வியாழன், 8 செப்டம்பர், 2022

தியான யோகம் 6.12 - 6.13

||6.12|| அத்தகைய ஆஸனத்தமர்ந்து யோகி என்ன செய்ய வேண்டும்?

तत्रैकाग्रं मन: कृत्वा यतचित्तेन्दियक्रिय:

उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ।। १२ ।।

தத்ரைகாக்3ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்3ரியக்ரிய:  

உபவிச்1யாஸநே யுஞ்ஜ்யாத்3யோக3மாத்மவிசு1த்34யே ।। 12 ।।


तत्र  தத்ர அங்கு   सने  ஆஸநே  ஆஸனத்தில்   उपविश्य  உபவிச்1  அமர்ந்து   मन:  மந:  மனதை   

एकाग्रं कृत्वा  ஏகாக்3ரம் க்ருத்வா  ஒருமுகப்படுத்தி   यत चित्त इन्दिय क्रिय:  யத சித்த இந்த்3ரிய க்ரிய:  மனம் புலன்கள் இவைகளின் செயல்களை அடக்கி   त्म विशुद्धये  ஆத்ம விசு1த்34யே  மனத்தூய்மை பொருட்டு   

योगम् युञ्ज्यात्   யோக3ம் யுஞ்ஜ்யாத்  யோகத்தில் ஈடுபட வேண்டும்.


அங்கு ஆஸனத்தமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, மனம் புலன்கள் இவைகளின் செயல்களையடக்கி சித்தசுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.


விளக்கம்:

சென்ற சுலோகத்தில் வரையறுக்கப்பட்ட ஆஸனத்தில் அமர்ந்து யோகி என்ன செய்ய வேண்டுமென்பதற்கான பதிலாக இந்த சுலோகம் வருகிறது. எதற்காக தியானம் செய்ய வேண்டும் மற்றும் தியானத்தில் மனதை என்ன செய்ய வேண்டும் என்பதாக சுலோகம் விரிகிறது.

இங்குயுஞ்ஜ்யாத்எனும் வினைச்சொல், பயிற்சி செய்யலாம், பயில ஆரம்பிக்கலாம் என்பதைக் குறிக்கிறது. எனில் எதை பயிற்சி செய்ய வேண்டும்? தியானம், யோக3ம். ஏன்? மனதின் நிலைத்தன்மை மற்றும் தூய்மைக்காக மட்டுமே - ஆத்ம விசு1த்34யே; அஷ்டமாசித்தி, மனதை அழித்தல் போன்ற வேறு எதற்காகவும் அல்ல. விசாரத்தினால் மட்டுமே ஒருவன் ஆத்ம அறிவைப் பெறமுடியும் என்பதால் ஆத்ம விசுத்தி என்பது முக்கியமான மற்றும் அடிப்படையான தகுதியாக உள்ளது. ஏனெனில் இந்த ஞானம் ஏற்படாமல் தடுக்கும், மனதிலுள்ள தடைகளை நீக்குதல் வேண்டும். தியானத்தின் மூலம் மனத்தடைகள் நீக்கப்படுகிறது, அந்தகரண-ப்ரதிபந்தக-நிவர்த்தி. ஆகவே கிருஷ்ணர், ‘சித்தசுத்திக்காக ஒருவன் தியானத்தில் ஈடுபட வேண்டும்என்கிறார்.


=> மன ஒருமுகப்பாடு:

ஏகாக்3ரம்என்பது மன ஒருமுகப்பாட்டை, அதாவது எடுத்துக் கொண்ட தியானப் பொருளைத் தவிர வேறெதையும் எண்ணாமல் அவ்விஷயத்திலேயே மனதைக் குவித்தலைக் குறிக்கிறது. ‘அக்3என்பது முன்னால் இருப்பதைக் குறிக்கிறது; இங்கு எதை மனதில் கொண்டு தியானம் செய்கிறோமோ அதை, அதாவது தியானப் பொருளைக் குறிக்கிறது. மேலும்ஏகஎன்பது அது ஒரே ஒரு விஷயமாக இருத்தலைக் குறிக்கிறது. இதிலிருந்து கிருஷ்ணர், மனதை தியானப் பொருளுக்குக் கொண்டு வந்து, அங்கேயே லயிக்கச் சொல்கிறார்.

தியானம் செய்பவனை இங்கு மீண்டும் ஒருமுறையத சித்த இந்த்3ரிய க்ரிய:’, மனம் மற்றும் இந்திரியச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியவன் என்று விவரிக்கிறார் பகவான். பொதுவாக இத்தகுதி சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளப்படுவதால், அதன் முக்கியத்துவம் கீதை முழுதும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே எப்போதும் வெளிப்புறமாகவே இயக்கப்படும், வெளிவிஷயங்களை நோக்கியே செல்லும் மனமும் புலன்களும் அச்செயல்பாடுகளிலிருந்து  திரும்பப் பெறப்படுகின்றன. இப்படிப்பட்ட யத சித்த இந்த்3ரிய க்ரிய, தியானப் பயிற்சியை மேற்கொள்ளலாம்யோக3ம் யுஞ்ஜ்யாத்.


=> தியானத்தின் நோக்கம்:

ஒருவன் தியானத்தை மேற்கொள்ளும் நோக்கம் என்ன? ஆத்ம விசு1த்34யே, மனத்தூய்மைக்காக எனப் பார்த்தோம். இங்கு ஆத்மா என்ற சொல் அந்த-கரணத்தை, மனதைக் குறிக்கிறதே தவிர ஸத்-சித்-ஆனந்த-ஆத்மாவை அல்ல. ஏனெனில் ஸத்-சித்-ஆனந்த-ஆத்மா ஏற்கனவே சுத்தமானது, விசுத்த.

மனதின் சஞ்சலம் அதன் அசுத்தம். புலன்களின் வாயிலாக மனம் வெளி விஷயங்களில் செல்லுகிறவளவு அது தன் பரிசுத்தத்தை இழக்கிறது. சேற்றில் புரண்டோடும் பிரவாஹத்தை போல அது தன் நீர்மையைப் பறிகொடுக்கிறது. கருவி கரணங்களை மீட்டெடுத்து ஆத்ம சொரூபத்தில் வைக்கின்றவளவு சித்தம் சுத்தியடைகிறது. ஆத்மாவைச் சார்ந்திருப்பதே அதன் யதார்த்த நிலை; கலப்பற்ற பாங்கு. வெளி விஷயங்களை சார்ந்திருப்பது மாசு படிந்த நிலை. மாசுபடிந்திருக்குமளவு அதன் பேராற்றல் குறைகிறது. தூயதாக்குமளவு அதனுடைய அமைதி உறுதியாகிறது. மனதின் அமைதியே அதன் சுத்தம்; தீய குணங்கள்(ஆசுரி சம்பத்) நீங்கும்போது இயல்பாக மனமானது அமைதியை அடையும்.

விசுத்தி என்ற சொல்லை இனியொரு அர்த்தத்திலும் விசாரிக்கலாம். விருப்பு-வெறுப்பின் பிடியிலிருந்து விடுபடுவது சுத்தி. அதேபோல, சமஸ்கிருத மொழியில்கசாயஸ்என்று அழைக்கப்படும் பழைய நினைவுகள், மனம் அமைதியாக இருக்கும்போது எதிர்பாராதவிதமாக சிந்தனைக்கு வரும். ஒருவனுக்கு ஆழமாக இருக்கும் பதிவுகள், அழுத்தங்கள், ஏற்றுக் கொள்ளப்படாத மற்றும் புண்பட்ட அனுபவங்கள் அனைத்தும் நினைவுகளின் வடிவத்தில் சேமிக்கப்படுகின்றன. இவை மனதின் ஆழமான அடுக்குகளில் தேங்கிக் கிடக்கின்றன. எவ்விதம் நீர்நிலைகளில் தண்ணீருக்கு அடியில் இருக்கும் அழுகும் கரிமப் பொருட்கள் வாயுக்களாக மாறி மேற்பரப்பில் குமிழிகளாக வெளிவருகின்றவோ அவ்விதம் வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பழைய ஞாபகங்கள் மனதின் மேற்பரப்பிற்கு வருகின்றன. இதிலிருந்து விடுபடுவதும் விசுத்தி எனப் பொருள்படும்


=> நினைவுப் பதிவுகள்:

தியானத்தின்போது மனமானது ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட அமைதியை அடையும் போது, அந்த சாந்தமான மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றலாம். எவ்வித தொடர்ச்சியோ அல்லது இணைப்போ இல்லாமல் திடீரென்று தோன்றும் எண்ணங்கள் கசாயஸ் ஆகும். இவ்வித எண்ணங்களை தொந்தரவு செய்பவைகளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தியானத்தை சரியாக புரிந்து கொள்ளும் ஒருவனுக்கு இவைகள் எவ்வித பயத்தையும் கொடுக்கக் கூடாது. பொதுவாக, இதுபோன்ற எண்ணங்கள் வரும்போது, ​​அவற்றை நாமாகவே, நமது சுயம் என்றே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இப்போது தியானத்தில் ஒரு குறிப்பிட்ட அமைதியைக் கொண்டிருப்பதால், இந்த எண்ணங்களுக்கும் நமக்குமிடையேயான தூரத்தைக் கண்டறிவது சாத்தியப்படுகிறது. ஆகையினால் அந்த எண்ணங்களினால் தொந்தரவை அடையாமலும் அதேசமயம் அதை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபடாமலும் அதை ஒரு பார்வையாளனாக, சாட்சியாகப் பார்த்து பழகுவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். சலனமற்ற குளத்தின் மேற்பரப்பில் எழுந்து மறையும் குமிழிகளைப் போல இந்த எண்ணக் குமிழிகளும் வந்து செல்லட்டும். இவ்விதம் தியானத்தைப் பழகுவதன் மூலம் மனம் தூய்மைப்படுத்தப்படட்டும் என பகவான் கூறுகிறார்ஆத்ம விசு1த்34யே யோக3ம் யுஞ்ஜ்யாத்.


=> இருவகை தியானம்:

தியானத்தினால் மனம் அமைதியடைகிறது. இது நிதித்யாசன தியானமாகவோ அல்லது முற்றிலும் பிரார்த்தனை தியானமாகவோ இருக்கலாம். பிரார்த்தனையுடன் கூடிய தியானம் என்பது குணங்களுடன் கூடியதாக ப்ரம்மத்தை தியானித்தல்; இது சகுண-ப்ரம்ம தியானம் எனப்படும். குணங்களற்றதாக ப்ரம்மதை தியானித்தல் நிதித்யாசனம் அல்லது நிர்குண-ப்ரம்ம தியானம் எனப்படும். இந்த சுலோகத்தின் வார்த்தைகள் சகுண-ப்ரம்ம தியானம் மற்றும் நிர்குண-ப்ரம்ம தியானம் ஆகிய இரண்டையும் குறிக்கும் வகையில் உள்ளன. உண்மையில் தியானம் என்பது இரண்டையும் உள்ளடக்கியது, பிரார்த்தனை தியானத்துடன் தொடங்கி நிதித்யாசனத்தில் முடிவடைகிறது.

பிரார்த்தனையுடன் கூடிய சகுண-ப்ரம்ம தியானம், கடந்த காலத்தின் விளைவாக உண்டான விருப்பு வெறுப்புகளை நீக்க உதவுகிறது. இது இப்படி நடந்திருக்க வேண்டும், இதை நான் இப்படி செய்திருக்க வேண்டும், இது எனக்கு நடந்திருக்கக்கூடாது போன்ற, பொதுவாக ஒருவனை தொந்தரவு செய்யும் அனைத்து விஷயங்களும் இங்கு பிரார்த்தனையுடன் தனது பங்கில் ஏற்றுக்கொள்ளுதல் என்பது நிகழ்கிறது. இவ்வளவு நாட்களாக எதை எதிர்த்துப் போராடி வாழ்நாளைக் கழித்தோமோ அதை, இறந்த கால நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுதல் இங்கு நிகழ்கிறது என்பதால் இதுவும் ஆத்ம விசுத்தி ஆகும்

ஒருவன் தனது எண்ணங்களுடன் அல்லது உடலுடன் தன்னை அடையாளம் காண்பது மற்றும் உடலுக்கு நடப்பதை தனக்கு நடப்பதாக எடுத்துக் கொள்வது போன்றவைகள் முக்தியை விரும்பும் முமுக்ஷுவிற்கு ஒரு பெரிய தடை, ப்ரதிபந்தகம் ஆகும். இது நீக்கப்பட வேண்டிய பெரும் அசுத்தம், அசு1த்3தி4. இந்த அசுத்தத்தை நீக்க நிதித்யாசனம் உதவி புரிகிறது. உண்மையில் நிதித்யாசனம் என்பது ஆத்ம-ஞானத்திற்காக அல்ல; ஆத்ம-விசுத்திக்காக.


=> விசாரத்திற்கு துணை நிற்பது தியானம்:

ஆத்ம-ஞானம் என்பது வ்ருத்தி-ஞானமாக இருப்பதால், அது ப்ரமாணத்தின் மூலம் மட்டுமே நடைபெற முடியும். ப்ரமாண-விசாரமே வ்ருத்தி ஞானத்தை உருவாக்கி சுயத்தை பற்றிய அறியாமையை அழிக்கிறது. மேலும் இந்த வ்ருத்தி ஞானம் ஏற்பட ராக-த்வேஷங்கள், கசாயஸ் மற்றும் விபரீத பாவனைகள் போன்றவை தடைக் கற்களாக நிற்கின்றன. இத்தடையை நீக்க தியானம் துணை நிற்கின்றது

பொதுவாக வேதாந்தம் என்பது ஒரு கோட்பாடு மட்டுமே என்றும், தியானம் என்ற பயிற்சியே அறிவை உருவாக்குவதாகவும் கருதப்படுகிறது. இது உண்மையல்ல. தியானத்தின் இறுதிப்பலன் ஆத்ம ஞானமாக இருந்தபோதிலும், உண்மையில் தியானம் என்பது ஆத்ம விசுத்திக்கானதே தவிர ஆத்ம ஞானத்திற்கானது அல்ல. தன்னறிவு என்பது அதற்கான தகுதியை உடைய மனதைப் பொறுத்தது என்பதால் அது முழுக்க முழுக்க ஆத்ம விசுத்தியை சார்ந்ததாக உள்ளது. மனதை தயார்படுத்துவதில் தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ப்ரமாண-விசாரத்தினால் மட்டுமே வ்ருத்தி ஞானம் உற்பத்தியாகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஆரம்பத்தில் ஒருவன் தன்னந்தனியனாக உட்கார்ந்துகொண்டு மனதை ஒருமுகப்படுத்த, அதாவது ஏகாக்ர சித்தத்தையடைய முயலவேண்டும். இல்லாவிட்டால் மனம் பற்பல விஷயங்களில் ஓடிச் சஞ்சலத்துக்குள்ளாகும். பாலையும் ஜலத்தையும் ஒன்றாக்கிவைத்தால் இரண்டும் நன்றாக கலந்துவிடுவது நிச்சயம். ஆனால், பாலைக் கடைந்து வெண்ணெயை எடுத்து ஜலத்தில் போட்டு வைத்தால் அவ்வெண்ணெய் ஜலத்துடன் கலக்காமல் அதன் மேலே மிதக்கும். அதுபோல இடைவிடாத பழக்கத்தால் ஒருவனுக்கு ஏகாக்கிர சித்தம் நிலைக்குமானால், அவன் எங்கிருந்தபோதிலும் சரியே, அவனுடைய மனம் சுற்றிலுமுள்ள பொருள்களின்மீது செல்லாமல் ஈசுவரனிடத்திலேயே செல்லும்.

—---------------------------------------------------------------------------------------------------------------------------

||6.13|| உடலின் அமைப்பு; எவ்விதம் அமர வேண்டும்?

समं कायशिरोग्रीवं धारयन्नचलंस्थिर:  

सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् ।। १३ ।।

ஸமம் காயசி1ரோக்3ரீவம் தா4ரயந்நசலம் ஸ்தி2:  

ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்3ரம் ஸ்வம் தி31ச்1சாநவலோகயந் ।। 13 ।।


काय शिर ग्रीवं   காய சி1 க்3ரீவம்   உடல், தலை, கழுத்து இவைகளை   समं  ஸமம்  நேராகவும்   

अचलम्  அசலம்  அசையாமலும்   धारयन्   தா4ரயந்  வைத்துக்கொண்டு   

स्थिर:  ஸ்தி2:  உறுதியாய் இருந்து கொண்டு   स्वं नासिकाग्रं  ஸ்வம் நாஸிகாக்3ரம்  தனது மூக்கு நுனியை  सम्प्रेक्ष्य  ஸம்ப்ரேக்ஷ்ய  பார்த்துக்கொண்டு   दिश:   தி31:   திசைகளையோ   

अनवलोकयन्  அநவலோகயந்  பாராதிருத்தல் வேண்டும்.


தேகம், தலை, கழுத்து இவைகளை நேராக அசையாது வைத்துக்கொண்டு உறுதியாய் அமர்ந்து தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன்போன்று திசைகளைப் பாராது தியானிக்க வேண்டும்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,


விளக்கம்:

தியானத்தின்போது உடல், தலை மற்றும் கழுத்து நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணர், அதாவது நிமிர்ந்து உட்கார வேண்டும் என்பது இதன் பொருள். உடல், தலை மற்றும் கழுத்து செங்குத்தாக இருந்தபோதிலும் சில சமயம் அது சற்று அசையலாம்; ஆடலாம். எனவே கிருஷ்ணர்அசலம்என்ற வார்த்தையைச் சேர்த்து, உடலை அசையாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் மேலும்ஸ்தி2:என்ற சொல்லின் மூலம் ஒருவன் தனது இருக்கையில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது, ஒருவன் எவ்விதத்தில் அமர்ந்தால் தனது கால்கள் மற்றும் பாதங்களுக்கு அதிக காலம் எந்தவிதமான மாற்றமும் தேவைப்படாதோ அவ்விதமாக அமர வேண்டும். இதன்மூலம் அவனது ஆஸனம் அசைவற்றதாகவும் உறுதியாகவும் இருக்கும்.


=> பார்வை:

தியானத்திற்கான மனநிலைக்கு அல்லது பாவனைக்கு உகந்தவாறு ஆஸனம் அதாவது அமரும் விதம் இருக்கட்டும் என இச்சுலோகம் விளக்குகிறது; இது தியானிப்பவனின் பார்வையையும் உள்ளடக்குகிறது. இங்கு குறிப்பிடப்படும்ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்3ரம்’, மூக்கின் நுனியைப் பார்ப்பது என்ற வெளிப்பாடு, மூக்கின் நுனியில் தியானம் செய்யவேண்டும் என்று சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது! எனவேதான் சங்கரர் இது குறித்த விளக்கத்தை தனது பாஷ்யத்தில் அளிக்கிறார். ‘இவ_போலஎன்ற வார்த்தையை இங்கே சேர்த்து புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார். அதாவது ஸம்ப்ரேக்ஷ்ய, பார்த்தல் என்ற சொல்லை, ‘பார்ப்பதைப் போல’ —தர்சணம் க்ருத்வா இவ, என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்

கண்கள் வெளியே பார்க்கும்போது அவற்றின் நிலையைப் பார்த்தால், அவை இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட புள்ளியில் விழுகின்றன அல்லது ஒன்றிணைகின்றன; அவைகள் அங்கேயே இருக்கட்டும் என்பது இதன் பொருள். அதாவது ஒருவன் மேலேயோ கீழேயோ பார்க்க வேண்டாம்; பார்வை மூக்கின் நுனியில்இருப்பது போல்இருக்கட்டும்.

ஒருவேளை மூக்கின் நுனியைப் பார்க்கச் சொன்னால் என்ன நடக்கும் என்று சங்கரர் கேள்வி எழுப்புகிறார். ஒருவன் மூக்கைப் பார்த்தவாறு தியானம் செய்யும்போது, மனதில் மூக்கைப் பற்றிய ஞாபகம்தானே வரும். உண்மையில் அந்த-கரணம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருக்கிற வேளையில் உடலைப்பற்றிய எண்ணம் உண்டாகாது. மனமானது அந்நிலைக்கு வரும்பொழுது கண்கள் மூக்குநுனியைப் பார்ப்பவைகளைபோல் தென்படும்.

மேலும் சங்கரர், தி31: அநவலோகயந், என்பதைகுறிப்பிட்ட எந்த திசைகளையும் பார்க்காமல்எனப் பொருள்படுத்துகிறார்இடதுபுறம், வலதுபுறம், முன்புறம், பின்புறம், மேலும் கீழும் என குறிப்பிட்டு எத்திசையும் பார்க்காமல் தியானம் செய்ய வேண்டும் என்கிறார்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

தியானத்தில் தீவிரமான ஏகாக்ரம் உண்டாகிறது. அப்போது வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாது; காதுகளிலும் சப்தம் விழாது; ஸ்பரிச உணர்ச்சியும் அகன்றொழிகிறது. அப்போது பாம்பு ஒன்று சரீரத்தின்மீது ஊர்ந்து போனாலும் அது தெரிவதில்லை. தியானிப்பவர்க்குப் பாம்பைப்பற்றிய உணர்ச்சி இருப்பதில்லை; பாம்புக்கும் அம்மனிதனைப்பற்றிய உணர்ச்சியிராது.

—---------------------------------------------------------------------------------------------------------------------------