திங்கள், 7 ஆகஸ்ட், 2023

அக்ஷரப்ரஹ்ம யோகம் 8.24 - 8.25

||8.24|| பிரம்மலோகத்திற்கானப் பாதை:

अग्निर्ज्योतिरह: शुक्ल: षण्मासा उत्तरायणम्

तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जना: ।। २४ ।।

அக்3நிர்ஜ்யோதிரஹ: சு1க்ல: ஷண்மாஸா உத்தராயணம்

தத்ர ப்ரயாதா 3ச்ச2ந்தி ப்3ரஹ்ம ப்3ரஹ்மவிதோ3 ஜநா: ।। 24 ।।


अग्नि:  அக்3நி:  தீ    र्ज्योति:  ஜ்யோதி: ஒளி    अह:  அஹ:  பகல்    शुक्ल:  சு1க்ல:  சுக்லபக்ஷம்    

षण्मासा उत्तरायणम्  ஷண்மாஸா உத்தராயணம்  ஆறுமாதம் உத்தராயணம்    

तत्र प्रयाता:  தத்ர ப்ரயாதா:  அதில் சென்ற    

ब्रह्म विद: जना:  ப்3ரஹ்ம வித3: ஜநா:  ப்ரம்மத்தை தியானிக்கும் மனிதர்கள்    

ब्रह्म  ப்3ரஹ்ம  பிரம்ம-லோகத்தை    गच्छन्ति   3ச்ச2ந்தி  அடைகிறார்கள்.


தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்இவைகளில் உடலை நீத்துப் போகின்ற ப்ரம்மத்தை தியானிப்பவர்கள், பிரம்ம-லோகத்தை அடைகிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.


விளக்கம்:

=> ஒளி மார்க்கம்:

இது ஒரு பிரகாசமயமான, அழகான பாதை. ஒளி சம்பந்தப்பட்ட தேவதைகளால் நிறைந்த பாதை எனவும் கூறலாம். ஒளிக்கான அதிஷ்டான தேவதையான அக்னிதேவன்(அக்3நி:), காலத்தின் அதிபதியான ஜ்யோதி:, பகல் பொழுதிற்குரிய தேவதையான அஹ:, போன்ற ஒளிமயமான தெய்வங்கள் இருக்கும் மார்க்கம் இது. மேலும் இப்பாதையில், ஒரு மாதத்திற்குரிய சந்திரனின் வளர்தல் மற்றும் தேய்தல் காலத்தில், வளர்பிறை எனும் பிரகாசமான பாதியைக் குறிக்கும் சுக்ல-பக்ஷத்திற்கான அதிஷ்டான தேவதை(சு1க்ல:) உள்ளது.

உத்தராயணம் என்பது சூரியன் பூமத்திய ரேகைக்கு வடக்கே பயணிக்கும் ஆறுமாத காலமாகும். பொதுவாக, வடக்கு என்பது மோக்ஷத்தைக் குறிக்கிறது. எனவே சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் இந்த உத்தராயண காலம், தக்ஷிணாயனத்தைக் காட்டிலும் சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. ஷண்மாஸா உத்தராயணம் என்பது உண்மையில் இந்த ஆறுமாத காலத்திற்கு தலைமைத் தாங்கும் உத்தராயணம் எனும் தேவதையைக் குறிக்கிறது. இந்த அனைத்து பிரகாசமான தேவதைகளும் ஜீவனை வரவேற்று, பிரம்ம-லோகம் வரை அழைத்துச் செல்கின்றன.  

=> இங்கு பேசப்படுபவன் ஞானி அல்ல உபாசகன்:

ப்ரம்மனை தியானிப்பவர்கள் பிரம்ம-லோகத்திற்கு செல்கிறார்கள்ப்3ரஹ்மவித3: ஜநா: ப்3ரஹ்ம 3ச்ச2ந்தி. ஓங்கார தியானம் செய்பவர்கள், ஹிரண்யகர்பனை அல்லது சகுண ப்ரம்மாக ஈஷ்வரனை தியானிக்கும் உபாசகர்கள் இங்கு பேசப்படுகிறார்கள். ‘ப்3ரஹ்மஎனும் சொல் இங்கு பிரம்ம-லோகத்தைக் குறிக்கிறது. அங்கு சென்றபின் ப்ரம்ம-ஞானத்தை பெற்று அவர்கள் மோக்ஷத்தை அடைகிறார்கள். இங்குப்ரம்மஎன்ற சொல் பரப்ரம்மதை குறிக்கவில்லை ஏனெனில் இவர்கள் இறந்தபின் தேவதைகள் இருக்கின்ற பாதையில் பயணத்தை மேற்கொள்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பிரம்ம-லோகத்திற்கு சென்று படிப்படியாக(க்ரமேண) ப்ரம்மத்தைப் பற்றிய அறிவைப் பெறுகிறார்கள் என சங்கரர் கூறுகிறார். இது க்ரம-முக்தி எனப்படுகிறது. மாறாக, ப்ரம்மத்தை அறிந்தவர்களுக்கு பயணம் என எதுவுமில்லை; அவர்கள் விதேஹ-முக்தி அடைகிறார்கள். ஆகையால்ப்3ரஹ்ம வித3:எனும் சொல்லை ப்ரம்மத்தை அறிந்தவர்களாக அல்லாமல் ப்ரம்மத்தை தியானிப்பவர்களாக இங்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என சங்கரர் கூறுகிறார்

ப்ரம்மத்தைப் பற்றிய தெளிவான ஞானம் உள்ளவர்களுக்குப் போவதும் வருவதும் இல்லை. ப்ரம்மத்தை அறிந்தவன் முக்தியை அடைகிறான். மரணத்தின்போது புறப்படுவதற்கு தேவையான சூக்ஷம உடல் என எதுவும் ஞானியிடம் இல்லை. பிராணன்கள் அனைத்தும் ப்ரம்மத்தில் ஒடுங்கிவிட்டன. கர்மபலனில் ஒட்டிக்கொண்டு பயணிக்கத் தேவையான எந்தவொரு தனிமனிதனும் அங்கு இல்லை; ஆகவே பயணமும் இல்லை. அவனே ப்ரம்மன் என்பதால் போக்கும் வரவும் நிகழ்வதில்லை, ஆதலால் இச்சுலோகம் அப்படிப்பட்டவர்களை பேசவில்லை. பாதை குறிப்பிடப்பட்டிருப்பதால், அது கண்டிப்பாக தியானம் செய்யும் உபாசகர்களையே குறிக்கின்றது

-------------------------------------------------------------------------------------------------------------------------

||8.25|| சந்திர லோகத்திற்கான பாதை:

धूमो रात्रिस्तथा कृष्ण: षण्मासा दक्षिणायनम्

तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ।। २५ ।।

தூ4மோ ராத்ரிஸ்ததா2 க்ருஷ்ண: ஷண்மாஸா 3க்ஷிணாயநம்

தத்ர சாந்த்3ரமஸம் ஜ்யோதிர்யோகீ3 ப்ராப்ய நிவர்ததே ।। 25 ।।


धूम:  தூ4:  புகை    रात्रि:  ராத்ரி:  இரவு    तथा  ததா2   அங்ஙனமே    कृष्ण:  க்ருஷ்ண:  கிருஷ்ண பக்ஷம்    षण्मासा दक्षिणायनम्  ஷண்மாஸா 3க்ஷிணாயநம்  தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்    तत्र  தத்ர  அதில்   योगि  யோகீ3  யோகியானவன்    चान्द्रमसं ज्योति:  சாந்த்3ரமஸம் ஜ்யோதி:  சந்திரனது ஒளியை    

प्राप्य  ப்ராப்ய  அடைந்து    निवर्तते  நிவர்ததே  திரும்பி வருகிறான்.


புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்இவைகளில் போகின்ற யோகி, சந்திரனது ஒளியைப் பெற்றிருந்து மறு பிறவியடைகிறான்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.


விளக்கம்:

=> இருள் மார்க்கம்:

கர்மயோகிகள் அல்லாத, இருப்பினும் சில தகுதிகளைப் பெறுவதற்காக புண்ணிய கர்மங்களைச் செய்தவர்கள் செல்லும் பாதை இங்கு கூறப்படுகிறது. பாப கர்மங்களைத் தவிர்த்தும், வேதங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கர்மங்களை மட்டுமே செய்தும் வாழ்ந்ததால் இவன் கர்மயோகியாக இல்லாவிடினும் யோகி என அழைக்கப்படுகிறான். இவன் தூம-மார்க்கம் எனச் சொல்லப்படும் புகைப் பாதையின் வழியாகச் செல்கிறான். இங்கு இவ்விதம் கூறப்படுவது ஒளி மார்க்கத்தைப் புகழும் நோக்கிற்காக மட்டுமே தவிர, இதை இகழ்வதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த பாதையில் இருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விஷயங்களுக்குரிய தேவதைகள் தலைமை தாங்குகிறார்கள் —  புகையின் அதிஷ்டான தேவதை தூ4:, இரவின் தேவதை ராத்ரி:, சந்திரனின் தேய்பிறை-காலத்திற்கான தேவதை க்ருஷ்ண:, சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலத்திற்கு தலைமை தாங்கும் தக்ஷிணாயன தேவதை(3க்ஷிணாயநம்) போன்றோர் இந்த பாதையில்  இருக்கிறார்கள். இப்பாதை வழியாகச் செல்லும் யோகியானவன், சந்திரலோகம் எனச் சொல்லப்படும் தேவலோகத்தில் அதன் ஒளியைப் பெற்றிருந்து மீண்டும் பூமிக்குத் திரும்புகிறான்

நல்ல கர்மங்களைச் செய்வதினால் மட்டுமே ஒரு ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதில்லை. மேலும் மரணமே ஒருவனுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதுவுமில்லை; இறந்தபின் ஒருவன் பயணிக்கிறான் என்பதை இந்த சுலோகங்கள் எடுத்துரைக்கின்றன. மோக்ஷம் என்பது ஞானத்தினால் மட்டுமே; ஞானம் அடையப்படாத பட்சத்தில் அவன் மரணத்திற்குப் பிறகு இந்த இரண்டு பாதைகளில் பயணிக்கிறான். ஆனால் இங்கு பகவான் நல்ல பாதைகள் எனக் கருதப்படும் மார்க்கங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். பாப கர்மத்தினால் உண்டான கர்மபலனைத் தீர்க்கும்பொருட்டு துன்பத்தையும் வலியையும் கொடுக்கும் நரகத்திற்கான பாதைகளும் உள்ளன. அவைகள் இங்கு கூறப்படவில்லை. பகவான் விரும்பத்தக்க முடிவுகளைப் பற்றி மட்டுமே இங்கே பேசுகிறார். வலிமிகுந்த லோகத்திலிருந்தும் கூட ஒருவன் கர்மபலன் முடிந்ததும் திரும்பி வருகிறான்


=> உயிர்: 

அழியாத ஆத்ம அல்லது ப்ரம்ம தத்துவம், இந்த சைத்தன்யத்தின் பிரதிபிம்பமான சிதாபாஸம், ஸ்தூல உடல், சூக்ஷம உடல் மற்றும் காரண உடல் இவைகள் ஐந்தும் சேர்ந்த தத்துவமே உயிரோடு இருக்கும் ஒரு ஜீவன் ஆகிறான். இதில், நம் வழக்கத்தில் நாம் பொதுவாக உபயோகிக்கும் சொல்லானஉயிர்என்பது மனம் மற்றும் சிதாபாஸத்தை குறிக்கிறது. அதாவது சிதாபாஸத்துடன் கூடிய மனம் உடலை விட்டுப் பிரிதலை உயிர் பிரிதல் என்கிறோம். ஆகவே எப்பொழுதுமே முக்கிய ஆத்மா பயணி அல்ல; அது சர்வ வியாபி. சிதாபாஸத்துடன் கூடிய சூக்ஷம உடல்தான் ஒரு லோகத்திலிருந்து இனியொரு லோகத்திற்கு பயணத்தை மேற்கொள்கிறது. மனதால் நேரடியாக உலகை அனுபவிக்க முடியாது. ஆகவே கர்மபலனை அனுபவித்து தீர்க்க அதற்கு உடல் தேவைப்படுகிறது. சென்றடையும் லோகத்திற்கு ஏற்றார்போல அதற்கு உடல் கிடைக்கிறது

ஜீவ: = ப்ரம்ம தத்துவம் + சிதாபாஸம் + ஸ்தூல உடல் + சூக்ஷம உடல் + காரண உடல்.

இந்த உலகத்தில் சூக்ஷம சரீரம் ஓரிடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு செல்ல அதற்கு ஸ்தூல சரீரம் தேவைப்படுவதைப் போல, ஒரு ஜீவன் இறந்தபின் அது பயணத்தை மேற்கொள்ள அதற்கு ஜல சரீரம் கிடைக்கிறது. பிறகு கர்மபலனிற்கேற்ற லோகத்திற்கு சென்றபின், அதை அனுபவிக்கத் தேவையான சரீரம் கிடைக்கிறது.

இந்த சுலோகங்களில் கூறப்படும் பகல், இரவு போன்ற சொற்கள் காலங்களைக் குறிப்பவைகள் அல்ல; கால தேவதையைக் குறிப்பவைகளாகும். ஆகவே இறக்கும் காலம் மற்றும் இடம் ஒருவனது பிரம்மலோக மற்றும் சந்திரலோக பாதையை முடிவு செய்வதில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------