||4.24|| எதனால் ஞானி செய்யும் செயல் பந்தத்தைக் கொடுப்பதில்லை?
ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ।। २४ ।।
ப்3ரஹ்மார்பணம் ப்3ரஹ்ம ஹவிர்ப்3ரஹ்மாக்3நௌ ப்3ரஹ்மணா ஹுதம்।
ப்3ரஹ்மைவ தேந க3ந்தவ்யம் ப்3ரஹ்மகர்மஸமாதி4நா ।। 24 ।।
अार्पणं அர்பணம் அர்ப்பணம் செய்தல் ब्रह्म ப்3ரஹ்ம ப்ரம்மம் हवि: ஹவி: நெய் முதலிய ஹவிஸ்
ब्रह्म ப்3ரஹ்ம ப்ரம்மம் ब्रह्म-अग्नौ ப்3ரஹ்ம-அக்3நௌ ப்ரம்மமாகிய அக்னியில்
ब्रह्मणा ப்3ரஹ்மணா ப்ரம்மத்தால் हुतम् ஹுதம் கொடுக்கப்படுகிறது
ब्रह्म-कर्म-समाधिना ப்3ரஹ்ம-கர்மஸமாதி4நா ப்ரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்துள்ள
तेन தேந அவனால் ब्रह्म एव ப்3ரஹ்ம ஏவ ப்ரம்மமே गन्तव्यं க3ந்தவ்யம் அடையப்படுகிறது.
அர்ப்பணம் செய்தல் ப்ரம்மம்; நெய் முதலிய ஹவிஸும் ப்ரம்மம்; ப்ரம்மமாகிய அக்னியில் ப்ரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. ப்ரம்மமாகிய கர்மத்தில் மனம் குவிந்துள்ளவனால் ப்ரம்மமே அடையப்படுகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.
விளக்கம்:
முந்தைய பகுதியில், ஆத்மாவின் தன்மை அகர்தா என விவரிக்கப்பட்டது, அதாவது சுய சொரூமானது எந்த செயலையும் செய்யாது. புத்திக்கு சொந்தமான எண்ணங்களைச் சார்ந்த எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் செயல் நடைபெறுகிறது. உடல்(காய), பேச்சு(வாக்) மற்றும் மனம்(மனஸ்) ஆகிய மூன்று கரணங்களின் மூலமாகவே எந்தவொரு செயலும் நடக்கிறது. உதாரணமாக, பிரார்த்தனை என்பது, மனதினாலோ அல்லது வாய்மொழி செயலாகவோ அல்லது கை, கால் போன்ற உடல் உறுப்புகள் துணையுடன் செய்யப்படும் சடங்காகவோ நடைபெறலாம். இவை மூன்றுமே மனதை உள்ளடக்கியது.
ஆத்மா என்பது எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக உள்ள இந்த உடல்-மனம்-புலன்களின் கூட்டமாக இருந்தால், ‘நான்’ என்பவன் நடிக்கும் பாத்திரமாக அல்லாமல் நடிகனாகவே மாறிவிடுகிறான். அதேசமயம், ஆத்மா இந்த கூட்டமாக இல்லாதபோது, அது உடல், மனம் மற்றும் புலன்களிலிருந்து விடுபடுகிறது. உண்மையில் ஆத்மா தூய பிரக்ஞை வடிவமாக(சுத்த-சைத்தன்ய-சொரூபம்) இருப்பதால், எப்போதும் எந்த செயலையும் செய்யாது. இதனாலேயே, ஒரு ஞானி செயலைச் செய்யும்போது கூட, ‘நான் செயல் செய்பவன்’ எனும் பாவனை அவனிடம் இல்லாததால், அவன் எந்த செயலையும் செய்வதில்லை என்று கூறப்பட்டது(4.20).
ஒரு ஞானி எப்படி இருக்க வேண்டும் என்பதில் எந்த நியதியும் இல்லை. ஒரு சிலர் அயராது செயலில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக இருக்கக்கூடும்; மற்றொருவர் சந்யாசியாக, உடலை தக்கவைத்துக் கொள்ள மட்டும் வினையாற்றுபவராக — கேவலம் சா1ரீரம் கர்ம(4.21) இருக்கலாம். ஆகவே அவர் எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக செயல் செய்கிறார் என்பது பொருட்டல்ல. ஆத்மாவை அகர்த்தாவாக பார்ப்பதே இங்கு முக்கியம்.
=> எதனால் ஞானி செய்யும் செயல் பந்தத்தைக் கொடுப்பதில்லை?
இக்கேள்வியின் விடை, ப்ரம்ம திருஷ்டி. அதாவது, அனைத்திலும் ப்ரம்மத்தையே பார்க்கின்ற காரணத்தினால் ஞானி பந்தப்படுவதில்லை.
‘ஜகத்_உலகம்’ என்பதன் ஒரு லக்ஷணம்,
க்ரியா காரக பலாத்மகம் ஜகத்
காரகம் - எதனால் க்ரியை(செயல்) நடத்தப்படுகின்றதோ அது காரகம்; ஒரு செயலின் உற்பத்திக்கு காரணமாக இருப்பது.
காரகத்திலிருந்து உற்பத்தியாவது க்ரியா —> க்ரியாவிலிருந்து பலன் உற்பத்தியாகிறது. உலகமானது க்ரியை, காரக மற்றும் பல ரூபமாக உள்ளது.
=> ஆறு வித காரகங்கள்(வேற்றுமை உருபு):
சமஸ்கிருத இலக்கணத்தில் வேற்றுமைகள் ‘காரகங்கள்’ என அழைக்கப்படும். பின்வரும் ஆறு காரகங்கள் செயல் உருவாக அங்கம் வகிக்கிறது.
(1) கர்த்தா (செய்பவன், வினைமுதல்; subject)
(2) கர்ம (செய்பொருள்; object)
(3) கரணம் (கருவி; instrument)
(4) சம்பிரதானம் (பெற்றுக் கொள்பவர்; Receiver)
(5) அபாதானம் (நீக்கம்; point of separation) [எதனிடமிருந்து நீங்குகிறதோ]
(6) அதிகரணம் (இடம்; location) [நடைபெறும் இடம்]
இவை ஆறில், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ சேர்ந்து க்ரியை உற்பத்தியாகிறது. இவைகளில் எதுவுமில்லாமல் செயல் உற்பத்தியாகாது. குறைந்தபட்சம் கர்த்தா அவசியம்.
* காரகம் என்பது ஒருவித துவைத புத்தி; வேற்றுமைகளை பிரதானமாக்கி பார்க்கும் புத்தி.
* ஞானி உலகத்தை காரக புத்தியுடன், அதாவது இந்த ஆறுவித பேதத்துடன் பார்ப்பதில்லை. உதாரணமாக எதையும் கர்த்தாவாகவோ, கரணமாகவோ பார்ப்பதில்லை.
* நியதி என்னவெனில், காரக புத்தியில்லாமல் ஒரு கர்மம் வெளிப்பட்டால் அது கர்மம் அல்ல. உதாரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் அருகிலிருப்பனை உதைக்கும் ஒருவனிடம், உதைப்பட்டவன் கோபித்துக் கொள்வதில்லை. காரணம், தன்னையறியாமல், ‘நான் செய்கிறேன்’ எனும் கர்த்ருத்வமில்லாமல் வெளிப்பட்ட செயல் அது.
* வழக்கத்தில் த3க்3த4 பட நியாயம் (दग्ध पट न्याय), என்றொரு நியாயம் உள்ளது. எரிக்கப்பட்ட துணியானது பார்வைக்கு துணிபோலத் தெரிந்தாலும், துணி கொடுக்கும் பலனை அது கொடுப்பதில்லை. அதுபோல காரக புத்தியை துறந்த ஞானியினால் செய்யப்படும் கர்மம், பார்ப்பதற்கு செயல்போலத் தெரிந்தாலும் அதனால் கர்மபலன் உண்டாவதில்லை.
=> யக்ஞத்தின் காரகங்கள்:
இங்கு கிருஷ்ணர் வேள்வி எனும் வேதச் சடங்கின் மூலம் ப்ரம்ம திருஷ்டியை விரித்துக் காட்டுகிறார். வேள்விச் சடங்கு என்பதும் பிரார்த்தனை போலவே ஒரு செயலாகும்; நோக்கம் மற்றும் முடிவுடன் கூடியது. இதில் ஒரு குறிப்பிட்ட முடிவை விரும்பும் ஒரு நபரும், அதற்கான ஒரு முறையான வழிமுறையும் உள்ளது. ஒரு செயலின் கர்த்தா, பொருள், அதற்கான கருவி, அதன் நோக்கம், செயல் உருவாகும் இடம், எதை நோக்கிச் செயல் செல்கிறது (செல்லும் இடம்) என ஒரு செயலில் சம்பந்தப்பட்ட அனைத்து காரணிகளும்(காரகங்கள்) இந்த சுலோகத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
யக்ஞம் எனும் கர்மத்திலிருக்கும் பேதத்தை பின்வருமாறு கூறலாம்:
1. கர்த்தா - எஜமானன்
2. கர்ம - ஹவிஸ் (பால், நெய் முதலியன)
3. கரணம் - அர்ப்பணம் (கருவி: கரண்டி)
4. அதிகரணம் - அக்னியில் (அ) ஹோமகுண்டத்தில்
5. பலன் - சொர்க்கம் (அ) சங்கல்பம்
ஒரு ஞானி இந்த அனைத்து காரகத்திலும் ப்ரம்மத்தையே பார்க்கின்றான் எனும் கருத்தை இங்கு கிருஷ்ணர் தெரிவிக்க விரும்புகிறார். அர்ப்பணம் கொடுக்கும் கருவி, ப்ரம்ம — ப்3ரஹ்மார்பணம். இங்கு ‘அர்பணம்’ என்பது எதைக் கொண்டு வழங்கப்படுகிறதோ — ‘அர்ப்யதே அநேந இதி அர்பணம்’. எது வழங்கப்படுகிறது? ஹவிஸ் படையலாக அளிக்கப்படுகிறது, அதுவும் ப்ரம்ம — ப்3ரஹ்ம ஹவி:. எதில் படையல் படைக்கப்படுகிறது? ப்3ரஹ்ம-அக்3நௌ — அக்னி எனும் ப்ரம்மனில். யாரால் படையல் வழங்கப்படுகிறது? ப்ரம்ம எனும் கர்த்தாவினால் — ப்3ரஹ்மணா ஹுதம். ஆகவே, செயல் செய்பவனும் ப்ரம்ம. எதற்காக படையல் அளிக்கப்படுகிறது? ப்ரம்மத்தை பெறுவதற்காக மட்டுமே இது அளிக்கப்படுகிறது — ப்3ரஹ்ம ஏவ தேந க3ந்தவ்யம். யாரால் இந்த ப்ரம்ம அடையப்படுகிறது? எல்லாவற்றையும் ப்ரம்மமாக பார்க்கும் ஒருவரால் ப்ரம்ம அடையப்படுகிறது — ப்3ரஹ்ம-கர்ம-ஸமாதி4நா .
‘அர்பணம்’ என்பது வேள்வியின் போது அக்னி குண்டத்தில் படையலை அளிக்க பயன்படுத்தப்படும் கருவி; கரண்டி மற்றும் மந்திரம் இரண்டையும் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சாடனம் செய்து ஹவிஸானது அக்னிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த மந்திரமானது எந்த கடவுளிற்கு அல்லது தேவதைக்கு அந்த ஹவிஸ் படைக்கப்படுகிறது என்பதை குறிக்கிறது. உதாரணமாக, ‘இந்த்ராய ஸ்வாஹா, இந்த்ராய இதம் ந மம’ எனும் மந்திரம் இந்திர தேவனைக் குறித்து உச்சாடனம் செய்யப்படுகிறது. ‘இது இந்திரனுக்காக வழங்கப்படுகிறது; (இது) இனி என்னுடையது அல்ல’ என்பது பொருள். இவ்விதமாக ஒரு குறிப்பிட்ட தேவதைக்கு படையலை, ‘இது உங்களுடையது; நான் இதை உங்களுக்கு தருகிறேன். இது இனி என்னுடையது அல்ல’, எனக் கூறி அர்ப்பணிப்பது ‘அர்பணம்’ ஆகும்.
சரி, கரண்டியோ அல்லது மந்திரமோ இது எப்படி ப்ரம்மனிலிருந்து வேறானதாக இருக்க முடியும்? எதுவும் ப்ரம்மத்திடமிருந்து வேறானதாக இல்லை. ஒலி ப்ரம்ம, சொல் ப்ரம்ம, அறிவு ப்ரம்ம, இந்திரன் ப்ரம்ம. எல்லாம் ப்ரம்மத்திலிருந்து பிரிக்கப்படாதவை. ப்ரம்ம-புத்தி அல்லது ப்ரம்ம-திருஷ்டி காரணமாக, ஞானி அனைத்திலும் ப்ரம்மத்தையே பார்க்கிறான்.
=> சாமானாதிகரண்யம்(ப்3ரஹ்மார்பணம் — ப்3ரஹ்ம + அர்பணம்):
இலக்கணத்தில், சாமானாதிகரண்யம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களுக்கு இடையே உள்ள சம்பந்தத்தை குறிப்பதாகும். இரண்டு சொற்களும் ஒரே பொருளை குறிக்கும் போது அவைகள் இரண்டிற்கும் சாமானாதிகரண்ய சம்பந்தம் இருக்கிறது. இப்போது இரண்டுவிதமான சாமானாதிகரண்யத்தை அறிந்து கொள்வதன் மூலம் ‘ப்ரஹ்மார்பணம்’ என்ற சொல்லின் பொருளை புரிய முயற்சி செய்வோம்.
(1) ஐக்கிய சாமானாதிகரண்யம்:
சம்பந்தத்திற்குட்படும் இரு சொற்களும் ஒரே வேற்றுமையில்(காரகத்தில்) இருத்தல். உதாரணம்., ‘ராமர் வீரராக உள்ளார்’. ராமர் மற்றும் வீரர் இரண்டு சொற்களும் கர்த்தா எனும் வேற்றுமையை சார்ந்தது. அதாவது, ராமர் = வீரர். ராமரே வீரர் என்ற பொருளில் இரண்டு சொல்லிற்கும் முழுமையான ஐக்கியம் உண்டாகிறது. ‘ஜீவன் ப்ரம்மனாக இருக்கின்றான்’; ஜீவன் = ப்ரம்மன். இரு சொற்களும் ஐக்கியப்படுவதால் இது ஐக்கிய சாமானாதிகரண்யம்.
(2) பா3தா4யாம் சாமானாதிகரண்யம்:
ஒன்றை நீக்கி ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்ளுதல் பா3தா4யாம் சாமானாதிகரண்யம் எனப்படுகிறது. உதாரணம்., ‘ஜகத் ப்ரம்ம அஸ்தி’. ஜகத்(உலகம்) ப்ரம்மமாக உள்ளது. இங்கு ஜகத் என்பது இல்லை. ப்ரம்ம மட்டுமே உள்ளது என்பது பொருள். அதாவது ‘ஜகத்’ என்பது நீக்கப்பட்டு ‘ப்ரம்ம’ என்பது மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. பா3தா4 — நீக்குதல். ஆக, ஒன்றை நீக்கி ஒன்றைக் காட்டுதல் பா3தா4யாம் சாமானாதிகரண்யம் ஆகும். இங்கு ‘ப்3ரஹ்மார்பணம் — ப்3ரஹ்ம + அர்பணம்’ என்பது பா3தா4யாம் சாமானாதிகரண்யத்தில் உள்ளது. அர்ப்பணத்தின் இல்லாமையை(அபாவத்தை), ப்ரம்மனிடத்தில் பார்த்தல். இவ்விதம் காரகங்கள் நீக்கப்பட்டு துவைத தர்ஷணம் நீக்கப்படுகிறது.
=> ஞானிக்கு துவைத புத்தி இல்லை:
‘பானை களிமண்ணால் செய்யப்பட்டது’ என கூறும்போது, அதில் ‘பானை’ என்பது பெயரும் வடிவமும்(நாமரூபம்) மட்டுமே; தற்காலிகமானது. களிமண் எனும் மூலப்பொருளே ஆதாரம்; என்றுமுள்ளது, அதாவது ‘பானை’ தோன்றுவதற்கு முன்னும், தோன்றிக்கொண்டிருக்கும் போதும், அது உடைந்த பிறகும் என முக்காலத்திலும் இருப்பது களிமண்ணே. ஆகவே இருவித புத்தியில் பானை என்பது பொய்யான புத்தி, மித்யா. களிமண் என்பது உண்மையான புத்தி, சத்யம். களிமண் என்பது ஆதார தத்துவம், அது பானையாக தெரிவது மித்யா. தங்கம் என்பது ஆதாரம், அது வளையலாக, மோதிரமாக தெரிவது மித்யா என்பதை ஞானி புரிகிறான். என்றாலும், பொய்யான புத்தி மற்றும் உண்மையான புத்தி என இரு எண்ணம் உள்ளதே என வாதிட்டால் அது சரியே. ஆனால் ஞானம் வந்த பின் இந்த துவைதம் நீங்குகிறது. உலகம் எனும் தோற்றம் பொய் என்ற புத்தியும், இவையனைத்திற்கும் ஆதாரமாக உள்ள ப்ரம்ம மட்டுமே உண்மை என்ற அறிவும் அவனிடம் திடமாக நிலைக்கிறது. இவ்விதம் அனைத்திலும் ப்ரம்மத்தையே பார்ப்பதால்(ப்3ரஹ்ம-கர்மஸமாதி4நா) ஞானி அவனுடைய கர்மங்களினால் பந்தப்படுவதில்லை.
=> ப்ரம்ம திருஷ்டி:
ஒருவர் எல்லா இடங்களிலும் ப்ரம்மத்தை எப்படிப் பார்க்க முடியும்? உண்மையில், சுய சொரூபமே ப்ரம்மமாக இருப்பதால், ‘நான்’ என்பதை ஒரு பொருளைப் பார்ப்பதைப் போல பார்க்க இயலாது. ஆகவே ப்ரம்மத்தையே பார்த்தல், அதாவது ப்ரம்ம திருஷ்டி என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
எந்தவொரு எண்ணத்தின் அறிபொருளும் பிரக்ஞையாகிய ப்ரம்மத்திடமிருந்து பிரிக்கப்படாதது. மேலும் அப்பொருள் பற்றிய அறிவும், எண்ணத்தின் வடிவிலேயே வெளிப்படுவதால் அதுவும் பிரக்ஞையிடமிருந்து பிரிக்கப்படாதது. அப்பொருளின் அறிவை கொண்டவனை அறிவதும் பிரக்ஞை எனும் உணர்வு சொரூபமே. எனவே, அறிபவன்(ஞாத்ரு), அறிவு(ஞான), அறிபொருள்(ஞேய) என அனைத்தும் பிரக்ஞை, ப்ரம்ம.
எந்தவொரு ப்ரம்ம, நிர்விகல்பமாக அதாவது அறிபவன்-அறிவு- அறிபொருள்(ஞாத்ரு-ஞான-ஞேய-பே3த) எனும் வித்தியாசமற்றதாக உள்ளதோ அது ‘நான்’, ஆத்மா. பொதுவாக ‘நிர்விகல்பம்’ எனில் எண்ணங்களற்ற நிலை என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அது அறிபவன், அறிவு மற்றும் அறிபொருள் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இல்லாததையே சுட்டிக்காட்டுகிறது. ஆகவே ‘நான் நிர்விகல்பமானவன்’ என்பது வேறுபாடுகளற்ற, இரண்டாவதற்ற தன்மை. இதேபோல், பார்த்தல் நிகழும்போது, பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் அனைத்தும் ப்ரம்ம. கேட்டல் நிகழும்போது, கேட்பவன், கேட்டல், கேட்கப்படுவது அனைத்தும் ப்ரம்ம — ஸர்வத்ர ப்ரம்ம தர்ஷணம். ஆகவே, செயல் நிகழும்போது, செய்பவன், செயல் மற்றும் அது சம்பந்தப்பட்ட அனைத்தும் ப்ரம்ம. இவ்வாறு, இந்த சுலோகம் ஆத்மா குறித்த பார்வையை காட்டிக்கொடுக்கிறது. இப்படிப்பட்ட அறிவினால் கர்மங்களை விட்டுக்கொடுத்தல், துறத்தல் ‘ஞான-கர்ம-சந்யாஸம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் தலைப்பும் இதுவே.
‘ப்3ரஹ்ம-கர்மஸமாதி4நா’ என்பது எல்லாவற்றையும் ப்ரம்மமாக அங்கீகரிக்கும் புத்தியைக் கொண்ட ஒருவனைக் குறிக்கிறது — ப்ரம்ம ஏவ கர்ம = ப்ரம்ம-கர்ம; ब्रह्मैव कर्म ब्रह्मकर्म, तस्मिन् समाधि: यस्य, स: ब्रह्मकर्मसमाधि:. இப்படிப்பட்டவன் எதை அடைகிறான்? அனைத்துமே ப்ரம்மமாக இருக்கும்போது எதை அடையமுடியும்? ப்ரம்மத்தை தவிர வேறு எதை அடையமுடியும்! அவன் ப்ரம்மத்தையே அடைகிறான் — ப்3ரஹ்ம ஏவ க3ந்தவ்யம்.
=> உணவு உட்கொள்ளுதல்(பிராணாக்நி ஹோத்ரம்):
வேத காலத்தில், உணவு எடுத்துக் கொள்வதை பிராணாக்நி ஹோத்ரம் எனும் யக்ஞமாக உபசரிக்கும் பழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சிலர், உணவு உண்ணும் முன் இந்தச் சுலோகத்தை உச்சாடனம் செய்வது வழக்கம். உணவு உண்பதை யக்ஞம் எனும் கர்மமாக பாவித்து, அதில் சம்பந்தப்பட்ட காரகங்கள்(வேற்றுமை உருபுகள்) அனைத்தையும் ப்ரம்மமாகப் பார்த்தல் இதன் உட்பொருள்.
1. கர்த்தா [எஜமானன்] - சாப்பிடுபவன்
2. கர்ம [ஹவிஸ்] - உணவு
3. கரணம் [கருவி] - கை, வாய்
4. அதிகரணம் [இடம்] - வயிற்றிலுள்ள அக்னி
5. பலன் - பசி நீங்குதல்.
உணவு உண்பவன், ப்ரம்ம. உட்கொள்ளப்படும் உணவு, ப்ரம்ம. இச்செயலின் கருவியாக இருக்கும் கை மற்றும் வாய் முதலிய உறுப்புகள், ப்ரம்ம மற்றும் அதை செமிக்க உதவும் வயிற்றிலுள்ள அக்னி, ப்ரம்ம. இதனால் அடையப்படும் பலனான பசி நீங்குதலும் ப்ரம்ம.