சனி, 6 ஆகஸ்ட், 2022

தியான யோகம் 6.6 - 6.7

||6.6|| ‘எப்படிப்பட்ட நீ உனக்கு நண்பன்என்பதற்கான இலக்கணம்:

बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जित:

अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् ।। ।।

3ந்து4ராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித :  

அநாத்மநஸ்து 1த்ருத்வே வர்தேதாத்மைவ 1த்ருவத் ।। 6 ।।


येन त्मना   யேந ஆத்மநா  எந்த ஆத்மாவினால்   त्मा  ஆத்மா  ஆத்மாவானது   

जित:  ஜித: வெல்லப்பட்டிருக்கிறதோ  तस्य  தஸ்ய  அவனுடைய    त्मा एव  ஆத்மா ஏவ  ஆத்மாவே(தானே) त्मन:  ஆத்மாநஆத்மாவுக்கு(தனக்கு)   बन्धु:  3ந்து4:  நண்பன் ஆகிறான்   तु   து  ஆனால்   

अनात्मन:   அநாத்மந:  ஆத்மாவை வெல்லாதவனுக்கோ  त्मा एव   ஆத்மா ஏவ  ஆத்மாவே   

शत्रुवत्   1த்ருவத்  பகைவனைப் போல  शत्रुत्वे   1த்ருத்வே  பகைமையில்  वर्तेत   வர்தேத  இருக்கும்.


தன்னைத் தான் வென்றவனுக்குத் தானே நண்பன். ஆனால் தன்னை வெல்லாத ஆத்மா தனக்கே பகைவன் போலப் பகைமை சூழும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.


விளக்கம்:

=> சுயத்தின் தோழன்:

தனக்குத் தானே பகைவனாகாது தோழனாவது எங்ஙனம் என்பதற்கான விடையாக பகவான் இந்த சுலோகத்தைப் பகர்கிறார். இங்குதஸ்யஎன்பது முந்தைய சுலோகத்தில் விவாதிக்கப்பட்ட ஆத்மாவைக் குறிக்கிறது - அந்த சுயத்திற்கு, சுயமே நண்பன்ஆத்மாந: 3ந்து4:, எனக் கூறப்படுகிறது. எப்பொழுது? சுயத்தை வென்றெடுக்கும்போது, ஜித:. மேலும் எந்த ஆத்மாவை வெல்ல முடியும்? அது கண்டிப்பாக ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவாக இருக்க முடியாது. ஏனெனில் விஷயமாக இருக்கக்கூடிய ஒன்றைத்தான் ஒருவனால் வெல்ல முடியும். ஆகவே அறிபொருளாகவுள்ள, ‘நான்எனும் அபிமானத்திற்கு பொருளாகவுள்ள காரிய-கரண-சங்காதமான இந்த உடல்-மனம்-புலன்களின் கூட்டத்தைஆத்மாஎனும் சொல் இங்கு குறிக்கிறது. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தி வெல்ல வேண்டும். யாரால் இதை வெல்ல முடியும்? ஆத்மநா, தன்னாலேயே, அதாவது ஒருவனின் சொந்த விசாரணையினாலும், சொந்த ஒழுக்கநெறிகளினாலும், சொந்த விருப்பம் மற்றும் முயற்சியினாலும் இந்த உடல்-மனம்-புலன்கள் உள்ளடக்கிய கூட்டத்தை ஜெயங்கொள்ள வேண்டும். எந்த ஜீவனால் இக்கூட்டம் வெல்லப்பட்டதோ அவனுக்கு அவை நண்பனாகின்றன; இதன்மூலம் அவனே அவனுடைய நண்பனாகிறான்.


=> தன் வசப்படுபவைகள்:

இந்திரிய மற்றும் மனக் கட்டுப்பாட்டை உடையவன் வசீ என்றழைக்கப்படுகிறான். தனக்குத்தானே நண்பனாக விளங்கும் இவனுக்கு மூன்று வித சக்திகள் சேவை செய்கின்றனஒன்றுசிந்திக்க, ஆராய, அறிய மற்றும் நினைவில் வைக்கும் சக்தியாக ஞான-சக்தி; இரண்டுஆசை, விருப்பத்திற்கான சக்தியாக இச்சா-சக்தி; மூன்றுசெயல்பட மற்றும் உருவாக்க கிரியா-சக்தி. இந்த மூன்று சக்திகளும் காரிய-கரண-சங்காதத்தை வென்றெடுத்த ஒருவனின் வசம் உள்ளன. அவைகளை வென்றெடுக்காத பட்சத்தில், ஒருவனுடைய சொந்த உடல், மனம், இந்திரியங்களே அவனுக்கு ஒரு பகைவனைப் போல அவனது முன்னேற்றத்தில் எதிரியாய் நிற்கும்

இந்த சுலோகத்தில், தன்னை(ஆத்மா), தன் வசத்தில் வைத்திராத ஒருவன் அனாத்மா என்று அழைக்கப்படுகிறான். இவனுக்கு இவனது சுயமே ஒரு எதிரியின் பாத்திரத்தை வகிக்கிறது என்கிறார். இதிலிருந்து, ஒருவனுக்கு தன்னைத் தவிர வேறு எதிரி இல்லை என்பது தெளிவாகிறது.

இந்திரிய ஜெயத்தை உடைய நீ உனக்கு நண்பன்; இந்திரியத்தை வெல்லாதவனாக இருந்தால் நீயே உனக்கு எதிரிஎன்கிறார் கிருஷ்ணர். தர்மாதர்ம மற்றும் நித்யாநித்ய வஸ்து குறித்த ஞானமிருந்தும் இந்திரியங்கள் கட்டுக்குள் இல்லையெனில் ஞானம் அதற்கான பலனைத் தராது. உண்மையில் இவ்வுலகிற்கு நம்மை துயரப்படுத்தும் சக்தி இல்லை. அந்த சக்தியை நாம்தான் அதற்கு கொடுக்கிறோம். ஆகவே வெளிவிஷயங்களை மாற்ற முயற்சிப்பதை விட உள்விஷயங்களான மனம் மற்றும் புத்தி இவைகளை மாற்றுவதே சிறந்தது. வெளிசூழல் நம்மை பாதிக்காத வண்ணம் நம் மனம் ஒன்றைப் பொருள்படுத்துமானால் அந்த மனம் நமக்கு நண்பனாகிறது

புறத்தில் உள்ள பகைவன் ஏதோ சில வேளைகளில்தான் தாக்குகிறான். அப்படியிருந்தும் அவனால் துன்பமடையாத மனநிலையை யோகியொருவன் பெறக்கூடும். அகத்திலுள்ள பகையோ அல்லும்பகலும் ஒருவனை அலைக்கழிக்கிறது. தோழன் போன்றிருந்து பெருந் தீங்கை அது விளைவிக்கிறது. தான் அடையும் துக்கத்திற்கெல்லாம் தானே முதற்காரணம். ஆகவே முந்தய சுலோகங்களில் சொல்லப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய, யோகத்தில் நிலைபெற்ற ஒரு யோகியே தனக்குத் தானே நண்பனாகின்றான். மற்றெல்லாரும் ஆசை எனும் ஹிதசத்துருவின் வசப்பட்டுத் தங்களுக்குத் தாங்களே பகைவன் ஆகின்றனர்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பந்தம் மனத்தையொட்டியது; முக்தியும் அவ்வாறே. ‘நான் ஒரு முக்தாத்மா; நான் ஈசுவரனுடைய புத்திரன்; என்னை யாரால் பந்தப்படுத்த முடியும்?’ என்று நீ சொல்வாயானால் நீ முக்தனாக ஆவது நிச்சயம். பாம்பினால் கடிக்கப்பட்டவன்விஷமில்லை, விஷமில்லைஎன்று முழு நம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் சொல்லக் கூடுமானால் அவனுக்கு விஷ உபத்திரவமே இராது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.7|| ஞான நிஷ்டையின் பலன்:

जितात्मन: प्रशान्तस्य परमात्मा समाहित:

शीतोष्णसुखदु:खेषु तथा मानापमानयो: ।। ।।

ஜிதாத்மந: ப்ரசா1ந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:  

சீ1தோஷ்ணஸுக2து3:கே2ஷு ததா2 மாநாபமாநயோ: ।। 7 ।।


जितात्मन:  ஜிதாத்மந:  தன்னை வென்றவனுக்கு  प्रशान्तस्य   ப்ரசா1ந்தஸ்ய  முழு மனவமைதியை அடைந்தவனுக்கு  शीत उष्ण सुख दु:खेषु  சீ1 உஷ்ண ஸுக2 து3:கே2ஷு  குளிர்-வெப்பம், சுகம் துக்கங்களில்  तथा  ததா2  அப்படியே   मान अपमानयो:   மாந அபமாநயோ:  மாந அவமானங்களிலும்   

परमात्मा  பரமாத்மா  பரமாத்ம சொரூபமானது   समाहित:   ஸமாஹித:  தெளிவாக விளங்குகிறது.


தன்னை வென்று மனந்தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும், இன்ப துன்பங்களிலும், அங்ஙனமே புகழ்ச்சி இகழ்ச்சிகளிலும் பரமாத்ம தர்ஷணம் நிலைத்திருக்கும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.


விளக்கம்:

=> ஞான நிஷ்டையின் பலன்:

தனக்குத் தானே நண்பன் ஆனவன் அடையும் நலங்களில் சிறந்தது யாது என்ற கேள்விக்கு விடையாக அமைவது இந்த சுலோகம். ஞான நிஷ்டையினால் ஒரு முமுக்ஷுவின் மனதில் ஏற்படும் மாற்றங்களையும் விளைவுகளையும் கூறுவதாக அமைவதால் இந்த வரையறையை ஒரு ஞானியின் லக்ஷணமாகவும் எடுத்துக் கொள்ளலாம்


=> இருவித பொருள்விளக்கங்கள்:

பரம்என்ற சொல்லைஸமாஹித:அல்லதுஆத்மாஉடன் சேர்ப்பதைப் பொறுத்து இந்த சுலோகத்தை இரண்டு வழிகளில் பொருள்படுத்தலாம். முதலில் நாம் அதைஆத்மா பரம் ஸமாஹித:என்று வைத்து விசாரம் செய்வோம். பின்னர் அதை சங்கரர் தனது பாஷ்யவிசாரத்தில் விளக்கியுள்ளதைப் போலபரமாத்மா ஸமாஹித:என்பதாக விசாரணை செய்யலாம்.

யாருடைய உடல், மனம் மற்றும் புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோ அவன் ஜிதாத்மா என ஏற்கனவே பார்த்தோம். ஒருவன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது அதனுடைய பல்வேறு மனநிலைகளால் அவன் அலைகழிக்கப் படவில்லை என்பதைக் குறிக்கிறது.

பொதுவாக மக்கள் நேரம், காலம், இடம் மற்றும் சூழ்நிலை பொறுத்து பல்வேறு மனநிலைகளில் இருப்பார்கள். இந்த மனநிலைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளும்போது, ​​ஒருவன் தன் மனதினால் இழுத்துச் செல்லப்படுவதில்லை. ஆகையால் அவன் மனநிலைகளின் எஜமானனாகிறான்; ஜிதாத்மா ஆகிறான். அத்தகையவனின் மனம் இயற்கையாகவே அமைதியாக, ப்ரசா1ந்த, இருக்கும். இவ்விதத்தில் மனம் தெளிந்தவனுக்கு எந்தவொரு சூழ்நிலையும் எவ்விதத்திலும் தொந்தரவு கொடுக்க முடியாதாகையால், ஆத்மா பரம் ஸமாஹித:, தொகுக்கப்பட்ட குவிந்த மனதுடன் கூடியவனாக எப்போதுமிருக்கிறான். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கூட்டுச் சொல்லானசீ1 உஷ்ண ஸுக2 து3:கே2ஷுஅனைத்து சூழ்நிலைகளையும், அனைத்து எதிர்நிலைகளையும் குறிக்கிறது. ‘சீ1என்றால் குளிர் - வெறுமனே இதமான குளிர் அல்ல, ஒருவனால் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதவளவு குளிர். அதேபோல், ‘உஷ்ணஎன்றால் வெப்பம்; கதகதப்பை மிஞ்சிய, விரும்பத்தகாதவளவு வெப்பம் என எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதனால், இங்கு குறிப்பிடப்படும் குளிரோ, வெப்பமோ சிறிதும் சுகமானதாக இல்லை.

மேலும் மக்களுக்கு ஆறுதல், மகிழ்ச்சி, இன்பம் போன்றவற்றை தரும் சுக சூழலும் மற்றும் அசௌகரியம், மகிழ்ச்சியின்மை போன்ற துக்கத்தைத் தரும் சூழ்நிலைகளும் உள்ளன. அதுபோல இனியொரு எதிர்நிலைகளான புகழ்ச்சி(மாந) மற்றும் இகழ்ச்சியும்(அபமாந) இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. தொடர்ந்து மாறிவரும் இந்த எல்லா சூழ்நிலைகளிலும், பரம் ஸமாஹித:, மனத்தெளிவு அடைந்தவன் எந்தக் குழப்பத்தையும் அடையாது எப்போதும் அமைதியுடன் இருக்கிறான் என்பது இங்கு குறிப்பிடப்படும் கருத்து.


=> சங்கரரின் பாஷ்ய விளக்கம்:

சங்கரர் இந்த சுலோகத்திற்கான தனது பாஷ்யத்தில், காரிய-கரண-சங்காதமான உடல்-மனம்-புலன்களை கட்டுப்படுத்தியவனை ஜிதாத்மா என்றும், இதனால் அவனது மனம் அமைதியை அடைவதால் அவனைப்ரசா1ந்தஎன்றும் விளக்குகிறார். அப்படிப்பட்டவனுக்கு, பரமாத்மாவான ப்ரம்மன் தனது ஆத்மாவாகவே ஆகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆத்ம ஞானமுடையவன் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவான பரமாத்மாவை, தனது சொந்த ஆத்மாவாக அடையாளம் காண்கிறான். அத்தகையவன் வெளி சூழ்நிலைகள் மாறினாலும், எப்போதும் ஒரே மாதிரியாக சமநிலையுடன், ஸமாஹித:, இருப்பான்.

முன் சுலோகத்த்தில் கூறப்பட்டதுபோல தன்னை வென்றவனுக்கு, யோகாரூடனாக ஆனவனுக்கு, வெளியுலகம் என்பது சுற்றமும் அல்ல; பகையுமல்ல. கீழான ஆசைகளை அடக்கித் தன்னை வெல்லுபவனுக்கு மனம் தெளிகிறது. தூய கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்று தெளிந்த மனதில் பரமாத்மாவின் சொரூபம் பிரகாசிக்கிறது

உலகின் இருமை எதுவும் அவனை பாதிப்பதில்லை. உடலுக்கான இருமையான குளிர்-வெப்பம், மனதிற்கான இருமையான இன்ப-துன்பம், புத்திக்கான இருமையான மானம்-அவமானம் போன்ற எல்லா நிகழ்வுகளிலும் அவன் எந்த சஞ்சலமுமில்லாமல் சமமாகவே உள்ளான். இதனால் அனைத்து சூழ்நிலைகளிலும், நலங்களில் தலை சிறந்ததாகிய பரமாத்ம தரிசனமே அவனிடம் நிலைத்திருக்கும். ஒரு மனிதன் பெறவேண்டிய சிரேயஸ் என்பதும் இதுவே.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

விஷய சுகங்களில் சிறிதும் சம்பந்தப்படாத மனம் ஈசுவரனிடம் சென்று அவனிடம் ஒற்றுமையடைகிறது. இப்படித்தான் பந்தத்தினின்று ஆத்மாக்கள் முக்தியடைகின்றன. ஈசுவரனிடம் போகும் பாதைக்கு எதிராகச் செல்லும் ஆத்மா பந்தப்படுவதாகும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------