||5.3|| யாது காரணத்தினால் கர்மயோகம் உகந்தது:
ज्ञेय: स नित्यसन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति ।
निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात्प्रमुच्यते ।। ३ ।।
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்3வேஷ்டி ந காங்க்ஷதி ।
நிர்த்3வந்த்3வோ ஹி மஹாபா3ஹோ ஸுக2ம் ப3ந்தா4த்ப்ரமுச்யதே ।। 3।।
महाबाहो மஹாபா3ஹோ பெருந்தோளுடையாய் य: ய: யார்/எந்த கர்மயோகி
न द्वेष्टि ந த்3வேஷ்டி வெறுப்பை அடைவதில்லையோ न काङ्क्षति ந காங்க்ஷதி விரும்புதலை அடைவதில்லையோ स: ஸ: அவன் नित्यसन्न्यासि நித்யஸந்ந்யாஸீ நித்திய சந்யாசியென்று
ज्ञेय: ஜ்ஞேய: அறியத்தக்கவன் हि ஹி ஏனென்றால் निर्द्वन्द्व: நிர்த்3வந்த்3வ: இருமைகளற்றவன்
बन्धात् ப3ந்தா4த் பந்தத்திலிருந்து सुखं ஸுக2ம் எளிதில் प्रमुच्यते ப்ரமுச்யதே விடுதலையடைகிறான்.
பெருந்தோளுடையாய், வெறுப்பும் விருப்பும் இல்லாதவன் நித்திய சந்யாசி எனப்படுகிறான். ஏனெனில் இருமைகளற்றவன் எளிதில் பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
விளக்கம்:
உண்மையில் மனிதனைக் கர்மம் கட்டுப்படுத்துவதில்லை. ஒருவன் வேலை செய்வதை வெறுத்து, சோம்பித்திரிவதை விரும்புவானாகில் அவன் இருமைகளில் கட்டுண்டவனாகிறான். ஆனால் கர்மயோகியோ பல்வேறு செயல்களுக்கிடையில் விருப்பு வெறுப்பற்றவனாக இருப்பதால் அவன் மனதை எதுவும் சஞ்சலப்படுத்துவதில்லை. சமத்துவ புத்தியே(நிர்த்வந்தவத்வம்) கர்மயோகம் என்பதை இரண்டாம் அத்தியாயத்தில் பகவான் கூறியிருந்தார். கர்மயோகியானவன் கடமைகளில் மற்றும் அதன் பலனில் விருப்போ வெறுப்போ கொள்வதில்லையாகையால் கர்மம் செய்தும் செய்யாதவனாகிறான். அந்த அளவில் அவனும் நித்திய சந்யாசியே. சந்யாச ஆஸ்ரமத்தை எடுத்துக்கொண்டதன் வெளியறிகுறிகள் அவனிடத்து இருக்கவேண்டிய அவசியமில்லை. மனமே பந்தம் அல்லது மோக்ஷத்திற்கு காரணியாகிறது.
=> நித்திய சந்யாசி:
இந்த சுலோகத்தில் பகவான் சந்யாசி எனும் சொல்லுக்கு ‘நித்ய’ என்ற வார்த்தையை அடைமொழியாக கொடுத்துள்ளார். எனவே அது குறித்து சிறிது விசாரத்தில் ஈடுபடலாம். இங்கு ‘நித்ய’ எனும் சொல் ‘எப்பொழுதுமே’, ‘சதா’ எனும் அர்த்தத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே எப்போதும், எல்லா காலத்திலும் சந்யாசியாக இருப்பவன் நித்திய சந்யாசி. மாறாக சில நேரங்களிலும் மட்டும் சந்யாச மனநிலையில் இருப்பவர்களும் உள்ளனர், ‘காதாசித்க சந்யாசி’. பொதுவாக, எல்லோருமே ஒரு சில விஷயங்களில் நித்திய சந்யாசியாக இருக்கிறோம். பலூன், பம்பரம், பொம்மைகள் போன்ற ஒரு காலத்தில் நமக்கு மிக முக்கியமானதாகவும், வாழ்வாதாரமாகவும் தோன்றிய சிலவற்றிலிருந்து நாம் வளர்ச்சியடைந்து வெளிவந்து விட்டோம். அவற்றைப் பொருத்தவரையில் நாம் இப்போது நித்திய சந்யாசி. இவ்விஷயங்களில், நாம் அதை துறக்கவில்லை; அதிலிருந்து இயல்பாக வெளிவந்து விட்டோம். ஒன்றை துறப்பதற்கும் மற்றும் அதிலிருந்து வளர்ந்து வெளிவருவதற்கும் வித்தியாசம் உண்டு. ‘நேற்று என் வீட்டு குப்பைகளைத் துறந்தேன்’ என யாரும் கூறுவதில்லை. ஏனெனில் அதன்மீது நமக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் ஒரு வேலையையோ அல்லது பதவியையோ விடும்போது நாம் அவ்விதம் கூறுவதில்லை. அதைத் துறந்ததாக எண்ணுகிறோம். மதிப்பிருக்கும் ஒன்று விடப்படும்போதே அது துறக்கப்பட்டதாக எண்ணம் எழுகிறது. ஆனால் பொம்மைகள் விஷயத்தில் ஒருவன் அவ்வாறு நினைப்பதில்லை ஏனெனில், அவன் அதிலிருந்து வளர்ந்து வெளிவந்துள்ளான். எனவே அவற்றைக் குறித்த ஏக்கமோ வெறுப்போ அவனிடம் இருக்காது. ஒருகால், அவ்விஷயங்களை ஒருவன் துறந்திருந்தால் அதை எதிர்க்கொள்ள பயப்படுவது மட்டுமல்லாமல் அது இன்னும் தனக்கு கவர்ச்சிகரமான ஒரு பொருளாகவே இருந்து கொண்டிருக்கும்.
எனில் யதார்த்தத்தில் யார் எப்போதும் சந்யாசி? எவனொருவன் எதையும் வெறுக்காமல் அல்லது எதற்கும் ஏங்காதவனாக எப்பொழுதும் இருக்கிறானோ அவனே நித்திய சந்யாசி. கட்டாயத்திற்காக துறக்காமல் அதிலிருந்து இயல்பாக வெளிவந்தவனால் மட்டுமே இத்தகைய நிலையையடைய முடியும். இப்படிப்பட்டவன், ஒரு பொருளின் இருப்பினால் மிக உற்சாகமடைவதோ அல்லது பயப்படுதலோ இல்லை; ஒன்றின் இல்லாமையில் அதன்மீது ஏக்கத்தை அடைவதுமில்லை.
=> விருப்பு-வெறுப்புகளின் மீதான ஆதிக்கம்:
சங்கரர் தனது விசாரத்தில், முழுதளவில் மற்றும் ஒப்பீட்டளவில் என இருவகையில் நித்திய சந்யாசியை விளக்குகிறார். ஒப்பீட்டளவில் சங்கரர் நித்திய சந்யாசியாக, விருப்பு-வெறுப்பு கொண்ட ஆனால் அவற்றின் பிடியில் சிக்கிக் கொள்ளாத கர்மயோகியைக் கூறுகிறார். முழுதளவில், நித்திய சந்யாசியானவன் விருப்பு-வெறுப்பிலிருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்ட ஆத்மஞானி என்கிறார்.
ஒருவன் கர்மத்திற்கு பயந்து, அதை தவிர்ப்பதற்காக சந்யாசத்தை தேர்ந்தெடுக்கிறான் எனில் அவன் நிச்சயமாக ராக-த்வேஷங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் ஒரு சந்யாசியானவன் விருப்பு-வெறுப்பின் கட்டுப்பாட்டில் இல்லாதவன். கடமையினால் ஏற்படும் பயம் வெறுப்பையும், சந்யாசத்தின் மீதுள்ள பற்று விருப்பத்தையும் குறிக்கிறது. ஒரு கர்மயோகிக்கே விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கிறது. அதனாலேயே இதை புத்தியோகம் என பகவான் இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிட்டார். புத்தி என்பது செய்யப்பட வேண்டியது, செய்யக்கூடாதது மற்றும் செயலின் பலன் இவற்றில் இருக்கவேண்டிய பாவனையைக் குறிக்கிறது. அங்கு இருவித புத்திகள் பேசப்பட்டது. ஒன்று செய்யப்பட வேண்டிய கடமைகளை ஈஷ்வரனுக்கென அர்பணிக்கும் மனப்பாங்கு, ஈஷ்வர-அர்பண-புத்தி. இரண்டாவது, கர்மங்களினால் உண்டாகும் பலன் எதுவாக இருப்பினும் அதை ஈஷ்வர பிரசாதமாக ஏற்கும் புத்தி. இந்த அணுகுமுறையை செயல்பாடுகளில் கையாளும் ஒருவன், விருப்பு-வெறுப்பு எனும் மயக்கத்திலிருந்து விடுபட்டு கர்மயோகியாக மாறுகிறான்.
=> இருமையைக் கடந்தவன்:
இங்கு பகவான் நித்திய சந்யாசியை ‘நிர்த்3வந்த்3வ:’, இருமைகளற்றவன், இருமையிலிருந்து விடுபட்டவன் என அழைக்கிறார். இருமை என்பது விருப்பு-வெறுப்பு, சுகமான-சுகமற்ற சூழ்நிலைகள், வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம் போன்ற எதிர்மறைகளைக் குறிக்கின்றன. உண்மையில் அனைத்துவகை இருமைகளையும் விருப்பு-வெறுப்பு என்பதினுள் சுருக்கிவிட முடியும். ஏனெனில் ஒருவனது விருப்பு-வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்ட அவனது எதிர்பார்ப்பே ஒரு சூழ்நிலையை இன்பமானதாக அல்லது துன்பமானதாக மாற்றுகிறது; அதில் பந்தப்படுத்துகிறது.
ஆகவே ராக-த்வேஷத்தை முறைப்படுத்துதலும் கட்டுக்குள் வைத்தலுமே ஒருவனின் வாழ்க்கையை அவனது கட்டுக்குள் வைக்க வழிவகுக்கும். ஒருவனின் லெளகிக வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை மற்றும் அனைத்தையும் நிர்வகிப்பதை இந்த ராக-த்வேஷத்தை சரியாக நிர்வகிப்பது என்றே கூறலாம். இதனாலேயே முழு கீதையின் உளவியலும் விருப்பு-வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.
இறுதியாக, ஒரு ஞானியாக ஆக, பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைய, ஒருவன் நித்திய சந்யாசியாக மாறவேண்டும். ஒரு நித்திய சந்யாசி என்பவன் ஒரு ஞானியாகவோ அல்லது தேர்ந்த கர்மயோகியாகவோ இருக்கலாம். விருப்பு-வெறுப்பில் அகப்படாதவளவு தேவையான மனமுதிர்ச்சியை கொண்ட தேர்ந்த கர்மயோகியும், வெளிப்புற அடையாளங்கள் இல்லையெனினும் சந்யாசியே. மேலும் இத்தகையவன் எளிதில் பந்தத்திலிருந்து விடுபடுகிறான் — ஸுக2ம் ப3ந்தா4த் ப்ரமுச்யதே, என பகவான் கூறுகிறார். விருப்பு-வெறுப்பின் பிடியில் சிக்காத, மனமுதிர்ச்சியடைந்து தயாராக உள்ள ஒருவனுக்கு இந்த ஞானத்தை மறுக்க எதுவும் குறுக்கில் இல்லை. அத்தகையவன் பந்தத்திலிருந்து சிரமமின்றி வெளிவருகிறான். இங்கு ‘ஸுக2ம்’ என்பதை மகிழ்ச்சியாக எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே தயாராக இருக்கும் ஒருவன், சம்சாரத்திலிருந்து சுகமாக, எளிதில், மகிழ்ச்சியுடன் விடுவிக்கப்படுகிறான்.
* கர்மயோகத்தின் பலன் —> இருமைகளிலிருந்து விடுதலை அடைதல் —> இதன் பலனாக மன அமைதி —> இதன் மூலம் விவேக சக்தி வெளிப்படும்.
---------------------------------------------------------------------------------------------------------------------||5.4|| சந்யாசத்திற்கும் கர்மயோகத்திற்கும் ஒரே பலன்:
साङ्ख्ययोगौ पृथग्बाला: प्रवदन्ति न पण्डिता: ।
एकमप्यास्थित: सम्यगुभयोर्विन्दते फलम् ।। ४ ।।
ஸாங்க்2யயோகௌ3 ப்ருத2க்3பா3லா: ப்ரவத3ந்தி ந பண்டி3தா: ।
ஏகமப்யாஸ்தி2த: ஸம்யகு3ப4யோர்விந்த3தே ப2லம் ।। 4 ।।
बाला: பா3லா: குழந்தைகள்/சரியான சாஸ்திர ஞானமில்லாதவர்கள்
साङ्ख्ययोगौ ஸாங்க்2யயோகௌ3 கர்ம சந்யாசத்தையும் கர்மயோகத்தையும்
पृथक् ப்ருத2க்3 வெவ்வேறானவைகள் என प्रवदन्ति ப்ரவத3ந்தி பேசுகிறார்கள்
न पण्डिता: ந பண்டி3தா: பண்டிதர்கள் அப்படி பேசுவதில்லை एकम् अपि ஏகம் அபி ஏதேனுமொன்றை सम्यक् ஸம்யக் சரியாக आस्थित: ஆஸ்தி2த: அனுஷ்டித்தால் उभयो: உப4யோ: இரண்டினுடைய
फलम् ப2லம் பலனை विन्दते விந்த3தே பெறுகிறான்.
கர்ம சந்யாசத்தையும் கர்மயோகத்தையும் வெவ்வேறானவைகள் என சரியான சாஸ்திர ஞானமில்லாதவர்கள் சொல்லுகிறார்கள். பண்டிதர்கள் அவ்விதம் பேசுவதில்லை. இவற்றுள் ஒன்றை உறுதியாய் அனுஷ்டித்தால் இரண்டினுடைய பலனையும் பெறுகிறான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.
விளக்கம்:
இங்கு ‘ஸாங்க்2யயோகௌ3’ என்ற கூட்டுச்சொல்லில் சாங்க்யம் என்பது கர்ம சந்யாசத்தையும், யோகம் என்பது கர்மயோகத்தையும் குறிக்கிறது. கர்ம சந்யாசத்திற்கும் கர்மயோகத்திற்கும் சாதகர்கள் வேறு; சாதனைகள் வேறு. சந்யாசம் துறத்தலையும் யோகமானது திறமையாக செயல்படுதலையும் குறிக்கிறது. எனினும் பலன் ஒன்றே என்கிறார் கிருஷ்ணபகவான். சித்த சுத்தி —> ஞானம் —> மோக்ஷம். அந்தந்த ஆஸ்ரமத்திலிருப்பவர்கள், அந்தந்த கடமைகளைச் செவ்வனே செய்து வருவதனால் இப்பலன் கிடைக்கிறது.
ஞானத்தை அடைவது மட்டுமே மோக்ஷத்திற்கான நேரடிச் சாதனம். அறியாமையிலிருந்து தோன்றிய பந்தத்திலிருந்து விடுபட ஞானமே சாதனமாக இருக்க முடியும். சாஸ்திரத்தில் தனித்தனி பாதைகள் என எங்கும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கர்மங்களுடன் கூடிய ப்ரவ்ருத்தி வாழ்க்கைமுறை கர்மயோகம் என்றும், அனைத்து செயல்களையும் துறக்கும் நிவ்ருத்தி வாழ்க்கைமுறை சந்யாசம் அல்லது ஞானயோகம் என்றும் இரண்டு வாழ்க்கைமுறைகள் கூறப்பட்டுள்ளது அவ்வளவே. இரண்டுமே மோக்ஷத்தை அடைவிக்கும் வாழ்க்கைமுறையாகும்.
சந்யாசத்தையும், யோகத்தையும் வேறுபட்டவைகள் என மக்கள் வாதிடுகின்றனர். வழிமுறைகள் வேறாகையால் பலனும் வேறு என அவர்கள் கூறுகிறார்கள். சாஸ்திரத்தை படிந்து அறிந்தவர்கள், ஆனால் அதன் உட்கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களான இந்த அவிவேகிகளை பகவான் இங்கு, பாலர்கள்(பா3லா:) என அழைக்கிறார்.
ஒருவன் கர்மயோகியாகவோ அல்லது சந்யாசியாகவோ இருக்கலாம், ஆனால் ஞானத்தின் பலனாகத்தான் மோக்ஷம் கிடைக்கும். ஆகையால், இவ்விருவருமே ஞானத்தை பின் தொடர்தல் அவசியம். வெறும் வாழ்க்கைமுறையே முக்தியைக் கொடுக்காது.
=> ஸாங்க்யம் மற்றும் சந்யாசம் இரண்டும் ஒரே பொருள்:
இந்த சுலோகத்தில் பகவான் ஏன் சந்யாசம் என்ற சொல்லிற்கு பதிலாக ‘ஸாங்க்யம்’ என்னும் வார்த்தையை உபயோகித்துள்ளார்? இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில், சந்யாசம் மற்றும் கர்மயோகம் இரண்டில் எது தன்னை மோக்ஷத்திற்கு கொண்டு செல்லும் என அர்ஜுனன் கேட்டான். அதற்கு இரண்டாம் சுலோகத்தில், சந்யாசம் மற்றும் கர்மயோகம் இரண்டுமே முக்தியைக் கொடுக்கக்கூடியது என பகவான் கூறினார். மேலும் அதன் தொடர்ச்சியாக, சந்யாசியானவன் வெறுப்பற்றவன்; எதற்கும் ஏங்காதவன் என மூன்றாவது சுலோகத்தில் விளக்கினார்.
இங்கு நான்காவது சுலோகத்தில் கிருஷ்ணர் சந்யாசம் எனும் சொல்லை ஸாங்க்யம் என மாற்றுகிறார். இதிலிருந்து கிருஷ்ணர், ஸாங்க்யம் மற்றும் சந்யாசம் இரண்டும் ஒன்றே எனத் தெளிவாகக் காட்டுகிறார். ‘எந்த ஒன்று வேதாந்தத்தினால் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதோ அது —’, வேறு வார்த்தையில் கூறுவதானால் ‘அறிவு’, ஸாங்க்யம் எனப்படும். சாஸ்த்திரம் வெளிப்படுத்தும் அந்த அறிவு, ப்ரம்மத்திற்கும் ஆத்மாவிற்கும் இடையேயுள்ள ஐக்கியத்தை விளக்கும் ப்ரம்மஞானம் ஆகும். ஆகவே ஸாங்க்யம் என்பது ப்ரம்மஞானத்தை குறிக்கும்; முதன்மை அர்த்தத்தில் அது சந்யாசத்தைக் குறிக்கிறது. இந்த வார்த்தையை பகவான் ஏற்கனவே மூன்றாம் அத்தியாயத்தில், இரண்டு வாழ்க்கைமுறையை விவரிக்கும்போது உபயோகித்துள்ளார். இங்கு முந்தய சுலோகங்களில் சந்யாசம் என்ற சொல்லை பயன்படுத்தி அதன் தொடர்ச்சியாக உபயோகிப்பதால் அதே அர்த்தத்தில் இங்கு மீண்டும் பயன்படுத்தியுள்ளார் என சங்கரர் தனது உரையில் கூறுகிறார். ஆகவே இங்கு ‘ஸாங்க்யம்’ என்பது சந்யாசத்தை குறிக்கிறது.
அடுத்த சுலோகத்தில் சந்யாசி மற்றும் கர்மயோகி இருவரும் எப்படி ஒரே பலனை அடைகின்றனர் என்பதை விளக்குகிறார்.
-------------------------------------------------------------------------------------