செவ்வாய், 5 அக்டோபர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.18

||4.18|| கர்ம மற்றும் அகர்மத்தின் இயல்புகள்:

कर्मण्यकर्म य: पश्येदकर्मणि च कर्म य: ।

स बुद्धिमान् मनुष्येषु स युक्त: कृत्स्नकर्मकृत् ।। १८ ।। 

கர்மண்யகர்ம ய: பச்1யேத3கர்மணி ச கர்ம ய: ।

ஸ பு3த்3தி4மாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ।। 18 ।।


य:  ய:   யார்   कर्मणि  கர்மணி   செயலில்   अकर्म   அகர்ம செயலின்மையை   पश्येत्   பச்1யேத்   பார்க்கிறானோ  य:  ய:   யார் अकर्मणि च  அகர்மணி ச  செயலின்மையில்  कर्म  கர்ம  செயலை   (पश्येत्   பச்1யேத்   பார்க்கிறானோ)   स:  ஸ: அவன்   मनुष्येषु   மநுஷ்யேஷு   மனிதர்களுள்   

बुद्धिमान्  பு3த்3தி4மாந்  அறிவுடையவன்  स:  ஸ: அவன்  युक्त:  யுக்த:  யோகி/நிலைபெற்றவன்   

कृत्स्न-कर्म-कृत्   க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்  எல்லா செயல்களையும் செய்து முடித்தவன்.


கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் பார்ப்பவன் மனிதர்களுள் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு: 

செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.


விளக்கம்:

=> கர்ம_செயல்:

என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற இரண்டும் இங்கு ‘கர்ம_செயல்’ என்ற சொல்லுக்குள் அடங்குகின்றன. உதாரணமாக கொலை செய்வதும், ஒருவருக்கு உதவுவதும் இரண்டு வெவ்வேறு செயல்கள். கொல்வது, தடைசெய்யப்பட்ட செயல் — நிஷித்34 கர்ம; இனியொருவருக்கு உதவுவது என்பது கட்டளையிடப்பட்ட செயல் — விஹித கர்ம. வேதத்தில் ‘விதி(विधि)’ என்ற சொல்லானது, கட்டளையை அல்லது கடைபிடிக்க வேண்டிய ஒரு செயலைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒருவர் இன்னொருவரை காயப்படுத்தக்கூடும் என்பதால், ‘யாரையும் துன்புறுத்த வேண்டாம்(அஹிம்சை)’ என சுருதி நமக்குக் கட்டளையிடுகிறது. இதுபோல, மக்கள் பின்பற்ற வேண்டுமென கட்டளைகளாக சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்ற பட்டியல் உள்ளது. இவைகள் அனைத்தும் கர்மம். 


=> எதிரிடையாக(विरुद्ध) உபதேசிக்க காரணம் என்ன?

இந்த சுலோகத்தில் பகவானின் உபதேசத்தை மேலோட்டமாக பார்க்கும் போது எதிரிடையாக இருப்பதைப் போலத் தோன்றலாம். ஒரு பொருள் விபரீதமாக அறியப்பட்டிருந்தால், அதைப் புரிய வைக்க விபரீதமாகத்தான் உபதேசம் செய்தாக வேண்டும். கர்மம் பிரகிருதியின் இயல்பாகும். அகர்மம்(செயலின்மை) ஆத்மாவின் சொரூபம். அவிவேகிகள் இரண்டிற்குமிடையில் வித்தியாசம் தெரியாது குழப்பமடைகின்றனர். இதனால் செயலில்லாத ஒன்றில் செயலைப் பார்த்தல் என்ற விபரீதம் நடந்துள்ளது. உதாரணமாக, ரயில் வண்டி ஓடுகிறது. அதில் ஊர்ந்து செல்லும் சிறுவன் ஒருவன், நிலத்தில் நிற்கும் மரங்கள் தன்னை எதிர்த்து ஓடுவதாகக் காண்கிறான். இங்கு செயல் இல்லாத ஒன்றில் ஓடுதல் எனும் செயல் காணப்படுகிறது. இதை விளக்க முற்படும் அவனது தந்தை, முதலில் அந்தச் சிறுவனின் தவறான திருஷ்டியை எடுத்துக் கொண்டு — ‘நகர்ந்து கொண்டிருக்கும் மரங்கள்’, எனக் கூறி, பிறகு சரியானதை போதிக்கிறார் — ‘உண்மையில் நகராமல் உள்ளது’. அதாவது இருவரின் பார்வையும் ஒன்றாக்கப்பட்டு, பின் உபதேசம் செய்யப்படும் போதே, விஷயம் சரியாக சிஷ்யனைச் சென்றடைகிறது.


=> முதல் பகுதி — ‘செயலில் செயலின்மையைப் பார்த்தல்’:

ஆத்மா அகர்த்தா; இருத்தல் சொரூபம்; அறிவு சொரூபம். அனாத்மா அல்லது பிரகிருதி, கர்த்தா; அறியப்படும் பொருள். உண்மையில் ஆத்மாவிடமிருந்து இருத்தலை வாங்கிக் கொண்டு செயல் செய்வது, ஸ்தூல மற்றும் சூக்ஷம சரீரங்களான இந்த உடல் மற்றும் மனம். ஆனால் அனாத்மாவான இவற்றின் செயலை ஆத்மாவில் ஏற்றி, ‘நான் பார்க்கிறேன், நான் செய்கிறேன்…’ என்கிறான் அவிவேகி. ‘நான்’ என்பதன் உண்மைப் பொருள் ஆத்மா. ஆகவே செயலற்ற ஆத்மாவில் செயலை ஏற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ‘நீ ஆத்மாவிடம் எந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயோ, அந்தச் செயல்கள் ஆத்மாவிடம் இல்லை’. சிஷ்யனின் புத்தியை வாங்கிக் கொண்ட குருவின் வாக்கியம், அனுவாதம் எனப்படும். 

‘சாட்சியாக உள்ள ஆத்ம சொரூபம் நான்; அகர்த்தா; செயல் செய்யாதவன். என்னுடைய இருப்பில் உடலும், மனமும் கர்மங்களைச் செய்கிறது’. இதை தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தினால், அனாத்மாவின் செயல்கள் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டு, ஆத்மா செயல் செய்வதாகப் பார்க்கிறோம். குதிரையில் பயணம் செய்பவர், குதிரை ஓடும் போது அவரும் சென்று கொண்டிருப்பதாகவும், அது நிற்கும் போது தானும் நிற்பதைப் போலவும் உணர்வது, அவர் அவ்விதம் அந்த குதிரையோடு சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ள காரணத்தினாலேயே ஆகும். ஆகவே உடல் செய்யும் கர்மமெல்லாம் ஆத்மாவைச் சேர்வதில்லை. ‘ஆத்மாவைச் செயலற்றவனாக யார் பார்க்கிறானோ…’


=> இரண்டாம் பகுதி — ‘செயலின்மையில் செயலைப் பார்த்தல்’:

கடலில் தூரத்தில் ஓடும் கப்பல் கரையிலிருந்து பார்ப்பவனுக்கு அசையாமல் நிற்பதுபோலத் தென்படும். இங்கு அக்ஞானத்தால் கர்மம் அகர்மமாக விளங்குகிறது. ஆனால் அதில் செயலைப் பார்க்க வேண்டும். அதுபோல, உடல்(ஸ்தூல, சூக்ஷம) செயல் செய்யாமலிருக்கும் போது, ‘நான் செயல்படவில்லை’ எனக் கூறுகிறோம். உடலானது ரஜோகுணத்தினால் சில சமயம் சுறுசுறுப்பாக செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். சில சமயம், சத்வ அல்லது தமோ குணத்தினால் அமைதியாக இருக்கலாம். இங்கு அமைதியாக இருப்பதும்கூட செயலேயாம். ஏனெனில் இவ்வகையான செயலின்மையில் செயலின் விதை(கர்ம பீஜம்) உள்ளது. ஆகையினால் செயல் செய்யாது உட்கார்ந்திருந்த போதிலும், அகங்காரமும் கர்த்ருத்வமும் இருக்கும்வரை அவன் கர்மம் செய்பவனே ஆகிறான். இந்த அக்ஞான நிலை அகர்மத்தில் கர்மம் என்பதாகும். 

ஆனால் ஆத்ம சொரூபத்தை அறிந்த ஞானிக்கு அகங்காரமில்லை. அவனது உடல் ஓயாது வேலை செய்தாலும் ஆத்மா சாக்ஷியாயிருக்கிறது. ஒரு கர்மத்தோடும் அது சம்பந்தப்பட்டதல்ல. அதாவது உடல் செய்யும் கர்மமெல்லாம் ஆத்மாவைச் சேர்வதில்லை. இதுவே ‘கர்மத்தில் அகர்மம்(செயலில் செயலின்மையை பார்த்தல்)’ என்ற பெருநிலையாகும். ஞானியர்க்கும் நல்ல விவேகமுடையவர்க்குமே இது சாத்தியமாகிறது.


=> இந்த ஞானத்தின் பலன்:

பொதுவாக, ஒரு சிலர் தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளை பாரமாக நினைத்து, செயல் செய்யாத மற்றும் கடமைகளற்ற தன்மையையே முக்தி என நினைக்கிறார்கள். சப்தமில்லாத சூழ்நிலையே அமைதி என்றும் மனதில் எண்ணங்கள் இல்லாமலிருப்பது மோக்ஷம் என்றும் நினைத்து, தங்களது அமைதிக்கு உடலையும், மனதையும் சூழ்நிலைகளையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவைகளை செயலற்றதாக மாற்ற முடியும் என்ற அக்ஞானம் கொண்டவர்களாக இவர்கள் பெரிய தவறை செய்கிறார்கள். ‘இது இயற்கையில் நடக்காது’, என்கிறார் பகவான். ஏனெனில் உடல், மனம் மற்றும் சூழ்நிலைகள் கர்ம சொரூபம்.

உடல் மற்றும் மனம் செயல் செய்து கொண்டிருந்தாலும், செயல்படாமலிருந்தாலும், வெளிச்சூழலில் சப்தமிருந்தாலும், அமைதி நிலவிய போதும், ‘நான் ஆத்மா, அகர்ம சொரூபம். கர்ம சொரூபமான இவைகள் என்னை பாதிக்காது. என் அமைதிக்கு எந்த நிபந்தனையும் இல்லை’, எனும் ஞானமே மோக்ஷம். உதாரணமாக, திரையில் படம் ஓடினாலும், ஓடாமலிருந்த போதிலும் அது திரையை பாதிப்பதில்லை. திரை அஸங்க சொரூபம்.

ஒரு மனிதனின் மிகப் பெரிய சம்சாரமே, ‘நான் ஏன் இதைச் செய்தேன்? நான் ஏன் இதைச் செய்யவில்லை?’ என்ற நிறைவின்மையே ஆகும். அதாவது எவைகளை ‘நான் செய்தேன்’ என்று நினைக்கிறோமோ அவைகளே நம்மை வாட்டுகின்றன. ‘ஆத்மாவாகிய நான் எதையும் செய்வதில்லை. உடல் மற்றும் மனம் அவைகளைச் செய்து அதற்கான பலன்களையும் அனுபவிக்கின்றன. நான் சாக்ஷி’, எனும் ஞானம் அனைத்து குற்ற உணர்வையும் எடுத்துவிடுவதால் மனநிறைவு உண்டாகிறது.

=> எல்லா செயல்களையும் செய்து முடித்தவன்(க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்):

மேற்கூரிய ஞானத்துடன் தனது மெய்மையை உணர்ந்த ஜீவன்முக்தனை இங்கு பகவான் ‘மனிதர்களுள் அறிவுடையவன் - மநுஷ்யேஷு பு3த்3தி4மாந்’ என்கிறார். ‘புத்திமான்’ என்பதன் பொருள் நாம் ஏற்கனவே பார்த்த ‘தனவான்’ என்ற சொல்லை ஒத்தது. வெறுமனே பணத்தை வைத்திருப்பவன் செல்வந்தனாகிவிட முடியாது. தனக்காகவும், தேவைப்படும் போது மற்றவர்களுக்காகவும் செலவழிக்க பணம் மற்றும் மனம் உள்ள ஒருவனே பணக்காரன் ஆகிறான். அவ்விதம் செலவழிக்காமல் சேர்த்து சேர்த்து வைக்கப்பட்ட, உபயோகமில்லாத பணத்தை உடையவனை, கருமி என்றும் கஞ்சன் என்றும் வழக்கத்தில் நாம் அழைக்கிறோம்.  

அதுபோல, பிருஹதாரண்யக உபநிஷதத்தில், யாக்ஞவல்க்யர் தனது மனைவியான கார்கியிடம், ‘ப்ரம்மத்தை அறியாமல் இறப்பவன் ஒரு கருமி, துன்பகரமானவன்’ என்கிறார். ஏன் அவன் கருமியாக கருதப்படுகிறான்? ஏனெனில், அவனது புத்தியை தேவையான ஒன்றிற்கு உபயோகிக்காமலேயே இருந்த காரணத்தினால். பெரும்பாலானோர், தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லுமளவு மட்டுமே சிந்திக்க அந்த புத்திக்கு பயிற்சியளித்து, மற்றபடி அதை பெரிதும் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். தனது புத்தியை செலவழிக்காத ஒவ்வொருவரும் கருமியே ஆவர்.

உண்மையான சிந்தனை என்பது யதார்த்தங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும். நிழல்களையே கையாளும் ஒருவனுக்கு யதார்த்தம் தெரியாவிட்டால், அவன் தேவையில்லாத இடத்தில் ஜெயிப்பதற்காகப் போராடிக்கொண்டிருப்பான். ஆகவே தன் சுயத்தைப் பற்றிய அடிப்படை மெய்மையையும், உலகம் மற்றும் இறைவனின் தன்மையையும் சிந்தித்து, அதை என்னவென்று அறிந்தவன் புத்திமான். அந்த ஞானி, தான் பெற்ற அறிவை தனக்காக பயன்படுத்திக் கொள்வதோடு, வாய்ப்பு கிடைக்கும் போது அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறான். இவ்வாறு, புத்தியுள்ள மனிதர்களுள் அதைச் சரியாக பயன்படுத்திய அறிவுடையவன் — ‘மநுஷ்யேஷு பு3த்3தி4மாந்’. இந்த யோகியானவன் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவன் — க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத், என்கிறார் கிருஷ்ணபகவான்.

ஆத்மாவை அகர்த்தா எனக் கண்டறிந்ததன் மூலம் இந்த புத்திமான் அனைத்து கர்மங்களையும் முற்றிலுமாக அழித்துவிட்டான். இந்த ஞானம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதல்ல. அகர்த்தாவாக அறிப்பட்ட மெய்ப்பொருள் மீண்டும் ஒருபோதும் கர்த்தாவாக மாறாது. தனது சுய சொரூபத்தை பூர்ணமானது என அறிந்ததனால் அவன் எங்கும் எதுவும் செய்யவேண்டியதில்லை. அஸங்கமாக தன்னை அறிந்தவன் கர்த்தா மற்றும் போக்தா என்பதிலிருந்து விடுபடுவதோடு, அதனுடன் சம்பந்தப்பட்ட சுகம் மற்றும் துக்கம் என்ற சம்சார இருமையிலிருந்தும் விடுபடுகிறான். இந்த ஞானம் ஒருவனை ‘க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்’-வாக, செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவனாக ஆக்குகிறது. அவன் தனது மகிழ்ச்சிக்காக வேறெதுவும் செய்ய வேண்டியதில்லை. பல பிறப்புகளெடுத்து நிறைவேற்ற வேண்டிய கர்மங்கள் அனைத்தும் நிறைவேறிவிட்டன. எல்லா கர்மங்களும் முழுமையாக கவனிக்கப்பட்டுவிட்டன. 


=> ஶ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்:

ஶ்ரீ கிருஷ்ணனும் அர்ஜுனனுன் அமர்களத்துக்கு வருகிறார்கள். பகவான் தேர் ஓட்டுகிறார். பார்த்தன் போருக்கு ஆயத்தமாக வருகிறான். யாரை எதிர்த்து எத்தகைய கடும்போர் புரிந்தாக வேண்டும் என்ற யதார்த்தம் இப்பொழுதுதான் அர்ஜுனனுக்கு திடீரென்று விளங்குகிறது. எட்ட எறிகிறான் அம்பையும் வில்லையும். வேண்டாம் இவ்வெம்போர் என்று விளம்புகிறான். செயலற்றுச் சும்மா உட்கார்ந்துவிடுகிறான். 

ஒன்றோடொன்று ஒவ்வாத இரண்டுவிதக் காட்சிகளை இப்பொழுது பகவானும் பார்த்தனும் தருகிறார்கள். கர்மத்தில் அகர்மத்துக்கு விளக்கமாக வந்தமைகிறது பகவானது பெற்றி. தேர் கடவும் கடமை அவருடையது. அதில் பூட்டியுள்ள வேகம் வாய்ந்த வெண்குதிரைகள் நான்கையும் இடது கையில் அவர் கெட்டியாகப் கயிற்றால் பிடித்துக்கொண்டிருக்கிறார். கீதோபதேசம் செய்வதன் புறச்சின்னமாக வலது கையில் அவர் சின்முத்திரை தாங்கியிருக்கிறார். கைகள் இரண்டும் இப்படிச் செயலில் ஈடுபட்டிருக்கையில் முகவிலாசம் மற்றொரு காட்சி தருகிறது. அங்குச் சாந்தி தவழ்கிறது. மனம் மலைபோன்று அசையாதிருக்கிறது என்று அது விளக்குகிறது. கர்மம் பிரகிருதியோடு சேர்ந்தது. புருஷன் கர்மம் செய்வதில்லை என்ற பேருண்மையை ஶ்ரீகிருஷ்ணன் என்ற பெயர்பூண்டுள்ள மூர்த்தியானவர் விளக்குகிறார். விரைந்து வினையாற்றுதற்கிடையில் விச்ராந்தி - கர்மத்தில் அகர்மம் என்ற கோட்பாட்டிற்கு அவரே சான்றாகின்றார்.

இனி, அர்ஜுனன் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டுச் செயலற்றிருப்பவனாகத் தென்படுகிறான். பெயரளவில் வினையைத் துறந்துவிட்டான். அவனுக்கு மனதுக்குள் ஒரே குழப்பம். அச்சம் ஒருபுறம் அவனை அல்லற்படுத்துகிறது. மற்றொருபுறம் துன்பம் தேகத்தைத் துளைக்கிறது. அகத்தின் நிலைகுலைவு அவன் முகத்தில் மிளிர்கிறது. கர்மத்தைத் துறந்தவனாகத் தென்படுபவன் கர்மத்தில் காய்கிறான். அவனது நிலை அகர்மத்தில் கர்மமாகும்.

உலக வாழ்க்கையை யோகி ஒருவன் எங்ஙனம் நடாத்த வேண்டும் என்று யோகேசுவரனாகிய கிருஷ்ணன் தாமே நடாத்திக் காட்டுகிறார். முறைதெரியாது மனிதன் ஏமாற்றம் அடைந்துவிடலாகாது என்பதற்கு அர்ஜுனனுடைய கீழ்நிலையே எடுத்துக்காட்டாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------