||5.10|| கர்மத்திற்கும் கர்மயோகிக்குமுள்ள சம்பந்தம்:
ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति य: ।
लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा ।। १० ।।
ப்ரஹ்மண்யாதா4ய கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா கரோதி ய: ।
லிப்யதே ந ஸ பாபேந பத்3மபத்ரமிவாம்ப4ஸா ।। 10 ।।
य: ய: யார் ब्रह्मणि ப்ரஹ்மணி ப்ரம்மத்திடம் आधाय ஆதா4ய அடைக்கலம் புகுந்தவனாய்
सङ्गं त्यक्त्वा ஸங்க3ம் த்யக்த்வா பற்றை தியாகம் செய்து
कर्माणि करोति கர்மாணி கரோதி கர்மங்களைச் செய்கிறானோ स: ஸ: அவன் अम्भसा அம்ப4ஸா நீரில் पद्मपत्रम् इव பத்3மபத்ரம் இவ தாமரை இலைபோல पापेन பாபேந பாபத்தினால்
न लिप्यते ந லிப்யதே பந்தப்படுவதில்லை.
ப்ரம்மத்திடம் அடைக்கலம் புகுந்தவனாய் பற்றை துறந்து கர்மங்களைச் செய்பவன், நீரில் தாமரையிலை போன்று பாபத்தில் பந்தப்படுவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
விளக்கம்:
இங்கு ‘கர்மாணி’ என்பது வேதத்தில் கூறப்பட்ட நித்திய நைமித்திக கர்மங்கள் மற்றும் மற்ற அனைத்துச் செயல்களையும் குறிக்கிறது. இச் செயல்களை எவ்வாறு செய்ய வேண்டும்? அதன் பலனின் மீதான பற்றை துறந்து, ஸங்க3ம் த்யக்த்வா, ஈஷ்வரார்ப்பணமாக செய்தல் வேண்டும் — ப்ரஹ்மணி ஆதா4ய. இதிலிருந்து இங்கு குறிப்பிடப்படுபவன் கர்மயோகி என்பது தெளிவாகிறது. இங்கு ப்ரம்மன் எனும் சொல் சகுணப்ரம்மத்தை ஈஷ்வரனைக் குறிக்கிறது.
இப்போது ஒரு சந்தேகம் எழலாம். ஒருவன் எப்படி தனது செயலை ஈஷ்வரனுக்கு அர்ப்பணிப்பது? பூஜை செய்தல், மலரை இறைவனின் பாதத்தில் வைத்தல் முதலியவைகளாக அர்ப்பித்தல் புரிகிறது. ஆனால் நடத்தல், பார்த்தல், கேட்டல் போன்ற செயல்களை எப்படி இறைவனுக்கு வழங்க முடியும்?
கர்மயோகத்தை தெளிவாக புரிந்துகொள்ள தர்மத்தை பற்றிய அறிவு அவசியம். தர்மத்தை இரு நிலைகளாக கூறலாம் — சாமான்ய தர்மம் மற்றும் விஷேஷ தர்மம். திருடாமை, அஹிம்சை, தூய்மை, உண்மை பேசுதல், மற்றவர்கள் நமக்குச் செய்ய விரும்பாத விஷயங்களை அவர்களுக்குச் செய்யாதிருத்தல் போன்ற பொதுவான மதிப்புகள் சாமான்ய தர்மமாகும். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட பாத்திரத்திலுள்ள ஒருவன் என்ன செய்யவேண்டும் என்பதை விஷேஷ தர்மம் குறிக்கிறது. இவற்றை பற்றிய விரிவான விசாரத்தை நாம் ஏற்கனவே முந்தய சுலோகங்களில் செய்துள்ளோம். இந்த சாமான்ய தர்மமும் விஷேஷ தர்மமும் ஈஷ்வரனே. ஆம், இறை தத்துவத்தையே தர்மமாக பார்க்கும்போதுதான் நம்முடைய ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கென அர்ப்பணிக்க முடியும்.
பதினெட்டாவது அத்தியாயத்தில், சுலோகம் 46 -ல், ஈஷ்வரனே இந்த முழுபடைப்பையும் வியாபித்திருப்பதால், அனைத்தும் இறை தத்துவத்தின் வெளிப்பாடேயாதலால், ஈஷ்வரனையும் தர்மத்தையும் பிரிக்கமுடியாது - யேந ஸர்வம் இதம் ததம், என அங்கு பார்ப்போம். இறைவனே இந்த சிருஷ்டியின் உபாதான மற்றும் நிமித்த காரணமாக இருப்பதால், இந்த படைப்பானது படைத்தவனிடமிருந்து வேறானதல்ல. அதே சுலோகத்தின் இரண்டாவது வரியில் கிருஷ்ணபகவான், ஒருவனின் கடமையை, ஸ்வ-கர்ம, சரியாக செய்வதே இறைவனை வழிபடுவது என கூறுகிறார். ஆகையால் ஸ்வதர்மத்தை தனது கடமையை சரியாகச் செய்வதென்பது, தனது அனைத்து செயல்களையும் ஈஷ்வரனுக்கு அர்ப்பணம் செய்வதாகிறது. கொடுக்கப்பட்ட காலத்தில் மற்றும் இடத்தில் ஒருவன் நிறைவேற்றும் கடமையானது அவனது அந்த-கரண-சுத்திக்கு வழிவகுக்கிறது. இவ்விதம் பெறப்பட்ட மனத்தூய்மையே ஒருவனை ஞானத்தில் கொண்டுசேர்க்கும். இதுவே கர்மயோகம்.
=> பக்தனே கர்மயோகி:
மேற்கூரியதைப் போல தர்மத்தையே இறை தத்துவமாக பார்க்கலாம்; அல்லது தர்மத்தை இறைவனின் ஆணையாக ஏற்கலாம்.
ஆணை எனும்போது அங்கு எஜமானன்-சேவகன் சூழ்நிலை உருவாகிறது. எஜமானின் கட்டளையை அப்படியே ஏற்று நம்பிக்கைக்குரிய கீழ்படிந்த பணியாளன் அதைச் செய்கிறான். இவ்விதத்தில் ஒருவன் தன்னை இறைவனிடம் ஒப்படைப்பதும் ஈஷ்வர-அர்ப்பண-புத்தி எனப்படும்.
ஆகவே ஒருவன் தர்மத்தை இறைவனின் கட்டளையாகவோ அல்லது ஈஷ்வரனாகவோ எடுத்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் இந்த விழிப்புணர்வே ஒருவனை பக்தனாக்குகிறது. இந்த பக்தனாலேயே கர்மயோகியாக முடியும்.
பொதுவாக பக்தியோகம் என அழைக்கப்படுவது உண்மையில் கர்மயோகத்தையே குறிக்கிறது. ஏனெனில் ஒரு பக்தனாலேயே அனைத்து கர்மங்களையும் இறைவனின் கட்டளையாக ஏற்று ஈஷ்வரனின் பொருட்டு அதைச் செய்யமுடியும். இந்த பாவனை இவ்விரு யோகத்திற்கும் பொதுவானது. இந்த அணுகுமுறையை சங்கரர் தனது பாஷ்ய விசாரத்தில், எஜமானருக்காக பல்வேறு செயல்களைச் செய்யும் ஒரு ஊழியனின் பாவனையோடு சமப்படுத்துகிறார்.
‘ஈஷ்வரனின் பொருட்டு’ எனும் வெளிப்பாடு, ‘ஸங்க3ம் த்யக்த்வா’ எனும் சொல்லின் மூலம் மேலும் விளக்கப்படுகிறது. ‘ஸங்க3’ என்பது பற்றை, ராக-த்வேஷத்தினால் தூண்டப்படுவதை குறிக்கிறது. ‘த்யக்த்வா’ என்பது தியாகம் செய்வது அல்லது விட்டுவிடுதலைக் குறிக்கும். விருப்பு வெறுப்புகளின் பிடியிலுள்ள ஒருவன் தனது சொந்த நலனுக்காக கர்மங்களைச் செய்கிறான். அதேசமயம், விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்த ஒருவன், தர்மத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் செயலைச் செய்தால் அது ஈஷ்வரன் பொருட்டு செய்யப்படும் செயலாகிறது.
இப்படிப்பட்டவன், தாமரை இலையானது எவ்விதம் தண்ணீரினால் பாதிக்கப்படுவதில்லையோ அவ்விதம் பாபத்தினால் பந்தப்படுவதில்லை.
சுவாமி சித்பவானந்தர்:
தாமரையானது தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலேயே நிலைபெற்றிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது தானே பட்டுப்போம். தண்ணீரில் தொடர்ந்திருக்கும் தாமரையிலை அதில் நனைவதில்லை. அவ்விதம் மனிதன் கர்மத்திலே பிறந்து, கர்மத்திலேயே வளர்ந்து, கர்மத்திலே நிலை பெற்றிருக்கிறான். எனினும் தன் பேரியல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்திருக்கும் யோகி கர்மத்தில் கட்டுப்படுவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------||5.11|| யோகிக்கு கர்மம் எப்படி பயன்படுகிறது?
कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि ।
योगिन: कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये ।। ११ ।।
காயேந மநஸா பு3த்3த்4யா கேவலைரிந்த்3ரியைரபி ।
யோகி3ந: கர்ம குர்வந்தி ஸங்க3ம் த்யக்த்வாத்மசு1த்3த4யே ।। 11 ।।
योगिन: யோகி3ந: யோகிகள் सङ्गं ஸங்க3ம் பற்றை त्यक्त्वा த்யக்த்வா துறந்து
आत्म-शुद्धये ஆத்ம-சு1த்3த4யே சித்த சுத்திக்காக केवलै: கேவலை: வெறும்
कायेन காயேந உடலினால் मनसा மநஸா மனதால் बुद्ध्या பு3த்3த்4யா புத்தியினால்
इन्द्रियै: अपि இந்த்3ரியை: அபி இந்திரியங்களினாலும் कर्म कुर्वन्ति கர்ம குர்வந்தி கர்மம் செய்கிறார்கள்.
யோகிகள் பற்றை துறந்து சித்த சுத்திக்காக வெறும் உடலினாலும் மனதாலும் புத்தியினாலும் இந்திரியங்களினாலும் கர்மம் செய்கிறார்கள்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலுன், புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.
விளக்கம்:
=> நம் உடலிலிருந்து செயல் தோன்றுவதற்கு முன் இரு விஷயங்கள் நடைபெறுகிறது:
(1) மனதில் இதைச் செய்ய வேண்டுமென்ற சங்கல்பம்
(2) புத்தியில் அது குறித்த நிச்சயம்
இதில் (1) மற்றும் (2) படிகளுக்கு தூண்டுதலாக கீழ்கண்டவைகள் இருக்கின்றன.
(i) ஒருவனின் விருப்பு வெறுப்பு
(ii) மமகாரம் (எனது, எனக்காக செய்கிறேன் எனும் பாவனை)
கர்மயோகிகள், இந்த மமகாரமும் விருப்பு-வெறுப்புமின்றி வெறும் உடலாலும் மனதாலும் புத்தியினாலும் இந்திரியங்களினாலும் மட்டும் செயல் செய்கிறார்கள். அதாவது அகக்கரணங்களும் புறக்கரணங்களும் மட்டும் வெறுமனே வேலை செய்கின்றன. உள்ளிருந்து ஆசை எனும் வேகம் எதுவும் அவைகளுக்கு வருவதில்லை.
=> விவேகம்:
லெளகிக வாழ்க்கையிலும் சரி, ஆன்மிக வாழ்க்கையிலும் சரி, ஒரு பொருளை பற்றி அறிந்திருந்தால்தான் அதை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகள் எழும். மோக்ஷ ஆசையும் அவ்விதமே. ஆனால் இங்கு மோக்ஷத்தை பற்றிய அறிவு மட்டுமல்ல, நிலையான மற்றும் நிலையற்ற பொருளைப் பற்றிய அறிவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதை சாஸ்திரம் விவேகம் என்கிறது. வேதாந்த மாணவனின் தகுதிகளில் இது முதன்மையாக வருவது.
விவேகம் என்ற சொல்லின் அர்த்தத்தை மூன்று விதமாக கூறலாம்:
(i) விவேசனம் (विवेचनम्) - பிரித்தல்; உண்மையும் பொய்யும் கலந்துள்ளது. அதை அறிவுப் பூர்வமாக பிரித்தல் விவேகம்.
(ii) பிரிக்கும் சக்தி விவேகம்.
(iii) இங்கு, (i) மற்றும் (ii) படிகளை பூர்த்தி செய்து நாம் ஒரு முடிவிற்கு வந்திருப்போம். அந்த முடிவுடன் கூடிய அறிவும் விவேகம். அதாவது, இது நித்யம் இது அநித்யம் என்ற நிச்சயத்துடன் கூடிய புத்தி விவேகத்தை உடையது என்பது பொருள்.
=> யோகி அடையும் நன்மை:
மனிதனுக்கு மற்ற உலக ஆசைகளின் காரணமாக மேற்கூரிய பிரித்தரியும் சக்தியானது மிகவும் குறைந்துள்ளது; அல்லது வெளித்தோற்றத்திற்கு வராமலுள்ளது. கர்மயோகத்தின் பலனாக இந்த விவேக சக்தி வெளிப்படும். இதனால் மற்ற ஆசையின் மீதுள்ள முன்னுரிமை மட்டுப்பட்டு, மோக்ஷ ஆசையானது பிரதானமாக மாறுகிறது.
இதனால் விருப்பு குறைகிறது. இதன் பலனாக விருப்பின் மறுவடிவான வெறுப்பும் குறைவதால் நற்பண்புகள் வளர்கின்றன. நற் குணங்களால் மனமானது தூய்மை அடைகிறது; மன அமைதி ஏற்படுகிறது. இது ஞானத்தை அடையும் தகுதியை கொடுக்கிறது.
=> விவேகி மற்றும் அவிவேகி செயலாற்றும் விதம்:
இந்த சுலோகத்தில் பகவான் கர்மயோகிகள் என்ன செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் மற்றும் ஏன் செய்கிறார்கள் எனக் கூறுகிறார். ஒரு கர்மயோகி தனது உடல், மனம், புலன்கள் மற்றும் புத்தி முதலிய கரணங்களைப் பயன்படுத்தி செயல்களைச் செய்கிறான். அனைவரும் அவ்விதத்திலேயே செயல்களைச் செய்வதால், ஒரு கர்மயோகி இவ்விதம் செய்கிறான் என கிருஷ்ணர் கூறக் காரணம் என்ன? எனில், இந்த யோகி மற்றவர்கள் செய்வதை ஒரே ஒரு வித்தியாசத்துடன் செய்கிறான் - பற்றை துறந்து, ஸங்க3ம் த்யக்த்வா. சாதாரணமாக பார்ப்பதற்கு, பகுத்தறியும் சக்தியற்ற அவிவேகியும் மற்றும் யோகியான விவேகியும் ஒரே விதத்தில் செயல் செய்வதாகத் தெரிந்தாலும் விவேகியானவன் பலனில் பற்றைக் கைவிட்டு செயல் செய்கிறான்.
பற்றைத் துறந்து எப்படி வினையாற்றுவது என ஏற்கனவே பார்த்துள்ளோம். விருப்பு வெறுப்புகளினால் செயல்படாத மனதினால் ஒருவன் அனைத்து கர்மங்களையும் இறைவனுக்காக அர்பணிக்கிறான் எனப் பார்த்தோம். அது இங்கு, ‘கேவலை:’ என்ற சொல்லின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. ‘கேவலை:’ எனில் ‘முற்றிலும்’ ராக-த்வேஷமில்லாமல், ‘வெறுமனே’ கரணங்களால் செய்யப்படுவது எனப் பொருள். இந்த பாவனையே ஈஷ்வர-அர்ப்பண-புத்தி எனப்படும். இவ்விதம் வினையாற்றுவதிலிருந்து வரும் பலனை ஈஷ்வர பிரசாதமாக ஏற்கிறான் யோகி.
செயல்படுவதில் அவிவேகிகளுக்கும் விவேகிகளுக்கும் மற்றொரு வேறுபாடும் உள்ளது. அவிவேகி ஒரு செயலை தனது சொந்த இன்பத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் செய்கிறான். ஆனால் விவேகியோ தனது மனத்தூய்மைக்காக மட்டுமே, ஆத்ம-சு1த்3த4யே, செயலில் ஈடுபடுகிறான். பலனில் பற்றில்லாத காரணத்தினால் சித்தம் தெளிவடைந்து மனத்தூய்மை உண்டாகிறது.
செயல்படுவதில், கர்மயோகிக்கும் ஞானிக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆத்ம சொரூபத்தை அறிந்த ஞானியிடம் ‘நான் செய்கிறேன்’ எனும் பாவனை இருப்பதில்லை. அந்தந்த புலன்கள் அந்தந்த செயல்களில் பிரவ்ருத்திக்கின்றன என நினைக்கிறான். ஆனால் கர்மயோகி ‘நான் இறைவனுக்காக ஈஷ்வரார்ப்பணமாக செய்கிறேன்’ என்ற பாவனையுடன் செய்கிறான். இந்த பாவனை மற்றும் இறைவனை பற்றிய விழிப்புணர்வு அவனுக்கு சித்த சுத்தியைத் தருகிறது.
-------------------------------------------------------------------------------------