சனி, 18 ஜனவரி, 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.10 - 13.11

||13.10|| ஞானத்திற்கானத் தகுதிகளைத் தொடர்கிறார்:

मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी

विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ।। १० ।।

மயி சாநந்யயோகே3 4க்திரவ்யபி4சாரிணீ  

விவிக்ததே31ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி3 ।। 10 ।।


मयि   மயி   என்னிடத்தும்    अनन्य योगेन  அநந்ய யோகே3  வேறு எதையும் எண்ணாத யோகத்தால்    अव्यभिचारिणी भक्ति:  அவ்யபி4சாரிணீ 4க்தி:  பிறழாத பக்தி     

विविक्त देश सेवित्वम्  விவிக்த தே31 ஸேவித்வம்  தனியிடத்தை நாடுதல்     

जनसंसदि  ஜநஸம்ஸதி3  ஜனக்கூட்டத்தில்     अरति:  அரதி:  விருப்பமின்மை.   


வேறு எதையும் எண்ணாத யோகத்தால் என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை…   


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை


விளக்கம்:

ஞாநம்என்றே பெயரிடப்பட்ட, ஞானத்திற்குத் தேவையான பண்புகளை மேலும் இங்கு தொடர்கிறார் பகவான். இந்தச் சுலோகத்திலும் மூன்று பண்புகளைக் கொடுக்கிறார்:

=> பிளவுபடாத பக்தி:

பிறழாத பக்தி, மாறாது அசையாமல் நிலைத்திருக்கும் பக்திஅவ்யபி4சாரிணீ 4க்திஎனப்படுகிறது. மாறாக, பக்தியிலிருந்து மனமானது விலகிச் செல்லும்போது அதுவ்யபி4சாரிணீ 4க்திஆகும். பிறழாத பக்தி செலுத்தும் முறையாக இங்குஅநந்ய யோக3ம்எனும் சொல் கொடுக்கப்படுகிறது. அதாவது வேறு எதையும் எண்ணாத யோகத்தால், சிதறடையாத மனதினால் பக்தி செலுத்துதல் பேசப்படுகிறது. ‘வசுதேவனை விட மேலானவன் யாரும் இல்லைஎன்கிற புரிதலின் துணையுடன் செலுத்துகிற பக்தி என்கிறார் சங்கரர். உருவாக்கப்படாதவராகவும் எல்லையற்றவராகவும் இருக்கின்ற அந்த ஈஷ்வரனைத் தவிர வேறு அடைக்கலம் எதுவுமில்லை எனும் அறிவினால் உண்டாகும் பக்தி என்றும் கூறலாம். சாதாரண மனம், பூஜை பிரார்த்தனை உள்ளிட்ட வழிமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருக்கும். அதில் தவறேதுமில்லை எனினும், இங்கு நாம் பரமேஷ்வரனைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதற்கானத் தகுதிகளைப் பற்றி பேசிக் கொண்டுள்ளோம். கடவுள் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண மக்கள் பொதுவாக தர்மம், அர்த்தம் மற்றும் காமம் ஆகிய புருஷார்த்தங்களுக்காக இறைவனை வணங்குகிறார்கள்; பக்தி செலுத்துகிறார்கள். இங்கு அந்த அனைத்து நாட்டங்களும் மோக்ஷம் என்ற ஒன்றில் ஒடுக்கத்தை அடைந்து ஈஷ்வர-ஞானமாக இருக்கின்ற அந்த ஆத்ம-ஞானம் மட்டுமே வேண்டும் என்கிற நிலைக்கு வந்தாகி விட்டது. எனவே எனது இறுதி இலக்கும் அதற்கான அடைக்கலமும் இறைவன் ஒருவனே என்கிற அந்த பிறழாத பக்தி இங்கு பண்பாக பேசப்படுகிறது


   * பக்தியின் தேவை:

(i) வேதாந்த ஞானத்திற்கு ஒருவனுடைய குணமாற்றம் மிகவும் அவசியமான ஒன்றாகும். குணம் என்பது பழக்கதோஷத்தின் அடிமை. எனவே குணத்தை மாற்ற முற்படும் ஒருவனுக்கு தோல்வியும் மனச்சோர்வும் கண்டிப்பாக இருக்கும். இதிலிருந்து மீள இறைபக்தி தேவை. அஹங்காரத்தை மட்டும் வைத்து குணத்தை மாற்ற முடியாது. ஈஷ்வர அணுகிரஹம் தேவை.

(ii) ஞானம் ஞானநிஷ்டையாக மாறுவதற்கு, அல்லது நமக்கு உதவுமளவு நாமறிந்த ஞானமானது பயன்படுவதற்கு மனப்பக்குவம் அவசியமாகிறது. அந்த மனமுதிர்ச்சி பக்தியினாலேயே வந்தமைகிறது.

(iii) தர்மம் என்பது ஈஷ்வரனின் சொரூபம் ஆகும். எனவே தர்மத்தை பின்பற்ற தர்ம-கர்த்தாவாக இருக்கின்ற ஈஷ்வனின் மீது பக்தி அவசியமாகிறது.

 

   * பக்தியை வளர்க்கும் உபாயம்:

(i) பக்தர்களுடனான இணக்கம்(பக்தஸங்கம்), பக்தர்களின் கதைகளைக் கேட்டல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகங்களைப் படித்தல் முதலியவை ஆரம்ப காலகட்டத்தில் பக்தியை தூண்டும் வழிகளாக உள்ளன.

(ii) பூஜை, பிரார்த்தனை, ஜபம், தியானம் என பக்தியை வளர்க்கும் செயலைச் செய்ய செய்ய பக்தி அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பிக்கிறது.

(iii) ஈஷ்வரனைப் பற்றிய ஞானத்தையும் அவர் மீதான நம்பிக்கையையும் வளர்த்தல் பக்தியை உறுதியாக மாற்றுகிறது.  

இங்கு பகவானால் கூறப்படுகிற பிறழாத பக்தியில் இரண்டு விஷயங்கள் குறிக்கப்படுகின்றன. தனது இலக்கு இன்னது, தான் உண்மையில் இதையே விரும்புகிறேன் என்பதில் இருக்கிற தெளிவை, அதாவதுபுருஷார்த்த-நிச்சய’-த்தை இந்த பக்தி காட்டுகிறது. இந்த விவேகத்தினால் அஹங்காரம் மேலோங்காமல் இருக்கிறது. ஈஷ்வரன் மட்டுமே அடைக்கலம் என்கிற புரிதலை உடையவன், தனது சொந்த எல்லைகளின் வரம்புகளைப் புரிந்தவனாக இருக்கிறபடியால் இது அவனது அஹங்காரத்தை கட்டுக்குள் வைக்கிறது. உடல், புலன்கள், மனம், உலகம் என அனைத்தும் கொடுக்கப்பட்டவை என்பதை புரிந்துகொண்டவனாக எது குறித்தும் அவன் கவலை கொள்வதில்லை. நான் உரிமையாளன் எனும்போதே எனக்கு தோல்வி; அவ்வாறு இல்லாத பட்சத்தில் தோல்வியோ அல்லது இயலாமையோ என்னைச் சார்ந்ததல்ல என்கிற உணர்வு சம-சித்தத்துவத்தைப் பெற உதவுகிறது. உண்மையில் சம-சித்தம் என்பது பக்தியின் துணை இருக்கிறபோதே சாத்தியமாகிறது


=> தனித்திருத்தல்:

விவிக்த தே31 ஸேவித்வம்எனில் ஜனக்கூட்டமில்லாத இடத்தை எடுத்துக்கொள்ளுதலை, தனியிடத்தை நாடுதலைக் குறிக்கிறது. ‘விவிக்த தே31என்பதற்கு சங்கரர், (i) தூய்மையான, (ii) பயமற்ற, (iii) மக்கள்கூட்டமில்லாத இடம் என விளக்கமளிக்கிறார். துஷ்ட ஜந்துக்களால் இடைஞ்சல் உண்டாகாததும், ஆரோக்கியமானதும், இயற்கை வனப்பு வாய்ந்ததும், தூயதும் மனதுக்கு இனிமையானதுமான இடத்தில் வசிப்பது ஆத்ம சாதனத்துக்குப் பொருத்தமானது. இது இவ்விதமிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்காமல், இயல்பாக மனம் ஏற்றுக்கொள்ளும்படியான சூழ்நிலைகளில் மனம் ஒரு குறிப்பிட்ட அமைதியைப் பெறுகிறது. எனவே மனவமைதிக்கு ஏதுவான இடத்தை நாடுபவன்விவிக்த தே31 ஸேவீஎன்றும், அவனது அந்த மனநிலைவிவிக்த தே31 ஸேவித்வஎன்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தியானத்தில் ஈடுபடுகிற, ஆத்ம விசாரம் செய்கிற இயல்பையும் பெறுகிறது. செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்போது அங்கு ஆத்ம-சிந்தனைக்கு நேரமோ அல்லது மனமோ இருக்காது. ஆனால் வெளிசூழ்நிலைக் காரணமாக கிடைக்கின்ற அமைதியும் காலமும் ஒருவனை இயல்பாக சாஸ்திரம் கற்றலுக்கும் ஆத்ம விசாரத்திற்கும் தூண்டுகிறது. பொதுவாகவே மனிதனுக்கு மக்களின் சகவாசத்தை நாடுகிற இயல்பு இருப்பதால், விழிப்புணர்வுடன்தான் இப்பண்பை வளர்க்க முடியும்


   * தனிமையின் தேவை அல்லது பலன்:

(i) இங்கு பகவானால் பட்டியலிடப்பட்டுள்ள இந்த பண்புகளை தனிமையில்தான் நம் மயமாக்க முடியும்.

(ii) விவேக சக்தியும், சிந்தனை சக்தியும் தனிமையில்தான் வரும்; வளரும்.

(iii) சுதந்திரமாகச் செயல்படும் புத்தி வளர தனிமை இன்றியமையாதது.

(iv) ஒருவன் தனிமைப்படுத்தப்படும் போதுதான் அவனுக்குள் உள்ள ஆழ்ந்த வாசனைகள் வெளியே வர ஆரம்பிக்கும். நம் மனதை நாமே பார்க்கும் கண்ணாடியாகத் தனிமை அமைகிறது. இதனால் நம்மையறியாமல் நம்முள் புதைந்து கிடக்கிற துஷ்ட குணங்கள் நமக்கு தெரியவருகிறது. அப்போது அதைக் கண்டு பயப்படவோ, கவலை கொள்ளவோ அல்லது வெறுக்கவோ தேவையில்லை. அதை நீக்குவதற்கான முயற்சியை மட்டுமே செய்யவேண்டும். அதற்கும் தனிமையே துணைபுரிகிறது


=> ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை:

அரதிஎனில் ஆர்வமில்லாத தன்மை; ‘ஜநஸம்ஸதி3எனில் மக்களின் சகவாசத்தில். எனவேஅரதி: ஜநஸம்ஸதி3எனில் மக்களின் சகவாசத்தில் ஆர்வமில்லாதிருத்தலை, ஜனக்கூட்டத்தில் மகிழாமல், விருப்பமில்லாமலிருத்தலைக் குறிக்கிறது. இது மக்கள் மீதான வெறுப்பைக் குறிக்கவில்லை, மாறாக ஏக்கமின்மையைக் குறிக்கிறது. நம்முடனேயே நம்மால் இருக்க முடியாததால் எப்போதும் யாரேனும் ஒருவரின் இருப்பு நமக்கு தேவைப்படுகிறது. இது தன்னிடமிருந்து தப்பிக்கும் போக்கைக் குறிக்கிறது. மக்கள் கூட்டத்திற்கு பயப்படுதலும் ஒரு விதத்தில் தன்னிடமிருந்து தப்பித்தலையேக் குறிக்கிறது. மற்றவர்கள் சூழ்ந்திருக்கையில் தன்னிடம் ஏற்படும் சிறுமையுணர்வின் காரணமாக, தன்னை எதிர்கொள்ள விரும்பாதவனாயும் அவன் ஜனக்கூட்டத்தை வெறுக்கலாம். எனவே மக்களுக்குப் பயப்படாமலும், மக்களைத் தேடாமலும் இருப்பதே ஒருவனுக்கு தேவைப்படுகின்ற பண்பாகும்

நான்கு வகையான மனிதர்கள் உள்ளனர்:

(i) அதா4ர்மிகா: - தர்மப்படி வாழாதவர்கள். அதர்ம வழியில் தங்களது ஆசைகளை நிறைவேற்றுபவர்கள்.

(ii) விஷயிந: - தர்மப்படி வாழ்ந்தபோதிலும் விஷயத்தை லக்ஷியமாகக் கொண்டவர்கள்.

(iii) ஸாத4கா: - மோக்ஷத்தை விரும்புபவர்கள். மோக்ஷத்திற்கான சாதனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள்.

(iv) ஸித்3தா4: - சித்தர்கள்; ஞான நிஷ்டை அடைந்தவரகள்.

இந்த நான்கு வகையினரில் (i) மற்றும் (ii) வகையான மனிதர்களிடமிருந்து விலகி இருத்தல் வேண்டும். (iii) மற்றும் (iv) -உடன் பழக்கத்தை வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ‘அரதி: ஜநஸம்ஸதி3என்பது மனிதர்களை விட்டு விலகிச் செல்லுதலைக் குறிக்கவில்லை, ஆனால் நமது பாதைக்கும் முயற்சிக்கும் இடையூறு விளைவிக்கும் நபர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பதைக் குறிப்பதாக சங்கரர் பாஷ்யத்தில் விளக்கமளிக்கிறார். சாதகன் ஒருவனுக்கு அவர்களின் சிந்தனை முறைகளும் பண்புகளும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்; நற்பண்புகளின் வளர்ச்சிக்கு அது துணைபுரியாது போய்விடும். பொதுவாக அவர்கள் ஆணவம் மேலோங்கியவர்களாகவும், அக்ஞானவாதிகளாகவும் இருப்பதால் அவர்களின் குதர்க்கமான வாதங்கள் ஒரு சாதகனின் சிரத்தையை சேதப்படுத்திவிடும். ஏனெனில் அவர்களின் எல்லா கேள்விகளுக்கான பதில்களும் சாதகனிடம் இருக்க வாய்ப்பில்லை; அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு தன்னை அறிவார்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் சிலரின் நடவடிக்கைகள் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கிவிடும். எனவே நற்பண்புகள் இல்லாதவர்களிடத்தும், நற்பண்புகளின் மீது மதிப்பு இல்லாதவர்களிடத்தும் விலகி இருத்தல் வேண்டும். மாறாக, அறிவும் புலனடக்கம் மனவடக்கம் உள்ளிட்ட நற்பண்புகளும் உடைய சான்றோரின் இணக்கம் நமது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுவதால் அத்தகைய ஸத்சங்கம் சாதகனுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். நல்லாரோடு கூடியிருத்தல், பிறகு அவர்களிடத்திருந்தும் பிரிந்து தனித்திருத்தல் தவத்துக்கும் ஞான வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன

ஞானப் பாதையில் இருக்கின்ற காலகட்டத்தில், சாஸ்திரத்தை உள்வாங்கி அதை பகுப்பாய்வு செய்து பிரதிபலிக்கிற மனம் தேவைப்படுகிறது. ஆகவே அப்போதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, நமது நோக்கத்திற்கு நன்மை விளைவிக்காத நபர்களுடனான தேவையற்ற விவகாரங்களில் பங்கெடுத்து, அதை சமாளிக்கும் செயல்களில் ஈடுபடுவதை விருப்பமில்லாமல் ஆக்கிக் கொள்ளவேண்டும். மஹாத்மாக்களும்கூட சக சாதர்களுடன் இருக்கும் நோக்கில் ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற இடங்களில், சாதகர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளைக் கொடுக்கும் மடங்கள் மற்றும் தங்குமிடங்களை உருவாக்கினர். ஒருவன் ஆர்வத்தினாலோ அல்லது விரக்தியினாலோ அல்லது மனச்சோர்வினாலோ அங்கு சென்றாலும், அந்த சூழ்நிலையின் காரணமாக அவன் ஒரு சாது ஆகலாம். அது ஒரு காலத்தில் கற்றறிந்த சந்யாசிகளின் இடமாக இருந்தது, யாருடன் வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம். இது ஸத்சங்கமாகும்

அந்தக்கரணத்தை முதிர்ச்சியுறச் செய்து ஞானத்தை சாத்தியமாக்குகிறபடியால், இங்கு பட்டியலிடப்பட்ட இந்த பண்புகளும் மனோபாவங்களுமே ஞானம் எனப்படுகின்றன. ஆனாலும் அவைகள் மட்டுமே ஒரு மனிதனுக்கு விடுதலையை அளிப்பதில்லை. எனவே அடுத்த சுலோகத்தில் மோக்ஷத்திற்கான உண்மையான வழிமுறைகளை பகவான் சுட்டிக்காட்டுகிறார்.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தீபத்தைக் கண்டதும் பூச்சி இருட்டிலிருந்து ஓடி வருகின்றது. சர்க்கரைப் பாகிலேயே எறும்பு பிராணனை விடுமன்றி அதினின்றும் திரும்பிப் போகிறதில்லை. அதுபோல பக்தனும் ஈஷ்வரனையே எப்போதும் பற்றி நிற்பானாகையால் மற்ற பொருள்களையெல்லாம் அவன் கைவிட்டுவிடுகிறான்.

---------------------------------------------------------------------------------------------

||13.11|| மோக்ஷத்திற்கான நேரடிச் சாதனம்:

अध्यात्मज्ञाननित्यत्वं तत्वज्ञानार्थ दर्शनम्। 

एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ।। ११ ।।

அத்4யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த23ர்ச1நம்

ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத3தோऽந்யதா2 ।। 11 ।।


अध्यात्म ज्ञान नित्यत्वं  அத்4யாத்ம ஜ்ஞாந நித்யத்வம்  ஆத்ம ஞான நிலைபேறு     

तत्व ज्ञान अर्थ दर्शनम्  தத்த்வ ஜ்ஞாந அர்த2 3ர்ச1நம்  தத்துவ ஞானத்தின் பயனை ஆராய்தல்     

एतत्  ஏதத்  இவையாவும்     ज्ञानम् इति  ஞாநம் இதி  ஞானம் என்று    

प्रोक्तम्  ப்ரோக்தம்  பகரப்படுகிறது     यत्  யத்  எது     

अत: अन्यथा  அத: அந்யதா2   இதற்கு அன்னியமானதோ   

(तत्) अज्ञानं  (தத்) அஜ்ஞாநம்  (அது) அக்ஞானம்.


ஆத்ம ஞான நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி —  இவை யாவும் ஞானமாம்; இவற்றிற்கு அன்னியமானவை அக்ஞானம்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வுஇவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.


விளக்கம்:

ஏழாவது சுலோகத்தில் அமானித்வம்(தற்பெருமையின்மை) என்பதில் துவக்கி இந்த சுலோகத்தில் தத்துவ ஞானார்த்த தரிசனம் என்பது முடிய இவை யாவும் ஞானம் எனப்படுகின்றன. இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பதால்  இம்மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகின்றன. இங்கு பகவான் இறுதியான இரு பண்புகளைப் பற்றி கூறுகிறார்.


=> ஆத்ம ஞான நிலைபேறு:

தன்னறிவை மையமாகக் கொண்ட ஞானம்அத்4யாத்ம ஜ்ஞாநஆகும். இது ஆத்ம-விஷய-ஞானம் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒருவனது உடல், பிராணன், மனம் பற்றிய அறிவைக் குறிக்கலாம் அல்லது இங்கே கூறப்பட்டுள்ளதுபோல ஸத்-சித்-ஆனந்தமாகிய ப்ரத்யக-ஆத்மாவைப் பற்றிய ஞானத்தைக் குறிக்கலாம். இங்கு அது ஆத்மாவே ப்ரம்மம் என்கிற ஞானத்தைக் குறிக்கிறது. இந்த அறிவு சாஸ்திரத்தை கற்றலின் மூலம் வருகிறது. எனவே இங்கு பிரமாண ப்ரவ்ருத்தி பேசப்படுகிறது எனலாம். ஞானத்திற்கானத் தகுதிகளான ஞாந-சாதனத்தை பற்றிய விவாதத்தில், மனதைத் தயார்படுத்துவதற்குத் தேவையான பண்புகளைப் பட்டியலிட்ட பிறகு, இங்கு பிரமாணத்தை கையாளுதல் எனும் சாதனம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அமானித்துவம் போன்ற அனைத்து நற்குணங்களும் ஒருவனுக்கு இருந்தாலும், குரு உதவியுடன் செய்யப்படும்அத்4யாத்ம ஜ்ஞாந நித்யத்வம்எனப்படும் சாஸ்திர விசாரம் மிக அவசியம். இதிலிருந்து எந்தவித தெளிவின்மைக்கும் இடமில்லாமல் பாதை நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது

இங்குநித்யத்வஎன்ற சொல்நிரதத்வஎன்கிற பொருளில், முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து அதில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. ஆத்ம-விஷயத்தை அடையச் செய்யப்படும் விசாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளுதலை, அதாவது ஞானயோகத்தைக் குறிக்கிறது. அமானித்துவம் போன்ற குணங்கள் ஒருவனின் மன முதிர்ச்சிக்கு உதவிய போதிலும், மோக்ஷத்திற்கு ஞானம் இன்றியமையாதது. ஆகவே, யாருடைய கவனமானது எப்போதும் இந்த ஆத்ம-ஞானத்தைக் குறித்த விசாரத்தில் தொடர்ந்து இருக்கிறதோ அவன் அத்4யாத்ம ஜ்ஞாந நித்யத்வ-த்தை உடையவனாகிறான். அவன் எப்பொழுதும் சிரவணம், அல்லது மநநம் அல்லது நிதித்யாசனத்தில் ஈடுபட்டுள்ளான்

ஏதேனுமொரு வகையில் ஆத்ம-வித்யைக்கு தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளுதலும் அது குறித்து சிந்தித்தலும் கண்டிப்பாகத் தேவை. ஆகவேதான் இந்த விஷயத்தில் ஏராளமான கிரந்தங்களும் நூல்களும் உள்ளன. அத்4யாத்ம ஜ்ஞாந நித்யத்வ-த்தைக் கொண்டிருந்த நமது முன்னோர்கள், தங்களை அந்த அறிவில் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கில் ஒரு ஆன்மீக-சாதனமாக ஏராளமான நூல்களை எழுதி வைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பின்னாட்களில் வரும் சாதகர்களின் நலனுக்காகவென எழுதத் தூண்டப்பட்டவர்களால் கொடுக்கப்பட்டுள்ள சாஸ்திர சம்பந்தமான இலக்கியங்களும் ஏராளம். எனவே சாஸ்திர விசாரத்தில் செலவிட எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ, அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதற்கும் போதுமான நூல்கள் நம்மிடம் உள்ளன. பிரமாணம் என்பது உடனடியாக அறிவைக் கொடுக்கின்ற ஒன்றாக இருந்தபோதிலும், அதிலேயே அதிக நேரம் செலவிடப்படும்போது அது குறித்த தெளிவு வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இந்த அத்யாத்ம-ஞானத்தின் பலன் அத்யாத்ம-ஞானநிஷ்டையாகும்.

  இங்கு பட்டியலிடப்பட்ட பண்புகள் வேதாந்த சாஸ்திர அறிவைக் கொடுக்கின்றன; வேதாந்த சாஸ்திரத்தின் காரணமாக இப்பண்புகள் பக்குவத்தை அடைந்து ஞானம் பலனைக் கொடுக்கிறது. இந்த பரஸ்பர சம்பந்தத்தின் காரணமாக, தெளிவு அதிகரித்து வருகிறது. அதாவது நற்பண்புகள் கைகூடும்போது ​​ஞானம் தெளிவாகிறது, மேலும் ஞானம் தெளிவை அடைய அடைய நற்பண்புகள் வசப்படுகிறது. ஒரே பறவையின் இரண்டு இறக்கைகள் போல இவை செயல்படுகின்றன.


=> ஞானத்தின் பலனைச் சிந்தித்தல்:

அடுத்ததாக, மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தின் பிரயோஜனத்தை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார்த்தல் பேசப்படுகிறதுஇந்த பண்பு இருக்கும்போது மட்டுமே ஞானத்தைப் பின்தொடர்வதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கமுடியும். ‘தத்த்வ ஜ்ஞாநஎனில் சுயத்தின் உண்மையைப் பற்றிய அறிவு என்று பொருள். ‘அர்த2என்பது அதனுடைய விளைவு அல்லது பலனாகக் கிடைப்பது ஆகும். இது மோக்ஷத்தை, அனைத்து விதமான வரம்புகளிலிருந்தும் கிடைக்கின்ற முழு சுதந்திரத்தைக் குறிக்கிறது. ‘3ர்ச1நம்எனில் அந்த முடிவை மிகத் தெளிவாகக் காண்பதை, அதாவது மனதில் அதை மீண்டும் மீண்டும் சிந்தித்தலைக் குறிக்கிறது. ஞானத்தின் பலனான மோக்ஷத்தைப் பற்றிய தொடர் சிந்தனையானது, அமானித்வம் போன்ற குணங்களைப் பெறுவதற்கு தேவையான முயற்சியை மேற்கொள்வதை எளிதாக்குகிறது. இத்தகைய மேலான முடிவை பெறுவதற்கு எந்தவித கடினமான சாதனத்தையும் மேற்கொள்ளலாம் என்கிற உற்சாகத்தை இது ஒருவனுக்கு அளிக்கிறது. ‘தத்த்வ ஜ்ஞாந அர்த2 3ர்ச1நம்என்பது உண்மையில் முமுக்ஷுத்துவத்தை தவிர வேறில்லை. இது ஒரு சாதகனை ஜிக்ஞாசுவாக மாற்றுகிறது. இந்த அறிவின் பலனான மோக்ஷம் என்பது ஒருபோதும் அவனது பார்வையிலிருந்து விலகி இருப்பதில்லை

இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஞான சாதனங்களிலும் இதுவே இறுதியானது மற்றும் மிக முக்கியமானது. ஏனெனில் இலக்கைப் பின்தொடரும் பாதையில் தொடர்ந்து இருத்தல் என்பது அதிலுள்ள தீவிரத்தன்மையைக் குறிப்பதால், அமானித்வம் போன்ற பிற குணங்களைப் பெறுவதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறான். இதனால் சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனம் ஆகியவற்றின் மூலம் ஞானத்தைப் பின்தொடர்வதற்கான அர்ப்பணிப்பும் அவனுக்கு அதிகரிக்கிறது. இதனால் அவன் அதற்குத் தேவையான எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்.

ஒருவனது நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சக்கூடிய பல ஆசைகள் இந்த லெளகிக வாழ்க்கையில் இருப்பதால் மோக்ஷமெனும் ஆசையானது நமது பார்வையை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். உண்மையில் நாம் எதன் பின் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை தொடர்ந்து பகுப்பாய்வு செய்வதன் மூலமே முதன்மையான இலக்கை கவனத்தில் வைக்கமுடியும். எனவே இரண்டாம் நிலை விஷயங்கள் முதன்மையான இலக்கை மூழ்கடிக்காது செய்ய இந்த பண்பு மிக அவசியம்

இனி இந்த தலைப்பை முடிவுரை செய்கிறார்: இங்கு சொல்லப்பட்ட(ஏதத்), அதாவது ஏழாவது சுலோகத்தில்அமானித்வம்என்பதில் துவக்கி இந்த சுலோகத்தில்தத்த்வ ஜ்ஞாந அர்த2 3ர்ச1நம்முடிய பட்டியலிடப்பட்ட இவை யாவும், ஞானம் என்று சொல்லப்படுகிறது(ஞாநம் இதி ப்ரோக்தம்). இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பதால் இம்மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகின்றன. இவ்விதம் நேர்மறையாக சொல்லியபின், எதிர்மறையாக மேலும் கூறுகிறார்: இதற்கு மாறானது எதுவோ அது அறியாமை(யத் அத: அந்யதா2 (தத்) அஜ்ஞாநம்). ‘அந்யதா2எனில் வேறானது என்பது பொருள். இங்கு, இதற்கு எதிராக இருப்பது எதுவோ அல்லது இங்கு சொல்லப்பட்ட பண்புகளிலிருந்து விபரீதமாக இருப்பது எதுவோ என்பது பொருள். சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையான மனநிலைகளாகிய தற்பெருமை, தருக்கு, ஹிம்சை, பொறாமை, மனக்கோணல், குருபராமுகம், மாசு, தளர்ச்சி, அடங்காமை, ஆசை, அஹங்காரம், கேடறியாமை, பற்று, உற்றாரைச் சார்ந்திருத்தல், ஓரம் சார்தல், காமியபக்தி, சகவாசதோஷம், ஆத்மஞான விசாரமின்மைஆகிய இவையாவும் அக்ஞானத்தை வளர்க்கின்றன. அதாவது, இவைகள் ஞானத்திற்கான சாதனைகள் அல்ல என்பதால் மறுக்கப்பட வேண்டியவைகள் ஆகின்றன. உண்மையில் அமானித்வம் போன்ற பண்புகள், ஒருவனது சுயத்தின் இயல்பாகவே இருப்பதால் அதை வளர்க்க முடியாது. மானித்வத்தை(தற்பெருமை அடித்துக் கொள்ளுதலை) நீக்குவதே அங்கு செய்யப்பட வேண்டியது ஆகும். அஹிம்சை எனும் பண்பை வளர்ப்பது என்பதை விட, ஹிம்சித்தல் எனும் போக்கை நீக்குதலே செய்யப்பட வேண்டியது ஆகும். அவைகள் சம்சாரத்திற்கு காரணமாக அமைவதால் நீக்கப்பட வேண்டும் என்கிறார் சங்கரர்

ஞாநம்என்றே அழைக்கப்படுகிற இந்தத் தகுதிகளால், அறிய வேண்டியது என்ன, ஞேய? இனி, பகவான் ஞேயத்தை குறித்த விளக்கத்தை அளிக்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரன் எங்கும் நிறைந்திருப்பவரானால் நம்மால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை? பாசியும் நாணலும் மிகுந்திருக்கும் குளத்தின் கரையில் நின்றுகொண்டால் அக்குளத்தில் ஜலமே இல்லையென்றுதான் நீ சொல்வாய். ஜலத்தைக் காண வேண்டுமானால் குளத்தின் மேற்பரப்பிலிருந்து பாசியை அகற்ற வேண்டும். மாயையாகிற திரையால் மூடப்பட்ட கண்களையுடைய நீ ஈஷ்வரனைக் காணமுடியவில்லையென்று குறை கூறுகிறாய். அவரைக் காணவேண்டுமானால் உனது கண்களினின்றும் மாயையாகிய திரையை அகற்று

---------------------------------------------------------------------------------------------