புதன், 24 ஏப்ரல், 2024

விபூதி யோகம் 10.41 - 10.42

||10.41|| விபூதிகளின் சாரம்:

यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा

तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम् ।। ४१ ।।

யத்3யத்3விபூ4திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ3ர்ஜிதமேவ வா

தத்ததே3வாவக3ச்ச2 த்வம் மம தேஜோம்ऽச1ஸம்ப4வம் ।। 41 ।।


विभूतिमत्  விபூ4திமத்  விபூதியோடு கூடிய    श्रीमत्  ஶ்ரீமத்  திரு நிறைந்ததாக    

ऊर्जितम् एव वा  ஊர்ஜிதம் ஏவ வா  பலமுடையதாகவும்   यत् यत्  யத் யத்  எந்த எந்த    

सत्त्वं  ஸத்த்வம்  பொருள்    तत् तत् एव  தத் தத் ஏவ  அது அது எல்லாம்   मम  மம  என்னுடைய    

तेज: अंश संभवम्  தேஜ: அம்ச1 ஸம்ப4வம்  தேஜஸின் ஒரு பகுதியில் உண்டானது என்று     

त्वं  த்வம்  நீ    अवगच्छ  அவக3ச்ச2  அறிக.


மஹிமையும் அழகும் வலிவும் உடையது எது எதுவோ அதெல்லாம் என் அம்சத்தின் ஒரு பகுதியில் உண்டானது என்று அறிக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.


விளக்கம்:

சூரிய கிரணம் எங்கும் வியாபித்து, எல்லாப் பொருள்களையும் விளக்குகிறது. ஈஷ்வரனோ எல்லாப் பொருளுமாய் அதனதன் வாயிலாகத் தன் பெருமையையும், சிறப்பையும், அழகையும், வல்லமையையும் விளக்குகிறான். ஏதேனும் ஒரு பொருள் அல்லது உயிர் ஏதேனும் ஒருவிதத்தில் மனதைக் கவர வல்லதாயின், அத்தகைய மாண்பு ஈஷ்வரனுடையதே என்றும், அது அவ்வடிவத்தின் வாயிலாக மிளிர்கிறது என்றும் அறிந்து கொள்க.

 

=> திருவும் சக்தியும்:

அறிவு, சக்தி, அழகு, புத்திசாலித்தனம், திறமை என இவ்வுலகில் இருக்கின்ற எந்தவொரு புகழும்ஶ்ரீமத்ஆகும். பின்வரும் அனைத்துமேஶ்ரீமத்எனப்படும்: ஈர்ப்பு அல்லது அழகு(காந்தி); நீதி அல்லது தர்மம்(நீதி); புகழ்(கீர்த்தி); செல்வம்(3); உணவு(தா4ன்ய); குழந்தைச் செல்வம்(சந்தாந); வீட்டு மகிழ்ச்சி(க்ரஹ); நல்வாழ்வின் எந்தவொரு அடையாளம்(செளபா4க்ய); கொடை, அருட்பேறு அல்லது பரிசு(வர); அறிவு(வித்யா). இவைகளனைத்தும்ஸ்ரீஎனப்படும் லக்ஷ்மியின் வெவ்வேறு வடிவங்கள் ஆகும். ஸ்ரீ-யை உடையது ஶ்ரீமத். உண்மையில், அனைத்து பெருமைகளையும் உள்ளடக்கியதுஶ்ரீமத்’. அந்தஸ்ரீமத்பகவானே ஆகும்

சக்தியும் சிறப்பும் வாய்ந்து கவரக்கூடியதாக உள்ள எதுவும்ஊர்ஜிதம்ஆகும். இத்தகைய எந்தவொன்றும் எனது தேஜசின் ஒரு பகுதியிலிருந்து மட்டுமே எழுகிறது என்பதை நீ புரிந்துகொள்மம தேஜ: அம்ச1 ஸம்ப4வம் த்வம் அவக3ச்ச2, என்கிறார். இங்குதேஜஸ்என்பது பகவானின் சிறப்புகளில் ஒன்று. பகவான் எனும் சொல், ஈஷ்வரனுக்குரிய ஆறு சிறப்புகளின் கூட்டத்தைக் குறிக்கிறது என ஏற்கனவே பார்த்துள்ளோம். ‘ஶ்ரீஎனும் முழுமையான செல்வம்; ‘ஐஸ்வர்யஎனும் முழுமையான ஆதிக்கம்; ‘யசஸ்எனும் முழுமையான புகழ்; ‘வைராக்யஎனும் முழுமையான நடுநிலைத்தன்மை; ‘ஞாநஎனும் பூரண அறிவு; மற்றும்வீர்யஎனும் முழுமையான சக்தி, படைத்து காத்து அழிக்கும் சக்தி

ஈஷ்வரனின் அனைத்து மஹிமைகளும் இந்த ஆறுவிதமான ஐஸ்வர்யங்களிலிருந்து வெளிவந்தவைகள் ஆகும்


=> அம்சம்:

இத்தகைய மஹிமைகள் அனைத்தும் எனது தேஜஸின் ஒரு பகுதியிருந்து மட்டுமே உண்டானதுதேஜ: அம்ச1, என்கிறார் கிருஷ்ணர். ஈஷ்வரனின் ஒரு சிறு பகுதியே இத்தனை சிறப்புக்களாக வெளிப்பட்டுள்ளது. இந்த பெருமைகள் அனைத்தும், உண்மையில் இந்த முழு உலகமும் எல்லையற்ற பகவானினுடைய மஹிமையின் ஒரு பகுதி, அம்ச1, ஆகும். எப்படி பிளவற்ற ஆகாசம், பானை-ஆகாசம்(பானையினுள் இருக்கும் வெற்றிடம்), அறை-ஆகாசம்(அறையினுள் இருக்கும் வெற்றிடம்) என பிரிக்கப்பட்டதாக தென்படுகிறதோ, அதுபோல பகவான் பிளவற்று ஏகமானவராக இருப்பினும், மாயையின் காரணமாக இந்த பன்முகத்தன்மை தோன்றுகிறது. இங்குள்ள அனைத்தும் என்னைச் சார்ந்திருக்கும் மாயையினால் தோற்றுவிக்கப்பட்டது மட்டுமேமாயையா கல்பிதம். எனவே அர்ஜுனா, ஒவ்வொரு மஹிமையும் எனது சக்தியின் அம்சம் மட்டுமே என்பதை தயவு செய்து புரிந்து கொள். இதில் விதிவிலக்கென எதுவுமில்லை.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவானது சாகாரநிலை அதாவது ரூபத்தோடு கூடிய நிலையென்றால் என்ன என்பது உனக்குத் தெரியுமா? நீர்ப்பரப்பின்மேல் தோன்றும் குமிழிகள் போன்றது அந்நிலை. சிதாகாசத்தில் பலவித ரூபங்கள் எழுவதை உண்மையாகக் காணலாம். பகவத் அவதாரமும் அவ்வித ரூபங்களில் ஒன்று.

---------------------------------------------------------------------------------------------------------------------

||10.42|| விபூதிகளின் சாரம்:

अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन

विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ।। ४२ ।।

அத2வா 3ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந

விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்நமேகாம்சே1 ஸ்தி2தோ ஜக3த் ।। 42 ।।


अर्जुन  அர்ஜுந  அர்ஜுனா    अथवा  அத2வா  அல்லது    ज्ञातेन  ஜ்ஞாதேந  அறியப்பட்ட  

बहुना  3ஹுநா  இந்த     एतेन  ஏதேந  பலவற்றால்    किं तव  கிம் தவ  உனக்கு ஆவதென்ன   

अहम्  அஹம்  நான்    इदं  இத3ம்  இந்த    कृत्स्नम् जगत्  க்ருத்ஸ்நம் ஜக3த்  முழு உலகத்தை    

एकांशेन  ஏகாம்சே1  ஓர் அம்சத்தால்    विष्टभ्य  விஷ்டப்4  தாங்கிக் கொண்டு     स्थित:  ஸ்தி2:  இருக்கிறேன்.


அர்ஜுனா, இதைப் பலவிதமாகப் பகுத்தறிவதால் உனக்கு ஆவதென்ன? எனது ஓர் அம்சத்தால் உலகு அனைத்தையும் தாங்கியிருக்கிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.


விளக்கம்:

அப்படினெனில் அகிலாண்டங்களிலுமுள்ள உருவத்தொகுதி தானே கடவுள்? என ஒருவன் கேட்பானாகில் அதற்கு விடையாக வருகிறது இந்த சுலோகம். வல்லவன் ஒருவனை ஒரு கோணிப்பையில் கட்டி ஓடவிட்டால் அவன் தனது முழு ஆற்றலையும் அப்பொழுது காட்ட முடியாது. பல வடிவங்கள் வாயிலாக பகவான் தமது மஹிமையை விளக்குகிறார் எனினும், அவ்விளக்கம் அரைகுறையானதே. இனி அலையாகப் பரிணமித்திருப்பது சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதியே. அங்ஙனம் அகிலாண்டமாய்ப் பரிணமித்திருப்பது ஈஷ்வரனுடைய ஒரு சிறு கலை மட்டுமே. அவனுடைய சொரூபத்தின் பெரும்பகுதி தோற்றத்துக்கு அப்பால் பரம்பொருளாய் உள்ளது.


=> சாரமாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது:

அத2வாஎனில்அல்லது இதை இப்படிச் சொல்லலாம்என்று பொருள். விபூதிகளனைத்தும் எனது மஹிமையின் ஒரு பகுதியிலிருந்து பிறந்தவை என்று நான் கூறினேன். அதிலிருந்து விபூதிகள் உள்ளவை மட்டுமே என்னிடமிருந்து பிறந்தவைகள், மற்றவைகள் அப்படி அல்ல என ஒருவன் நினைக்கலாம். எனவே பகவான் இந்தச் சொல்லை உபயோகிக்கிறார், ‘அதைச் சரியாகச் சொல்வதானால்_ அத2வா’.

நதிகளில் நான் கங்கையாக இருக்கிறேன், பாம்புகளுள் வாசுகியாக இருக்கிறேன், போன்ற இந்த பலவிதமான விஷயங்களைப் பற்றிய அறிவால் உனக்கு ஆவதென்ன அர்ஜுனா, கிம் தவ? என் விபூதிகள் முடிவில்லாதது என்பதால் இந்த சிறிய பட்டியலினால் பெரிய பயனொன்றுமில்லை. முடிவில்லாதது என்பதாலேயே என்னால் இதை கூறி முடிக்கவும் முடியாது. இந்த முழுமையற்ற அறிவினால் நீ என்ன சாதித்துவிட்டாய்? எனவே அர்ஜுனா, ஒன்றை மட்டும் நீ நன்றாக புரிந்து கொள். இவை அனைத்தும் என்னில் ஒரு பகுதி மட்டுமே; உண்மையில், இந்த முழு பிரபஞ்சத்தையும் எனது சிறு பகுதியினால் மட்டுமே வியாபித்திருக்கிறேன்இத3ம் க்ருத்ஸ்நம் ஜக3த் ஏகாம்சே1 விஷ்டப்4 ஸ்தி2:. இவைகளை கடந்தும் நான் இருக்கிறேன்.

ஒரு தனிமனிதன் அவனது நிலைபாட்டிலிருந்து இந்த உலகத்தைப் பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவன் அறிவது அனைத்தும் அவனது அந்தக்கரணத்தின் உள்ளடக்கங்களை மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. எனவே ஒருவன் பார்ப்பதும் அறிவதும் ஒரு வரையறுக்கப்பட்ட உலகை மட்டுமே. ஸ்தூல உலகோ அல்லது சூக்ஷம உலகோ அவனது அம்சத்தின் ஒரு பகுதியையே அவன் பார்க்கின்றான்

ஒரு கணக்கிற்காக நான்கில் ஒரு பகுதி அவனால் அறியப்படுவதாக வைத்துக் கொண்டால், அவனது புத்தியில் நான்கில் மூன்று பகுதி இழக்கப்படுகிறது. இவையனைத்தையும் உள்ளடக்கிய அந்த எல்லையற்ற தன்மையே அவனின் உண்மைசொரூபம். இந்த மூன்று பகுதியில்லாமல் அவன் பார்க்கின்ற அந்த ஒரு பகுதி உலகு முழுமையற்றதாகிறது. இந்த உலகம் என்பது ப்ரம்மத்திலிருந்து பிரிக்கப்படாததால், ப்ரம்ம எனும் முழுமையின் ஒரு பகுதியே உலகாக தோன்றிக் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதை சங்கரர் ஒரு மந்திரத்தை சுட்டிக்காட்டுவதன் மூலம் தனது பாஷ்யத்தில் விளக்குகிறார். பாதோऽஸ்ய விஷ்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் திவிபார்ப்பதனைத்தும் நான்கில் ஒரு பகுதியே, மீதி மூன்று பகுதிகளும் கால தேசத்திற்கு அப்பாற்பட்டதான அம்ருதமான ப்ரம்ம சொரூபம். இதில் அந்த அதிஷ்டானமாக இருப்பது ஒருவனால் நேரடியாக கிரஹிக்கமுடியாதவாறு தொலைந்ததைப் போல உள்ளது. ஆகவே அர்ஜுனா, நீ பார்ப்பது மிக சிறிய ஒரு பகுதியையே ஆகும். எல்லையற்றதான அந்த மீதமுள்ள மூன்று பகுதியானது எதுவோ அதுவே உன்னால் அறியப்பட வேண்டும். என்னைப் பற்றிய அறிவை முழுமைப்படுத்தும் அந்த பகுதி அறியப்படும்போதே இவைகளனைத்தும் எல்லையற்றதான, பிளவற்ற, பகுதிகளற்ற பரம் ப்ரம்ம என்பதை நீ அறிவாய்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கடவுள் உருவமற்றவரும், உருவமுள்ளவரும் ஆவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவரும் ஆகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரேதான் முற்றிலும் அறிவார்.

---------------------------------------------------------------------------------------------------------------------

ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे विभूतियोगो नाम दशमोऽध्याय: ।।

ஓம் தத் ஸத்।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 விபூ4தியோகோ3 நாம 31மோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் விபூதி யோகம் என்ற பத்தாம் அத்தியாயம்.

---------------------------------------------------------------------------------------------------------------------

விபூதியோகம் - சாரம்:

(1) அத்தியாய அறிமுகம் [1 - 3]

(2) பகவானின் விபூதியின் சுருக்கம் [4 -7]

(3) விபூதி ஞானம் [8 - 11]

(4) அர்ஜுனனின் உணர்வை தெரித்தல் [12 - 18]

(5) பகவானின் விபூதியின் விளக்கம் [19 - 38]

(6) பகவானின் முடிவுரை [39 - 42]

---------------------------------------------------------------------------------------------------------------------