சனி, 1 மார்ச், 2025

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம் 13.24 - 13.25

||13.24|| மோக்ஷ சாதனம்:

ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना

अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ।। २४ ।।

த்4யாநேநாத்மநி பச்1யந்தி கேசிதா3த்மாநமாத்மநா

அந்யே ஸாங்க்2யேந யோகே3 கர்மயோகே3 சாபரே ।। 24 ।।


केचित्  கேசித்  சிலர்    ध्यानेन  த்4யாநேந  தியானத்தால்    आत्मनि  ஆத்மநி  உள்ளத்திலேயே    आत्मना  ஆத்மநா  தெளிந்த அறிவால்     आत्मानम्  ஆத்மாநம்  ஆத்மாவை    

पश्यन्ति  பச்1யந்தி  பார்க்கிறார்கள்    अन्ये  அந்யே  வேறு சிலர்     

साङ्ख्येन योगेन   ஸாங்க்2யேந யோகே3  ஞான யோகத்தாலும்    

अपरे   அபரே   இன்னும் சிலர்     कर्मयोगेन  கர்மயோகே3  கர்மயோகத்தாலும்.


தியானத்தால் தெளிவடைந்த அறிவால் சிலர் ஆத்மாவை உள்ளத்தில் உணர்கின்றனர்; சிலர் ஞான யோகத்தாலும் இன்னும் சிலர் கர்மயோகத்தாலும் காண்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.


விளக்கம்:

இதுவரையில் விசாரம் செய்யப்பட்ட க்ஷேத்ரம், க்ஷேத்ரஞன், ஞானம், ஞேயம், பிரக்ருதி மற்றும் புருஷன் எனும் ஆறு தலைப்புகள் முடிவடைகின்றன. மோக்ஷத்திற்கான சாதனங்களை சுலோகம் இருபத்தி நான்கு மற்றும் இருபத்தி ஐந்து கூறுகிறது.  


=> மோக்ஷத்திற்கான சாதனம்:

ஆத்ம 3ர்ச1நே, ஆத்ம தரிசனத்திற்கான பல சாதனங்கள் உள்ளன, அவைகள் இங்கு மேற்கோள் காட்டப்படுகின்றன என இந்த சுலோகத்தை அறிமுகப்படுத்துகிறார் சங்கரர். இங்கு சங்கரர் பயன்படுத்தும்தரிசனம்எனும் சொல்லை புரிந்துகொள்ள, ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் யாக்ஞவல்கியருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. எனவே முகவுரையாக அது குறித்து சிறிது விசாரம் செய்துவிட்டு பின்னர் சுலோகத்தின் விளக்கத்தைப் பார்க்கலாம். யாக்ஞவல்கியர் மோக்ஷத்தை பெறுவதன் பொருட்டு சந்யாச வாழ்க்கை வாழ முடிவு செய்கிறார். ஆகவே தனது செல்வத்தை சமமாக பகிர்ந்தளிப்பதாக தனது இரு மனைவியரிடமும் தெரிவிக்கிறார். அப்போது அவரது மனைவி மைத்ரேயி, அவர் கொடுக்கின்ற அத்தனை செல்வத்தையும் வைத்து தன்னால் மோக்ஷத்தைப் பெற இயலுமா என அவரிடம் கேட்கின்றாள். அதற்கு செல்வத்தினால் மோக்ஷம் கிடைக்கப் பெற வாய்ப்பில்லை என அவர் பதிலளிக்கிறார். அப்போது அவள் மோக்ஷத்திற்கான வழியை அவரிடம் கேட்கின்றாள்


=> மூன்று முக்கிய சாதனங்கள்:

மைத்ரேயியின் கோரிக்கைக்கு யாக்ஞவல்கியர் பின்வருமாறு விளக்கத்தை அளிக்கிறார்:

ஒருவனால் நேசிக்கப்படும் எந்தவொன்றும் அவனின் சொந்த நலனுக்காகவே ஆகும்; எனவே யாரொருவனுக்கும் அவனது சுயமே மிகவும் பிரியமானதாக இருக்கிறது’ - ஆத்மநஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் 4வதிஎன முதலில் கூறுகிறார். எனவே, ‘ பிரியமானவளே, உண்மையில் ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும் - ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய:’. இங்கு பார்க்கப்பட வேண்டும் என்ற பொருளில் வந்துள்ளத்3ரஷ்டவ்யஎனும் சொல், பார்ப்பதைப் போல தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? நான் எப்படி என்னைப் பார்ப்பது? பொதுவாக நமக்கு தெரிந்த எந்தவொரு பிரமாணமும்(அறியும் கருவியும்) அறிபடும்பொருளாக ஒன்றை அறியவே பயன்படுகிறது. அதைக் கொண்டு தன்னைத்தான்  அறிவதென்பது இயலாத ஒன்று. ஏனெனில்நான்என்பது அறியப்படும் பொருள் அல்ல. எனவே அதற்கு பதில் கூறும்விதமாக யாக்ஞவல்கியர் தொடர்கிறார், ‘அன்பே, உண்மையில் ஆத்மா கேட்கப்பட வேண்டும் - ஆத்மா வா அரே ச்1ரோதவ்ய:’. இங்கு கேட்பது என்பது, ஒரு குருவின் உதவியுடன் வேதாந்த சாஸ்திரத்தை விசாரம் செய்தலைக் குறிக்கின்றது. ‘நான்என்பது ஏற்கனவே இருப்பதால், ஆத்மாவை அடைதலென்பது அறிவின் அடிப்படையில்தான் நடைபெற முடியும். அதற்கு சப்த பிரமாணம் எனப்படும் கேட்டலே பிரதான கருவியாகும். அவ்வாறு கேட்கப்பட்ட பிறகு, நமது சொந்த அனுபவத்திலிருந்து உண்டான அறிவினாலோ அல்லது மற்றவர்களின் கருத்துக்களாலோ சந்தேகங்கள் எழலாம். உதாரணமாக பெளத்த மதத்தில், ஆத்மா சூன்யம் எனச் சொல்லப்படுகிறது. அது எப்படி தவறு என்பதை மிக நெருக்கமாக ஆராயும்போதே அவனது அறிவு தெளிவானதாக ஆகிறது. இதைக் குறிக்கும் விதமாக அவர், ‘பிரியமானவளே, உண்மையில் ஆத்மா மநநம் செய்யப்பட வேண்டும்ஆத்மா வா அரே மந்தவ்ய:என்கிறார். ‘மநநம்எனில் சாஸ்திரத்தின் மையக்கருத்துக்கும் நமது அனுபவத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை விசாரம் செய்து சந்தேகம் தெளிதலைக் குறிக்கின்றது. இனி, எல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டபோதிலும், நீண்ட காலமாக இருந்துவந்த பழக்கத்தின் காரணமாக, ‘இந்த உடல் நான்என்கிற நோக்குநிலை தொடர்கிறது. இந்நிலையில் இந்த அறிவை நாம் தடைகளுடன் கூடிய அறிவு என்று அழைக்கிறோம், ப்ரதிப3ந்த3-ஞாந. எனவே சாஸ்திரத்தினால் வெளிப்படுத்தப்பட்ட இந்த ப்ரத்யகா3த்மா-வை ஒருவன் சிந்திக்க வேண்டும்; அந்த அறிவில் இருந்து பழக வேண்டும். எனவே இறுதியாக அவர், ‘உண்மையில் ஆத்மா சிந்திக்கப்பட வேண்டும் - ஆத்மா வா அரே நிதி3த்4யாஸிதவ்ய:என்கிறார். தடைகளை அகற்ற நிதித்யாசனம் எனும் இந்த தியானம் முற்றிலும் இன்றியமையாதது

இவ்விதம் ஆத்ம-ஞானத்திற்கான அல்லது சங்கரரின் மொழியாடலில் ஆத்ம-தரிசனத்திற்கான வழிமுறைகளாக சிரவணம், மநநம் மற்றும் நிதித்யாசனத்தை யாக்ஞவல்கியர் கூறுகிறார். இந்த முகவுரையுடன் சுலோகத்திற்குள் செல்லலாம்.


=> தியானம்

சிலர் தியானத்தினால் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்கேசித் த்4யாநேந ஆத்மாநம் பச்1யந்தி, என பகவான் சுலோகத்தை ஆரம்பிக்கிறார். இங்கு தியானம் என்பது யாக்ஞவல்கியரின் உபதேசத்தில் பார்க்கப்பட்ட நிதித்யாசன தியானத்தைக் குறிக்கிறது. மேலும் இங்குபார்த்தல்எனும் அர்த்தத்தைக் கொடுக்கின்றபச்1யந்திஎனும் சொல்லும் அவர் பயன்படுத்தியத்3ரஷ்டவ்யஎனும் சொல்லுடன் ஒத்தது. நிதித்யாசனம் தேவைப்படாத முமுக்ஷு இருக்க முடியாது.  ‘ஜகத் மித்யா’, ‘நான் உடல் மனதிலிருந்து வேறானவன்என்பது புரிந்த பிறகும், நமது பழக்கவழக்கங்களினால் ஆழமாக பதிந்துள்ள சம்ஸ்காரங்களும் வாசனைகளும், இந்த ஞானத்தின் பலன் நமக்கு கிடைக்கத் தடையாக வந்து நிற்கும். எனவே புதியநான்’- எடுத்துக் கொண்டு, அதிலேயே இருந்து பழகுதல் வேண்டும். இது ஞானாப்யாசம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆத்ம ஞானத்தை தியானித்தல் எனும் இந்த நிலையில், உண்மையில் நமக்கு நாம்தான் பெரிய தடையாக இருப்போம். இறுதியாக வெல்லப்பட வேண்டிய பகைவன் பழையநான்ஆகும்.

இங்கு சங்கரர் நிதித்யாசனம் என்பது புலனுறுப்புகளை அதன் விஷயங்களிலிருந்து எடுத்து மனதிற்குள்ளும், மனதை பிரத்யகாத்மாவிற்குள்ளும் ஒடுக்கிவைப்பது என விவரிக்கிறார். பிரத்யகாத்மா என்பது பிரக்ஞையிலிருந்து வேறில்லை. மன ஒருமுகப்பாட்டுடன் அங்கேயே இருந்து பழகுதல் எனும் இந்த வழிமுறையே இங்கு தியானம் எனப்படுகிறது. அதற்கு உதாரணமாக, நீரில் ஏதேனுமொன்றின் அசைவு தென்படுவதற்காக அசையாமல் காத்து நிற்கின்ற கொக்கு, அல்லது பூமியில் அசையாமல் நிற்கின்ற இந்த மலைகளைப் போல தியானப் பொருளிலிருந்து நகராமல் அதைச் சிந்திக்க வேண்டும் என்கிறார்.


பிரத்யகாத்மாவில் மனதை இரு வழிகளில் நிலைநிறுத்தலாம்:

    (1) த்3ருஷ்ய அநுவித்34 ஸவிகல்ப தியானம் - புலனுணர்வு மூலமாகவோ அல்லது மனதிலிருந்தோ ஒரு பொருளைப் பார்க்கும்போது, உடனே கவனத்தை சாக்ஷியாகவுள்ள பிரத்யகாத்மாவின் மீது திருப்பலாம்.

    (2) 1ப்த3 அநுவித்34 ஸவிகல்ப தியானம் - பூர்ணம், ஏகம், சைத்தன்யம், அசலம் என பிரத்யகாத்மாவின் தன்மைகளாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை எடுத்துக் கொண்டு, அது ஒருவனுக்கு எவ்விதம் அர்த்தமுள்ளதாக இருக்கின்றன எனச் சிந்திக்கலாம். உதாரணமாக, நான் எப்படி அசையாதவன்? நான் உடலாகவோ அல்லது மனதில் எண்ணமாகவோ இருப்பவன் எனில் நான் அசையாதவன் அல்ல. ஆனால் சாஸ்திரம் என்னை அசையாதவன் எனக் கூறுகிறது. எனில் இந்த உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமாக இருக்கின்ற பிரக்ஞையாக நான் அசையாமல் மாறாமல் இருக்கின்றேன்.  

இதிலிருந்து ஆத்மாவை தியானிக்க, முதலில் ஆத்மாவைப் பற்றிய சரியான அறிவு தேவை என்பது தெளிவாகிறது. எனவே சாஸ்திர சிரவணம் செய்த ஒருவனே நிதித்யாசன தியானத்தைச் செய்ய முடியும். மேலும் இங்கு தியானம் என்பது உபாசன வடிவிலான தியானத்தையோ அல்லது பிரார்த்தனையையோ குறிப்பவை அல்ல என்பதையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். நம்மால் ஆறாவது அத்தியாயத்தில் ஏற்கனவே பார்க்கப்பட்ட அமைதிப்படுத்தும் தியானம், ஜபம் முதலிய மனதை ஒருமுகப்படுத்தும் தியானம், மனதை விரிவுப்படுத்தும் தியானம் மற்றும் நற்பண்புகளைக் குறித்துச் செய்கிற தியானம் என அனைத்து வகையான தியானங்களும் வெவ்வேறு விதமான நோக்கத்திற்காகச்  செய்யப்படுவது ஆகும். மனதை நிலைநிறுத்துவதற்காக இவைகளை நாம் உபயோகப்படுத்தலாம். ஆனால் இங்கு பகவான் சிரவணத்தை தொடர்ந்து செய்யப்படுகிற நிதித்யாசன தியானத்தையே குறிப்பிடுகிறார் என்பதுஆத்மநா ஆத்மாநம் பச்1யந்திஎனும் விளக்கத்திலிருந்து தெளிவாகிறது. அதாவது, அவர்கள் மனதின் துணைக் கொண்டு ஆத்மாவைப் பார்க்கிறார்கள், என்கிறார். தயார் செய்யப்பட்ட, தூய்மையான மனதினால் அவர்கள் பரமாத்மாவான சுயத்தை தரிசனம் செய்கிறார்கள். இதில் மனதின் துணை மிக அவசியம். நம் மனது நமக்கு பகைவனாக இருக்ககூடாது. எனவே இங்கு தூய்மையான மனம் என்பது நமக்கு நண்பனாக இருக்கின்ற மனம் ஆகும் - சு1த்34 அந்தகரணேந.

இந்த சுலோகத்தில் வந்துள்ளஆத்மநிஎன்கிற சொல்லுக்குபுத்தியில்என்பது பொருள். அங்கு அவர்கள் பூர்ண-ஆத்மாவைப் பார்க்கிறார்கள், அல்லது ஆத்மாவை பூர்ணம் என அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். பார்ப்பவனாக, கேட்பவனாக, சிந்திப்பவனாக இருந்தபோதிலும் எந்தச் செயலையும் செய்பவனாகவோ அல்லது அனுபவிப்பவனாகவோ அல்லாமல், தூய இருத்தலாக, தூய அறிவாக மற்றும் எல்லையற்ற தன்மைகொண்ட பூரணமாக ஆத்மாவைப் பார்க்கிறார்கள்.


=> சிரவணம்:

ஒருகால் ஒருவன் மனதளவில் தயாராக இருந்தானெனில், அவனுக்கு விசாரம் மட்டுமே தேவைப்படுகிறது. அதையே இங்கு பகவான், ‘சிலர் அறிவினால் ஆத்மாவை அடைகிறார்கள்அந்யே ஸாங்க்2யேந யோகே3 ஆத்மாநம் பச்1யந்தி, என்கிறார். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சாங்க்ய யோகம் என்பது சாஸ்திரம் கேட்டலை, சிரவணத்தைக் குறிக்கின்றது. சிரவணத்தினால் மட்டுமே ஒருவன் புருஷன் மற்றும் பிரக்ருதியின் மெய்மைத் தன்மையை புரிந்து கொள்ளமுடியும். மேலும் அந்த அறிவு மட்டுமே ஒருவனுக்கு முக்தியைக் கொடுக்கக் கூடியது. போதிய மனப்பக்குவமின்மை போன்ற வேறு எவ்வித தடையும் இல்லாத அவர்கள், சாஸ்திரம் கேட்டலின் மூலம் பெறப்பட்ட அறிவால் ஆத்மாவை காண்கிறார்கள். இந்த சுலோகத்தில் கர்மயோகம் என்பது தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த இடத்தில் இவர்களை சந்யாசிகள் அல்லது ஞானத்தை பெறுவதில் எந்தத் தடையும் இல்லாதவளவு தன்னைத் தகுதிப்படுத்தியவர்கள் என நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது விவேகம், வைராக்கியம், புலனடக்கம், மனக்கட்டுப்பாடு(ஸாத4 சதுஷ்டய சம்பந்ந:) முதலிய அனைத்து தகுதிகளையும் கொண்டவர்கள் எனப் புரிந்து கொள்ளவேண்டும்.


=> கர்மயோகம்:

இன்னும் சிலர் கர்மயோகத்தாலும் காண்கின்றனர்அபரே கர்மயோகே3. இது கர்மயோகிகளைக் குறிக்கின்றது. இவர்கள் அந்த-கரண-சுத்தி தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் சிரவணம் மற்றும் மநநம் செய்பவர்களாக இருந்தபோதிலும் மனத்தூய்மைக்காக கர்மயோகத்திலும் ஈடுபடுபவர்களாக உள்ளனர். தங்களுடைய செயல்களையும் அதன் பலன்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்களாக கர்மத்தில் ஈடுபடுபவர்களை கர்மயோகிகள் என்கிறோம். கர்மயோகத்தினால் எப்படி ஆத்மாவைக் காணமுடியும்? கர்மயோகம் ஒருவனின் மனதை ஞானத்திற்கு தயார்படுத்துகிறது. இதனால் அவர்கள் குறிப்பிட்ட மனப் பக்குவத்தை அடையும்போது ஞானம் செயல்பட ஆரம்பிப்பதால் உரிய நேரத்தில் ஆத்மாவை பார்க்கிறார்கள். கர்மயோகம் என்பது ஞானத்திற்கான மாற்று வழி அல்ல. கர்மயோகம் செய்பவர்களும் கண்டிப்பாக ஞானயோகத்தை(சிரவண, மநந, நிதித்யாசனம்) தொடர வேண்டும். இவர்கள் மனத் தகுதிக்காக கர்மயோகத்தில் ஈடுபடுகிறார்கள் அவ்வளவே. ஈஷ்வரனுக்கு அர்ப்பணிப்பாக செய்யப்படும்போது அந்தச் செயலானது விருப்பு வெறுப்பினால் தூண்டப்படாததாக ஆகிறது. மேலும் வருகிற பலனையும் ஈஷ்வரனின் பிரசாதமாக ஏற்பதால் விருப்பு-வெறுப்பானது நடுநிலையை அடைந்து, அது மனத் தடைகளை நீக்குவதால், ஞானம் உண்டாகிறது

சந்யாசியோ அல்லது கர்மயோகியோ இருவருமே, சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதுபோல ஆத்மாவை புரிந்து கொள்ளவேண்டும். இருவருமே தாங்கள் புரிந்துகொண்ட அறிவிற்கு எதிரானதாகவுள்ள, ‘நான் உடல் மனதுடன் கூடியவன்என்கிற நோக்குநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது விபரீத-பாவனை என அழைக்கப்படுகிறது. எனவே ஆத்ம-தரிசனத்தைப் பொருத்தமட்டில், சிரவணம் மநநம் மற்றும் நிதித்யாசனத்தில் எந்தவித தேர்வு உரிமையும் இல்லை. ஸத்-சித்-ஆனந்த ப்ரம்மமான ஆத்மாவை தரிசிக்க ஒருவன் கண்டிப்பாக இந்த மூன்றின் வழியாகவும் சென்றாக வேண்டும். ஆத்மாவை ஒவ்வொரு எண்ணத்தின் உள்ளடக்கமாக புத்தியில் மட்டுமே தரிசிக்க முடியும். புல்லாங்குழலின் ஒவ்வொரு ஸ்வரத்திலும் புல்லாங்குழலின் ஓசையே அறியப்படுவதுபோல ஒவ்வொரு எண்ணத்திலும் இவர்கள் பரமாத்மாவை அங்கீகரிக்கிறார்கள்

---------------------------------------------------------------------------------------------

||13.25 || மற்றொரு வகையினர்:

अन्ये त्वेवमजानन्त: श्रुत्वान्येभ्य उपासते  

तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणा: ।। २५ ।। 

அந்யே த்வேவமஜாநந்த: ச்1ருத்வாந்யேப்4 உபாஸதே

தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ச்1ருதிபராயணா: ।। 25 ।।


अन्ये तु  அந்யே து  இன்னும் சிலரோ   एवं  ஏவம்  இவ்வாறு    

अजानन्त:  அஜாநந்த:  அறியாதவர்களாயினும்    अन्येभ्य:  அந்யேப்4:  பிறரிடமிருந்து    

श्रुत्वा  ச்1ருத்வா  கேட்டு    उपासते  உபாஸதே  உபாஸிக்கின்றனர்     

ते अपि   தே அபி   அவர்களும்    

श्रुतिपरायणा:  ச்1ருதிபராயணா:  கேட்ட உபதேசத்தைக் கதியெனக் கருதி     

मृत्युं  ம்ருத்யும்  மரணத்தை    अतितरन्ति एव  அதிதரந்தி ஏவ  நிச்சயமாகக் கடக்கின்றனர்.


இன்னும் சிலர் இங்ஙனம் உண்மையை அறியாதவர்களாயினும் பெரியோர் சொற்கேட்டு அதில் பெருநம்பிக்கை வைத்தொழுகி மரணத்தை நிச்சயமாகக் கடக்கின்றனர்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.


விளக்கம்:

=> அறியாதவர்கள்

விவேகமும் போதுமான மனத் தகுதியும் இல்லாத ஆனால் மோக்ஷத்தை விரும்புகிற மற்ற சிலர் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்

துஎனும் சொல், முந்தைய சுலோகத்தில் குறிப்பிடப்பட்ட சந்யாசிகள் மற்றும் கர்மயோகிகள் போன்றோரிலிருந்து இந்த வகையினரை வேறுபடுத்திக் காட்ட உபயோகிக்கப்படுகிறது. அவர்களைப் போன்று ஆத்ம-அனாத்ம தத்துவத்தை புரிந்து கொள்ளுமளவு பக்குவமோ விவேகமோ இவர்களுக்கு இல்லை எனினும் இவர்களும் மோக்ஷத்தை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். அறிவை அடையாமல் மோக்ஷம் சாத்தியமில்லை, ஆனால் மனத் தகுதியில்லாமல் ஆத்ம-அனாத்ம விசாரமும் சாத்தியமில்லை. எனவே இத்தகையவர்களுக்கு அவர்களின் மனதைத் தயார்ப்படுத்துகிற நோக்கில், அவரவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு பல்வேறு துறைகள் அல்லது ஒழுக்க நெறிகளை குருமார்கள் பரிந்துரை செய்கிறார்கள். அத்தகைய அறிவுரைகளை முழுமனதுடன் கடைப்பிடிப்பவர்கள் இங்குச்1ருதிபராயணாஎனப்படுகிறார்கள். உதாரணமாக நுண்ணிய கருத்துக்களை உள்வாங்குகிற அறிவுசார் ஒழுக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு ஆசிரியர், சாஸ்திரத்தை புரிந்துகொள்ள ஏதுவாக தர்க்கம் அல்லது இலக்கணம் முதலியவற்றை பயிலுமாறு பரிந்துரை செய்யலாம். அல்லது மனதை தகுதிப்படுத்த சிலவகைப் பிரார்த்தனைகள் மற்றும் ஜபம் உள்ளிட்ட உபாசனைகளையோ, பூஜையையோ அல்லது மனதை நிலைநிறுத்தும் பொருட்டு அஷ்டாங்க-யோகத்தையோ பின்பற்ற அறிவுரை செய்யலாம். இதுபோன்ற பரிந்துரைகளைப் பார்க்கும்போது அவைகளுக்கும் ஆத்ம-ஞானத்திற்கும் பெரிதாக எந்த தொடர்பும் இல்லை என்று தோன்றலாம். அப்படி வெளிப்படையான தொடர்பு அவ்வளவாக இல்லாவிட்டாலும், அர்ப்பணிப்புடன் குருவின் அறிவுரையை பின்பற்றுபவர்கள் இந்தச்1ருதிபராயணாஆவர். இவர்கள் காலப்போக்கில் தங்களுக்கு தேவையான மன ஒழுக்கத்தைப் பெற்று, பின்னர் குருவிடம் கற்கத் துவங்குகிறார்கள். இதனால் அடையப்படுகிற தன்னறிவினால் இவர்கள் மரணத்தை கடக்கிறார்கள்ம்ருத்யும் அதிதரந்தி.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பகவத் பக்தியை ஒரு புலியோடு ஒப்பிடலாம். புலியானது மிருகங்களை விழுங்குவதுபோல், பக்தியானது காமாதிகளான பெரும் பகைவர்களை விழுங்குகிறது. பகவத் பக்தி ஒருதரம் நன்றாக உண்டாகிவிட்டால், காமம் குரோதம் முதலிய கெட்ட பாசங்கள் முற்றிலும் நசித்துவிடும். பிருந்தாவனத்து கோபஸ்திரீகள் கிருஷ்ணனிடம் வைத்த தீவிரபக்தியால் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்திருந்தனர்

---------------------------------------------------------------------------------------------