||7.11|| ஈசனின் பெருமை தொடர்கிறது:
बलं बलवतामस्मि कामरागविवर्जितम् ।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ।। ११ ।।
ப3லம் ப3லவதாமஸ்மி காமராக3விவர்ஜிதம் ।
த4ர்மாவிருத்3தோ4 பூ4தேஷு காமோऽஸ்மி ப4ரதர்ஷப4 ।। 11 ।।
भरतर्षभ ப4ரதர்ஷப4 பரதத்தலைவா बलवताम् ப3லவதாம் உடல் பலமுடையவர்களுடைய
काम राग विवर्जितम् காம ராக3 விவர்ஜிதம் காமமும் ராகமும் நீங்கப் பெற்ற बलं ப3லம் பலமாக
अस्मि அஸ்மி இருக்கிறேன் भूतेषु பூ4தேஷு உயிர்களிடத்து धर्म अविरुद्ध: த4ர்ம அவிருத்3த4: தர்மத்திற்கு முரண்படாத काम: காம: காமமாக अस्मि அஸ்மி இருக்கிறேன்.
பரதத்தலைவா, உடல் பலமுடையவர்களிடத்துக் காமமும் ராகமும் நீங்கப் பெற்ற பலமாக நான் இருக்கிறேன். உயிர்களிடத்து தர்மத்திற்கு முரண்படாத காமமாக இருக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.
விளக்கம்:
=> பலம்:
ப3லம் ப3லவதாம் அஸ்மி - வலிவுடையவர்களின் வலிமையாக, பலமாக நானே இருக்கிறேன். உள்ளிருக்கும் ஆற்றலை வெளிப்பாட்டிற்கு கொண்டு வருகிற சாத்தியத்துடன் கூடியிருப்பதால் உடல் வலிமையை வளர்ப்பதற்கு அர்பணிப்பு என்பது அவசியம். சாத்தியம் என்பது ஈஷ்வரனே ஆகும். மனிதர் யாரும் பெரிய பைசெப்ஸ்களுடன் பிறக்கவில்லை; அதற்கான உழைப்பை அவர்கள் செய்து அதை அடைகிறார்கள். இவ்விதங்களில், உழைப்பை செலுத்துவதற்கான பலமாகவும், இதை அடைவதற்குத் தேவையான சுதந்திர விருப்பமாகவும் பகவானே இருக்கின்றார். எனவே எல்லா மக்களிடமும் மறைந்திருந்து, வலிமையானவர்களிடத்தில் மட்டும் வெளிப்படும் அந்த வலிமை நான் என்கிறார் பகவான். ஆகையினால், ‘நான்’ என்ற சொல் ஈஷ்வரனைக் குறிக்காமல், ‘நான் வலிமையானவன்’ என ஒருவனால் சொல்ல முடியாது.
மேலும் பகவான், இத்தகைய பலத்தில் குறிப்பாக காமமும் ராகமும் நீங்கப் பெற்ற பலமாக நான் இருக்கிறேன் என்கிறார் — காம ராக3 விவர்ஜிதம் ப3லம். பொதுவாக, காமம் என்பது ராகத்தையும் த்வேசத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல். ஆனால் இங்கே காம மற்றும் ராக3 தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; எனவே, இதன் அர்த்தத்தை சற்று கவனமாக விசாரிக்க வேண்டும். தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைய விரும்புவது காமம், மற்றும் ஏற்கனவே தன்னால் அடையப்பட்ட ஒரு பொருள் தன்னிடமிருந்து போகக்கூடாது என்ற பற்று, ராக3 ஆகும். இந்த சுலோகத்திற்கான விளக்கவுரையில் சங்கரர், காம என்பது ஒருவனிடம் இல்லாத, அவனிடமிருந்து விலகியிருக்கின்ற காரணத்தினால் அதை அடைய ஏற்படும் விருப்பம் என்றும், ராகம் என்பது அவனால் ஏற்கனவே பெறப்பட்ட பொருட்களில் உள்ள பற்றுதல் என்றும் கூறுகிறார்.
ஆகவே பகவான், ஆசையும் பற்றுமில்லாத பலமாக நான் இருக்கின்றேன் என்கிறார். முந்தய சுலோகங்களில் நான் புத்தியுடையோர்களுடைய புத்தி, தேஜஸ்விகளுடைய தேஜஸ், தபஸ்விகளின் தபஸ் எனக் கூறியிருந்தார். அந்த இடங்களில் அவர் எந்தவொரு அடைமொழியும் சேர்க்கவில்லை. மாறாக இங்கு ‘காமமும் ராகமும் நீங்கப்பெற்ற’ என்ற அடைமொழியை வலிமை எனும் சொல்லுக்கு பெயரடையாகச் சேர்க்கிறார். ஏனெனில் பலம் இருக்கின்ற இடத்தில் அதை துஷ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. காமமும் ராகமும் அஹங்காரத்தைக் குறிக்கின்றது. ஆகவே அஹங்காரமற்ற பலத்தை குறிக்கும் பொருட்டு பகவான் இந்த வெளிப்பாட்டை உபயோகிக்கிறார்.
=> தர்மத்திற்கு முரணில்லாத ஆசை:
த4ர்ம அவிருத்3த4: பூ4தேஷு காம: அஸ்மி — உயிர்களிடத்து தர்மத்திற்கு முரண்படாத ஆசையாக நான் இருக்கிறேன், என்கிறார் கிருஷ்ணர். இது இனியொரு அழகான வெளிப்பாடு. பொதுவாக ஆசைகளை அகற்ற வேண்டும் என்று சொல்வதையே நாம் கேட்கிறோம். ஆனால் இங்கு பகவான், ‘ஓ ப4ரதர்ஷப4, பரத குலத்தில் முதன்மையானவனே, கேள், காம: அஸ்மி — நான் ஆசையாக இருக்கிறேன்’, என்கிறார். ஆசைப்படுதல் என்பது ஒரு சக்தி, இது இச்சா சக்தி என்றழைக்கப்படுகிறது. ஆசை இல்லாவிட்டால் படைப்பு இல்லை. வயது கூட கூடத் தான் ஆசைப்படும் சக்தி அதிகரிக்கிறது. இந்த ஆசையின் உச்சகட்டம் என்பது மோக்ஷத்தை அடைய விரும்புவது ஆகும். அங்கு இச்சா சக்தி பூர்த்தியை அடைகிறது. ஏனெனில் மோக்ஷ-ஆசை மற்றனைத்து ஆசைகளையும் நீக்குகிறது. ஆகையினால், நான் ஆசையின் வடிவமாக இருக்கிறேன் என்கிறார். எப்படிப்பட்ட ஆசை? தர்மத்திற்கு விரோதமில்லாத ஆசையாக உள்ளேன்.
காமம் அல்லது ஆசை தன்னளவில் கேடுடையதன்று. நிறைய திறமைகளும், அறிவும் நிபுணத்துவமும் உடைய அஹங்காரமில்லாத ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவனுக்கு எதையும் செய்ய விருப்பமில்லை; எதையும் பேசவோ, எழுதவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ விருப்பமில்லையெனில் அனைத்தும் அவனுக்குள்ளேயே இருந்துவிடும். அதை வெளிக்கொணரவும் கூட ஆசை அவசியமாகிறது. வெறும் ஆசை மட்டுமே ஒருவனை பிணைக்காது என்பதால் அவனுக்கு ஆசைகள் இருக்கலாம், ஆனால் அது தர்மத்திற்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். தர்மம் என்பது சாஸ்திரத்திற்குட்பட்டு நடத்தலும் உலகளாவிய நெறிமுறைகளைப் பின்பற்றுதலும் ஆகும். எனவேதான் பகவான் இங்கு, தர்மத்திற்கு முரணில்லாத ஆசை என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆசையிலிருந்து உருவாகும் எதுவும் அழகானது; பகவானின் வெளிப்பாடாக இருப்பது. இதையே நாம் இச்சா-சக்தி எனப் பார்த்தோம். இது மாயா-சக்தியின் ஒரு பகுதியாகும். ஆகவே, எல்லா உயிரினங்களிலும், தர்மத்திற்கு முரணில்லாத எந்த ஆசையும் நானே என்கிறார் பகவான்.
நான் புத்தியுடையோர்களுடைய புத்தி, தேஜஸ்விகளுடைய தேஜஸ் எனக் கூறியபோது பகவான் ஞான-சக்தியை சுட்டிக் காட்டினார். பலமுடையோர்களின் பலமாக இருக்கிறேன் எனும்போது அவர் க்ரியா-சக்தியை குறிக்கிறார். இவ்விதம் இச்சா-சக்தி, ஞான-சக்தி மற்றும் க்ரியா சக்தியாக நானே இருக்கிறேன் என்கிறார்.
தர்மத்திற்கு எதிரானதாக இல்லாத ஆசை நான் என்று கிருஷ்ணர் கூறியிருப்பதால், எந்தவொரு தர்மத்திற்குட்படாத ஆசையும் ஜீவனுடையது ஆகிறது. உண்மையில் ஒரு ஜீவன் என்பவன் ஈஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாதவனாக இருந்தாலும், அதர்மமான ஆசைகள் மற்றும் செயல்கள் ஒருவனுடைய விரும்பும் சுதந்திரத்தை பொறுத்து ஏற்படுவதால் அது கண்டிப்பாக ஜீவனையே சார்கிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது ஏன் மனம் சலிக்கின்றது? வீட்டு ஈயானது பக்ஷணங்களின் மீது சில வேளைகளில் உட்காருகிறது. அது உடனே பக்ஷணத்தை விட்டு விட்டு மலத்தின் மேல் போய் உட்காருகிறது. தேனீயோ தேனைக் கிரஹிக்கும் பொருட்டு மலர்ந்த புஷ்பங்களில் உட்காருமே தவிர அருவருக்கத்தக்க பதார்த்தங்களை அது ஒருபோதும் அணுகுவதில்லை. உலகப் பற்றுள்ளவர்கள் முன்னே சொன்ன வீட்டு ஈக்குச் சமானம். ஏதோ சில வேளைகளில் ஈசுவரப் பிரேமையாகிய இன்பத்தை ஒரு சிறிது அனுபவித்தாலும், பழைய வாசனையால் அவர்கள் சிற்றின்ப சுகமாகிய மலக்குழியைத் தேடிப்போய் விழுகின்றனர். பரம ஹம்ஸர்களான மஹான்களோ சதாசர்வகாலமும் பகவத் பிரேமையிலேயே ஆழ்ந்திருக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
||7.12|| ஈஷ்வர மஹிமை:
ये चैव सात्त्विका भावा राजसास्तामसाश्च ये ।
मत्त एवेत्ति तान्विद्धि न त्वहं तेषु ते मयि ।। १२ ।।
யே சைவ ஸாத்த்விகா பா4வா ராஜஸாஸ்தாமஸாச்1ச யே ।
மத்த ஏவேதி தாந்வித்3தி4 ந த்வஹம் தேஷு தே மயி ।। 12 ।।
ये च एव யே ச ஏவ இன்னும் எல்லா सात्त्विका: भावा: ஸாத்த்விகா: பா4வா: சத்வகுண வஸ்துக்கள்
राजसा: ராஜஸா: ரஜோகுணத்திலும் तामसा: च ये தாமஸா: ச யே தமோகுணத்திலும் என்ன வஸ்துக்கள் தோன்றியிருக்கின்றனவோ तान् தாந் அவையாவும் मत्त एव மத்த ஏவ என்னிடமிருந்தே தான் தோன்றியவைகள் इति இதி என்று विद्धि வித்3தி4 அறிக तु து ஆனால் न अहं அஹம் நான்
तेषु தேஷு அவைகளில் न ந இல்லை ते मयि தே மயி அவைகள் என்னிடத்து இருக்கின்றன.
சத்வ ரஜஸ் தமோ குணங்களில் உண்டான பொருள்களெல்லாம் என்னிடமிருந்து தோன்றியவைகளே என்று அறிக. ஆயினும் நான் அவைகளைச் சாரவில்லை; அவைகள் என்னைச் சார்ந்திருக்கின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.
விளக்கம்:
=> முக்குணங்களில் தோன்றியவைகள்:
யே ச ஏவ ஸாத்த்விகா: பா4வா: ராஜஸா: தாமஸா: தாந் மத்த ஏவ — சத்வ ரஜஸ் மற்றும் தமஸ் எனும் முக்குணத்தாலாகிய அனைத்தும் என்னிடமிருந்து வந்தவைகள், என்கிறார் பகவான். இதை நான்கு விதமாக விவரிக்கலாம்.
(1) மனமானது சத்வ குணத்திலிருந்தும், பிராணன் மற்றும் கர்மேந்திரியங்கள் ஆகியவை ரஜோ குணத்திலிருந்தும், ஸ்தூல பஞ்ச பூதங்களனைத்தும் தமோ குணத்திலிருந்தும் என இம்முக்குணங்களில் பிறந்த அனைத்தும் என்னிடமிருந்து வந்தவைகள்.
(2) ஸாத்த்விகா: பா4வா:, முழுமையாக சத்வ குணத்தில் பிறந்தவைகள் என்பது பொருள். இயல்பிலேயே சாத்விகமாக இருக்கும் ஆசைகள், உதாரணமாக அறிய விரும்பும் ஆசை போன்றவை சத்வத்தினால் பிறக்கின்றன. அந்தக்கரணமான மனதில் தோன்றும் உன்னதமான மற்றும் தர்மத்திற்குட்பட்டு எதுவும் சத்வ குணத்தை சார்ந்தது. சந்தோஷம், சுகம், சாந்தி போன்ற அனுபவங்கள் கூட சத்வத்தினால் பிறக்கின்றன. ஒருவனின் சரியான மனப்பாங்கு, பக்தி, பிரார்த்தனை போன்றவை அனைத்தும் ஸாத்த்விகா: பா4வா: ஆகும்.
பற்று, வெறுப்பு, கோபம் போன்றவைகள் ராஜஸத்திலிருந்தும் (ராஜஸா:) சோம்பல், உறக்கம், மந்தத்தன்மை போன்றவைகள் தாமஸத்திலிருந்தும் (தாமஸா:) பிறக்கின்றன.
(3) அல்லது யே பா4வா: எனில் அனைத்து ஜீவராசிகள்; மற்றும் ஸாத்த்விகா: என்பது சத்வத்தில் பிறந்தவர்களான, சத்வ குணத்தை பிரதானமாகக் கொண்ட தேவர்கள் மற்றும் தேவதைகளைக் குறிக்கும். ராஜஸா: என்பது ராஜஸத்தை பிரதானமாகக் கொண்ட ராக்ஷசர்களையும், தாமஸா: என்பது தாமஸத்தை பிரதானமாகக் கொண்டு பிறந்த விலங்கினங்களைக் குறிக்கலாம். மேலும் மனித இனம் இந்த முக்குணங்களையும் சேர்த்து கொண்டதாக இருக்கிறது. இந்த நியதி பொதுவாக அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
(4) அல்லது ‘யே பா4வா:’ என்பதை சாத்விக, அல்லது ராஜஸ அல்லது தாமஸ குணங்களைப் பிரதானமாகக் கொண்டவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
எவ்விதமாக எடுத்துக் கொண்டபோதிலும் இத்தகைய மக்களும் இந்த பல்வேறு உயிரினங்கள் அனைத்தும் தங்களது சொந்த கர்மத்தினால்(கர்மவினை) பிறந்தவை. அப்படியிருக்க, அவர்கள் அனைவரும் என்னிடமிருந்து பிறந்தவர்கள், ஏனென்றால் அந்த கர்மாவும் நான், கர்மவினைக்கான நியதியும் நானே. எல்லாவற்றிற்கும் காரணம் நானே; எனவே, என்னை விட்டு எதுவும் தனியாக இல்லை, என்கிறார் கிருஷ்ணபகவான்.
=> சார்புத் தன்மை:
சத்வ ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய முக்குணத்தாலாகிய உலகெல்லாம் என்னிடமிருந்து வந்தவைகள் என்றாலும் நான் அவைகளிடத்தில் இல்லை, ந து அஹம் தேஷு; அவைகள் என்னிடத்தில் இருக்கின்றது — தே மயி, என்கிறார் பகவான். உதாரணமாக களிமண் மற்றும் பானையை எடுத்துக் கொள்வோம். பானைகள் அனைத்தும் என்னிடத்திலிருக்கிறது எனக் களிமண் கூறுகிறது. இதன் பொருள், ‘பானைகள் களிமண்ணாகிய என்னைச் சார்ந்து, என் இருத்தலைச் சார்ந்து உள்ளன. ஆனால் களிமண்ணாகிய நான், என் இருப்புக்கு பானையைச் சார்ந்தில்லை; அதாவது நான் களிமண்ணாக இருக்க, பானையைச் சார்ந்திருக்கத் தேவையில்லை’. அதுபோல, இவ்வுலகம் என்னிடமிருந்து வந்தது. அனைத்தும், சாத்விக ராஜஸ தாமஸ என அனைத்தும் முழுமையாக என்னைச் சார்ந்து, என் நியதிகளைச் சார்ந்துள்ளன. நான் அவைகளைச் சாரவில்லை, என்கிறார் பகவான். அதாவது இவ்வுலகிற்கும் எனக்கும் சமமான ஸத்தா(யதார்த்த நிலை) இல்லை. நான் மேலான ஸத்யம்(பாரமார்த்திகம்); இவ்வுலகம் கீழான ஸத்யம்(மித்யா).
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தொங்கும் விளக்கின் முப்பட்டைக் கண்ணாடிகளை இரவும் பகலும் ஒரு சாது நோக்கிப் புன்முறுவல் பூப்பது வழக்கம். காரணமென்னவெனில், அந்த ஸ்படிக மூலமாய் சிவப்பு, மஞ்சள், நீலம் முதலிய பல வர்ணங்களை அவர் காண்பார். இவ்வித வர்ணங்கள் உண்மையானவையல்ல என்பதை அவர் தெரிந்துகொண்டதும் உலகமும் அம்மாதிரியே உண்மையல்லவென்று அறிந்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------