திங்கள், 21 ஆகஸ்ட், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.28

||8.28|| உபாசனையின் பெருமை:

वेदेषु यज्ञेषु तप:सु चैव 

दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम्

अत्येति तत्सर्वमिदं विदित्वा 

योगी परं स्थानमुपैति चाद्यम् ।। २८ ।।

வேதே3ஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ 

தா3நேஷு யத் புண்யப2லம் ப்ரதி3ஷ்டம்  

அத்யேதி தத்ஸர்வமித3ம் விதி3த்வா 

யோகீ3 பரம் ஸ்தா2நமுபைதி சாத்3யம் ।। 28 ।।


वेदेषु  வேதே3ஷு  வேதங்களை அத்யயனம் பண்ணுவதிலும்    यज्ञेषु   யஜ்ஞேஷு  யாகங்களைச் செய்வதிலும்   तप:सु  தப:ஸு  தவம் செய்வதிலும்   दानेषु   தா3நேஷு   தானங்களைக் கொடுப்பதிலும்   एव  ஏவ  கூட   

यत् पुण्यफलं  யத் புண்யப2லம்  எந்த புண்ணிய பலனானது    प्रदिष्टम्  ப்ரதி3ஷ்டம்  சொல்லப்பட்டிருக்கிறதோ   इदं विदित्वा  இத3ம் விதி3த்வா  இதை அறிந்து   योगी  யோகீ3  யோகியானவன்    

तत् सर्वं  தத் ஸர்வம்  அதையெல்லாம்   अत्येति  அத்யேதி  கடந்து செல்லுகிறான்   

द्यम्   ஆத்3யம்   முதன்மையான   परं स्थानम्  பரம் ஸ்தா2நம்  பர நிலையை   

उपैति  உபைதி  அடைகிறான்.


இதை அறியும் யோகியானவன் வேதம், வேள்வி, தவம், தானம் ஆகியவைகளின் நற்பலனைக் கடந்து ஆதியாம் பரநிலையை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.


விளக்கம்:

=> புண்ணிய கர்மங்கள்:

  வேதே3ஷு யஜ்ஞேஷு தப:ஸு தா3நேஷு ஏவ யத் புண்யப2லம்வேதங்களை ஓதுதல், பல்வேறு வகையான யாகங்கள், விதவிதமான தவங்கள் மற்றும் தானங்கள் செய்வதன் விளைவாக அடையப்படுவதாக சாஸ்திரத்தினால் சொல்லப்படும் புண்ணியங்கள். இவைகள் அனைத்தும் ஒருவன் புண்ணிய பலன்களைச் சேகரிப்பதற்கான வழிகள் ஆகும். வேதம் கற்றலும் ஓதுதலும் புண்ணிய-கர்மம்; அதில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு வகையான வேள்விகளைச் செய்தலும் புண்ணிய பலனை அளிக்கிறது. உடலையும், மனதையும் உருக்கி செய்யப்படும் நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, பூஜை, ஜபம் முதலிய தவங்களைப் புரிவதாலும், மேலும் ஒருவன் தனது செல்வம், நிபுணத்துவம் அல்லது நேரத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதன்மூலம் செய்கிற தானத்தினாலும் புண்ணியங்கள் உருவாகின்றன. ஒருவனால் உடனடியாக பார்த்து அனுபவிக்க முடியாத இந்த அதிருஷ்ட பலன்கள், அவனது கர்மபலனில் வரவு வைக்கப்பட்டு, பின்னர் இந்த ஜென்மத்திலோ அல்லது அடுத்துவரும் பிறவிகளிலோ அறுவடை செய்யப்படுகிறது.  

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அர்ஜுனன் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விடைகளாக வந்த இவற்றை அறிபவன் அக்ஷர ப்ரம்மத்தை அறிபவன் ஆகிறான்யோகீஇத3ம் விதி3த்வா தத் ஸர்வம் அத்யேதி. அந்த யோகியானவன் வரையறைக்கு உட்பட்ட சாதனைகளையும் முடிவுகளையும் கடந்து, தனது சுயத்தை எல்லையற்ற ப்ரம்மமாக அறியும் முழு விடுதலையை நோக்கிச் செல்கிறான்.

மேலும் அவன், ஒருவன் அடையக்கூடியதிலேயே மிக உயர்ந்த நிலையான ஈஷ்வரத்துவத்தை அடைகிறான்பரம் ஸ்தா2நம் உபைதி ஆத்3யம். ‘ஆத்3எனில் ஆதியில் இருப்பது, சிருஷ்டிக்கு காரணம். ஆதியில் ப்ரம்ம மட்டுமே இருந்தது; பின் அந்த ப்ரம்ம இந்த உலகம் முழுவதையும் படைத்தது. காரணமே காரியத்தை வியாபிப்பதால், இவ்வுலகின் வடிவில் இருப்பது அந்த ப்ரம்மமே ஆகும். இவ்விதமாக ப்ரம்மத்தையும், இந்த படைப்பையும், படைப்பு-காரணமான ஈஷ்வரனையும், ஈஷ்வரனிடமிருந்து வேறாக இல்லாத தனது சுயத்தையும் புரிந்து கொள்பவனுக்கு மற்ற லோகங்கள் எந்த அர்த்தத்தையும் அளிப்பதில்லை. இதனால் புண்ணிய கர்மபலனாகிய சுவர்க்காதி பதவிகளைப் பெறுவதைவிட மேலானதாகிற ப்ரம்ம சாக்ஷாத்காரம் அந்த யோகிக்கு ஏற்படுகிறது

-------------------------------------------------------------------------------------------------------------------------


ऒं तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे 

श्रीकृष्णार्जुनसंवादे अक्षरब्रह्मयोगो नाम अष्टमोऽध्याय: ।।

ஓம் தத் ஸத் ।  இதி ஶ்ரீமத்343வத்3கீ3தாஸு உபநிஷத்ஸு ப்3ரஹ்மவித்3யாயாம் யோக3சா1ஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே3 அக்ஷரப்ரம்மயோகோ3 நாம அஷ்டமோऽத்4யாய: ।।

ப்ரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஶ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத் கீதை என்னும் உபநிஷத்தின்கண் அக்ஷரப்ரம்மயோகம் என்ற எட்டாம் அத்தியாயம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அக்ஷரப்ரம்மயோகம் - சாரம்:

(1) அர்ஜுனனின் கேள்வி [1 - 2]

(2) ஆறு கேள்விகளுக்கான பகவானின் விளக்கம் [3 - 4]

(3) ஏழாவது கேள்விக்கான விளக்கம் [4 - 8, 10, 12, 13, 14]

(4) பரப்ரம்ம லக்ஷணம் [9]

(5) மோக்ஷத்தின் மஹிமையை கூறப்போவதாக உரைத்தல் [11]

(6) மோக்ஷ சொரூபம், சம்சார சொரூபம் [15 - 19]

(7) பரப்ரம்ம தத்துவம் [20 - 22]

(8) சுக்ல மற்றும் கிருஷ்ண எனும் இருவிதமான கதிகள் [23 - 27]

(9) உபாசனையின் பெருமை [28]

-------------------------------------------------------------------------------------------------------------------------