செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.22 - 8.23

||8.22|| பரம புருஷ லக்ஷணம்:

पुरुष: पर: पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया

यस्यान्त: स्थानि भूतानि येन सर्वमिदं ततम् ।। २२ ।। 

புருஷ: பர: பார்த2 4க்த்யா லப்4யஸ்த்வநந்யயா  

யஸ்யாந்த: ஸ்தா2நி பூ4தாநி யேந ஸர்வமித3ம் ததம் ।। 22 ।।


पार्थ  பார்த2  பார்த்தா    भूतानि  பூ4தாநி  உயிர்கள்   

यस्य अन्त: स्थानि  யஸ்ய அந்த: ஸ்தா2நி  எவனுள் இருக்கின்றனவோ   येन  யேந  எவனால்   

इदं सर्वम्   இத3ம் ஸர்வம்  இவையாவும்   ततम् तु   ததம் து  வியாபிக்கப்பட்டும் இருக்கின்றனவோ   

पर: पुरुष:  பர: புருஷ:  அந்தப் பரம புருஷன்   

अनन्यया भक्त्या  அநந்யயா 4க்த்யா  வேற்றுமையில்லாத பக்தியினால்   लभ्य:  லப்4:  அடையப்படுகிறான்.    


பார்த்தா, உயிர்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவையாவும் வியாபிக்கப்பட்டும் இருக்கின்றனவோ, அந்தப் பரம புருஷன் வேற்றுமையில்லாத பக்தியினால் அடையப்படுகிறான்.    


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.


விளக்கம்:

=> இருவித லக்ஷணங்களின் மூலம் அவ்யக்தத்தின் வரையறை

அந்த மேலான புருஷன் பக்தியினால் அடையப்படுகிறான் பர: புருஷ: 4க்த்யா லப்4:. முந்தைய சுலோகங்களில் விளக்கப்பட்ட அவ்யக்தம் இங்குபுருஷ:என்ற சொல்லில் அழைக்கப்படுகிறது. இது அந்த அவ்யக்தத்தின் தடஸ்த-லக்ஷணம் மற்றும் சொரூப-லக்ஷணம் இரண்டையும் குறிப்பதாக அமைகிறது

 * தடஸ்த லக்ஷணம்:

தடஸ்த-லக்ஷணம் என்பது வேறொரு பொருளைக் கொண்டு ஒரு பொருளை வரையறுத்தல். அதாவது எந்த வீட்டில் காக்கை அமர்ந்துள்ளதோ அது ராமனின் வீடு என ஒருவன் கூறுகிறான். இந்த உதாரணத்தில் காக்கை என்பது அந்த வீட்டின் ஒரு பகுதி அல்ல. வீடு சுட்டிக்காட்டப் பட்டவுடன் காக்கை பறந்துசென்றாலும் அது ராமனின் வீடு என்றே புரிந்துகொள்ளப்படும். ‘புருஷ:என்பதன் முதல் பொருளானபுரியில் வசிப்பவன்என்பது தடஸ்த-லக்ஷணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த உடல் எனும் ஊரில் எந்த செயலிலும் ஈடுபடாமல் உறங்குபவனைப் போல வசிப்பவன் என்பதைக் குறிக்கிறதுஅதை குறிப்பதாகவே விஷ்ணுபகவான் படுத்துக் கொண்டிருப்பதைப் போல காட்டப்படுகிறார். அங்கு அவர் உறங்கவில்லை, சைத்தன்ய-சொரூபமாக நன்றாக விழித்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூல உடலில் சைத்தன்ய-சொரூப ஆத்மா இருக்கிறது. இது புருஷனைக் குறிக்கும் தடஸ்த-லக்ஷணமாகும்.  

 * ஸ்வரூப-லக்ஷணம்

புருஷ:என்பதன் இனியொரு பொருள்பூர்ண’, அதாவது பூரணமானது; வரையறுக்கப்படாதது; எல்லையற்றது. இது புருஷனின் தன்மையைக் குறிப்பதால் ஸ்வரூப-லக்ஷணம் என்றழைக்கப்படுகிறது. ஆத்மாவாகிய ப்ரம்மன் இடம், காலம் அல்லது குணங்கள் என எந்தவொரு தன்மையினாலும் வரையறுக்கப்படாதது

இந்த இரு காரணத்தினால் இது மேலானது; உயர்ந்ததுபர: புருஷ:. ஒருவனின் சுயத்திலிருந்து வேறாக இல்லாத இந்த பரம புருஷனை எப்படி ஒருவன் அடையப்போகிறான்? அதற்கு பகவான், வேறுபாடில்லாத பக்தியினால் என்று கூறுகிறார்அநந்யயா 4க்த்யா.


=> மூன்று வகையான பக்தி:

பொதுவாக பக்தியை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம் அல்லது பிளவுபடுத்துகிறோம்

(1) மூன்றுவித பிளவு: பக்தன், ஈஷ்வரன், லக்ஷியம் என மூன்று விதமான பிளவு கொண்ட இந்த முதல் வகை பக்தி, ஆரம்ப கால பக்தி என்றும் அழைக்கப்படும். இதில் பக்தனாகிய நான் வேறு; சுகம் வேண்டும், துக்கம் நீங்க வேண்டும் போன்ற லக்ஷியங்கள் வேறு; அதை அருளும் பகவான் வேறு

(2) இருவித பிளவு: பக்தன் மற்றும் பகவான் எனும் இரு பிளவுகள் கொண்ட நிலை இது. இதில் லக்ஷியம் என்பது பக்தனாகவோ அல்லது பகவானாகவோ இருக்கின்றது; அதாவது மனத்தூய்மை எனும் பெயரில் பக்தனே லக்ஷியமாகிறான் அல்லது பகவானை அடைதல் இலக்காகின்றது.

(3) அநந்ய பக்தி: பகவானும் பக்தனும் ஐக்கியமான நிலை; வேறுபாடற்ற நிலை. இந்த பிளவுபடாத பக்தியே அநந்ய பக்தி ஆகும். இது அத்வைத ரூப பக்தி அல்லது ஞான ரூப பக்தி என்றும் அழைக்கப்படும். அநந்யயா - என்னை நேசிப்பதிலும் பகவானை நேசிப்பதிலும் வேறுபாடில்லை. இங்குஎன்னைஎன்பது அஹங்காரம் நீக்கப்பட்ட நிலை. என்னுடைய இந்த அஹங்காரமே நான் வேறு; பகவான் வேறு எனக் கூறிக் கொண்டுள்ளது; உண்மையில் இருப்பது ஒரேயொரு தத்துவம் என்ற ஞானத்தினால் உண்டாகும் பக்தி. இதுவே பக்தியின் உச்சநிலை ஆகும்


=> மூலக்காரணி:

அவ்யக்த தத்துவமான, புருஷனான ஆத்மா மேலும் விளக்கப்படுகிறது. எவனுள் இந்த அனைத்து உயிர்களும் இருக்கின்றனவோ, எவனால் இவையாவும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றனவோயஸ்ய அந்த: ஸ்தா2நி பூ4தாநி யேந ஸர்வம் இத3ம் ததம், என்கிறார் பகவான். காரணத்தினால் காரியமானது முழுவதும் வியாபிக்கப்பட்டிருப்பதைப் போல, அதாவது களிமண்ணினால் பானை முழுதுமாக வியாபிக்கப்பட்டிருப்பதைப் போல, காரியமான இந்த அனைத்து நாமரூபங்களும் காரணமான ஆத்மாவினால் வியாபிக்கப்பட்டுள்ளது. எவ்விதம் ஆகாசத்தினுள் அனைத்தும் உள்ளதோ அதுபோல அனைத்து உயிர்களின் இருப்பும் ஆத்மாவினுள் உள்ளது. மூலக்காரணியான இந்த ஆத்மாவிற்கு வெளியே என எதுவுமில்லை. அனைத்தின் இருப்பும் ஸத்-சித்-ஆத்மாவைச் சார்ந்தேயுள்ளது

நம்மால் படைப்பு என்று அழைக்கப்படும் இவையனைத்தும் பெயர் மற்றும் வடிவத்தை தவிர வேறில்லை. இந்த ஒவ்வொரு பெயரும் வடிவமும் பகுப்பாய்வு செய்யப்படும்போது அது அதன் மூலக்காரணியான நாமரூபமாக சுருங்குகிறது. இவ்வாறு சுருக்கிக் கொண்டே செல்லும்போது இந்த அனைத்து நாமரூபமும் ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக சுருங்கி நிற்கிறது. எங்கெல்லாம் நாமரூபம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அது ஆத்மாவைச் சார்ந்து தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஆத்மா அநந்ய-பக்தியினால் அடையப்படுகிறது. பக்தி என்பது உண்மையில் நாம் விருப்பப்படும் ஒன்றைக் குறிக்கிறது. அநந்ய-பக்தியில், நம் விருப்பங்கள் அனைத்தையும் ஒன்று எனச் சுருக்குகிறோம். அந்த ஒன்று ஆத்மா; அதை அறியும் ஆவலுடன் தேடுதலில் ஈடுபடுபவன் ஜிக்ஞாஸா; ஆத்மாவை அறியும் அந்த பிரியமே பக்தி ஆகிறது. பக்தியின் எந்த வடிவமும் ஈஷ்வரனைக் கண்டடைவதாகவே உள்ளது; இதில் ஆத்மாவே அந்த பரமேஷ்வரனாக இருக்கின்றது எனக் கண்டடைவது ஜிக்ஞாஸாவின் முடிவாகும்

இந்த சுலோகங்களில், இரண்டு வகையான சாதகர்களை பகவான் சுட்டிக்காட்டுகிறார். நேரடியாகவும் முழுமையாகவும் ப்ரம்மத்திடம் உறுதியாக உள்ள ஒரு பிரிவினர்; அவர்களுக்கு சூக்ஷம சரீரமும், காரண சரீரமும் நீக்கப்பட்டுவிட்டதால் மரணத்திற்குப் பின் பயணம் இல்லை; இனி பிறப்பு இல்லை.

மற்றொரு பிரிவினர் உபாசகர்கள்; அவர்கள் பிரம்ம லோகத்திற்குச் சென்று அங்கு பிரம்மதேவரால் உபதேசம் பெற்று மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மேலும் தர்மப்படி வாழ்பவர்களும், நல்ல லோகங்களை விரும்பி புண்ணிய கர்மங்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் நல்ல லோகங்களைப் பெறுகிறார்கள். எனினும் அவர்கள் மீண்டும் திரும்பி வருகிறார்கள். இனிவரும் சுலோகங்களில் பகவான் இவர்கள் இறந்தபின் எந்த மார்க்கத்தின் வழியாக எந்த லோகத்தை அடைகிறார்கள் என்பதைக் கூறுகிறார்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

கடவுள் எல்லோரிடத்திலும் இருக்கிறார். ஆனால் எல்லாரும் கடவுளிடத்து இல்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.23|| இரு மார்க்கங்களைப் பற்றிய விளக்கத்தின் முகவுரை:

यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिन:

प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ।। २३ ।। 

யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி3:  

ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி 4ரதர்ஷப4 ।। 23 ।।


भरतर्षभ  4ரதர்ஷப4  பரதகுலப் பெருமகனே   प्रयाता:  ப்ரயாதா:  இறக்கின்ற   योगिन:  யோகி3:  யோகிகள்   यत्र काले तु  யத்ர காலே து  எந்தப் பாதையில்   अनावृत्तिम्  அநாவ்ருத்திம்  திரும்பி வராமையையும்      

वृत्तिं एव  ஆவ்ருத்திம் ஏவ  திரும்பி வருதலையும்   यान्ति  யாந்தி  அடைகின்றார்களோ    

तं कालं  தம் காலம்  அந்தக் காலத்தை     वक्ष्यामि  வக்ஷ்யாமி  சொல்லுகிறேன்.


பரதகுலப் பெருமகனே, எந்தப் பாதையில் உடலை விட்டுப் போகின்ற யோகிகள் முக்தியடைகின்றனரோ, எந்தப் பாதையில் போகின்றவர்கள் பிறக்கின்றனரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.


விளக்கம்:

சுலோகம் இருபத்திமூன்று முதல் இருபத்தியேழு வரை உபாசகர்கள் மற்றும் தர்மப்படி வாழ்பவர்கள் இறந்தால் எந்த மார்க்கத்தின் வழியாக எந்த லோகத்தை அடைகிறார்கள் என்பதை பகவான் விளக்குகிறார்.


=> இரு மார்க்கங்கள்:

எந்தவொரு கால்நடைக் கூட்டத்திலும் பொதுவாக ஒரு காளை தனித்து நிற்பது போல, பரத குடும்பத்தில் உள்ளவர்களில் அர்ஜுனனை அவ்வளவு எளிதில் தவறவிட முடியாது. எனவே 4ரதர்ஷப4, பரதகுலப் பெருமகனே என்று பகவானால் அழைக்கப்படுகிறான்.

  ப்ரயாதா:எனில் பயணிகள் என்று பொருள்படும், இங்கு இறப்பவர்களைக் குறிக்கின்றது. ‘யோகி3:எனும் வார்த்தை, உபாசகர்கள் மற்றும் தர்மப்படி வாழ்பவர்களைக் குறிக்கின்றது. மரணத்திற்குப் பின் சில யோகிகள், எந்தப் பாதையில் சென்றால் திரும்பி வருவதில்லையோ அதில் பயணிக்கிறார்கள்; மற்றும் சிலர் திரும்பி வரும் பாதையில் பயணிக்கிறார்கள். இந்த இரு மார்க்கங்களையும் பற்றி இப்போது சொல்கிறேன் என்கிறார் பகவான். இந்த சுலோகத்தில்காலஎன்பது மனிதர்கள் இறந்தபிறகு புறப்பட்டுச் செல்லும் பாதையை, மார்க்கத்தைக் குறிக்கிறது.

தியானம் செய்பவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமல்ல, பிரம்மலோகத்திற்குச் சென்று திரும்பாத இந்த உபாசகர்களைப் புகழ்வதற்காகவும் மற்றவர்கள்(உபாசகர்கள் அல்லாதவர்கள்) எங்கு செல்கிறார்கள் என்பதைப் பற்றிய விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தட்சிண மார்க்கத்தைப் பின்னணியாகக் கொண்டு உத்தர மார்க்கத்தைப் புகழ்வதே கிருஷ்ணரின் நோக்கம். நல்ல எதிர்மறைகள், மாறுபாட்டை விளக்கும் சிறந்த பின்னணியாக அமைகின்றன. எனவே புரியவைப்பதன் நோக்கில் மட்டுமே இந்த ஒப்பீடு செய்யப்படுகிறதே தவிர, இது மற்றவரைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. இனிவரும் சுலோகங்களில் உத்தர மற்றும் தட்சிண மார்க்கங்கள் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------