||10.35|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:
बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकर: ।। ३५ ।।
ப்3ருஹத்ஸாம ததா2 ஸாம்நாம் கா3யத்ரீ ச2ந்த3ஸாமஹம் ।
மாஸாநாம் மார்க3சீ1ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: ।। 35 ।।
तथा ததா2 அப்படியே साम्नां ஸாம்நாம் ஸாமங்களில் बृहत्साम ப்3ருஹத்ஸாம பிருஹத்ஸாமமும் छन्दसाम् ச2ந்த3ஸாம் சந்தங்களில் अहम् அஹம் நான் गायत्री கா3யத்ரீ காயத்ரியாகவும்
मासानां மாஸாநாம் மாதங்களுள் अहम् அஹம் நான் मार्गशीर्ष: மார்க3சீ1ர்ஷ: மார்கழி மாதமாகவும் ऋतूनां ருதூநாம் பருவங்களில் कुसुमाकर: குஸுமாகர புஷ்பங்களை தோற்றுவிக்கும் வசந்தகாலமாகவும் (இருக்கின்றேன்).
மேலும் நான் ஸாமகானங்களில் பிருஹத்ஸாமம், சந்தங்களில் காயத்ரீ; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் வசந்த காலம்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அங்ஙனமே, சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்.
விளக்கம்:
=> ஸாமகானங்களில் பிருஹத்ஸாமம்:
இசை நிறைந்தது ஸாமவேதம். சங்கரனும் நாராயணனும் ஸாமகானப் பிரியர்கள். ஸாமகானம் செய்து சிவனை இராவணன் மகிழ்வித்தான். அத்தகைய ஸாமவேதத்தில் பிருஹத் ஸாமம் என்பது மிகச் சிறந்தது. இசையும் நுண்பொருளும் ஒன்று சேர்ந்து அதை அவ்விதம் பெரியதாக்குகின்றன.
=> சந்தங்களில் காயத்ரீ:
சந்தம் என்பது செய்யுள் அமைப்பு அல்லது யாப்பிலக்கணம். வேதத்தில் உஷ்நிக், அநுஷ்டுப், திரிஷ்டுப் போன்ற பல வகையான சந்தங்கள் உள்ளன. இவைகளில் காயத்ரீ என்பது மிக முக்கியமானது. இது மூன்று வரிகளுடன் கூடியதாக, ஒவ்வொரு வரிகளிலும் எட்டு உயிரெழுத்துக்களைக் கொண்டு மொத்தம் இருபத்தி நான்கு எழுத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. உண்மையில் காயத்ரீ என்பதற்கு மூன்று விதமாக பொருள் கூறலாம்:
1. இலக்கணப் படி, இது செய்யுள் அமைப்பைக் குறிக்கிறது.
2. காயத்ரீ செய்யுள் அமைப்புடன் கூடிய மந்திரம், காயத்ரீ எனப்படும்.
3. ஒரு தேவதையின் பெயர் காயத்ரீ.
கா3யந்தம் த்ராயதே இதி காயத்ரீ — ஓதுபவர்களை எது காப்பாற்றுகிறதோ அது காயத்ரீ. பல தெய்வங்களைப் பற்றிய புகழும், வணக்கமும், வேண்டுதலும் காயத்ரீ சந்த வடிவமாக அமைந்திருக்கின்றன. ருத்திர காயத்ரீ, தேவீ காயத்ரீ, சூரிய காயத்ரீ, பரமஹம்ஸ காயத்ரீ போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம். ரிக் வேதத்தின் முதல் மந்திரம் காயத்ரீ சந்த வடிவில் இருக்கிறது மற்றும் எல்லா தேவதைகளுக்கும் காயத்ரீ மந்திரமுள்ளது என்பதால் இந்த சந்தம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் செய்யுள் அமைப்பையும் கருத்து விசேஷத்தையும் முன்னிட்டும் சந்தகளுள் நான் காயத்ரீ என்கிறார் பகவான். மிகவும் பிரசித்தி பெற்றதாலேயே காயத்ரீ எனும்போதே அது சூரிய காயத்ரீயை குறிக்கிறது. இனி, பெரும்பான்மையோர் ஜபித்தும் தியானித்தும் வரும் பிரசித்தி பெற்ற அந்த சூரிய காயத்ரீயை சிறிது விசாரம் செய்யலாம்.
=> காயத்ரீ மந்திரம்:
ॐ तत् सवितुर्वरेण्यं
भर्गोदेवस्य धीमहि ।
धियो यो न: प्रचोदयात् ।।
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
ப4ர்கோ3தே3வஸ்ய தீ4மஹி ।
தி4யோ யோ ந: ப்ரசோத3யாத் ।।
य: ய: யார் न: ந: நம்முடைய धिय: தி4ய: அறிவை प्रचोदयात् ப்ரசோத3யாத் தூண்டுகிறாரோ
तत् தத் அந்த देवस्य தே3வஸ்ய சுடருடைய सवितु: ஸவிது: கடவுளின்
वरेण्यं வரேண்யம் மேலான भर्ग: ப4ர்க3: ஒளியை धीमहि தீ4மஹி தியானிப்போமாக.
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.
இதில் ‘பூ4ர் பூ 4வ: ஸ்வ:’ என்பது சேர்க்கப்பட்ட வரியாகும். வ்யாஹ்ருதிகள் என்றழைக்கப்படும் இவை மூன்றும் சிருஷ்டியின் துவக்கத்தில் பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்ட மங்களமான சப்தங்கள் ஆகும். இவைகளை ஓங்காரத்துடன் சேர்த்துச் சொல்வது வேத சம்பிரதாயமாக உள்ளது.
=> காயத்ரீ மந்திரத்தின் பொருள்:
இந்த மந்திரமானது முழு ப்ரம்ம வித்யையையும் உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு ‘பூ4ர் பூ 4வ: ஸ்வ:’ என்பது ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. ஓம் என்பது இவை மூன்றும்; அனைத்தையும் உள்ளடக்கியதாக இருப்பது.
மிகவும் வழிபடத்தக்கதான(வரேண்யம்) அந்த இறைவனை (தத்), நாங்கள் தியானிக்கிறோம்(தீ4மஹி) அல்லது அறிவின் வடிவில் இருக்கின்ற அந்த இறைவடிவை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சுய-பிரகாசமாகவும்(தே3வஸ்ய ஸவிது:) அனைத்தையும் அறிபவனாகவுமுள்ளவனை(ப4ர்க3:) நிதித்யாசனம் செய்கிறோம். ‘ஸவிதா’ எனில் சூரியனைக் குறிக்கிறது. அனைத்தையும் அறிந்தவன் சூரியனுடன் ஒப்பிடப்படுகிறான், ஏனெனில் சூரியன் அறியாமையின் சின்னமாக உள்ள இருளை சுவடு இல்லாமல் நீக்கிவிடும். எனவேதான் சூரியனை இறைவடிவாக அடையாளப்படுத்தும் வழக்கம் நம் மரபிலுள்ளது. அந்த இறைவன்(ய:), நம் மனதை பிரகாசப்படுத்தட்டும்(ந: தி4ய: ப்ரசோத3யாத்). இது ஒரு பிரார்த்தனை. இதன் உட்பொருள் புரிந்துகொள்ளப்படும்போது அது நிதித்யாசனமாகிறது. எந்த ஸத்-சித்-ஆனந்தமாகவுள்ள ஈஷ்வரன் எங்களுடைய புத்திக்கு சாக்ஷியாக உள்ளதோ அந்த (அனைத்தையும் அறிபவனாகவும் சுயம் பிரகாசமாகவும் உள்ள) ஆத்மாவை நிதித்யாசனம் செய்கிறோம் என்பதாக இது ப்ரம்ம வித்யையின் சாரமாக ஆகிறது.
=> மாதங்களில் மார்கழி:
மார்கழி மாதத்திற்கு ஒரு மஹிமையுண்டு. சூரியோதயத்துக்குச் சற்று முன்புள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. ஆத்ம சாதனத்துக்கு அது சிறந்த வேளையாகும். மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது. உத்தராயண புண்ணிய காலமாகவுள்ள தை மாதம் அவர்களுக்கு சூரியோதயம். அதிலிருந்து உத்தராயண ஆறு மாத காலம் தேவர்களுக்குப் பகல். ஆடியிலிருந்து மார்கழிவரையிலான தக்ஷிணாயண காலம் அவர்களுக்கு இரவு. இதில் மார்கழி மாதம் தேவர்களது விடியற்காலமாக அமைவதால் அது அவர்களது பிரம்ம முகூர்த்தமாகிறது. அப்பொழுது செய்யும் தேவாராதனை, வந்தனை, வழிபாடு முதலியவை மனதை நன்கு பண்படுத்த வல்லவைகளாக இருக்கின்றன. இவ்விதம் மார்கழி மாதம் புலனடக்கம், கடவுள் வழிபாடு ஆகியவைகளோடு முழுதும் இணைக்கப்பட்டுள்ளதால், மாதங்களுள் நான் மார்கழி மாதம் என்கிறார் பகவான்.
=> பருவங்களில் வசந்த காலம்:
ஹேம ருது அல்லது பனி காலத்தில் மரங்களெல்லாம் பட்டுப்போகின்றன. வசந்த காலத்தில் அவைகள் திரும்பவும் தளிர்த்துப் புத்துயிர் பெறுகின்றன. ஜடத்தை போல இருக்கும் ஸ்தாவரம், ஜங்கமம் ஆகியவைகள் வசந்த காலத்தில் உயிர் பெற்றது போலாகின்றன. அனைத்து தாவரங்களையும் பூக்க வைப்பதால் வசந்தம், ‘குஸுமாகர’ என்றழைக்கப்படுகிறது. பனிக்குப் பிறகான இந்த இளவேனிற்காலம் மனிதனிடத்தும் புதியதொரு சக்தியையும் ஊக்கத்தையும் உண்டாக்குகிறது. மேலும் வேத வேள்விகளில் முக்கியமானதாக கருதப்படும் ஜோதிஷ்டோம வேள்வி செய்யப்பட வேண்டிய காலமாக, வேதம் இந்த பருவ காலத்தையே கூறுகிறது — வஸந்தே வஸந்தே ஜ்யோதிஷா ஜுஹோதி. எனவே பருவங்களுள் இத்தனை சிறப்புமிக்க வசந்த காலம் நான் என்கிறார் பகவான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||10.36|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:
द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्वं सत्त्ववतामहम् ।। ३६ ।।
த்3யூதம் ச2லயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ।
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் ।। 36 ।।
अहम् அஹம் நான் छलयताम् ச2லயதாம் வஞ்சகர்களுடைய द्यूतं த்3யூதம் சூதாட்டமாகவும்
तेजस्विनाम् தேஜஸ்விநாம் தேஜஸ்விகளுடைய तेज: தேஜ: தேஜஸாகவும் अस्मि அஸ்மி இருக்கிறேன் अहम् அஹம் நான் जय: ஜய: வெற்றியாக व्यवसाय: अस्मि வ்யவஸாய: அஸ்மி முயற்சியாக
सत्त्ववताम् ஸத்த்வவதாம் சாத்விகர்களுடைய सत्वं ஸத்த்வம் சத்வ குணமாகவும்
अस्मि அஸ்மி இருக்கிறேன்.
வஞ்சகர்களுடைய சூதாட்டம் நான்; தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான். வெற்றியாகவும், முயற்சியாகவும், சாத்விகர்களுடைய சத்வ குணமாகவும் நான் இருக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான்.
விளக்கம்:
=> வஞ்சகர்களுடைய சூதாட்டம்:
மோஹத்திற்கு உள்ளாக்குகின்ற மற்றும் வஞ்சத்தின் சாயல் கொண்ட எதையும் ‘ச2ல’ எனக் கூறலாம். திருடுவது, பொய்ப் பத்திரம் தயாரிப்பது, விலையை மிகைபட உயர்த்தி விற்பது, போலிப் பொருள்களை நல்ல பொருளென்று சொல்லி விற்பது இவையாவும் வஞ்சமாகும். சூதாட்டத்தையும் அத்தகைய ஏமாற்றங்களோடு சேர்க்கலாம். ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சிலவகையான சூதாட்டங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கிறது. குதிரைச் சவாரியின் மீது பந்தயம் கட்டுதல், லாட்டரி விற்பனை, சூதாட்டம் போன்றவை இவற்றுள் சில. இதனால் அவைகள் சபை நடுவே வெளிப்படையாகச் செய்யப்படுகிறது. அதில் வருகிற லாப நஷ்டங்களுக்கும், சுக துக்கங்களுக்கும் மக்கள் கட்டுப்பட்டவர்கள் ஆகிறார்கள். பாண்டவர், கெளரவர்க்குப் பகடைகள் மூலம் சூதாடுவது சட்ட பூர்வனானது எனத் தோன்றிற்று. வஞ்சகச் செயல்கள் யாவும் கேடுடையவைகள்; நஷ்டத்தை உண்டாக்குபவைகள் ஆகும். பகடை விளையாட்டில், மனைவி தம்பியர் உட்பட தன்னிடமிருந்த அனைத்தையும் இழந்தான் தர்மபுத்திரன். ஒருவனை மோஹத்திற்குள்ளாக்கி ஏமாற்றும் தத்துவங்களுள், நஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்களுள் நான் சூதாட்டமாக இருப்பதாக பகவான் சொல்லுகிறார். அதனால் சூதாட்டம் ஆதரிக்கப்படுகிறது என்று இங்கு பொருட்படுத்தலாகாது. வேதம் சூதாட்டத்தை தடை செய்கிறது — அக்ஷை: மா தீ3வ்ய.
=> தேஜஸ்விகளுடைய தேஜஸ்:
தேஜஸ் என்பது ஒளி எனப் பொருள்படுகிறது. ஆரோக்கியம், இந்திரிய நிக்கிரகம், பிரம்மசரியம் முதலியவைகளினின்று உண்டாகும் பொலிவும், மனத்தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்து தேஜஸ் ஆகின்றன. அல்லது இங்கு அது செயல்திறனை, அறிவை, புத்திசாலித்தனத்தை குறிக்கிறது எனலாம். எந்த அறிவுத் துறையிலும் திறன்மிக கொண்டவர்களின் திறனாக நான் இருக்கிறேன் என்கிறார். அவர்களிடமுள்ள எந்தவொரு திறனும் அவர்களுடையது அல்ல; அது எல்லையற்றதாகவுள்ள ஆத்வாவிலிருந்து வெளிக்கொண்டு வரப்பட்டதாக உள்ளது. ஈஷ்வரனிடமிருந்து வேறாக இல்லாத ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவே அனைத்து சக்திகளையும் கொண்டுள்ளது. இருப்பினும் கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட உபாதியில் வரம்பற்ற திறன் இருக்க முடியாது. ஏனெனில் இங்கு நாம் சொரூபத்தை பற்றிப் பேசவில்லை; வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள உபாதிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.
எனவே வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள இந்த வடிவத்தில், அந்தக்கரணத்தில், வரையறுக்கப்பட்ட திறன் மட்டுமே இருக்க முடியும். இந்த திறனும் ஈஷ்வரனிடமிருந்து வெளிப்பட்டதாகவே உள்ளது. எனவே புத்திசாலிகளிடையே இருக்கின்ற அந்த புத்திசாலித்தனமாக நான் உள்ளேன் என்கிறார்.
=> வெற்றியும் முயற்சியும்:
நான் வெற்றி பெற்றவர்களின் வெற்றியாகவும் தெளிவான புரிதலுடையவர்களிடம் உள்ள அந்த புரிதலின் தெளிவாகவும் இருக்கின்றேன். கீழ்மையை அகற்றி, மேன்மையை நிலைநாட்டுதல் வெற்றியாகும். பண்பும் பயனுமுடைய தொழிலைத் தளரா மனதுடன் புரிதல் வினையமாகும். முயற்சி திருவினையாக்கும். பகவான் ஒருவனுக்கு வெற்றியைத் தர விரும்பினால், முதலில் முயற்சியையும் அதற்கான சக்தியையும் கொடுக்கிறார். முயற்சியே ஒருவனை ஈஷ்வர முன்னிலைக்கு எடுத்துச் செல்லவல்லது.
=> நற்பண்பு கொண்டவர்களின் நற்பண்பு:
யாரில் சத்வ குணம் பிரதானமாக இருக்கிறதோ அந்த சத்வ குணம் நான் என்கிறார் பகவான். ஒவ்வொருவரின் குணங்களும் சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்றின் கலவையாகவே உள்ளது. இதில் சத்வம் என்பது சிந்தனை, விசாரணை, அறிவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆற்றல், செயல், லட்சியம் ஆகியவை ரஜஸையும் மந்தத் தன்மை தமஸையும் குறிக்கிறது. மூன்று குணங்களுமே பிரக்ருதி சொரூபம் எனினும், அவைகளுள் சத்வ குணம் சாதகனை இறைவனது சன்னிதிக்கு அழைத்துச் செல்லவல்லது.
இந்த அத்தியாயத்தில் நாம் தியானப் பொருளை(த்4யேய) பற்றி விசாரம் செய்து வருகின்றோம். எனவே இங்கு ஈஷ்வரனை நாம் விரும்பும் ஒரு குணமாக, நற்பண்பாகப் பார்க்கின்றோம். அப்படி விருப்பத்திற்குரியதாக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் இடம் அனைத்தும் ஈசனின் மஹிமையே ஆகும். இறைவடிவம் இவ்விதம் அங்கீகரிக்கப்பட்டு தியானிக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
||10.37|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:
वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनंजय: ।
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ।। ३७ ।।
வ்ருஷ்ணீநாம் வாஸுதே3வோऽஸ்மி பாண்ட3வாநாம் த4நஞ்ஜய: ।
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுச1நா கவி: ।। 37 ।।
अहं அஹம் நான் वृष्णीनां வ்ருஷ்ணீநாம் விருஷ்ணிகளுக்குள் वासुदेव: வாஸுதே3வ: வாசுதேவனாகவும் पाण्डवानां பாண்ட3வாநாம் பாண்டவர்களுக்குள் धनंजय: த4நஞ்ஜய: தனஞ்ஜயனாகவும்
मुनीनाम् अपि முநீநாம் அபி முனிவர்களுக்குள் व्यास: வ்யாஸ: வியாசராகவும் कवीनाम् கவீநாம் கவிகளுள்
उशना कवि: உச1நா கவி: சுக்கிரன் என்கிற கவியாகவும் अस्मि அஸ்மி இருக்கிறேன்.
விருஷ்ணிகளுள் நான் வாசுதேவன்; பாண்டவர்களுள் தனஞ்ஜயன், முனிகளுள் வியாசர்; கவிகளுள் நான் சுக்கிரன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி.
விளக்கம்:
=> விருஷ்ணிகளுள் வாசுதேவன்:
பகவான் பல இடங்களில் தன்னை, அனைத்துமாக இருக்கின்ற ஈஷ்வரனாகப் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த சுலோகத்தில் அவர் தன்னை காரிய-கரண-சங்காதத்துடன் அதாவது ஸ்தூல உடல்-மனதுடன் கூடிய ஒரு ஜீவனாக வைத்துப் பேசுகிறார். யாதவர்கள் அனைவரும் விருஷ்ணியின் வம்சத்தில் வந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு விருஷ்ணிகள் என்று ஒரு பெயருண்டு. தான் கொண்டுள்ள ஸ்தூல உடலுடன் கூடிய கிருஷ்ணன் யாதவ குலத்தைச் சார்ந்த வசுதேவருடைய புதல்வர்; எனவே அவருக்கு வாசுதேவன் என்ற பெயர் வந்துள்ளது. யாதவர் கூட்டத்தில் இவரே எல்லாரிலும் சிறப்பு மிக்கவர் என்பது வெளிப்படை. பாகவதம் மற்றும் மஹாபாரதம் முதலியவைகளிலிருந்து நாமறிந்த கிருஷ்ணனின் வாழ்வு, ஒரு அவதார புருஷனாக, ஞானம் மற்றும் சக்தியின் அடிப்படையில் மிகவும் மேன்மை வாய்ந்ததாக உள்ளது.
=> பாண்டவர்களுள் தனஞ்ஜயன்:
தனஞ்ஜயன் என்பது அர்ஜுனனின் மற்றுமொரு பெயர். பல ராஜ்ஜியங்களையும் பெரும் செல்வத்தையும் வென்றவன் தனஞ்ஜயன்; ஆங்காங்கு புதைந்து பயன்படாது கிடந்த செல்வங்களை எல்லாம் அந்தந்த அரசர்களிடத்திருந்து வென்று வந்து, நல்வழியில் பயன்படுத்தியபடியால் தனஞ்ஜயன் என்ற பெயர் அர்ஜுனனுக்கு வந்தது. பாண்டவர்களுள் பகவான் தன்னை தர்மராஜா என்று சொல்லாமல் அர்ஜுனன் எனக் கூறியது, தனது யதார்த்த சொரூபத்தைக் குறித்த அறிவு பெறப்பட்டதாலேயே ஆகும். மேலும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் எப்பொழுதும் இணைபிரியாது இருந்துவருவதும் இங்கு நினைவூட்டப்படுகிறது. எனவே பகவான், ‘நான்தான் நீ’ என்கிறார். உன்னிடமிருக்கின்ற பராக்கிரமமும் பன்முகத் திறனும் ஈஷ்வரனின் வெளிப்பாடுகளேயாம். உன் பெருமைகள் அனைத்தும் எனது மஹிமைகளே ஆகும்.
பகவானே எல்லா ஜீவர்களாகவும் பரிணமித்திருக்கிறார். அர்ஜுனன் தனக்கு தனி வியக்தியிருக்கிறதெனவும் தன் வெற்றிக்கெல்லாம் தானே முதற்காரணம் எனவும் நினைப்பானாகில் அது தவறு. ஆகையால் நேரே அர்ஜுனனுடன் பேசும்போது அவனுக்கும் முதற்காரணம் பகவானாகவே இருக்கின்றார் என்பதை இங்கே நினைவூட்டுகிறார். ஒவ்வொரு ஜீவனும் தனக்கு முதற்காரணம் இறைவனே என்பதை அறிந்து செயல்படுவானாகில் அவன் சிறப்பை எய்துகிறான்.
=> முனிகளுள் வியாசர்:
அந்தர்முக திருஷ்டியில் மனதை முழுதும் செலுத்தி, மெய்ப்பொருளை முற்றும் அறிந்துகொள்ள வல்லவர் ஒருவர்க்கு முனி என்று பெயர். அத்தகைய பூரண ஞானிகளுள் பிரதானமானவர் வியாசர். அவருக்கு வேதவியாசர் என்றும், பாதராயணர் என்றும், துவைபாயனர் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அவரது கரு நிறத்தை முன்னிட்டு கிருஷ்ண துவைபாயனர் என்றும் அவர் அழைக்கப்படுவதுண்டு. பராசரருக்கும் சத்தியவதிக்கும் பிள்ளையாகப் பிறந்தவர். வேதங்களை எல்லாம் தொகுத்தவர்; வேதாந்த சூத்திரங்களை வகுத்தவர்; மஹாபாரதத்தையும் பதினெட்டு புராணங்களையும் எழுதியவர் அவர்.
முதலில் வேதங்கள் பல கிளைகளாக வாய்வழியிலான பாரம்பரியத்தினால் பாதுகாக்கப்பட்டன. வியாசர் மந்திரங்களை எல்லாம் சேகரித்து அதை நான்கு குழுக்களாகப் பிரித்தார். பனிரெண்டு ஆண்டுகாலத்தில் ஒரு வேதம் பயில முடிந்தது. இதனால் அவைகளை முறையாகப் பாதுகாப்பது எளிதாக இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு வேதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்; அந்த குறிப்பிட்ட வேதத்தைப் படித்து அடுத்த தலைமுறைக்கு அதை ஒப்படைக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இவ்விதம் வேதத்தை தொகுத்ததால் அவர் வேத-வியாசர் — வேத: வ்யச்யதே அநேந இதி வேத-வ்யாச:.
மேலும் அவர் வேதாந்த-சாஸ்திரத்தின் உட்பொருளைப் பகுப்பாய்வு செய்வதையும் எதிரெதிர் கருத்துக்களை கையாள்வதையும் பிரதானமாகக் கொண்டு பிரம்மசூத்திரத்தை எழுதினார். எனவே அவர் சூத்திரகாரர் எனவும் அழைக்கப்பட்டார். சங்கரர், பாஷ்யகாரர் என அழைக்கப்படுகிறார். சிவபெருமானே சங்கரர் என்றும் மஹாவிஷ்ணுவே வியாசர் என்றும் வேத மரபு கூறுகிறது. எப்படியிருப்பினும் நமது மரபின் இணைப்புகளாக இருப்பதால் இவர்கள் இருவரையும் நாம் வணங்குகிறோம். இவ்வாறு வேத மரபில் மிக முக்கியமான நபராக இருக்கும் வியாசர், முனிவர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுகிறார்.
=> கவிகளுள் நான் சுக்கிரன்:
இக்காலத்தில் பொதுவாக ‘கவி’ என்பது புலவர்களைக் குறிக்கிறது. ஆனால் வெளியுலகத்தைப் பற்றிய பரந்த அறிவுடையவரை கவி என்றழைப்பது பழைய வழக்கமாக இருந்தது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் காணக்கூடியவர் கவி எனப்பட்டார். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பார்க்கும் திறன் கொண்ட அத்தகையவர்களில் நான் உச1நா; இது சுக்ராசாரியரின் மற்றொரு பெயர். சுக்கிரர் அனைத்து அசுரர்களுக்கும் குருவாக இருந்தார். செத்தவர்களைப் பிழைப்பிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. அவர் தந்த பயிற்சியால் அசுரர்களுக்கு ஆற்றல் மிக உண்டாயிற்று. நெறிமுறைகள் போதிக்கும் இவரது சுக்ர-நீதி, மிகப் பிரபலமானது.
---------------------------------------------------------------------------------------------------------------------