||4.21|| சந்யாச ஆஸ்ரமத்திலுள்ள ஞானியை வர்ணிக்கிறார்:
निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रह: ।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ।। २१ ।।
நிராசீ1ர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்3ரஹ: ।
சா1ரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி3ஷம் ।। 21 ।।
निराशी: நிராசீ1: எதிர்பார்ப்பற்றவன்/ஆசையற்றவன்
यत-चित्त अात्मा யத-சித்த-ஆத்மா உடலையும் மனதையும் அடக்கியவன்
त्यक्त-सर्व-परिग्रह: த்யக்த-ஸர்வ-பரிக்3ரஹ எல்லா உடைமைகளையும் துறந்தவன்
केवलं शारीरं कर्म கேவலம் சா1ரீரம் கர்ம வெறும் உடலை மட்டும் கொண்டு कुर्वन् குர்வந் செய்கிறவன் किल्बिषम् கில்பி3ஷம் பாபத்தை न अाप्नोति ந ஆப்நோதி அடைவதில்லை.
ஆசையற்றவனாய், உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, எல்லா உடைமைகளையும் துறந்தவன், வெறும் உடலால் வினையாற்றுபவன் பாபத்தை அடைவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.
விளக்கம்:
கர்மத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையான ஞானிகளை கிருஷ்ணபகவான் விளக்கிக் கொண்டுவருகிறார். தன்னை வினையாற்றாதவனாக அறிந்து, விதவிதமான செயல்களில் ஈடுபடும் ‘ப்ரவ்ருத்தி’ ரூபமான ஞானியை சென்ற சுலோகத்தில் பார்த்தோம். இப்படிப்பட்டவன் செயல் செய்த போதிலும் எதையும் செய்யாதவனாகிறான் — கர்மணி அபி4ப்ரவ்ருத்த: அபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:. இங்கு பகவான் சந்யாச ஆஸ்ரமத்திலுள்ள, ‘நிவ்ருத்தி’ ரூபமான ஞானியை வர்ணிக்கிறார்.
சென்ற சுலோகத்தைப் போலவே இங்கும் முதல் வரியானது ஞானத்தையும், இரண்டாவது வரி அவரின் வாழ்க்கை முறையையும் விவரிக்கிறது. இங்கு சுயத்தை அறிந்து, எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டவர், நிராசீ1: எனக் கூறப்படுகிறது. அதாவது ஒரு ஞானியிடமிருந்து எல்லா எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் விலகிவிடுகின்றன.
பொதுவாக தன்னுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஒருவன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வேறு வழியின்றி அதைக் கைவிடுகிறான். இவ்விதத்தில் விரக்தியடைந்த மனிதன், தனது சுயமானது அனைத்திலிருந்தும் விடுபட்டது என்பதைக் கண்டறிந்ததன் மூலம் எல்லா எதிர்பார்ப்புகளையும் விலக்கிவிட்ட ஞானியிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவன். மனமுடைந்து கைவிடுவதும், மனநிறைவினால் விடப்படுவதும் முற்றிலும் வேறுபட்டது.
=> எதிர்பார்ப்பிலிருந்து விடுபடுதல் எங்ஙனம்?
யோகப்பயிற்சியினால் விருப்பு-வெறுப்பின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டவனாக, ஞானத்திற்கு முன்பே ஒருவன் மனமுதிர்ச்சியை அடைகிறான். இப்படிப்பட்டவன் சுயத்தின் மெய்மையை கண்டறியும் பொழுது அவன் முழுமையாக விடுபட்டவனாக ஆகிறான். தனது மனநிறைவிற்கும், மகிழ்ச்சிக்கும் ஆசைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லாமற் போகிறது. இத்தகையவன் எதிர்பார்ப்பிலிருந்து விடுபட்டவனாக, ‘நிராசீ1:’ ஆகின்றான்.
ஏற்கனவே தன்னால் சாதிக்கமுடிந்த இந்திரிய-மன-ஒழுக்கத்தின் தேர்ச்சியும் இந்த சுதந்திரத்தின் அடைவிற்கு ஒரு முக்கிய காரணம் ஆகிறது. இதனாலேயே பகவான் இங்கு ஞானியை ‘யதசித்தாத்மா’ என்றும் வரையறுக்கிறார். ‘சித்த’ என்பது முழு மனதையும் குறிக்கிறது, அதாவது நினைவகம், அறிதல் மற்றும் அனைத்து வகையான எண்ணங்களும் இதிலடங்கும். இங்கு ‘ஆத்மா’ என்பது உடலைக் குறிக்கிறது. ‘யத-சித்த-ஆத்மா’ — உடலையும் மனதையும் கட்டுப்படுத்தியவன்; ச1ம(शम:), த3மத்துடன்(दम:) கூடியவன்; உடல், மனதை அவைகளுக்கு உண்டான இடத்தில் மட்டும் வைத்தவன்; தன்னை ஆட்டிவைக்கும் உரிமையை மறுத்தவன். பிரம்மச்சாரிகளுக்கு கற்றலும், கிரஹஸ்தர்களுக்கு தானமும் போல சந்யாசிகளுக்கு ச1மம் மற்றும் த3மம், ஆஸ்ரம தர்மமாகும். ஞானத்திற்கு முன்பு ஒப்பீட்டளவில் இருந்த இந்த தகுதியானது, ஞானத்தை அடைந்த பின் அவனுக்கு முழுமையாகிறது.
மேலும், இந்த குறிப்பிட்ட ஞானி, த்யக்த-ஸர்வ-பரிக்3ரஹ, தனது அனைத்து உடைமைகளையும் விட்டுக்கொடுத்தவர் என்றும் விவரிக்கிறார். இது சந்யாச வாழ்க்கையை மேற்கொண்டவரைக் குறிக்கிறது. ஒருவேளை ஞானத்திற்கு முன்பே சந்யாசம் எடுத்துக்கொண்டவரையோ, அல்லது கிரஹஸ்த ஆஸ்ரமத்தில் ஞானத்தை அடைந்து பின் ஞானநிஷ்டைக்காக அனைத்தையும் விட முடிவு செய்தவரையோ குறிக்கிறது. ஒரு பொருளுக்கும் உரிமை பாராட்டாதிருப்பது அபரிக்கிரஹம் எனப்படும். இதுவும் சந்யாச ஆஸ்ரம தர்மத்தில் ஒன்றாகும். எந்த உடைமைகளுடனும் பிணைப்பற்ற இந்த ஞானி, எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் வெளிநடப்பு செய்யக்கூடிய ஒருவராக இருக்கிறார். உடலை தக்கவைத்துக் கொள்ள மட்டும் வினையாற்றுகிறார் — கேவலம் சா1ரீரம் கர்ம. இத்தகையவர் குளிப்பது, உணவு உட்கொள்வது என உடலில் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கியமான அளவை பராமரிக்கத் தேவையான காரியங்களை மட்டும் செய்கிறார்.
=> உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுதல்:
ஒரு ஞானி தனது உடலை எந்த இடத்தில் வைக்கிறான் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஓர் ஆரோக்கியமான நிலையை பராமரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்கிறான். இந்த நிலையானது, உடலை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வைத்திருக்க, எந்நேரமும் யோகா அல்லது உடற்பயிற்சி என அளவுக்கு மீறிய ஆற்றலையையும் நேரத்தையும் கொடுப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையாகும். உடலின் வடிவத்தையும் ஆரோக்கியத்தையும் மட்டுமே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கொள்ளும் போது, அது நம்மை ஆட்டிப்படைக்கும் கருவியாக மாறிவிடுகிறது. ஆரோக்கியம் முக்கியமே. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, உடலுக்கு அடிமைப்பட்டு அதிக நேரத்தை வீணடிக்கலாகாது. இவ்விதமாக ஞானி தன்னை உடலோடு அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என சங்கரர் தனது பாஷ்ய உரையில் தெளிவுபடுத்துகிறார். உடலின் வடிவம் ஞானிக்கு முக்கியமல்ல. ஆகவே ஒப்பீட்டளவில் உடலின் ஆரோக்கியத்தை பேண, தங்களது வாழ்க்கைமுறையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உணவு மற்றும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிக்கிறார்கள் அவ்வளவே.
=> நற்காரியங்களும் ஒருவனை பந்தப்படுத்தும்:
அனைத்து உடைமைகளையும் கைவிட்டு, எதிர்பார்ப்புகளை துறந்து, உடலைப் பாதுகாக்க மட்டுமே வினையாற்றும் ஞானிக்கு என்ன நடக்கிறது? அவன் பாபத்தை அடைவதில்லை என பகவான் கூறுகிறார். சங்கரர் தனது பாஷ்ய உரையில், ஒரு ஞானிக்கு புண்ணியமும் பாபமாகவே கருதப்படுவதால், அவன் புண்ணிய-பாபம் இரண்டையும் அடைவதில்லை என்கிறார். வேறுவிதமாகக் கூறுவதானால் அவன் எந்த கர்ம-பலனையும் பெறுவதில்லை.
மோக்ஷத்தின் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது, புண்ணியமும் ஒருவனை சம்சாரத்தில் பிணைக்கிறது. பிணைக்கும் கைச் சங்கிலி இரும்பினாலோ அல்லது தங்கத்தினாலோ செய்யப்பட்டிருக்கலாம்; ஆனாலும் அது இன்னமும் ஒரு சங்கிலியே. மூலப்பொருளில் வேறுபாடிருப்பினும் பிணைப்பதில் வித்தியாசம் இல்லை. அதுபோலவே, கர்மத்தின் அடிப்படையில் புண்ணியம் என்பது தங்கச் சங்கிலி ஆகும். என்றாலும் தான் விரும்புவதை பெறுவதற்கு உதவியாக இருக்கும்வரை ஒருவன் புண்ணியத்தை விரும்புகிறான். ஒரு முமுக்ஷு(முக்தியை விரும்புபவன்) ஞானத்தைப் பெறுவதற்கான தகுதியையும், உகந்த சூழ்நிலைகளையும், மனமுதிர்ச்சியையும் கொடுக்கும் பொருட்டு புண்ணியத்தை அடைய விரும்புகிறான். ஞானத்தை அடைந்த பிறகு, இந்த ஞானி செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவனாவதால்(க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்) அவனுக்கு புண்ணியம்-பாபம் இரண்டும் தேவையில்லை.
=> தவறான பொருள்விளக்கத்திற்கான சாத்தியக்கூறுகள்:
‘சா1ரீரம் கேவலம் கர்ம’ - உடலை தக்கவைக்க மட்டுமே செய்யப்படும் செயல், என்பதை தவறாகப் பொருள்கொள்வதற்கான வாய்ப்பை குறித்த சந்தேகத்தை, சங்கரர் தனது பாஷ்யத்தில் எழுப்புகிறார். ‘சா1ரீரம் கர்ம’ - உடலினால் செய்யப்படும் காரியங்கள். ‘கேவலம்’ - மட்டும். ஆகவே இதை ‘உடலினால் செய்யப்படும் கர்ம மட்டுமே’ எனத் தவறாகப் பொருள்படுத்துபவர்களும் உள்ளனர். எனில், உடல் ரீதியாக செய்யப்படும் கர்ம மட்டுமே, புண்ணியம் மற்றும் பாபத்தை அடைவிக்காது என்ற பொருள்வருகிறது. அப்படியெனில், வாக்கினாலும் மனதினாலும் செய்யப்படும் செயல்களனைத்தும் இந்த புண்ணிய-பாப பலனைக் கொடுக்கிறது என்றாகிவிடும். ஆனால் சாஸ்திரம் உடல், வாக்கு மற்றும் மனம் இவைகளின் கர்மாக்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. ஆகவே உடலை கர்ம-பலனை தோற்றுவித்தல் என்ற நிலையிலிருந்து விடுவிக்கும் இந்த விளக்கத்தை ஏற்கமுடியாது என்கிறார் சங்கரர். மேலும் இந்த சுலோகம், த்யக்த-ஸர்வ-பரிக்3ரஹ —அனைத்து உடைமைகளையும் துறந்த சந்யாசியைப் பற்றி மட்டும் பேசுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------||4.22|| நிவ்ருத்தி மார்க்கத்திலுள்ள சந்யாசியின் மனநிலை:
यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सर: ।
सम: सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ।। २२ ।।
யத்3ருச்சா2லாப4ஸந்துஷ்டோ த்3வந்த்3வாதீதோ விமத்ஸர: ।
ஸம: ஸித்3தா4வஸித்3தௌ4 ச க்ருத்வாபி ந நிப3த்4யதே ।। 22 ।।
यदृच्छा लाभ सन्तुष्ट: யத்3ருச்சா2 லாப4 ஸந்துஷ்ட: தற்செயலாகக் கிடைப்பதில் திருப்தியடைபவன் द्वन्द्वातीत: த்3வந்த்3வாதீத: இருமைகளைக் கடந்தவன் विमत्सर: விமத்ஸர: பொறாமையற்றவன்
सिद्धौ असिद्धौ च ஸித்3தௌ4 அஸித்3தௌ4 ச வெற்றியிலும் தோல்வியிலும் सम: ஸம: சமமாக இருப்பவன் कृत्वा अपि க்ருத்வா அபி செயல் செய்தபோதிலும் न निबध्यते ந நிப3த்4யதே பந்தப்படுவதில்லை.
தற்செயலாகக் கிடைப்பதில் திருப்தியடைபவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமையில்லாதவன், வெற்றியிலும் தோல்வியிலும் சமமாக இருப்பவன் கர்மத்தில் ஈடுபட்டபோதிலும் பந்தப்படுவதில்லை.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
விளக்கம்:
=> இருமையைக் கடந்தவன்:
‘யத்3ருச்சா2-லாப4-ஸந்துஷ்ட:’, இக்கூட்டுச் சொல்லிலிருக்கும் ‘யத்3ருச்சா2’ என்பது எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் தற்செயலாக வந்தமைவதைக் குறிக்கிறது. வேறுவார்த்தையில் கூறுவதானால் எதேச்சையாக அமையும் வாய்ப்பு ‘யத்3ருச்சா2-லாப4’ ஆகும். இந்த சுலோகத்தில், ஒரு ஞானியை பகவான் இவ்விதம் அழைக்கிறார். ஏனெனில் அன்றாடத் தேவைகளின் அடிப்படையிலும் கூட, தற்செயலாக வரும் எந்தவொரு விஷயத்திலும் அவன் முற்றிலும் மகிழ்ந்திருக்கிறான். அவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
தன் உடலின் தேவைகளைப் பற்றி எண்ணாதிருக்குமளவு ஒருவன் ஆத்மசாதனத்துக்குத் தகுதியுடையவனாகிறான். அவன் தேவைகளைக் கவனித்துக் கொள்ளுதல் ஈஷ்வரனுடைய பொறுப்பாகிறது. ஈஷ்வர பிரீதியாக, பிராரப்தத்தினால் எது எப்படி வந்தமைகிறதோ அதைக்கொண்டு அந்த சாதகன் திருப்தியடைகிறான்.
மேலும் இப்படிப்பட்டவனை பகவான், ‘த்3வந்த்3வாதீத:’, இருமைகளைக் கடந்தவன் என்றும் அழைக்கிறார். உதாரணமாக, குளிர்-வெப்பம் எனும் இருமையை எடுத்துக் கொள்வோம். பொதுவாக மக்கள், குளிர்காலத்தின்போது குளிரையும், கோடைகாலத்தின்போது நிலவும் அதிக வெப்பத்தையும் குறை கூறுவர். இடையில் வந்து செல்லும் இளவேனிற்காலத்திலும் கூட அவர்கள், ‘அட! கோடை வரப்போகிறது. வெப்பம் சுட்டெரிக்கப்போகிறது’ என புலம்பிக் கழிப்பர். இவ்வாறு இருமைகளின் எதிரெதிர் துருவங்களில் சிக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இடையிலும் புகார் கூறுவதை அவர்கள் நிறுத்துவதில்லை. இப்படித்தான் பெரும்பாலான மக்கள் சம்சாரத்தில் உழல்கின்றனர். ஆனால் இங்கு விளக்கப்படும் இந்த ஞானி, இருமைகளிலிருந்து மேலெழுந்தவனாக, அதனுடைய கட்டுப்பாட்டில் சிக்கமால், அவைகளைப் புறநிலையில் வைத்து, அது குறித்து என்ன செய்யப்பட வேண்டுமோ அதை பற்றின்றி, பதட்டமின்றி செய்கிறான். இப்படிப்பட்டவன் ‘த்3வந்த்3வ-அதீத:’ என அழைக்கப்படுகிறான். இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியில் இருமையை கடந்தவனது சிறப்பை மேலும் விளக்கிக் கூறுகிறார். இவன் சுக-துக்கம், வெற்றி-தோல்வி போன்ற எல்லாவித இருமைகளிலும் தனது சமநிலையை இழக்காமல், உள் அமைதியுடன் திகழ்கிறான் என்கிறார்.
கர்மத்தில் அகர்மத்தை(செயலில் செயலின்மையை) பார்க்கக்கூடிய ஒருவனுக்கு இந்த மனவமைதி இயற்கையானது; ஏனெனில் தனது ஆத்ம சொரூபத்தை அறிந்த அவன் செயல் செய்பவன் அல்ல. ஆகவே அதனால் விளையும் பலனும் அவனுடையதல்ல. மேலும் இந்த மனவமைதி, ஆனந்தம், ஒருவரின் இயல்பு என்பதால் அது ஒருபோதும் அவனை விட்டு விலகிப்போவதில்லை.
=> பொறாமையற்றவன்:
இங்கே பகவான் ஞானியை ‘விமத்ஸர:’, பொறாமையில்லாதவன் என்று கூறுகிறார். தற்செயலாக வரும் எந்தவொரு விஷயத்திலும் திருப்தியடைந்து, இருமைகளிலிருந்து விடுபட்ட ஒருவன், பொறாமையிலிருந்தும் விடுபட்டவன் என்று சொல்வது ஓரளவுக்கு இவ்விடத்தில் பொருந்தாதது போலத் தெரிகிறது. எனில், கிருஷ்ணர் ஏன் இப்படிச் சொல்கிறார்?
‘மத்ஸர’ என்றால் பொறாமை. இது பொதுவான பிரச்சனைகள் என வரையறுக்கப்படும் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தொகுப்பில் ஒன்று — காம(ஆசை), குரோத(கோபம்), லோப(பேராசை), மோஹ(தவறான நம்பிக்கை/தவறான மதிப்புகள்), மத(தற்பெருமை) மற்றும் மாத்ஸர்ய/மத்ஸர(பொறாமை). இங்கு இந்த ஆறு குணங்களையும் குறிக்கும் பிரதிநிதியாக பொறாமையை மட்டும் எடுத்துக் கொள்கிறார் பகவான். ஆகவே, இந்த ‘மத்ஸர_பொறாமை’ இவையனைத்தின் உபலக்ஷணமாக உள்ளது. ‘உபலக்ஷண’ என்பது ஒரு குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் குறித்துக்காட்ட அக்குழுவின் ஒரு உறுப்பினரைப் பயன்படுத்துவதாகும். இதிலிருந்து ‘விமத்ஸர_பொறாமையில்லாதவன்’ என வர்ணிக்கப்படும் இந்த ஞானியானவன் மேற்கூரிய ஆறு சிக்கல்களிலிருந்தும் விடுபட்டவன் என்பது பொருள்.
=> ஆறு-இன்னல்கள்:
(1) காம(ஆசை) - தன்னை முழுமையற்றவனாக உணருவதால், ‘காம’ எனப்படும் தனது விருப்பு-வெறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலமே முழுமையான மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கிடைப்பதாக ஒருவன் நினைக்கிறான்.
(2) குரோத(கோபம்) - ஆசையின் பிரதிபலிப்பே கோபம். ஒருவனுடைய ஆசை மற்றும் எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, அந்த வேதனை கோபமாக மாறுகிறது. ஆசைக்கு தடங்கலாக இருப்பவை அனைத்தும் கோபத்தின் இலக்காகிறது.
(3) லோப(பேராசை) - ‘காம’ மற்றும் குரோதத்தைப் போலவே, பாதுகாப்பற்ற, முதிர்ச்சியற்ற ஒருவனிடம் ‘லோப(பேராசை)’ எனும் குணத்தை எதிர்பார்க்கலாம். இக்குணத்தினால் பீடிக்கப்பட்டவர்கள், தன்னிடம் போதுமான அளவு பணமிருந்தும் கூட, அதை தமக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ செலவிட மனமில்லாமல் இன்னலுறுகிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் அதிக செல்வத்தை குவிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
(4) மோஹ(தவறான நம்பிக்கை/தவறான மதிப்புகள்): தவறான மதிப்புகளைக் கொண்டுள்ள சமூகத்தில் வளரும் ஒவ்வொருவரும் தவறான மதிப்புகளை உள்ளீர்த்துக் கொண்டே வளர்கிறார்கள். உதாரணமாக, தனியாக வாழும் ஒருவன் தனிமையில் வாடுபவன் என்ற சிந்தனை சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகிறது. உண்மையில், ஒரு நபர் மற்றொருவரால் புரிந்து கொள்ளப்படாத போது தனிமைபடுத்தப்பட்டவர் ஆகிறார். இருபது பேர் கொண்ட குடும்பத்தில் வாழும் ஒருவன், மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாத போது தனிமையில் வாழ்பவனாகவே உணர்கிறான். அதுபோல, பணம் மற்றும் பதவி போன்றவைகளே ஒருவனை காப்பாற்றும், செல்வமே ஒருவனுக்கு நிரந்தர மகிழ்ச்சியை தரும் என நினைப்பதெல்லாம் ‘மோஹ’ எனும் குணத்தில் அடங்கும்.
(5) மத(தற்பெருமை): இது ஒருவன் தனது திறமையை நம்பாதபோது ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் தாங்கள் அனுபவித்த அவமானத்தின் அடிப்படையில், ‘நான் பயனற்றவன்’ என்ற அடிப்படை உணர்வைக் கொண்டிருப்பர். ஒருசில வஷயங்களில் திறமையானவனாக இருந்தபோதிலும், ‘நான் திறமையற்றவன்’ என்ற இந்த முடிவு, தவிர்க்க முடியாத ஒன்றாக சிலருக்கு மாறிவிடுகிறது. இத்தகையவர்கள் இந்த சிந்தனையிலிருந்து வெளிவர, ‘நான் மிகவும் அற்புதமானவன், இதை என்னால் செய்ய இயலும், இது எனக்கு மிக எளிதான காரியம்’ என தன்னைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டு காலத்தைக் கழிப்பார்கள். இந்த குணம் தாழ்வு மனப்பான்மையின் மற்றொரு வடிவம்.
(6) மத்ஸர(பொறாமை) - காம, குரோத, லோப, மோஹ மற்றும் மத — இவை அனைத்தும் புரிந்துகொள்ளக்கூடிய நியாயமான பிரச்சினைகள். ஆறு குணங்களைக் கொண்ட இந்த தொகுப்பில் மிகவும் கீழானதாக, புரிந்துகொள்ள முடியாததாக விளங்குவது இந்த பொறாமை எனும் குணம். மற்றொருவரின் மகிழ்ச்சியைக் கண்டு வேதனைப்படும் இயல்பைக் கொண்டதாக இது இருக்கிறது. இனியொருவரின் மகிழ்வைக் கண்டு நாமும் மகிழ்வதென்பது எளிதான விஷயமே; அதில் நாம் பெரிதாக செய்ய ஏதுவுமில்லை. அல்லது, ஒருவர் ஒன்றை அடைந்ததனால் மகிழ்வதைக் கண்டு நாமும் முயன்று அதை அடையும் காரியத்தில் ஈடுபடலாம். ஆனால், இவைகளுக்கு மாறாக, மற்றவரின் இன்பத்தில் வேதனையடையச் செய்யும் பொறாமை என்ற இந்த மகிழ்ச்சியற்ற தன்மை மேற்கூரிய ஆறில் மிக இழிவானதாக இருக்கிறது.
ஆகையினால் கிருஷ்ணபகவான், இந்த ஆறு குணங்களில் பொறாமை எனும் குணத்தை முன்னிருத்தி, ஞானியானவன் ‘விமத்ஸர_பொறாமையற்றவன்’ என கூறுவதன் மூலம் அவன் ‘காம-குரோத-லோப-மோஹ-மத’ இவைகளிலிருந்தும் விடுபட்டவன் என கூறுகிறார்.
இப்படிப்பட்ட ஞானி செயல் செய்த போதிலும் பந்தப்படுவதில்லை — க்ருத்வா அபி ந நிப3த்4யதே, என சுலோகம் கூறுகிறது. அதாவது செயலின் முடிவுகளால் அவன் பந்தப்படுவதில்லை. ஏன்? முன்பு விளக்கப்பட்ட அதே காரணத்திற்காக — ஞானத்தின் மூலம் கர்த்ருத்வம்(நான் செயல் செய்பவன்) என்ற பாவனை விடப்பட்ட காரணத்தினால், அவன் அச்செயலினால் பந்தப்படுவதில்லை — கர்த்ருத்வ அபா4வாத்.
-------------------------------------------------------------------------------------
||4.23|| ப்ரவ்ருத்தி மார்க்கத்திலுள்ள ஞானி பேசப்படுகிறார்:
गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतस: ।
यज्ञायाचरत: कर्म समग्रं प्रविलीयते ।। २३ ।।
க3தஸங்க3ஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்தி2தசேதஸ: ।
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்3ரம் ப்ரவிலீயதே ।। 23 ।।
गतसङ्गस्य க3தஸங்க3ஸ்ய பற்றில்லாதவனுடைய मुक्तस्य முக்தஸ்ய முக்தியடைந்தவனுடைய
ज्ञान-अवस्थित-चेतस: ஜ்ஞாந-அவஸ்தி2த-சேதஸ ஞானத்திலே உறுதிப்பெற்ற மனதை உடையவனுடைய यज्ञाय अाचरत: யஜ்ஞாய ஆசரத: யக்ஞத்தின் பொருட்டு கர்மம் செய்பவனுடைய
समग्रं कर्म ஸமக்3ரம் கர்ம எல்லாக் கர்மங்களும் प्रविलीयते ப்ரவிலீயதே கரைந்து போகிறது.
பற்றில்லாதவனுடைய, முக்தியடைந்தவனுடைய, ஞானத்திலே உறுதிப்பெற்ற மனதை உடையவனுடைய, கடமையை யக்ஞமாக செய்பவனுடைய கர்மங்களனைத்தும் கரைந்து போகிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் -அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
விளக்கம்:
ஒரு ஞானியானவன் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இருந்தபோதிலும் அவன் எதனாலும் பிணைக்கப்படுவதில்லை. தனது சுயத்தைப் பற்றிய அறிவை அடைந்த அவனுக்கு அனைத்துப் பற்றும், ஸங்க3, போய்விடுகிறது, க3த. ஆகவே ஞானி இங்கு ‘க3த-ஸங்க3:’ என்றும், அக்ஞானத்திலிருந்து விடுபட்டவனாகையால் முக்தன் என்றும் வர்ணிக்கப்படுகிறான். ஒரு மனிதன் எவ்விதம் விடுபட்டவனாக ஆகிறான்? எப்போது அவனுடைய மனமானது(சேதஸ்) சுயத்தைப் பற்றிய தெளிவான அறிவில் வேறூன்றி நிலைக்கிறதோ — ஜ்ஞாந-அவஸ்தி2த, அப்போது அவன் அனைத்திலிருந்தும் விடுதலையடைகிறான்.
ஞானத்தை அடைந்த பின் செய்யப்படுகின்ற கர்மம், அகர்மம்(செயலற்ற தன்மை) ஆகிறது. எல்லா காலத்திலும், ‘நான் எதையும் செய்பவன் அல்ல’ என்ற ஞானத்தில் நிலைத்த மனதையுடையவனாய் இருப்பவன், தர்ம-அதர்மத்திலிருந்தும் பந்தங்களிலிருந்தும், விருப்பு-வெறுப்பிலிருந்தும், ஏன் தனது மனதிடமிருந்தும் கூட விடுபட்டவனாக, யாரையும் சாராதவனாக, முக்தனாக இருக்கிறான். பந்தமும் முக்தியும் மனதைப் பொறுத்தது.
இங்கு ‘யஜ்ஞாய ஆசரத:’ என்பது யக்ஞத்தின் பொருட்டு கர்மத்தில் ஈடுபடுபவனை; தனது கடமையை யக்ஞமாக செய்பவனைக் குறிக்கிறது. இங்கு ‘செய்யப்படும் செயல்’, ஒரு பிரார்த்தனையாகவோ அல்லது விரிவான சடங்காகவோ இருக்கலாம்; ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அல்லது சமூகத்தின் உறுப்பினராக, ஒரு பணியாளராக அல்லது ஒரு முதலாளியாக என அவன் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களில் ஏதேனும் ஒரு பாத்திரமாக, அவனது கடமையாக இருக்கலாம். ப்ரவ்ருத்தி மார்க்கத்திலுள்ள ஒரு ஞானி இரண்டுவித பாவனையுடன் செயல் செய்கிறான்.
(1) பிராரப்தத்தை(கர்மவினை) முடிப்பதற்காக —> ஞானி கர்மவினையை குறை கூறாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையே யக்ஞமாக மாறிவிடுகிறது. வருவதை பகவானின் பிரசாதமாக ஏற்றுக்கொள்கிறான். மனப்பற்று நீங்கியபின் எவ்வளவு கர்மம் செய்தாலும் கேடெதுவும் உண்டாவதில்லை. கடலுக்குள்ளே கொட்டிய உப்பைப் போல கர்மம் பந்தத்தை உண்டுபண்ணாது கரைந்து போகிறது.
(2) லோக-ஸங்க்ரஹத்திற்காக —> ஞானத்திற்கு பின்பும், ஜனகர் மற்றும் அஷ்வபதி முதலானோர் உலக நன்மைக்காக தொடர்ந்து செயலில் ஈடுபட்டனர் என்பதை நாம் ஏற்கனவே மூன்றாம் அத்தியாயத்தில்(3.20) விரிவாகப் பார்த்தோம்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
முதலில் உள்ளங்கையில் எண்ணெயைத் தடவிக் கொண்டு பலாப்பலத்தை அறுத்துச் சுளைகளை எடுப்பாயானால் பிசின் உன் கைகளில் ஒட்டிக்கொண்டு தொந்தரை செய்யாது. அதுபோல, முதலில் பரமாத்மாவைப்பற்றிய ஞானத்தால் உனக்குப் பாதுகாப்பை உண்டாக்கிக் கொள். பிறகு செல்வம் முதலான உலகப் பொருள்களினிடையே நீ வசித்தால், அவைகளில் நீ எவ்வழியிலும் வசப்படமாட்டாய்.
-------------------------------------------------------------------------------------