதுள்ள பற்று எவ்வளவுக்குக் குறைந்து வருமோ அவ்வளவுக்குக் கடவுளிடத்து பக்தி அதிகரித்து வரும்.
---------------------------------------------------------------------------------------------
||13.9|| ஞானத்தின் பட்டியல் மேலும் தொடர்கிறது:
असक्तिरनभिष्वङ्ग: पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ।। ९ ।।
அஸக்திரநபி4ஷ்வங்க3: புத்ரதா3ரக்3ருஹாதி3ஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு ।। 9 ।।
असक्ति: அஸக்தி: பற்றின்மை
पुत्र दार गृहादिषु புத்ர தா3ர க்3ருஹாதி3ஷு புத்திரன், மனைவி, வீடு இவைகளிடத்து
अनभिष्वङ्ग: அநபி4ஷ்வங்க3: அபிமானமின்மை
इष्ट अनिष्ट उपपत्तिषु இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு வேண்டுவன வேண்டாதவை உண்டாகுமிடத்து
नित्यं च நித்யம் ச எப்பொழுதும்
समचित्तत्वम् ஸமசித்தத்வம் மனம் நடுநிலையுடன் இருத்தல்.
பற்றின்மை, புத்திரனையும் மனைவியையும் வீட்டையும் தனதென்று அபிமானியாதிருத்தல், வேண்டுவன வேண்டாதவை உண்டாகுமிடத்து மனம் எப்பொழுதும் சமமாக இருத்தல்…
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை
விளக்கம்:
ஞானத்திற்கு தேவையான பண்புகளை மேலும் தொடர்கிறார் பகவான். இந்தச் சுலோகத்திலும் மூன்று பண்புகளைக் கொடுக்கிறார்:
=> மமகாரம்(எனதெனும் உணர்வு):
‘ஸக்தி’ எனில் பொதுவாக ஏக்கத்தையோ, பற்றுதலையோ, அல்லது உரிமையாளன் என்கிற உணர்வையோ குறிக்கிறது. மமகாரத்தை, அதாவது ‘என்னுடையது_மமதா’ எனும் உரிமையைக் குறிக்கிறது. இங்கு கூறப்பட்டுள்ள பண்பான, ‘அஸக்தி’ என்பது மமகாரமற்று இருத்தலை, உரிமையாளன் என்கிற உணர்வை விடுவதைக் குறிக்கிறது. இது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான ஒரு பண்பு ஆகும். உடைமையாளன் என்பது வேறு, உரிமையாளன் என்பது வேறு, இரண்டிற்குமான வித்தியாசத்தை நன்கு புரிந்து கொள்ளுதல் அவசியம். உடைமைகளை யாராலும் தவிர்க்க முடியாது. ஒரு சந்யாசிக்கும் கூட ருத்திராக்ஷ மாலை, புத்தகங்கள், கமண்டலம் உள்ளிட்ட சில உடைமைகள் இருக்கும். ஒரு ஞானிக்கு இந்த உடலும் மனமும் புலன்களுமே உடைமைகள்தான். எனவே அன்றாட வாழ்விற்கு அவசியமான உடைமைகளை வைத்திருத்தலை யாராலும் தவிர்க்க இயலாது. ஆனால் அது எனது உரிமை; நான் அதன் உரிமையாளன்; அது என்னுடையது என்கிற உணர்வு இருக்கலாகாது. இந்த உரிமைத்துவம் இல்லாத தன்மை ‘அஸக்தி’ ஆகும். நான் எதற்கும் சொந்தக்காரன் அல்ல; இவை அனைத்தும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் அதைப் பாதுகாப்பவன் மட்டுமே. கொடுக்கப்பட்டுள்ளதாலேயே அது எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளப்படலாம். எனவே இந்த உடல், மனம், புலன்கள் மற்றும் எனக்கு வழங்கப்பட்டுள்ள சில விஷயங்கள் என, இந்த உடைமைகளின் பாதுகாவலனாக மட்டுமே நான் இருக்கின்றேன். நான் எதற்கும் சொந்தக்காரன் அல்ல என்கிற அறிவு அஸக்தியைக் கொடுக்கிறது.
* மமகாரத்தின் விளைவு:
(i) சொந்தக்காரன் எனும் உணர்வினால் எழுகின்ற உரிமையின் காரணமாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்போம். இதனால் நமது சுதந்திரத்தை நாம் இழக்கிறோம்.
(ii) அந்த குறிப்பிட்ட விஷயத்திற்காக தர்மத்தை விட்டுக்கொடுக்கத் துணிந்துவிடுவோம்.
(iii) மனசஞ்சலமும் பகைமையும் உருவாக காரணமாகிவிடும்.
* ‘மமதா’-வை நீக்கும் உபாயம்:
(i) அனைத்தும் தற்காலிகமானது எனும் அறிவு.
(ii) பொருட்களாகட்டும், அல்லது மனிதர்களாகட்டும் எவ்வளவு குறைவாகக் கொண்டு வாழ பழகிக் கொள்கிறோமோ, அந்தவளவு நாம் வளமுடையவர்களாக ஆகிறோம். சார்புத்தன்மை குறையக் குறைய சுதந்திரம் அதிகரிக்கும்.
=> அபிமானமின்மை:
‘அபி4ஷ்வங்க3:’ எனில் அதிகப்படியான பற்றுதலை, அபிமானத்தைக் குறிக்கிறது. உதாரணத்திற்காக மக்களால் பொதுவாக அதிக பற்று வைக்கப்படும் சில உடைமைகளைக் குறிப்பிட்டு அதில் அபிமானமில்லாமல் இருத்தலை ‘அநபி4ஷ்வங்க3:’ எனக் குறிப்பிடுகிறார். புத்திரன்(புத்ர), மனைவி(தா3ர), வீடு(க்3ருஹ) முதலியவைகளிடத்து(-ஆதி3ஷு) எனக் கூறுகிறார் பகவான். ‘இதுபோன்ற’ என்கிற அர்த்தத்தில் வந்துள்ள ‘-ஆதி3’ எனும் பின்னொட்டுடன், இவ்விதமான மேலும் சில அபிமானங்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்விடத்தில் சங்கரர் பணியாட்களை சேர்த்துக் கொள்கிறார். நாம் இக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல கார், பங்கு சந்தை, அரசியல் தலைவர்கள் அல்லது கதாநாயகர்கள் என அவரவர்களின் தனிப்பட்ட அபிமானங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக நெருங்கிய உறவுகளிடத்தில் ‘நான்’ என்கிற புத்தி நம்மையறியாமல் சென்று விடும். யாருடைய நல்வாழ்வோடு ஒருவனது மகிழ்ச்சியும் துக்கமும் இணைக்கப்பட்டுள்ளதோ அது ‘அபி4ஷ்வங்க3:’ ஆகும். அவர்கள் நன்றாக இருக்கும்போது மகிழ்ந்தும், அவர்களின் பிரச்சினைகளில் துன்பப்பட்டும் கிடக்கிற அந்த அதிகப்படியான பற்றுதல் ‘அபி4ஷ்வங்க3:’ ஆகும். இது வெறுமனே அன்போ அல்லது பாசமோ அல்ல; இது உணர்ச்சி ரீதியாக இருக்கின்ற சார்புத்தன்மையைக் குறிக்கிறது. அக்கறையுடன் இருக்கலாம், ஆனால் அடிமையாக இருக்கக் கூடாது. இல்லறம் என்பது நம்முள் இருக்கின்ற அன்பை வெளிக்கொணர்ந்து நம்மை பக்குவப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அடிமைப்படுத்துவதாக இருக்கக் கூடாது. எனவே அபிமானமின்மையை பகவான் இங்கு ஞானத்திற்கான பண்புகளின் பட்டியலில் வைக்கிறார்.
* அதிகப் பற்றினால் வரும் விளைவு:
(i) அவர்களின் பிரிவைத் தாங்கும் சக்தி இருக்காது.
(ii) அதே அளவு அன்பு எதிர்த்தரப்பிலிருந்து கிடைக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பும், அப்படி கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றமும் துன்பத்தை உண்டாக்கும்.
(iii) அக்கறையெனும் போர்வையில் அதிகப்படியான அன்பு வைக்கப்பட்டுவதால், அவர்களுக்கு கொடுக்கவேண்டிய சுதந்திரத்தை கொடுக்க மறுப்போம்.
* அதிகப் பற்றில்லாமலிருக்க உபாயம்:
(i) ‘எந்த உறவும் கர்ம நிமித்தம்’ எனும் அறிவு; அவரவர்களின் கர்ம பலனுக்கு தக்கவாறே உறவுகளும் சூழ்நிலைகளும் வந்தமைகின்றன.
(ii) யாரொருவரும் அவரவரின் கர்ம பலனினால் பிறக்கிறார்கள்; யாரையும் நாம் உருவாக்கவில்லை. யாருடைய தனித்தன்மையையும் மாற்றஇயலாது.
(iii) எப்போதும் சேர்ந்தே இருப்பதைவிட அவ்வப்போது தனிமை பழகுதல் நன்று.
=> மனதை சமமாக வைத்திருத்தல்:
விருப்பமான சூழ்நிலை(இஷ்ட) விருப்பமில்லாத சூழ்நிலை(அநிஷ்ட) வரும்போது(உபபத்திஷு) எப்பொழுதும்(நித்யம் ச) மனதை சமமாக வைத்திருத்தல்(ஸமசித்தத்வம்) இங்கு சொல்லப்படுகிறது. சுகத்தை சுகமாகவும், வலிகள் முதலிய விரும்பத்தகாதவைகளை துக்கமாகவும் உடல் அனுபவித்தபோதிலும் அதை மனம் சமமாக எடுத்துக் கொள்ளுதல் ‘ஸமசித்தத்வம்’ ஆகும். உண்மையில் உடல், மனம் மற்றும் புத்தி எனும் மூன்று நிலைகளில் இஷ்ட-அநிஷ்டத்தை சந்திக்கிறோம். உதாரணமாக, ஒரு மனிதன் வானிலை, உணவு, உடல் ஆரோக்கியம் என உடலளவில் விருப்பமான-விரும்பத்தகாத சூழ்நிலையையும், சுக-துக்கம், உணர்வுகள் என மனதளவில் எதிரெதிர் சூழ்நிலையையும், மானம்-அவமானம் என புத்தியின் அளவில் இஷ்ட-அநிஷ்டத்தையும் சந்திக்கிறான். பொதுவாக மனமானது விரும்பத்தக்கதான நிகழ்வுகளில் மகிழ்ச்சியுடனும், அதற்கு எதிராக இருக்கும்போது வருத்தத்துடனும் இருக்கிறது. விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கிறபடியால் அவற்றுடன் மனமும் மாறினால், வேண்டியவற்றில் மகிழ்ந்து வேண்டாதவற்றில் மனச்சோர்வடைந்து தொடர்ச்சியான எதிர்வினைக்கு அது ஆளாகிக் கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட மனதினால் கற்றலில் கவனம் செலுத்த இயலாது. வேதாந்த ஞானத்திற்கு மனவமைதி இன்றியமையாதது. ஆகவே எந்தவொரு சூழ்நிலையிலும் நடுநிலை அல்லது சமபுத்தி மாறாதிருக்க பழக்கப்படுத்துதல் வேண்டும்.
ஒருவனுக்கு மனித சரீரம் என்பது சமபங்கு பாபம்(50%) மற்றும் சமபங்கு புண்ணியத்தினால்(50%) கிடைக்கின்றது. பாபம் துக்கத்தையும் புண்ணியம் சுகத்தையும் தருகிற இயல்புடையதாகையால், எவனொருவனும் கண்டிப்பாக 50% சுகத்தையும் 50% துக்கத்தையும் அனுபவித்தே ஆகவேண்டும். மேலும் கர்மவினை என்பது வெளிசூழ்நிலைகளைத்தான் கொடுக்குமே தவிர அதை நாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி அதற்கு கிடையாது. ஒரு நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது நம்முடைய கையிலுள்ளது. எனவே நமது மனவமைதி வெளிநிகழ்வுகளைச் சார்ந்ததாக இல்லாதவாறு மனதைப் பழக்குதல் வேண்டும். நமது மனநிலையை உலகம் நிர்ணயிக்க விடக்கூடாது; அப்படியெனில் நம்மால் சத்துவ குணத்தில் இருத்தலோ அல்லது தியானத்தில் அமர்தலோ நடக்காமல் சென்றுவிடும். எனவே எந்தவொரு சூழ்நிலைக்கும் மனம் நொந்து கொள்ளாது, சம சித்தத்துடன் இருத்தல் அவசியமாகிறது. வருவதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். மனதின் நடுநிலை அல்லது ‘ஸமசித்தத்வம்’ என்பது ஒரு பாவனை ஆகும். எனவே மனதில்தான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். எண்ணங்களினால் ஏற்பட்ட முடிச்சை எண்ணங்களினாலேயே அவிழ்க்க வேண்டும்.
* மன சமநிலைக்கான உபாயம்:
(i) வெளிச்சூழ்நிலையில் எனக்கு அதிகாரம் இல்லை; மற்றவர்களை நான் கட்டுப்படுத்த முடியாது. எந்தவொரு நிகழ்வையும் எவ்விதத்தில் பொருள்படுத்த வேண்டும் என்கிற உரிமை மட்டுமே என்னிடம் உள்ளது எனும் புரிதல்.
(ii) பிரசாத புத்தி - எந்தவொரு சுகமும் துக்கமும் ஈஷ்வரனின் பிரசாதம் ஆகும். அந்த கஷ்டத்தை அனுபவிப்பதன்மூலம் அந்த அளவு பாபம் நீங்கியவனாக நான் தூய்மையடைகிறேன். எனக்கு கிடைத்த கஷ்டங்களே எனது இந்த மனப்பக்குவத்திற்கு காரணமாக உள்ளது எனும் அறிவு. துன்பங்களே ஒருவனை பக்குவப்படுத்துகிறது. எனவே துன்பத்தை நம்மை பக்குவப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
(iii) அநித்தியத்துவ புத்தி - எந்தவொரு சுகமும் துக்கமும் அநித்தியம். எனவே அது நீண்ட காலம் தொடராது.
(iv) ஏற்றுக் கொள்ளுதல் - ‘எனக்கு மட்டும் ஏன் இவ்விதம் நடக்கிறது?’ எனும் பாவனையும், நடப்பதை ஏற்காமல் மனதளவில் எதிர்ப்பதுமே அதிக துக்கத்திற்கு காரணமாக அமைகிறது. ஏற்றுக் கொள்ளுதல் எனும் பண்பு துன்பத்தின் வீரியத்தை பெருமளவில் குறைக்கிறது.
(v) சாட்சி பாவனை - இது ஞானத்தினால் ஏற்படும் இறுதி மனநிலை ஆகும். வெளியிலுள்ள சுகம் மற்றும் துக்கம் இரண்டையும் விலக்காமலும், என்னுடையது என ஏற்றுக் கொள்ளாமலும் வெறும் சாட்சியாக இருந்து பார்த்தல்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தன் உறவினர் ஒருவர்மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்ததால் பகவானிடம் மனம் குவியப் பெறாத ஒரு பக்தரிடம் பகவான் அவர் நேசிக்கும் உறவினரைக் கடவுள் சொரூபமாகப் பாவித்து அன்பு வைக்கும்படி உபதேசித்தார். இவ்விஷயமாக உபதேசிக்கும்போது பகவான் கூறியதாவது — ‘உன் ஆசைக்குப் பாத்திரமானவரிடம் உன் இஷ்ட தெய்வத்தைக் காண்பாயாகில், சுலபமாக மனம் பகவானை நாடிச் செல்வதை உணர்வாய்’.
---------------------------------------------------------------------------------------------