வியாழன், 14 அக்டோபர், 2021

ஞானகர்மஸந்யாஸ யோகம் 4.19 - 4.20

 ||4.19|| யார் பண்டிதன்?

यस्य सर्वे समारम्भा: कामसङ्कल्पवर्जिता:

ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु: पण्डितं बुधा: ।। १९ ।।

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா4: காமஸங்கல்பவர்ஜிதா:

ஜ்ஞாநாக்3நித3க்34கர்மாணம் தமாஹு: பண்டி3தம் பு3தா4: ।। 19 ।।


यस्य  யஸ்ய  யாருடைய/முன் சுலோகத்தில் கூறப்பட்ட அறிவை உடையவனுடைய   

सर्वे   ஸர்வே  அனைத்து   समारम्भा:  ஸமாரம்பா4:  செயல்களும்   

कामसङ्कल्पवर्जिता:  காமஸங்கல்பவர்ஜிதா:  காமமும் சங்கற்பமும் இல்லாமலிருக்குமோ  

ज्ञानाग्नि-दग्ध-कर्माणं   ஜ்ஞாநாக்3நித3க்34கர்மாணம்  ஞானத்தீயால் எரிக்கப்பட்ட கர்மத்தையுடைய  

तम्   தம்  அவனை  बुधा:  பு3தா4:  ஞானிகள்  पण्डितं  பண்டி3தம்  பண்டிதன்  अाहु:  ஆஹு:  சொல்கிறார்கள்.


எவனது கர்மங்களனைத்தும் ஆசையும் சங்கற்பமும் அற்றனவோ, எவனது கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டனவோ, அவனைப் பண்டிதன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.


விளக்கம்:

=> கர்ம சந்யாசம் செய்வது ஆத்மாவா? அனாத்மாவா?

ஸர்வம்இரண்டாகப் பிரிக்கப்படுகிறது:

(1) ஆத்மா, சச்சிதானந்த சொரூபம்

(2) அனாத்மா - ஆத்மாவால் பிரகாசப்படுத்தப்படும் அனைத்தும்.

இவையிரண்டில் கர்ம சந்யாசம் செய்வது யார்? ஆத்மா எப்போதும் அகர்ம சொரூபம். கர்மமே செய்வதில்லை, ஆகையினால் அது கர்ம சந்யாசம் செய்ய முடியாது. எனில், அனாத்மா கர்மத்தை துறக்க முடியுமா? உடல் மற்றும் மனதின் செயலின்மையிலும் கர்மத்தைப் பார் என பகவான் முன் சுலோகத்தில் கூறியுள்ளார். ஆகவே, அது என்றுமே செயல் சொரூபம். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களில் ஏதேனும் ஒன்றில்தான் இருக்கும். ஆகவே அனாத்மாவால் கர்மத்தை துறக்கவே முடியாது. இதிலிருந்து, உண்மையில் கர்ம சந்யாசம் செயலில் என்றுமே நடைபெறாது. ஞானத்தினால் தான் இது நடைபெறும். இதையே இந்த அத்தியாயத்தின் தலைப்பு சுட்டிக்காட்டுகிறது. ஞான கர்ம ஸந்யாசம்ஞானத்தினால் கர்ம சந்யாசம்.

எனில் இவ்விதத்தில் யார் கர்மத்தை துறக்கிறார்கள்? உண்மையில் யார் சந்யாசி? இதற்கு இருவேறு கோணத்தில் பதில் கூறலாம்.

(1) ஆத்மா -> ஆத்மா அறியாமையினால் கர்மம் செய்பவனாக தன்னை நினைத்துவிட்டது. பிறகு ஞானத்தினால் அதை துறக்கிறது.

(2) ஞானி -> ஞானியை சந்யாசி எனலாம். ஒரு ஞானியானவன் தன்னை ஆத்மாவாகவே பார்ப்பதால் உண்மையில் ஞானி வேறு, ஆத்மா வேறு அல்ல. ஆத்மா அகர்த்தா; ஆகவே ஞானி அகர்த்தா. செயல் செய்துகொண்டிருப்பினும் அவன் கர்மதோடு தன்னை சம்பந்தப்படுத்துவதில்லை; ஞான கர்ம சந்யாசி.

முன் சுலோகத்தில் விவரிக்கப்பட்ட, செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் பார்க்கக்கூடிய அந்த புத்திமான், இங்கு மீண்டும் பாராட்டப்படுகிறான். ‘கர்மமற்றும்அகர்மஇவற்றின் இயல்பையும், அகர்ம என்பது செயலின்மையைக் குறிப்பதல்ல என்ற தத்துவத்தையும் புரிந்துகொண்டவனாக, அவன் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தவன்(க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்) ஆகின்றான்.


=> இத்தகையவர்களுக்கு செயல்பாடுகள் உள்ளனவா?

முதலில் செயலுக்கும் செயல்பாட்டுக்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்வோம். பொதுவாக, ஒரு செயல்பாடு என்பது பல்வேறு செயல்களையும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு செயல்பாட்டின் பின்னும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. உதாரணமாக, வீடு கட்டுதல், சமைத்தல் அல்லது வியாபாரம் செய்தல் என, ஒரு முடிவை உருவாக்குவதற்கான எந்தவொரு செயல்பாடும் ஒரு குறிப்பிட்ட தொடக்கத்தை கொண்டிருக்கிறது. இதுபோன்ற அனைத்து முயற்சிகளும்ஸமாரம்பா4:என்று அழைக்கப்படுகின்றன.  

க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்-வான ஒரு புத்திமான், எந்தவொரு செயலை மேற்கொள்ளும் போதும் ஆசையோ, அது குறித்த சங்கல்பங்களோ இல்லாமல் செய்கிறான்காம-ஸங்கல்ப-வர்ஜிதா:. எதையாவது அடைய விரும்புவது, ஆசை(காம). இதைச் செய்வதன் மூலம், நான் அதை அடைவேன்என, அது குறித்து உண்டாகும் விருப்ப எண்ணங்கள், சங்கல்பம்(ஸங்கல்ப) எனப்படும். செய்யப்பட வேண்டிய அனைத்தும் செய்து முடிக்கப்பட்டதனால், இந்தக்ருத்ஸ்ந-கர்ம-க்ருத் எதையும் செய்யத் தேவையில்லை என பார்த்தோம். இவனுக்கு சத்-சித்-ஆனந்த ஆத்மாவாகிய தனது சுயத்தை பற்றிய சரியான பார்வையும்நான் அகர்த்தாஎன்ற அறிவும் நிறைவாக உள்ளது. இந்த ஞானத்தை உடைய அவன் முழுமையானவன்; எல்லையற்றவன், பூர்ண:. இப்படிப்பட்ட அறிவையுடைய ஒருவனுக்கு என்ன செயல்பாடு இருந்துவிட முடியும்? அவனுடைய விருப்ப எண்ணங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டது; அது நிறைவேற்றப் பட்டும்விட்டது

க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத் எதையும் செய்யத் தேவையில்லை என்பதால் அவன் ஒன்றும் செய்வதில்லை என்று அர்த்தமல்ல. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததோடு, ஞானோபதேசமும் செய்து கொண்டிருந்தார். சங்கரர் ஏராளமான பாஷ்ய விசாரங்களையும், மற்றும் வியாஸர் எவ்வளவோ சாஸ்திர சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளனர். இந்த ஞானத்தை கற்பித்த ஆசிரியர்களே ஆனாலும் அவர்களும் செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதிலிருந்து, கற்பிப்பதன் மூலமோ அல்லது எந்தவொரு செயலில் ஈடுபடுவதன் மூலமோ, ஒருவன் தன் சுயத்திலிருந்து வெளியே வந்துவிடுவதில்லை. எதையறிந்த போதிலும் சுயத்தின் மெய்மையில் மாற்றம் நிகழ்வதில்லை. செயலில் செயலின்மையைப் (கர்மத்தில் அகர்மத்தை) பார்க்கும் இவனுக்கு, ‘நான் சத்-சித்-ஆனந்தம், எனக்கு எந்த செயலும் இல்லைஎனும் யதார்த்தம் மாறுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் எந்த வினையில் ஈடுபட்டாலும் அதில்காமம்அல்லதுசங்கல்பம்இல்லை.

மேலும் இந்த சுலோகத்தில், ‘ஜ்ஞாநாக்3நி-3க்34-கர்மாணம்’, இவனுடைய செயல்கள் அறிவின் நெருப்பால் எரிக்கப்படுகின்றன என விவரிக்கப்படுகிறது. இந்த ஞானத்தை பெற்றவரின் கணக்கில் நிற்கும் எல்லா கர்மங்களும் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இத்தகையவர்களை ஞானிகள், பண்டிதர்கள்(பண்டிதம்) என அழைக்கிறார்கள். பண்டா - ஆத்ம ஞானம்; பண்டிதர்கள் - ஆத்ம ஞானத்தை உடையவர்கள். ‘பாம்பின் கால் பாம்பறியும்என்பதைப் போல, சான்றோர்களே சான்றோர்களை அறிவர்.


=> படைப்பும், படைக்கப்படாத சுயமும்:

பிரக்ஞை என்பது உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. பிரக்ஞையே சுய சொரூபமான ஆத்மாவாக இருப்பதால், ஆத்மா இறைவனால் படைக்கப்பட்டது அல்ல. ஒரு குறிப்பிட்ட நியதிகளுடன், பல்வேறு வடிவங்களில் உடல்கள் என நம்மால் அழைக்கப்படும் பொருள்களை மட்டுமே இறைவன் படைத்தார். ஜீவனுக்காக படைக்கப்பட்ட இவைகளின் மத்தியில், ஜீவனின் மெய்மை படைக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ஆகவே, படைப்பில் உருவாக்கப்படாத ஒரே விஷயம் - ஆத்மா என்ற பிரக்ஞை. படைப்பு என நாம் கூறும் மற்றவையனைத்தும் ஜீவனின்கர்மம்(कर्म)’ காரணமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த கர்மம்? ஏனெனில் ஜீவன்(जीव) ஒரு கர்த்தாவாக, வினையாற்றுபவனாக இருப்பதனால். ஏன் ஜீவன், ஒரு கர்த்தா? அக்ஞானம் என்னும் தன்னைப் பற்றிய அறியாமை காரணமாக. இந்த அறியாமை எப்போது தொடங்கியது? அறியாமை என்பது அநாதி, அதாவது அதற்கு எந்த தொடக்கமும் இல்லை. ஜீவன் எனும் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது, ஒவ்வொரு ஜீவனுக்கும் கர்ம-பலன்(कर्म फल) அல்லது புண்ணிய-பாப கணக்கு உள்ளது. இந்த கர்ம-பலனானது, ஒரு ஜீவனால் எண்ணற்ற பிறப்புகளில், வெவ்வேறு காலகட்டங்களில், எண்ணற்ற கர்மங்களாக சேகரிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்தில், இடத்தில், ஒரேயொரு உடலில் நிறைவேற்றிவிட முடியாது. கொடுக்கப்பட்ட பிறப்பில், கர்மாக்களின் ஒரு தொகுப்பை மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும். இவ்விதமாகஒரு தொகுப்புகர்மங்கள் தீர்ந்துவிட்டாலும், அந்த ஜீவனின் கணக்கில் எல்லையற்ற கர்மங்கள் இன்னும் தீர்ந்துபோகக் காத்திருக்கின்றன. இந்தகால வைப்புகர்மங்களை, சஞ்சித-கர்மங்கள்(संचित-कर्म) என அழைக்கிறார்கள். மேலும், இப்பிறப்பில் கர்மங்களைத் தீர்த்துக் கொள்ளும்போது, ‘நான் கர்த்தா’- செயல் செய்பவன் என்ற நிலையை அனுபவிக்கும் வரை, அந்த ஜீவன் புதிய கர்மங்களைச் சேகரிக்கிறான். ஆகவே, இந்த வாழ்நாளில் புதிதாக சேகரிக்கப்பட்டு வரும் கர்மங்கள், க்ரியமாந-கர்மம்(क्रियमाण-कर्म) அல்லது ஆகாமி-கர்மம்(अागामि-कर्म) எனப்படும். ஆகாமி-கர்மம் எனில் எதிர்கால கர்ம எனப்படும். ஒருவனது சுதந்திர தேர்வின்(free will) காரணமாக சேகரிக்கப்படும் இந்த புதிய புண்ணிய-பாபங்கள், ஏற்கனவே உள்ள கால வைப்பு கணக்கான சஞ்சிதத்தில் சென்று சேருகின்றன

இந்த ஸ்தூல உடல் கருத்தரிக்கப்பட்ட தருணத்திலிருந்து பலனளிக்கத் தொடங்கிய கர்மங்களின் தொகுப்பு, பிராரப்த-கர்மம்(प्रारब्ध-कर्म ) என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாக, இந்த மூன்று வகையான கர்மாக்கள்சஞ்சித, ஆகாமி மற்றும் பிராரப்தம்; கர்ம எனக் குறிக்கப்படும்.


=> அனைத்து கர்மாக்களையும் ஞானம் அழித்துவிடும்:

சுயத்தை அகர்த்தா என அடையாளம் கண்டுகொண்ட ஞானிக்கு, இனி எந்தவிதமானகர்த்ருதுவம்’, செயல் செய்பவன் எனும் பாவனையும் இல்லை. வினையாற்றுபவனாக தன்னை அடையாளப்படுத்தாத காரணத்தால், அவனது பெயரில் நிற்கும் அனைத்து கர்மங்களும் ஞானத்தின் சுடரால்ஜ்ஞாநாக்3நி, எரிக்கப்படுகின்றன3க்34

அதேசமயம், இந்த ஞானம் இல்லாவிடில், கர்மங்களைச் சேகரிப்பதற்கும் அதனால் உண்டாகும் பிறப்புகளின் எண்ணிக்கைக்கும் முடிவே இல்லை. இதனால்தான் சம்சாரம் முடிவற்றது என கூறப்படுகிறது

இதிலிருந்து வெளிவர ஒரேயொரு வழி மட்டுமே உள்ளதுஅனைத்து கர்மங்களையும் அழிக்கும் ஞானம் எனும் நெருப்பே அது. கர்த்தா இல்லாத காரணத்தினால் செய்வதற்கு ஆளில்லாமல் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. ‘கர்த்ருதுவம்இல்லாத காரணத்தினால் புண்ணிய-பாபங்கள் அவனை நெருங்குவதில்லை. ஆகவே சஞ்சிதமும் ஆகாமியும் அழிகின்றன

ஆத்மாவின் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது அவன் பிராரப்த கர்மத்திலிருந்தும் விடுபட்டவனே. உடல், மனம் மற்றும் புலன்களின் பார்வையிலிருந்து மட்டுமே பிராரப்தம் இருக்கிறது எனலாம். ஜீவன்-முக்திக்கு பின்னும் ஞானியின் வாழ்க்கை தொடர்வதனால், அவனது பிராரப்த-கர்மம் உடல் பிரியும் வரை இருப்பதாகச் சொல்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் இந்த பண்டிதன் தன்னை ஆத்மாவாகவே பார்ப்பதால், ஆத்மா பிராரப்தத்தின் பலனை அனுபவிப்பதாக கூற முடியாது. ஆகவே அவனுக்கு பிராரப்தமும் இல்லைஜ்ஞாநாக்3நி-3க்34-கர்மாணம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------

||4.20|| செயல்களுக்கிடையில் செயலின்மையில் நிலைபெறுதல் எங்ஙனம்?

त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रय:

कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति : ।। २० ।।

த்யக்த்வா கர்மப2லாஸங்க3ம் நித்யத்ருப்தோ நிராச்1ரய:  

கர்மண்யபி4ப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி : ।। 20 ।।


कर्म-फल-अासङ्गं   கர்ம-2-ஆஸங்க3ம்  வினைப்பயனில் ஆசையை   त्यक्त्वा   த்யக்த்வா  துறந்து   

नित्यतृप्त:   நித்யத்ருப்த:  எப்போதும் திருப்தியுடையவனாய்   निराश्रय:   நிராச்1ரய:  எதையும் சாராதவனாய்  

कर्मणि  கர்மணி  கர்மத்தில்  अभिप्रवृत्त: अपि  அபி4ப்ரவ்ருத்த: அபி  ஈடுபட்டிருந்தபோதிலும்   :  :  அவன்   

किञ्चित् एव  கிஞ்சித் ஏவ எதையாயினும்   करोति   கரோதி   செய்கிறவன் அல்லன்.


வினைப்பயனில் ஆசையற்றவனாய், எப்போதும் திருப்தனாய், எதையும் சாராதவனாய் இருப்பவன் கர்மத்தில் இருந்தபோதிலும் அவன் செயல் செய்கிறவன் அல்லன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.


விளக்கம்:

=> ஞான மார்க்கத்திலிருக்கும் ஞானிகள்:

ஞானிகள் மூன்று விதத்தில், ஞான மார்க்கத்திலிருக்க வாய்ப்புண்டு:

(1) தனது பிராரப்தத்தினால்(வினைப்பயனால்), சந்யாசம் எடுத்துக்கொண்டு பின் ஞான மார்க்கத்தை மேற்கொள்பவர்கள்.

(2) கர்மத்திலிருக்கும் போதே வைராக்கியமும் ஞானமும் அடையப் பெற்று, பின் ஞான நிஷ்டைக்காக சந்யாசம் எடுத்துக்கொண்டு, ஞான மார்க்கத்தை தொடர்பவர்கள்.

(3) கிரஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து கொண்டே சாஸ்திரத்தை படித்து, வைராக்கியமும் ஞானமும் வந்த பின்னரும் ஏதோ ஒரு காரணத்தினால் கடமையிலிருந்து விடுபட முடியாத சூழ்நிலையில், ப்ரவ்ருத்தியிலேயே தொடர்ந்து இருப்பவர்கள்

ப்ரவ்ருத்தி - காரியத்தில் ஈடுபட்டிருப்பது. நிவ்ருத்தி - கடமையிலிருந்து விலகுவது; காரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இருப்பது. (1) மற்றும் (2)-ல் குறிக்கப்படுவதை போல, சில ஞானிகளுக்கு பிராரப்தம், நிவ்ருத்தி ரூபமாக இருக்கும். ஆனால் சிலருக்கோ அது  ப்ரவ்ருத்தி ரூபமாக இருக்கும். இவ்வகைக்கான ஞானிகளுக்கு உதாரணமாக ஜனகர், அஷ்வபதி போன்றோரை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த சுலோகத்தில் பகவான் புகழ்வதும் இப்படிப்பட்ட ஞானிகளையே.


=> தீவிரமான பற்று:

ஸங்க3ம் என்பது பற்று; இங்கு ஆஸங்க3ம் என்பது கர்ம-பலத்திலுள்ள ஆழமான மற்றும் தீவிரமான பற்றை குறிக்கிறது. இது ஞானியினிடத்தில் இருப்பதில்லை என்கிறார் பகவான். கர்மபலனில் பற்றைத் துறந்து, அதாவது கர்மத்தில் அஹங்காரத்தையும், பலனில் ஆசையையும் களைந்தவனாய், எப்போதும் மன நிறைவுடன் இருக்கிறான் என பண்டிதனை புகழ்கிறார். முடிவுகளை எதிர்பார்க்காமல் யாரும் செயல் செய்வதில்லையாதலால் இங்கு பகவான்ஆஸங்க3ம்என்ற சொல்லை பயன்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட செயலின் முடிவை அடிப்படையாகக் கொண்டே யாரொருவனும் எந்தவொரு செயலையும் செய்கிறான். சாதாரணமாக நடக்கும்போது கூட, ஒருவன் சென்றடைய வேண்டிய இடம் கருத்தில் வைக்கப்படுகிறது. இங்கே திரும்பி நேராக அங்கு சென்றால் அந்த இடம் அடையப்படுகிறது என்பது மனதில் வைக்கப்படுகிறது. இப்படியிருக்கையில் முடிவை கருத்தில் வைக்காமல் ஒருவனால் எந்தவொரு செயலையும் மேற்கொள்ள முடியாது. கர்மபலனை விடுவதற்கான சாத்தியத்தில் பெரும்பாலும் நிறைய கேள்விகள் எழுப்பப்படுவதால் இங்கு பகவான் அதை தெளிவுபடுத்துகிறார்


=> ஒன்றின் மீதுள்ள பிணைப்பு விடப்படுகிறது:

உண்மையில் ஞானி விடுவது, கர்மத்தையோ அல்லது கர்மபலத்தையோ அல்ல. ஒரு செயலின் முடிவில் இருக்கின்ற ஆழமான பிணைப்பை மட்டுமே. எதிர்பார்த்த முடிவை அடையாவிட்டால், ஒருவனுக்கு ஏற்படும் வருத்தம், அவனுக்கு அந்த முடிவின் மீதுள்ள தீவிர பற்றை(‘ஆஸங்க3ம்’), பிணைப்பைக் குறிக்கிறது. இது சமஸ்கிருத மொழியில்ஆஸக்தி(आसक्ति)’ என்றும் அழைக்கப்படும். எனில், இந்த பிணைப்பை விடுவது எங்ஙனம்?

ஒருவேளை, எப்போதும் திருப்தியுடன் கூடிய ஒருவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம்நித்யத்ருப்த:. சுயத்தின் மெய்மையை அறிந்த அந்த நபருக்கு சாதிக்க எதுவுமில்லை; யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை. எப்போதுமே நமது பிரச்சினை, நம்மை நாம் ஏற்றுக் கொள்ளாததே. வேறொருவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதே, எல்லாவித சம்சாரத்திற்கும் மூலக்காரணம். மூன்றாம் அத்தியாயத்தில் நாம் பார்த்தது போல, தன் சுயத்தை மற்றும் அதன் மெய்மையை பற்றிய அறிவு தெளிவாக இருக்கும்போது, ஒருவன் தன்னுடனே மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த மகிழ்ச்சி வேறு எதையும் சார்ந்தல்ல

ஆச்1ரய:சார்ந்து இருத்தல். ஆஷ்ரீயதே இதி ஆஷ்ரய:எதைச் சார்ந்து இருப்பதால் வேண்டிய பலன் கிடைக்கிறதோ; உதாரணம் யக்ஞம், புத்திரன் மற்றும் மனைவி போன்றோரை குறிப்பிட்ட பலனுக்காக சார்ந்திருத்தல். இங்கு நிராச்1ரய: எதையும் சாராதவனாய் இருத்தல். எந்தவொரு குறிப்பிட்ட பலனையும் அவன் தனது திருப்திக்காக சார்ந்திருக்கவில்லை

இவ்விதமாக பலனிற்காக எதையும் சாராமல், ‘க்ருத்ஸ்ந-கர்ம-க்ருத்-வாக, செய்ய வேண்டியதை செய்துமுடித்தவனாக, சுதந்திரமானவனாக இருக்கிறான். இப்படிப்பட்டவன் பிராரப்தத்தின் காரணமாக, விதவிதமான பொறுப்புகளிலும், செயல்களிலும் முழுமையாக இருந்தபோதிலும் அவன் எந்தச் செயலையும் செய்பவன் அல்லன். ‘நான் அகர்த்தாஎனும் ஞானத்தில் நிலைத்தவனாதலால், கர்மத்தில் அகர்மத்தை(செயலில் செயலின்மையை) பார்ப்பவனாக இருக்கிறான்

ஜனக மஹாராஜா இப்படிப்பட்டவராகத் திகழ்ந்தவர். அவர் ஒரு ஞானியாக இருந்தபோதிலும், ஒரு வேந்தனாக தனது ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார். தனது பொறுப்புக்களை துறக்காமல் முழுமையாக வினையாற்றி, ‘நான் அகர்த்தாஎனும் ஞானத்தினால் கர்ம சந்யாசத்தை எய்தியவராக வாழ்ந்தார். அவரது சிறப்பான ஆட்சியில் நாடு செழிப்புடனும், மக்களனைவரும் மகிழ்ச்சியுடனும் இருந்தனர். இவ்வாறாக, ஞானிகள் தங்களை பல செயல்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும், எனினும் அவர்கள் எதையும் செய்யாதவர்கள்नैव किञ्चित्करोति :

-------------------------------------------------------------------------------------