புதன், 17 ஆகஸ்ட், 2022

தியான யோகம் 6.8 - 6.9

||6.8|| யோகியின் சமநிலை மேலும் விளக்கப்படுகிறது:

ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रिय:

युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चन: ।। ।।

ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ2 விஜிதேந்த்3ரிய:  

யுக்த இத்யுச்யதே யோகீ3 ஸமலோஷ்டாச்1மகாஞ்சந: ।। 8 ।।


ज्ञान विज्ञान तृप्त त्मा   ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்த ஆத்மா   ஞானத்தினாலும் விக்ஞானத்தினாலும் மன நிறைவையடைந்தவன்   कूटस्थ:  கூடஸ்த2:  அசைவற்றவன்   विजित इन्द्रिय:  விஜித இந்த்3ரிய:  புலன்களை வென்றவன்    सम लोष्ट अश्म काञ्चन:  ஸம லோஷ்ட அச்1 காஞ்சந  மண், கல், பொன் இவைகளைச் சமமாகப் பார்ப்பவன்  योगी  யோகீ3  யோகியானவன்   युक्त इति  யுக்த இதி  ஞானத்தில் நிலைபெற்றவன் என்று   उच्यते  உச்யதே  சொல்லப்படுகிறான்.


ஞான விக்ஞானத்தில் திருப்தியடைந்த, மனம் சலியாத, புலன்களை வென்ற, மண் கல் பொன்னைச் சமனாகக் கருதுகின்ற யோகியானவன் ஞானத்தில் நிலைபெற்றவன் எனப்படுகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.


விளக்கம்:

=> ஞானம் மற்றும் விக்ஞானம்:

கீதை முழுவதும்யோகிஎன்ற வார்த்தையை கிருஷ்ணர் மூன்று விதங்களில் பயன்படுத்துகிறார். அவர் கர்மயோகியை ஒரு யோகியாகப் பேசுகிறார், மேலும் சந்யாச மற்றும் தியான வாழ்க்கையைப் பின்பற்றி தியானத்தில் ஈடுபடுபவரை யோகியாகக் குறிப்பிடுகிறார். ஞானியையும் அவர் ஒரு யோகி என்று அழைக்கிறார். இந்த சுலோகத்தில்யோகிஎனும் சொல் ஒரு ஞானியை, ஆத்மஞானத்தை உடையவனைக் குறிக்கிறது

இங்கு ஞானியானவன், ‘ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்த ஆத்மாஎன அழைக்கப்படுகிறான். இதில் ஞானம் என்பது சாஸ்திர ஞானத்தைக் குறிக்கிறது. சங்கரர் இதனை பதார்த்த ஞானம், சாஸ்திரத்திலுள்ள சொற்களின் அர்த்தத்தால் தெரிவிக்கப்படும் அறிவு என பாஷ்யத்தில் கூறுகிறார். [ज्ञानम् - शास्रोक्तपदार्थानां परिज्ञानम्।]  

சாஸ்திர ஆராய்ச்சியினால் வரும் அறிவு ஞானம்; அது சுவானுபவமாக முதிருமிடத்து அதற்கு விக்ஞானம் என்று பெயர். சாஸ்திர அர்த்த ஞானத்தை தனது அறிவாக தெளிவாக உணர்ந்து தன்மயமாக்குதல், நிஷ்டை அடைதல் விக்ஞானம் எனப்படுகிறது. [विज्ञानं तु शास्रत: ज्ञातानां तथैव स्वानुभवकरणम्।

ஒரு மனிதனின் அறிவுக்கும் தன்மயமாதலுக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட தூரம் இருக்கிறது. உதாரணமாக, ‘ஆத்மா ப்ரம்மமாக இருக்கிறதுஎனும் சாஸ்திர உபதேசத்தை கேட்கும்போது அந்த வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட அறிவைக் கொடுக்கின்றன. அது ஒரு வகையான அறிவு. ஆனால் ஒருவன் இன்னும் அதை உணர வேண்டும்; உணர்ந்து அந்த உண்மை தன்மயமாக வேண்டும். ‘நான் ப்ரம்மமாக இருக்கிறேன்எனும் சுவானுபவ அறிவு விக்ஞானம்.


சாஸ்திரத்தின் மூலம் பெறப்பட்ட ஞானத்தை விக்ஞானமாக மாற்ற, மனனம் மற்றும் நிதித்யாச தியானம் துணைபுரிகின்றன. ஒருவன் முதிர்ச்சியடைந்த நல்ல மனதுடன் கூடிய அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் இந்த மாற்றம் தேவையில்லை. விவேகமும் வைராக்கியமும் முழுமையாகக் கொண்ட இந்த அதிகாரி அறிவைப் பெற்ற உடனேயே உண்மையை அறிந்து கொள்கிறான். மனமுதிர்ச்சியின் பலனாக அவனது புரிதலைத் தடுக்கும் தடைகள் என எதுவுமில்லை. எழக்கூடிய சந்தேகங்களும் சிரவண-மனனத்தில் கவனிக்கப்படுவதால் அனைத்து செயல்முறையும் அங்கேயே முடிந்துவிடுகிறது; அறிவு பெறப்படுகிறது.


=> ஞானத்தை விக்ஞானமாக மாற்ற வேண்டியதன் அவசியம்:

ஆனால் பொதுவாக, ஒரு நபர் முழுமையான அதிகாரியாக இருப்பதில்லை. முக்தியின் மீதான ஆசை(முமுக்ஷுத்வம்) மற்றும் ஞானத்தின் மீதான ஆர்வம்(ஜிக்ஞாசா) ஆகியவை இருந்தபோதிலும், பூரண அதிகாரித்வம் இல்லாத காரணத்தினால் அவன் மனனம் மற்றும் நிதித்யாசனத்தின் மூலம் ஞானத்தை விக்ஞானமாக மாற்ற வேண்டும். இந்த செயல்முறையில் ஆத்மாவைப் பற்றிய ஒருவனின் ஞானம், தன்னை பற்றிய உடனடி அறிவாக, விக்ஞானமாக(அபரோக்ஷ ஞானம்) ஆகிறது. இந்த மாற்றம் ஸ்வாநுபவ-கரணம் அல்லது அபரோக்ஷீ-கரணம் என்றழைக்கப்படுகிறது. ஸ்வ அநுபவ கரணம் - தனது சொந்த ஞானமாக, தன்மயமானதாக மாறிய அறிவு. ‘நான் பிரம்மன்என்ற உண்மையை நேரடியாக அறியும் உறுதியான அறிவு, விக்ஞானம்.

ஞானம் மற்றும் விக்ஞானத்தின் மூலம் ஒருவன் முழுமையானவனாக அல்லது தன்னில் திருப்தியை அடைந்த திருப்தனாக ஆகிறான். இதை சங்கரர், ‘சஞ்ஜாத-அலம்-ப்ரத்யயஎன்ற சமஸ்கிருத கூட்டுச் சொல்லினால் தெளிவாக விளக்குகிறார். அலம் எனில்போதுமானஅல்லதுபோதும்’.  சுயமே ஸத்-சித்-ஆனந்த-ஆத்மா என்ற அறிவின் காரணமாக பிறந்த, ‘இது போதும் அல்லது எனக்கு தேவையென எதுவும் இல்லைஎன்ற புரிதல், ‘சஞ்ஜாத-அலம்-ப்ரத்யயஎனப்படும். இந்நிலையை அடைந்தவன் எப்போதும் எது வந்தபோதிலும் மகிழ்ச்சியுடனும் முழு திருப்தியுடனும் இருப்பான். இப்படிப்பட்டவனை பகவான் இங்குத்ருப்தஎன்றழைக்கிறார்.

இந்தஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்த ஆத்மாகூட்டுச் சொல்லிலுள்ளஆத்மாஎன்ற சொல்லுக்கு மனம், அதாவது அந்த-கரணம் என்பது பொருள். ஆகவே ஞானம் மற்றும் விக்ஞானத்தின் விளைவாக யாருடைய மனமானதுபோதும்_அலம்என்ற நிலையை அடைகிறதோ அந்த திருப்தனை இங்கு பகவான்கூடஸ்தன்எனவும் வர்ணிக்கிறார்.


=> அசைவற்றவன்:

மற்றவைகளெல்லாம் மாறும்போது எது ஆகாசம் போன்று மாறாதிருக்கிறதோ அது கூடஸ்தன் எனப்படுகிறது. அதாவது துக்கம், கோபம், அவமானம் போன்ற பல்வேறு மனநிலைகளிலும் நிஷ்டையிலிருந்து அசைக்க முடியாதவனாய் உறுதியுடன் நிலைபெற்றவன். இந்திரியார்த்தங்களின் போக்கு வரவுகளில் தட்டுப்படாது தன்மயமாயிருக்கும் மனபரிபாகம் அடையப்பெற்றவன் கூடஸ்தன் எனப்படுகிறான்.

கொல்லர்கள் திடமான பட்டறைக்கல் மீது சூடான சிவப்பு இரும்பை வைத்து வெவ்வேறு வடிவங்களில் மாற்ற அதை சுத்தியியலால் பலமுறை அடிப்பார்கள். இதனால் சுடு இரும்பானது உருவத்தில் மாற்றமடைந்தபோதிலும் ஆதாரமாக வீற்றிருந்த பட்டறைக்கல் எவ்வித மாற்றத்தையும் அடையாது. அதுபோல அனைத்து சாத்தியமான மாற்றங்களிலும் தான் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல், அசையாதிருப்பவன் கூடஸ்தன்.

இந்த சுலோகத்திற்கான பாஷ்ய விளக்கத்தில் சங்கரர் கூடஸ்தனைஅப்ரகம்ப்ய’, அகத்திலோ அல்லது புறத்திலோ எந்த சூழ்நிலையிலும் அசையாமல் உறுதியாயிருப்பவன் என வரையறுக்கிறார். சாதனைகளின் மூலம் தேவையான ஒழுங்குமுறைகளை அடைந்து, ஆத்மா பூரணமானது என்ற சுயத்தைப் பற்றிய அறிவை இவன் முழுமையாகப் பெற்றுள்ளான். இந்த அறிவின் இல்லாமையே அனைத்து சிக்கல்களுக்கும் வித்தாக உள்ளது. இந்த அறிவைப் பெற்ற பிறகு, மனிதனைத் தொந்தரவு செய்ய உள்ளேயும் வெளியேயும் எதுவுமில்லை ஆதலால் அவன் அசைக்கப்படாதவன் மற்றும் வலிமையானவன், அப்ரகம்ப்ய.


=> தகுதிகள் சுவபாவமாக மாறுதல்:

முதற்காரணமாகிய மனது ஒடுங்கியிருக்குமிடத்து புலன்களுக்கு வேகம் வருவதில்லை. செய்ய விரும்புவதை மட்டும் செய்பவனாய், செய்ய விரும்பாததை செய்யாதவனாய், மனதினுடைய கற்பனைகளின் பின்செல்லாமலும் அதனால் பாதிக்கப்படாமலும் அவைகளை வென்றவனாய், இங்கு விவரிக்கப்பட்டுள்ளவன்விஜித இந்த்3ரிய:’, புலன்களை வென்றவனாக இருக்கிறான்.

இதனால் அவன் அமைதியும் ஞானமும் எப்போதும் கூடியவனாக, ‘யுக்த’, நிலைத்தவன் என்றும் அழைக்கப்படுகிறான். முன்பு ஒரு முமுக்ஷுவாக இருந்தபோது எவையெல்லாம் அவனுக்கு சாதனையாக இருந்ததோ, அவையனைத்தும் இப்போது ஒரு ஞானியின் தன்னியல்பான நற்பண்புகளாக ஆகின்றன. இத்தகையவனையே கிருஷ்ணர் இங்கு யோகீ என்று அழைக்கிறார்.


=> மோஹ நாசம்:

சிறுவர்களால் பெரிதும் மதிப்பிடப்படுகின்ற மணற்சோறு, கோலி, கிரிக்கெட் மட்டை, பம்பரம் முதலியவைகளை முதியோர் பற்றில்லாது சமதிருஷ்டியோடு காண்கின்றனர். அதுபோல பற்றுடைய உலகத்தவர் வெவ்வெறு படித்தரங்களில் வைத்து மதிப்பிடுகின்ற மண், கல், பொன் ஆகியவைகளைப் பற்றற்ற யோகி பஞ்சபூதங்களால் ஆகியவைகளென்று சமதிருஷ்டியோடு காண்கிறான்ஸம லோஷ்ட அச்1 காஞ்சந. சமம் என்பது குறிப்பாக இப் பொருட்களிடத்தும், மேலும் மற்ற அனைத்துப் பொருட்களிடத்தும் அந்த யோகியின் அணுகுமுறையைக் குறிக்கிறது. பொதுவாக மக்கள் ஒரு விஷயத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதற்கு காரணம் அது அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பை அளிக்கிறது என்பதை பொறுத்ததாக இருக்கும். அந்த வகையில் இவனுக்கு ஒரு எளிய பாறை அல்லது மண்ணை விட ஒரு விலையுயர்ந்த கல்லோ அல்லது தங்கமோ அதிக பாதுகாப்பு கொடுத்துவிடுவதில்லை. மூன்றில் ஏதேனும் ஒன்று மற்ற இரண்டைப் போலவே சிறந்தது. தங்கம் என்றால் என்ன, அதன் மதிப்பு என்ன என்பதை அவன் புரிந்து கொண்டபோதிலும், அது தனக்கு எந்த பாதுகாப்பையும் கொடுக்காது, தானே தனக்கான ஒரே பாதுகாப்பு என அறிந்தவனாக இவனுக்கு எதனிடத்திலும் மோஹம் ஏற்படுவதில்லை. ஒருவன் தனக்குள் பாதுகாப்பாக இருக்கிறான் என்பதை அறிவது மட்டுமே பாதுகாப்பு. இதிலிருந்து ஞான நிஷ்டையின் பலனாக மோஹ நாசம் ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது.

ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

உலகப் பற்றுள்ளவர்கள் உபயோகமற்ற பொருள்களைத் தேடுகின்றவராவர். உலகப்பற்றற்ற சுத்தாத்மாக்கள் ஈசுவரனை விசுவாசித்து அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்திருப்பார்கள்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.9|| விதவிதமான மனிதர்களிடத்தில் சம புத்தி:

सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु

साधुष्वपि पापेषु समबुद्धिर्विशिष्यते ।। ।।

ஸுஹ்ருந்மித்ரார்யுதா3ஸீநமத்4யஸ்த2த்3வேஷ்யப3ந்து4ஷு

ஸாது4ஷ்வபி பாபேஷு ஸமபு3த்3தி4ர்விசி1ஷ்யதே ।। 9 ।।


सुहृत्   ஸுஹ்ருத்   நல்லெண்ணமுடையவர்   मित्र  மித்ர தோழன்  अरि  அரி  பகைவன்   

उदासीन  உதா3ஸீந  பொருட்படுத்தாதவர்   मध्यस्थ  மத்4யஸ்த2  நடுவர்   द्वेष्य  த்3வேஷ்ய  வெறுப்பவர்  

बन्धुषु   3ந்து4ஷு  உறவினர்கள்   साधुषु अपि   ஸாது4ஷு அபி  சான்றோர்களான சாதுக்களிடத்தும்  

पापेषु   பாபேஷு   பாபிகளிடத்தும்  सम बुद्धि:  ஸம பு3த்3தி4:  சமபுத்தியுடையவன்   

विशिष्यते   விசி1ஷ்யதே  சிறந்தவனாகிறான்.


நல்லெண்ணமுடையவர், நண்பர், பகைவர், பொருட்படுத்தாதவர், மத்யஸ்தர், வெறுப்பவர், உறவினர், சாது, பாபிகள் ஆகியவர்களிடத்து ஒரே மனமுடையவன் மேலோன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.


விளக்கம்:

ஒரு ஞானி உயிரற்ற பொருட்களிடம் எவ்விதம் சம புத்தியுடனிருக்கிறான் என பகவான் சென்ற சுலோகத்தில் விவரித்தார். இங்கு விதவிதமான மனிதர்களை அவன் எங்ஙனம் பொருள்படுத்துகின்றான்? என்பதற்கான விடை வருகிறது. முதல் வரியிலுள்ள கூட்டுச் சொல்லானஸுஹ்ருத்-மித்ர-அரி-உதா3ஸீந-மத்4யஸ்த2-த்3வேஷ்ய-3ந்து4ஷுஎன்பது பல்வேறு வகையான மக்களை விவரிக்கிறது. இந்த சுலோகம் மேலும் இரு வகையான மனிதர்களைப் பற்றியும் கூறுகிறதுசாதுக்கள் மற்றும் பாவிகள். இந்த அனைத்து விதமான மனிதர்களிடத்தும், ஸாது4ஷு அபி பாபேஷு, ஒரு ஞானியின் அணுகுமுறை அல்லது பார்வை சமமானதாக உள்ளதுசம புத்தி, ஸம பு3த்3தி4:. அத்தகையவன் மிகவும் உயர்ந்தவன்விசி1ஷ்யதே, என்கிறார் பகவான்


=> ஸுஹ்ருத், மித்ர மற்றும் அரி:

ஸுஹ்ருத்எனில் நலம் கருதுபவர் என்பது பொருள்; நல்ல மனமுடையவரே நல்ல எண்ணமுடையவர் ஆகின்றனர். பொதுவாக உதவி என்பது நட்பின் காரணமாக அல்லது சில எதிர்பார்ப்புகளுடன் செய்யப்படுகிறது. ஆனால் இவர்கள் பிரதிபலன் எதிர்பாராது பிறருக்கு நன்மை செய்கின்றனர் [प्रत्युपकारम् अनपेक्ष्य एव उपकर्ता सुहृत् ]. அடுத்ததாக நல்லெண்ணமும் நற்செயலும் வடிவெடுத்துத் தோழனுக்காகத் உதவ ஆயத்தமாயிருப்பவர்கள், சம சுபாவமுடையவர்கள், ‘மித்ர’, நண்பன் ஆகின்றனர்.

அரிஎனில் பகைவன்; இவன் மேற்கூறியவர்களுக்கு நேர்மாறாக, ஒருவனுக்கு கேடு விளைவிப்பவனாக உள்ளான். சாதாரண மனிதர்களுக்கு பகைவன் சரி, ஆனால் ஒரு ஞானிக்கு எதிரி சாத்தியமா? எதிரிகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியமில்லை; சில நேரங்களில் அவர்கள் அங்கே இருக்கிறார்கள் அவ்வளவே. குறிப்பாக தன்னுடனே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவனை அந்த காரணத்திற்காகவே சிலர் விரோதித்துக் கொள்வார்கள். மேலும் சிலர் தங்களது சொந்த நம்பிக்கையின் காரணமாக ஒரு ஞானிக்கு பகையாக அமையலாம். உதாரணமாக, வேதாந்தத்தைப் போதிக்கும் ஒருவன், ‘எல்லாம் ப்ரம்மம்என்று சொல்வதால், அவனை சாத்தான் என்றேகூட அவர்கள் நினைக்கலாம். அத்தகையவர்கள் ஒரு ஞானிக்கு விரோதமாக மாறலாம். எனவே அவர்கள் இங்கே எதிரிகளாக விவரிக்கப்படுகிறார்கள். மேலும் இங்கே ஞானி யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை; தன்னை அவருக்கு எதிரி என்ற நிலையில் வைத்தவனை இந்த சொல் குறிக்கிறது.


=> உதாசீனன் மற்றும் மத்யஸ்தன்:

உதா3ஸீநஎனில் பொருட்படுத்தாதவன் எனலாம்; நலம் கேடு ஒன்றும் செய்யாது வெறுமனே ஒதுங்கிப் பொதுவாயிருப்பவன். உதாரணமாக பேருந்து நிலையத்திலோ அல்லது கடைகளிலோ அன்றாடம் சந்திக்கும் சிலர் நட்பாக புன்னகைத்து அல்லது தலையசைத்துவிட்டுச் செல்வார்கள். அடுத்ததாகமத்4யஸ்த2என்பதன் நேரடி அர்த்தம்இடையில் இருப்பவன்’. ஆகவே இது பொதுவானவர்களைக் குறிக்கிறது. நம்மிடமும் நமக்கு வேண்டாதவர்களிடமும் சமமாக இருப்பவன்; இரு தரத்தாருக்கும் நடுவு நின்று ஒற்றுமையை உண்டுபண்ணிவைக்க முயலுபவன் மத்யஸ்தனாகிறான்.    


=> வெறுப்பவன் மற்றும் உறவினன்:

த்3வேஷ்யஎனில் வெறுப்பவன்; வெட்ட வெளிச்சமாக வெறுப்பை காட்டுபவன். இத்தகையவன் தன்னை நேசித்து நலம் புரிபவருக்கும் கேடே நினைக்கிறான். கெட்ட எண்ணம் எண்ணுவதே அவனின் இயல்பாக ஆகிறது

அடுத்ததாக உறவினர்கள்3ந்து4ஷு’, இரத்தத் தொடர்புடைய இவர்கள் சுற்றத்தார் ஆகின்றனர். ஒருவருடைய அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மாமா, அத்தை போன்றோர்கள்; அவர்களின் கருத்துக்கள் உண்மையில் ஒருவனை பாதிக்கின்றன. உறவினர்கள் தன்னைப் பற்றி நல்ல கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒருவன் விரும்புவதால், அவர்கள் உணர்ச்சி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒருவனை கட்டுப்படுத்தவும் கையாளவும் முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு சமூகத்திலும் நாம் காணக்கூடிய மனிதர்களே.


=> சாதுக்கள் மற்றும் பாபிகள்:

இறுதியாக, கிருஷ்ணர் மேலும் இரண்டு வகையான மனிதர்களைக் குறிப்பிடுகிறார், சாதுக்கள் மற்றும் பாபிகள். தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளதை மிக நெருக்கமாகப் பின்பற்றி அதன்படி வாழும் சான்றோர்கள் சாதுக்கள் எனப்படுவர். தர்மத்தை பின்பற்றி சரியானதைச் செய்து, தவறானதை தவிர்க்கும் இத்தகைய சாதுக்களை அனைத்துவித சமுதாயத்திலும் காணலாம்.

தீங்கு விளைவிக்கும் செயலில் இறங்குபவன், நிஷித்த கர்மத்தை செய்பவன் பாவி ஆகிறான். இங்குபாபஎன்பது பாபம் செய்பவனை, பாபியைக் குறிக்கிறது. ‘பாபஎனில் பாபம் என்று பொருள்; பாபத்தை உடையவனும்பாபஎன்றே அழைக்கப்படுகிறான் [पापम् अस्य अस्ति इति पाप:].  

இவ்வளவு விதமான வேறுபாடுகளை உடைய மனிதர்களிடத்து சாதாரண மனிதன் ஒருவனுக்கு விதவிதமான மனப்பான்மை வருவது உலக இயல்பு. ஆனால் யோகியோ எல்லாரிடத்தும் ஒரே நல்ல மனமுடையவனாகிறான். ஆகையால் அவன் சிறந்தவன்.


=> நம் தொடர்பு மக்களுடனா அல்லது வரையறையுடனா?

இங்கு கிருஷ்ணர்ஸுஹ்ருத்தொடங்கிபாபிவரை கூறுவதிலிருந்து, உலகிலுள்ள அனைத்து வகையான மக்களையும் இடையில் குறிப்பிட்டதாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்களனைவரிடமும் வேறுபாடு காட்டாமல் வியவஹாரம் செய்ய வேண்டும் என்கிறார் பகவான்.

பொதுவாக மக்கள், தனியொருவனை அணுகும்போது அந்த நபராக அவனைப் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட வகையிலோ அல்லது வரையறையிலோ பொருத்தியபடியே அவனைப் பார்க்கிறார்கள்; தொடர்பு கொள்கிறார்கள். உதாரணமாக நண்பன் பகைவன் வெறுப்பவன் வெறுக்கத்தக்கவன் எனத் தான்கொண்ட வரையறைகளுடன்தான் தொடர்பு கொள்கிறார்களே தவிர மனிதர்களுடன் அல்ல. இதனால் ஒவ்வொருவரும் அவர்களின் முன்முடிவுகளோடு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். தங்களின் பாதுகாப்பு மற்றும் வலிகள் போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு, கவசம் மற்றும் முகமூடியுடனே அவர்கள் உலகை எதிர்கொள்கின்றனர். ஆனால் இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் ஞான-திருப்த-ஆத்மாவிற்கு இந்தப் பிரச்சினை இல்லை. தன்னறிவினால் முழு திருப்தியை அடைந்தவனாய் அவன் பூரண சுதந்திரத்தை எய்தியவன். அனைத்து முன்முடிவுகளையும் களைந்தவனாய் எதிரில் நிற்பவனை மனமும் புலன்களும் கொண்ட ஒரு எளிய மனிதனாக மட்டும் காண்கிறான். இதனாலேயே இவன் சம புத்தியுடையவன் என அழைக்கப்படுகிறான்.


=> சமான புத்தி:

சம புத்தியுடன் இருப்பவன் எனில் வித்தியாசம் பார்க்கத் தெரியாதவளவு மந்தமான முட்டாள் என்பது பொருளல்ல. நல்ல மனமுடையவர்களையும் பாபியையும் அவர்களால் அடையாளம் காணமுடியும். இங்கே குறிப்பிடப்படும் விஷயம் என்னவெனில், சம புத்தியுடையவன் மனிதனை வகைப்படுத்திப் பிரித்துப் பார்ப்பதில்லை. பாபி ஒருவனை கண்டிப்பதில்லை; பாபச் செயலை செய்பவன் இருக்கின்றானே தவிர உண்மையில் பாபி என யாருமில்லை என்கிற புரிதலுடன் வரையறைகளையும் முன்முடிவுகளையும் கடந்தவனாக ஆகிறான். ஸம புத்தி: - மனதிற்குள் சமமாக பாவிப்பது. வியவகாரத்தில் யார் யார் எப்படி நடக்கிறார்களோ, யாரிடம் எவ்விதம் நடக்க வேண்டுமோ அவ்விதம் இவன் நடக்கிறான். ஆனால் மனதளவில் அவர்களிடம் எந்த பேதமோ வித்தியாசமோ பாராட்டாது சமமான புத்தியுடன் இருக்கிறான். உதாரணமாக தன் குழந்தையிடம் விளையாட்டாக தோல்வியடைந்த தந்தை, அக்குழந்தையின் பார்வைக்கு வருத்தப்படுவதுபோல காட்டிக் கொண்டாலும் உள்ளத்தில் எவ்வித வருத்தமும் கொள்வதில்லை. அதுபோல ஒரு ஞானி தன்னை வெறுப்பவரோ, மதிப்பவரோ யாராயிருப்பினும் அவர்களை சமான புத்தியுடனே எதிர்கொள்கிறான்.


=> ஞானி எப்படிப்பட்ட சிந்தனையுடன் வியவகாரம் செய்கின்றான்:

* ஒருவனிடமுள்ள சிறு தவறான நடவடிக்கையோ அல்லது குணத்தையோ வைத்து அந்த மனிதனையே தவறாக எண்ணக் கூடாது. ஒருவனின் குணம் வேறு, அந்த மனிதன் வேறு. தவறான குணம் சில காலத்தில் நீங்கலாம். ஆகவே ஞானி மற்றவர்களைப் பற்றிய எந்த இறுதித் தீர்மானத்தையும் கொள்வதில்லை

மனிதர்களைப் பற்றிய தீர்மானமே கொள்ளக் கூடாது என்பது இதன் பொருளல்ல. ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை தெரிந்து அவனிடம் கவனமாக வியவகாரம் செய்வதில் தவறில்லை. ஆனால் வெறுப்பு வேண்டாம் என்பதே மையக்கருத்து.

* சூழ்நிலையே ஒருவனை அந்த குறிப்பிட்ட மனிதனாக ஆக்குகிறது. ஒரு சாதுவிற்கு கிடைத்த சூழ்நிலை ஒரு பாவிக்கு கிடைத்திருந்தால் அவனும் சாதுவாகத்தான் இருந்திருப்பான். ஆகவே சூழ்நிலையே அவனை அவ்விதமாக மாற்றியதாக எண்ணி கருணை கொள்ள வேண்டும். உடலுக்கு வியாதிகள் வருவதைப் போல துஷ்ட குணம் என்பது மனதைப் பிடித்த நோயாகும். ஆகவே நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டு நாம் கொள்ளும் பரிவை, துஷ்ட குணம் கொண்டவர்களிடமும் நீட்டிக்க வேண்டும்.

* அனைத்து வேறுபாடுகளும் அனாத்மாவிடம் உள்ளதே தவிர ஆத்மாவிடம் எதுவும் கிடையாது. ஒரு ஞானியின் திருஷ்டி ஆத்மாவில் இருப்பதால் அவன் அனாத்மாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ‘ஒருவனை நான் வெறுக்கிறேன் எனில் என்னையே நான் வெறுக்கிறேன்என அவன் நினைக்கிறான். ‘நான்எனும் ஆத்மா அனைத்து சரீரத்திற்கும் பொதுவானதாக உள்ளது.

நாடகத்தில் நடிப்பவருள் ஒருவன் இராமனாக நடித்தான் என்று அவனை விரும்பவும், இராவணனாக நடித்தான் என்று மற்றொருவனை வெறுக்கவும் செய்வதில்லை நாடகத்தை பார்த்து ரசிப்பவர். யோகியோ உலக நடைமுறைகள் அனைத்தையும் நாடமாகப் பார்க்கிறான். சர்வேசுவரனே இத்தனை பாத்திரங்களாகி விளையாடுகிறான் என்பது அவனுக்கு தேற்றம். ஆகையால் எல்லோரிடத்தும் ஒரே மனமுடையவனாகிறான் யோகி.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒருவன் பூமியிலிருக்கையில் புல்லையும் வானுற ஓங்கி வளர்ந்த தேவதாரு மரத்தையும் கண்டு, ‘இந்த மரம் எவ்வளவு பெரிது, புல் எவ்வளவு சிறியதுஎன்கிறான். ஆனால் அவன் ஒரு மலை மீதேறி உச்சியிலிருந்து கீழே நோக்கும்போது, பெரிய தேவதாரு மரமும் சிறிய புல்லும் ஒருங்கே உருத்தெரியாத பச்சைப் படலமாகத் தோன்றுவதைக் காண்பான். அதுபோல உலகப் பற்றுள்ளவர்களுடைய பார்வைக்கு ஒருவன் அரசனென்றும், மற்றொருவன் தெருப்பெருக்கும் தோட்டியென்றும், ஒருவன் தகப்பன் என்றும் மற்றொருவன் மகனென்றும் இம்மாதிரியான ஸ்தான பேதங்களும், அந்தஸ்து வித்தியாசங்களும் தோன்றும். ஆனால் தெய்வ தரிசனம் பெற்றபிறகு எல்லாம் ஒரே தோற்றம். அப்போது நல்லவர் கெட்டவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை.

—---------------------------------------------------------------------------------------------------------------------------