||6.10|| தியானத்திற்கு ஏற்ற சூழ்நிலை:
योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थित: ।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रह: ।। १० ।।
யோகீ3 யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி2த: ।
ஏகாகீ யதசித்தாத்மா நிராசீ2ரபரிக்3ரஹ: ।। 10 ।।
योगी யோகீ3 யோகியானவன் रहसि स्थित: ரஹஸி ஸ்தி2த: தனிமையான இடத்தில்
एकाकी ஏகாகீ தனிமையாக यत चित्त आत्मा யத சித்த ஆத்மா அந்தக் கரணத்தையும் தேகத்தையும் அடக்கியவனாய் निराशी: நிராசீ2: ஆசையற்றவனாய் अपरिग्रह: அபரிக்3ரஹ: உடைமைகள் அற்றவனாய் सततम् ஸததம் எப்போதும் आत्मानं ஆத்மாநம் மனதை युञ्जीत யுஞ்ஜீத ஈடுபடுத்த வேண்டும்.
யோகி யாருக்கும் தென்படாத இடத்தில் தனியனாய், உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி, ஆசையகற்றி, உடைமைகள் அற்றவனாய் யாண்டும் மனதை ஒடுக்க வேண்டும்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தில் விளக்கப்பட்ட சம திருஷ்டியை ஒருவன் அடைய எத்தகைய யோக சாதனம் செய்யவேண்டும் என்பதற்கான விடை இங்கு வருகிறது. ஒருவனின் ஞானத்திற்கு வழிவகுக்குக்கூடிய மனதின் நிலைத்தன்மைக்கும் தெளிவுக்கும் தியானம் ஒரு வழிமுறையாகும். ஆனால் தியான வாழ்க்கை வாழ ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் தேவைப்படுகிறது. இனிவரும் பகுதிகளில் இந்த சாதனங்கள் படிப்படியாக விளக்கப்படும். அவ்வகையில் சுலோகம் 10 முதல் 14 வரை இடம், காலம், அமரும் இருக்கை, ஆசனம் போன்ற தியானத்திற்கான அந்தரங்க சாதனம் பேசப்படுகிறது.
இங்கு யோகீ எனும் சொல் தியானம் செய்பவனைக் குறிக்கிறது, த்யாதா(ध्याता). அவனுக்கு ‘ஆத்மாநம் யுஞ்ஜீத’, மனதை ஈடுபடுத்த வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படுகிறது. அதாவது தனது மனதை உள்வாங்கி ஒருமுகப்படுத்தி தியானப் பொருளுக்கு அதை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
=> எப்போதும்:
‘ஸததம்’ எனில் எப்பொழுதும் என்பது பொருள். இது கீழ்கண்ட மூன்று வரையறைகளைக் குறிக்கிறது:
(i) ஆதர[अादर] - கவனமாக; மதிப்புடன்
(ii) நைரந்தர்யம்[नैरन्तर्यम्] - தொடர்ந்து
(iii) தீர்க்க காலம் - அதிக காலம்
தியானிப்பவன் தியான பொருளை அதிக காலம், தொடர்ந்து அதற்கான மதிப்புடனும் கவனத்துடனும் தியானிக்க வேண்டும். சிலர் திடீரென ஒரு நாள் அமர்ந்து தியானிப்பார்கள். பின்னர் ஒரு வாரமோ அல்லது மாதமோ கழிந்தபின் மீண்டுமொரு நாள் முயற்சிப்பார்கள். இது எவ்வித பலனையும் அளிக்காது. தியானப் பயிற்சியில் தொடர்ச்சி என்பது அவசியமான ஒன்று. மேலும் சிலர் பத்து நிமிடம் கண்களை மூடி அமர்ந்துவிட்டு மனம் ஈடுபடவில்லையென கடிந்து கொள்வார்கள். மனம் குவிந்து பழக ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கவேண்டும். அடுத்ததாக, தீர்க்க காலம் என்பது கால அளவை, அதாவது எவ்வளவு நிமிடங்கள் அமர வேண்டும் என்பதைக் குறிக்கும்; மேலும் கால வரையறையை, அதாவது எவ்வளவு வருடங்கள் செய்யவேண்டுமென்பதையும் குறிக்கும். தியானம் என்பது கடைசி காலம் வரை அதாவது இறப்பு வரை செய்யப்பட வேண்டிய ஒன்று.
=> தியானத்திற்கு துணை தேவையில்லை:
இந்த தியானம் எங்கு நடைபெற வேண்டும்? ஒரு ரகசிய இடத்தில், ‘ரஹஸி’, தனிமையான அமைதியான இடம் என்பது பொருள். சங்கரரின் காலத்தில் அது ஒரு குன்று, கிரி அல்லது ஒரு குகை, குஹா என்ற பொருளில் அவர் தனது பாஷ்யத்தில் ‘ரஹஸி ஸ்தி2த:’ என்பதற்கு ‘கிரி-குஹாதெள ஸ்தி2த:’ என கூறி, மலையிலோ அல்லது குகையிலோ தியானம் செய்பவன் என விளக்கமளிக்கிறார்.
இவ்வகையான கட்டளைகள் சில எளிய விதிகளாக கூறப்பட்டுள்ளனவே தவிர கண்டிப்பான ஒன்று அல்ல. எனவே நாம் அதன் உயிர்நாடியை அல்லது உள்ளுறையும் அர்த்தத்தை எடுத்து, அவற்றை இக்காலகட்டத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றார்போல திருத்திக் கொள்ளலாம்.
அடுத்ததாக தியானம் செய்யும் யோகீ ‘ஏகாகி’, தனியானவனாய் இருத்தல் வேண்டும் என்கிறார். சங்கரர் அதை துணையின்றி(அசஹாய) என விளக்குகிறார். தியானத்தில் ஒருவனுக்கு நண்பன் உட்பட எந்தத் துணையும் தேவையில்லை. தியானம் என்பது ஒருவனின் தனிப்பட்ட செயல்; அமைதியாக தனக்குள் மட்டும் செய்யப்பட வேண்டிய செயல். இந்த அத்தியாயத்தின் ஐந்தாவது சுலோகத்தில் ‘தனக்குத் தானே நண்பன்’ எனப் பார்த்ததுபோல, தியானம் செய்பவனுக்கு அவன் மட்டுமே உற்ற நண்பன்.
=> உடல் மற்றும் மனம்:
மேலும் இந்த தியான-யோகியை கிருஷ்ணர், ‘யத சித்த ஆத்மா’ என்று விவரிக்கிறார். பொதுவாக சித்த என்றால் நினைவகம் என்று பொருள்; ஆனால் இங்கே அது அந்த-கரணத்தைக் குறிக்கிறது. அந்த-கரணம் எனும்போது அது சித்தத்தையும் உள்ளடக்கியது. தியானத்திலும் ஒருவனது மனமானது தொடர்ந்து இயங்குவதால் அவனைத் தொந்தரவு செய்யும் முக்கிய காரணியாக அந்த-கரணம் அமைகிறது. உதாரணமாக ஏதேனும் ஒலி வரும்போது, அது கேட்கப்படுவதால் மனமானது அதை மூலதனமாகக் கொண்டு தனது கற்பனை பயணத்தைத் தொடங்கிவிடும். இதனாலேயே புலனுறுப்புக்கள் அதனது செயல்களிலிருந்து முடிந்தவரை திரும்பப் பெறப்படுகிறது; உதாரணமாக கண்களை மூடுதல். இது தியானப் பொருளில் முழு கவனத்தையும் செலுத்த ஏதுவாகிறது. இந்நிலையில்தான் கடந்த கால நினைவுகளை நிறைத்து வைத்துள்ள சித்தம் கவனத்தை சிதறடிக்கும் வேலையைச் செய்கிறது. ஆகவேதான் இங்கு கிருஷ்ணர் சித்தத்தை குறிப்பிடுகிறார்.
‘யத சித்த ஆத்மா’ என்ற கூட்டுச்சொல்லில் சித்த என்பது மனதைக் குறிக்கிறது எனப் பார்த்தோம். இதில் ஆத்மா என்ற சொல் தேஹத்தை குறிக்கிறது. மேலும் ‘யத’ என்பது உடல் மற்றும் மனம் இரண்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதைக் குறிக்கிறது. தியானத்தில் உடலானது முற்றிலும் தளர்த்தப்பட்டு, மனம் உள்வாங்கப்படுகிறது; இது தியானத்தின் ஒரு பகுதியாகும். எனவே ‘யத சித்த ஆத்மா’ என்பது தியானம் செய்பவனுக்கு தேவைப்படும் தகுதி என்றும் அல்லது யோகிக்கு கொடுக்கப்படும் அடைமொழி என்றும் கூறலாம்.
=> ஆசையற்றவன்:
தியானத்தில் அமர்வதற்கு அடுத்த முக்கிய தகுதி ஆசையிலிருந்தும் ஏக்கங்களிலிருந்தும் ஓரளவு விடுபட்டவனாக இருத்தல். உள்ளிருந்து வரும் ஒருவித அழுத்தம் ஏக்கம் எனப்படும். ‘நிராசீ2:’ என்பது யாருக்கு அனைத்து ஏக்கங்களும் போய்விட்டனவோ அவனைக் குறிக்கிறது. மனதில் ஏக்கங்கள் இருப்பின் உள்ளழுத்தத்தின் காரணமாக அவனால் கண்களை மூடி அமைதியாக அமர முடியாது. ஏனெனில் கண்கள் திறந்திருந்தால் குறைந்தபட்சம் பார்க்கப்படும் பொருட்களைப் பற்றிய எண்ணங்களால் தன்னை நிரப்பி, மனமானது அதனுடைய சஞ்சாரத்திற்கு ஒரு திசையைப் பிடித்திருக்கும். ஆனால் கண்கள் மூடப்படும்போது முழு உலகமும் உள்நோக்கி திரும்புவதால் மனதிலுள்ள ஏக்கங்கள் முழு வீச்சில் வெளிப்படும். இந்த ஆசைகள் அமர முடியாதவளவு பதட்டத்தை அதிகரித்து அவனை தொந்தரவு செய்யும்.
அதேசமயம் வைராக்கியத்தை உடைய ‘நிராசீ2:’ ஏக்கத்திலிருந்து விடுபட்டவனாய், ஒப்பீட்டளவில் தன்னிடம் திருப்தி அடைந்தவனாய் நிராசையுடன் உள்ளான். தியான யோகத்தை மேற்கொள்ளும் இவன் கர்ம-யோக வாழ்க்கையை வாழ்பவன் என்பதால், கிருஷ்ணர் இந்த குறிப்பிட்ட தகுதிகளை இங்கே கூறுகிறார்.
=> உடைமைகளிலிருந்து விடுபடுதல்:
உடலை செலுத்தும்பொருட்டு யோகி வைத்திருக்கும் உடை, உணவுப்பொருள் முதலியன பரிக்கிரஹம் அல்லது உடைமைப் பொருள் எனப்படும். அவைகளை அதிகப்படுத்துகின்ற அளவு யோகம் தடைபடும். அப்பொருட்களைக் காப்பாற்றுவதைப் பற்றிய எண்ணம் தியான வேளையில் வரும். அவைகளுக்காக உழைப்பதும் பின்பு அதிகரிக்கும். இங்கு ‘அபரிக்3ரஹ:’ என்பது மிகவும் சுவாரஸ்யமான வார்த்தை. இது பொருட்களைச் சேகரிப்பதில் இருந்து விடுபடுவதை மட்டுமல்ல, சேகரிக்கும் ஏக்கத்திலிருந்தும் விடுபடுவதைக் குறிக்கிறது. இங்ஙனம் அகப்பற்று, புறப்பற்று நீங்கிய மனமே குவிய வல்லதாகிறது.
இவ்விதம் தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டவனாக ஒருவன் மனதை தியானப் பொருளில் ஒருங்கிணைக்கலாம் — ஆத்மாநம் யுஞ்ஜீத, அதாவது தியானம் செய்யலாம் என கிருஷ்ணர் கூறுகிறார். மேற்கூரிய தகுதிகளுடன் கண்களை மூடித் தனிமையில் அமரும் எவனொருவனும் இங்கு பகவான் குறிப்பிடும் ‘ஏகாகி’ ஆகிறான். அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எப்படிப்பட்டவனும் தன்னை தந்தை, தாய், மகன், மகள் என அனைத்து கடமைகள் மற்றும் பாத்திரங்களிலிருந்தும் விடுவித்து கொண்டவனாய் தியானத்தை மேற்கொள்ளும்போது அவன் ஏகாகி, த்யாயீ மற்றும் யோகீ ஆகிறான்.
—---------------------------------------------------------------------------------------------------------------------------
||6.11|| ஆஸனத்திற்கான மேலும் சில நியமங்கள்:
शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मन: ।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम् ।। ११ ।।
சு1சௌ தே3சே1 ப்ரதிஷ்டா2ப்ய ஸ்தி2ரமாஸநமாத்மந: ।
நாத்யுச்ச்2ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுசோ1த்தரம் ।। 11 ।।
शुचौ देशे சு1சௌ தே3சே1 தூய்மையான இடத்தில் स्थिरम् ஸ்தி2ரம் ஸ்திரமானதும்
न अति उच्छ्रितं ந அதி உச்ச்2ரிதம் அதிக உயரமில்லாததும்
न अति नीचं ந அதி நீசம் அதிகம் தாழ்வல்லாததும்
चैल अजिन कुश उत्तरम् சைல அஜிந குச1 உத்தரம் துணி, தோல், தர்ப்பை இவைகளை மேலேயுடையதும் आसनम् ஆஸநம் ஆஸனத்தை आत्मन: ஆத்மந: தனக்காகவென்று
प्रतिष्ठाप्य ப்ரதிஷ்டா2ப்ய அமைத்துக் கொண்டு;
தூய்மையான இடத்தில் அதிக உயரமில்லாததும், மிகத் தாழ்வல்லாததும் மற்றும் துணி, மான் தோல், தர்ப்பை இவைகளையுடையதுமாகிய உறுதியான ஆஸனத்தை தனக்கென அமைத்துக் கொண்டு,
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,
விளக்கம்:
=> எப்படிப்பட்ட இடம்?
இங்கு ‘சு1சௌ தே3சே1’ என்ற சொற்கள், தியானத்திற்கான இடத்தை விவரிக்கிறது, அதாவது இடம் சுத்தமானதாக இருத்தல் வேண்டும்.
* தூய்மையான இடம் = புறத்தூய்மை மற்றும் சம்ஸ்கார தூய்மை(பூஜையறை).
தூய்மையற்ற இடத்தில் வசிப்பவனுக்கு மனதகத்தும் மாசு படிகிறது. மேலான எண்ணங்களை ஊட்டவல்ல சூழ்நிலையே தியானத்திற்கு உகந்த இடமாகும். உதாரணமாக பூஜையறையில் தியானம் செய்யும்போது அது நமக்கு பூஜை, மந்திரம், இறை நாமம் மற்றும் தெய்வ தத்துவம் முதலிய சாத்விக சம்ஸ்காரத்தைத் தூண்டும். அது மனம் இயல்பாக குவிந்து தியானப் பொருளில் ஒடுக்கத்தை அடைய உதவும். ஒருகால் சமையலறையின் ஒரு மூலையில் அமர்ந்து தியானம் செய்வதாக வைத்துக்கொண்டால் அது நமக்கு பசி, உணவு மற்றும் பதார்த்தங்களின் சுவை முதலிய ராஜஸமான, சமையல் சம்பந்தப்பட்ட சம்ஸ்காரத்தை உண்டாக்கும். ஆகவே அமரும் இடமும் மனம் குவிதலுக்கு ஒரு காரணியாக அமைகிறது. பாஷ்யத்தில் சங்கரர் அந்த இடம் அமைதியுடன் கூடியதான தனிமையான இடமாக இருத்தல் வேண்டும், விவிக்த, என்றும் கூறுகிறார்.
=> எப்படிப்பட்ட ஆஸனம்?
ஏகாந்தத்தில் ஒருவன் எத்தகைய இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்? இங்கு கிருஷ்ணர், தியானிப்பவன் தனது சொந்த ஆஸனத்தை இவ்விதம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறும்போது, அதை ஒரு உடைமைப் பொருளாக கொள்ளவேண்டுமென்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. மாறாக, தியானத்திற்கான இருக்கை தியானத்திற்கு உகந்ததாக இருக்க அறிவுறுத்துகிறார்.
உதாரணமாக அமருமிடம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அதாவது அது தள்ளாடக்கூடாது. மரத்தில் கட்டித் தொங்கும் ஊஞ்சல் அல்லது ஊஞ்சலாடும் நாற்காலி உறுதியானதன்று; அது அசையும் தன்மையுடையது. மணற்குவியல், அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டை, குவிக்கப்பட்ட கூழாங்கற்கள் இவைகளாலும் ஸ்திரமான ஆஸனம் அமையாது. ஆகவே இருக்கை ஒரு நாற்காலியாகவோ, பலகையாகவோ அல்லது எதுவாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் அது உறுதியாக, ஸ்திரமாக இருக்க வேண்டும்.
மேலும் அது மிக உயரமானதாக இருக்கக்கூடாது, ந அதி உச்ச்2ரிதம், அல்லது மிகவும் தாழ்வானதாக இருக்கக்கூடாது, ந அதி நீசம். பூமி மட்டத்துக்கு மேல் அதிக உயரத்தில் அமர்ந்தால் அது அச்சத்தை உண்டுபண்ணும்; மயங்கியோ அல்லது தூங்கியோ விழுந்தால் உடற்காயத்தை ஏற்படுத்தும். அதேசமயம் பூமி மட்டத்திலேயோ அல்லது தாழ்வாகவோ இருந்தால் புழு பூச்சிகளினால் அல்லது ஈரப்பதத்தினால் இடைஞ்சல் வரும். ஆக ஆஸனம் ஓரளவு உயர்ந்தாக இருத்தல் நல்லது.
‘ந அதி உச்ச்2ரித’ மற்றும் ‘ந அதி நீச’ இவைகளை வேறு கோணத்திலும் விவரிக்கலாம். சிலர் தியானம் செய்ய, மலை உச்சி போன்ற உயரமான பகுதிகளுக்கு, அதியுச்சிரித, அல்லது தரைக்கு கீழே உள்ள குகைக்கு, அதிநீச, செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் இங்கு இவ்விரு வகையான இடங்களுக்கும் எதிராக அறிவுறுத்துகிறார். சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள கங்கோத்ரியை போன்ற உயரமான இடங்களில் செய்யப்படும் தியானம் மிகவும் வெற்றிகரமானதாகத் தோன்றலாம், ஏனென்றால் தியானம் செய்பவனின் மனதில் எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மனம் சிந்திக்க முடியாமல் போனது இதற்கு ஒரு காரணம். நாம் தியானப் பொருளில் குவிந்த மனதுடன் தியானம் செய்யவேண்டுமே தவிர, செயலற்ற மனத்துடன் அல்ல. குகை போன்ற மிகவும் தாழ்வான இடத்தில் தியானம் செய்வதும் பயம், புழு பூச்சி தொந்தரவு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை முதலிய பிரச்சினைகளுக்குதான் வழிவகுக்கும்.
=> பாரம்பரிய இருக்கைக்கான முக்கியத்துவம்:
இறுதியாக கிருஷ்ணர் இருக்கையின் தன்மையைக் குறிப்பிடுகிறார் — சைல அஜிந குச1 உத்தரம். ‘சைல’ எனில் மிருதுவான துணி; ‘அஜிந’ என்பது பண்டைய காலத்தில் முனிவர்கள் பயன்படுத்திய மான் தோல் அல்லது புலித்தோல்; மற்றும் ‘குச1’ என்பது தர்ப்பையைக் குறிக்கிறது.
இந்த மூன்று பொருட்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கும் வரிசைக் கிரமத்தை ‘உத்தர’ என்ற சொல் குறிக்கிறது. மூன்று பொருட்கள் எனும்போது, அதை பல வழிகளில் அடுக்க முடியும் என்பதால், எதன்மீது எது இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதை மாற்றும்போது, உதாரணமாக தர்ப்பாசனத்தை(தர்ப்பையினால் செய்யப்பட்ட பாய்) மேலே விரிக்கும்போது அது தியானத்தின்போது கண்டிப்பாக ஒருவனுக்கு பிரச்சினையைக் கொடுக்கும். சங்கரரும் இந்த வரிசைக்கிரமத்தை, ‘விபரீத’ எனும் சொல்லின் மூலம், தலைகீழ் வரிசையில் இருக்கவேண்டும் என உறுதிப்படுத்திச் சொல்கிறார். அதன்படி கீழே பாயுடனும், பின்னர் அஜிந, அதன் மேல் மென்மையான துணியுடன் ஆஸனம் இருக்கவேண்டும்.
ஈரமான நிலத்தில் தியானம் செய்யக்கூடாது என்பது இதன் மையக்கருத்து. அந்த நாட்களில், அனைத்து குடியிருப்புகளிலும் மண் தரைகளும் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட இருக்கைகளும் இருந்தன. அதில் அமர்ந்து தியானம் செய்யும்போது, கீல்வாதம், மூட்டு வலி மற்றும் கால் வீக்கம் முதலிய உபாதைகள் வரும். எனவே, ஈரப்பதத்தைத் தவிர்க்க குசா பரிந்துரைக்கப்பட்டது, அதன் மேல் வெதுவெதுப்பிற்காக மான் தோல் போன்ற ஒரு உரோம தோலை வைத்து, இறுதியாக தோலினால் உண்டாகும் எரிச்சலைத் தவிர்க்க, அதன் மேல் ஒரு மென்மையான துணி போர்த்தப்படுகிறது.
இதிலிருந்து தியானத்திற்கான ஆஸனத்திற்கு கண்டிப்பாக மான் தோல் பயன்படுத்த வேண்டும் என்பது பொருளல்ல. இது பண்டைய காலத்தில் இருந்த வழக்கம அவ்வளவே. மேலும் அக்கால கட்டத்தில் ஒரு மானின் தோல் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. காரணம், மான் மிகவும் சுத்தமானதாகக் கருதப்படும் விலங்குகளில் ஒன்றாகும். ஏனெனில் அது வேறு எந்த நாக்கும் தொட்ட எதையும் தொடாது; அதாவது எதனுடைய எச்சில்பட்ட உணவையும் உண்ணாது.
மேலும் அக்காலத்தில் ஆஸனத்திற்குப் பயன்படுத்தப்படும் தோலைப் பற்றிய விதி ஒன்று இருந்தது. அது மற்றவர்கள் கொடுத்ததாகவோ அல்லது கொல்லப்பட்ட மானிடமிருந்து எடுக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. ஏனெனில் சில வேட்டைக்காரர்கள் மானைக் கொன்று தோலை ஒரு சாதுவிடம் கொடுக்க முயற்சிப்பார்கள். எனவே, சாது இறந்த மானை கண்டுபிடித்து, அது இயற்கையாக இறந்ததை உறுதி செய்ய வேண்டியிருந்தது.
=> காலம்:
பொதுவாக காலத்தை பொறுத்தவரையில் கீழ்கண்ட மூன்று சந்தேகங்கள் ஒருவனுக்கு வர வாய்ப்புள்ளது:
(i) எந்த காலம்? அதிகாலைப் பொழுது அல்லது விழித்த பின் அமையும் காலம், உகந்த காலமாகப் பார்க்கப்படுகிறது. இவை அமையாத பட்சத்தில் அவரவர்களுக்கு உகந்த காலத்தில் செய்யலாம்.
(ii) எவ்வளவு காலம்? ஆரம்ப காலத்தில் ஒருவனுக்கு ஓர் இடத்தில் அமர்ந்து பழகுவதே சிரமமாக இருக்கும். ஆகவே ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் அதிக காலம் நீட்டிக்க வேண்டாம்; குறைந்தது 20 - 30 நிமிடங்கள் செய்யலாம். அதன் பின்னர் சிறிது சிறிதாக நேரத்தை அவரவர்களின் அகம் மற்றும் புறச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அதிகரித்துச் செல்லலாம்.
(iii) எவ்வளவு முறை? இருமுறை வரை செய்யலாம் அல்லது அவரவர்களின் மனநிலைக்கு ஏற்ப.
—---------------------------------------------------------------------------------------------------------------------------