செவ்வாய், 8 ஏப்ரல், 2025

குணத்ரய விபாக யோகம் 14.1 - 14.2

                                     பதிநான்காம் அத்தியாயம்

                           குணத்ரய விபாக யோகம் 

                                     [गुणत्रयविभागयोग:]

இந்த பதிநான்காவது அத்தியாயம், மூன்று குணங்களைப் பற்றியும், அவைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைவது குறித்தும் பேசுகிறது. குணங்களைக் குறித்த விசாரம் தேவைப்படுவதற்கான காரணங்கள்:

   (1) மாயையைக் கூறாகப் பிரித்து அதைக் கடக்க, அதனுடைய குணங்களைப் பற்றிய விசாரணை தேவைப்படுகிறது

   (2) மாயை என்பது ப்ரம்மத்தை சார்ந்து இயங்குவது என்பதை புரிந்துகொள்ள,

   (3) சென்ற அத்தியாயத்தின் இருபத்தியோராம் சுலோகத்தில்(13.21) பகவான், பிறவிகள் உண்டாவதற்கு அல்லது துயரத்திற்கு காரணம் குணத்தின் மீதுள்ள பற்றுகாரணம் கு3ணஸங்கோ3ऽஸ்ய, எனக் கூறுகிறார். எனவே இக்குணங்களின் தன்மை, விளைவு, அதிலிருந்து எப்படி விடுபடுதல் போன்ற அறிவை அடைய

   (4) அனைத்து குணங்களையும் கடந்தவனது அடையாளங்களை பற்றிய அறிவை அடைய இந்த விசாரணை உதவுகிறது.   

---------------------------------------------------------------------------------------------

||14.1|| பகவானின் உறுதி:

श्रीभगवानुवाच

परं भूय: प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम्  

यज्ज्ञात्वा मुनय: सर्वे परां सिद्धिमितो गता: ।। ।।

ஸ்ரீப43வாநுவாச

பரம் பூ4: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்

யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்3தி4மிதோ 3தா: ।। 1 ।।


श्री भगवान् उवाच   ஸ்ரீ 43வாந் உவாச   ஶ்ரீ பகவான் சொன்னது       

यत् ज्ञात्वा  யத் ஜ்ஞாத்வா  எதை அறிந்து    मुनय: सर्वे  முநய: ஸர்வே  முனிவர்கள் எல்லோரும்    

इत:  இத:  இவ்வுடல் வாழ்க்கைக்குப்பின்     परां सिद्धिम्  பராம் ஸித்3தி4ம்  மேலான சித்தியை     गता:  3தா:  அடைந்தார்களோ    ज्ञानानां  ஜ்ஞாநாநாம்  ஞானங்களுக்குள்     

उत्तमम्  உத்தமம்  உத்தமமானதும்    परं  பரம்  பரம்பொருளைப் பற்றியதுமான      

ज्ञानम्  ஜ்ஞாநம்  ஞானத்தை    भूय:  பூ4:  திரும்பவும்     प्रवक्ष्यामि  ப்ரவக்ஷ்யாமி  சொல்லுகிறேன்.


ஶ்ரீ பகவான் சொன்னது

முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மேலாம் சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் சிறந்ததும், பரம் பொருளைப் பற்றியதுமான அந்த ஞானத்தை மீண்டுமுரைப்பேன்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.


விளக்கம்:

இந்த அத்தியாயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுலோகங்களில் பகவான், (1) ப்ரதிக்ஞா, (2) ஞான மஹிமை மற்றும் (3) ஞானப் பலனைக் கூறுகிறார். சமஸ்கிருதத்தில்ப்ரதிக்ஞாஎனில் உறுதிமொழி, இதை கண்டிப்பாக உனக்குச் சொல்லுகிறேன் எனும் உறுதிகூறுதலைக் குறிக்கிறது

மீண்டும் சொல்லப்போகிறேன்பூ4: ப்ரவக்ஷ்யாமி, என சுலோகத்தை ஆரம்பிக்கிறார். மெய்பொருளின் தன்மை குறித்த உபதேசத்தை முந்தைய அத்தியாயங்களில் கூறியிருந்தபோதிலும், திரும்பவும் அதை உபதேசிக்கப் போவதாகக் கூறி அர்ஜுனனின் கவனத்தை ஈர்க்கிறார் கிருஷ்ணர். முன்னமே பகரப்பட்ட பரம்பொருளைப் பற்றிய இந்த ஞானத்தை மீண்டுமொருமுறை கூறுதல் என்பது இனியொரு கோணத்தில் மீண்டும் விரிவாக விளக்குதலைக் குறிக்கிறது. இதைபுநருக்தி தோஷம்என்றழைக்கப்படும், கூறியது கூறல் எனும் தோஷமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த தத்துவத்தின் முக்கியதுவத்தைக் குறிப்பதற்காக திரும்பவும் சொல்லப்படுவதாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். புரிந்து கொள்ளும்பொருட்டு மீண்டும் மீண்டும் செய்தலை நாம் அப்யாசம் என்றழைக்கிறோம். சந்தேகம் தெளிந்து தெளிவாக புரிந்துகொள்ள இது உதவுகிறது. சில கோணங்கள், சிலருக்கு இன்னும் அதிகமான புரிதலைத் தருவதால், வெவ்வேறு பக்கங்களிலிருந்து பகுப்பாய்வு செய்வதும் அவசியமாகிறது. இனி, இந்த ஞானத்தின் மஹிமையை கூறுகிறார்

=> ஞான மஹிமை

ஞானங்களுள் இது உத்தமமானது - ஜ்ஞாநாநாம் உத்தமம், என்கிறார். மற்ற எல்லா அறிவைக் காட்டிலும் ப்ரம்மஞானம் உத்தமமானது ஏனெனில் இது உத்தமமான பலனாகவுள்ள மோக்ஷத்தைத் தருகிறது. மேலும், இந்த ஞானமே பலனை நேரடியாகக் கொடுக்கிறது. அதாவது மற்ற அறிவுத்துறையைப் போல ஒன்றை அறிந்து, பின் அதுகுறித்து ஏதேனும் செயல் செய்து அந்த செயலின் விளைவாகப் பலன் அடைவது என்பது இங்கு இல்லை. தன்னறிவு என்பதால் அறிவே நேரடியாகப் பலனைக் கொடுக்கிறது

மேலான ஞானம் - பரம் ஜ்ஞாநம், என்கிறார். அதாவது மேலான விஷயத்தைப் பற்றிய ஞானம், எல்லையற்ற பரம் ப்ரம்மத்தை பற்றிய அறிவு என்பதால் இது உயர்ந்தது. பல்வேறு வகையான அறிவுத்துறைகளுக்குகிடையில் இந்த அறிவு மட்டுமே பரம், பர-ஞானம். ப்ரம்மஞானத்தை தவிர மற்றவையனைத்தும் அபர-ஞானம். ஆனாலும் நாம் எந்த அபர-ஞானத்தையும் நிராகரிப்பதில்லை, ஏனெனில் பர-ஞானத்தை அடைவதற்கு அபர-ஞானம் ஒரு முற்படுதேவையாக, முன்நிபந்தனையாக இருக்கிறது. ஓரளவு அறிவுசார் ஒழுக்கத்தையும் சில அடிப்படை அணுகுமுறைகளையும் வளர்த்துக் கொள்ளாதவரை, பர-ஞானத்தைப் பெற முடியாது

பரம் பொருளை விஷயமாகக் கொண்டிராத காரணத்தினால் மட்டும் இவைகள் அபர-ஞானம் என்பது இல்லை, இத்தகைய அறிவுக்கு முடிவே இல்லை. உதாரணமாக வேதியியல், உளவியல், மொழி போன்றவற்றை முடிவில்லாமல் ஆராயலாம். அவைகளில் இறுதிப் புள்ளி என ஒன்றில்லை. இந்த எல்லைவரை அறிந்தால் நான் அத்துறையில் அனைத்தையும் அறிந்துவிட்டேன் எனக் கூறிவிடமுடியாது. ஒருவனின் ஆயுள் முடியும்வரை அத்துறைக் குறித்த ஆராய்ச்சியைத் தொடரலாம். ஆனால் பர-ஞானம் அப்படிப்பட்டதல்ல. அந்த ஞானமே முடிவான உண்மை. இந்த தத்துவம் அறியப்படும்போது அது அறிவின் உச்சத்தை அடைகிறது; எல்லாவற்றின் உண்மையைத் தொடுகிறது. இது முழுமையைப் பற்றிய அறிவாக இருப்பதால், இதை அறிந்தால் மெய்மையின் அடிப்படையில் வேறு எதையும் ஒருவன் அறியத் தேவையில்லை. இத்தகைய மஹிமையை உடையதாக இந்த ஞானம் இருப்பதால் பகவான் இதைஉத்தமம்என்றும், ‘பரம்என்றும் அழைக்கிறார்.   


=> ஞான பலன்:

எதை அறிந்து அனைத்து முனிவர்களும் இவ்வுடல் வாழ்க்கைக்குப்பின் மேலான சித்தியை அடைந்தார்களோ அதை உரைக்கப்போகிறேன்யத் ஜ்ஞாத்வா முநய: ஸர்வே இத: பராம் ஸித்3தி4ம் 3தா:, என்கிறார். அதாவது இந்த ஞானம் என்பது மேலாம் சித்தியை அளிக்கக்கூடியது என ப்ரம்மஞானத்தின் பலனைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். ‘முநிஎன்பதற்கு மூன்று பொருள்விளக்கம் அளிக்கலாம்:

  (1) மெளநாத் முநி: - தேவையான அளவு மட்டுமே பேசுபவர்கள், மற்றபடி மெளனத்தில் இருப்பார்கள்.

  (2) மநநாத் முநி: - எப்போதும் ஆத்மஞானத்தைக் குறித்த விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்; கவனமாக இருப்பவர்கள். இவர்கள் மநந-சீலா என்றும் அழைக்கப்படுவர்.

  (3) யதி: - உலகப் பற்றைத் துறந்தவர்கள்.

இந்தியாவில் வசிஷ்டர், வியாஸர் முதலிய பெரும் முனிகள் ஒவ்வொரு தலைமுறையிலும் இருந்துள்ளனர். இந்த முனிவர்கள் அனைவரும் மேலான சித்தியை அடைந்தவர்கள்; இறுதி இலக்கை எட்டியவர்கள் - ஸித்3தி4ம் 3தா:. இதில்ஸித்3தி4என்பது மோக்ஷத்தைக் குறிக்கிறது. ‘பிணைப்புகளிலிருந்து விடுதலைஎனப் பொருள்படும் மூலச்சொல்லானமுச்என்பதிலிருந்து இந்தமோக்ஷஎனும் சொல் பெறப்பட்டுள்ளது. எனில் எந்த மாதிரியான பந்தத்திலிருந்து அவன் விடுவிக்கப்படுகிறான் என்பதைப் பார்க்கவேண்டும். அறியாமையினால் ஏற்படுகின்ற இந்த உடலுடனான பந்தத்திலிருந்து விடுதலை அடைகிறான் என்கிறார் சங்கரர். அறியாமையிலிருந்து ஆசை எழுகிறது, ஆசையை நிறைவேற்றுவதற்காக செயல் செய்யப்படுகிறது. இந்த ஆசையிலிருந்தும் கர்மத்திலிருந்தும் ஒருவன் விடுவிக்கப்படுகிறான் - ஸித்3தி4. இந்த இலக்கை அடைவதே இறுதியானது ஏனெனில் வேறு எந்தவொன்று பெறப்பட்டாலும் அதில் இழப்பு நிச்சயம். இந்த உடலும்கூட ஒரு கட்டத்தில் இழப்புக்கு உட்பட்டது எனும்போது அதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும்? எனவேமோக்ஷம்மட்டுமே இறுதி முடிவு(3தி), ஏனெனில் அந்த நிலையை அடைந்தபின் திரும்புதலோ அல்லது அங்கிருந்து வேறு எங்கோ செல்லுதலோ என எதுவுமில்லை


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஈஷ்வரனை அறியும் வித்தை பரவித்தை எனப்படும். சாஸ்திரங்கள், தத்துவம், தர்க்கம், இலக்கணம் முதலியனவெல்லாம் மனத்தில் பெருங்குழப்பத்தையுண்டாக்கும். கிரந்தங்கள் எல்லாம் கிரந்தி[முடிச்சு]களைப் போன்றுள்ளன. பரவித்தையைக் கற்பிக்குமானால் தான் அவைகள் பயன்படுவனவாகும்.

---------------------------------------------------------------------------------------------

||14.2|| ப்ரம்மஞானத்தின் பயன்:

इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागता:

सर्गेऽपि नोपजायन्ते प्रलये व्यथन्ति ।। ।।

இத3ம் ஜ்ஞாநமுபாச்1ரித்ய மம ஸாத4ர்ம்யமாக3தா:  

ஸர்கே3ऽபி நோபஜாயந்தே ப்ரலயே வ்யத2ந்தி ।। 2 ।।


इदं ज्ञानम्  இத3ம் ஜ்ஞாநம்  இந்த ஞானத்தை    उपाश्रित्य  உபாச்1ரித்ய  அனுஷ்டித்து    

मम साधर्म्यम्  மம ஸாத4ர்ம்யம்  என் சொரூபத்தை    आगता:  ஆக3தா:  அடைந்தவர்கள்    

सर्गे अपि  ஸர்கே3 அபி  சிருஷ்டிக் காலத்திலும்     उपजायन्ते  உபஜாயந்தே  பிறப்பதில்லை     प्रलये   ப்ரளயே   பிரளய காலத்திலும்    व्यथन्ति  வ்யத2ந்தி  துன்புறுவதில்லை.


இந்த ஞானத்தை அனுஷ்டித்து என் சொரூபத்தை அடைந்தவர்கள் சிருஷ்டியில் தோன்றுவதில்லை, பிரளயத்தில் துன்புறுவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.


விளக்கம்:

ப்ரம்மஞானத்தின் பலன் இரண்டாம் சுலோகத்திலும் தொடர்கிறது. ‘இந்த ஞானத்தை அனுஷ்டித்து _ இத3ம் ஜ்ஞாநம் உபாச்1ரித்யஎன சுலோகத்தை துவக்குகிறார். இங்கு ஞானத்தை அனுஷ்டித்தல் என்பதுநான் ப்ரம்மஎனும் ஞானத்தை அடைதலைக் குறிக்கிறது. இந்த ஞானத்திற்கான சாதனங்களான சிரவணம்(சாஸ்திரம் கேட்டல்), மநநம்(சந்தேகம் தெளிதல்) மற்றும் நிதித்யாசனம்(நிலைபெறும் தியானம்) ஆகிய வழிமுறைகளைப் பின்பற்றி இந்த ஞானத்தை அடைதலைக் குறிக்கிறது


=> ஞானப்பலன்:

இப்படிப்பட்ட முனிவர்கள் என்னுடைய தன்மையையே அடைந்தவர்கள் - மம ஸாத4ர்ம்யம் ஆக3தா:, என பகவான் ஞானப் பலனைக் கூறுகிறார். அதாவது ஆத்மாவானது பரமேஷ்வரனிடமிருந்து வேறாக இல்லை என்பதை கண்டடைந்தவர்கள்

பொதுவாக சமஸ்கிருத மொழியில், ‘ஸாத4ர்ம்யம்எனில் சமான குணத்தைக் குறிக்கிறது. உதாரணமாகமாணவன் சிங்கம்எனப் பொருள்படும்சிம்ஹம் மாநவ:எனும் வாக்கியத்தில், சமமான தர்மத்தின் அடிப்படையில் மாணவன் சிங்கத்தின் சாதர்ம்யத்தை அடைகிறான். அதாவது சிங்கத்தின் ஒரு குறிப்பிட்ட குணத்துடன் ஒத்துப்போகிறான். இதில் சிங்கம் வேறு, மாணவன் வேறு; ஆனால் சமமானதொரு குணத்தின் நோக்கில், மாணவன் சிங்கத்தை போன்று தைரியமானவன் எனும் விதத்தில் இந்த உதாரணத்தில் இது உபயோகிக்கப்படுகிறது. ஆனால் இந்த சுலோகத்தில் சாதர்ம்யம் என்பது குணத்தின் ஒற்றுமையைக் குறிக்கவில்லை, சொரூப ஒற்றுமையைக் குறிக்கிறது. பகவானின் சொரூபம்ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்ம’. இந்த முனிகள் தங்களுடைய சொந்த சொரூபமும்ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரம்மஎனப் புரிந்துகொள்கிறார்கள். இதன்மூலம் ஈஷ்வரனுடனான தங்களின் ஐக்கியத்தை அங்கீகரிக்கிறார்கள். இந்த ஞானத்தை போற்றுவதற்காகவே இந்த பலன் இங்கு பேசப்படுகிறது.   

   

=> பிறப்பில்லை, இறப்பில்லை:

இத்தகையவர்கள் சிருஷ்டியின் துவக்கத்தில் பிறப்பதில்லைஸர்கேஅபி உபஜாயந்தே, என்கிறார் கிருஷ்ணர். எண்ணிலடங்கா ஜீவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்து, வெவ்வேறு லோகங்களுக்கு சென்று, அதற்குண்டான புண்ணிய-பாபம் கழித்து, பின் மீண்டும் வேறொரு வடிவில் பிறக்கிறார்கள். தங்களது புண்ணிய கர்மத்தைப் பொறுத்து சில ஜீவர்கள் தேவதை நிலையைக் கூட அடைகிறார்கள். ஆனால் ஈஷ்வரனுடனான தனது ஐக்கியத்தை அடைந்த இந்த சித்தர்கள் சிருஷ்டி உருவாக்கத்தின் போதும்கூட மீண்டும் பிறப்பதில்லை. அவர்கள் ப்ரம்மமாகவே இருக்கிறார்கள்; வடிவத்தை எடுப்பதற்கான தனித்தன்மை எதுவும் அங்கு இல்லை.

அதுபோலவே, ஒடுக்கத்தின்போதும் அவர்கள் துன்புறுவதில்லைப்ரளயே வ்யத2ந்தி. அதாவது அழிவு எனும் துன்பத்தை அவர்கள் பிரளயத்தில் அடைவதில்லை. மஹாபிரளயத்தின் போது முழு சிருஷ்டியும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்குள் ஒடுங்குவதால் பிரம்மதேவரும்கூட தனது பிரம்மதேவர் எனும் பதவியை இழக்கிறார். இருப்பினும், தனிப்பட்டவர்களாக இல்லாத காரணத்தினால் இந்த முனிவர்கள் அந்த மஹாபிரளயத்தில் கூட அழிவதில்லை, ப்ரம்மமாகவே இருக்கின்றனர்.

அவர்கள் பிறப்பதில்லை, அழிவதில்லைஎன ஏன் இங்கே பன்மையைப் பயன்படுத்துகிறோம். எனில் பல ஆத்மாக்கள் இருக்கின்றனவா? என ஒருவனுக்குச் சந்தேகம் எழலாம். ஆத்மாவின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது பன்மைத்தன்மை என்பது இல்லை; இருப்பது ஒரேயொரு ஆத்மா மட்டுமே. ஆனால் முனிவர்களைப் பற்றிப் பேசும்போது, ப்ரம்மனுடனான ஐக்கியம் உண்டான அந்த குறிப்பிட்ட உபாதியைப் பற்றிப் பேசுகிறோம். வசிஷ்டர், ஜனகர், வாமதேவர், வியாஸர் போன்ற வடிவம் தாங்கிய முனிவர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு பன்மை பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே

ஒடுங்கிய நிலையில் இருப்பவைகள் மீண்டும் வெளித்தோற்றத்திற்கு வரும்போது, மோக்ஷத்தை அடைந்த இந்த முனிகளைத் தவிர பிரளயத்திற்குமுன் இருந்த அனைத்தும் மீண்டும் வெளிப்படுகின்றன. ஆனால் ப்ரம்மத்துடனான ஐக்கியத்தினால் இந்த முனிவர்கள் மீண்டும் வருவதில்லை; சிருஷ்டிக்கு காரணமான அந்த ப்ரம்மமாக இருக்கின்றனர். சிருஷ்டி ஒடுங்கும்போது அழிவதுமில்லை, ஏனெனில் இந்த சிருஷ்டியே ப்ரம்மமாக இருக்கின்ற அவர்களுக்குள்தான் ஒடுக்கத்தை அடைகிறது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வேகவைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது. வேகவைக்காத நெல்தான் முளைவிடும். அதுபோல ஸித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறுஜென்மம் அடைவதில்லை. அஸித்தனோ தான் ஸித்தனாகும் வரையில் திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------