||13.12||ப்ரம்ம தத்துவத்தின் விளக்கம்:
ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादिमत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ।। १२ ।।
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமச்2நுதே ।
அநாதி3மத்பரம் ப்3ரஹ்ம ந ஸத்தந்நாஸது3ச்யதே ।। 12 ।।
यत् யத் எது ज्ञेयं ஞேயம் அறியத்தக்கது यत् ज्ञात्वा யத் ஞாத்வா எதை அறிந்து
अमृतम् அம்ருதம் சாகாத்தன்மையை अश्नुते அச்2நுதே அடைகிறானோ तत् தத் அதை प्रवक्ष्यामि ப்ரவக்ஷ்யாமி பகர்கிறேன் तत् தத் அது अनादिमत् அநாதி3மத் ஆதியில்லாதது
परं பரம் மேலானது ब्रह्म ப்3ரஹ்ம ப்ரம்மம் न सत् उच्यते ந ஸத் உச்யதே ஸத் என்று சொல்லப்படுவதில்லை न असत् ந அஸத் அஸத் என்றும் சொல்லப்படுவதில்லை.
அறியத்தக்கது எதுவோ, எதை அறிந்து ஒருவன் சாகாத்தன்மை எய்துகிறானோ, அதைப் பகர்கிறேன். அது ஆதியில்லாத பரப்பிரம்மம்; உளது, இலது எனக் கூறவொண்ணாதது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத்” என்பதுமில்லை, “அசத்” என்பதுமில்லை.
விளக்கம்:
=> நித்தியமானவன்:
உபநிஷத்தின் மையக்கருத்து இந்த சுலோகத்தில் விளக்கப்படுகிறது. சுலோகம் பனிரெண்டு முதல் பதினெட்டு வரை ஞேயத்தை விளக்குகிறார் பகவான். ‘க்ஷேத்திரஞ’, ‘புருஷ’ மற்றும் ‘ஞேயம்’ இவை அனைத்தின் மையப்பொருளும் ஒன்றே ஆகும். அறியப்பட வேண்டியது(ஞேய) ப்ரம்மம், என்கிறார் பகவான். ‘ஞேயம்’ என்பதற்கு இரு பொருள் உள்ளது:
(i) அறியப்படுவது அல்லது பார்க்கப்படுவது,
(ii) அறியத்தக்கது(ஞான யோக்3யம்/ஞான அர்ஹம்).
இங்கு பகவான் இரண்டாவது பொருளை எடுத்துக் கொண்டு, அறிவதற்கு யோக்கியதையான பரப்ரம்மத்தையே ஞேயம் என்கிறார். மேலும், ‘ப்ரவக்ஷ்யாமி’ எனும் சொல்லில் உள்ள ‘ப்ர’ எனும் முன்னொட்டு, அதைக் குறித்து மிக தெளிவாகச் சொல்லப்போகிறேன் என்பதைக் குறிக்கிறது.
இவ்வுலகில் அறிந்துகொள்வதற்கு பலவகையான விஷயங்கள் உள்ளன, ஆனால் இதை அறிந்தால் மரணமின்மை அடையப்படுகிறது — அம்ருதம் அச்2நுதே, என்கிறார் பகவான். இதன் காரணமாகவே அறியத்தக்கதாக, அறியும் அருகதையுடையதாக ப்ரம்மம் ஆகிறது. மரணமின்மை என்பது இறப்பிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, பிறப்பு மற்றும் இறப்பு எனும் சுழற்சியிலிருந்தே விடுபடுவதைக் குறிக்கிறது. இந்த உடல் இறந்தபின், மறுபிறப்பு இருப்பதில்லை; அதன் விளைவாக மரணமில்லை. மேலும் மரணித்தவன் மட்டுமே மீண்டும் பிறக்க முடியும்; ஆனால் நித்தியமான ஆத்மா ஒருபோதும் மரணிப்பதில்லை.
ஒருவன் தன்னிலிருந்து வேறானதொரு நித்தியப் பொருளை அறிவதால் அவன் எப்படி மரணத்திலிருந்து விடுபடமுடியும்? நித்தியமான எதையாவது ஒன்றைத் தெரிந்து கொள்வதன்மூலம் அவன் நித்தியமாக ஆகமுடியாதே? எனவே ஒன்றை நித்தியம் என அறிவதன் மூலம் ஒருவன் மரணமின்மையைப் பெறுகிறான் எனில் அந்த நித்தியமானவன் கண்டிப்பாக அவனாகவே இருந்தால் மட்டும்தான் முடியும். ஒருவனின் சுய-சொரூபமாக இருக்கின்ற ஆத்மா நித்தியமானது, அதை அறிவதன் மூலம் அவன் நித்தியமானவனாக ஆகிறான்.
=> ஆதியில்லாதது:
சுலோகத்தின் அடுத்த வரியில் பகவான், ஆத்மா எப்படி நித்தியமானது, சாகாத்தன்மையை உடையது(அம்ருதம்) எனக் கூறுகிறார். ‘அநாதி3மத்’ எனில் ஆதியில்லாதது என்று பொருள். பொதுவாக ‘ஆதி’ என்பதற்கு மூன்றுவித அர்த்தங்கள் உள்ளது:
(1) ஜென்ம, அதாவது துவக்கம் அல்லது பிறப்பை ‘ஆதி’ எனலாம். எனவே அநாதி எனில் பிறப்பற்றது; எதனிடத்தில் ஜென்ம இல்லையோ அது அநாதி — ந வித்3யதே ஆதி: ஜந்ம யஸ்ய. ‘மத்’ எனில் ‘அத்தன்மையுடன் கூடியது’ என்று பொருள். ஆகவே ‘அநாதி3மத்’ = பிறவாத தன்மையுடன் கூடியது. அதாவது, சுயம்பு, செய்யப்படாதது(அக்ருதம்) என்கிற அர்த்தத்தைக் கொடுக்கிறது.
(2) ஆதி, அதாவது துவக்கம் இல்லையெனில் முடிவும் இல்லை. எனவே காலத்தை கடந்து இருப்பது — காலஅதீதம்.
(3) ‘ஆதி’ எனில் மூலகாரணம். ஆகவே, அநாதி என்பது காரணமற்றது என்பதைக் குறிக்கிறது.
எனவே பிறவாததாக, காலத்தை கடந்ததாக, மூலகாரணமற்றதாக இருக்கின்ற அந்த ப்ரம்மமே ஆத்மாவாக அறியப்பட வேண்டும். இதை ‘பரம் ப்3ரஹ்ம’ மேலான ப்ரம்ம, என்கிறார் பகவான். பரம், மேலானது, எல்லையற்றது, அதாவது அதற்கு மேல் என எதுவுமில்லை (நிரதி4ச1ய) என்கிறார் சங்கரர். வரையறுக்க முடியாதது; மனதினால் கிரஹிக்க முடியாதது. பொதுவாக எந்தவொரு பொருளும் தேசம், காலம் மற்றும் குணத்தினால் வரையறுக்கப்படுகிறது. எனவே உலகிலுள்ள எந்தப் பொருளும் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட குணத்துடன் கூடி இருப்பதால் ‘அபரம்’ ஆகிறது. ஆனால் இப்படிப்பட்ட எந்தவித வரையறைக்கும் உட்படாததாகையால் இது பரம் ப்ரம்ம ஆகிறது.
=> இருத்தலுமல்ல இல்லாமையுமல்ல:
மேலும் இந்த பரம் ப்ரம்ம, இருக்கின்றது என்றும் சொல்லப்படுவதில்லை, ந ஸத் உச்யதே, இல்லை என்றும் சொல்லப்படுவதில்லை, ந அஸத், என்கிறார் பகவான். ஒரு பொருள் ‘இல்லாதது அல்ல’ எனக் கூறப்படும்போது அது ‘இருக்கிறது’ என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கு பகவான் ‘இது ஸத் அல்ல’ என்றும் கூறுகிறார், இதன் காரணமாக இருக்கின்ற அனைத்துப் பொருட்களும் நிராகரிக்கப்படுகின்றன. ‘இருத்தலுமல்ல இல்லாமையுமல்ல’ எனில் இதை எப்படிப் புரிந்து கொள்வது? ப்ரம்மம் என்பது அறியப்படுகிற ஒரு பொருளாக இல்லை என்பதே இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய கோணம் ஆகும். ஸத் மற்றும் அஸத் இரண்டும் இங்கு பொருந்தாது ஏனெனில் இது ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ என, அறிதிறனைக் கொண்டு அறியப்படுகிற ஒரு பொருள் அல்ல என்கிறார் சங்கரர். ஆத்மா என்பது புலன்கள் அல்லது மனம் கொண்டு அறியப்படுகிற ஒரு புறப்பொருள் அல்ல; அது ஒருவனின் சுயமாகவே இருப்பது. ‘ஸத் அல்ல’ என்று கூறியிருந்தால் அங்கு தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை எனலாம், ஆனால் பகவான் ‘அஸத் அல்ல’ என்றும் சொல்வதால் அதைச் சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தப் படைப்பில் எந்தவொரு பொருளும், ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ என்று கூறப்படுவதுதான் வழக்கம். இங்கு நம்மால் அறியப்பட வேண்டியது இந்த இரண்டும் இல்லையெனில், எஞ்சியிருப்பது ஒன்று மட்டுமே — ஒருவனது சுயம்.
* ‘ஸத்’ என்பதன் இரு பொருள்:
(1) ‘ஸத்’ எனில் வ்யக்தம், வெளித்தோற்றத்திற்கு வந்தது, காரியம். ஆகவே ‘அஸத்’ எனில் வெளித்தோற்றத்திற்கு வராதது, காரணநிலையில் இருப்பது என்பது பொருள். காரணநிலை எனும்போது அது புலன்களால் கிரஹிக்க முடியாததாகிறது. இங்கு ப்ரம்ம ‘ந ஸத் ந அஸத்’ எனும்போது, அது காரணமும் அல்ல, காரியமும் அல்ல என்பதைக் குறிக்கிறது.
(2) பொதுவாக ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ என்பதை ஏதேனும் ஒரு பொருளுடன் சம்பந்தப்படுத்தித் தான் எப்போதும் பயன்படுத்துகிறோம். நம் அனுபவத்தில் ஒரு பொருளின் ‘இருத்தல்’ என்பது அது அழிந்தவுடன் சென்றுவிடுகிறது; அது இல்லாமல் ஆகிறது. அதுபோலவே சில சமயங்களில் ஒன்று இல்லாமல் இருந்து பின் அது இருத்தலை அடைகிறது. உதாரணமாக, இல்லாத பானையானது களிமண்ணிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருத்தலை அடைகிறது. இவ்விதம் காலத்திற்கு உட்பட்டு, இல்லாதது இருத்தலை அடைவது ‘வ்யாவஹாரிக ஸத்’ என்றும், இருப்பது அழிந்து இல்லாமல் போவது ‘வ்யாவஹாரிக அஸத்’ என்றும் சாஸ்திரம் கூறுகிறது. இதுபோன்ற அனுபவங்களை வைத்துக் கொண்டுதான் நாம் ப்ரம்மத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். எனவேதான் ப்ரம்ம என்பது வியவகாரத்திற்கு உட்பட்ட இருத்தலாகவோ அல்லது வியவகாரத்திற்கு உட்பட்ட இல்லாமையாகவோ இல்லை என்பதைக் குறிக்கும் விதமாக, ‘ந ஸத் ந அஸத்’ எனக் கூறப்படுகிறது. ப்ரம்ம ‘பாரமார்த்திக ஸத்’ - எல்லா காலத்திலும் இருப்பது ஆகும்.
மண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்கானது, அங்கு அமர்ந்திருக்கின்ற மனிதர்களைக் காட்டிக் கொடுப்பதைப் போலவே, மனிதர்களற்ற வெறும் அறையையும் காட்டுகின்றது. இதில் அந்த விளக்குகானது மனிதர்களின் இருப்புக்கும் இல்லாமைக்கும் அப்பாற்பட்டதாக, சுதந்திரமானதாக இருக்கிறது. அதுபோல ஒரு பொருள் இருப்பதையும்(வருவதையும்), இல்லாமல் போவதையும்(செல்வதையும்) காட்டுகின்ற ஒன்று, கண்டிப்பாக அப்பொருளிலிருந்து வேறானதாக, அதைச் சார்ந்தில்லாததாகத் தான் இருக்கமுடியும். அது பிரக்ஞை அல்லது சைத்தன்யம் அல்லது அறிவுசொரூபம் ஆகும். இந்த அறிவுசொரூபத்தின் நிலை பூரணம், பாரமார்த்திக ஸத். புத்தகத்தின் இருத்தலைக் காட்டிலும், அதைக் காட்டிக்கொடுக்கின்ற அறிவுசொரூபத்தின் இருத்தல் வேறானது, முழுமையான இருத்தலாக இருப்பது, அழியாதது. இந்த அறிவுசொரூபம் அழிவதில்லை; இந்தப் பிரக்ஞையாக இருக்கின்ற ‘நான்’ அழிவதில்லை. இது புரிந்து கொள்ளப்படும்போது மரணமின்மை எய்தப்படுகிறது — அம்ருதம் அச்2நுதே.
ஒன்பதாவது அத்தியாயம் பத்தொன்பதாவது சுலோகத்தில் பகவான் தன்னை, மரணம்(ம்ருத்யு) என்றும் மரணமின்மை(அம்ருதம்) என்றும் சொன்னார். மேலும் தன்னை, இருத்தல்(ஸத்) என்றும் இல்லாமை(அஸத்) என்றும் சொன்னார். சகுணப்ரம்மம் பிரபஞ்ச சொரூபமாக இருக்கும்போது எல்லா முரண்பாடுகளும் அவரிடத்துச் சந்திக்கின்றன. வியவகாரிக நிலையை அடிப்படையாகக் கொண்டு விரைவில் மறையும் மக்களைச் சாகின்றவர்கள் என்றும், நெடிங்காலமிருக்கும் தேவர்களைச் சாகாதவர்கள் என்றும் சொல்லப்பட்டது. அங்ஙனமே குணத்தோடு சம்பந்தப்பட்டுத் தோன்றியுள்ள காரியப்ரம்மம் ஸத் என்று சொல்லப்பட்டது; அதனுடைய தோன்றாநிலை அஸத் என்று சொல்லப்பட்டது.
இத்தகைய விவகாரங்கள் யாவும் நிர்குண ப்ரம்மத்திடத்துக் கிடையாது. அதை தோன்றியுள்ளது என்றும் இலதென்றும் சொல்லலாகாது; அது தோற்றம் மறைவு அற்றது. அதனாலேதான் அது பரப்ரம்மம் என்று அழைக்கப்படுகிறது. அது ஆதி அந்தம் அற்றது; மாறுபாடே அதனிடத்து இல்லை. அம்ருதம் என்பது அதற்கே முற்றிலும் பொருந்தும். அபரோக்ஷானுபூதியில் அறியத் தக்கது அதுவே. அதை அறிந்தபின் ஜீவனுக்குத் தான் வேறு, அது வேறு என்ற பேதமில்லை. ப்ரம்மத்தை அறிபவன் ப்ரம்மமாகிறான். ஆகையால் சாகாத்தன்மை ப்ரம்மஞானியினுடையதாகிறது. ப்ரம்ம நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்பது அதுவே. அது மனம் மொழியைக் கடந்த பெருநிலை.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
அகண்ட பரப்பிரம்மத்தை சமாதியில் மட்டும்தான் அறியலாகும். அப்பால் ஒரே மெளனம்; ஜீவன் ஜகத் இவைகளைப் பற்றிய ஆராய்ச்சி, ஞானம் அக்ஞானம் என்ற விவாதம் இவைகளெல்லாம் அடங்கிவிடுகின்றன. உண்மையில் உப்புப் பிரதிமை பிரம்மாண்ட சமுத்திரத்தில் மூழ்கிய பிறகு தன்னுடைய கதையைச் சொல்ல வெளிவருவதில்லை. இதுதான் பிரம்மஞானம்.
---------------------------------------------------------------------------------------------
||13.13|| அத்யாரோபமும் அபவாதமும்:
सर्वत: पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम्।
सर्वत: श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ।। १३ ।।
ஸர்வத: பாணிபாத3ம் தத்ஸர்வதோऽக்ஷிசி1ரோமுக2ம் ।
ஸர்வத: ச்1ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட2தி ।। 13 ।।
तत् தத் அந்த ப்ரம்மம் सर्वत: ஸர்வத: எங்கும்
पाणिपादं பாணிபாத3ம் கை கால்களையுடையது सर्वत: ஸர்வத: எங்கும்
अक्षि शिरोमुखम् அக்ஷி சி1ரோமுக2ம் கண், தலை, வாய் உடையது
सर्वत: श्रुतिमत् ஸர்வத: ச்1ருதிமத் எங்கும் காது உடையது लोके லோகே உலகில்
सर्वम् ஸர்வம் எல்லாவற்றையும் आवृत्य ஆவ்ருத்ய வியாபித்து तिष्ठति திஷ்ட2தி நிற்கின்றது.
அது எங்கும் கை கால்களையுடையது; எங்கும் கண், தலை, வாய்களையுடையது; எங்கும் காதுகளை உடையது. உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.
விளக்கம்:
ப்ரம்மத்தை இருக்கிறது என்றும் கூறமுடியாது, இல்லை என்றும் சொல்லமுடியாது என சென்ற சுலோகத்தில் பகவான் கூறினார். எனில் அதை எப்படி அறிவது? அந்த ப்ரம்மத்தை நேரடியாக விளக்க முடியாதாகையால், சாஸ்திரம் ஒரு குறிப்பிட்ட முறையை கையாண்டு அதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அந்த முறை, ‘அத்4யாரோப அபவாத3 நியாயம்’ எனப்படுகிறது. ‘அத்4யாரோப’ எனில் ஏற்றிவைத்தல் மற்றும் ‘அபவாத3’ எனில் நீக்குதல் ஆகும். அங்கும் இங்குமென நமது அன்றாட நிகழ்வுகளில் நாம் இந்த முறையை கையாண்டு கொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக பூஜையின்போது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதில் அவரை ஏற்றிவைக்கிறோம். கணித பாடத்தில், கொடுக்கப்பட்டுள்ள கணிதக் கேள்விக்கான விடையை முதலில் ‘x’ என நிர்ணயம் செய்துவிட்ட பின்னர் அதற்கான பதிலைக் கணக்கிடுகிறோம். இதுவும் அத்யாரோபமே ஆகும்.
=> ஏன் இந்த முறை?
இருக்கிறது என நாம் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வுலகை இல்லை எனப் புரிய வைத்து, அறிமுகமில்லாத மற்றும் அனுபவத்திலில்லாத ப்ரம்ம தத்துவத்தை இருக்கிறது, உண்மையில் ‘அது மட்டுமே இருக்கிறது’ எனக் காட்ட வேண்டும். இந்தச் சிக்கலை தீர்க்க, அத்4யாரோப அபவாத3 முறையே சிறந்தது ஆகும். முதலில் சிருஷ்டியை ப்ரம்மத்திடம் ஏற்றிவைத்து, அதாவது ப்ரம்மமே ஜகத் காரணம் எனக் கூறி, பின்னர் ஜகத்தை அது ஒரு வஸ்துவாக இல்லை, ஜகத் வெறும் தோற்றமே என விளக்கி அதை நீக்குவது இங்கு கையாளப்படுகிறது. முதலில் இதை ஒரு உதாரணத்தின் மூலம் விசாரணை செய்யலாம்.
=> சர்க்கரை பொம்மை:
சிறு வயது குழந்தைகளுக்கு விதவிதமான உருவத்தில் இருக்கின்ற சர்க்கரைப் பொம்மை மிட்டாய்கள் மிகப் பிரியமானதாக இருக்கும். இதில் குழந்தைகளுக்கு இருவித புத்தி உள்ளது: (1) இனிப்பு (2) அதனுடைய உருவம். இதனால், ஆதாரமாக இருக்கின்ற இனிப்புக்கு குறைவான முக்கியத்துவமும், உருவத்திற்கு அதிக கவனமும் அவர்களால் கொடுக்கப்படுகின்றது. எனக்கு சிங்கம் வரவில்லை என துக்கமும், யானையை அண்ணன் எடுத்துக் கொண்டு எனக்கு குரங்கை கொடுத்துவிட்டான் என அழுகையும் கோபமும் அடைகிறான் ஒரு சிறுவன். அப்போது மூத்தவன் என்பதால் அவனது அண்ணனை அழைத்து, அப்பா உண்மையைப் புகட்ட முயற்சிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கு முதலில் அவர் அந்த உருவ பேதத்தை, அதாவது விதவிதமான மிருகங்களின் உருவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த விதவிதமான அனைத்து மிருகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற அந்த இனிப்பு ஒன்றே என்கிற அறிவை அவர் தன் பையனுக்குப் புகட்ட முடியும்.
* இந்த மிட்டாய்கள் தோன்றவும்(சிருஷ்டி), அது அந்த உருவத்தில் இருக்கவும்(ஸ்திதி) சர்க்கரையே காரணம்.
* மிருகத்தை உடைத்து அழித்தாலும்(லயம்) அது சர்க்கரையாகவே உள்ளது.
எனவே உனது இந்த குரங்கு, யானை, சிங்கம், ஆடு மற்றும் சர்க்கரை போன்ற எண்ணங்களில் எது உண்மையானது? எது கற்பனையாக ஏற்றி வைக்கப்பட்டது? என அப்பா அண்ணனிடம் கேட்கிறார். மிருகங்கள் என்பது மனதிலுள்ள வெறும் எண்ணங்கள் தான், உண்மையில் அங்கு இருப்பது சர்க்கரையே ஆகும். எனவே சத்தியமாக இருக்கின்ற சர்க்கரையில் உனது கவனம் இருக்குமானால், அது கிடைத்தால் எல்லாம்(அனைத்து மிருகங்களும்) கிடைத்ததற்கு சமம் என்கிறார் அப்பா.
இந்த உதாரணத்தில் மிருகங்கள் மித்யா. சர்க்கரை மட்டுமே ஸத்யம். இதில் உண்மையில் இனிப்பு எனும் சர்க்கரையை அச்சிறுவன் அனுபவித்தபோதிலும், கவனம் முழுக்க கண்கள் காட்டிய அந்த விதவிதமான ரூபத்தில்தான் இருந்தது. எனவே கண்கள் பேதத்தை தான் காட்டுகிறது - த்வைத த்ருஷ்டி; அறிவு மட்டுமே உண்மையைக் காட்டுகிறது - அதிஷ்டான த்ருஷ்டி.
=> கயிற்றில் பாம்பு:
மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரிகின்ற பாம்பு உதாரணத்தை எடுத்துக் கொண்டால், ‘அந்த பாம்பானது கயிறு’ என பாம்பை முதலில் ஏற்றுக்கொண்டு, பின்னரே அது கயிறு எனப் புகட்டப்படுகிறது. பாம்பு எனத் தவறாக பார்த்துக் கொண்டிருப்பவனின் புத்திக்குள் சென்றுதான், அதாவது அவனது பார்வையில் பாம்பு தெரிந்து கொண்டிருப்பதை ஏற்கும் விதமாக ‘அந்த பாம்பு’ என அத்யாரோபம் செய்யப்பட்டு, பின் ‘அது பாம்பு அல்ல; அது கயிறு’ என நீக்க முடியும். எனவே ‘அத்4யாரோப’ என்பது தெரிந்தே இல்லாததை இருப்பதாக தெளிவான அறிவுடன் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். ஆனால் ‘அத்4யாஸ’ என்பது அறியாமையில் தவறாகப் பார்த்தலைக் குறிக்கிறது. பாம்பு என்கிற அத்யாசத்துடன் வருகிற சிஷ்யனின் தவறை குருவானவர் தெளிந்த அறிவுடன் ஏற்றுக்கொண்டு, ‘அந்தப் பாம்பு’ என்கிற அத்யாரோபத்தை செய்து, பின்னர் ‘அந்த பாம்பானது பாம்பு அல்ல’ என அபவாதம் செய்து, ‘அது கயிறு’ என்கிற ஞானத்தை அவர் அளிக்கிறார். ‘நீ பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்த பாம்பானது உண்மையில் பாம்பு அல்ல, அங்கு எப்போதும் இருப்பது கயிறு மட்டுமே’ என்கிறார்.
‘இந்த உலகம், உடல் மற்றும் மனம் உண்மை; இதனால் அனுபவிக்கப்படும் துயரமும் அதிருப்தியும் உண்மை’ என்கிற அத்யாசத்துடன் வருகிற சிஷ்யனின் தவற்றை அறிவுடன் குரு ஏற்றுக்கொண்டு, ‘நீ பார்க்கின்ற இவைகளனைத்தின் ஆதாரம் ப்ரம்மம்’ என்கிற அத்யாரோபத்தை செய்து, பின்னர் ‘உலகம் என்ற ஒன்று உண்மையில் இல்லை’ என அபவாதம் செய்து, ‘அதன் சாரமாக இருக்கின்ற ப்ரம்மம் மட்டும்தான் ஸத்யம்’ என்கிற ஞானத்தை அளிக்கிறார்.
இந்த பதிமூன்றாவது சுலோகம் ஒரு அத்யாரோப சுலோகம். அந்த பரம்பொருள் எங்கும் கைகால்களுடனும், கண் வாய்களுடனும் அனைத்தையும் வியாபித்து இருக்கின்றது என இந்த சுலோகத்தில் அத்யாரோபம் நடைபெறுகிறது.
மேலும் இந்தப் படைப்பிலுள்ள அனைத்துப் பொருட்களாகவும் சொல்லப்படுவதன் மூலம், ப்ரம்மம் எப்படி ‘இல்லாமை இல்லை_ந அஸத்’ என்பதைக் காட்டுகிறார் பகவான். அடுத்த சுலோகத்தில் அது எப்படி ‘இருப்பதாக இல்லை_ந ஸத்’ என்பதை காட்ட இருக்கிறார். ஏற்றிவைத்தல் மற்றும் நீக்குதல் மூலம் இந்த முழு படைப்பும் மித்யாவாகவும், ப்ரம்மம் மட்டுமே ஸத்யமாகவும் ஆகிறது.
=> அத்யாரோபம்:
‘ஜகத் காரணம் ப்ரம்ம’, அதாவது தோன்றிக் கொண்டிருக்கின்ற இந்த அனைத்து நாம(பெயர்) மற்றும் ரூபங்களின்(வடிவங்கள்) இருப்பு ப்ரம்மத்திடமிருந்து வந்துள்ளது. அவைகளுக்கென தனியானதொரு இருப்பு, சுதந்திர ஸத்தா கிடையாது. கொடுக்கப்பட்டுள்ள எந்தப் பொருளை எடுத்துக் கொண்டு பகுப்பாய்வு செய்யும்போதும் அது ப்ரம்மத்தில், அதாவது ஆத்மாவான பிரக்ஞையில் ஒடுக்கத்தை அடைகிறது. எனவே ப்ரம்மம் என்பது ஒரு பொருளாக அல்லாமல் இந்த முழு சிருஷ்டியின் ஆதாரமாக நிற்கின்றது — திஷ்ட2தி. மாறாத அசையாத ப்ரம்மத்திற்குள் இந்த அனைத்து இயக்கமும் நடைபெறுகிறது. எந்தவித அசைவுமின்றி அது அனைத்தையும் வியாபித்து நிற்கின்றது — ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்ட2தி. மாயா-உபாதியின் மூலம் ப்ரம்மமானது இந்த சிருஷ்டியாக மாற்றப்படுகிறது. எனவே இந்த சிருஷ்டியில் எந்தப் பொருளை பகுப்பாய்வு செய்யும்போதும், அது மறைந்து, உணர்வு சொரூபமாகிய பிரக்ஞை மட்டுமே எஞ்சி நிற்கிறது. இதிலிருந்து இந்த முழுவுலகமும் ப்ரம்மமாகிய சைத்தன்யத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அறியத்தக்கதாகவுள்ள அந்த ப்ரம்ம(தத்), எங்கும் கைகள் மற்றும் கால்களைக் கொண்டுள்ளது — ஸர்வத: பாணிபாத3ம், என்கிறார் பகவான். அதாவது எங்கெல்லாம் கைகளும் கால்களும் இருக்கின்றனவோ அவைகள் ப்ரம்மத்தின் கைகளும் கால்களும் ஆகும். ஒரே உணர்வு சொரூபம் இந்த முழு சிருஷ்டியாக ஐம்பூதத்தின் வடிவத்தில் தோன்றிக்கொண்டுள்ளதால் அதிலுள்ள அனைத்தும் அந்த பரம்பொருளைத் தவிர வேறில்லை. உனது, எனது மற்றும் கொசுவின் கைகள் மற்றும் கால்கள் என அனைத்தும் ப்ரம்மத்தைத் தவிர வேறில்லை. எங்கும் கண், தலை மற்றும் வாய்களை உடையது — ஸர்வத: அக்ஷி சி1ரோ முக2ம். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கண்களும், தலைகளும், வாய்களும் அல்லது முகங்களும் ப்ரம்மத்தினுடையது. அனைத்துக் காதுகளாக இருப்பதுவும் ப்ரம்மமே — ஸர்வத: ச்1ருதிமத். பல்வேறு உறுப்புகளின் கூட்டத்தை தன்னகத்தே கொண்ட இந்த பெளதிக உடல் எங்கெல்லாம் இருக்கிறதோ அவையனைத்தும் ப்ரம்மமே ஆகும். கண்கள் மற்றும் காதுகளின் குறிப்பானது இந்த ஸ்தூல உடலை மட்டுமல்ல, சூக்ஷம உடலையும் குறிக்கிறது. எனவே மொத்த ஸ்தூல மற்றும் சூக்ஷம உலகமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்விதமாக உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் வியாபித்து நிற்பதாக ஆத்மாவாகிய ப்ரம்ம இருக்கிறது — ஸர்வம் லோகே ஆவ்ருத்ய திஷ்ட2தி.
துவைத புத்தி நீக்கப்படுவதற்காக, இங்கு அனைத்துவிதமான கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகியவை ப்ரம்மத்திடம் ஏற்றி வைக்கப்படுகிறது. அடுத்த சுலோகத்தில் அத்யாரோபமும் அபவாதமும் ஒருங்கே செய்யப்படுகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
அஹங்காரம் என்னிடம் இருக்கும்வரையில் ஜீவனாயும், ஜகத்தாயும் வேறு வேறு ஐஸ்வரியங்களுடன் தம்மைத் தோற்றுவிக்கும் ஈஷ்வரன் என் முன்னால் இருக்கின்றார்.
---------------------------------------------------------------------------------------------