||5.7|| கர்மயோகம் சாதகனை எப்படி பண்படுத்துகிறது:
योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय: ।
सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते ।। ७ ।।
யோக3யுக்தோ விசு1த்3தா4த்மா விஜிதாத்மா ஜிதேந்த்3ரிய:।
ஸர்வபூ4தாத்மபூ4தாத்மா குர்வந்நபி ந லிப்யதே ।। 7 ।।
योगयुक्त: யோக3யுக்த: கர்மயோகத்தை கடைபிடிப்பவன்
विशुद्धात्मा விசு1த்3தா4த்மா தூய மனதையுடையவன்
विजितात्मा விஜிதாத்மா உடலை வென்றவன்
जितेन्द्रिय: ஜிதேந்த்3ரிய: புலன்களை வென்றவன்
सर्वभूत-आत्मभूत-आत्मा ஸர்வபூ4த-ஆத்மபூ4த-ஆத்மா எல்லா ஜீவராசிகளின் ஆத்மாவாக தன் ஆத்மாவைப் பார்ப்பவன் कुर्वन् अपि குர்வந் அபி கர்மம் செய்தபோதிலும் न लिप्यते ந லிப்யதே அதில் ஒட்டுவதில்லை.
கர்மயோகத்தை கடைபிடிப்பவன், தூய மனதையுடையவன், உடலை வென்றவன், புலன்களை அடக்கியவன் தனதாத்மாவே உயிரனைத்துக்கும் ஆத்மாவெனக் காண்பவன் கர்மம் செய்தபோதிலும் பந்தப்படுவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் -அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.
விளக்கம்:
கிருஷ்ணர் சென்ற சுலோகத்தில் தான் பகர்ந்த ‘ந சிரேண’ என்ற வெளிப்பாட்டின் அர்த்தத்தை, ஒருவன் எவ்விதத்தில் இந்த ஞானத்தை அடைகின்றான் என விளக்குவதன் மூலம் தெளிவுபடுத்துகிறார். கர்மயோகத்தில் மனமானது தேவையான முதிர்ச்சியை அடைய ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுக்கும். இத்தகைய முதிர்ச்சியை பெற்ற ஒருவன், காலதாமதமின்றி இந்த அறிவை அடைகிறான் — ந சிரேண அதி4க3ச்ச2தி .
இந்த சுலோகத்தில் இதற்கான வரிசைமுறை அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.
=> கர்மயோகம் முதல் மோக்ஷம் வரைச் செல்லும் படிப்படியான சாதனைகள்:
(1) யோக3யுக்த: — கர்மயோகத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவன். அதாவது தார்மீக ஜீவனம், சமத்துவ புத்தி, ஈஷ்ரார்ப்பண புத்தி, பிரசாத புத்தி மற்றும் பல நிரபேக்ஷ புத்தி(கர்ம பலன் வேண்டாம் என்ற புத்தி) உடையவனாக தனது அன்றாட, சமூக மற்றும் வைதிக கடமைகளைச் செய்து கொண்டிருக்கும் கர்மயோகி.
(2) விசு1த்3தா4த்மா— மனத்தூய்மை அடைந்தவன்; விருப்பு-வெறுப்பின் பிடியிலிருந்து விடுபட்ட மனதையுடையவன். மோஹம் மற்றும் மயக்கம் சென்றுவிட்ட மனதையுடையவன். இங்கு ஆத்மா என்பது மனதைக் குறிக்கிறது. எது சாதனம் எது சாத்யம்(இலக்கு) என அறியாது குழம்புதல் மோஹம் எனப்படும். உதாரணமாக, பணம் என்பது வாழ்க்கைகான சாதனம்; ஆனால் பணத்தை சாத்தியமாக கொண்டு வாழ்நாள் முழுதும் அதன் மீதான மோஹத்திலிருத்தல். கர்மயோகத்தினால் அடையப்பட்ட மனப்பக்குவத்தினால், எது உண்மையான சாத்யம் எனும் அறிவு கிடைக்கிறது.
(3) விஜிதாத்மா— உடலை வென்றவன். இங்கு ஆத்மா என்பது உடலை, செயல் உறுப்புகளைக் குறிக்கிறது. ஒருவன் உபாசனை மற்றும் தியானம் மூலம் உடலை வென்றவனாகிறான்.
ஒருவனின் மனமானது தூய்மையானதாக, ராக-த்வேஷத்தின் பிடியில் சிக்காமலிருக்கும் பொழுதே செயல் உறுப்புகளை ஒழுங்குப்படுத்துதல் சாத்தியமாகிறது.
(4) ஜிதேந்த்3ரிய — புலன்களை வென்றவனாக இருத்தல். கர்மயோகி நிஷ்காமியமாகக் கர்மத்தை செய்வதால், நிராசை மனத்தெளிவை உண்டுபண்ணுகிறது. ஆசை அகலுகின்றவளவு உடலும் இந்திரியங்களும் வசப்படுகின்றன.
சந்யாசிகளில் த்ரி தண்டி சந்யாசிகள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் மூன்று விதத்தில் தங்களை கட்டுப்படுத்தியதன் அடையாளமாக அல்லது மூன்று விதத்தில் சத்தியத்தை கடைபிடிப்பதன் அடையாளமாக கையில் அத்தண்டியை வைத்திருப்பர். (i) வாக் தண்டம் - வாக்கை கட்டுப்படுத்தியவன்; தூய சொற்களை, அதாவது சத்தியத்தைப் பேசுவது. (ii) காய தண்டம் - உடலைக் கட்டுபடுத்தியவன்; உடலை தூய்மையான செயலுக்கே பயன்படுத்துவது. (iii) மனோ தண்டம் - மனதை கட்டுப்படுத்தியவன்; மனதளவில் தூய எண்ணங்களையே எண்ணுவது.
இவ்விதம் நம் கருவிகளை நம் கட்டுக்குள் கொண்டுவருதல் ஜிதேந்த்3ரிய எனப்படும்.
(5) ஸர்வபூ4த-ஆத்மபூ4த-ஆத்மா — பிரம்மதேவர் முதல் எறும்பு வரை அனைத்து ஜீவராசிகளுடைய ஆத்மாவாக தன்னையே பார்ப்பவன். அனைவரிடமிருந்தும் வேறானவனாக, தனிப்பட்டவனாக தன்னை அறிந்த ஒருவன் இப்போது தன்னை அனைத்து உயிரினங்களின் ஆத்மாவாக அறிகிறான். அதாவது, இரண்டற்ற ஏகமாக விளங்கும் தனது சுயத்தையே அனைத்து உயிர்களின் உண்மைப் பொருளாக பார்க்கிறான். இந்த அறிவை ஞானயோகத்தினால், உபநிஷத மஹாவாக்கிய சிரவணத்தினால் அடைகிறான்.
இப்படிப்பட்டவன் உலக நலனுக்காக அல்லது உடலை பராமரிப்பதற்காக தனது பிராரப்தத்தின்படி கர்மங்களில் ஈடுபடுகிறான். ஆகையால் செயலில் ஈடுபட்டபோதிலும் அவன் அதில் ஒட்டுவதில்லை; பந்தப்படுவதில்லை — குர்வந் அபி ந லிப்யதே.
* காயிகம் (கர்மயோகம்) —>வாசிகம்(வாக்கில் தபஸ்) —> மானஸம்(ஜபம், தியானம்) — > புத்தி(சாஸ்திரம் படித்தல், சிந்தித்தல்) —> மோக்ஷம்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஒருவனுக்கு எவ்வளவு காலம் திவ்விய சக்ஷுஸ் உண்டாகவில்லையோ, எவ்வளவு காலம் பொற்குளிகையால் பித்தளை பொன்னாக மாறவில்லையோ அவ்வளவு காலம் வரையில் ‘நான்தான் கர்த்தா’ என்ற மதிமயக்கம் இருக்கும். அதுவரையில் ‘இந்த நற்காரியத்தை நான் செய்தேன்; அந்த கெட்ட காரியத்தை நான் செய்தேன்’ என்ற வித்தியாச மனோபாவம் இருந்தே தீரும். இந்த வேறுபாடற்ற மனோபாவம்தான் சம்சாரம் நீடித்திருப்பதற்கு காரணமாகிய மாயை. நல்வழியில் செலுத்துவதும், ஸத்வகுணம் மேலோங்கி நிற்பதுமாகிய வித்யாமாயையில் சரணம் புகுந்தாலே ஒருவன் ஈசுவரனை அடைவான். ஈசுவரனை நேரில் கண்டு அவனுடைய ஸ்வரூபத்தை அறிபவன்தான் உண்மையான முக்தன்; அவன் மாயையாகிய சமுத்திரத்தைக் தாண்டுபவன். ஈசுவரனே கர்த்தா, நான் கர்த்தா அல்லன் என்று உணர்பவன் சரீரத்தோடிருப்பினும் அவன் முக்தனே.
------------------------------------------------------------------------------------------------------------------नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् ।
पश्यञ्शृण्वन्स्पृशञ्जिघ्रन्नश्नन्गच्छन्स्वपञ्श्वसन् ।। ८ ।।
प्रलपन्विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि ।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ।। ९ ।।
நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித் ।
பச்1யஞ்ச்1ருண்வந்ஸ்ப்ருச1ஞ்ஜிக்4ரந்நச்1நங்க3ச்ச2ந்ஸ்வபஞ்ச்1வஸந் ।। 8 ।।
ப்ரலபந் விஸ்ருஜந் க்3ஹ்ணன்னுந்மிஷந்நிமிஷந்நபி ।
இந்த்3ரியாணீந்த்3ரியார்த்தே2ஷு வர்தந்த இதி தா4ரயந் ।। 9 ।।
युक्त: யுக்த: ஆத்ம சொரூபத்தில் பொருந்தியவன் तत्त्ववित् தத்த்வவித் தத்துவஞானி
पश्यन् பச்1யந் பார்க்கும்போதும் शृण्वन् ச்1ருண்வந் கேட்கும்போதும் स्पृशन् ஸ்ப்ருச1ந் தீண்டும்போதும்
जिघ्रन् ஜிக்4ரந் நுகரும்போதும் अश्नन् அச்1நந் உண்ணும்போதும் गच्छन् க3ச்ச2ந் நடக்கும்போதும்
स्वपन् ஸ்வபந் உறங்கும்போதும் श्वसन् ஸ்1வஸந் சுவாசிக்கும்போதும் प्रलपन् ப்ரலபந் பேசும்போதும் विसृजन् விஸ்ருஜந் மலம் கழிக்கும்போதும் गृह्णन् க்3ஹ்ணந் ஒன்றைப் பிடிக்கும்போதும்
उन्मिषन् உந்மிஷந் கண் திறக்கும்போதும் निमिषन् நிமிஷந் கண்மூடும்போதும் अपि அபி கூட
इन्द्रियाणि இந்த்3ரியாணி இந்திரியங்கள் इन्द्रियार्थेषु இந்த்3ரியார்த்தே2ஷு இந்திரிய விஷயங்களில்
वर्तन्ते इति வர்தந்தே இதி இயங்குகின்றனவென்று धारयन् தா4ரயந் நிச்சயம் செய்தவனாக
किञ्चित् एव கிஞ்சித் ஏவ எந்தவொன்றையும் न करोमि ந கரோமி நான் செய்பவனல்ல
इति मन्येत இதி மந்யேத என நினைக்கிறான்.
ஆத்ம சொரூபத்தில் பொருந்திய தத்துவஞானி பார்க்கும்போதும், கேட்கும்போதும், தீண்டும்போதும், நுகரும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், உறங்கும்போதும், சுவாசிக்கும்போதும், பேசும்போதும், மலம் கழிக்கும்போதும், ஒன்றைப் பிடிக்கும்போதும், கண் திறக்கும்போதும், கண்மூடும்போதும் புலன்கள் அந்தந்த புலன்களின் விஷயங்களில் போகின்றன என்று நிச்சயம் செய்தவனாக ‘நான் ஒன்றையும் செய்யவில்லை’ என நினைக்கிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,
புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், ‘இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன’ என்று கருதியிருக்கக் கடவான்.
விளக்கம்:
சென்ற சுலோகத்தில் தன்னால் சுட்டிக் காட்டப்பட்ட ‘ஸர்வபூ4த-ஆத்மபூ4த-ஆத்மா’, எல்லா உயிர்களுந் தானாகவே ஆனவனை, இவ்விரு சுலோகத்திலும் கிருஷ்ணர் மேலும் விளக்கிக் கூறுகிறார். இப்படிப்பட்டவன் அனைத்துச் செயல்பாடுகளையும் விட்டுவிடுகிறான் என்பதல்ல; எந்தச் செயலும் அவனை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை என்பதை புரிந்துகொள்வது அவசியம். சென்ற சுலோகத்தில் பகவான், ‘செய்தபோதிலும் - குர்வந் அபி’ என தொடர் நிகழ்காலத்தில் வினைச் சொல்லை பயன்படுத்தியிருந்தார்; அதாவது கர்மம் செய்தபோதிலும் அவன் அந்த செயலாலும் அல்லது அதனுடைய பலனாலும் பாதிப்படைவதில்லை என்பதை பொருளாகப் பார்த்தோம். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வரும்போது அதற்கான பதிலை பகவான் இவ்விரு சுலோகத்தில் விளக்குகிறார்.
ஒருவனது பல்வேறு செயல்களுக்கு எடுத்துக்காட்டாக — பார்த்தல், கேட்டல், நுகர்தல், தொடுதல், நடத்தல், உறங்குதல், சுவாசித்தல், பேசுதல், கண் திறத்தல், கண்மூடுதல் என ‘குர்வந்’ எனும் சொல்லை விரித்துக் கூறுகிறார். இதில் சுவாசித்தல் கண்ணிமைத்தல் போன்ற தன்னிசையாக நடைபெறும் செயலும், பார்த்தல் கேட்டல் போன்ற விருப்பத்துடன் நடைபெறும் செயலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
=> கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டதன் அறிகுறிகள்:
ஆத்மாவின் யதார்த்த சொரூபத்தை அறிந்தவன் ‘தத்த்வவித்’ என்றும், இந்த அறிவில் பொருந்தியவன், அதில் நிலைபெற்றவன் ‘யுக்த:’ என்றும் அழைக்கப்படுகிறான். சென்ற சுலோகத்தில் யோக3யுக்த: மற்றும் ஸர்வபூ4த-ஆத்மபூ4த-ஆத்மா என குறிப்பிடப்பட்டவனே, இங்கு யுக்த: என்றும் தத்த்வவித் என்றும் அழைக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட ஞானி, வாழ்க்கை சம்பந்தமான செயல்கள் யாவும் சரீரத்தில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புலன்களும் அவற்றிக்கேயுண்டான செயல்பாடுகளைச் செய்வதாக உள்ளது. உதாரணமாக கண்கள் பார்த்தலை, காதுகள் கேட்டலை, கால்கள் நடத்தலை செய்வதைப் போல அந்தந்த புலன்கள் அந்தந்த விஷயங்களில் ஈடுபடுகின்றன — இந்த்3ரியார்த்தே2ஷு வர்தந்தே. இதை நன்கறிந்து நிச்சயம் செய்தவனாக( தா4ரயந்), ஆத்மாவுக்கோ செயலில்லை என்ற உண்மையில் நிலைத்தவனாக, ‘நான் ஒன்றையும் செய்யவில்லை’ என நினைக்கிறான் — கிஞ்சித் ஏவ ந கரோமி.
=> எது தவறான புரிதல்:
வெறுப்பின் உச்சத்தில் நன்றாக கோபப்பட்ட பின், இங்கு சொன்னது போல ‘நான் இதைச் செய்யவில்லை’ என்கிற பாவனையை எடுத்துக்கொள்வது தவறான புரிதலைக் காட்டுகிறது. ‘நான்’ என்ற அபிமானத்துடன் விருப்பு அல்லது வெறுப்பை வெளிக்காட்டிவிட்டு, பின்னர் இந்த பாவனையை எடுத்துகொள்ளுதல் செல்லாது. உடல் மற்றும் மனதின் செயலை சாக்ஷியாக இருந்து பார்க்கும்போது இந்த பாவனை எடுத்துக் கொள்ளப்படும். பொதுவாக ஒரு செயலிற்கு பின் எந்தவொரு குற்ற உணர்வோ, பாதிப்போ வந்தால் அங்கு அவன் சாக்ஷியாக இல்லை; அதன்மீதான அபிமானத்துடன் செய்திருப்பதாகவே பொருள். உதாரணமாக இரண்டு மணி நேரம் பேசிய பிறகும் எந்தவொரு குற்ற உணர்வும் வரவில்லையெனில் நாம் நமது இந்திரியத்தை கருவியாகப் பயன்படுத்தியுள்ளோம் எனலாம். ஒருகால், என்ன பேசினோம் என்றே தெரியாமல் பேசிவிட்டு பிறகு, ‘அதை தவிர்த்திருக்கலாம்’ என வருத்தப்பட்டால் நாம் அங்கு கர்மேந்திரியமாக இருந்திருக்கின்றோம் என்பது பொருள். எனவே உடல் மற்றும் மனதிலிருந்து வருகின்ற எந்தவொரு செயலும் நமக்கு குற்ற உணர்வையோ அதிருப்தியையோ உருவாக்கவில்லையெனில் அங்கு நாம் சாக்ஷியாக இருந்துள்ளோம் என்றும் பாதிப்பை உண்டாக்கியிருந்தால் இந்திரியமாக இருந்துள்ளோம் என்றும் தெரிந்துகொள்ளலாம்.
=> கர்ம காண்டிகளின் பார்வை:
வேதாந்த தத்துவதிற்கு எதிரான கருத்தை உடையவர்களின் சந்தேகம் மற்றும் கேள்விகளை, ‘பூர்வ பக்ஷம்’ எனும் பெயரில் சங்கரர் தனது பாஷ்ய உரைகளில் எழுப்பி அதற்கான விடையை சித்தாந்தமாக உரைப்பார். அவ்விதம் இந்த சுலோகத்திற்கான பாஷ்யத்தில் கர்ம காண்டிகள் எழுப்பும் கேள்வி ஒன்று பூர்வ பக்ஷமாக வருகிறது.
பூர்வ பக்ஷம்: குருடர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிப்படைந்தவர்கள் போன்ற செயலில் ஈடுபட முடியாதவர்கள்தான் சந்யாசத்தை எடுத்துக் கொள்ள தகுதியுடையவர்கள்.
சித்தாந்தம்(பதில்) : தீவிர வைராக்கியமும் ஞானமும்தான் ஒருவன் சந்யாச ஆஸ்ரமத்தை எடுத்துக் கொள்ளும் அதிகாரத்தைக் கொடுக்கிறது.
எல்லாவித புலன்களும் செயல்படும்போதும், ‘நான் அகர்த்தா, இந்திரியங்கள் அதனுடைய விஷயத்தில் ஈடுபடுகின்றன. குணம் குணத்தில் செல்கின்றது; நான் எதையும் செய்யவில்லை’ என சிந்திப்பவனுக்கு ஒரு செயலும் உண்மையில் இல்லை. அத்தகையவனுக்கு சந்யாசத்திற்கான முழு அதிகாரத்தை சாஸ்திரம் கொடுக்கிறது.
தன்னறிவில் நிலைத்த ஞானி உண்மையில் செயல்படுவதில்லை. மற்றவர்களின் பார்வைக்குதான் அவன் செயல்படுவதாகத் தெரிகிறது. வண்டியில் ஊர்ந்து செல்லுபவன் தானே நடப்பவன் அல்லன். வண்டியின் செயலைத் தன் செயலாய் அகங்கரிக்கும்பொழுது ‘நான் போகிறேன்’ என்கிறான். தூக்கத்தில் பேசிய பேச்சுக்கு ஒருவன் கர்த்தாவல்லன். ஏதோ ஒன்றை ஆழ்ந்து எண்ணிக்கொண்டு ஆகாரம் புசித்தவனுக்கு என்ன பதார்த்தங்களை உண்டான் என்பது தெரியாது. அங்ஙனம் ஆத்மாவில் திளைத்திருப்பனுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பிராணன் ஆகியவைகளின் செயல்கள் தன்னுடையவைகளாகத் தென்படமாட்டா.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
தான் வெறும் கருவி; ஈசனே கர்த்தா என்று அனுபூதியில் அறிந்து கொண்டவனது வாழ்க்கை எப்படிப்பட்டது?
சுவர்ண குளிகையின் ஸ்பரிசத்தால் முற்றும் பொன்னாகமாறிய கத்தியானது பழைய வடிவத்தில் இருக்கிறது. ஆனால் அது வெட்டுதற்கு உதவாது. அங்ஙனம் எல்லாம் ஈசன் செயல் என்ற அனுபூதியடைந்தவன் பழையபடி கிருத்தியங்களைச் செய்கிறான். ஆயினும் அவனிடம் அகங்காரத்தின் விஷம் சிறிதளவுமில்லை. அவன் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------