திங்கள், 6 பிப்ரவரி, 2023

ஞானவிக்ஞான யோகம் 7.7 - 7.8

||7.7|| படைப்பு நிலைபெறும் காரணம்

मत्त: परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय

मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव ।। ।। 

மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித3ஸ்தி 4நஞ்ஜய

மயி ஸர்வமித3ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக3ணா இவ ।। 7 ।।


धनञ्जय  4நஞ்ஜய  தனஞ்ஜயனே   मत्तமத்தஎன்னைக் காட்டிலும்    परतरं  பரதரம்  மேலானது   

अन्यत् किञ्चित्  அந்யத் கிஞ்சித்  வேறொன்று   अस्ति  அஸ்தி  இல்லை   सूत्रे  ஸூத்ரே  நூலிலே   

मणिगणा इव  மணிக3ணா இவ  மணிகள் போல   मयि  மயி  என்னிடத்து   इदं सर्वम्   இதம் ஸர்வம்  இவையாவும்   

प्रोतं  ப்ரோதம்  கோக்கப்பட்டிருக்கின்றன.


தனஞ்ஜயா, எனக்கு மேலானது வேறெதுவும் இல்லை. நூலிலே மணிகள் போல இவையாவும் என்மீது கோக்கப்பட்டிருக்கின்றன.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.


விளக்கம்:

=> மூலகாரணம்:

இந்த சுலோகத்தில் கிருஷ்ணர், ‘என்னை விட மேலான (காரணம்) வேறெதுவும் இல்லை, அர்ஜுனாஎன்கிறார். சென்ற சுலோகத்தில் அனைத்துலகின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் நானே காரணம் என அவர் கூறியதிலிருந்து அவைகளைப் படைத்தவராகவும், நிமித்தக் காரணம், மற்றும் அவற்றிற்கானப் பொருள் காரணமாகவும், உபாதான காரணம் அவரே இருக்கின்றார் எனப் புரிந்துகொண்டோம். ‘இந்த முழு உலகையும் படைத்தவன் நானே, அது திரும்பும் இடம் நானேஎன்றார். அங்கு அவர் தன்னை விவர்த-உபாதான-காரணமாகக் கொண்டு பேசுகிறார் எனப் பார்த்தோம்.

இங்கு பகவான், ‘இந்த உலகில் என்னைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லைஎன்கிறார். இதில், ‘ கிஞ்சித் அஸ்திஎன்பதைகிஞ்சித் அந்யத் நாஸ்தி ’ — என்னைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை, அல்லதுகிஞ்சித் பரதரம் நாஸ்திஎன்னை விட மேலான வேறு எந்தக் காரணமும் இல்லை எனப் பொருள்படுத்தலாம்.

காரணமற்றவனான இறைவனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதை இது குறிக்கிறது; அதாவது ஈஷ்வரனுக்கு மூலகாரணமென எதுவும் கிடையாது, அவரே அனைத்திற்கும் மேலான காரணம். இங்கு காரணம் என்பது ஒன்றிற்கான உபாதான மற்றும் நிமித்த காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருகால் ஈஷ்வரனுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமெனில், அதையொட்டி மற்றொரு காரணம் தேவைப்படும்; பின் அந்த காரணத்திற்கு இனியொரு மூலகாரணம் தேவைப்படும். இது ஒரு முடிவிலியை சென்றடையும். இங்கே நாம் ஸத்யம்-ஞானம்-ஆனந்தம்-பிரம்ம என்ற காரணத்தைப் பற்றி பேசுகிறோம். முழு உலகமும் ஒடுங்கும் புள்ளி அது. பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் எங்கு ஒடுக்கத்தை அடைகிறதோ அந்த புள்ளியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று இங்கு முன்வைக்கப்படுகிறது.


=> நூலில் கோர்க்கப்பட்ட மணிக்கோவை:

மேலும் கிருஷ்ணர், நூலிலே மணிகள் போல இவையாவும் என்னிடத்தில் கோர்க்கப்பட்டிருக்கின்றனமயி ஸர்வமித3ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக3ணா இவ, என்கிறார். ஒரு துணி எவ்விதம் அதன் இழைகளால் வியாபித்திருக்கிறதோ, அதுபோல இந்த உலகம் முழுவதும் பரமேஷ்வரனால் வியாபித்திருக்கிறது என்கிறார் சங்கரர். மணிகளின் ஒரு கூட்டத்தை குறிப்பிடுவதின் மூலம் கிருஷ்ணர், உலகினுடைய மாறுபட்ட தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். பல்வேறு வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட மணிகள் அனைத்தும் ஒரே சரத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டதைப் போல, பரமாத்மாவானஎன்னில்’, இந்த உலகம் அதன் அனைத்து வகைகளிலும் கோர்க்கப்பட்டுள்ளது.

இங்குப்ரோதஎனும் சொல் நெய்யப்படுதல் எனும் அர்த்தத்தில், துணி நெய்தலில் குறுக்கும் நெடுக்குமாக பிண்ணப்படுகின்ற ஊடு நூல் மற்றும் பாவு நூல் போல இந்த உலகம் ஸத்-சித் ஆத்மாவினால் நெய்யப்பட்டுள்ளது போன்ற வெளிப்பாட்டைக் குறிக்கிறது. பிரக்ஞை வடிவிலுள்ள இருத்தலான, ஸத்-சித்-ஆத்மாவான இந்த ப்ரம்மத்தில்தான் மாயையின் அனைத்து மாற்றங்களும் நடைபெறுகின்றன. எங்கெல்லாம் மாயை இருக்கின்றதோ அங்கெல்லாம் ப்ரம்மமான நான் இருக்கின்றேன் ஏனெனில் எனக்கு வேறான இருப்பு என எதுவுமில்லை. மித்யாவாக தோன்றிக் கொண்டிருக்கும் இந்த முழு பிரபஞ்சமும் என்னிடமிருந்து பிரிக்கப்படாதது என்கிறார்.

இதிலிருந்து இந்த உலகம் எவ்விதம் ஈஷ்வர-சிருஷ்டி என நாம் புரிந்து கொள்ளலாம்மத்த: பரதரம் அந்யத் கிஞ்சித் அஸ்தி. முந்தய சுலோகத்தில் பகவான், ‘இவ்வுலகின் தோற்றத்திற்கு காரணம் நான்; அது ஒடுங்கும் இடம் நான்எனக் கூறினார். இந்த சுலோகத்தில், ‘என்னாலேயே அனைத்தும் நிலைப் பெற்றிருக்கின்றனஎன்கிறார். அதாவது ஈஷ்வரனே இவையனைத்தின் சிருஷ்டி, ஸ்திதி, லய காரணம்; அதாவது தோன்றி, நிலைபெற்று, ஒடுங்கும் புள்ளி என்பதை இந்த இரு சுலோகங்களும் குறிக்கின்றது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சச்சிதானந்த பிரம்மம் இப்படிப்பட்டது என்று ஒருவராலும் அறிய முடியாது. அதனால்தான் இறைவன் பாதி புருஷனாகவும் பாதி பெண்ணாகவும் அர்த்தநாரீசுவர வடிவம் எடுத்தான். பிரகிருதியும் புருஷனும் தானே என்பதைக் காட்டவே அவ்வித வடிவம் தாங்கினான். அதே சச்சிதானந்தக் கடவுள் இன்னும் சிறிது கீழ் நிலைக்கு வந்து பல புருஷர்களாகவும் பல பிரகிருதிகளாகவும் விளங்குகின்றான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

||7.8|| ஈஷ்வர விபூதி பேசப்படுகிறது

रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययो:

प्रणव: सर्ववेदेषु शब्द: खे पौरुषं नृषु ।। ।।

ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபா4ஸ்மி 1சி1ஸூர்யயோ:  

ப்ரணவ: ஸர்வவேதே3ஷு 1ப்33: கே2 பௌருஷம் ந்ருஷு ।। 8 ।।


कौन्तेय  கௌந்தேய  குந்தியின் மைந்தா  अहं  அஹம்  நான்   अप्सु   அப்ஸு  நீர்களில்   रस:  ரஸ:  சுவை   

शशि सूर्ययो:  1சி1 ஸூர்யயோ:   சந்திர சூரியர்களுளில்   प्रभा  ப்ரபா4  ஜோதி   सर्ववेदेषु   ஸர்வவேதே3ஷு  எல்லா வேதங்களில் प्रणव:  ப்ரணவ:  ஓங்காரம்   खे  கே2  ஆகாசத்தில்  शब्द:  1ப்33:  சப்தம்   नृषु   ந்ருஷு  மனிதர்களிடத்து   

पौरुषं   பௌருஷம் வலிமையாக   अस्मि  அஸ்மி  இருக்கின்றேன்.


குந்தியின் மைந்தா, நான் நீர்களில் சுவையாகவும், சந்திர சூரியர்களுளில் ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும் ஓங்காரமாகவும், ஆகாசத்தில் சப்தமாகவும், மனிதர்களிடத்து வலிமையாகவும் இருக்கின்றேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.


விளக்கம்:

அனைத்தும் ஈஷ்வர சொரூபம் என்பதை புரிந்துகொள்ளும் பொருட்டு, சுலோகம் எட்டு முதல் பன்னிரெண்டு வரை ஈஷ்வரனின் பெருமை(விபூதி) பேசப்படுகிறது. பொதுவாக நாம் இவ்வுலகை நமது விருப்பு வெறுப்புகளால் வியாபிக்கிறோம். அனைத்தையும் சுக துக்கத்திற்கான விஷயமாக ஆக்குகிறோம். ஆனால் உலகிற்கு ஈஷ்வரனே உபாதான காரணம் என்ற அறிவை அடைந்ததன் பலனாக ஈஷ்வர திருஷ்டி, அதாவது உலகை ஈஷ்வரனாகப் பார்த்தல் என்பது அடையப்பட வேண்டும். இதன்பொருட்டு இனிவரும் சுலோகங்களில் பகவான், தான் இதுவரை கொடுத்த அறிவை உணர்வாக ஆக்க முயற்சி செய்யப் போகிறார். பகவானின் முயற்சி வெற்றியடைய வேண்டுமெனில் நம்முடைய முயற்சி அங்கு சிரத்தையாகப் பரிணமிக்கும்போதே நிகழ்கிறது

ஒவ்வொரு மனதும் இரண்டாகப் பிரிந்துள்ளது:

  (1) உணர்வு மயம் - உணர்ச்சி ரீதியாக ஏற்படும் புரிதல்.

  (2) அறிவு மயம் - அறிவு ரீதியாக ஒன்றை சரியாகப் புரிந்துகொள்ளும் திறன். ஒரு விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போது அது துயரத்திற்கே வழிவகுக்கும். ஒருகால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும் உணர்வு மயமானது அறிவிற்கு துணை நிற்கும்போதுதான் அதற்கான பலன் கிடைக்கும்.

நமக்கு இவ்வுலகின் மீது ஏற்கனவே விருப்பு, வெறுப்பு மற்றும் பயம் போன்றவைகள் அடர்ந்து இருக்கின்றது. இவ்விதமே பல காலம் வாழ்ந்துவிட்டோம். ஆகவே என்னதான் அறிவு இருந்தபோதிலும் உணர்வு ஒத்துழைக்கவில்லையெனில் அறிவினால் எந்தப் பலனும் இல்லை. இப்போது பகவான், ‘உலகமே என் சொரூபம்எனக் கூறிவிட்டார். ஒருகால் இவ்வுலகைப் பற்றி எந்தவொரு முன்முடிவுகளும் இல்லாத பட்சத்தில் இந்த அறிவு கிடைத்திருந்தால் அதை அப்படியே நம்மால் ஏற்றுக் கொள்ள இயலும். ஆனால் இப்போது நம் மனதினால் அது இயலாது. இங்குதான் சிரத்தை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது


=> ஞானாப்யாஸம்:

கொடுக்கப்பட்ட அறிவை விதவிதமான கோணங்களில் மீண்டும் மீண்டும் சிந்தித்து நம் அறிவாக மாற்றுவதை நாம் ஞானாப்யாஸம் என்கிறோம். இந்த ஐந்து சுலோகங்களில் பகவான் இந்தப் பயிற்சியையே அளிக்கின்றார். சில உதாரணங்களின் மூலம், இவைகளனைத்தும் நானே; நானே அனைத்தின் உபாதான காரணம்; என் விபூதியே இவை அனைத்தும்என்கிறார். பகவான் நமக்கு கொடுத்த இந்த அறிவும், உலகத்தில் நாம் வைத்துள்ள உணர்வும் ஒன்றாக வேண்டும். நாம் இவ்வுலகை பார்க்கும்போது எப்போது ஈஷ்வரனைத் தவிர வேறு எதையும் பார்க்கமுடியவில்லையோ, அப்போதுதான் நாம் ஈஷ்வர ஞானத்தை அடைந்ததாக ஆகிறது. அதுவரை நாம் ஈஷ்வர ஞானத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருப்பதாகவே பொருள்.

=> சுவை:

உலகை ஈஷ்வரனாகப் பார்த்துப் பழக, அறிவை மனதுடன் இணைக்க பகவான் இங்கு பூதங்களின் தன்மாத்திரைளாக இருப்பவன் நானே எனக் கூறுகிறார். நீரின் சுவையாக நானே இருக்கின்றேன் - அஹம் அப்ஸு ரஸ:. நீரின் சாராம்சம், அதன் தனித்துவமான பண்பு என்பது சுவை. ஸ்தூலமான நீரின் சூக்ஷமமான குணமாக நானே இருக்கின்றேன்; அதாவது எதனால் நீர் நீராக உள்ளதோ அந்த உண்மைத்தன்மையாக நான் இருக்கின்றேன், என்கிறார் பகவான்.


=> ஒளி:

சூரிய சந்திரனின் புகழ்பெற்ற ஒளிர்வுகளில் நானே ஒளியாக இருக்கின்றேன்1சி1 ஸூர்யயோ: ப்ரபா4 அஸ்மி, என்கிறார் பகவான். ஒளி இல்லாத சூரியன் இல்லை; நிலவொளியானது சூரிய ஒளியின் பிரதிபலிப்பைத் தவிர வேறில்லையாதலால் சூரிய ஒளி இல்லாமல் சந்திரனும் தெரிவதில்லை. நான் சூரியனில் ஒளி; நான் சந்திரனில் ஒளி. சூரியன் சூரியனாகத் தோன்ற காரணமான ஒளி நான்; சந்திரன் சந்திரனாகத் விளங்கக் காரணமான அந்த பிரதிபிம்ப ஒளியும் நானே, என்கிறார்


=> ஓங்காரம்:

எல்லா வேதங்களிலும் நான் பிரணவமாக இருக்கிறேன்ஸர்வவேதே3ஷு ப்ரணவ:. பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் வேதங்களின் சாரமாக விளங்குவது ஓம் எனும் பிரணவம் ஆகும். பிரணவம் என்ற சொல்லுக்கு, பொருத்தமான அல்லது சிறந்த பெயர் என்பது பொருள். அர்த்தத்தின் அடிப்படையில்ஓம்எனில் மாயையுடன் கூடிய ஈஷ்வர தத்துவத்தையும் நிர்குண ப்ரம்மத்தையும் குறிக்கின்றது. இனியொரு கோணத்தில் விசாரம் செய்கையில், ஒலிவடிவான வேதம் என்பது வாக்கியங்களின் சேர்க்கை; வாக்கியங்கள் சொற்களின் சேர்க்கை; சொற்கள் என்பது எழுத்துக்களின் சேர்க்கை. எல்லா எழுத்துக்களின் உபாதான காரணமாக, ‘’, ‘மற்றும்ம்உள்ளது. + + ம் = ஓம். எனவே அர்த்தத்தின் அடிப்படையிலும் ஒலியின் அடிப்படையிலும் முழு வேதத்தின் சாரமாக விளங்குவது ஓங்காரம் ஆகும். இது மாண்டூக்ய உபநிஷதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் கடோபநிஷதத்தில் ஓங்காரத்தைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ‘பிரம்மச்சரியம் மற்றும் கற்றல் முதலிய வாழ்க்கையை மனிதன் விரும்பக் காரணமான, எல்லா வேதங்களாலும் பேசப்படும் ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன், இது இந்த ஓம்’ — ஓமித்யேதத். ‘இந்த ஓங்காரமாக நானே இருக்கின்றேன்’, என்கிறார் பகவான்.


=> ஒலி:

ஆகாசத்தினுள் நான் ஒலியாக இருக்கின்றேன்கே2 1ப்33:. ஒலியை அறியும் புலனுறுப்பான காதுகளை அடைய ஒலியானது ஆகாசத்தில் பயணிக்க வேண்டும். எனவே சப்தமானது ஐம்பூதத்தில் ஒன்றான ஆகாசத்தில் வெளிப்படுவதால் அதனுடைய தன்மாத்திரை சப்தம் ஆகும். ஆகாசம் எனும் ஸ்தூல பூதத்தின் சூக்ஷம காரணம் சப்தம். ‘அந்த ஒலியாக நான் இருக்கின்றேன்’, என்கிறார்


=> வலிமை:

மனிதர்களிடத்தில் நான் வலிமையாக இருக்கின்றேன்ந்ருஷு  பௌருஷம் அஸ்மி. ஆணோ அல்லது பெண்ணோ, பொதுவாக எந்தவொரு மனித உடலிலும் ஒரு குறிப்பிட்ட வலிமை இருக்கின்றது. அந்த பலம் நானே. உடலானது செயல் செய்ய, நடக்க, இனப்பெருக்கம் அடைய, அது கொண்டுள்ள திறன் அல்லது பலம் நான், என்கிறார்

ஐம்பூதங்களில் ஆகாசம் மற்றும் நீர் இரண்டும் இந்த சுலோகத்திலும், பூமி மற்றும் நெருப்பு அடுத்த சுலோகத்திலும் கையாளப்படுகிறது. இதனுடன் வாயுவையும் நாம் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து என்கிற எண்ணிக்கை இதன் நோக்கமல்ல; இங்கே இருக்கும் எதுவும் நான்தான் என்பதை நிரூபிக்க, உதாரணமாக சில விஷயங்களைக் குறிப்பிடுவதையே பகவான் இங்கு செய்கிறார். எந்த ஒரு வடிவமும், குணமும் நானே. ஒவ்வொரு விஷயத்திலிருக்கின்ற தனித்தன்மையும் நானே. இது என்னுடைய படைப்பு, என்னிடமிருந்து பிரிக்கப்படாதது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------