||7.9|| ஈஷ்வர மஹிமையின் தொடர்ச்சி:
पुण्यो गन्ध: पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ ।
जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु ।। ९ ।।
புண்யோ க3ந்த4: ப்ருதி2வ்யாம் ச தேஜச்1சாஸ்மி விபா4வஸௌ ।
ஜீவநம் ஸர்வபூ4தேஷு தபச்1சாஸ்மி தபஸ்விஷு ।। 9 ।।
पृथिव्यां च ப்ருதி2வ்யாம் ச மேலும் மண்ணில் पुण्य: गन्ध: புண்ய: க3ந்த4: நறுமணமாகவும்
विभावसौ च விபா4வஸௌ ச தீயில் तेजस् தேஜஸ் சுடராகவும் अस्मि அஸ்மி இருக்கிறேன்
सर्वभूतेषु ஸர்வபூ4தேஷு எல்லா உயிர்களிலும் जीवनं ஜீவநம் உயிர்ப்பாகவும் च ச மேலும்
तपस्विषु தபஸ்விஷு தபஸ்விகளுக்குள் तपस् தபஸ் தபஸாக अस्मि அஸ்மி இருக்கிறேன்.
மேலும் மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுக்குள் தபஸாக இருக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான்.
விளக்கம்:
ஒவ்வொரு பொருளின் சாரமாக நானே இருக்கின்றேன் என்று தனது ஈஷ்வர மஹிமையை இங்கும் தொடர்கிறார்.
=> வாசனை:
பூமியிலிருக்கும் நறுமணமாக நானே இருக்கின்றேன் — புண்ய: க3ந்த4: ப்ருதி2வ்யாம், என்கிறார். பூமியின் விசேஷமான குணமாக, தன்மாத்திரையாக வாசனை விளங்குவதால் அனைத்து வாசனையும் பிருத்வியிலிருந்து வருகிறது. கிரமப்படி, நீருடன் வாசனை எனும் குணம் சேர்க்கப்பட்டதும் பூமி வந்தது. இங்கு கிருஷ்ணர் இனிமையான நறுமணத்தைக் குறிப்பாகக் கூறுகிறார்; ஏனெனில் தெய்வத்தின் பெருமையை நறுமணம் ஞாபகமூட்டுவதைப்போல துர்நாற்றம் ஊட்டாது. உதாரணமாக ஒரு பூவின் இனிமையான நறுமணம் மக்களை ஈர்ப்பதும், படைத்தவனின் பெருமையை நினைவூட்டுவதுமாக உள்ளது. சாதகன் ஒருவனுக்குச் சாம்பிராணியிருந்து வரும் நறுமணத்தை போல வேறெந்த கந்தமும் தெய்வ ஞாபகத்தை ஊட்டாது. இனிமையான நறுமணம் பல்வேறு விஷயங்களில் வெளிப்பட்டாலும், பிருத்வியே அதற்கு ஆதாரமாக உள்ளது. எனவே, பிருத்வியில் நான் இனிமையான வாசனை வடிவில் இருக்கிறேன், என்கிறார்.
=> நெருப்பு:
தீயில் நான் சுடராக இருக்கின்றேன் — விபா4வஸௌ தேஜஸ் அஸ்மி. ‘தேஜஸ்’ என்பது உஷ்ணத்தையும் குறிக்கிறது. ஆகவே நெருப்பில் உள்ள வெப்பமும் பிரகாசமும் நானே.
=> உயிர்ப்பு:
எல்லா உயிர்களிலும் நான் உயிர்ப்பாக இருக்கின்றேன் — ஜீவநம் ஸர்வபூ4தேஷு. ‘ஜீவநம்’ என்பதை வாழ்க்கையை சாத்தியமாக்குவதாக எடுத்துக் கொண்டால், எல்லா உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருப்பது உணவு(அந்நம்). அந்த அன்னம் நானாக இருக்கின்றேன். அல்லது ஜீவனத்தை எல்லா உயிர்களிலும் இருக்கும் உயிர்ப்பாக, பிராண சக்தியாக எடுத்துக் கொள்ளலாம்; அந்த ஜீவனம் நானே, என்கிறார்.
=> தவம்:
தபஸ்விகளுக்குள் நான் தபஸாக இருக்கின்றேன் — தபஸ்விஷு தபஸ் அஸ்மி, என்கிறார். இரும்பை உருக்கி எஃகு ஆக்குவதைப் போல, தெய்வீக உணர்ச்சியைக் கொண்டு வாழ்வை உருக்கி மேலான வாழ்வாக மாற்றுமிடத்து அது தபஸ் எனப்படுகிறது. இத்தகைய உயர்ந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் தபஸ்விகளின் ஒழுக்கநெறி, பிரார்த்தனை மற்றும் தியானம் போன்ற தவமாக நானே இருக்கின்றேன். அவர்களை தபஸ்விகளாக மாற்றும் அந்த குணம் என்னுடையது. அதாவது தவத்தின் அடிப்படையில் அவர்களின் சாதனைகள் ஈஷ்வரனிடமிருந்து பிரிக்கப்படாதது. அவர்களுக்குள்ள அனைத்து சக்திகளும் - மனதைக் குவிக்கும் திறன், ஒருமுகப்படுத்தும் சக்தி, மனத்தூய்மை என அனைத்தும் தவம் என்று அழைக்கப்படும். உண்மையில் ஒவ்வொரு தபஸ்வியிலிருந்து வெளிப்படும் இத்தகைய சக்திகள் அனைத்தும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் ஏற்கனவே இருப்பதாக உள்ளது. அதனை உரசி அதனுடைய ஆற்றலை வெளித்தோற்றத்திற்கு கொண்டு வருவதே அவர்களால் செய்யப்படுகின்றது; ஏனெனில் முழுவதுமாக இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. ஈஷ்வரனின் வடிவில் உள்ள ஆற்றலையே தவசிகள் தட்டி எழுப்புகிறார்கள். எனவே நாம் விரதமோ அல்லது தியானமோ செய்யும் சக்தி பகவானிடமிருந்தே கிடைக்கிறது - ‘நான் தியானம் செய்யவில்லை; பகவானே இவ்வுடலிருந்து தவம் செய்கிறார்’ என்பதே உண்மை. சங்கரர் பாஷ்யத்தில், ‘நான் எனும் தவத்தில் எல்லா தவசிகளும் பின்னப்பட்டுள்ளனர்’ என்பதாக இதற்கு விளக்கமளிக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
||7.10|| உயிர்களின் சிறப்புகள் ஈஷ்வரனிடமிருந்து வந்தவை:
बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् ।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् ।। १० ।।
பீ3ஜம் மாம் ஸர்வபூ4தாநாம் வித்3தி4 பார்த2 ஸநாதநம் ।
பு3த்3தி4ர்பு3த்3தி4மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ।। 10 ।।
पार्थ பார்த2 பார்த்தா मां மாம் என்னை सर्वभूतानां ஸர்வபூ4தாநாம் எல்லா உயிர்களினுடைய
सनातनम् बीजम् ஸநாதநம் பீ3ஜம் என்றுமுள்ள விதையாக(மூலகாரணமாக) विद्धि வித்3தி4 அறிக बुद्धिमताम् பு3த்3தி4மதாம் அறிவாளர்களுடைய बुद्धि: பு3த்3தி4: அறிவாக
तेजस्विनाम् தேஜஸ்விநாம் தேஜஸ்விகளுடைய तेजस् தேஜஸ் தேஜஸாக
अहम् अस्मि அஹம் அஸ்மி நான் இருக்கிறேன்.
பார்த்தா, எல்லா உயிர்களினுடைய என்றுமுள்ள விதையாக (மூலகாரணமாக) என்னை அறிக. அறிவாளர்களுடைய அறிவாகவும், தேஜஸ்விகளுடைய தேஜஸாகவும் நான் இருக்கிறேன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.
விளக்கம்:
=> விதை:
பரமேஷ்வரனான என்னை அனைத்துயிர்களினுடைய விதையாக அறிக — ஸர்வபூ4தாநாம் பீ3ஜம் மாம் வித்3தி4. என்னுடைய இந்த பிரக்ருதிகளே (பரா மற்றும் அபரா) எல்லாவற்றுக்கும் காரணம்(ஏதத்3 யோநீநி ஸர்வாணி பூ4தாநி) என்று பகவான் ஏற்கனவே 7.6 - ல் கூறியிருந்தார். அங்கு பயன்படுத்திய ‘யோனி’ என்ற சொல்லின் அர்த்தத்திலிருந்து, இங்கு பிரயோகிக்கும் ‘பீஜம்’ எனும் சொல்லை வேறுபட்டதாக எடுத்துக் கொள்ளும்போது, எந்தவொரு உயிரினத்தின் வித்தாக இருப்பதும் பீஜம். ஒவ்வொரு மரத்தின் குணத்திற்கும் அதனுடைய விதையே சாராம்சமாகும். அதேபோல ஒவ்வொரு மிருகமும், ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட விதையின் காரணமாகவே அவனாக ஆகின்றான்; அந்த உயிரியல் ஆதாரம் நானே, என்கிறார். மேலும் அதற்கு காரணமான நியதியாகவும் ஈஷ்வரனே உள்ளார். ஒரு விதையை விதைத்தால், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முளைக்கும். அந்த விதை முளைப்பதற்கு காரணமான உயிரியல் விதி நானே.
‘ஸநாதநம்’ எனில் என்றுமுள்ளது என்பது பொருள். இந்த சொல்லை இரு வகையாக உபயோகிக்கலாம். இது ‘மாம்’ என்ற சொல்லுடன் சேர்க்கும்போது, ஸநாதநம் மாம், நித்தியமான நானே எல்லா உயிர்களுக்கும் விதை, என்ற பொருளைக் கொடுக்கிறது. அல்லது பீஜம் என்ற சொல்லிற்கு இதை அடைமொழியாக ஆக்கும்போது, ஸநாதநம் பீ3ஜம், என்றுமுள்ள விதையாக நான் இருக்கிறேன் என்பதாகிறது. அதாவது அழியாத மூலக் காரணியாக நானே உள்ளேன் என்பது பொருள்.
=> புத்தி:
அறிவாளர்களுடைய அறிவாக நானே இருக்கிறேன் — பு3த்3தி4மதாம் பு3த்3தி4:. ஒவ்வொருவரினுடைய புத்தியிலுள்ள அறிவாக, திறனாக இருக்கிறேன்; இது அனைத்து அஹங்காரத்தையும் நீக்குகிறது. எல்லா அறிவையும் இரண்டாகப் பிரிக்கலாம்:
(1) தர்மாதர்ம ஞானம் - எது சரி, எது தவறு என்கிற அறிவு.
(2) ஸத்ய மித்யா ஞானம் - எது உண்மை, எது பொய் எனும் அறிவு.
மேற்கூரிய இந்த பிரித்தறியும் அறிவுடையவர்கள் பு3த்3தி4மத் எனப்படுகிறார்கள். இவர்களின் புத்தியிலுள்ள பகுத்தறியும் திறனாக, தெளிவான அறிவாக நானே இருக்கிறேன். அறிவானது தெளிந்த நிலைக்கு வருமளவு அது ஆத்ம சொரூபத்தை கிரஹிக்க வல்லதாகிறது. ஆத்ம சொரூபத்தை அறிவதும் ஆத்ம சொரூபமாவதும் ஒன்றே. ஆகவே புத்திமான்களிடத்திலுள்ள போற்றுதற்குரிய புத்தியாக நானே இருக்கிறேன்.
=> தேஜஸ்:
தேஜஸ்விகளுடைய தேஜஸ் நான் — தேஜஸ்விநாம் தேஜஸ் அஹம். தேகத்திலிருந்து கிளம்பும் ஒளி, வீரியம், பேராற்றல், கூர்மை, மனோபலம், அறிவின் பிரகாசம் போன்றவைகள் தேஜஸ் எனப்படும். இறைவனுடைய பேராற்றலே மக்களிடத்தில் தேஜஸ் ஆகத் துலங்குகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------