||13.14|| ஏற்றிவைத்தலும் நீக்குதலும்:
सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ।। १४ ।।
ஸர்வேந்த்3ரியகு3ணாபா4ஸம் ஸர்வேந்த்3ரியவிவர்ஜிதம் ।
அஸக்தம் ஸர்வப்4ருச்சைவ நிர்கு3ணம் கு3ணபோ4க்த்ரு ச ।। 14 ।।
सर्वे इन्द्रिय गुण आभासं ஸர்வ இந்த்3ரிய கு3ண ஆபா4ஸம் எல்லா புலன்கள் வாயிலாக ஒளிர்வது
सर्वे इन्द्रिय विवर्जितम् ஸர்வ இந்த்3ரிய விவர்ஜிதம் எல்லா(எந்தப்) புலன்களும் அற்றது
असक्तं அஸக்தம் பற்றற்றது सर्वभृत् ஸர்வப்4ருத் அனைத்தையும் பற்றித் தாங்குவது
निर्गुणं च एव நிர்கு3ணம் ச ஏவ குணம் இல்லாதது
गुणभोक्तृ च கு3ணபோ4க்த்ரு ச குணங்களை அனுபவிப்பதும், …
புலன்கள் அனைத்தின் வாயிலாக ஒளிர்வது, புலன்கள் யாவையும் அற்றது, பற்றற்றது, அனைத்தையும் பற்றித் தாங்குவது, குணங்களே இல்லாதது எனினும் குணங்களை அனுபவிப்பது;
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.
விளக்கம்:
இந்த சுலோகத்தில் ஏற்றிவைத்தலும் நீக்குதலும் சேர்ந்தே செய்யப்படுகிறது.
=> புலன்களுடன் கூடியது, புலன்களற்றது:
எல்லா இந்திரியங்களின் வாயிலாக ஒளிர்வது — ஸர்வ இந்த்3ரிய கு3ண ஆபா4ஸம். அந்த ப்ரம்மம் அனைத்து புலன்களின், அதாவது ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் அந்தக்கரணம் ஆகியவற்றின் செயல்பாடுகளுடன் விளங்கிக் கொண்டுள்ளது. அனைத்து உடல்களுக்குள்ளும் அதன் இந்திரியங்களாகச் செயல்பட்டு ஒளிர்ந்து கொண்டுள்ளது அந்த ப்ரம்மம். இது அத்யாரோபம் ஆகும்.
அடுத்ததாக, இதற்கான அபவாதம் வருகிறது. அனைத்து இந்திரியங்களும் அற்றது — ஸர்வ இந்த்3ரிய விவர்ஜிதம். அதாவது ப்ரம்மம் எந்தவித புலன்களும் அற்றதாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. முரண்பாட்டைப் போலக் காணப்படுகின்ற இந்த வாக்கியங்கள் உண்மையில் முரண்பாடுகள் அல்ல. மேலோட்டமாக பார்க்கும்போது அவ்விதம் தெரியும் இந்த இரு வாக்கியங்களும், விளக்கப்பட்டு புரியும்போது இரண்டின் அர்த்தமும் உண்மையையே போதிப்பதாகின்றன. எல்லையற்ற, காலத்திற்கு அப்பாற்பட்ட, அனைத்தின் இருப்பிற்கும் காரணமான அந்த ப்ரம்மத்தின் தன்மையை வெளிப்படுத்த இந்த அத்யாரோப-அபவாத முறையே சிறந்தது என்பதை சென்ற சுலோகத்தில் பார்த்தோம்.
இந்த உடல் ஐந்து பூதங்களால் ஆனது என்றாலும் அது உணர்வுடன் இருக்கும்போது அதற்கு கொடுக்கின்ற அந்தஸ்து வேறு — மனிதன். அந்த உணர்வு சென்றுவிட்ட பின் அதே உடலுக்கு நாம் கொடுக்கும் நிலையே வேறு — பிணம். எனவே உடலினுடைய நிலை என்பது அதனுடைய உணர்வை, பிரக்ஞையைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இல்லாத அந்த அந்தஸ்து, இடையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து, பின்னர் மீண்டும் அது சென்றுவிடுகிறது. இடைப்பட்ட காலத்தில் அந்த உடலுக்கு கொடுக்கப்படும் அந்த அந்தஸ்தும்கூட அதைச் சார்ந்தது அல்ல. இவ்விதம் உண்மையிலேயே வெறும் தோற்றமாக, அதாவது இருப்பதைப் போல வெறும் காட்சியாக மட்டுமே இருப்பதை நாம் மித்யா என்கிறோம். சுதந்திரமாக இல்லாத தன்மை, தன் இருத்தலுக்கு இனியொன்றைச் சார்ந்து இருக்கின்ற தன்மை மித்யா ஆகும். உடலுக்கு, உடல் என்கிற தன்மை மித்யா. எனவே இந்த உடல், மனம் மற்றும் இந்த உலகம் யாவும் அனுபவ காலத்தில் மட்டுமே இருந்து, உண்மையில் இல்லாமல் ஆனால் இருப்பதைப் போலத் தெரிகிறது என்பதால் இவைகளனைத்தும் மித்யா ஆகின்றன. இவைகளின் அதிஷ்டானமாக விளங்குகிற மற்றும் எந்தவொன்றைச் சார்ந்து இவையனைத்தும் தோன்றிக் கொண்டிருக்கின்றதோ அந்த ஆத்மாவாகிய ப்ரம்மம், இந்திரியங்களுக்கும் உடலுக்கும் அப்பாற்பட்டது. அதே சமயத்தில் சைத்தன்யமாகிய அந்த ப்ரம்மத்தினால்தான் இவைகள் உடலாக, புலன்களாக மற்றும் மனமாக செயல்படுகின்றன. இந்தக் கருத்தையே கேனோபநிஷத், காதுக்கு காதாக, அதாவது காது எனும் புலன் காதாக செயல்பட, கண்கள் கண்களாக இருக்க, மனம் மனமாக செயல்பட காரணமாக இருப்பது ப்ரம்மம் என்கிறது. எனவே உடலுக்கு கொடுக்கப்பட்ட இருப்பு என்பது தற்காலிகமானது. உடல், புலன்கள், மனம் இவை தற்காலிகமானது.
* உபாதி:
ஒரு கல் இயற்கையாகவே நீல நிறத்தில் இருந்தால் அது அந்த கல்லினுடைய இயல்பு எனலாம். ஆனால் அது ஒரு நீல நிறமான பொருளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு படிகம் என வைத்துக்கொள்வோம். அப்போது அந்தப் படிகத்தின் நீல நிறத் தோற்றத்திற்கு அந்தப் பொருள் மூலகாரணமாகிறது. இந்த பண்பு உபாதி எனப்படுகிறது. புலன்களும் அதனுடைய செயல்பாடுகளான பார்த்தல், பேசுதல், நடத்தல் போன்றவைகளும் உண்மையில் ப்ரம்மத்தின் குணங்கள் அல்ல. சைத்தன்யமாக விளங்குகின்ற ஆத்மாவை எப்போதும் குணங்களின் வழியாகவே பார்ப்பதால் அது அவ்விதம் தெரிகிறது. எனவேதான் இவைகள் உபாதிகள் எனப்படுகின்றன. சங்கரர் இதை, ஆத்மாவாகிய ப்ரம்மத்தை செயல்பாடுகளைக் கொண்டதாக புரிந்து கொள்ளக்கூடாது. அப்படியெனில் ஒருவனால் அவனது செயல்களை நிறுத்தவோ, ஒரு செயலிலிருந்து இன்னொரு செயலுக்கு தன்னை மாற்றிக் கொள்ளவோ இயலாது. ஆனால் நாம் செயலை நிறுத்துகிறோம், மாற்றுகிறோம். ஆத்மா செயல்பாடுகள் இல்லாததாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது, என்கிறார். கைகள் மற்றும் கால்கள் இல்லாமல்(ஆத்மா) ஓடுகிறது, பிடிக்கிறது; கண்கள் இல்லாமல் பார்க்கிறது - அபாணிபாதோ3 ஜவநோ க்3ரஹீதா பச்1யத்யசக்ஷு, என சுவேதாஸ்வதர உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆத்மாவான ப்ரம்மம், எல்லா உபாதிகளிலிருந்தும் விடுபட்டது, ஆனால் உபாதிகளின் வாயிலாக அதன் வெளிப்பாடு பார்க்கப்படுகிறது. செயல்பாடுகளுடன் உணர்வு அறியப்படுவதாகி கைகளால் பிடிப்பவனாக, கால்களால் நடப்பவனாக என ஆகிறது. எனவே புலன்களின் வாயிலாக ஒளிர்வது(ஸர்வேந்த்3ரிய கு3ணாபா4ஸம்) மற்றும் புலன்களற்றது(ஸர்வேந்த்3ரிய விவர்ஜிதம்), இவ்விரண்டும் சரியானவை ஆகின்றன. அனைத்து இந்திரியங்களின் வாயிலாக ப்ரம்மமே ஒளிர்ந்து கொண்டும் அதே சமயத்தில் அது எந்த இந்திரியங்களும் அற்றதாகவும் இருக்கின்றது. அதாவது உபாதியின் நிலைபாட்டில் நோக்கும்போது அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறது, ஆனால் அதன் சொரூபத்தின் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது அது எந்த செயலும் அற்றதாக இருக்கிறது. இவ்விதமாக பொருள் புரியாமல் மேலோட்டமாகப் பார்க்கும்போது இருப்பதாகத் தெரிந்த முரண்பாடுகள், பொருள் புரிந்தபின் இல்லாமல் ஆகிறது.
=> பற்றற்றது, பற்றித் தாங்குவது:
எல்லாவற்றையும் பற்றித் தாங்குவது — ஸர்வப்4ருத். நம்மால் அனுபவிக்கப்படும் அனைத்தையும் தாங்குவதாக ப்ரம்மம் இருக்கின்றது. இதில், சிருஷ்டி விஷயங்கள் முழுக்க ப்ரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்படுகின்றது.
பற்றற்றது — அஸக்தம். ப்ரம்மம் எதனுடனும் சம்பந்தப்படாதது எனக் கூறி இங்கு அபவாதம் செய்யப்படுகிறது. உதாரணமாக பாலைநிலம் மற்றும் அதில் தோன்றும் கானல் நீரை எடுத்துக் கொள்ளலாம். இதில் உண்மையில் இல்லாத நீரை நிலமானது தாங்குகிறது. அதாவது கானல் நீர் பொய் எனினும், அங்கு ஆதாரமாக பூமி இல்லையேல் அந்த கானல் நீரும்கூட தோன்றியிருக்காது. மேலும் அங்கு பூமியானது கானல் நீரினால் நனைவதில்லை; எந்தச் சம்பந்தமும் வைப்பதில்லை அல்லது ஒட்டுவதில்லை. ஆனால் பூமி கானலை தாங்குவதாகும், கானல்நீரினால் அது நனைந்ததாகவும் தெரிகிறது. இதில் கானல்நீர் மித்யா; பூமி ஸத்யம்.
மேலும் கயிறு-பாம்பு உதாரணத்தை எடுத்துக் கொண்டால், அங்கும் கயிறு இருக்கும் வரைதான் பொய்யான பாம்பைப் பார்க்கமுடியும். அதுமட்டுமல்லாமல், கயிற்றின் மீது பொய்யான பாம்பு தோன்றிக் கொண்டிருந்தபோதிலும் கயிற்றிற்கும் பாம்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதில் பாம்பு மித்யா; கயிறு ஸத்யம்.
எனவே ஏற்றிவைக்கப்பட்டது(மித்யா) மற்றும் அதனுடைய அதிஷ்டானம்(ஸத்யம்) என்கிற உறவு இருக்கும்போதுதான் இந்த இரு நிபந்தனைகளும் பொருந்தும்:
(1) ஏற்றி வைக்கப்பட்டதான அனைத்திற்கும் ஆதாரம்
(2) சம்பந்தப்படாமலிருப்பது; ஒட்டாமலிருப்பது.
எனவே நம்மால் அனுபவிக்கப்படுகிற மித்யாவான இந்த உடல், மனம் மற்றும் உலகம் இவையனைத்தையும் தாங்குவதாக ப்ரம்மம் இருந்தபோதிலும், அது எதனுடனும் சம்பந்தப்படாது, பற்றற்றதாக அதாவது ஒட்டாததாக இருக்கிறது. கானல் நீரினால் நனைக்கப்படாது சம்பந்தமற்று இருக்கின்ற பூமியைப் போல, இந்த சிருஷ்டியினால் தொடப்படாது சம்பந்தமில்லாமல் அசக்தமாக இருக்கிறது அந்த ப்ரம்மம்.
=> குணங்களுடையது, நிர்குணமானது:
குணங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது — கு3ணபோ4க்த்ரு. மாயையின் மூன்று வகையான குணங்களும், அதன் பலனாக அனுபவிக்கப்படும் இரு விஷயங்கள் அல்லது வெளிப்பாடுகளும் பின்வருமாறு சொல்லப்படுகின்றது:
(1) ஸத்வ குணம் (ஸத்வம்) - சுகம் மற்றும் ஞானம்
(2) ரஜோ குணம் (ரஜஸ்) - துக்கம் மற்றும் செயல்
(3) தமோ குணம் (தமஸ்) - மோஹம் மற்றும் அறியாமை
இக்குணங்கள் உணர்வு உறுப்புகள் மூலம் சுகம், துக்கம், மோஹம் உள்ளிட்ட பல்வேறு வகையான அனுபவங்களை உருவாக்குகின்றன. இந்த அனுபவங்கள் ப்ரம்மத்தின் இருப்பினால் மட்டுமே சாத்தியமாகிறது. அதாவது இவைகளின் இருப்பும்(ஸத்), இவைகள் குறித்த அனுபவமும்(சித்), இவைகளின் மூலம் பெறப்படும் எந்தவொரு ஆனந்தமும்(ஆனந்த) ப்ரம்மத்தினாலேயே ஆகும். ஆகவே இந்த அனைத்துவிதமான வெளிப்பாடுகளையும் ப்ரம்மம் அனுபவிப்பதாகச் சொல்லி அத்யாரோபம் நடைபெறுகிறது. இவைகளனைத்தும் ஜீவன் அனுபவிக்கின்ற குணங்களாதலால், ஜீவன் ப்ரம்மத்தின் மீது ஏற்றிவைக்கப்படுகிறது எனவும் கூறலாம்.
இனி, அந்த ப்ரம்மம் குணங்களற்றது — நிர்கு3ணம், எனக் கூறி அபவாதம் செய்யப்படுகிறது. த்ரிகுணாத்மிகா மாயா-வுடன் சேர்ந்து ப்ரம்மம் இந்த சிருஷ்டியின் மூலகாரணமாக இருக்கிறது. ஆனால் ப்ரம்மத்தின் சொரூபம் என்பது ஸத்யம்-ஞானம்-அனந்தம் ஆகும். இந்த மித்யா சிருஷ்டியின் தொடர் மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்ற மாயையும் மித்யாவாகவே உள்ளது. எனவே ப்ரம்மம் எல்லா குணங்களிலிருந்தும் விடுபட்டதாக நிர்குணமானதாக இருக்கிறது.
சினிமாத் திரையில் தோன்றிக் கொண்டிருக்கும் படத்தில் காணப்படுகின்ற விதவிதமான வர்ணங்கள் திரையினுடைய வர்ணங்கள் அல்ல. ஆனால் அத்தனை வர்ணங்களையும் அந்தத் திரை உள்ளபடி விளக்குகிறது. அங்ஙனம் முக்குணங்களும் பரமாத்மாவினிடத்து இல்லை. ஆயினும் குணங்களையெல்லாம் விளக்கவும் அனுபவிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமான ஆத்மாவாக ஒளிரும் ப்ரம்மம்.
இவ்விதம் புலன்கள், மனம், ஜகத் மற்றும் ஜீவன் ஆகியவைகள் அத்யாரோபம் செய்யப்பட்டு, பின்னர் அபவாதம் செய்யப்படுகின்றது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான். ஒன்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும். எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும், நெருப்பைத் தவிர்த்து எரிகிற சக்தியையும் சிந்திக்கவொண்ணாது. இன்னும் சூரிய கிரணங்களைத் தவிர்த்து சூரியனையும், சூரியனைத் தவிர்த்துச் சூரிய கிரணங்களையும் நினைக்க முடியாது; பாலைத் தவிர்த்து அதன் வெண்மையையும், வெண்மையைத் தவிர்த்துப் பாலையும் கருதவொண்ணாது. அது போல குணஸ்வரூபமான ஈஷ்வரனைத் தவிர்த்து நிர்குண ஸ்வரூபனையும், நிர்குண ஸ்வரூபனைத் தவிர்த்து குணஸ்வரூபனையும் சிந்திக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------
||13.15|| ப்ரம்மத்தின் சொரூபம் மேலும் விளக்கப்படுகிறது:
बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ।। १५ ।।
ப3ஹிரந்தச்1ச பூ4தாநாமசரம் சரமேவ ச ।
ஸூக்ஷ்மத்வாத்தத3விஜ்ஞேயம் தூ3ரஸ்த2ம் சாந்திகே ச தத் ।। 15 ।।
तत् தத் அது भूतानाम् பூ4தாநாம் உயிரினங்களுக்கு बहि: ப3ஹி: புறமும்
अन्त: च அந்த: ச உள்ளும் अचरं அசரம் அசையாததும் चरम् एव च சரம் ஏவ ச அசைவதும் सूक्ष्मत्वात् ஸூக்ஷ்மத்வாத் நுண்மையாக இருப்பதால்
अविज्ञेयं அவிஜ்ஞேயம் அறியவொண்ணாதது तत् தத் அது
दूरस्थं च தூ3ரஸ்த2ம் ச தூரத்திலிருப்பதும் अन्तिके च அந்திகே ச அருகிலிருப்பதும்
உயிரினங்களுக்குப் புறமும் உள்ளும் உள்ளது; அது அசையாதது, அசைவது. நுண்மையானது ஆதலால் அறியவரிது; எட்டவும் கிட்டவும் இருப்பது அது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.
விளக்கம்:
இங்கு ப்ரம்மத்தைப் பற்றிய மேலும் சில முரண்படுவதைப் போலான, ஆனால் உண்மையை போதிக்கின்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
=> உள்ளும் புறமும் இருப்பது:
அறியப்பட வேண்டிய இந்த வஸ்து, ப்ரம்ம, உள்ளேயும் வெளியேயும் உள்ளது எனக் கூறப்படுகிறது — ப3ஹி: அந்த: ச. அதாவது இது அகம் மற்றும் புறம் என்கிற வேறுபாடு அற்றதாக இருக்கிறது எனப் பொருள்படும். பொதுவாக உள் அல்லது வெளி என்பது ஒரு குறிப்பிட்ட சான்றாதாரத்தைப் பொறுத்துத் தான் நிறுவப்படுகிறது. உதாரணமாக, இந்த வாகனம் வீட்டிற்கு வெளியே ஆனால் வராந்தாவிற்கு உள்ளே நிற்கிறது எனலாம்.
இங்கு ஆத்மாவாகிய இந்த ப்ரம்மம் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது என்று சொல்லும்போது, எதைப் பொறுத்து அந்த உள் மற்றும் வெளி நிர்ணயிக்கப்படுகிறது என்கிற கேள்வி எழலாம். அதற்கு சங்கரர், ‘நான்’ என்பதிலிருந்து வேறாக இருப்பவைகள் ‘வெளியே’ என இங்கே மிக அழகான விளக்கத்தை அளிக்கிறார். இங்கு ‘நான்’ என்பது உடலை, அதாவது தோல் வரை எல்லையாக வைத்துக் குறிப்பிடுகிறார். எந்தவொரு ஜீவனும் தோல் வரையிலான தனது பௌதிக உடலை எல்லையாக வைத்து அதற்கு வெளியே இருப்பதை புறம் என்றும் பிராணமயம் உள்ளிட்ட உடலுக்குள் உணரப்படுகிற விஷயங்கள் ‘உள்ளே’ என்றும் நினைக்கிறது. எனவே உள்ளும் புறமும் ப்ரம்மம் எனும்போது, ஜகத்-காரணமாக அந்த ப்ரம்மமே அனைத்துயிர்களின் வெளியேயும்(பூ4தாநாம் ப3ஹி:), அறியப்பட்ட மற்றும் அறியப்படாத புற உலகாக இருக்கிறது. அதேசமயம் ப்ரம்மமே ஆத்மாவாக இருப்பதால், சைத்தன்யமாக அனைத்துயிர்களின் உள்ளேயும் அவைகளின் இருப்புக்கும் உணர்வுக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே எல்லையற்றதாயும் மற்றும் எல்லாவற்றிற்கும் காரணமாயும் வெளியில் இருப்பதும் பரம் ப்ரம்மம், எல்லாவற்றின் இருத்தலும் உணர்தலுமாய் உள்ளே இருப்பதும் பரம் ப்ரம்மம்.
=> அசைவதாயும் அசையாததாயும் இருப்பது:
உள்ளேயும் வெளியேயுமிருப்பது எனக் கூறப்பட்டது. அதில் உடலை குறிப்பிடமாகக் கொண்டு உள் மற்றும் வெளி என நிர்ணயிக்கப்பட்டதால், இந்த பெளதிக உடல் தவிர்க்கப்பட்டதாக ஆகிறது. அதை இங்கு சரிசெய்யும் விதமாக, அசையாததும் அசைவதுமாக இருப்பது — அசரம் சரம் ஏவ ச, என்கிறார் கிருஷ்ணர். ‘அசரம்’ எனில் மலைகள் அல்லது மரங்கள் போன்ற தன்னிச்சையாக நகராதவைகளைக் குறிக்கிறது. உண்மையில் முழு பிரபஞ்சமும் நகர்கிறது எனினும் இங்கே குறிக்கப்படும் இந்த நகர்வு விருப்பத்தால் நிகழ்வதைக் குறிக்கிறது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் நகர்கின்றன - சரம். மரமானது வளர்ச்சி அல்லது காற்றின் காரணமாக ஒருவித குறிப்பிட்ட அசைவைக் கொண்டிருந்தாலும், ஒரே இடத்தில் வேரூன்றியுள்ளதால் அவை ‘அசரம்’ வகையிலேயே சேர்க்கப்படுகின்றன. இவ்விதம் அசைகின்றதாயும் அசையாதவைகளாயும் இருக்கின்றது அந்த ப்ரம்மம். ப்ரம்மத்திற்கு வெளியில் என எதுவுமில்லை. எவ்விதம் முழு பானையும் உண்மையில் களிமண்ணிலிருந்து வேறாக இல்லையோ, அதுபோல இந்த முழு சிருஷ்டியும் ‘ஸத்யம்’ ப்ரம்மத்திலிருந்து வேறானதாக இல்லை.
=> புரிந்து கொள்வது கடினம்:
மிக மிக நுண்ணியதாக இருப்பதால் இதை அறியவொண்ணாது — ஸூக்ஷ்மத்வாத் அவிஜ்ஞேயம். குறிப்பிட்ட வடிவமோ அல்லது பாகங்களோ இல்லாததால், பஞ்ச பூதங்களில் ஆகாசமானது மிகவும் நுண்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த காரணத்தினாலேயே அது எங்கும் வியாபித்தும், எதனாலும் பாதிக்கப்படாதும் இருக்கிறது. இந்த ஆத்மாவோ ஆகாசத்தைக் காட்டிலும் மிக நுண்ணியது. தூய பிரக்ஞையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த ஆத்மாவாகிய ப்ரம்மத்தைக் காட்டிலும் நுண்மையானது என எதுவுமில்லை. இப்படிப்பட்ட இந்த அறிவு சொரூபத்தின் காரணமாகவே அனைத்தும் இருக்கிறது மற்றும் அறியப்படுகிறது.
மிக நுண்மையானதாக இருப்பதால் அதை அறிய முடியாது, அவிஜ்ஞேயம், எனக் கூறப்பட்டது. அறிய முடியாத ப்ரம்மத்தை எப்படி அறிவது? இங்கு அறியவொண்ணாதது எனில் உண்மையில் அதை ஒரு பொருளாக அறிய முடியாது. ஏனெனில் அது ஒருவனின் சுயசொரூபமாகவே இருப்பதால், தன்னை எப்படி ஒருவன் தன்னிலிருந்து வேறான ஒன்றாக, ஒரு அறிபொருளைப் போல அறிய முடியும்!
=> தொலைவிலும் அருகிலுமிருப்பது:
அந்த ப்ரம்மம் மிக தூரத்திலும், மிக மிக அருகிலும் இருக்கிறது - தூ3ரஸ்த2ம் ச அந்திகே ச, என்கிறார். அது ஆத்மாவாக நீயாகவே இருப்பதால், அதை ஒரு பொருளாகப் பார்க்க நினைத்தால் அது உனக்கு மிகத் தொலைவில் உள்ளதாக ஆகிறது - தூ3ரஸ்த2. ஆத்மாவை ஒரு பொருளைப் போல தேடுபவர்களுக்கு அது தூரமாக இருக்கிறது என்கிறார் சங்கரர். ஓராயிரம் கோடி வருடங்களில் கூட அதை அடையமுடியாது. அடிவானம் போல எவ்வளவு தூரம் அதை நோக்கிச் சென்றாலும் அது நெருங்கமுடியாததாக விலகியபடியே நிற்கிறது. ப்ரம்மத்தை தேடுபவனே ப்ரம்மமாக இருப்பதால், தேடுபவன் என்கிற எண்ணம் இருக்கும்வரை அது தூரமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் ஆத்மாவாக அதை அறிபவனுக்கு அது மிக மிக அருகிலிருக்கிறது, அந்திகே. ஒரு ஞானிக்கு, ‘நான் இவையனைத்துமாக இருக்கிறேன்’ என்பதும் ‘ப்ரம்மமே இவையனைத்துமாக இருக்கிறது’ என்பதும் ஒன்றே ஆகும்.
சாஸ்திர பிரமாணத்தின் மூலம் இந்த அறிதல் ஏற்படுகிறது. இதனால் அறியாமை நீக்கப்பட்டுவிட்டதால் ஒரு ஞானிக்கு இது நித்தியமான ஞானமாக ஆகிறது. தனது சொரூபமான ‘ஸத்யம்-ஞானம்-அனந்தம்’ என்பது, ஒரு கணித சூத்திரத்தை நினைவில் வைத்துக்கொள்வது போல நினைவாற்றல் சம்பந்தப்பட்டதான விஷயமல்ல. அது சுயமாக, சுயத்தின் சொரூபமாக இருப்பதால் அது நினைவாற்றலைச் சார்ந்ததாக அல்லாமல், அறியாமை அகற்றப்படுவது சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கிறது. ப்ரம்மம் ஞானிகளுக்கு மட்டும் ஆத்மாவாக இல்லை; அக்ஞானிகளுக்கும் ப்ரம்மமே ஆத்மாவாக இருக்கிறது, எனினும் அறியாமையின் காரணமாக அது அவர்களுக்கு வெகு தொலைவிலிருப்பதாக ஆகிறது. எனவே ஞானிகளைப் பொறுத்தவரை அது மிக அருகிலிருப்பதாகவும், அக்ஞானிகளுக்கு அது தூரத்திலிருப்பதாகவும் உள்ளது என்கிறார் சங்கரர்.
ஒரே விஷயம் எப்படி அருகிலும் தொலைவிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியும் என்பதை பின்வரும் இந்தக் கதையின் துணைக்கொண்டு காணலாம். ஒரு ரயில் பயணத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பெட்டியைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவரிடம் நிறைய பணம் இருந்தது. அவர், அப்பணத்தை திருடத் தீர்மானித்த மற்றவர் முன்னிலையில் வெளிப்படையாக அதை எண்ணிக் கொண்டிருந்தார். செல்வந்தர் உறங்கச் செல்வதற்காகக் காத்திருந்த திருடன், அவர் உறங்கியதும் அவருடைய எல்லா பொருட்களையும் தேடினான் ஆனால் பணமேதும் தென்படவில்லை. காலையில் குளியலறையில் இருந்து திரும்பிய திருடன், தனது சக பயணி மீண்டும் பணத்தை எண்ணுவதைக் கண்டான். விரக்தியுடன், இரவில் பணத்தை எங்கே மறைத்து வைத்தீர்கள் என்று அவரிடம் நேரடியாகவே கேட்டான். ‘உனது தலையணையின் கீழ்’ என அவர் பதிலளித்தார். திருடனுக்குப் பணம் மிக அருகாமையில், அவனது தலையணைக்குக் கீழே இருந்தது. ஆனால் அது அவனுக்கு தெரியாத காரணத்தினால் அது வெகு தொலைவில் இருப்பதென ஆயிற்று. அதுபோலவே, தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவனுக்கு அவர் மறுமையில் எங்கேயோ இருப்பதாக எண்ணம். தன் அந்தராத்மாவாக பரமாத்மா விளங்குகிறார் என்று அறிகிறவனுக்கு அவரைவிட அருகில் உள்ள பொருள் வேறொன்றுமில்லை.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஸமாதி நிலையிலிருந்து இந்திரிய நிலைக்கு வருபவனுக்கு இலேசான அஹங்காரம் இருக்கும். இதனால் அவன் ஒரே கடவுளின் பல்வேறு தோற்றங்களாகத் தன்னையும் ஜீவர்களையும் ஜகத்தையும் காண்கிறான். உனக்கென்று தனி வியக்தி இருக்கும் வரையில், அதாவது உன்னிடம் அஹங்காரம் இருக்கும் வரையில் ஈஷ்வரன் உருவம் உள்ளவன் என்பதைத் தவிர வேறுவிதத்தில் அவனை உன்னால் தியானிக்கவோ, நினைக்கவோ, காணவோ முடியாது. அதுவரையில் அகண்ட நிர்குண ப்ரம்மத்தை நீ உள்ளும் புறமும் சகுணக் கடவுளாகத்தான் காணுவாய். சகுணக் கடவுளின் இந்தத் தோற்றங்கள் பொய்யானவையல்ல. சரீரம், மனம், உலகம் இவைகளைக் காட்டிலும் அவை பன்மடங்கு மெய்யானவை.
---------------------------------------------------------------------------------------------