||14.5|| குணங்களின் அறிமுகம் மற்றும் அதன் பொதுவான தன்மை:
सत्त्वं रजस्तम इति गुणा: प्रकृतिसंभवा: ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ।। ५ ।।
ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ணா: ப்ரக்ருதிஸம்ப4வா: ।
நிப3த்4நந்தி மஹாபா3ஹோ தே3ஹே தே3ஹிநமவ்யயம் ।। 5 ।।
महाबाहो மஹாபா3ஹோ பெருந்தோளாய் सत्त्वं ஸத்த்வம் சத்வம்
रज: ரஜ: ரஜஸ் तम: தம: தமஸ் इति இதி என்று
प्रकृति संभवा: ப்ரக்ருதி ஸம்ப4வா: பிரக்ருதியிலிருந்து உண்டான गुणा: கு3ணா: குணங்கள் देहे தே3ஹே தேகத்தில் अव्ययम् देहिनम् அவ்யயம் தே3ஹிநம் அழியாத தேஹியை
निबध्नन्ति நிப3த்4நந்தி பந்தப்படுத்துகின்றன.
பெருந்தோளாய், பிரக்ருதியிலிருந்து உண்டான சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் குணங்கள் அழிவற்ற தேஹியைத் தேகத்தில் பந்தப்படுத்துகின்றன.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.
விளக்கம்:
=> குண விசாரணை:
இந்த அத்தியாயத்தின் தலைப்பிற்கு ஏற்றார்போல இனி பகவான் குணவிசாரத்தை தொடங்க இருக்கிறார். சுலோகம் ஐந்து முதல் பதினெட்டு வரையில் இடம்பெறவிருக்கின்ற குணவிசாரணையை கீழ்கண்ட ஆறு தலைப்புகளில் வகைப்படுத்தலாம்:
(1) லக்ஷணம் — இலக்கணம். அதாவது குணங்களின் தன்மைகள்.
(2) ப2ந்த4ன ப்ரகார: — பந்தப்படுத்தும் முறை. இந்த குணங்கள் நம்மை எந்தெந்த முறையில் பந்தப்படுத்துகிறது.
(3) குண ஆதி3க்யம் — குணத்தின் ஏற்றத்தாழ்வு. ஒரு குணம் எப்படி மற்றதை மட்டுப்படுத்தி மேலே வருகிறது.
(4) லிங்க3ம் — அடையாளம். நாம் எந்த குணத்தின் வசத்தில் இருக்கிறோம் என்பதை கண்டுகொள்ளும் உபாயம் அல்லது அறிகுறி.
(5) க3தி: — பரலோக பலன், அதாவது இறந்தபின் அடையும் நிலை. எந்த குணம் மேலோங்கி இருக்கும்போது ஒருவன் மரணிக்கிறான் என்பதைப் பொருத்து அவன் அடையவிருக்கின்ற லோகங்கள்.
(6) இஹ லோக ப2லம் — இப்போதைய பலன். குணங்களின் அடிப்படையில் இப்போது ஒருவன் என்ன பலனை அனுபவிக்கிறான்.
இனி, இந்த சுலோகத்தில் பகவான் மூன்று குணங்களையும் அறிமுகம் செய்து, அதன் பொதுவான தன்மையை பற்றி கூறுகிறார்.
=> முக்குணங்களின் அறிமுகம்:
சாத்விகம், ராஜஸம் மற்றும் தாமசம் ஆகிய குணங்கள் பிரக்ருதியிலிருந்து உண்டாகின்றன — ஸத்த்வம் ரஜ: தம: இதி ப்ரக்ருதி ஸம்ப4வா: கு3ணா:. அதாவது சிருஷ்டியின் பொருள்காரணமாக இருக்கின்ற மாயை இந்த மூன்று குணங்களுக்கும் பொருள்காரணமாக உள்ளது. இங்கு ‘குணம்’ எனும் சொல்லானது ஒரு பொருளை வகைப்படுத்த உதவுகிற தன்மைகளை, அதாவது பெரிய, வட்டமான, பச்சை நிறமுடைய போன்றதான குணங்களைக் குறிக்கவில்லை. உருவம், நிறம் முதலிய பண்புகள் ஒரு பொருளைச் சார்ந்திருப்பதுபோல, இந்த குணம் என்ற பண்பு பிரக்ருதியை சார்ந்திருக்கிறது என எண்ணலாகாது. உதாரணமாக ரோஜா மலரின் குணமாக உள்ள அதன் வாசனை, மென்மை மற்றும் நிறம் போன்றவைகள் அந்த மலரைச் சார்ந்துள்ளது. ஆனால் இங்கு இந்த மூன்று குணங்களும் பிரக்ருதியிலிருந்து வேறுபட்டதல்ல. நெருப்பும் அதன் உஷ்ணமும் வேறானவைகளல்ல, ஒன்றே. அதுபோல பிரக்ருதியும் குணமும் ஒன்றேயாம். மாயையே இந்த முக்குணங்கள் வடிவத்தில் உள்ளது. உலகத்தில் உள்ள நிறங்களையெல்லாம் மூன்று அச்சில் தொகுத்துப் படங்கள் தீட்டிவிடலாம். அதேபோல பிரக்ருதி முழுதும் முக்குணங்களில் அடங்கியிருக்கிறது. முக்குணங்கள் என்பனவும் பிரக்ருதி என்பதும் சொரூபத்தில் ஒன்றேயாம். சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த முக்குணங்களைக் கொண்டு நமது அனுபவங்களை நாம் விளக்கி விடமுடியும். இந்த சிருஷ்டியின் பொருள்காரணமான மாயையின் குணங்களாக இவை இருப்பதால், அவற்றின் வெளிப்பாடுகள் படைப்பிலும் வெளிப்படுவதைக் காண்கிறோம். சுக-அனுபவமோ அல்லது அறிவை அடைவதோ சாத்விக-பிரக்ருதியின் வெளிப்பாடாகும். அதே சமயம் ஆசையும் கோபமும் ராஜஸ-பிரக்ருதி. மந்தத் தன்மையும் மோஹமும் குழப்பமும் தாமஸ-பிரக்ருதியின் வெளிப்பாடாக உள்ளன. இவ்விதம் பிரக்ருதியானது இந்த சிருஷ்டியாக வெளிப்படும் போது, இந்த முக்குணங்களும் சிருஷ்டியில் வெளிப்படுவதைக் காண்கிறோம்.
=> பந்தப்படுத்துதல்:
அவை பிணைக்கின்றன — நிப3த்4நந்தி, என்கிறார் பகவான். சங்கரர் இங்கு அதிக கவனம் எடுத்து, ‘பிணைப்பதைப் போல’ என பாஷ்யத்தில் கூறுகிறார். இக்குணங்கள் உண்மையிலேயே ஒருவனை பந்தப்படுத்துகிறது எனில் அதிலிருந்து விடுதலைப் பெறுவது எப்படிச் சாத்தியமாகும்? இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில், யாரொருவனும் தன்னை இந்த குணங்களிலிருந்து விடுபட்டவன்(நிர்குண) எனத் தெரிந்துகொள்வதன் மூலம், அவன் எல்லா குணங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்பதை பகவான் காட்டப் போகிறார்.
இனி, பிணைக்கின்றது எனில் எங்கு? தேஹத்தில், தே3ஹே. யாரை? உடலில் வசிப்பவனை, தே3ஹிநம். இங்கு ‘தே3ஹி’ எனும் சொல்லுக்கு பகவான் ‘அவ்யயம்’ என்கிற அடைமொழியை அளிக்கிறார், எந்த மாற்றத்தையும் அடையாதவன். அழிகின்ற உடலில் அழியாத ஜீவாத்மாவை இக்குணங்கள் கட்டுகிறது என்கிறார். அழிவற்ற, மாறாத, எப்போதும் ஒரே வடிவத்தில் இருக்கின்ற ஒருவனை இந்த குணங்கள் எப்படி பந்தப்படுத்தமுடியும்? அறியாமையினால்தான் இது நடைபெறுகிறது. பிரக்ருதி அல்லது க்ஷேத்திரம், க்ஷேத்திரஞனைச் சார்ந்திருக்கிறது. குணசொரூபம் அல்லாத அவனை குணம் எப்படிப் பிணைக்கமுடியும்? அதுமட்டுமல்லாது இந்த மூன்று குணங்களின் இருப்புமே ஆத்மாவைச் சார்ந்திருக்கின்ற போது, தான் சார்ந்திருக்கின்ற ஒன்றையே எப்படி அதனால் பிணைக்கமுடியும்?
உண்மையில் முடியாது; ஆனால் அறியாமையினால் இது சாத்தியமாகிறது. இதனால் நித்தியமான மற்றும் எல்லையற்றதான ஆத்மா, வரையறுக்கப்பட்டதாகவும் காலத்திற்கு உட்பட்டதாகவும் மாறுகிறது. குணங்களற்ற ஆத்மா குணங்களுக்கு கட்டுப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் அவித்யா(அறியாமை) ஆகும். அவித்யா எனும் இந்த மாயையினால் முடியாததைச் சாதிக்க முடியும். இதையே சங்கரர் மாயா-பஞ்சகம் எனும் கிரந்தத்தில், ‘அக4டித க4டநா படீயஸி மாயா’ — செய்ய முடியாததைச் செய்யும் திறன் கொண்டது மாயை என்கிறார். எனவே இந்த மூன்று குணங்களும் உடலில் வசிக்கின்ற அழியாத தேஹியை உடலுடன் பிணைப்பதைப் போலத் தெரிகிறது.
இக்குணங்கள் பிரக்ருதியின் வெளிப்பாடுகள் என அறியாதபோது ஒருவன் அவைகளால் கட்டப்படலாம். மற்றபடி க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரஞனைப் பகுத்துப் புரிந்துகொள்ளும் அறிவை அடைந்தவனை இந்த குணங்கள் கட்டுவதில்லை. எனவே பிணைக்கப்படாத ஆத்மா அக்ஞானத்தினால் பிணைக்கப்பட்டது போலத் தென்படுகிறது — நிப3த்4நந்தி இவ. நீர் அசைவதால் நீரிலுள்ள சூரிய பிம்பம் அசைகிறது. சூரியனே அசைவது போன்று பிம்பத்தினின்று தென்படுகிறது, ஆனால் உண்மையில் சூரியன் அசைவதில்லை. அதுபோல, கட்டுப்படாத ஆத்மா கட்டுப்பட்டது போன்று தென்படுகிறது.
இனி இந்த மூன்று குணங்களைப் பற்றிய தன்மைகளை விளக்குகிறார்.
---------------------------------------------------------------------------------------------
||14.6|| சத்வ குணத்தின் தன்மை:
तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ।। ६ ।।
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாச1கமநாமயம் ।
ஸுக2ஸங்கே3ந ப3த்4நாதி ஜ்ஞாநஸங்கே3ந சாநக4 ।। 6 ।।
अनघ அநக4 பாபமற்றவனே तत्र தத்ர அவற்றுள் सत्त्वं ஸத்த்வம் சத்வ குணமானது निर्मलत्वात् நிர்மலத்வாத் அசுத்தமில்லாததால் प्रकाशकम् ப்ரகாச1கம் ஒளி பொருந்தியது अनामयम् அநாமயம் இடர்ப்படுத்தாதது सुखसङ्गेन ஸுக2ஸங்கே3ந சுகத்தில் பற்றுதலாலும் ज्ञानसङ्गेन च ஜ்ஞாநஸங்கே3ந ச ஞானத்தில் பற்றுதலாலும்
बध्नाति ப3த்4நாதி பந்தப்படுத்துகிறது.
பாபமற்றவனே, அவற்றுள் சத்வ குணமானது அசுத்தமில்லாததால் ஒளி பொருந்தியது; இடர்ப்படுத்தாதது. சுகப்பற்றுதலாலும் ஞானப்பற்றுதலாலும் பிணைக்கிறது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
விளக்கம்:
சுலோகம் ஆறு முதல் எட்டு வரை பகவான் இந்த மூன்று குணங்களின் இலக்கணங்களையும், ஒவ்வொன்றும் எவ்விதத்தில் ஒருவனை பந்தப்படுத்துகிறது என்பதையும் தனித்தனியாக விளக்குகிறார். இந்த சுலோகத்தில் சத்வ குணத்தின் தன்மையைக் கூறுகிறார்.
=> சத்வகுணத்தின் தன்மை:
இவை மூன்றிற்குள் சத்வமானது அசுத்தமில்லாதது — தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத், என்கிறார். அழுக்கில்லாத காரணத்தினால் இது ஒளி பொருந்தியது — ப்ரகாச1கம். அதாவது சத்வகுணம் சைத்தன்யத்தை தெளிவாகப் பிரதிபலிக்கக்கூடியது, எனவே சத்வ குணப் பிரதானமாகவுள்ள ஒருவன் தெளிவான அறிவைப் பெறுகிறான். மன அழுக்குகள் இல்லாத காரணத்தால் அவனது அறிவில் குறைபாடுகள், தவறுகள் ஏதும் இருப்பதில்லை. தடையேதுமில்லையெனில் ஒளியானது, இருப்பதை அவ்விதமே காட்டிக் கொடுக்கும். அதுபோல அசுத்தம் என்கிற தடை இல்லாததால் வெளியிலிருப்பதை அறிவு அவ்விதமே காட்டிக் கொடுக்கிறது. அறிவு அசுத்தமாக இருக்கும்போது விபரீதமான அறிவு ஏற்படுகிறது. இங்கு அசுத்தம் என்பது ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. உண்மையில் மனம் என்பது சத்வ குணத்தினால் ஆனது. ஆகையினால்தான் சைத்தன்யத்தின் பிரதிபிம்பமான சிதாபாசம் ஏற்படுகிறது. எனவே சரியான அறிவு உண்டாவதற்கு ரஜஸ் மற்றும் தமஸின் தூண்டுதல் இல்லாமல் இருக்கவேண்டும்.
கண்ணாடி ஒன்று தூயதாய் இருப்பதோடு சத்வகுணத்தை ஒப்பிடலாம். அழுக்குப்படியாததும் ஸ்படிகம் போன்றதுமாக இருக்கின்ற கண்ணாடியின் வாயிலாக வெளிச்சம் நன்கு வெளியாகும். பார்க்கின்ற காட்சியை அது இடர்ப்படுத்துவதில்லை. சத்வகுணம் அங்ஙனம் ஆத்மப் பிரகாசத்தை விளக்கவல்லது. இதனால் விஷயங்களைப் பற்றிய அறிவு உள்ளபடி அறியப்படுகிறது.
சத்வ குணத்திற்கு இனியொரு தன்மையும் கொடுக்கப்படுகிறது — அநாமயம்; எனில் நோயற்றது, உபத்திரவம் உண்டுபண்ணாதது, இடர்ப்படுத்தாதது என்று பொருள். இன்னல்படுத்தாத காரணத்தினால் குழப்பமில்லாமல் ஒருவனால் ஒன்றைப் பார்க்கமுடிகிறது. காம குரோத லோப மோஹ மத மாச்சர்யம் என்பது மனதினுடைய நோய்கள் ஆகும். காமம் என்பது ஆசையையும், குரோதம் என்பது கோபம் மற்றும் வெறுப்பையும், லோபம் என்பது பேராசை மற்றும் சுயநலத்தையும், மோஹம் என்பது குழப்பம் மற்றும் ஆசையினால் உண்டாகும் மயக்கத்தையும், மதம் என்பது கர்வத்தையும் மற்றும் மாச்சர்யம் என்பது பொறாமையையும் குறிக்கிறது. மனமானது ரஜஸ் மற்றும் தமஸிலிருக்கும்போதே இவ்வகை நோய்கள் வருகின்றன. சத்வத்திலிருக்கும்போது மனம் விழிப்புணர்வுடன் இருப்பதால் இந்நோய்கள் உண்டாவதில்லை. எப்போதெல்லாம் நம்மால் விஷயங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறதோ, சரியான அறிவை அடைய முடிகிறதோ அது சத்வத்தின் வெளிப்பாடு என புரிந்துகொள்ளலாம். சத்வகுணமானது ஒருவனை நற்பண்புகளை அடைய வைத்து மோக்ஷத்திற்கு நேரடிக் காரணமாக ஆகிறது.
=> பந்தப்படுத்தும் முறை:
* சுக-ஸங்கம்:
சத்வகுணத்திலிருக்கும் இருக்கும்போது கிடைக்கின்ற மனவமைதியும் மனத்தெளிவும் இன்பத்தைக் கொடுக்கின்றன. எனவே சத்வகுணத்தில் பிரதானமாக இருப்பவர்கள் இந்த சுகத்தில் பற்று வைக்கிறார்கள். இவர்கள் தனிமை, அமைதி, மெளனம் மற்றும் தூய்மை இதிலிருந்து கிடைக்கின்ற சுகத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். ஒருகால் வெளி சூழ்நிலையில் இது கட்டுக்குள் இல்லாமல் போகும்போது அவர்களது மனம் துக்கப்படுகிறது. ஒழுங்கின்மையும்கூட ஒருவித ஒழுங்குதான் என்பதை மறந்து, சத்வத்திலிருந்து ரஜஸிற்கு மாறி மற்றவர்களை திட்ட அல்லது குறைகூற ஆரம்பித்துவிடுவார்கள்.
சத்வத்திலிருப்பவர்கள் ஜபம், தானம், விட்டுக்கொடுத்தல், விவேகம் மற்றும் வைராக்கியம் போன்றவற்றை விரும்புவார்கள். ‘நான் கொடுக்கிறேன்’ என்பது ஒருவித சுகம். அதையும் துறந்தவனே குணங்களைக் கடந்தவன்(குணாதீதன்) ஆகிறான். எனவே ஜபம், தியானம், வைராக்கியம் விவேகம் போன்றவைகளை சுகத்திற்காகச் செய்யாமல், அடுத்த படிநிலைக்கு முன்னேறும் பொருட்டு அதில் ஈடுபட வேண்டும்.
சுக-ஸங்கம் என்பது ஆனந்தமய கோஷத்தில் பிணைப்பதைக் குறிக்கிறது. மனம் அமைதி அடைய அடைய ஆத்மாவினது ஆனந்த அம்சத்தின் பிரதிபலிப்பு மனதில் அதிகரிக்கிறது. இது அந்தகரணமான மனதின் தர்மம் ஆகும்.
ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதெல்லாம் அவன் சத்வகுணப் பிரதானமாக இருக்கிறான். சுகம் என்பது மனதினால் அனுபவிக்கப்படும் ஒரு விஷயமாகும். இது ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்படுவது, ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்கிற முடிவிற்கு வழிவகுக்கிறது. மகிழ்ச்சியாக இருப்பது ஒரு பிரச்சனை அல்ல எனினும் அந்த முடிவில் முழுக்க முழுக்க உண்மையில்லாததால் அது அடிமைப்படுத்துகிறது. சத்வத்தின் ஆதிக்கத்தினால் மனதில் உண்டாகும் ஒருவித வ்ருத்தியே(எண்ணங்களே) அவனது மகிழ்ச்சிக்கும் மனவமைதிக்கும் காரணமாக ஆகிறது. ஒருவனின் தன்னியல்பாகவுள்ள ஆனந்தத்தை எவ்விதத்திலும் தடுக்காமல் அதை அப்படியே பிரபலிப்பதே சத்வத்தின் தன்மையாகும். இதனால் அது மனதில் ஒரு குறிப்பிட்டவளவு சுகத்தை வெளிப்படுத்துகிறது. எந்த வ்ருத்தியும் காலத்திற்கு உட்பட்டதாகையால் குறிப்பிட்ட நேரத்திற்குபின் அதன் மாற்றம் தவிர்க்க இயலாததாகிறது. ஆனால் சத்வத்தில் இருக்கின்றபோது உண்டாகும் மனவமைதி மற்றும் மனத்தெளிவு போன்ற சுகத்தில் பற்றை(ஸுக2ஸங்கே3ந) உண்டாக்கி, அதை தாண்டிச் செல்ல முடியாமல் அது நம்மை பந்தப்படுத்துகிறது. இது சம்சாரம் ஆகும். பொதுவாக வெளியில் பார்க்கின்ற நாய் அல்லது பறவை என எதனுடைய குணத்தையும் ‘நான் வாலாட்டுகிறேன்’ அல்லது ‘நான் பறக்கிறேன்’ என நம்மிடம் நாம் ஏற்றிவைப்பதில்லை. இது அதனுடைய குணம் என்கிறோம். ஆனால் இந்த உடல் மற்றும் இந்த மனதின் குணத்தை மட்டும் நம்மிடம் ஏற்றிவைத்து, ‘நான் சுகி’ என்று அந்த சுகத்தை ‘நானாக’ பாவித்து பந்தப்படுகிறோம். இது மோக்ஷத்திற்கு தடையாக உள்ளது.
* ஞான-ஸங்கம்:
சத்வம் அறிவு-வேட்கையை, அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையை உண்டாக்கி ஒருவனை பந்தப்படுத்துகிறது. அறிவில் திருப்தி கிடைக்காமல் புத்தியில் அமைதி உண்டாகாது. சத்வகுணத்தில் இருப்பவனால் அறியாமையையும் சந்தேகத்தையும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இவ்விதமாக அது ஒருவனை விக்ஞானமய கோஷத்தில் பிணைக்கிறது.
எவ்விதம் சுகம் ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்படுகிறதோ, அதேபோல செயலற்ற அகர்த்தாவான ஆத்மாவின்மீது கர்த்தா எனும் தன்மை ஏற்றிவைக்கப்படுகிறது. இதனால் சத்வகுணம் பிரதானமாக இருக்கும்போது, அறிபவன் எனும் தன்மையும் ஆத்மாவின்மீதே ஏற்றிவைக்கப்படுகிறது. அறிவில் பற்றை உண்டாக்கி சத்வம் பந்தப்படுத்துகிறது - ஜ்ஞாநஸங்கே3ந ப3த்4நாதி. இதனால் தூய சைத்தன்ய ஆத்மா, அறிபவனாக, அறியாமைக்கு எதிரானதான ஒரு குறிப்பிட்ட அறிவை அடைவதாக தவறாகக் கருதப்படுகிறது. ஆத்மா அறிவிற்கோ அல்லது அறியாமைக்கோ எதிரானது அல்ல. இரண்டையும் சமமாகப் பிரகாசிக்கிறது. எப்போது ஒருவன் அறிவு என்பது மனதின் தன்மை, அது ஆத்மாவின் தன்மை அல்ல; ஆத்மா தூய பிரக்ஞை சொரூபம், ஆகையினால் எது குறித்தும் அதற்கு அறியாமை இல்லை என்பதை அறிகிறானோ அப்போது, அந்த ஞானத்துடன் தொடர்புடைய சத்வகுணமானது அவனை பந்தப்படுத்துவதில்லை. இதனால் குணத்தை கடந்த குணாதீதன் ஆகிறான். சுகத்தை பொறுத்தவரையில், ஆத்மா சுக-சொரூபமானது என்பதால் அது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுகியாக(சுகத்தை அனுபவிப்பவனாக) மாறுகிறது என்பது கிடையாது. எனவே, ஒருவர் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது அறியாமையினாலும் பிணைப்பினாலும் உண்டாகிற கருத்து ஆகும். இதனால் ஆனந்த சொரூபமான ஆத்மா இப்போது இந்த குறிப்பிட்ட நேரத்தில் சுக-வடிவில் இருப்பதாகத் தவறாக எண்ணப்படுகிறது. அறிபவன் எனும் தன்மையும், சுகத்தை அனுபவிப்பவன் எனும் தன்மையும் எப்போதும் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது. இந்த வரம்பு ஒருவனை பந்தப்படுத்துகிறது. மற்ற பந்தங்களையெல்லாம்விட சத்வகுணம் உண்டுபண்ணுகிற பந்தம் மிகவும் வலிமை வாய்ந்தது. அந்த பந்தத்தை உடைத்தெறிவது மிகக் கஷ்டமானது. ஏனென்றால் ஆத்மானந்தத்துக்கு ஒப்பான சுகத்தை அது கொடுக்கிறது; நுண்ணறிவையும் அது வளர்க்கிறது. சுகத்துக்கும் அறிவுக்கும் அப்பால் செல்ல மனிதனுக்கு விருப்பம் வருவதில்லை.
---------------------------------------------------------------------------------------------