செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

ஸந்யாஸ யோகம் 5.5 - 5.6

||5.5|| ஒன்றை அனுஷ்டித்து இரண்டின் பலனை அடைவதெப்படி?

यत्साङ्ख्यै: प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते

एकं साङ्ख्यं योगं : पश्यति पश्यति ।। ।।

யத்ஸாங்க்2யை: ப்ராப்யதே ஸ்தா2நம் தத்3யோகை3ரபி 3ம்யதே|

ஏகம் ஸாங்க்2யம் யோக3ம் : பச்1யதி பச்1யதி ।। 5 ।।


साङ्ख्यै:  ஸாங்க்2யை:  சந்யாசிகளால்   यत् स्थानं  யத் ஸ்தா2நம்  எந்த ஸ்தானம்   

प्राप्यते  ப்ராப்யதே  அடையப்படுகிறதோ  योगै: अपि  யோகை3: அபி  கர்மயோகிகளாலும்  तत्   தத்  அது   

गम्यते   3ம்யதே அடையப்படுகிறது   :  :  யார்   साङ्ख्यं   ஸாங்க்2யம்   சந்யாசத்தையும்   

योगं    யோக3ம்   கர்மயோகத்தையும்  एकं  ஏகம்  ஒன்றாக   पश्यति   பச்1யதி  பார்க்கிறானோ  

:  : அவனே   पश्यति  பச்1யதி  (உண்மையை) பார்க்கிறான்.


சந்யாசிகளால் அடையப்படும் அதே மோக்ஷ பலனை கர்மயோகிகளும் அடைகின்றனர். சந்யாசத்தையும் கர்மயோகத்தையும் ஒன்றாகப் பார்ப்பவனே உண்மையில் பார்க்கிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.


விளக்கம்:

சந்யாச ஆஸ்ரமத்திலிருப்பவர்களால் பெறப்படும் மோக்ஷம் எனும் அறிவே கர்மயோகிகளாலும் அடையப்படுகிறது. முதலில், அந்த-கரண-சுத்தியின் மூலம் தூய்மையான மனதை அடைந்து பிறகு ஞானத்தை பெறுகிறார்கள். ‘ஸ்தா2நம்எனில் இடம் அல்லது முடிவு எனப் பொருள்படும். இங்கு இந்த சொல் இறுதிமுடிவை, பலனைக் குறிக்கிறது; சந்யாசி மற்றும் கர்மயோகி இருவரும் அடையும் பலன், மோக்ஷமெனும் ஞானம்.

ப்ராப்யதே, பெறப்படுகிறதுமற்றும்3ம்யதே, அடையப்படுகிறதுஎனும் சொற்களின் பயன்பாடு, ஞானத்திற்காக தயாராகும் நிலையைக் குறித்த ஒரு சிறு வித்தியாசத்தை காட்டிக் கொடுக்கப் பயன்படுகிறது.

சந்யாசிகளால் பெறப்பட்ட(ப்ராப்யதே) அதே பலனை, கர்மயோக வாழ்க்கையின் மூலம் மனதை தயார்படுத்தி சரியான காலத்தில் கர்மயோகிகளும் அடைகிறார்கள்(3ம்யதே). இதுவே இரண்டிக்குமான வேறுபாடு.

கர்மயோகத்தினால் மன முதிர்ச்சியடைந்த கர்மயோகி, சந்யாச வாழ்க்கையை மேற்கொண்டோ அல்லது தொடர்ந்து கர்மயோகியாக இருந்துகொண்டோ ஞானத்தைப் பெறுகிறான். ஞானத்தை அடைந்த பிறகு அவன் ஜனக மஹாராஜனைப் போல தொடர்ந்து கர்மயோகத்திலேயே இருக்கலாம் அல்லது சந்யாசத்தை மேற்கொள்ளலாம். இதை தெளிவாக புரிந்துகொண்டவனே பண்டிதன் ஆகிறான். மற்றவர்கள் சாஸ்திரத்தை கற்றிருந்த போதிலும், இவ்விஷயத்தில் அவர்கள் பாலர்களாகத் தான் இருக்கிறார்கள்.


=> ப்ரமாண விசாரம்:

கீதையின் உட்கருத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் கர்மத்தினால் மட்டுமே மோக்ஷம் என கீதை கூறுவதாக சிலர் முடிவாகச் சொல்கிறார்கள். முதலில் ஒரு குறிப்பிட்ட முடிவை எடுத்துவிட்டு பின்பு அந்த முடிவை ஆதரிக்க கீதையை விசாரம் செய்வதுப்ரமாண விசாரம்அல்ல. ப்ரமாண விசாரம் என்பது உயர்ந்த புறநிலைப் பார்வையுடன் கீதை உண்மையில் என்ன சொல்கிறதென சிரத்தையுடன் அறிய முற்படவேண்டும். இதன்மூலமே உண்மையை, சரியான நோக்கினை அடையமுடியும்.

இங்கு பகவான், சந்யாசம் கர்மயோகம் இரண்டையும் ஒன்று எனப் பார்ப்பவனே உண்மையில் பார்ப்பவன் என கூறுகிறார். இதன் பொருள் இவையிரண்டும் சமமானது என்பதாகும்.

இரண்டும் சமமானது எனில் நான் சந்யாசத்தையே எடுத்துகொள்கிறேன். தனிப்பட்ட, சமூக மற்றும் வைதிக கடமைகளை செவ்வனே செய்யும் கர்மயோகத்தைக் காட்டிலும் குறைந்தவளவு கர்மத்தை மட்டுமேயுடைய சந்யாசமே எளிதானதாகப் படுகிறது என அர்ஜுனன் நினைக்கலாம். எனவே பகவான், கர்மயோக வாழ்க்கைமுறையினால் செம்மைப்படாத ஒருவனுக்கு இந்த ஞானத்தை அடைவது மிகவும் கடினம் என்பதை அடுத்த சுலோகத்தில் தொகுக்கிறார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

||5.6|| சந்யாசத்திற்கு பதிலாக கர்மயோகத்தை ஏன் புகழ்ந்தார்?

सन्न्यासस्तु महाबाहो दु:खमाप्तुमयोगत:  

योगयुक्तो मुनिर्ब्रह्म नचिरेणाधिगच्छति ।। ।। 

ஸந்ந்யாஸஸ்து மஹாபா3ஹோ து3:2மாப்துமயோக3:

யோக3யுக்தோ முநிர்ப்3ரஹ்ம சிரேணாதி43ச்ச2தி ।। 6 ।।


महाबाहो   மஹாபா3ஹோ  தோள்வலிவுடையோனே   अयोगत:   அயோக3:  யோகம் செய்யாது  

सन्न्यास:   ஸந்ந்யாஸ:  சந்யாசத்தை  अाप्तुम्   ஆப்தும்  அடைவது   दु:खम्   து3:2ம்  கடினம்  तु   து  ஆனால்  योगयुक्त:  யோக3யுக்த:  கர்மயோகம் செய்கிற  मुनि:  முநி:  முனிவன்   चिरेण   சிரேண  காலதாமதமின்றி   ब्रह्म   ப்3ரஹ்ம  ப்ரம்மத்தை   अधिगच्छति   அதி43ச்ச2தி  அடைகிறான்.


தோள்வலிவுடையோனே, கர்மயோகம் செய்யாது கர்ம சந்யாசம் அடைவது கடினம். கர்மயோகத்தில் பொருந்திய முனிவனோ விரைவில் ப்ரம்மத்தை அடைகிறான்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.


விளக்கம்:

இங்கு சந்யாசம் என்பது ஆஸ்ரமத்தைக் குறிக்கவில்லை. ஞானத்தினால் கர்மத்தை சந்யாசம் செய்வதை குறிக்கின்றது. எல்லா பொருட்களிடத்திலும் பற்றை விட்டு ஞானத்தில் நிலைபெறுவதைக் குறிக்கிறது. எனவே சந்யாசம் என்ற சொல்லை, மோக்ஷத்தை அடைய உதவும் ஞானமாக எடுத்துக்கொண்டால், கர்மயோகமில்லாமல் கர்ம சந்யாசத்தை அடைவது மிகக் கடினம் என கிருஷ்ணபகவான் கூறுகிறார். அந்த-கரண-சுத்தியில்லாமல், விருப்பு-வெறுப்பின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள ஒருவனுக்கு சந்யாச வாழ்க்கைமுறையே கடினம் எனும்போது, ஞானத்தை அடைவதென்பது நிச்சயமாக அரிது. சந்யாச ஆஸ்ரமத்தில் காலம் அதிகமாகக் கிடைக்கிறது. இருப்பதிலேயே காலம்தான் அதிக பளுவுடன் கூடியது. ஆகவே மன முதிர்ச்சியடையாத ஒருவன் தனிமையில் காலத்தை கையாள்வது மிகக் கடினம். எனவே சந்யாசம் எல்லாருக்குமான ஒரு வாழ்க்கைமுறை ஆகாது. சந்யாச வாழ்க்கைமுறைக்கும் சரி, ஞானத்திற்கும் சரி கர்மயோகமே சாதனம் என்கிறார் பகவான். இங்குஅரிது(து3:2ம்)’ என கூறப்பட்டுள்ளதே தவிரஇயலாததுஎனக் சொல்லப்படவில்லை. காரணம், ஒருகால் ராக-த்வேஷத்தின் பிடியிலுள்ள ஒருவன், சரியான மனப் பக்குவமில்லாமல் வாழ்வின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக ஒரு குருவை அடைந்து சந்யாசத்தை எடுத்துக் கொண்டுவிட்டான் என வைத்துக் கொள்வோம். அதிர்ஷ்டசாலியாக இருக்கும் பட்சத்தில் விஷயமறிந்த குரு அவனது விருப்பு வெறுப்பை மட்டுப்படுத்த, நடுநிலையாக்க உதவலாம். இங்கு குருசேவை கர்மயோகம் கொடுக்கும் பக்குவத்தை அளிக்கிறது. இதன்மூலம் அவன் மனத்தூய்மை அடைந்து ஞானத்திற்கானத் தகுதியை அடைய வாய்ப்பு கிடைக்கிறது. இப்படிப்பட்ட குரு அமைவதும், அதற்கான சூழ்நிலை அமைவதும் எளிதல்ல. ஆகவே கர்மயோகமின்றி கர்ம சந்யாசம் கடினம்து3:2ம் ஆப்தும் அயோக3:.  

விரும்பியவுடன் ஒருவன் சந்யாசியாகிவிட முடியாது. கர்மயோகத்தில் பொருந்தியவனாக, செம்மையடைந்த யோகியே(யோக3யுக்த:), சாஸ்திரம் சொல்வதை பகுப்பாய்வு செய்து அதை புரிந்துகொள்ளக் கூடிய தகுதியுடன் இருப்பான். இத்தகையவன் முனி(முநி:) என்று அழைக்கப்படுகிறான். இவனே ப்ரம்மத்தை அடைகிறான்முநி: ப்3ரஹ்ம அதி43ச்ச2தி.

   * முனி: — மநநாத் முனி: () மெளனாத் முனி:

(1) எல்லா காலத்திலும் மநநத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவன், ஆத்ம சிந்தனையிலும் அது பற்றிய விசாரத்திலும் இருப்பவன் முனி எனப்படுகிறான்

(2) மெளனமாக இருப்பவன் முனி.


=> ஏன் உடனே என கூறப்படவில்லை?

கர்மயோகத்தில் உள்ள முனிவன் விரைவில் ப்ரம்மத்தை அடைகிறான் என கூறப்பட்டுள்ளது. ஏன் உடனடியாக என கூறப்படவில்லை? எனில் கர்மயோகத்திலிருப்பவன் முதலில் மனதை தயார்படுத்தி, பிறகு ஞானயோகத்திற்கு சென்று ப்ரம்மத்தை அடைகிறான். மனத்தூய்மைக்கான காலத்தை காட்டும் விதமாக சிரேண’, மன முதிர்ச்சிக்கு பின் எந்தவித காலதாமதமுமின்றி, என கூறப்பட்டுள்ளது.


=> சுவாமி சித்பவானந்தர்:

காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெறவேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் பிரகிருதியினின்று பெறவேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞானமுதிர்ச்சியால் ப்ரம்ம நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம சந்யாசமாகிறது. ஆக, எல்லோரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும்.


-------------------------------------------------------------------------------------