பதினோராவது அத்தியாயம்
விஷ்வரூபதர்ஷன யோகம்
[विश्वरूपदर्शनयोग:]
முகவுரை:
=> அர்ஜுனனின் வேண்டுகோள்:
சென்ற அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் பகவான், ‘நான் இந்த பிரபஞ்சம் முழுவதும் எனது ஒரு பகுதியால் வியாபித்திருக்கிறேன்’ எனக் கூறினார். இதன் அடிப்படையில் அர்ஜுனனுக்கு ஒரு புதிய வேண்டுகோள் உண்டாகிறது. குழந்தைக் கிருஷ்ணன் மண்ணை திண்பதைக் கண்ட யசோதா, வாயைத் திறக்கும்படி கேட்டபோது அவரது வாயினுள் முழு உலகையும் பார்த்தாள் என்பதை அர்ஜுனன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆகவே இப்போது கிருஷ்ணர், இந்த முழுவுலகின் வடிவில் நானே இருக்கின்றேன் எனக் கூறும்போது, அர்ஜுனனுக்கு இயற்கையாகவே இந்த ஆர்வம் உண்டாகிறது. தனக்கு முன்னால் நிற்கும் கிருஷ்ணரின் வடிவத்திற்குள் முழு பிரபஞ்ச வடிவமான விஷ்வரூபத்தையும் பார்க்க முடியுமா என்பதை அறிய விரும்புகிறான். ஆகவே தனது விஷ்வரூப தரிசன ஆசையை வெளிப்படுத்துகிறான்.
=> விஷ்வரூபம்:
* ‘விச்1வம்’ என்ற சொல்லின் பொருள், (1) பிரபஞ்சம் அல்லது (2) அனைத்தும். இங்கு அது பார்க்கப்படுகிற அனைத்தையும் குறிக்கிறது.
* ‘ரூப’ எனில் அது ஈஷ்வர சொரூபத்தைக் குறிக்கிறது.
எனவே அத்தியாயத்தின் தலைப்பான ‘விச்1வரூபதர்ஷன’ என்பது அனைத்தும் ஈஷ்வரனாகவே உள்ளதை, விஷ்வரூப தரிசனத்தை காட்டுகிறார் என்பதைக் குறிக்கிறது.
விஷ்வரூப தரிசனத்தை இரண்டாகப் பிரிக்கலாம்:
(1) நாம் எதைப் பார்க்கிறோமோ அது ஏற்கனவே ஈஷ்வரனின் சொரூபம் — விச்1வம் ஏவ ரூபம். உண்மையில் இவ்வுலகை மனம் தான் பார்க்கிறது. கண் என்பது அதற்கான ஒரு கருவியே ஆகும். உதாரணமாக, கண் என்பது வீட்டைக் காட்டுகிறது. ஆனால் இது என் வீடு என மனம்தான் நினைக்கிறது; இதன்மூலம் அது மற்றவைகள் என்னுடையது அல்ல என்ற பிளவையும் உண்டாக்குகிறது. எனவே ஏற்கனவே ஈஷ்வரனின் சொரூபமாக இருக்கும் இவைகளை விஷ்வரூபமாகத் தெரியவைக்க, கண்ணினால் அந்த மாறுதலை செய்யமுடியாது. மனதில்தான் மாற்றம் தேவை. மனதிலுள்ள விருப்பு-வெறுப்புகளை நீக்கி இவ்வுலகைப் பார்க்கும்போது அது விஷ்வரூப தரிசனமாகிறது; அனைத்தும் ஈஷ்வரனின் சொரூபமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. எனவேதான் இந்த அத்தியாயத்தில் பகவான் கூறும் ஞானக் கண்(திவ்ய சக்ஷு) என்பது ஒரு கோணத்தில், ராகத்வேஷமில்லாத மனதுடன் பார்த்தலைக் குறிக்கிறது. ஆகவே ஒருவனின் மனப்பாங்கு மாறும்போது அனைத்தும் மாறுகிறது. மனப்பான்மையை மாற்ற ஒவ்வொரு எண்ணத்தையும் மாற்றவேண்டும்; விருப்பு வெறுப்பை நீக்கவேண்டும். உலகம் உனக்கு எப்படித் தெரிகிறது என்பதே நீ யார் என காட்டிக் கொடுக்கிறது. மனப்பாங்கும் அறிவுமே அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது.
(2) ஒருவகையில் மனப்பாங்கும் கூட பார்வையிலிருந்து அதாவது அணுகுமுறையிலிருந்து வருகிறது எனலாம். ஆகவே விருப்பு-வெறுப்பை நீக்கியவர்களின் அருகாமை, அவர்கள் இவ்வுலகுடன் எவ்விதத்தில் வியவகாரம் செய்கிறார்கள் எனப் பார்த்தல் மற்றும் ஸத்சங்கம் முதலியவை அதற்குத் துணை புரிகின்றன. எனவே எல்லாமே ஈஷ்வரன் என பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்ப்பதும் விஷ்வரூப தரிசனம் ஆகும்.
ஆனால், இங்கு பகவான் எடுக்கும் விஷ்வரூபம் என்பது மாயிகம் ரூபம்; தற்காலிகமாக எடுத்த உருவம் ஆகும். ஸ்தூல பிரபஞ்சத்தின் நிலைபாட்டிலிருந்து இந்த முழு சிருஷ்டியையும் ஈஷ்வரனின் உடலாகப் பார்க்கும்போது, அது ‘விராட்’ என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச வடிவிலுள்ள சைத்தன்யமான இந்த விராட்டை பிரபஞ்ச மனிதன் எனலாம். ஒரு குழந்தையைப் போல அர்ஜுனன் இந்த விராட் சொரூபத்தை பார்க்க விரும்புகிறான். எனவே கிருஷ்ணரும் இந்த பிரபஞ்ச வடிவத்தை அவனுக்கு வெளிப்படுத்துகிறார். இதை உண்மையில் நடந்ததாகவோ அல்லது தற்போது அவர் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்பான ‘ஈஷ்வரனிடமிருந்து வேறானதாக எதுவுமில்லை’ எனும் விஷயத்தைக் காட்டும் விளக்கமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
‘விராட்’ எனில் விவிதம் ராஜதே, பல்வேறு வடிவங்களில் தோன்றுபவர் எனப் பொருள். எனவே எல்லா வடிவங்களையும் உள்ளடக்கிய அந்த ஒற்றை வடிவமான, பிரபஞ்ச வடிவம் விராட்-சொரூபமாகும். இது ஈஷ்வரனுக்கு வெளியே எதுவும் இல்லை என்பதை நிறுவுகிறது. அதைப் புரிந்துகொண்டு போற்றும்போது, ஒருவனுள் ஈஷ்வர பக்தி உண்டாகிறது. அதனாலேயே அடுத்த அத்தியாயத்தின் தலைப்பு பக்தி-யோகம். இனி நாம் விஷ்வரூப தரிசன யோகத்தை தொடர்வோம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.1|| இதுவரை கேட்ட உபதேசத்தின் சாரத்தை கூறுகிறான் அர்ஜுனன்:
अर्जुन उवाच
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ।। १ ।।
அர்ஜுந உவாச
மத3நுக்3ரஹாய பரமம் கு3ஹ்யமத்4யாத்மஸம்ஜ்ஞிதம் ।
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விக3தோ மம ।। 1 ।।
अर्जुन उवाच அர்ஜுந உவாச அர்ஜுனன் சொன்னது
मत् अनुग्रहाय மத் அநுக்3ரஹாய என்னை அனுகிரஹிக்கும் பொருட்டு
परमं பரமம் புருஷார்த்தங்களில் மேலானதும் गुह्यम् கு3ஹ்யம் ரகசியமானதும்
अध्यात्म संज्ञितम् அத்4யாத்ம ஸம்ஜ்ஞிதம் ஆத்ம-அநாத்ம விவேக விஷயமென்று சொல்லப்படும்
यत् वच: யத் வச: எந்த வாக்கியம் त्वया उक्तम् த்வயா உக்தம் உங்களால் சொல்லப்பட்டது
तेन தேந அதனால் मम மம என்னுடைய अयम् அயம் இந்த
मोह: மோஹ: மோஹமானது विगत: விக3த: போய்விட்டது.
என்னைக் காத்தருளும் பொருட்டு உங்களால் சொல்லப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்ம தத்துவத்தைப் பற்றிய மொழியால் என் மோஹம் ஒழிந்தது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.
விளக்கம்:
தன்னுடைய ஒரு சிறு அம்சம் இவ்வுலகனைத்தும் ஆனது என்றும், தானே அகிலாண்டத்தையும் அதற்கப்பாலும் தாங்கிக் கொண்டிருப்பதாகவும் பகவான் சொன்னார். அதைக் கேட்ட அர்ஜுனன் தான் அந்த சொரூபத்தை நேரே சாக்ஷாத்கரிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டான். அந்த வேண்டுகோளை வைக்கும் பொருட்டு, முதலில் தான் புரிந்து கொண்டதை சாரமாக தொகுக்க ஆரம்பிக்கிறான்.
என்னைப் பற்றியும், உலகைப் பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இதுவரை கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமே ஆகும். தாங்கள் உபதேசித்தருளிய இந்த மேலான தத்துவத்தால் அந்த மோஹம் அகன்றுபோயிற்று, என்கிறான் அர்ஜுனன்.
=> பரம ரகசியம்:
இரண்டாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் தனக்கு முக்தியை உபதேசிக்கும்படிக் கூறி ஒரு சிஷ்யனாக கிருஷ்ணரிடம் சரண்புகுகிறான் — யத் ஸ்ரேய: ஸ்யாத் நிஸ்சிதம் ப்ரூஹி தந் மே சிஷ்ய: தே அஹம். அங்கு அர்ஜுனன், தான் என்ன கேட்கிறான் என்பதை புரிந்துதான் கேட்கிறான். எந்த தயக்கமுமில்லாமல் பகவானும் அதை உடனடியாக கற்பித்தார். இந்த நிலையில், இதையெல்லாம் கேட்ட அர்ஜுனன், எனக்கு அனுகிரஹம் செய்யும் பொருட்டு இந்த மிகப்பெரிய ரகசியம் உங்களால் உபதேசிக்கப்பட்டது — மத் அநுக்3ரஹாய பரமம் கு3ஹ்யம் த்வயா உக்தம், எனக் கூறுகிறான்.
இவ்வுலகில் நிறைய விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை, மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளின் மதிப்புதான் என்ன? இங்கே கூறப்பட்ட இந்த ஞானம் மேலான ரகசியம் ஆகும். அதன் மதிப்பின் அடிப்படையில் அதனுடன் ஒப்பிடத்தக்கது இங்கு எதுவுமில்லை. அந்த மேலான பொக்கிஷம் என்ன? தன்னறிவு. ‘அத்4யாத்ம ஸம்ஜ்ஞிதம்’ என்பது சுயத்தை பற்றிய ஞானத்தை, ஆத்ம-வித்யையைக் குறிக்கிறது. அதி4 - அந்த குறிப்பிட்டதுடன் தொடர்புடையது; ஆத்மா - ஜீவன்; அத்4யாத்ம - ஜீவாத்மா சம்பந்தப்பட்டது, ஆத்ம-அனாத்ம விவேக விஷயம் என்று பொருள். இதுவே அந்த மறைக்கப்பட்ட பொக்கிஷம் ஆகும். சாஸ்திரம் தவிர வேறு எந்த பிரமாணத்தின் மூலமாகவும் இதை அறியமுடியாது என்பதால் மறைக்கப்பட்டுள்ளது எனப்படுகிறது. மேலும் நமது முழு நோக்குநிலையும் வெளிப்புறமாகவே இருப்பதால், ஒருகால் பிரமாணம் அடையப்பட்ட போதும் ஆத்மா மறைபொருளாகவே இருக்க முடியும்.
=> விவேகம்:
இங்கு ‘உக்தம்’ என்பது வெறுமனே சொல்லப்படவில்லை, ஆனால் கற்பிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. உங்களது இந்த வார்த்தைகளால், தேந வச:, எனது மோஹம் சென்றுவிட்டது, மோஹ: விக3த:, என்கிறான் அர்ஜுனன். ‘பரமம்’, ‘கு3ஹ்யம்’, ‘அத்4யாத்ம ஸம்ஜ்ஞிதம்’ இந்த மூன்று வார்த்தைகளும், ‘வச:’ எனும் சொல்லிற்கு அடைமொழியாகக் கூறிப்பிடப்பட்டுள்ளது. மேலான, மறைபொருளான, ஆத்ம தத்துவமான எந்தவொரு வார்த்தைகள் உங்களால் உபதேசிக்கப்பட்டதோ, அது எனது மோஹத்தை நீக்கிவிட்டது, என்பது பொருள். உண்மையில் ஆத்ம-ஞானம் என்பது எது ஆத்மா, எது அனாத்மா எனும் விவேகத்தை, பகுத்தறியும் அறிவைக் குறிக்கிறது. எனவே பகவானினுடைய இந்த உபதேசத்தால், தன்னைச் சார்ந்தவர்களை அழிக்கப்போகிறோம் என்கிற வருத்தமும் மனப்போராட்டமுமாக வெளிப்பட்ட ஆத்ம-அனாத்ம மற்றும் தர்ம-அதர்மம் குறித்த அர்ஜுனனின் மோஹமானது இப்போது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. சங்கரர் இங்கு அவிவேக புத்தி சென்றுவிட்டது — அவிவேக புத்3தி4: அபக3தா, எனக் கூறுகிறார். இதன்பொருள், பகுத்தறிவு முழுமையை அடைந்துவிட்டது எனக் கூறமுடியாது; எனினும் ஆத்ம-அனாத்மாவைப் பற்றிய பகுத்தறிவே இல்லை, நான் ஒரு அவிவேகி(பகுத்தறியும் அறிவற்றவன்) என்றும் இனி அர்ஜுனனால் கூற முடியாது. அவனிடம் கண்டிப்பாக விவேகம் இருக்கிறது. ஆனாலும் அது சில தடைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அர்ஜுனனிடம் கேட்க இன்னும் கேள்விகள் இருந்தன.
---------------------------------------------------------------------------------------------------------------------
||11.2|| அர்ஜுனன் தனது புரிதலை விவரிப்பதன் தொடர்ச்சி:
भवाप्ययौ हि भूतानां श्रृतौ विस्तरशो मया ।
त्वत्त: कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ।। २ ।।
ப4வாப்யயௌ ஹி பூ4தாநாம் ச்1ருதௌ விஸ்தரசோ1 மயா ।
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் ।। 2 ।।
कमल पत्र अक्ष கமல பத்ர அக்ஷ தாமரை இதழ் கண்ணா त्वत्त: த்வத்த: உங்களிடமிருந்து
भूतानां பூ4தாநாம் உயிரினங்களுடைய भव अप्ययौ ப4வ அப்யயெள பிறப்பு இறப்பு मया மயா என்னால் विस्तरश: हि விஸ்தரச1: ஹி மிக விரிவாக श्रृतौ ச்1ருதௌ கேட்கப்பட்டது
अव्ययम् அவ்யயம் முடிவற்ற माहात्म्यम् अपि च மாஹாத்ம்யம் அபி ச மஹிமையும் கூட.
கமலக்கண்ணா, உயிர்களின் பிறப்பும் இறப்பும் பற்றி விரிவாக உங்களிடமிருந்து என்னால் கேட்கப்பட்டது; உமது முடிவற்ற மஹிமையும் கேட்கப்பட்டது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.
விளக்கம்:
=> கமலக்கண்ணன்:
அர்ஜுனன் இங்கு கிருஷ்ணரை ‘கமல பத்ர அக்ஷ’ என்று அழைக்கிறான். இந்த கவித்துவமான வெளிப்பாட்டின் பொருளை சிறிது ஆராயலாம். ‘கமல’ என்பது தாமரை மலரையும், ‘பத்ர’ என்பது இதழையும், ‘அக்ஷ’ என்பது கண்களையும் குறிக்கிறது. மிகவும் மென்மையாகவும் கண் போன்ற வடிவிலுமுள்ள தாமரை இதழை ஒத்த கனிவான மகிழ்ச்சியான கண்களை கொண்டவரே என்பது பொருள். சமஸ்கிருத மொழியின் அடிப்படையில் இச்சொல்லை இனியொரு விதத்திலும் விளக்கலாம்.
* ‘க’ எனில் சுகம், இங்கு அது ஆத்ம சொரூபமாகவுள்ள ப்ரம்ம-சுகத்தை குறிக்கிறது.
* கமல: — கம் அலதி இதி கமல:, ப்ரம்ம சுகத்தை வெளிப்படுத்துவது. எனவே ஆனந்தத்தை வெளிப்படுத்துவதை ‘கமல’ எனலாம். சுய-அறிவே சுயத்தின் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறது.
* பத்ர — பதநாத் த்ராயதே இதி பத்ர:, வீழாமல் ஒருவனை பாதுகாப்பது. இங்கு தன்னறிவானது ஒருவனை சம்சாரத்தில் விழாமல் காப்பாற்றுகிறது.
* அக்ஷ: — அக்ஷ்யதே இதி அக்ஷ:, எது பெறப்பட்டதோ, புரிந்துகொள்ளப்பட்டதோ அது அக்ஷ. ஈஷ்வரனை தன்னறிவால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். வேறெந்த வழியும் இல்லை. ஆகவே சுயத்தை பற்றிய அறிவால் ஒருவன் பெறுவது ஈஷ்வரனையே ஆகும்.
இதிலிருந்து ஆனந்தத்தை வெளிப்படுத்துவதும் மற்றும் சம்சாரத்திலிருந்து காப்பாற்றுவதுமான ஆத்ம-ஞானத்தை அடைந்த ஒருவன், ஈஷ்வரன், கமல பத்ர அக்ஷ எனப்படுகிறான். சுற்றி வளைத்து அடையப்பட்டதுபோல் தெரிந்தாலும் இப்படியொரு பொருளை அடைவதும் சமஸ்கிருத மொழியில் சாத்தியமாகிறது. இதுவே அதன் அழகும் ஆகிறது. சாஸ்திரத்தின் கருத்தை பாதிக்காத வகையில் இதுபோன்ற சாத்தியமான பிற விளக்கங்கள் அடையப்படும்போது, மொழியறிந்த சான்றோர்களுக்கு அது அலாதி இன்பத்தை கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை.
இந்த அத்தியாயம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வடிவில் ஈஷ்வரனை விவரிக்கிறது. இந்த விஷ்வரூபத்திற்கு வெளியே எதுவுமில்லை என்பதாக காட்ட இருக்கிறது. எனவே இதில் நிறைய கவித்துவமான இடங்கள் இருக்கப்போகின்றது. அந்த நோக்கில் இது ஒருவகையில் சுவாரஸ்யமான அத்தியாயம் எனக் கூறலாம். துவைதத்தை போற்றும் பக்தகோடிகளுக்கு இது ஒரு சிறப்புவாய்ந்த அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் தன்னறிவுப் பாதையிலிருக்கும் ஜிக்ஞாசுக்கள் இதை சரியான விதத்தில் புரிந்து கொள்வது அவசியமாகிறது. பிரபஞ்ச வடிவினனான விராட் அனைத்தையும் உள்ளடக்கியவன். சென்ற அத்தியாயத்தில் ஒவ்வொரு வடிவத்திலும் நானே வெளிப்படுகிறேன் என்றார் பகவான். ஆனால் இங்கு, ஒரே வடிவத்தில் எல்லாம் சேர்க்கப்பட்டவராக தன்னைக் வெளிக்காட்டுகிறார். எப்படி ஒரு மணிச்சரமானது அனைத்து மணிகளினூடேயும் ஓடி, அவைகளை இணைத்து தாங்கிப் பிடித்துள்ளதோ அதுபோல ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் ஈஷ்வரன் இருக்கிறார். அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய ஈஷ்வரனின் சர்வ வல்லமை இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
=> தோற்றமும் ஒடுக்கமும்:
‘ப4வ’ மற்றும் ‘அப்யய’ எனும் இரண்டு விஷயங்களை நான் கேட்டேன் என்கிறான் அர்ஜுனன். ‘ப4வ’ என்பது தோற்றத்தையும் ‘அப்யய’ என்பது ஒடுக்கத்தையும் குறிக்கிறது. அனைத்து உயிரினங்களின் சிருஷ்டி மற்றும் லயம் என்னால் கேட்கப்பட்டது — பூ4தாநாம் ப4வாப்யயௌ மயா ச்1ருதௌ. அதாவது ஸ்தூல மற்றும் சூக்ஷம உபாதிகளின் பிறப்பு இறப்பும், மேலும் ஆகாசம், வாயு, அக்நி, ஆப:, ப்ருதிவி ஆகிய பஞ்ச பூதங்களின் தோற்ற-ஒடுக்கமும் கேட்கப்பட்டது. த்வத்த: விஸ்தரச1: ஹி, உங்களிடமிருந்து மிக விரிவாக கேட்டேன், என்கிறான். பகவான் சுருக்கமாகச் சொன்னேன் என்றதை அர்ஜுனன் விரிவாக சொல்லப்பட்டது என்று ஏற்றுக் கொள்கிறான். இருவர் கருத்தும் அவரவர் நிலைமையிலிருந்து உண்மையே. முழு மஹிமையும் கருத்தில் கொள்ளும்போது சொல்லப்பட்டது சொற்பமே ஆகும். ஆனாலும் ஏழாம் அத்தியாயத்திலிருந்து பகவான் தனது பெருமைகளை கூறிக்கொண்டு வருகிறார். சிருஷ்டியின் தோற்றம், அனைத்தின் இருப்பு, ஒடுக்கம், பிறப்பு, இறப்பு, இறந்த பிறகு என்ன நடக்கிறது என அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. எனவே அர்ஜுனன், உங்களது அருளினால் இந்த விரிவான விளக்கங்கள் அனைத்தையும் என்னால் கேட்க முடிந்தது, என்கிறான்.
=> மஹிமையும்:
முடிவற்ற மஹிமையும் என்னால் கேட்கப்பட்டது — அவ்யயம் மாஹாத்ம்யம் அபி ச. மஹாத்மாவின் சிறப்புகள் ‘மாஹாத்ம்யம்’ எனப்படுகிறது. இங்கு அது எங்கும் நிறைந்துள்ள ஈஷ்வரனைக் குறிக்கிறது. ‘அவ்யயம்’ எனும் சொல் நித்தியமானது என்ற பொருளில் இங்கு குறிப்பிடப்படவில்லை. அது ‘தொடர்ந்து நீடிக்கிறது’ என்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு சிருஷ்டியின்போதும் அது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. உங்கள் மஹிமையும் ஐஸ்வர்யமும் அழிவுக்கு உட்பட்டது அல்ல, அவ்யயமாக உள்ளது. ஈஷ்வரனின் குணங்கள் முழுமையானவை என்பதால் அது காலத்திற்கு உட்பட்டதல்ல.
அனைத்துக்கும் பகவான் முதற் காரணமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒன்றிலும் கட்டுப்படுவதில்லை. இவைகளனைத்தையும் தோற்றுவித்தும் அவரிடத்துத் தேய்வு ஒன்றுமில்லை. இவை யாவும் அவருடைய மஹிமைகள் ஆகின்றன.
---------------------------------------------------------------------------------------------------------------------