செவ்வாய், 25 மார்ச், 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.30 - 13.31

||13.30|| எப்படி அத்வைதம்?

यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति

तत एव विस्तारं ब्रह्म संपद्यते तदा ।। ३० ।।

யதா3 பூ4தப்ருத2க்3பா4வமேகஸ்த2மநுபச்1யதி

தத ஏவ விஸ்தாரம் ப்3ரஹ்ம ஸம்பத்3யதே ததா3 ।। 30 ।।


यदा  யதா3  எப்பொழுது     भूत पृथक् भावम्  பூ4 ப்ருத2க் பா4வம்  உயிர்களின் விதவிதமான வாழ்க்கை    एकस्थम्  ஏகஸ்த2ம்  ஓர் ஆத்மாவிலிருப்பதையும்    

तत: एव   தத ஏவ   அந்த ஆத்மாவிலிருந்தே    विस्तारं  விஸ்தாரம்  விரிவாகத் தோன்றுவதையும்   अनुपश्यति  அநுபச்1யதி  காண்கிறானோ    तदा  ததா3  அப்பொழுது    

ब्रह्म संपद्यते  ப்3ரஹ்ம ஸம்பத்3யதே  ப்ரம்மத்தை அடைகிறான்.   

    

உயிர்களின் விதவிதமான வாழ்க்கை ஒரே ஆத்மாவிலிருப்பதையும், அதிலிருந்தே அவைகள் விரிவடைவதையும் எப்பொழுது காண்கிறானோ அப்பொழுது அவன் ப்ரம்மத்தை அடைகிறான்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.


விளக்கம்:

க்ஷேத்திரம் க்ஷேத்திரஞனுக்கிடையில் உள்ள தொடர்பு இங்கு இன்னும் நன்கு விளக்கப்படுகிறது. காணப்படுகின்ற விதவிதமான இத்தனை இருமைகளுக்கு மத்தியில் அத்வைதம்(இரண்டற்ற நிலை) எப்படிச் சாத்தியம்? தங்கத்திலிருந்து செய்யப்பட்ட பலவிதமான நகைகள் உள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும்போது நகை, தங்கம் என்கிற இருமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது உண்மையல்ல. தங்கம் என்கிற ஒரே பொருளே வளையல், மோதிரம், காதணி, கழுத்தணி என விதவிதமாகத் தெரிந்து கொண்டுள்ளது. இவைகளின் மதிப்பைக் காட்டிக் கொடுக்கின்றஎடைஎனும் தன்மை தங்கத்தைச் சார்ந்தது; நாமரூபத்திற்கு எந்த எடையும் கிடையாது என்பதால் அது மித்யா. அதுபோல இவ்வுலகில் விதவிதமாகத்  தோன்றிக் கொண்டிருக்கிற உயிர்களனைத்தும் ஆத்மா என்ற ஒன்றிலிருந்தே தோன்றியுள்ளது. மித்யாவான நாமரூபம் நீக்கப்பட்டால் இருப்பது ஆத்மா ஒன்று மட்டுமே


=> ஒரே ஆதாரம்:

இந்த சுலோகத்தில், பார்த்தல் என்ற பொருளில் வந்துள்ளஅநுபச்1யதிஎனும் சொல்லில்அநுஎனும் முன்னொட்டு, குருவினால் கற்பிக்கப்பட்ட சாஸ்திரங்களின்படி பார்த்தல் என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக சாந்தோக்ய உபநிஷத், ‘உண்மையில் இவையனைத்தும் ஆத்மாவேஆத்மைவ இத3ம் ஸர்வம்என்கிறது. இதைப் புரிந்த ஞானி, இங்குள்ள அனைத்திலும் தன்னையே பார்க்கிறான். பல்வேறு வகையான விஷயங்களைக் கொண்ட இந்த முழு படைப்பின் இருத்தல், தன்னில்(ஆத்மாவில்) மட்டுமே இருப்பதாகக் காண்கிறான். இக்கருத்தையே பகவான் இந்த சுலோகத்தில் குறிப்பிடுகிறார். உயிர்களின் இந்த விதவிதமான தன்மைகள் ஒன்றில்(ஏகத்தில்) உள்ளதுபூ4தப்ருத2க் பா4வம் ஏகஸ்த2ம். அதுமட்டுமல்லாமல், அந்த ஒன்றிலிருந்தே அவைகள் அனைத்தும் விரிவடைகின்றதுதத ஏவ விஸ்தாரம். களிமண்ணிலிருந்து விதவிதமான பானைகள் வந்ததைப் போல, ஆத்மாவிலிருந்து இந்த விதவிதமான நாமரூபங்கள் வந்துள்ளன. துவைதம் என்பது ஆதாரத்திற்கு வேறாக இல்லை; ஆதாரமே பலவாகத் தெரிந்து கொண்டுள்ளது. அலை, திவலை, நுரை முதலிய தனித்தனி வடிவங்களெல்லாம் கடலுக்குப் புறம்பாயில்லை. எல்லாம் கடல் என்ற ஒரு பொருளிலே நிலைத்திருக்கின்றன. மேலும் அவைகளெல்லாம் கடலிலிருந்தே உண்டானவைகள். கடலே தனது சக்தியால் அத்தனைவித வடிவெடுத்திருக்கிறது. அதுபோல மாயா சக்தியின் வல்லைமையால் பல்லுயிர்களாகத் தோன்றிருப்பவைகள் எல்லாம் பரப்ரம்மத்திடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அந்த மாயா சக்தியே ப்ரம்மத்துக்கு அன்னியமானதல்ல.

இதை எப்போது ஒருவன் தெளிவாகக் காண்கிறானோ அப்போது அவன் ப்ரம்மத்தை அடைகிறான்ப்3ரஹ்ம ஸம்பத்3யதே. ப்ரம்மத்தை அறிதலே ப்ரம்மத்தை அடைதலாகும். அதாவது, ப்ரம்மத்தை அடைகிறான் எனில்தன்னை ப்ரம்மமாகப் புரிந்து கொள்கிறான்என்பது பொருள். ‘அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றி, என்னாலேயே நிலைபெற்று, என்னிடத்தே ஒடுங்குகின்றனஎனும் புரிதல் ப்ரம்மத்தை அடைதல் ஆகும். அவன் திடீரென்று ப்ரம்மமாக மாறுவதில்லை ஏனெனில் இந்த அறிவிற்கு முன்பும் அவன் ப்ரம்மமாகவேதான் இருக்கிறான். எனவேதான் இங்கு அறிவு மட்டுமே தேவைப்படுகிறது. ‘நான் ப்ரம்மஎன்பதை அவன் அறியாததால், ‘நீ ப்ரம்மம்என சாஸ்திரம் உபதேசிக்க வேண்டியிருக்கிறது. மேலும் ஒருவன் எல்லா காலத்திலும் ப்ரம்மம்தான் என்பதனாலேயே சாஸ்திரம்பிற்காலத்தில் நீ ப்ரம்மமாக ஆவாய்எனக் கூறாமல்நீ ப்ரம்மாக இருக்கிறாய்எனக் கூறுகிறது.

அனைத்து உடல்களினுள்ளும் ஆத்மாவானது இரண்டற்றதான பிரக்ஞை சொரூபமாக உள்ளது என்றும், ஆத்மாவிலிருந்து வேறானதாக எதுவுமில்லை என்றும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அப்படியெனில் உடல்-மனதுடனான தொடர்பின் காரணமாக ஆத்மாவும் சரீர வரையறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறதா? என்கிற கேள்வி எழலாம். அதற்கான பதில் அடுத்த சுலோகத்தில் வருகிறது.   


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

இயங்காப் பரப்பிரம்மமும் இயங்கும் சக்தியும் உண்மையில் ஒன்றேயாம். அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபி எவனோ அவனே ஸர்வசக்தி, ஸர்வ ஞானம், ஸர்வானந்தம் இவைகளையுடைய ஜகன் மாதாவாகவுமாகிறான். நெருப்பும் அதன் வெப்பமும் ஒன்றானவை. அக்கினியின்றி உஷ்ணத்தையும் உஷ்ணமின்றி அக்கினியையும் மனத்தால் சிந்திக்க முடியாது.

---------------------------------------------------------------------------------------------

||13.31|| ஆத்மா அழிவில்லாதது:

अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्यय:

शरीरस्थोऽपि कौन्तेय करोति लिप्यते ।। ३१ ।।

அநாதி3த்வாந்நிர்கு3ணத்வாத்பரமாத்மாயமவ்யய:

1ரீரஸ்தோ2ऽபி கௌந்தேய கரோதி லிப்யதே ।। 31 ।।


कौन्तेय  கௌந்தேய  குந்தி புத்திரா    अनादित्वान्  அநாதி3த்வாந்  ஆதியில்லாததாலும்     

निर्गुणत्वात्  நிர்கு3ணத்வாத்  குணமில்லாததாலும்    अयम्  அயம்  இந்த     

अव्यय:  அவ்யய:  அழிவில்லாத     परमात्मा   பரமாத்மா  பரமாத்மாவானது     

शरीरस्थ: अपि  1ரீரஸ்த2 அபி  சரீரத்திலிருப்பினும்     करोति  கரோதி  கர்மம் செய்வதில்லை     लिप्यते  லிப்யதே  பற்றுவதில்லை.


குந்தி புத்திரா, ஆதியில்லாததால், குணமில்லாததால் அழிவில்லாத இந்த பரமாத்மா உடம்பிலிருந்தாலும் கர்மம் செய்வதில்லை, பற்றுவதில்லை.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.


விளக்கம்:

இந்த பரமாத்மா அழிவில்லாததுஅயம் அவ்யய: பரமாத்மா, என்கிறார் கிருஷ்ணர். ‘வ்யயஎனில் தேய்வு, ‘அவ்யயஎனில் தேய்வில்லாதது, மாறாதது, அழியாதது என்பது பொருள். ஆத்மா அழியாததது என்பதற்கான காரணங்களாக அதனுடைய இரு இயல்புகளை இங்கு முன்வைக்கிறார்:


=> ஆதியில்லாதது

   (1) ஆத்மா ஆதியில்லாதது(அநாதி3த்வாந்). இங்குஅநாதிஎனும் சொல்லுக்கு இரு பொருள்விளக்கம் அளிக்கலாம்

   (i) துவக்கமற்றது. ஒரு உடல் பிறக்கிறது எனவே அதற்கு ஒரு ஆரம்பம் உண்டு. ஆனால் ஆத்மாவோ ஆரம்பமில்லாதது; தோற்றமற்றது. எனவே தோன்றுகிற ஒன்றிற்கு இருக்கின்ற சிக்கல்கள் எதுவும் இதற்கு இல்லை. தொடக்கத்தைக் கொண்ட எந்த ஒன்றுக்கும், தேய்தல் மற்றும் அழிதல் இருப்பதால் அது காலத்திற்கு உட்பட்டது. ஆனால் ஆத்மா அநாதி என்பதால் காலத்திற்கு உட்படாதது. இதனால் அது அவ்யயம்.

   (ii) காரணமற்றது. முழு படைப்பிற்கும் காரணமாக(ஆதாரம்) இருக்கின்ற பரமாத்மாவானது காரணமற்றது ஆகும். எந்தவொரு படைப்பின் உருவாக்கத்திலும் அதன் தொடக்கத்தில் இருப்பதுதான் மூலக்காரணம். பானை உருவாவதற்கு முன் களிமண்ணே இருந்தது என்பதால் அதன் மூலக்காரணம் களிமண் ஆகும். அதேபோல, சிருஷ்டிக்கு முன் இந்த ஆத்மா இருந்தது, ஆகவே அதுவே மூலகாரணம் ஆகும். அதற்கென எந்த மூலக்காரணமும் இல்லை; அதாவது அது எந்த ஒரு காரணத்திலிருந்தும் தோன்றவில்லை. எனவே அநாதி. இதனால் அது அவ்யயம்.


=> குணங்களற்றது:

   (2) ஆத்மா குணங்களற்றது(நிர்கு3ணத்வாத்). எந்த தன்மையும் அற்றதாக இருப்பதால் ஆத்மா அவ்யயம், அழியாதது. ஏதேனுமொரு தன்மை இருந்தால், அது இனியொன்றுடன் தொடர்பு கொள்ளும்போது அதன் தன்மையில் மாற்றம் உண்டாகும். ஆனால் ஆத்மா எந்த குணமுமற்ற வஸ்து ஆகும். சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களையுடைய மாயை மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் அந்த மாயைக்கு சாட்சியாக இருக்கின்ற ஆத்மா குணங்கற்றது. ஆகவேதான் மனமானது பிரக்ஞையிலிருந்து பிரிக்கப்படாததெனினும் மனதின் சிக்கல்களும் இயல்புகளும் ஆத்மாவை தொடுவதில்லை. அதேபோல உடலில், புலன்களில் மற்றுமிந்த உலகில் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் ஆத்மாவைத் தொடுவதில்லை. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசத்திற்கே குணங்கள் இல்லை எனும்போது, அந்த ஆகாசத்திற்கும் ஆதாரமாக விளங்கிக்கொண்டிருக்கும் பிரக்ஞைக்கு எப்படி குணங்கள் இருக்க முடியும்? எனவே குணங்களற்ற காரணத்தினால் ஆத்மா மாறாதது


=> செயலற்றது, பற்றற்றது:

ஆகையினால், உடலில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பினும் ஆத்மா கர்மம் செய்வதில்லை1ரீரஸ்த2 அபி கரோதி. இங்கு ஒரு கேள்வி எழலாம். எல்லாமே ஆத்மாவாக இருக்கிறது எனில், உடலில் அது வெளிப்படுவதாக ஏன் சொல்லப்படுகிறது? ஏனெனில் உடல் என்பது ஆத்மாவை அறியக்கூடிய இடமாக, அடையாளம் காணக்கூடிய இடமாக இருக்கிறது - உபலப்3தி4 ஸ்தா2. பொதுவாக, உடலினால் ஒரு செயல் செய்யப்படும்போது ஆத்மா செயலில் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆனால் அது தவறு, ஏனெனில் ஆத்மா அகர்த்தா(செயலற்றது). மேலும் அனைத்து செயல்களும் அதன் முன்னிலையில் நடைபெற்றபோதிலும் ஆத்மாவை மையமாகக் கொண்டு, ஆத்மாவிற்கென எந்த செயலும் இல்லை. எனவே அது உடலுக்குள் விளங்கிக் கொண்டிருந்தபோதிலும் எந்தச் செயலையும் செய்வதில்லை.

ஆத்மா செயல் செய்வதில்லை என்பதால் அச்செயலின் விளைவுகளாலும் அது பாதிக்கப்படுவதில்லை லிப்யதே. புண்ணிய-பாபம், விருப்பு-வெறுப்பு என எதனோடும் சம்பந்தமற்றதாக உள்ளது, அஸங்கம். ஆத்மா செயலிலோ அல்லது அதன் பலன்களிலோ சம்பந்தப்படுவதில்லை எனினும் அந்தச் செயலையும் அதனால் விளைகின்ற அனைத்து பலன்களையும் அதுவே பிரகாசித்துக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஆசை எழும்போது ஆத்மா அந்த ஆசையை ஒளிரச் செய்கிறது, அதேசமயம் ஆத்மாவினிடத்தில் ஆசை இல்லை. மேலும் அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டுச் செய்யப்படுகின்ற எல்லா செயல்களையும் அது ஒளிரச் செய்கிறது. அந்தச் செயல்களினால் வருகின்ற விளைவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆத்மா அதையும் அப்படியே ஒளிரச் செய்யும், அது எதனோடும் ஒட்டுவதில்லை; எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.


=> ஆத்மாவில் இருமை சாத்தியமா?

ஒரு செயலைச் செய்பவனே அதனுடைய விளைவையும் அனுபவிக்கிறான்என இந்த சுலோகத்திற்கான பாஷ்ய விசாரத்தில் சங்கரர் கூறுகிறார். ஒரு செயலின் கர்த்தாவாக தன்னை ஒருவன் நினைத்தால், அந்த செயலுக்கான பொறுப்பாளியாக அவனே ஆகிறான். எனவே அதற்கான புண்ணிய-பாபத்தை, சுக-துக்கத்தை அவனே பெறுகிறான். வேறு விதத்தில் சொல்வதானால், செயலைச் செய்பவனே அதன் பலனை அனுபவிப்பவன்; விதைப்பவனே அறுவடை செய்பவன். எனில் அடுக்கடுக்கான நிறைய கேள்விகள் எழுகின்றன:    

  1. ஆத்மா எந்த செயலையும் செய்யவில்லை எனில், இந்த செயல்களையெல்லாம் யார் செய்கிறார்கள்

  2. இச்செயல்களைச் செய்கின்ற இனியொரு ஆத்மா ஏதேனும் உள்ளதா? அப்படியெனில் இருமை உண்டாகிவிடுகிறதே

  3. எனில், எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரஞனாக என்னை அறிக(க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு); ஒன்று மட்டுமே, இரண்டற்றது(ஏகமேவாத்3விதீயம்); இந்த சுயமே இவையனைத்தும்(இத3ம் ஸர்வம் யத் அயம் ஆத்மா); இவை அனைத்தும் உண்மையில் ப்ரம்மம்(ஸர்வம் கல்வித3ம் ப்3ரஹ்ம). இதுபோன்ற சுருதி வாக்கியங்கள் அர்த்தமற்றதாக ஆகிடுமே

   4. மேலும் இரண்டாவது ஆத்மா உள்ளது என எப்படி நிறுவ முடியும்? சாட்சியாக பார்க்கின்ற ஒரு ஆத்மாவும், செயல் செய்கின்ற இனியொரு ஆத்மாவும் இருக்கிறது எனில் இவையிரண்டில்நான்என்பதை எதில் வைப்பது?

  5. ஒருவனால் கர்த்தாவாக(செயல் செய்பவன்) தன்னை அறியமுடிகிறதா, இல்லையா? அறியமுடியவில்லை எனில் அவன் தன்னை கர்த்தா என எப்படி அழைப்பான்? ஒருகால் அறியமுடிகிறது எனில், அறியப்படும்-பொருளாக இருக்கின்ற ஒன்றை எப்படிநான்என்று அவனால் சொல்லிக் கொள்ளமுடியும்?

இவ்வளவு கேள்விகளுக்குமான ஒற்றை பதில் என்னவெனில், ஒரே ஒரு ஆத்மா மட்டுமே உள்ளது. அறிவுசொரூபமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அந்த பிரக்ஞையுணர்வைத் தவிர வேறெங்கும் அந்தநான்எனும் உணர்வை வைக்கமுடியாது

ஆனால் நம்முடைய ஒவ்வொருவரின் அனுபவமும், ‘நான் செய்பவன், நான் அனுபவிப்பவன்என்பதாக உள்ளது. சாஸ்திரமும் செயல் செய்பவனே பலனை அனுபவிக்கின்றான் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆத்மா எந்த செயலையும் செய்யவில்லை. ஆனால் யாரோ அச்செயல்களையெல்லாம் செய்கிறார்கள். இதற்கான பதிலை பகவானே கூறியுள்ளார்ஸ்வபா4வஸ்து ப்ரவர்ததே, பிரக்ருதியின் இயல்பினால் அந்தப் பிரக்ருதியானது தன்னை செயலில் ஈடுபடுத்திக் கொள்கிறது. ஆத்மாவின் சானித்யத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரக்ருதியானது, பிரதிபிம்பிக்கப்பட்ட உணர்வை புத்தியில் அனுபவிக்கின்றது. அதன் காரணமாக அது ஆசைப்படுபவனாக, அதற்காகச் செயல் செய்கிற கர்த்தாவாக ஆகிறது. எனவே செயல் செய்பவன் எனும் தன்மை அந்தகரணத்திற்கு உரியது என்பது தெளிவாகிறது. ‘நான் செய்கிறேன்என ஒருவன் கூறுவது முற்றிலும் அறியாமையினால் நிகழும் தவறு ஆகும். இந்த பிழையின் விளைவாக செயல் செய்பவனாகவும் அனுபவிப்பவனாகவும் அந்த அக்ஞானி ஆகிறானே தவிர, அத் தன்மை ஆத்மாவிற்குரியதல்ல.  

ஆத்மா அகர்த்தா எனப் புரிந்து கொள்பவன், புலனுறுப்புகளும் செயலுறுப்புகளும் மனமுமே அனைத்து வேலைகளையும் செய்கின்றனவே தவிர நான் எதையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்கிறான். இதையறியாத அக்ஞானி அனைத்துச் செயல்களையும் ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கிறான். உண்மையில் ஒரே ஒரு பரமாத்மா மட்டுமே உள்ளது, அது அகர்த்தா


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பிரம்மம் எப்படிப்பட்டது? பிரம்மத்துக்குக் குணங்கள் இல்லை, சலனமில்லை, அது போக்கு வரவற்றது; மகாமேரு பர்வதத்தைப் போல் நிலைத்திருப்பது.

---------------------------------------------------------------------------------------------