திங்கள், 15 ஏப்ரல், 2024

விபூதி யோகம் 10.38 - 10.40

||10.38|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:

दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम्

मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् ।। ३८ ।।

3ண்டோ3 3மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ3ஷதாம்

மௌநம் சைவாஸ்மி கு3ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் ।। 38 ।।


दमयताम्  3மயதாம்  தண்டிப்பவர்களுள்    दण्ड:  3ண்ட3:  செங்கோலாக    अस्मि  அஸ்மி   இருக்கிறேன்    जिगीषताम्  ஜிகீ3ஷதாம்  ஜயத்தை நாடுபவர்களுள்    नीति:  நீதி:  நீதியாக    अस्मि  அஸ்மி  இருக்கிறேன்   गुह्यानां  கு3ஹ்யாநாம்  ரகசியங்களுள்    मौनं एव  மௌநம் ஏவ  மெளனமாகவும்    

ज्ञानवताम्  ஜ்ஞாநவதாம்  ஞானிகளுடைய    ज्ञानं  ஜ்ஞாநம்  ஞானமாகவும்   अहम्  அஹம் நான்   

अस्मि  அஸ்மி  இருக்கிறேன்.      


தண்டிப்பவர்களுள் நான் செங்கோல்; வெற்றி வேண்டுபவரிடத்து நான் நீதி, ரகசியங்களுள் நான் மெளனம், ஞானிகளுடைய ஞானமும் நான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.


விளக்கம்:

=> தண்டிப்பவர்களுள் நான் செங்கோல்:

தண்டனையை மிகைப்படுத்தாமலும் குறைக்காமலும் அளந்து வழங்குதல் அரசனின் கடமை. முறையான தண்டனைக்கு அறிகுறியாயிருப்பது செங்கோல். குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கப்படும்பொழுது குற்றவாளியானவன் யார்மீதும் குறை கூறாது தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அத்தகைய தண்டனையே அவனைச் சீர்திருத்துகிறது. சாமம், தானம், பேதம், தண்டம் என தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சாமம் - இன்சொல் கூறி, சமாதானப்படுத்தி தவறு செய்யாமலிருக்க வைத்தல்; தானம் - தானம் அல்லது சலுகைகள் கொடுத்து தவறை தடுத்தல், வழிக்கு கொண்டு வருதல்; பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டுதல் மூலம் தவறு செய்பவனை பலகீனப்படுத்துதல்; தண்டம் - இவைகளையும் மீறி செய்யப்பட்ட தவறுக்கு தண்டனை கொடுத்தல். மஹாபாரத காலம் முதல் இக்காலம் வரையிலும் இந்த நான்கு வழிமுறைகளும் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வருவதை காண்கிறோம். தண்டனையை விதிப்பவரிடத்தில் செங்கோல் சொரூபமாக நான் இருக்கிறேன் என்கிறார் பகவான்


=> வெற்றி வேண்டுபவரிடத்து நான் நீதி

ஜிகீ3ஷதாம், வெற்றியை விரும்பி, அதற்காக பாடுபடுபவர்களில் நான் நீதி. ‘நீதிஎனில் நேர்மையான முறையில் எடுக்கப்படும் முயற்சியை, தர்மத்தைக் குறிக்கிறது. ஒருவனின் வெற்றி எப்பொழுதும் தர்மத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். இல்லையெனில், அதை வெற்றியாக கருத முடியாது. முறைவழுவிய முயற்சி வெற்றியைக் கொடுத்தாலும், அது நிலைத்த வெற்றியாகாது. கையாளும் முறை நேர்மையானதாக இருக்குமாகில், அதினின்று விளையும் வெற்றியும் நிலைத்ததாகும். மனமுதிர்ச்சியடைந்த ஒருவனுக்கு வெற்றியைப் போலவே அதை அடையும் முறையும் முக்கியமானதாக இருக்கும். உண்மையில் வெற்றியைவிட, அதற்காக கடைபிடிக்கப்படும் நீதி மிக முக்கியமானது. முன்பு பகவான், ‘வெற்றியில் நான் வெற்றியாக உள்ளேன்என்றார். இங்கு அவர், எங்கே வெற்றி இருக்கிறதோ, அங்கு நான் அந்த வெற்றியைத் தருகிற நீதியாக, தர்மமாக இருகின்றேன் என்கிறார்


=> ரகசியங்களுள் நான் மெளனம்:

ரகசியத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் எல்லா சாதனங்களிலும், மௌனமே சிறந்தது. வேறெந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் அது எவ்விதத்திலோ வெளிப்பட்டுவிடும். எனவே ரகசியங்களில் நான் மௌனம், என்கிறார்.

பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். வாய் பேசாதிருக்கும்போது ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆகையால் மெளனம் ரகசியத்தை நன்கு காக்கின்றது. சப்தம் செய்யாதிருப்பது மெளனம். எது அசைகின்றதோ அது சப்தம் செய்கிறது. பிரக்ருதி முழுதும் எப்பொழுதும் அசைகிறது. ஆக, பிரக்ருதியின்கண் மெளனம் இல்லை. மனது அடங்க அடங்க, அது மெளனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனது அடங்கி ஒடுங்கினால் ஆத்ம சொரூபம் மட்டும் எஞ்சியிருக்கும். ஆத்மா அசையாதது. ஆதலால் அதில் சப்தமில்லை. ஆத்மாவே மெளன சொரூபம். இந்த ஆத்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்க முடியாது. ஆகையால் ரகசியங்களுள் முடிவானது மெளனம் அல்லது ஆத்ம சொரூபம்


=> ஞானிகளுடைய ஞானம் நான்:

ஞானி, ஞானம், ஞேயம் (அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள்) என மூன்றாகப் பிரியும்போது பிரபஞ்சம் உண்டு. இவை மூன்றும் ஒன்றாகுமிடத்து அது பரம்பொருள். அவைகளுள் முதலில் ஞானம், ஞானி ஆகிய இரண்டையும் ஒன்றாக்கும் வழியை பகவான் சொல்லுகிறார்ஞானிகளுடைய ஞானமும் நானே. அதாவது, ஆத்ம ஞானம் உள்ளவர்களில் நானே அதன் சொரூபமான ஞானமாக உள்ளேன். அக்கினியிடம் உஷ்ணம் போல அறிஞர் இடத்து அறிவாயிருப்பது பகவான். ஞானமும் ஈஷ்வரனும் வெவ்வேறானவை அல்ல, அந்த ஞானத்தின் வடிவமே நான், என்கிறார். பிறகு, மூன்றும்(ஞானி, ஞானம், ஞேயம்) ஒன்றாவது எளிது

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.39|| ஈஷ்வர மஹிமையின் முடிவுரையின் ஆரம்பம்:

यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन

तदस्ति विना यत्स्यान्मया भूतं चराचरम् ।। ३९ ।।

யச்சாபி ஸர்வபூ4தாநாம் பீ3ஜம் தத3ஹமர்ஜுந

தத3ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ4தம் சராசரம் ।। 39 ।।


यत् अपि  யத் அபி  இன்னும் எது   सर्वभूतानां  ஸர்வபூ4தாநாம்  எல்லா உயிர்களுக்கும்   

बीजं  பீ3ஜம்  வித்து ஆகிறதோ   तत्  தத்  அதுவும்    अहम्  அஹம்  நான்   अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா   

मया विना  மயா விநா  என்னையன்றி    यत् स्यात्   யத் ஸ்யாத்  எது இருக்கிறதோ   तत्  தத்  அந்த    

चर अचरम्  சர அசரம்  இயங்குவது, இயங்காததுமான   भूतं  பூ4தம்  வஸ்து    अस्ति  அஸ்தி  இல்லை.     

     

அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோ, அது நான். என்னையன்றி ஸ்தாவர ஜங்கமங்களில் வாழ்வது ஒன்றுமில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.


விளக்கம்:

சுலோகம் முப்பத்தொன்பது முதல் நாற்பத்தி இரண்டு வரை பகவான் தனது மஹிமையின் முடிவுரையை எடுத்துரைக்கிறார். மேலே சொன்னவைகளை எல்லாம் தொகுத்து ஆராயும்போது ஈஷ்வரன் ஒருவனே உலகனைத்துக்கும் முதற்காரணம். அதாவது, பிரபஞ்சம் என்கிற இந்த காரியத்திற்கு உபாதான மற்றும் நிமித்த காரணமாக இருப்பவர் அவரே. இயங்குவன, இயங்காதனவாகிய அனைத்தும் அவரிடமிருந்தே வந்தவைகள்.


=> விதை:

பீ3ஜம்என்பதன் முதன்மை பொருள் விதை ஆகும். ஆனால் இங்கு அது காரணம் என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மரத்திற்கு விதையே மூலம் என்பதால், பொதுவாகபீ3ஜம்என்பது காரணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான காரண-காரியங்கள் உள்ளன. இந்த பலதரப்பட்ட காரணங்களுக்கிடையில் நானே மூலக்காரணமாக இருக்கிறேன் என்கிறார். ‘பூ4என்பதை ஆகாசம், வாயு, அக்னி, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை, அல்லது அனைத்து உயிர்களையும் எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்திற்கும் விதையாக, அதாவது ஜகத்-காரணமாக இருப்பது நான்.  

இவ்வுலகில் பார்க்கப்படும் பல்வேறு வகையான காரண-காரியங்களில், காரணம் ஒவ்வொன்றும் அதனுடைய குறிப்பிட்ட காரியத்தின் அடிப்படையில் மட்டுமே காரணம் என்கின்ற அந்தஸ்தை பெறுகிறது. மற்றொரு நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது, அந்த காரணம் மற்றொன்றின் காரியமாக(விளைவாக) உள்ளது. உதாரணமாக துணியின் காரணமாக இருப்பது நூல். ஆனால் அந்த நூலானது பருத்தி என்பதன் காரியமாக உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு காரணமும் இனியொன்றின் காரியமாக இருக்கும்போது, எது உண்மையான காரணம்? அது ஒரு காரணமற்ற காரணமாக இருக்க வேண்டும்; முதற்காரணமாக இருக்கவேண்டும். காரணம் என்ற ஒன்று இல்லாததால் பிரக்ருதியை, அனைத்துயிரின் வித்தாகக்(ஸர்வபூ4தாநாம் பீ3ஜம்) கூறலாம். ஆனால் பிரக்ருதியின் இருப்பு ஆத்மாவை சார்ந்திருப்பதால், ஈஷ்வரனே அனைத்திற்கும் முழுமுதற்காரணமாக இருக்கிறார். எனவே பகவான், எல்லா உயிர்களுக்கும் வித்தாக இருப்பவன் நான்ஸர்வபூ4தாநாம் பீ3ஜம் அஹம் அஸ்மி, என்கிறார்


=> இயங்குவதும், இயங்காததும்:

ஈஷ்வர மஹிமை எனும் இந்த தலைப்பை சுருக்கமாகச் சொல்வதன் பொருட்டு பகவான், ‘எனையன்றி எந்தவொரு உயிர்களோ(பூ4), அசைகின்ற(சர) அல்லது அசையாதவைகளோ(அசர) இல்லை’— தத் அஸ்தி பூ4தம் சர அசரம் யத் ஸ்யாத் மயா விநா, என்கிறார். இந்த முழு படைப்பும் அசைகிற மற்றும் அசையாதவைகளால் ஆனது. எனவே இந்த சராசரம் என்பதை அசைகிற அசையாதவைகளாகப் பார்க்கலாம். அல்லது உணர்வுள்ளவை(சர) மற்றும் உணர்வற்றவை(அசர) எனப் பார்க்கலாம். எவ்விதம் எடுத்துக் கொண்டாலும் நானன்றி இங்கு எதுவுமில்லை, என்கிறார்.

தனது மஹிமைகளைத் தொடர்ந்துப் பட்டியலிட்ட பகவான், அது முடிவில்லாமல் செல்கிறபடியால் அதை மேலும் தொடர இயலாது எனக் கூறுகிற நிலைக்கு வந்துவிட்டார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.40|| பகவானின் மஹிமைகள் முடிவடைந்துவிட்டனவா?

नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप

एष तूद्देशत: प्रोक्तो विभूतेर्विस्तरो मया ।। ४० ।।

நாந்தோऽஸ்தி மம தி3வ்யாநாம் விபூ4தீநாம் பரந்தப

ஏஷ தூத்3தே31: ப்ரோக்தோ விபூ4தேர்விஸ்தரோ மயா ।। 40 ।।


परन्तप  பரந்தப  எதிரிகளை வாட்டுபவனே    मम  மம  என்னுடைய      

दिव्यानां विभूतीनां  தி3வ்யாநாம் விபூ4தீநாம்  திவ்வியமான விபூதிகளுக்கு     अन्त:  அந்த:  முடிவு    

अस्ति  அஸ்தி  இல்லை    विभूते:  விபூ4தே:  விபூதிகளுடைய    विस्तर:  விஸ்தர:  விஸ்தரிப்பு    

एष: तु  ஏஷ: து  இவ்வளவுதான்    मया  மயா  என்னால்   उद्देशत:  உத்3தே31:  உதாரணத்திற்காக    

प्रोक्त:  ப்ரோக்த:  சொல்லப்பட்டது.


எதிரியை வாட்டுபவனே, என் திவ்விய மஹிமைகளுக்கு முடிவில்லை. என் விபூதி விரிவுகளில் ஒரு சிறிது என்னால் இயம்பப்பட்டது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.


விளக்கம்:

கோழி ஒன்று தன் குஞ்சுக்கு உணவு தேடும் விதத்தைச் சிறிது காட்டித் தருகிறது. அவ்வழியைப் பின்பற்றிப் பின்பு தனக்குத் தேவையாயுள்ள உணவையெல்லாம் அக்குஞ்சே தேடிக் கொள்கிறது. அங்ஙனம் ஈஷ்வர மஹிமையைக் காண்பதற்கான வழியை பகவான் புகட்டியருள்கிறார். அதன்படி அனுஷ்டிக்கும் சாதகன் தன் அறிவுக்கு எட்டிய அளவு ஈஷ்வரனை அறிகிறான்.

கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனைபரந்தப’, எதிரிகளை எப்பொழுதும் வெல்பவனே என அழைக்கிறார். அர்ஜுனா! இந்த என்னுடைய மேலான மஹிமைகளுக்கு முடிவு இல்லை அந்த: அஸ்தி. அதனால் முடிவே இல்லாமல் நீளும் அந்த பெருமைகளை பட்டியலிடுவதை இத்துடன் நான் முடித்துக் கொள்கிறேன்.

பரந்துபட்ட எனது விபூதிகளை இங்கே சுருக்கமாகக் கூறியுள்ளேன். தியானத்திற்காகவும், மற்றும் எந்தெந்த வழியிலெல்லாம் என்னைச் சிந்திக்கலாம் என்பதை உணர்த்தும் பொருட்டும் இந்த சிலவற்றை உதாரணமாக நான் உனக்குக் கூறினேன். எனவே எங்கெல்லாம் மேன்மையும் அறிவும் பிரகாசமும் பெருமைகளும் உள்ளனவோ அங்கெல்லாம் அது என்னுடையது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்த பொதுநியதியை பகவான் அடுத்த சுலோகத்தில் எடுத்துரைக்கிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரனை யாரால் முற்றிலும் அறிய முடியும்? அந்தப் பாக்கியம் நமக்கு இல்லை. நாம் அவனைப் பூரணமாக அறியவேண்டும் என்பதுமில்லை. அவனைக் கண்டு, அவன் ஒருவனே உண்மைப் பொருள் என்று உணர்ந்தால் போதுமானது. ஒருவன் புண்ணிய நதியாகிய கங்கைக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அதைக் கங்கோத்திரியிலிருந்து கங்கா சாகரம் வரையில் தரிசிக்கவும் ஸ்பர்சிக்கவும் வேண்டியதில்லை. ஓர் இடத்தில் அதைத் தொட்டு நீராடினாலே அவன் கிருதார்த்தனாகிறான்.

---------------------------------------------------------------------------------------------------------------------